தமிழ் அரங்கம்

Tuesday, November 20, 2007

விவசாயிகள் தற்கொலை :கந்துவட்டிக் கடன்தான் நிவாரணமா?

மெரிக்காவில், அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் வீடு வாங்கக் கடன் கொடுப்பதை, துணைக் கடன் என அழைக்கிறார்கள். வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாத அமெரிக்கர்களைக் கூட விட்டுவிடாமல், இந்தக் கடன் வலைக்குள் பிடித்துப் போடுவதை, அமெரிக்க வங்கிகளும், ""ஹெட்ஜ் ஃபண்டுகள்'' என அழைக்கப்படும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் துணைக் கடன் அதிக அளவில் வழங்கப்படுவதற்கு, வீடு இல்லாத அமெரிக்கக் குடிமகனே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பற்றெல்லாம் காரணம் கிடையாது. இந்தத் துணைக் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி மிக அதிகம்; இந்தக் கடன் மூலம்தான் ""ரியல் எஸ்டேட்'' வியாபாரம் ""ஜாக்கி'' போட்டுத் தூக்கி நிறுத்தப்படுகிறது என்பவைதான் இதற்குப் பின்னுள்ள காரணங்கள்.

அமெரிக்க வங்கிகள், ஹெட்ஜ் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தி வந்த இந்தச் சூதாட்டத்தின் விளைவாக, வங்கிகளில் வாராக் கடன் அதிகமாகி, இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நிதிச் சந்தையில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்ததோடு, பல ""பிளேடு'' (மோசடி) கம்பெனிகளும் அமெரிக்க வங்கிகளும் திவாலாகி விடுமோ என்ற பீதி முதலாளித்துவ உலகத்தைப் பிடித்தாட்டியது.

இந்த நெருக்கடி அமெரிக்காவை மட்டும் பாதிக்கவில்லை; ஐரோப்பிய நாடுகள், இந்தியா எனத் தாராளமயத்தைத் தீவிரமாக அமல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்தது. ""சில்லறைக் கடன் வழங்குவதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய வங்கிகள், அமெரிக்க நெருடிக்கடியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்'' எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

கார், இரு சக்கர வாகனங்கள் போன்ற ஆடம்பர நுகர்பொருட்களை வாங்கத் தரப்படும் தனிநபர் கடன், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை வியாபாரம் ஆகியவற்றுக்காக இந்திய வங்கிகள் அளித்த கடன் 2005இல் 1,63,831 கோடி ரூபாயாகும்; இது, 2006இல் 2,86,691 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் சில்லறைக் கடனுக்காக அதிகபட்சம் 55 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதால், தனியார் வர்த்தக வங்கிகள் மட்டுமல்லாது, பொதுத்துறை வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு சில்லறைக் கடன் வழங்குவதில், தங்களின் சேமிப்பைக் கொட்டுகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. என்ற தனியார் வங்கி, 2006இல் வழங்கிய மொத்தக் கடனில் 65 சதவீதமும்; பஞ்சாப் செஞ்சூரியன் வங்கி 68 சதவீதமும்; பொதுத்துறை வங்கியான இந்திய அரசு வங்கி 21.2 சதவீதமும்; பஞ்சாப் தேசிய வங்கி 22.7 சதவீதமும் சில்லறைக் கடனாக வழங்கியுள்ளன.

""இந்தச் சில்லறைக் கடன் கடிவாளம் இல்லாமல் வீங்கிக் கொண்டே போனால், நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டு, வட்டி வீதம் உயர்ந்துவிடும்'' எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பிறகு, சிறு தொழிலுக்கும், விவசாயத்திற்கும், உற்பத்தித் துறைக்கும் கடன் வழங்குவதை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என உபதேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

2006ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1,90,000 கோடி ரூபாயும்; 2007ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 2,25,000 கோடி ரூபாயும் பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடனாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும், 87 சதவீத நடுத்தர விவசாயிகளுக்கும், 70 சதவீத சிறு விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடன் கிடைப்பதில்லை என உலக வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.

1993க்குப் பிறகு நாடெங்கிலும் ஏறத்தாழ 1,12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவலச் சாவுகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கமிட்டிகள் கூட, ""விவசாயிகளுக்கு அரசு கடன் கிடைக்காமல் போவதும் தற்கொலைக்கு ஒரு காரணம்'' என ஒப்புக் கொண்டுள்ளன.

எனினும், போலி கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு நடக்கும் காங்கிரசு கூட்டணி ஆட்சி, விவசாயிகளின் அவலம் பற்றி முதலைக் கண்ணீர் தான் வடிக்கிறது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மைய அரசு 3,750 கோடி ரூபாய் பெறுமான நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, 200708இல் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும் (2,033 கோடி ரூபாய்) என்ற டாம்பீக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், நடைமுறையில் இது வெறும் காகிதத் திட்டம் என அம்பலமானது.

விதர்பா பகுதி விவசாயிகளுக்கு அரசு வங்கிகள் 200708 ஆம் ஆண்டிற்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ள கடன் அளவு, அவ்விவசாயிகள் 200607இல் அரசு வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தியிருந்த அசலையும் வட்டியையும் விடக் குறைவானதாகும். விதர்பா பகுதியிலேயே தற்கொலைச் சாவுகள் அதிகமாக நடந்துள்ள யாவட்மால் பகுதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன், 200607ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது 30 சதவீதமும்; வாஷிம் பகுதிக்கு 41 சதவீதமும்; அகோலா பகுதிக்கு 36 சதவீதமும்; புல்தானா பகுதிக்கு 38 சதவீதமும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த 2,033 கோடி ரூபாய் கடன், இப்பொழுது 1,683 கோடி ரூபாயாகச் சுருங்கி விட்டது. விதர்பா பகுதி விவசாயிகள் கடனுக்காக வங்கிகளின் வாசல்படியை மிதிக்கும் பொழுது, இது இன்னும் கூடச் சுருக்கிப் போய்விடலாம்.

அரசு நிவாரணத் திட்டத்தை அறிவித்த பிறகு, கடந்த ஜூலை 2006 தொடங்கி ஜூலை 2007க்குள்ளாக மட்டும் விதர்பா பகுதியில் 1,600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார், விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் தலைவர் திவாரி. இதிலிருந்தே பொருளாதாரப் புலிகள் மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா ப.சிதம்பரம் போட்ட நிவாரணத் திட்டத்தின் இலட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

விதர்பா பகுதி விவசாயிகள் வங்கிக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியதை, மைய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், பருத்திக்குத் தரப்டும் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,700/ ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்து, ஓட்டுப் பொறுக்கியது காங்கிரசு கும்பல். ஆட்சியைப் பிடித்த பிறகோ, பருத்திக்குத் தரப்பட்டு வந்த ஆதார விலையை ரூ. 2,250/லிருந்து ரூ. 1,750/ ஆகக் குறைத்து, விவசாயிகளின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது. தற்பொழுது, உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளுக்குத் தடை விதித்திருப்பதன் மூலம், மான்சாண்டோ எவ்விதப் போட்டியும் இன்றி பருத்தி விவசாயிகளை மொட்டையடிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங்.

1993க்கும் 2002க்கும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், கிராமப்புறங்களில் இயங்கி வந்த அரசு வங்கிக் கிளைகளுள், 3,500 கிளைகள் இழுத்து மூடப்பட்டன. இதற்கு இணையாக, 1991க்கும் 2001க்கும் இடைபட்ட பத்தாண்டுகளில் விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடன் அளவு, 17.5 சதவீதத்தில் இருந்து 29.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் கந்துவட்டிக் கும்பலின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில், அதை முறைப்படுத்துவது தொடர்பாக உலக வங்கியும், இந்திய ரிசர்வ் வங்கியும் இரண்டு அறிக்கைகளைக் கொடுத்துள்ளன.

உலக வங்கி அளித்துள்ள அறிக்கையில் கிராமப்புற ஏழைநடுத்தர விவசாயிகளுக்கு அரசு வங்கிக் கடன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் இலாபகரமாக இயங்கும்படி ""சீர்திருத்தங்களை'' மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, இச்சீர்திருத்தத்திற்காக 2,400 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. உலக வங்கியின் இந்த ஆலோசனை வெளிவந்தவுடனேயே, இக்கடனைப் பெறும் ஒப்பந்தத்தில், போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்டு 12 மாநில அரசுகள் கையெழுத்துப் போட்டுவிட்டன.

உலக வங்கியின் ஆலோசனைப்படி இந்தியப் பொருளாதாரம் சீர்திருத்தப்பட்டதால்தான், விவசாயத் துறை முன்னெப்பொழுதும் கண்டிராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், உலக வங்கியின் இந்தப் புதிய ஆலோசனை, விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்த்துவிடும் என யாராவது நம்ப முடியுமா? கூட்டுறவு வங்கிகளை இலாபகரமாக இயக்க வேண்டும் என்ற உலக வங்கியின் ஆலோசனை இனிப்பு தடவிய கசப்பு மாத்திரை. விளைச்சல் வீழ்ந்தால்கூட கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது; கந்துவட்டிக்காரனைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் அசலையும், வட்டியையும் விவசாயிகளிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆலோசனையின் பின்னுள்ள நோக்கமாக இருக்க முடியும்.

கிராமப்புற விவசாயிகளின் கடன் சுமையை ஆராய இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட குப்தா கமிட்டி, ""அரசு வங்கிகளைவிட கிராமப்புறங்களில் வட்டிக் கடை நடத்தி வருபவர்கள்தான் விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள்; எனவே, இந்த வட்டிக் கடை அதிபர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை "அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக' அரசு நியமிக்க வேண்டும். இவர்கள் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கத் தேவைப்படும் மூலதனத்தை வங்கிகள் வழங்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து கடனை வசூலித்து, வங்கிக்குக் கட்ட வேண்டிய பொறுப்பையும், அங்கீகரிக்கப்பட்ட வட்டிக் கடைக்காரர்களிடம் விட்டு விட வேண்டும். இதனால், விவசாயிகள் கடன் கேட்டு வங்கிக்கு அலைய வேண்டியதில்லை. அதிகார வர்க்கத் தடைகள் இன்றி, விவசாயிகளுக்குக் கடன் கிடைப்பதோடு, வங்கிகளின் வாராக் கடன் சுமையும் குறையும்'' என்ற அரிய ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

""லேவாதேவிக்காரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடன் கொடுப்போர் சட்டம் 2007'' என்ற பெயரில் குப்தா கமிட்டி உருவாக்கியிருக்கும் மாதிரிச் சட்டத்தில், ""விவசாயத்திற்கு அளிக்கப்படும் கடனுக்கு வட்டி வரம்பு நிர்ணயிப்பது, சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிரானதாக அமையும்; ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கடன் கோரும்பொழுது, அவர்களின் நிலம் மற்றும் வீட்டை அடமானமாக வாங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்பொழுது சட்டவிரோதமானதாகக் கருதப்படும் கந்துவட்டிக் கும்பலின் சுரண்டலும், நிலப்பறிப்பும் சட்டப்பூர்வமானதாக மாறிவிடும். அரசு வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை நகர்ப்புறத்துத் தொழில் அதிபர்கள் ஏப்பம் விட்டதைப் போன்று, கிராமப்புற ஆதிக்க சக்திகளும் ஏப்பம் விடும் நிலைமை உருவாகும். விவசாயத்தைப் பிடித்தாட்டும் நோய்க்கு மருந்து கேட்டால், அதிகார வர்க்கமோ நோயாளியை விவசாயிகளைக் கொன்று விடுவதற்குத் தனது புத்தியைத் தீட்டுகிறது!

· ரஹீம்

No comments: