தமிழ் அரங்கம்

Friday, November 23, 2007

யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக'த்தில் கிடைக்கின்றதாம்!

பி.இரயாகரன்
23.11.2007

னநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம். மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து இதை நோக்குவதால், புலி மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகளிடம் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதலை ஒரே நேரத்தில் சந்திக்கின்றோம். அவர்கள் இதைக் கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், தனிமனித அவதூறுகளாக சந்திக்கின்றோம். அரசியல் ரீதியாக இதைப் புறந்தள்ளிக்கொண்டு தான், மக்களின் உரிமைகளை நோக்கி முன்னிறுத்தி முன்னேற முடியும். இதை எமது அனுபவம் மட்டுமின்றி, விமர்சனமும் சுயவிமர்சனமும் கூட எடுத்துக் காட்டுகின்றது.

பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புகின்றார்களாம். இதை மீறி எதையும் அவர்களால் புதிதாக சொல்ல முடிவதில்லை.

இப்படித்தான் புலிப் பாசிசத்திலும் இருந்து, யாழ் மக்களை பேரினவாத அரசு காப்பாற்றியுள்ளதாக கூறுகின்றனர். யாழ் மக்களின் வாழ்விலோ, 'ஜனநாயகம்" பூத்துக் குலுங்குகின்றதாம். இந்தக் கண்கொள்ளாக் காட்சி தான், புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியலாகின்றது.

இப்படி யாழ் மக்களுக்கு பேரினவாத அரசும், புலியெதிர்ப்புக் கும்பலும், எல்லா சமூக விரோத கழிசடைகளும் வழங்கியது என்ன? யாரும் இதற்குப் பதிலளிப்பது கிடையாது.

யாழ்குடாவில் மக்கள் வீட்டை விட்டுக் கூட வெளியில் வரமுடியாத அளவுக்கு 'ஜனநாயகம்". பெடி பெட்டைகளை வீட்டுக்குள் பூட்டிவைக்க வேண்டிய அளவுக்கு, பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நடமாடும் சுதந்திரத்தைப் பெற்ற எந்தப் பெண்ணும், பாலியல் அடிப்படையிலான சோதனையைத் கடந்து செல்ல முடிவதில்லை. இப்படி 'ஜனநாயக"த்துக்கோ அங்கும் இங்கும் பல பக்கங்கள் உண்டு. இந்த 'ஜனநாயக"த்தில், ஒரு 'ஜனநாயக" காட்டுத் தர்பாரே நடாத்தப்படுகின்றது. எங்கும் அச்சம் பீதி கலந்த உறை நிலைக்குள் சமூகத்தை திணித்து, 'ஜனநாயகம்" தழைத்தோங்குகின்றது.

எங்கும் கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள், பாலியல் வக்கிரங்கள் ஊடாக, யாழ் குடாநாடு அதிபயங்கரமான சமூக பீதிக்குள் திணிக்கப்பட்டுள்ளது. புலிகளிடம் இருந்து மீட்கும் 'ஜனநாயகம்" இப்படித்தான் உள்ளது.

இதைத்தான் தமிழ் மக்கள், தேசியத்துக்கு பதிலான 'ஜனநாயகம்" விருப்பம் என்கின்றனர். அந்த 'ஜனநாயக"த்தில் டக்கிளஸ் ஐஜயா பொறுக்கிப் போடுகின்றார். இப்படி பொறுக்கிப் போட்டும், போட்டுத் தள்ளியும், பலர் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். தமிழ் மக்கள் தம் பின்னால் நிற்பதாக, தமது அலுவலகங்களில் காத்து நிற்பதாக, அவர் செய்யும் புண்ணியங்களை பறைசாற்றுகின்றனர். இப்படித் தான் அங்கு இங்கும் 'ஜனநாயகம்" மிகச் செழிப்பாய் தழைத்தோங்குகின்றது. இந்த பொறுக்கிப் போடுவதையும், போட்டுத் தள்ளும் 'ஜனநாயக"த்தையும் ஊர் உலகத்திற்கு பறைசாற்ற ஒரு வானொலி. அந்த வானொலிக்கு பெயர், 'ஜனநாயக" வானொலியாம். இப்படித் தான் இலண்டனில் இருந்தும் ஒரு 'ஜனநாயக" வானொலி. யாழ் மக்கள் வரை சென்று ஜனநாயகம் பேசி, ஊரோடு உறவாடுகின்றனராம்.

யாழ் மக்கள் அனுபவிக்கும் இன்றைய கொடுமைகளையும், இராணுவ கொடூரங்களையுமா அந்த 'ஜனநாயகம்" பேசுகின்றது. 'ஜனநாயக"த்தின் பெயரில் பேசுவது, அந்த மக்களின் ஜனநாயகத்தையல்ல. இப்படி 'ஜனநாயகம்" பேசுபவன் யார்? டக்ளஸ் ஐஜயா இலங்கை அரசின் காசில் 'ஜனநாயகம்" பேச, வானொலி நடத்துகின்றார். ராஜன் ஐஜயா இந்திய அரசின் காசில் இலங்கை அரசின் அனுமதியுடன் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இப்படித்தான் பலர் 'ஜனநாயகம்" பேசுகின்றனர். இப்படி வானொலிகளிலும், இணையங்களிலும் 'ஜனநாயக" ஆய்வாளர்கள், அபிமானிகள். அவர்கள் எல்லாம் அடித்துச் சொல்வது, இது தான் சுதந்திர விவாதம், கருத்து விவாதம் என்கின்றனர்.

தாம் பேசுவது 'ஜனநாயகம்", தாம் பேசும் உரிமை 'ஜனநாயகம்" என்றால் இது அனைத்து அடக்குமுறையாளருக்கும் பொருந்தும். என்ன பேசுகின்றோம் என்பதல்லவா முக்கியம். சமூகத்தை முன்னிறுத்தாத எதுவும், பரந்துபட்ட மக்களின் 'ஜனநாயக"மல்ல.

சமூகத்தை முன்னிறுத்தாது வழிபடும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்தல்ல. இதை எதிர்ப்பவர்கள் ஒன்று புலிகள் அல்லது அரசு அல்லது நடுநிலை வேஷம் கட்டி இரண்டையும் சார்ந்து இயங்குதல் தான், 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து, யாரும் ஜனநாயகம் பேசுவது கிடையாது. இந்த விடையத்தில் அரசியல் ரீதியாக வேறுபாடு இவர்களிடையே கிடையாது.

இதைத்தான் பேரினவாத அரசு செய்கின்றது. தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து பாதுகாப்பதாக கூறும் பேரினவாத அரசோ, மக்கள் மூச்சுக் கூட விடாமல் வைத்திருப்பது தான் 'ஜனநாயகம்" என்கின்றது. இதற்கு ஆதரவான புலியெதிர்ப்போ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது இருத்தலே, 'ஜனநாயகம்" என்கின்றனர். 'ஜனநாயகம்" வேண்டும் என்பவர்கள், இப்படி ஒன்றுபட்டு இயங்குகின்றனர். இதைத்தான் இலங்கை வாழ் தமிழ்மக்கள் எங்கும் எதிலும் அனுபவிக்கின்றனர். இப்படித்தான் யாழ் மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் 'ஜனநாயகம்" என்பது, கொலை, கொள்ளை, கப்பம் முதல் வர்த்தக சூதாடிகள் ஆட்சி செய்யும் மயான சுதந்திரம். அங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் வீட்டை விட்டு வெளியேறினால், நாம் மீண்டும் வீடு திரும்பி வருவோமா என்ற சந்தேகத்துடன் வாழ்கின்றான் . இன்று இதுவே யாழ் மக்களின் உளவியல் நோயாகிவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் தனது குடும்ப ஆண்களை பாதுகாக்க எண்ணி, சதா புலம்புவதே வாழ்க்கையாகிவிட்டது. எங்கும் அச்சம் கலந்த மயானமான "சுதந்திர" பூமி. ஒவ்வொரு பெண்களும் 'ஜனநாயகம்" போட்டுள்ள பாலியல் சோதனைச் சாவடியூடாக தப்பி வாழ முயன்று, உளவியல் ரீதியாகவே அவள் சிதைந்து போகின்றாள்.

தமது உறவுகளைத் தேடி அலையும் மனிதம். விழும் பிணத்தை நோக்கி பதறி ஓடும் மனிதக் காட்சிகள். ஓவென்று எழும் மனித ஒலங்கள், ஒப்பாரிகள். உருட்டி மிரட்டி வாங்கும் கப்பம். அதிகாரத்தைக் கொண்டே, மக்களை விலைக்கு வாங்கும் அரசியல். இப்படி 'ஜனநாயகமாய்" பூத்துக் குலுங்கும் பூங்கா யாழ் குடா நாடு.

இப்படி 'ஜனநாயகம்" அனைத்தையும் விலை பேசும் பொருளாக்கியுள்ளது. மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம், இன்று எடைக்கு விலை போடப்படுகின்றது. பொறுக்கித்தனங்களும், கைக் கூலித்தனமும், காட்டிக்கொடுப்பும், பிழைப்புத்தனமும், அரசியலாகிவிட்டது. இதுவே சிலரின் வாழ்வுக்கான சுபிட்சத்துக்கான ஒன்றாக மாறிவிட்டது.

எதையும் எப்படியும் செய்யலாம். எப்படியும் கதைக்கலாம். எப்படியும் எழுதலாம் எப்படியும் மழுப்பலாம் என்ற நிலை. இதுவே இன்றைய அரசியல் நடைமுறையும், ஏன் அறிவும் கூட அது தான். மக்களின் வாழ்வியல் கூறுகள் மீதான வெறுப்பு, அனைத்திலும் ஆட்சி செய்கின்றது.

அதிகாரத்தின் முன் வாய் திறக்க முடியாது. இயங்க முடியாது. இதை மீறினால் மரணம் என்பது "ஜனநாயகம்". ஜனநாயகத்தின் முன் கருத்து முதல் நபர் வரை இழிவாடப்படுகின்றனர். இழிவாடுவதும், அதற்கான உரிமையுமே கருத்துச் சுதந்திரமாகிவிட்டது. இவர்களைக் கொல்வது தான் சரியானது என்பது, ஆதிக்க அரசியல் கோட்பாடாகிவிட்டது. ஆளைக் கொல் அல்லது கருத்தைக் கொல். எப்படியென்றாலும் பரவாயில்லை. உனது வழியில், உனது பாணியில் தாக்குதலை நடத்து என்கின்றது. எங்கும் அராஜகம். கொலை முதல் கருத்து வரை.

அறிவு என்பது இதைத் தாண்டவில்லை. பத்திரிகைத்துறை, அறிவுத் துறை, கோட்பாட்டுத்துறை என அனைத்தும், இதற்குள் மெத்தை போட்டுப் படுக்கின்றது. மனித அவலத்தின் எல்லைக்குள், அதையே அரசியலாக்குகின்றது. அதற்கு இசைவாக இயங்குகின்றது. அவர்களின் இந்த அறநெறியோ, அறிவு சார் அரசியல் ஒழுக்கமாகி விடுகின்றது. இதையே 'ஜனநாயகம்" என்கின்றனர்.

இந்த 'ஜனநாயகம்" யாழ்குடாவில் அம்மணமாகி நிற்கின்றது. இது கிழக்கிலோ மற்றைய பகுதியிலோ இல்லை என்பதல்ல. ஆனால் யாழ்குடாவில் 'ஜனநாயக"த்தின் பெயரில் திட்டமிட்ட அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடருகின்ற கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், உயிருக்கு உத்தரவாதம் கேட்டு சரணடைதல் என்ற எல்லைக்குள், சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வின் கூறுகளை எல்லாம் வெட்டி எடுத்து விடுகின்றனர். நடைப்பிணமாக மனிதம், மனிதன் நடமாடும் அளவுக்கு யாழ் குடா நாடு மாறிவிட்டது.

சர்வதேச தன்னார்வ அறிக்கைகளுக்குள் மட்டும், இதை சடங்குக்காக பதிவு செய்கின்ற எல்லைக்குள் இது சுருங்கிவிட்டது. அதையும் பேரினவாத அரசு எதிர்த்து சண்டித்தனம் செய்கின்றது. ஏகாதிபத்திய மனித உரிமைமீறல்களைக் காட்டி, தனது பாசிச நடத்தைக்கு நியாயவாதம் பேசுகின்றது. அமெரிக்கா என்ற உலகப் பயங்கரவாதியின் வழியில், இதை பயங்கரவாதப் பிரச்சனையாகக் காட்டி அடாவடித்தனம் செய்கின்றது.

மக்களோ சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர். எந்த "ஜனநாயகமும்" இதைப் பற்றி கடுகளவு கூடப் பேசுவது கிடையாது. மக்களாகிய நாம் எம்மளவிலாவது பேசியாக வேண்டும். மக்களாகிய நாம் போராடாது, எமது ஜனநாயத்தை ஒருநாளும் மீட்க முடியாது. இதற்கு வெளியில் எந்த தீர்வும் கிடையாது.

No comments: