தமிழ் அரங்கம்

Sunday, October 7, 2007

தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது

பி.இரயாகரன்
07.10.2007


ப்படிப்பட்டவர்களை குழையடித்து எழுப்பும் பூசாரிகள் அல்ல நாங்கள். சாபம் பெற்ற கும்பகர்ணனைக் கூட எழுப்பிவிடலாம். தூங்குவதாக நடிப்பவனை யாராலும் எழுப்பமுடியாது.

இப்படிப்பட்டவர்கள் தான், கடைந்தெடுத்த பாசிட்டுக்கள். ஊர் உலகத்துக்கு முன்னால் பல வேஷத்தில், பலவிதமாக பல பெயரில் உலவுவர். இவர்கள் தம்மை அறிமுகப்படுத்தும் போது, தாம் புலிகள் அல்ல என்பர். இப்படிப்பட்ட பாசிட்டுக்கள் பல வகையான வேஷம் கட்டித் திரிகின்றனர்.

1. தமக்கு புலிகள் பற்றி முரண்பாடு உண்டு. ஆனால் வேறு வழியில்லை என்பதால் புலியை ஆதரிக்கின்றோம்.

2. புலிகள் மீது எமக்கு விமர்சனம் உண்டு. ஆனால் நாங்கள் புலியில்லை, புலியை ஆதரிப்போம்.

3. புலி ஆதரவு தளம் என்று இவர்கள் கூறும் ஒன்றை எதிர்ப்பார்கள். ஆனால் புலியையல்ல.

4. எங்களைப் பார்த்து புலிகள் என்பதா. ஜயோ இது என்ன அபத்தம் என்பார்கள்.

சுற்றிச் சுற்றி இதற்குள்ளேயே வட்டம் கட்டி உலாவுவார்கள். புலியை பாதுகாப்பது என்பதற்கு அப்பால், வேறு எந்த போக்கிடமும் கிடையாது. கிணற்றுத் தவளை போல், புலியைச் சுற்றி தவளைக் கத்துக் கத்துவது தான் இவர்களின் எல்லை. இதற்கு ஏற்ப அவர்கள் பல வேஷம் போட்டு இருப்பர். நோக்கம் மட்டும் ஒன்று.

இவர்களை நாங்கள் புலிகள் என்றால், பாசிட்டுகள் என்றால், எப்படி எமக்கு அதைச் சொல்ல முடியும் என்பர். அப்படி என்றால் உங்களைத் துரோகி என்று சொல்லலாம் தானே என்பர். சொல்லுங்களேன் யார் வேண்டாம் என்றது. யார் துரோகி என்பதை வரலாறு காட்டும்.

புலிப் பாசிசமே உங்களைப் போன்றவர்களின் துணையுடன் அதிகாரத்தில் உள்ள வரை, அவர்கள் முன் நாங்கள் துரோகிகள் தான். இதில் எந்தச் சந்தேகமும் உங்களைப் போன்ற பாசிட்டுகளுக்கு வரத் தேவையில்லை. இதில் நீங்கள் நடிக்கத் தேவையில்லை. இந்த விதிக்கமைய நாம் எந்த நேரம், எங்கேயும் கொல்லப்படலாம். இதில் எமக்கு துளியளவு கூட சந்தேகம் கிடையாது.

நீங்கள் புலிகள் இல்லை என்றால், புலிகள் மக்களுக்கு எதிராக நடத்துகின்ற தொடரான மனித விரோத செயல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துங்கள். மக்களுக்காக பேசுங்கள். பேரினவாதிகளை மட்டுமல்ல, புலிகளையும் சேர்த்தே செய்யுங்கள். இதை செய்யும் படசத்தில் எங்கள் பார்வையை நாங்கள் மாற்றுகின்றோம்.

இதைவிடுத்து புலிகள் செய்யும் பாசிச மாபியாத்தனத்தை பாதுகாத்துக் கொண்டு ஜனநாயக விபச்சாரம் செய்யாதீர்கள். புலிப் பினாமி அமைப்புகளுக்கு விளக்கம் கொடுத்து, புலியை பாதுகாத்துக்கொண்டு, லூசுகள் போல் புலம்பாதீர்கள். நாங்கள் புலிகள் அல்ல என்று ஒப்பாரி வைப்பதன் மூலம் பாசிசத்தை பாதுகாக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது. அப்படி ஒரு மனித வரலாறே கிடையாது.

புலிகள் மீது விமர்சனம் உண்டு, முரண்பாடு என்று கூறும் இவர்களின் அரசியல் யோக்கியதை என்ன? அந்த புலிப் பாசிசத்தை பாதுகாப்பது தான். எங்கெல்லாம் புலிக்கு எதிராக விமர்சனம் வருகின்றதோ, அங்கு புலியை பாதுகாக்க முனையும் பாசிட்டுக்கள் தான் இவர்கள். இந்த புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ள

http://www.tamilcircle.net/unicode/general_unicode/055_general_unicode.html

இவர்கள் அடிக்கடி கூறுவார்கள், நாங்கள் புலிகளில்லை என்று. அப்படியானால் நீங்கள் யார்? உங்கள் அரசியல் என்ன? மக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கமாட்டார்கள். காதில் பூச் சுத்துவார்கள். புலிகள் என்ற எல்லைக்கு அப்பால், மற்றவனை புலியெதிர்ப்பு என்று வரையறுத்துக் கொண்டு கருத்துரைப்பதே, இவர்களின் அரசியல் வரையறை. இதை மூடிமறைக்கவும், தம்மை நடுநிலைவாதிகளாக காட்டிக் கொண்டு புலியை நியாயப்படுத்தவும், புலியோடு முரண்பாடு உண்டு, விமர்சனம் உண்டு என்று கூறிக் கொண்டு புலிக்காக விதண்டாவாதம் செய்வதுமே இவர்களின் புலி அரசியல்.

அரசியல் ரீதியாக இவர்கள் யார்?

கடைந்தெடுத்த, மனித இனத்தால் மன்னிக்க முடியாத பாசிட்டுக்கள். முதல் தரமான மக்கள் எதிரிகள். புலிகள் என்ற பொதுவட்டத்தில் பலவிதமானவர்கள் உள்ளனர்.

1. புலிகளின் பாசிசத் தலைமை

2. யுத்த களத்தில் உள்ளவர்கள். தாம் ஏன் எதற்கு போராடி மடிகின்றோம் என்று தெரியாது மரணிப்பவர்கள். அவர்கள் ஆசைகாட்டியும், ஏமாற்றியும், நம்பவைத்தும், மோசடி செய்தும், வில்லங்கமாக இழுத்தும், பலாத்காரமாக கடத்தியும் இணைக்கப்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.

3. புலியிசத்தைக் கொண்டு பிழைத்து வாழும் பலவிதமான சந்தர்ப்பவாதிகள். இப்படியான பொருளாதாரம் சார்ந்தும், புகழ் சார்ந்தும், அதிகாரம் சார்ந்தும் ஒட்டுண்ணியாய் இருக்கும் சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள்.

4. ஏன், எதற்கு, எமக்கு எந்த சோலியும் வேண்டாம், என்று எதையும் கண்டும் காணாமல் வாலாக நீடித்து நிற்கும் மக்கள்.

5. பாசிச தலைமையால் செய்யப்படும் மனித விரோத விடையங்களை மூடிமறைத்தும், பலவிதத்தில் நியாயப்படுத்தியும் நிற்கும் பாசிசப் பிரிவு. தம்மை அறிவாளியாக, ஜனநாயகவாதியாக, நடுநிலைவாதியாக, விமர்சகராக, புலியல்லாதவராக காட்டிக்கொண்டு, செயற்படுபவர்கள்.

இப்படி இரண்டு பாசிச பிரிவுகள், இந்த வடிவத்தில் பலமான கூறாக அது உள்ளது. இந்த புலி பாசிச சங்கிலி தொடுப்பில், இவர்கள் ஏதோ ஒரு வகையில் தொடுக்கப்பட்டு உள்ளவர்கள். இதில் இந்த இரண்டு பிரிவு தான், நீடிக்கும் பாசிசத்தின் நெம்புகோல். அனைத்து மக்கள் விரோத குற்றத்துக்கும், அவர்கள் தான் முழுப் பொறுப்பாளிகள். அவர்கள் யார்?

1. புலிகளின் பாசிசத் தலைமை.

2. புலிப் பாசிச தலைமையால் செய்யப்படும் பாசிச மனிதவிரோத நடத்தைகளை மூடிமறைத்தும், நியாயப்படுத்தியும் அதை பாதுகாக்கும் அறிவுத்துறையினர்.

புலிகளின் பாசிசத் தலைமை பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில், முழு மக்களுக்கும் தெரியும் வண்ணம் தமது சொந்த குரூரங்கள் மூலம் அவர்களே அம்பலமாகி நிற்கின்றனர். பேரினவாத பாசிசத்தின் இருப்பு, புலிகளை இன்னமும் தக்கவைக்கின்றது. இருந்தபோதும் பாசிசத்தை பாதுகாக்க முனையும் அறிவுத்துறையினர், அதை நியாயப்படுத்தி வாந்தியெடுப்போர், பாசிசத்தை முன்னிறுத்துவதன் மூலம் மற்றுமோர் பிரதான குற்றவாளிகளாக சமூகத்தின் முன் நீடிக்கின்றனர். சதையும் நகமுமாக நீடிக்கின்ற இவர்கள் இருவரும், சமூகத்தின் மேலான குரூரங்களுக்கும் குற்றங்களுக்கும் முழுப் பொறுப்பாளியாவார்கள்.

இவர்கள் எந்த வேடத்தில் எப்படி வந்தாலும், இந்த அறிவுத்துறையினரின் அரசியல் என்பது புலிப் பாசித்தைப் பாதுகாப்பது தான். இதற்கு வெளியில் வேறு எந்த அரசியலும் கிடையாது.

புலிகளில் யாருக்கும் விடைதெரியாத வகையில் இருப்பது

1. புலிகளின் அரசியல் என்ன என்பதும்?

2. புலிகள் எதை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பார்கள் என்பதும்

3. தமிழ் மக்கள் புலிகள் மூலம் அரசியல் ரீதியாக இதுவரை எதைச் சாதித்தனர் என்பதுமாகும்.

இப்படி அரசியல் ரீதியாக சர்வதேச கொள்கை வரை எதையும் கூற முடியாதவர்கள் தான் புலிகள். தலைவரின் பெயரில் மேற்கோள்கள் மட்டும் சம்மந்தமில்லாத வகையில் குப்பையாகக் கிடக்கின்றது.

இவர்களுக்கு தெரிந்த ஒன்று தான் உள்ளது. மகிந்தவின் குடும்ப சர்வாதிகார பாசிசத்துக்கு பதில், பிரபாகரனின் சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதே இவர்கள் அரசியல் எல்லை. மகிந்த ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வது போல், தமிழ் மக்களின் பெயரில் புலிகள் அதைச் செய்வதே புலியின் சர்வதேசிய அரசியல். இதைத் தாண்டி எதையும் தமிழ் மக்களுக்கு அவர்களால் ஒரு நாளும் தரமுடியாது. இதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்ல எதுவும் இருப்பதில்லை.

இதனால் தான் தமிழ்மக்களின் ஜனநாயகத்தை பறித்துவிட்டு, மாபியாத்தனத்தையும் பாசிச பயங்கரவாதத்தையும் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளுகின்றனர். மக்களுக்கும் இந்த பாசிச புலிக்கும் இடையிலான உறவு, இப்படி இதற்குள் தான் காணப்படுகின்றது. இதை நியாயப்படுத்தி பிணக்காட்டில் புழுக் கிண்டுகின்ற பாசிட்டுகளையே, இணையங்களிலும் பத்திரிகையிலும் நாம் காணமுடியும்.

மக்கள் சுயமாக சிந்திக்கக் கூடாது என்பதே, இந்த பாசிட்டுக்களின் பொதுவான அணுகுமுறை. மக்களை சிந்திக்க விடாது, சிந்தனையை மழுங்கடிக்க முனைகின்ற இவர்கள் செய்யும் உத்தியோ, மிகக் கீழ்த்தரமானது.

1. பொய்யை உண்மையாகவும், உண்மையை பொய்யாகவும் புரட்டிப் போடுபவர்கள்.

2. விதண்டாவாதங்களையே எப்போதும் தங்கி நின்று, சதா குதர்க்கம் செய்பவர்கள்.

3. கையும் மெய்யுமாக பிடிபடும் போது, அதுபற்றி தனக்கு தெரியாது என்று நழுவுபவர்கள்.

4. குறிக்கப்பட்ட விவாதத்துடன் சம்மந்தமில்லாத ஒரு புதிய விடையத்தை முன்னிறுத்தி, குறித்த விடையம் மீதான விவாதத்தையே திசை திருப்புவர்கள்.

5. புதிய கேள்விகளை கேட்டு அது என்ன, இது என்ன என்று விடையத்தை விவாதப்பொருளுக்கு வெளியில் நகர்த்த முனைபவர்கள்.

6. வாதம் செய்பவனை அதில் இருந்து நகர்த்துவதற்காக, கண்டதையெல்லாம் கண்டமாதிரி எழுதுபவர்கள்.

உண்மையில் இதன் நோக்கம் தெளிவானது. மக்கள் பூரணமாக ஒன்றை அறியயும், அறிவை வளர்க்கவும் கூடாது என்பதே இவர்களின் நடைமுறை உத்தி. எதை தமிழ் சமூகம் மண்ணில் இழந்து நிற்கின்றதோ, அதை பேணிப் பாதுகாப்பது இவர்களின் கனவு. புலிப்பாசிசம் இதைத் தான் மண்ணில் செய்துள்ளது. இதை புலம் பெயர் மண்ணிலும், இணையங்களிலும் செய்வது இந்த பாசிட்டுகளின் பாசிச கடமையாக உள்ளது. மண்ணில் கருத்துச் சார்ந்த மனிதர்களையே உயிருடன் இல்லாதாக்குபவர்கள், இங்கு மாற்று வழிகளில் அதைச் தொடர்ந்து செய்ய முனைகின்றனர்.

இப்படி இவர்கள் செய்வதன் மூலம் பாசிசம் நீடித்து நிற்கின்றது. பாசிசத்துக்கு தலைமை தாங்கும் தலைமையும், இதை பாதுகாக்கும் சித்தாந்தவாதிகளும் சேர்ந்து தான், தமிழ் மக்களின் முழு அவலத்தையும் சிருஸ்டிக்கின்றனர். இந்த வகையில் புலிப்பாசிசத்தை நியாயப்படுத்த, திட்டமிட்ட வகையில் சிலர் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் புலிகளின் நிதியாதாரத்தில் வெளிநாடுகளில் உள்ளனர்.

அவர்களின் ஒரே நோக்கம் புலிக்கு எதிரான சக்திகளை கருவறுப்பது தான். அது கருத்தாளனின் கழுத்தை வெட்டினாலும் சரி, கருத்தைத் சிதைத்தாலும் சரி, அவர்களுக்கு இடையில் நோக்கம் ஒன்று தான்.

அந்த வகையில் தமிழ்மணத்தில் இவர்கள் நுழைந்துள்ளனர். ஈழத்தமிழர் மத்தியில் ஒரேயொரு மாற்றுக் கருத்துத்தளம், தமிழ்மணம் மட்டும் தான் (http://www.thamizmanam.com/) இன்று எஞ்சியுள்ளது. அதை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடத்துவதால், புலிகளின் பாசிசப் பிடியில் இருந்து அது தப்பிப் பிழைத்துள்ளது. இதில் சில ஈழத்தமிழர்கள் நிலைமையை விவாதிக்க முனைகின்றனர். அதை எப்படி கருவறுப்பது என்பதே, புலிப்பாசிட்டுகளின் பணியாக உள்ளது. புலிக்கு காவலாக நின்று, குலைப்பதே அவர்களின் பணி.

இதற்காக பழக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். இதனுடன் சில அநாமதேயங்களும் களம் சேர்ந்து கொண்டு, புலியை பாதுகாப்பதே இவர்களின் கடமை. மற்றைய நேரத்தில் மண்ணை விராண்டுவதும், மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதும் தான் இந்த பாசிட்டுகளின் அரசியல் பணி.

விவாதம் வந்தவுடன், சம்பந்தமில்லாத வகையில் குலைக்கத் தொடங்குவார்கள்.

1. நிதர்சனம் டொட் கொம் புலிகளுடையதல்ல என்பார்கள்.

2. தமிழ்சோலை புலிகளுடையது அல்லவென்பார்கள். (சிலரோ, தவறுகள் மனித இயற்கை என்பார்கள்)

3. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புலிகளுடையதல்ல என்பார்கள். (இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உருவாக்கிய விதமே மோசடியானது. தலைவரும் பாலசிங்கமும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து, தமிழக மக்கள் அகதிகளுக்காக சேர்த்த பணத்தை திருட உருவாக்கிய கதையை, அழகாகவே பாலசிங்கம் குடும்பம் எழுதிய சுதந்திர வேட்கை தெரிவிக்கின்றது. இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயர் கூட திருடியது தான்)

4. மக்கள் படை, எல்லாளன் படை எதுவும் புலிகளுடையதல்ல என்பார்கள்.

இப்படி எதையும் புலிகளுடையதல்ல என்பார்கள். ஆதரவு தளங்கள் என்பார்கள். மக்களுடையது என்பார்கள். சரி இதைச் சொல்லவும் நீங்கள் யார் என்றால், நாங்கள் புலி அல்ல என்பார்கள். அப்படியானால் நீங்கள் யார்? இப்படித் தான், இதற்குள் தான், குட்டி போட்ட நாய் மாதிரி வட்டமிட்டுக் குலைப்பார்கள்.

இதற்கு வெளியில் எதையும் அரசியல் ரீதியாக சொல்ல முடியாதவர்கள். மண்ணில் இவர்கள் நடத்திய எத்தனை எத்தனையோ மனித அவலங்களுக்கும், தமக்கும் தொடர்புமில்லை என்பவர்கள் இவர்கள்.

இதை சொல்வது, இதைச் செய்வது, இதை நியாயப்படுத்துவது தான், இவர்களின் பாசிச பூர்வீகம். இவர்களின் எழுத்தில், இவர்களின் கருத்தில், இதற்கு வெளியில் எதையும் காணமுடியாது.

இப்படி சொல்லி கதைத்து எழுதுவதற்கு, அப்பால் எந்த அரசியலும் கிடையாது. இதுதான் புலி அரசியல். இதற்கு வெளியில் புலிக்கும் அரசியல் எதுவும் கிடையாது.

புலி அரசியல் தான் என்ன?

இதற்கு வெளியில், எந்த கொம்பனாலும் எதையும் கூறமுடியாது. யாரையும் ஏமாற்றவும், சினிமா காட்டவும் பிரபாகரனின் மேற்கோள்கள். அதை அவரே படித்திருக்கமாட்டார். தற்செயலாக அவர் படித்து, அதை நடைமுறைப்படுத்தினால் அவரையே துரோகி என்று அறிவிக்க போதுமான, பாசிசத்துக்கே சம்மந்தமில்லாத மேற்கோள்கள்.

இப்படி சம்பந்தமில்லாத வகையில் அனைத்தையும், அனைத்து தளத்திலும் வாய்க்கரிசி போடுவது போல் போடுவது. பின் சுதந்திரம், ஜனநாயகம் என்று பிதற்றுவது. இப்படி தமிழ் மக்களின் வாழ்வுடன் சம்பந்தமில்லாத வகையில் பினாற்றுவது. எந்த தார்மீக அடிப்படையும், சுய நேர்மையும் கிடையாது. மக்கள் விரோதத்தையே அச்சாகக் கொண்ட, புலிக்காக குலைத்துக் கொண்டு, தம்மை புலிகள் அல்லாதவர்களாக கூறிக்கொள்வது.

புலியைப் பாதுகாக்க ஸ்ராலின், பொல்போட் என்று கதைக்கத் தொடங்குவர். அதைப் பற்றி அறியும் ஆவலல்ல. தாம் செய்ததை மூடிமறைக்க, எதிராளியை தாக்க இந்த உத்தியைக் கையாளுவர். இதைத் தான் பார்ப்பனியம் ஏகாதிபத்தியம் அப்படியே செய்கின்றது. ஸ்ராலின், பொல்போட் பெயரில், தமது பாசிச பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்த முனைவது.

ஸ்ராலினும், பொல்போட்டும் என்ன எமது உறவினரா? எமது தனிப்பட்ட தலைவரா? எமக்கு காசு பணம் தந்துள்ளனரா? இப்படி இருக்க, மானம்கெட்ட மக்கள் விரோத பொறுக்கிகள் நோக்கம் தெளிவானது. உழைக்கும் வர்க்கத்தை கருவறுத்து, அதன் மூலம் தாம் வாழவேண்டும் என்ற (புலி)வேட்கை தெளிவானது. அப்படித்தானே பாசிசத்தின் பின்னால் அனுங்காமல் குலுங்காமல் ஆடுகின்றனர்.

ஸ்ராலின், பொல்போட் பற்றி எமது விமர்சனமும், உலகளாவிய விமர்சனமும் தெளிவானது. மார்க்சியத்தை விட்டுவிலகிச் சென்ற கூறுகளை நாம் கடுமையாக விமர்சித்தவர்கள். இது பற்றி அறியும் ஆர்வமல்ல இவர்களின் நோக்கம். மாறாக பாசிசத்தை மூடிமறைக்க, அதை நியாயப்படுத்த, அதேநேரம் எதிராளியை தாக்க கையாளும் பாசிச உத்திகள் இவை.

என்னத்தைச் செய்து கிழித்தீர்கள்? எங்கே உங்கள் மக்கள் புரட்சி, என்ன கணனிப் புரட்சியா? என்று பாசிசக் கிண்டல்கள். இவை எல்லாம் நாம் பாசிசத்தை அம்பலமாக்கும் போது, எதிராக ஓடோடி வருகின்றது. அதே நபர்கள் குள்ளநரிப் புத்தியுடன கொஞ்சம் மாற்றி, எங்களை வழிகாட்டுங்கள்! நாங்கள் என்ன செய்வது? எத்தனை பேர் உங்களுடன் உள்ளனர்? என்கின்றனர். இப்படிப் பாசிசம் அம்பலமாகிவிடும் போது, அதை மடக்க, அதை செயலற்றதாக்க, அதை முடக்க வைக்கும் வாதங்கள். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் சந்திக்கும், பாசிசத்தின் நுட்பமான எதிர் தாக்குதல்கள் இவை.

அதேநேரம் மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள். யார் இதை எல்லாம் செய்கின்றனர் என்றால், யார் தம்மை புலிகள் அல்ல என்று கூறிக்கொண்டு வருகின்றனரோ அவர்கள்தான். அரசியல் வேடிக்கை ஆனால் உண்மை.

எங்கே உங்கள் மக்கள் புரட்சி என்று கேட்பதும், நாங்கள் என்ன செய்வது என்று கேட்பதன் பின்னுள்ள வக்கிரமோ விகாரமானது. மக்கள் புரட்சி, மாற்று வழி, ஜனநாயகம் பற்றி சிந்தித்த 10000க்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்துவிட்டு, அதை தொடருகின்ற அதே தளத்தில் எம்மிடம் வந்து அறிவாளிகள் போல், சமூக விரும்பிகள் போல் கேட்கின்றனர். அதைப் பேசும் எமது கதி இதற்குள் தான் சங்கமமாகிக் கிடக்கின்றது. இப்படி கொன்று குவித்த அந்த புதை குழியின் மேல் ஏறி நின்று கொக்கரிக்கும் பாசிசம், அதையே திருப்பித் திமிராக துணிச்சலாக கேட்கின்றது. எல்லாவற்றையும் அழித்து விட்டோம் நாங்கள், நீங்கள் என்ன கிழிக்கவா போகின்றீர்கள் என்ற கொலைகார வக்கிரம் எம்மை நோக்கி கிண்டலாக நக்கலாக வருகின்றது.

இதற்கு வெளியில் அவர்கள் எதிர்வினையாற்றவில்லை. இதை மீறி நாங்கள் போராடுகின்றோம். ஏன் எதற்காக என்றால், மக்களின் அடிப்படை உரிமைக்காக. இதை மீறி, மாற்றி மனித வரலாற்றை எந்த பாசிட்டாலும் எழுதமுடியாது.

4 comments:

மு. மயூரன் said...

//என்னத்தைச் செய்து கிழித்தீர்கள்? எங்கே உங்கள் மக்கள் புரட்சி, என்ன கணனிப் புரட்சியா? என்று பாசிசக் கிண்டல்கள். இவை எல்லாம் நாம் பாசிசத்தை அம்பலமாக்கும் போது, எதிராக ஓடோடி வருகின்றது. அதே நபர்கள் குள்ளநரிப் புத்தியுடன கொஞ்சம் மாற்றி, எங்களை வழிகாட்டுங்கள்! நாங்கள் என்ன செய்வது? எத்தனை பேர் உங்களுடன் உள்ளனர்? என்கின்றனர். இப்படிப் பாசிசம் அம்பலமாகிவிடும் போது, அதை மடக்க, அதை செயலற்றதாக்க, அதை முடக்க வைக்கும் வாதங்கள். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் சந்திக்கும், பாசிசத்தின் நுட்பமான எதிர் தாக்குதல்கள் இவை.//


இந்தக் கேள்விகளைக் கேட்பவர்களின் பின்னணி பாசிசமாயோ அல்லாமலோ இருக்கலாம்.

உலகமெங்கும் தீவிர இடதுசாரிகள் மீது இறைக்கப்பட்ட சேற்றினை எல்லாம் மீறி எழுந்து நிற்க அவர்களுக்கு துணை புரிந்தது செயற்பாடு தான்.

மார்க்சீயம் என்பதே செயற்பாட்டின் தளத்தின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பது எனது புரிதல்.

சிறு மார்க்சீய குழுக்களின் மே வைக்கப்படும் அவதூறுகளுக்கும், தத்துவரீதியான குழப்பவாதங்களுக்கு அக்குழுக்களது புரட்சிகர அரசியல்-சமூகச் செயற்பாடுகள்தான் பதிலாகவும் எதிர்த்தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது.

தொடர்ச்சியான மக்கள் நிலைப் போராட்டங்களில் செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு மார்க்சீயக்குழுக்களையும் எந்த குழப்பவாதியும், பாசிஸ்டும் கருத்து ரீதியாக அடித்து விழுத்திவிட முடியாது.

உங்கள் மீதும் , தமிழரங்கம் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை கருத்து ரீதியாக எதிர்கொள்வது ஒரு புஙமிருக்க, அதை செயற்பாட்டு ரீதியாக எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதே எனது ஆர்வமாக உள்ளது.

ஈழத்தில் நீங்கள் செயற்பட முடியாத நிலை ஒன்று இருப்பதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் ஈழ அரசியல் தவிர்ந்த, வேறு தளங்களில் பிரான்சை மையமாகக்கொண்டு இயங்கும் மக்கள் நிலைப் போராட்டங்களில் உங்கள் பங்கு என்ன என்பது குறித்த செய்திகளை இங்கே வழங்கிவிடுவது பல வகைகளில் நன்மை தருவது.

அன்றாடம் பிரான்சை மையமாகக்கொண்டு இயங்கும் மார்க்சீயக்குழுக்கள், மனித நேயக்குழுக்களின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, மக்கள் போராட்டங்கள், தேவைகளுக்கு சார்பான செயற்பாடுகளை செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

அவ்வாறான குழ்நிலை- மக்கள் சார்பு செயற்பாடுகளில் தமிழரங்கத்தின் பங்குகுறித்த செய்திகள் எதனையும் தமிழரங்கம் தருவதில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழரங்கத்தின் கட்டுரைகளை ஒருவர் படிக்கும் போது, அதில் வெளிவரும் ம.க.இ.க கட்டுரைகள் தவிர்ந்த ஏனையவை எல்லாம் கணினி முன் அமர்ந்து ஒருவர் தட்டெழுதும் தத்துவ விமர்சனங்களாகவே அமைகின்றதைப்போல தோற்றம் தரும்.

அதற்குப்பின்னால் செயற்பாட்டுத்தளம் ஒன்று இருப்பதன் தோற்றத்தினை அவை தருவதில்லை.

கார்ல் மார்க்ஸ் , பல பெரிய மார்க்சீயர்கள் தாம் வாழும் எந்த நாடாக இருந்தாலும் அதனதன் அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்தும் பாதிகப்படுட்ம் நாடுகடத்தப்பட்டும் இருக்கிறார்கள்.

பச்சை இயக்கத்து செயற்பாட்டாளர் கூட தாம் வாழும் நாடுகளின் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்துக்கள்கிறார்கள்.

உண்மையில் ஈழத்தின் அரசியல் புறநிலைகளை விடவும் பிரான்சின் புறநிலைகள் மக்கள் நிலை அரசியல் செயற்பாடுகளுக்கு சாதகமானது.

ஆகக்குறைந்தது உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு ஆதரவுக்குரல் கொடுத்து பிரான்ச் மக்களை விழிப்பூட்டும் செயல்களிலாவது சிறு மார்க்சீய குழுக்கள் ஈடுபட முடியும்.

இத்தகைய - புலிகளையும் தாண்டிய- உலகம் தழுவிய- மக்கள் நிலைச்செயற்பாடுகளில் பிரான்சை மையமாகக்கொண்டு தமிழரங்கத்தின் பங்கு என்ன என்று அறிய விழைகிறேன்.

இங்கு நடக்கும் விவாதங்களை வாசித்துக்கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கூட இந்த கேள்வி துருத்திக்கொண்டு நிற்கும்.

தமிழரங்கம் said...

மயூரன்

உங்கள் கேள்வி, வாதம் இதற்குள் தான் மீளமீள இதற்குள் சத்திகின்றது.

நடைமுறை என்பது மக்களை தொடர்பு கொள்வது தான் நடைமுறை. தொடர்புக்கு அப்பால் அமைப்பு என்பது இனனொரு பரிணமாம். நாங்கள் தொடர்பு கொள்கின்றோம். அமைப்பாக அல்ல. ஊடாகவியலின் தாக்கம், கருத்துகளையே தீர்மானிப்பதில் முக்கிய பங்குண்டு.

மார்க்ஸ் தொடர்ச்சியாக சமூகத்தை நேரடியாக அனுகியவர் அல்ல. ஆனால் உலகம் தளுவிய கம்யூனிந இயக்கம் தொடங்கியது. இது போல்தான் லெனின் கூட. ஆனால் அவருக்கு பின்னால் அமைப்பு இருந்தது.

நடைமுறை சார்ந்த போராட்டங்களில் நாங்கள் மிகவும் ஆர்வமானவர்கள். இதில் நாங்கள் தீவிரமாக முழநேரப் பணியாளராக கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள். இதில் இருந்து நாம் வெட்டப்பட்டுள்ள நிலையில், நாம் செய்ய வேண்டியதை, சரியாகவே நாம் தெரிவு செய்துள்ளோம். காலத்தின் தேவையை புரிந்து அதைச் செய்கின்றோம்.

புலி, புலியெதிர்ப்பு என்று அனைத்து அரசியல் தளத்தின் கருத்தியல் மீதும், தாக்கத்தையும் அதிர்வை உண்டாக்கின்றோம். பல பதிய சிந்தனையளரை கூட, சமூகம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? என்பதை சிந்திக்க துண்டியுள்ளோம்.

புலம்பெயர் தமிழர் மத்தியில் நடைமுறை என்பது, புலியை மீறி எதவும் செய்ய முடியாத நிலை. ஆனால் சில பொது அமைப்புகளில், பல முரண்பாடுகள் இருந்த போதும் ஊக்கமாக பங்குபற்றுகின்றோம். பொதுவான சமூகம் சார்ந்தமுயற்சிகள் கூட செய்ய முடியாத நிலை. கொழும்பு நிலைதான் இங்கும். சமூகம் சார்ந்த சில முயற்கிகள் கூட முடக்கப்பட்டன.

பிராஞ்சு சமூகம் மத்தியில் செயல்பட மொழி சார்ந்த அறிவு எமக்கு கிடையாது. ஆனால் பிராஞ்சு சமூகத்தின் போராடங்களில் ஊக்கமாக குழந்தைகளுடன் சென்று பங்குபற்றுபவர்கள். எனது சில அரசியல் ரீதியான நண்பர்கள் குடுபங்கள் கூட.

மாhக்சிய ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட புரட்சிகர வர்க்க அமைப்பை இனம் காணமுடியாவில்லை. அப்படி ஒன்று அடையாளம் கணப்பட்டால் நிச்சயமாக இணைவோம்;

பிராஞ்சு தொடர்பாக எழுதுவது குறைவு. இதனடிப்படையில் ஒரு பத்திரிகயை கொண்டு வந்த நாங்கள், அதை விநியோகிப்பதில் தடைகளை பொதுவான தமழ் அரசியல் சூழல் சந்தித்தோம்.

இந்த வாரம் கூட பராளுமன்றத்தில் வெளிநாட்டவனுக்கு எதிராக நாசிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. விசா அற்றவரை வீட்டில் வைத்து இருந்தால், வைத்திருப்பவர் குற்வாளி. ஆனால் நாம் இதை சொல்லும் தளமும், நேரமும் எம்முன் கிடையாது.

kiddy ppl said...

அப்பாடா என்னைப் பற்றி ஒன்றுமில்லை! எங்கேயிருந்து தான் இப்படி தமிழ் துள்ளிவருகிறதோ?

கொழுவி said...

//ஈழத்தமிழர் மத்தியில் ஒரேயொரு மாற்றுக் கருத்துத்தளம், தமிழ்மணம் மட்டும் தான் (http://www.thamizmanam.com/) இன்று எஞ்சியுள்ளது. அதை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடத்துவதால், புலிகளின் பாசிசப் பிடியில் இருந்து அது தப்பிப் பிழைத்துள்ளது//

சிரிப்பைத்தவிர வேறெதனையும் என்னால் பின்னூட்டமாக இட முடியவில்லை. :)

இருப்பினும் நீங்கள் தெளிவுறும் போது கண்டிப்பாக புலிகளின் தமிழ்மணம் என்னும் கட்டுரையொன்றை எழுதுவீர்கள் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்.