பி.இரயாகரன்
24.11.2007
மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைத் தெரியாமல், தெரியவிடாமலே அரசியல் செய்கின்றனர். யாரும் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் என்ன என்ற கேள்வியையும், அது எப்படி இந்த அமைப்பில் மறுக்கப்படுகின்றது என்பதையும் உரையாடுவது கூட கிடையாது. தனது உரிமை, தான் என்ற சுயநல எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது. சுற்றிவளைத்துப் பார்த்தால், இவர்களிடம் பொது உலக கண்ணோட்டம் கிடையாது. புலித் 'தேசியம்" புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" இதற்குள் அனைத்து சிந்தனை முறையும் வடிகட்டப்படுகின்றது. 'தமிழ் தேசியம்" முதல் 'தமிழ் ஜனநாயகம்" வரை இப்படித் தான், இதற்குள் தான் இயங்குகின்றது.
இதை உருவாக்கத்தான் உள்ளியக்க படுகொலைகள் முதல் இனம் காணப்பட்ட அரசியல் படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டன. ஒன்று இரண்டல்ல. ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். மக்களின் விடுதலைக்காக போராட முனைந்த அரசியல் முன்னணிப் படை இப்படி அழிக்கப்பட்டது. இன்று இதை அரசியல் ரீதியாக யார் தான் நினைவு கூருகின்றனர். நாம் மட்டும் தான். அவர்கள் எதைக் கோரி தம்மை தியாகம் செய்தனரோ, அதை நாம் மட்டும் தான் அரசியல் ரீதியாக இன்றும் முன்னிறுத்துகின்றோம்.
இந்த அரசியல் படுகொலைகளை செய்தவர்கள் எங்கே? அவர்கள் வேறு யாருமல்ல, இன்றும் ஆதிகக் அரசியலில் உள்ளவர்கள் தான் அவர்கள். ஜனநாயகம் பேசுகின்ற புலியெதிர்ப்புவாதிகள். தேசியம் பேசுகின்ற புலிகள். இவர்கள் தான், மக்களுக்காக போராடியவர்களை கொன்று போட்டவர்கள்.
இவர்கள் யாரும் இன்று வரை, மக்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை ஏற்றுக்கொள்வது கிடையாது. அதற்காக போராடியதுமில்லை, போராடுவதும் கிடையாது. இவர்களின் 'தேசியம்", 'ஜனநாயகம்" எதுவாக இருந்தாலும், இதைத்தான் செய்கின்றனர். இரண்டையும் ஒன்றுக்கு ஒன்று, எதிராக நிறுத்தி மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர்.
அன்று கொல்லப்பட்டவன் யார்? அவன் எதைக் கோரினான். அவன் தனது அமைப்பினுள் ஜனநாயக உரிமையைக் கோரினான். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைக் கோரினான். இப்படி அவன் சகல சுரண்டலையும் எதிர்த்தான். சகல ஒடுக்குமுறையையும் எதிர்த்தான். தனது இயக்கம் அதை ஆதரிப்பதை எதிர்த்தான். உள்ளியக்க மத்தியிலும், வெளியிலும் பிரச்சாரம் செய்தான். இயக்க தலைமைகள் இந்தக் கோசத்தை வைத்து மக்களை ஏமாற்றியது இப்படி அம்பலமாகத் தொடங்கியது. இதனால் உள்ளியக்க படுகொலைகளை வீச்சாக நடத்தினர். பின் வெளியியக்க படுகொலைகள் நடத்தினர். ஆரம்ப இயக்கப் படுகொலைகள் இவை தான்.
மக்களைச் சார்ந்து நின்று, மக்களின் அரசியல் உரிமைகளுக்கு தலைமை தாங்கியவர்கள், தாங்கக் கோரியவர்கள் கொல்லப்பட்டனர், சிதைக்கப்பட்டனர். இப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தியவன் வேட்டையாடப்பட்டான். இதை இன்று புலிகள் மட்டும் செய்வதாக காட்டுவது, புலியெதிர்ப்பு புல்லுருவிகளின் நவீன கொலைகார அரசியற் பிழைப்பாகின்றது. புலிகளைப் போல் மிக அதிக படுகொலைகளை இதற்காக நடத்தியவர்கள் இவர்கள் தான்.
இப்படி தமிழ்ச் சமூகத்தின் முன்னணிச் சிந்தனைமுறையை, அறிவியல் முறையையும் வெட்டியெறிந்தனர். தமிழ் மக்களின் உண்மையான தியாக மனப்பான்மை கொண்ட தலைவர்களை அழித்தனர். இதன் மூலமே மக்களை தமது கொலைத்தனத்துக்கு ஏற்ற மந்தைக் கூட்டமாக்கினர். கவர்ச்சி வாதம், இயக்க வாதம், கோசவாதம், நம்பிக்கைவாதம், தனிமனித வழிபாட்டு வாதம் என்று குறுகிய வரட்டு எல்லைக்குள், சமூகத்தின் அறிவை அதன் கருத்தை, அதன் மனிதத்தை வெட்டிச் சிதைத்தனர். பின் இதற்குள் இன்று வரை வம்பளந்து, அவர்கள் அரசியல் செய்கின்றனர்.
மக்கள் தனக்காக, தனது உரிமைக்காக போராடக் கூடாது என்பது இவர்களின் அடிப்படையான அரசியல் சித்தாந்தம். மக்கள் சுய உணர்வை பெறுவதையும், அது சார்ந்த எந்த அறிவுத் தேடலையும் தடுப்பதே, இவர்களின் மைய அரசியல் நீரோட்டம். இதை இன்று வெறும் புலிகள் மட்டும் செய்யவில்லை. புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பும் கூடிச் செய்கின்றது. தனித்தும் கூடியும் செய்ய கூட்டுத் தளங்களும் உண்டு.
இதைத் தான் அன்று புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத அனைத்து மிகப்பெரிய ஆயுதமேந்திய இயக்கங்களும் செய்தன. 1983 -1984 களில் அரசியல் ரீதியாக உட்படுகொலைகளை பெருமெடுப்பில் செய்யத் தொடங்கினர். இதன் தொடச்சியில் தான், இன்றுவரை தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையைப் பற்றிப் பேச முடியாத நிலை. அதை இன்று சிந்தனை முறையிலும் கூட வெளிப்படுத்த முடியாதளவுக்கு அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது.
மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானதா? அதாவது இது தேசியத்துக்கு எதிரானதா? ஜனநாயகத்துக்கு எதிரானதா? அறிவியல் பூர்வமாகவும் சரியான மனிதத் தன்மை உள்ள ஒவ்வொருவரும் அரசியல் ரீதியாக பதிலளித்தேயாக வேண்டும். இன்று அரசியல் செய்கின்றவர்கள் இதை ஏற்று, மக்களின் உரிமைகளுக்காக செயற்படுகின்றனரா? சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் சுயமாக அரசியல் ரீதியாக பதிலளித்தாக வேண்டும். ஒவ்வொன்றையும் இதனடிப்படையில் பரிசீலித்தாக வேண்டும்.
மக்களின் உரிமையை மறுக்கின்றவர்கள், சமூதாயப் பிரச்சனைக்கு தீர்வை எங்கிருந்து எப்படித் தேடுகின்றனர். யார் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கின்றனரோ அந்த அரசியலை, மாற்று வழியில் வைப்பதை மாற்று அரசியல் என்கின்றனர். மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை முன்வைத்து, மக்கள் தமது பிரச்சனையைத் தீர்க்கும் வழியை பிரச்சாரம் செய்வது கிடையாது. அதனடிப்படையில் மக்களை அணிதிரட்டுவது கிடையாது. புலி மற்றும் புலியெதிர்ப்பு இரண்டும், இப்படித்தான் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் இயங்குகின்றது. மக்களின் அரசியல் சுபீட்சத்துக்கு இவர்கள் வைக்கும் அரசியல் தீர்வு தான் என்ன? யாராலும் இதை விளக்க, எந்த அடிப்படை அரசியலும் கிடையாது.
இப்படி மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று, புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பு கூறுகின்றது. இதனால் மக்களின் அடிப்படை உரிமையைப் பேச முனையும் எம்மை, கடுமையாக எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக இதை மறுக்க முடியாது என்பதால் அரசியல் மௌனமும், சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் தனிநபர் அவதூறு தாக்குதலையும் கண்மூடித்தனமாக நடத்துகின்றனர். இதனால் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற, அவர்களின் அரசியலை கனவை பாதுகாக்க கனவு காண்கின்றனர்.
நாம் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு எப்படி எதிரானது என்றால், வரட்டுத்தனமாக விரட்டிப் பதிலளிக்கின்றனர். புலித் தேசியமே அனைத்துக்கும் முதல் என்கின்றனர். இல்லை புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" அனைத்துக்கும் முதல் என்கின்றனர். இப்படி வரட்டுத்தனமான வரட்டு வாதங்கள். உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள், இந்த இருபோக்குகளையும் பின்பற்றுகின்ற அரசியலுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இப்படி இவர்கள் அரசியல் பார்வையிலே, மக்கள் விரோத அரசியல் உணர்வு வறட்டுத்தனமாகி மிதப்பாகிக் கிடக்கின்றது. அது மக்களுக்கு எதிராகவே, பலதளத்தில் தொடர்ந்து இயங்குகின்றது.
மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுப்பதே, சுரண்டும் வர்க்கத்தின் ஒரேயொரு ஆயுதம். இது மட்டும் போதும், அவர்கள் யார் எந்த வேஷத்தில் வந்தாலும் புரிந்து கொள்ள. இதை எதிர்த்துப் போராடுவது தானே, மனித வரலாறு.
No comments:
Post a Comment