"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே "கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ற தகுதியில் அமெரிக்கச் சட்டியில் விழுந்து புரண்ட ரோனேன் சென் என்ற கோழி, அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் எல்லாக் கட்சிகளையும் "தலையறுந்த கோழிகள்' என்று எள்ளி நகையாடியிருக்கிறது. "தலையறுந்த கோழிகளோ' தம் பெயருக்கேற்பத் துள்ளினவேயன்றி அந்தத் தூதரைத் தூக்கியெறிய இயலவில்லை.
""அமெரிக்க அதிபரே சொன்னபிறகு இவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது'', ""இந்தியா குண்டு வெடித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அமெரிக்க அரசு தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறது.'' இவை ரோனேன் சென்னின் "வாதங்கள்'. ""இதுவரை நாம் கண்ட அமெரிக்க அதிபர்களிலேயே இந்தியாவுக்கு பெரிதும் நேசமானவர் ஜார்ஜ் புஷ்தான்... அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண் டார்... தேச பக்தர்களாக இருந்தால் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்.'' இவை மன்மோகன் சிங்கின் "வாதங்கள்'. ஒரு ஒப்பந்தத்தின் மீது குறிப்பான கேள்விகள் எழுப்பப்படும்போது உரிய விவரங்களுடன் அவற்றுக்கு யோக்கியமான முறையில் பதில் சொல்லவேண்டும். அமெரிக்க அடிமைத்தனத்தில் ஆழ அமிழ்த்தி வறுத்து எடுக்கப்பட்ட இந்தக் கோழிகள், இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையை ஏதோ மாமன்மச்சான் உறவுமுறை விவகாரத்தை விளக்கும் மொழியில் பேசுகிறார்கள். சொல்வதற்கு நேர்மையான பதில் ஏதும் இல்லை என்பது மட்டும் காரணமல்ல, இவர்களுக்கும் அமெரிக்க வல்லரசுக்குமிடையில் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத ஒரு கள்ள உறவொன்று நிலவுவதையும் அவர்களது மொழி நிரூபிக்கிறது. ஒப்பந்தம் குறித்து என்ன கேள்வி எழுப்பினாலும் இவர்கள் ஆத்திரமடைந்து பிதற்றுவதும் இந்த ஐயத்தை உறுதி செய்கிறது.
இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கமோ, தனது அறிவுத்துறைக் கைக்கூலிகளான பத்திரிகையாளர்களை ஏவி விடுகிறது. ""திருவோடு ஏந்தி நின்று கொண்டிருந்த பழைய இந்தியாவையே இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமை தெரியாமல் தாழ்வுணர்ச்சியில் பேசுகிறார்கள்'', ""ஒப்பந்தத்தில் உள்ள சொற்களை விடுங்கள். அமெரிக்காவை சரிசமமாக எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை எதிர்ப்பாளர்களிடம் இல்லை'', ""இறையாண்மை போய்விடும் என்கிறார்களே, இறையாண்மை என்பது மக்களின் இதயத்தில் அல்லவா இருக்கிறது. 100 கோடி மக்களை அமெரிக்கா அடிமைப்படுத்திவிட முடியுமா என்ன?'' இப்படி வல்லரசு போதையை ஏற்றி விட்டு, அப்பட்டமான அடிமைத்தனத்தை இந்த ஒப்பந்தம் திணிப்பதை அடியோடு மறைக்கின்றன பத்திரிகைகள்.
இந்த வாதங்களுக்கு இணையாக, ஆத்திரம் கொப்புளிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் அவற்றின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றன. ""எதிர்ப்பவர்கள் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினை என்பதனால் எதிர்க்கவில்லை, இவர்கள் எப்படி இருந்தாலும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், எனவே இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை'', ""ஒவ்வொரு அயலுறவுக் கொள்கையையும் ஓட்டுக்கு விட்டுத் தீர்மானிக்க முடியுமா என்ன?'', ""அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படப் போவதில்லை. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மன்மோகன் சிங் துணிச்சலாக இதனை அமலாக்கம் செய்யவேண்டும். கூடவே மக்கள் நலத்திட்டங்கள் (கவர்ச்சித் திட்டங்களை) சிலவற்றை அறிவித்தால் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம். இன்னும் கூடுதலான இடங்களையும் கைப்பற்றலாம்'' என்று காங்கிரசுக்கு தைரியம் கூறுகின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வரம்புக்கு உட்பட்டு வலது, இடது கம்யூனிஸ்டுகள் எழுப்பும் ஆட்சேபங்களுக்கு ஆளும் வர்க்கம் வழங்கும் மறுமொழி இது. மறுகாலனியாக்கத் திட்டத்தைத் தம் விருப்பம் போல அமலாக்குவதற்கு இந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை சிறிது இடையூறாக இருக்குமானாலும், அதற்கு என்ன கதி நேரும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது ஆளும் வர்க்கம். நாம் அறிந்த வரை தலை அறுந்த கோழிகள் சண்டையில் வெல்வதில்லை.
No comments:
Post a Comment