தமிழ் அரங்கம்

Tuesday, December 4, 2007

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

பி.இரயாகரன்
04.12.2007

ப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்ப்பதில்லை. வர்க்க அடையாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

பேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.

இந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.

எப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது? தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம் எனக் கூறிக்கொண்டு, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு புலிகளின் பாசிசம் எதிர்த்தளத்தில் ஆடுகின்றது.

பேரினவாதத்தின் ஒன்று குவிந்த அந்த பாசிசத்தை எதிர்ப்பதற்கு அதனால் முடிவதில்லை. தனக்குள் ஆயிரம் ஒடுக்குமுறைகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதை பாதுகாத்தபடி, பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடிவதில்லை. சிங்கள பேரினவாதம் என்ற எதிரிக்கு எதிராக, தமிழ்மக்களை அழைத்துச் செல்ல புலிகளால் முடிவதில்லை. மாறாக சிங்கள பேரினவாதம் தமிழன் என்ற அடையாளம் ஊடாக தாக்குதலை நடத்தும் போது, புலிகள் தமிழனுக்குள்ளான அடையாளங்கள் மீது தாக்குதலை நடத்துகின்றது. புலிகளால் தமிழ் மக்களை முரண்பாடுகளை களையும் ஒரு புரட்சிகர தலைமை ஊடாக மக்களை வழிநடத்த முடிவதில்லை. முரண்பாடுகள் மீது தாக்குதலை நடத்தி, தமிழரைப் பிளந்து எதிரிக்கு அதை சாதகமாக்கிவிடுகின்றனர். இப்படி சிங்கள பேரினவாதத்தைப் பலப்படுத்தி நிற்கின்றனர்.

இந்த சிங்களப் பேரினவாதமோ, ஒட்டுமொத்த தமிழர் மீது பாரிய தாக்குதலை நடத்துகின்றது. இன்று கொழும்பை மையமாக வைத்து நடாத்துகின்ற இன சுத்திகரிப்பு கைதுகள் பேரினவாத முகத்தை மறுபடியும் நிறுவுகின்றது. இப்படி இலங்கையில் அதி பயங்கரமான சிங்கள பேரினவாதம் மேலேழுந்து நிற்கின்றது.

அரசு, புலிகளின் குண்டு வெடிப்புக்களை காரணம் காட்டி, பேரினவாத பாசிச நடத்தைக்கு நியாயம் கற்பிக்கின்றனர். புலிகள் குண்டு தாக்குதலை வெறும் பயங்கரவாதமாக காட்டப்படுவதை நாம் அங்கீகரிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் அரசு பயங்கரவாதம், ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மேல் எவிவிடப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் தான், மக்களில் இருந்து விலகிய புலிப் பயங்கரவாதம். இதைக்காட்டி தமிழ் இனம் மீது தாக்குதலை நடத்துவதை நாம் அங்கீகரிக்க முடியாது.

புலிகளின் குண்டு வெடிப்புகளை நாம் மற்றொரு கோணத்தில் மட்டும் தான், விமர்சிக்க முற்படுகின்றோம். அப்பாவி மக்கள் மேலான தாக்குதலாக இருப்பதையும், இது போன்ற குண்டு வெடிப்புகள் மூலம் எதையும் தமிழ் மக்களுக்காக சாதிப்பதில்லை என்ற கோணத்தில் இதை விமர்சிகின்றோம்.

மாறாக பேரினவாத அரசு இயந்திரம் மீதோ, அதை ஒட்டிய கூறுகள் மீதான தாக்குதலை இட்டு நாம் அக்கறை கொள்வதில்லை. இரண்டும் மக்கள் விரோத ஆளும் வர்க்கங்கள், தமது சொந்த அதிகாரத்துக்காக தாக்குதலை நடத்துகின்றனர். இதையும், இதன் எல்லைக்குள்ளும் அதன் அரசியலை விமர்சிக்கின்றோம்.

அப்பாவி மக்கள் மேலான தாக்குதலை (புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசு செய்தாலும் சரி அல்லது புலி அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் செய்தாலும்) ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்பதால் தாக்குவது. சிங்களவன் என்பதால் தாக்குவது என்ற அரசியல், படுபிற்போக்கானது.

இன்னொரு கோணத்தில் இதுபோன்ற தாக்குதல் மூலம், புலிகள் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதை கொடுக்க முனைகின்றனர் என்ற விடையம் எமது விமர்சனத்துக்குரியது. இது போன்ற தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான புலிகளின் அடக்குமுறையாக அது மாறுகின்றது. அத்துடன் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவோர், எந்த சமூக இலட்சியத்தையும் அடைவதில்லை என்ற உண்மையை, இங்கு நாம் விமர்சன நோக்கில் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களோ இரண்டு தரப்பால் பலியிடப்படுகின்றனர். இப்படி மீட்சிக்கான பாதை கிடையாது. எல்லாம், எல்லாத்தரப்பாலும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றது. மக்கள் இடையில் சிக்கி நசுங்குகின்றனர்.

இப்படி தமிழ் மக்களை தலைமை தாங்கி, அவர்களை வழிகாட்ட முடியாது புலிகள் தோற்றுவிட்டனர். இதைப் பயன்படுத்தி பேரினவாத அரசு, ஒருபுறம் புலிகள் மேல் பாரிய யுத்தத்தை தொடுத்துள்ளனர். புலிகள் பாரிய நெருக்கடிகள் ஊடாக சிதைந்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் மொத்த தமிழ் மக்கள் மேலான அரச பயங்கரவாதத்தை, சிங்கள பேரினவாத அரச ஏவிவிட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசம் எங்கும், பேரினவாதம் படுகொலை அரசியலை நடத்துகின்றது. சிங்களப் பகுதிகளில் தமிழ் இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்.

தமிழன் என்ற அடையாளம் கொல்லவும், சிறையில் தள்ளவும் போதுமான காரணமாகியுள்ளது. தமிழனின் நிலை இது. இன்று இதைச் சுற்றித்தான் சகலதும் இலங்கையில் இயங்குகின்றது.

பேரினவாத அரசு பெரும்பான்மை இன்றி திணறுகின்றது. பெரும்பான்மை இனவாதிகளாக இருந்த போதும், அதிகாரப் போட்டி பெரும்பான்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. இந்த நிலையிலும் இந்த பேரினவாத தமிழ் விரோத யுத்த அரங்கு, உயர்ந்த இனவாத அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்றது. அது உயர்ந்தபட்ச பாசிச நடைமுறையைக் கொண்டு செயல்படுகின்றது. எந்த நெருக்கடியையும் எதிர் கொள்ளும் திறனை, ஜனாதிபதியின் கீழான அவரின் குடும்ப அதிகாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், இராணுவ அதிகாரங்கள் கொண்ட இராணுவ ஆட்சியாக மாறும் போக்கில் இலங்கை வேகமாக மாறிச் செல்லுகின்றது.

அதை நோக்கிய சர்வதேச உறவுகள், சர்வதேச முடிவுகளை எடுக்கின்றனர். இன்று உள்நாட்டில் பாராளுமன்றத்தின் கீழ் ஆட்சியிருந்தும் கூட, சட்டபூர்வமான இராணுவ ஆட்சிதான்.

இது தமிழ் மக்கள் மேல் முழுமையாக பாய்கின்றது. தமிழர் மீது பல முனைத் தாக்குதலை நடத்துகின்றது. சில மாதத்துக்கு முன் தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி விரட்ட முனைந்தது. இன்று பெருமளவிலான கைது சிறை என்று, தமிழ் இனம் மீதான ஒரு இனவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இப்படி ஒரு இனம் அங்கும் இங்குமாக பந்தாடப்படுகின்றது. விட்டில் பூச்சியாகி, இந்த இனவாத தீயில் மக்கள் வீழந்து மடிகின்றனர். மூச்சுக் கூட விட முடியாத மனித அவலம். புலிகள் பிரதேசத்தின் ஒருவிதம். புலியல்லாத பிரதேசத்தில் மற்றொரு விதம். முடிவற்ற மனித துயரங்கள். ஒரு இனத்தின் அழிப்பு எங்கும் எதிலும் நடந்தேறுகின்றது.

புலியல்லாத சிங்களப் பிரதேசத்தில் வாழ்பவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள் தான். அவர்கள் தான் இன்று, சிங்கள பேரினவாத சிறைக் கொட்டகைகளில் தள்ளப்படுகின்றனர். ஒரு இனவாதம் இப்படித் தான் செய்யும். ஜெர்மனிய நாசிகள் இப்படித் தான், இந்த வழிகளில் தான் யூதரை வேட்டையாடியது. இலங்கையில் இவை ஆரம்பத்தில் உள்ளது.

தலைமுறை தலைமுறையாக வாழ்வை இழக்கும் தமிழ் மக்கள். வாழ்வில் விடிவின்றி அங்குமிங்கமாக அலையும் வாழ்க்கை. இடைத்தரகர்களின கொண்டாட்டங்கள், ஊடாக தமிழ் இனம் நலமடிக்கப்படுகின்றது.

மலையக மக்களுக்கும் இதே கதி. உலகமயமாதல் வாழ்வையே சூறையாடிவிட, பிழைப்புத் தேடி வரும் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி. தமிழ் மக்களையே சிறைகளில் இட்டுச் செல்கின்ற ஒரு பேரினவாத அரசு. திரும்பிய இடம்மெங்கும் வாழ்வை இழப்பதை தவிர, தமிழ் மக்களுக்கு வேறு வழி கிடையாது.

புலிகளின் பிரதேசத்திலும் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. அங்கு ஒரு காட்டுத் தர்பார். இங்கு மற்றொரு காட்டுத் தர்பார். ஒரு இனம் நிம்மதியாக வாழமுடியாத நிலை. தமிழ் மக்களின் பெயரில் இவர்கள் நடத்துகின்ற அராஜகம் சொல்லி மாளாது. மக்களின் துன்பம், அவர்களின் அலஸ்த்தை, யுத்தம் செய்கின்ற இரு தரப்புக்கும் கொண்டாட்டமாகி களிப்பூட்டுகின்றது.

இப்படி ஈவிரக்கமற்ற மனித விரோதகளாகிவிட்ட தமிழ் சிங்கள தலைவர்கள். தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வில்லை என்பதே, இன்று இலங்கையில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் தொடாச்சியாக எடுத்துக் காட்டுகின்றது.

No comments: