தமிழ் அரங்கம்

Sunday, December 2, 2007

சிங்கள, புலி அரசியலை மதிப்பிடும் போக்கு: 5


ப. வி. ஸ்ரீரங்கன்
23. 11. 2007

". . . பாருங்கள்! எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று. நான் பொய்யுரைக்கின்றேனா? நீங்களே காண்கின்றீர்கள். உழவனின் மகனும், அந்தச் செம்படவனின் மகனும் எங்கோ கண்காணாத இடத்திற்குஓடிப்போனார்கள். கிழவிகள் அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்:"அவர்கள் துப்பாக்கியால் சுடுவார்களாம்!" துப்பாக்கிகள். . . ! துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது. " -இரஞ்சகுமார். (மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு, பக்கம்:138)

சிங்கள பெளத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும், அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை. இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு, நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும், நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும், ஏமாற்று அரசியலையும் மறுப்போம். அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம். இல்லையேல், பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள், அரசியல் கிரிமினல்கள், இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம், பன்முக அமைப்புகள், மனிதவுரிமைகள் என்ற மிக, மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள், இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!இங்கே, இராஜபக்ஷ முதல் பிரபாகரன்வரை நம்மைக் கருவறுப்பதைப்பார்ப்போம்.

நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் , பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது. இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும், அவர்களை"மாட்சிமைதாங்கிய" மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும். எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை. இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள். இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும், பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.

நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம். எனினும், இதுவரை இந்த முயற்சி கைகூடாதிருப்பதற்கான காரணிகள் என்ன?இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதபடி அனைத்துக் கட்சிகளும் முடங்கிக் கிடக்கும் அரசியல்தாம் என்ன?நிலவுகின்ற அமைப்பை மாற்றி, அதன் இடத்தில் புரட்சிகரமான அமைப்பை நிறுவும் போராட்ட இலக்கற்ற ஆளும் வர்க்கச் சார்புடைய கட்சிகளால்-இயக்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டது போதும். இது குறித்துச் சற்றுக் குறுகிய வடிவில் பார்ப்போம். ஏனெனில் இத்தகைய பார்வைகளை போராட்ட ஆரம்பக் காலத்திலேயே நாம் முன் வைத்தவர்கள். இன்றைய இளைய தலைமுறைக்காவும், போராட்டத்தில் தமது உயிரையே தேசவிடுதலைக்கென்று நம்பித் தியாகஞ் செய்யும் தேச பக்த நமது சிறார்களுக்காவும் நாம் இதை மீளப் பார்ப்போம்.

இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடும் அதன் இன்றைய நிலையும்:

முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை. அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது. இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது. இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது. இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது. மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.

வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது. இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும், ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது. இலங்கையின் முதலாளியச் சமுதாயமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை. இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது. நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது. காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது. இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது. மாறாகத் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது. இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது. இங்கேதாம், இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலாகப் பங்குச் சண்டைகள் வருகின்றன(இத்தகைய பங்குச் சண்டை வரும்போதுகூடத் தமிழ் மக்கள் பக்கத்தில் தமிழ் பேசும் மக்கள் கணிசமானர்வர்கள் சாதிரீதியகத் தாழ்த்தி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்). பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும், அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசில் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும் போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டுகிறது.

இத்தகைய பொருளாதார முரண்பாடுகள் கூர்மையடைந்தபோது யாழ்வேளாள மேட்டுக்குடிகளின் மேலாதிக்கத் தளத்தில் பாரிய தாக்கம் முன்னிலைக்கு வருகிறது. இவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில்(இங்கே பொருள்சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குமே சேர்க்கப்படுகிறது. அந்தப் பங்கில், நிதி, நிர்வாகம், அரச பதவி, அமைச்சு, கல்வி, அதிகாரம் என்றபடி விரியும்) பெற்றிருந்த அசுரப்பலம் உடைபடுவதற்கான சிங்கள முதலாளிய வர்க்கத்தின் வியூகம் சிங்களப் பேரினவாதமாக விரிகிறது(இது பெரும் விருட்ஷமாக விரிந்து இன்று வளர்ந்து இலங்கைச் சமுதாயத்தையே படுகுழியில் தள்ளியிருக்கிறது). அது, இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் இலங்கையின் சிறுபான்மை இனங்களைத் தலைவெட்ட எடுத்த முயற்சியில் முதலாவது பலி இலங்கை முஸ்லீம்கள். இந்தச் சிங்களப் பேரினவாதம் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தை, அதன் தேசிய அடையாளங்களை சிதைப்பதன் மூலமாகத் தமது முரண்பாடுகளை தீர்க்க முனைந்த இலங்கை இனமுரண்பாட்¡னது முற்றிலும் பொருளாதார நலன்களின் வழியே எட்டியவை.

இத்தகைய இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும். அதாவது, இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து, தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள். இது சிங்கள அரசை நிர்ப்பந்திக்கும்-அடிபணிய வைக்கும் வியூகமாகவே இருந்தது. மற்றும்படித் தமிழ் பேசும் மக்களினதோ அல்லது வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் பெருந்தொகையான சிங்கள-முஸ்லீம், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் புரட்சிகர நடவடிக்கையையோ முன் தள்ளவில்லை. சாரம்சத்தில் தமது வர்க்க முரண்பாட்டைத் தீர்ப்பதற்கானவொரு நிர்ப்பந்தம் தமக்குப் பின்னால் கோசமிடும் பெரும் மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்து, இலங்கை அரசை ஏமாற்றத் தமக்குப் பின்னால் பெரும் பகுதி தமிழ்பேசும் மக்கள் நிற்பதாகக்காட்டி அரசைப் பணிய வைக்க முனைந்தார்கள். இதற்காகப் பரந்து பட்ட மக்கள் சக்தியென்ற ஒரு கானால் நீரை உண்டு பண்ணவே"தமிழீழம்"தமிழருக்கான கோசமாக முன் தள்ளப்படகிறது. இத்தகைய தலைமையிடம் பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதைக் கருத்தளவில்கூட இனம்காணமுடியாதிருந்தபோது, அதன் பேத்தலான இடத்துக்கு ஆயுதக் குழுக்கள் வருகின்றன(இதை மிக நேர்த்தியாகச் செய்த முடிக்க இந்தியா அனைவரையும் உள்வாங்கிச் சாணாக்கிய தந்திரத்தை இயக்கங்களுக்கிடையில் நிலைப்படுத்தியது).

இப்போது பாரிய வலுவொன்று சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கு உந்து சக்தியாக வருகிறது. தமிழீழக் கோசமானது சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் கதையாகச் சிங்கள உழைக்கும் வர்க்கத்தை ஆளும் சிங்கள பெளத்த வெறியர்களிடம் தஞ்சம் கொள்ள வைக்கிறது. இங்கே, சிங்களப் பேரினவாத அரசின் இருப்புக்கு மிக ஒழுங்கானவொரு வீச்சைத் தமிழ்த் தலைமைகளும் அதன் பின் புலிகளும் ஒத்திசைவாக இருக்கின்ற தரணங்களை இந்தியா வலுவாக்கிச் செய்து முடித்தது. சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைச் செய்தது. தனது இருப்புக்காகப் பெளத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தைப் பேசியது. இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து இன்று தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய கருத்தியல் மனதைச் சிங்களத் தரப்பில் ஏற்படுத்தியிருக்கிறது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக இது உருப்பெற்றுபோது அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது-படுத்துகிறது. இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும் இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது. இந்தத் தரணத்தில் இலங்கையில் நடைபெறும் எந்தத்தரப்பு யுத்தத்தையும் எதிர்த்துக் குரல் எழாதபடி அரசும் புலிகளும் மிக நேர்த்தியாகக் காய்களை நகர்த்த இப்போதும் இந்தியா வழி காட்டுகிறது.

இங்கே, இராஜபக்ஷ அன்ட் பிரபாகரன் கொம்பனிக்கு நல்ல வாய்ப்புகள் இந்திய-உலக நலன்களால் முன் தள்ளப்படுகிறது. ஆக, இலங்கைப் பெரும்பான்மை மக்கள் சமூகத்தில், பெளத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு கிடக்கிறார்கள். இங்கே, தமிழ்பேசும் மக்கள் யுத்தத்தால்படும் வேதனைகளை, இன்னல்களை, அவர்களது நியாயத்தன்மையின் வாயிலாக எழும் கண்ணோட்டத்தைக்கூட புரிந்துகொண்டு முற்போக்காய்ச் சிந்திக்கும் ஒரு சக்தியாக எழுவேண்டியச் சிங்களத் தொழிலாளவர்க்கம் பேரினவாதத்தால் முடமாக்கப்பட்டார்கள்.

இது யாரால்?

நமக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கத்தால்-ஏகாதிபத்தியத் தரகர்களால்-இந்தியக் கைக்கூலிகளால் நிகழ்ந்த கொடுமை இது!

தனிநாடும், தேசியத் தலைவரும்:

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு, தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது. புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். இணையம் முதல் வானொலி, தொலைக்காட்சிவரை இவர்களின் ஆதிக்கம் விரிந்தபடி. இத்தகைய பிரச்சாரத்தின் உச்சபச்சக் குரலோ சொல்கிறது தமிழீழப்போராட்டத்தை-புலிகளைக் குறைந்தபட்சம் எதிர்காத நிலையில் கருத்தாடுவது அவசியமாம்.

"அனைத்தையும் தேசியத் தலைவர் வெல்வார்-அவர்காலத்தில் தமிழர்களுகுத் தனிநாடு கிடைத்துவிடும், அவரது கையைப் பலப்படுத்தத் தமிழர்கள் எல்லோரும் முன் வரவேண்டும்" இத்தகைய வாதங்களின் பின்னே மறைந்துகிடக்கும் சமூ உளவியல் என்ன?ஒரு தனிமனிதனைச்சார்ந்து முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் மையப்படுத்தி, அந்தத் தலைவனைச் சுற்றி மண்டியிட வைக்கும் இந்தக் காரியமானது என்ன?இது ஒரு வகையில் மக்கள் விடுதலையைக் காவு கொள்ளும் கருத்தியல் மனதை எமக்குத் தரவில்லையா?இத்தகைய குழிபறிப்புகஇகு எந்த அந்நியச் சக்தி தூண்டுகோலாக இருக்கிறது?இதன் பின்னாலுள்ள தொடர்வினை தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும், சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது இல்லையா?. இதன் வெளிப்பாடு சமுதாயமட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காததாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம். குறிப்பாகத் தமிழ்ச் செல்வனின் மரணத்தில் இத்தகைய கட்டங்களை நாம் கண்டோம். இது திட்டமிட்ட பாசிசத்தின் வெளிப்பாடாகும்.


இன்று தமிழ் நிலத்துள் நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும், அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது. இதன் இன்றைய நிலை தமிழகத்தின் கடைந்தெடுத்த துரோகக் கட்சி அரசியல் தலைவர்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே, தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம். சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது. இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது. இப்படித்தாம் இந்தியாவால் நமக்குத் தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் "தமிழ்தேசியத்தை"விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இது மிகவும் மெளனிக்கத்தக்க செயலில்லை. இப்போதோ தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் நடாத்திமுடிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கமானது இந்திய உலகக் கைக்கூலியாகத் தானே முழு அளவிலாக உருவாக வேண்டுமென்பதற்காகவும், தனது அழிவு நெருங்கினால் அதில் தோன்றும் வெற்றிடத்தில் புரட்சிக்கான விசும்பு நிலை உருவாகுமென்ற தமது எஜமான அறிவுக்கொப்ப மனிதவுரிமை வாதிகளை-முற்போக்குவாதிகளைத்"துரோகி", இந்திய-உலகக் கைக்கூலியாக மக்கள் முன் கருத்திட்டுத் தமது இந்திய-உலக எஜமானர்களைக் காத்துவருகிறது. இந்தப் பிற்போக்குச் சக்திகள். நமது இன்றைய அரசியல் போக்கானது மிகவும் கெடுதியான-மக்கள் விரோதமானதாகவே இருக்கிறது. எவர் எந்தப் புற்றிலிருக்கின்றார்கள் என்பதே அறியமுடியாதளவுக்கு உலக நலன்களின் வேட்டைக்காடாக நமது தேசம் மாறியுள்ளது. பழைய-புதிய இயக்க வாதிகள் எல்லோரும் தத்தமது பழைய பகைமைகளைத் தத்தமக்கு வழங்கும் பங்கில்-பாகத்தில் கடைந்தேற்றக் காத்திருந்து அதை நாடிய அரசியலில் நமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வேட்டையாடுகிறார்கள். இதுள் முதலிடத்தில் இருக்கவும், பாரிய பாகத்தைத் தமதுதாக்கவும் புலிகள் செய்யும் போராட்டமோ மிகக் கெடுதியான அழிவை நமக்குத் தந்துள்ளது. இந்தக் கெடுதியான போருக்குப் பெயர்"தமிழீழ விடுதலை"ப் போர்!-பாருங்கள் இது எவ்வளவு மோசடியானது, சமூகக் குற்றமானது!!

இலங்கையின் அரசியல் போக்கு:

இலங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும், தர்க்கமானதாகும். எங்கள் தேசத்து(ஈழம்) உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும். இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும். எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைகூலிகளை இனம் காணும்போது இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.

தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு வருகிறது. எங்கள் குழந்தைகளால் நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும், பொருளாதார ஆர்வங்களும் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டினது விடுதலையின் பின்னடைவும் இருக்கிறது.

நமது விடுதலைக் கோசமானது(சுயநிர்ணயவுரிமை) சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும். எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது. இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளது. இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது. இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது. தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது. இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது. இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகாலமாக தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இரட்டிப்பாக மாற்றிவரும் அந்நிய நலன்கள் இலங்கைச் சிங்கள அரசினூடாக ஒரு புறமும் மறுபுறம் புலிகளை முதற்கொண்டு அனைத்துச் சிறு குழுக்களையும் பயன்டுத்தித் தமிழ் பேசும் மக்களின் சுயவெளிச்சியை முடக்கிவருகிறது. எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது. இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.

நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும், சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு. இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும், அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது. இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே. வி. பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது. இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.

இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம். எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள், போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை. நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள். சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.

இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது?

பதில் மிக இலகுவானதாகும். தமிழ்த் தலைமைக்குள் இருந்த அந்நிய ஏகாதிபத்தியங்களின் சார்பு நிலையும் அதன் வாயிலாக எழுந்த ஆயுதப் போராட்டமும், அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்த இந்திய மற்றும் அமெரிக்க ஆர்வங்களே நமது உரிமைகளுக்கு இன்று வேட்டு வைத்துள்ளது. இதுதாம் நாம் இலங்கை அரசியல் போகக்கிலிந்ருது கற்கும் பாடம். இங்கே புரட்சிக்குரிய சூழலைத் தடுத்தபடி அராஜகத்தைக் காத்து நிலைப்படுத்த இருவேறு அரசஜந்திரங்கள் உண்டு. அதிலொன்று புலிகள் மற்றது இலங்கைப் பாசிச இராணுவம். இவர்களிடத்தில் எந்தத் தரப்பு மக்களினதும் நலன் ஒருபோதும் இல்லை. மாறாகத் தத்தமது எஜமானர்களின் நலனைக் காப்பதற்கான சட்டவுரிமையுடைவொரு இராணுவமாக இலங்கை இராணுவமும், இதேயிடத்தைத் தமிழ் மக்களின் மண்ணில் கேட்டுப் பேரஞ் செய்யப் புலிகளும் யுத்தத்தில் மூழ்க, ஆயுதங்களின் பெரு விற்பனையில் சில நிறுவனங்கள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன-நாமும், நமது மக்களும் அழிவது தொடர்கிறது.

ஆளும் வர்க்க-அந்நிய யுத்தத்தை அம்பலப்படுத்தல்-எதிர்த்தல்:

இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள், மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே! இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள். நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை. இது கொலனிய- நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்வியூட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்குப் புலிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் வாதிகள், குறிப்பாக கருணாநிதி மற்றும் வை. கோபாலசாமி போன்ற அரசியல் பெரிச்சாளிகள்கூடத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக் குரல் கொடுக்கும் மக்கள் நலன்சார்ந்தவர்களே!அட மரமண்டைகளே, இத்தகைய அரசியல்வாதிகள்-இயக்கங்களின் பின்னே மறைந்திருக்கும் இரத்தக் கறையை எந்த வர்ணாத்தால் அழித்துள்ளீர்கள்?நீங்கள் எல்லோரும் படித்தவர்கள்?காலம்தாம்!இந்த நிலையில் , உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும், மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால், அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். இதுள் நமது கல்வியாளர்கள்கூட ஒத்தூதுகிறார்கள். மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள், இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது. இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது. முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது. இதை மனித மூலதனமாகவே பொருளாதாரத்தில் கற்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில். அப்போ இங்கு உழைப்பவருக்கும், உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு. அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம். காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றைய போர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது. இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது. அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.

இலங்கை இனப் பிரச்சனை குறித்தோ அன்றிப் புலிகளின் மக்கள் விரோத முகத்தை இனம் காட்டிக் கருத்திட்டாலோ அத்தகைய கருத்தை முன்வைப்பவர் இனத் துரோகியாகிக் கொல்லப்படுவார். இல்லைச் சிறையில்-பாதளா உலகத்தில் சிறை வைக்கப்படுவார். இத்தகையவொரு சூழலை மறைத்தபடி இன விடுதலைக்காக ஏலம் விடும் அரசியல்-போராட்டம், யுத்தம் மிகத் தந்திரமானது. இதை மறுத்து, இது மக்களின் உரிமைக்காக நடக்கின்ற தேசிய விடுதலைப் போராட்டம், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கான போராட்டம்-யுத்தம் என்று எந்தப் பேமானியாவது ஒரு பல்கலைக் கழகத்துக்குள்ளிருந்து வாந்தியெடுத்தால் அது ஜனநாயக நோக்குடையதாக இந்த மனித விரோத அரசுகள்-இயக்கங்களிடம் கருத்து நிலைபெறுகிறது. அவர்களது ஒத்திசைவான உச்சிமோந்த வரவேற்கும் அரசியல் நிலையாகவும், தொடர் நிகழ்வாகும் இடம் பெறுகிறது. இது இலங்கைக்கே மட்டுமான சூழல் இல்லையெனினும், இலங்கையில் இத்தகைய கருத்து நிலையே மிகவும் ஆதிக்கஞ் செய்கிறது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மண்ணுக்காக மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும், தியாகமாகவும், மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது. தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது. வலாற்றில் வாழ்ந்த படுபிற்போக்கான மன்னர் ஆட்சிக் காலக்கட்டமாகட்டும்(எல்லாளன் வகையறாக்கள்) அல்லது வரலாற்றால் புறந்தள்ளப்பட்ட மத இழிவாடல் கருத்துக்களாகட்டும் அனைத்தும் புலிகளின் வம்புத்தனமான அரசியலுக்கு அவசியாமக இருக்கிறது. இது உலகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் உறவைவிட உலகப் பிற்போக்குச் சக்திகளோடு கூடிக் குலாவும்போது, நாம் இத்தகைய அமைப்பை விடுதலைக்கானவொரு அமைக்காக எண்ணிக்கொள்ளக் கருத்துக்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன. அதற்காக ஆங்காங்கே தேசிய வெறிக்கூச்சலின் தொடர்ச்சியாகப் புலிக் கைக்கூலிகள் இருக்கிறார்கள். எப்படிச் சிங்கள அரசுக்கு-இந்திய அரசுக்கு கூஜாத் தூக்கிகள்-கைக்கூலிகள் இருக்கிறார்களோ அதே பாணியில் புலிகளும் தனது பராக்கிரமத்தை இப்படிச் செய்திருக்கிறது. மொத்தத்தில் அதிகாரமையம் தனது இருப்புக்காக மனித உயிரோடு விளையாடுகிறது. அந்த விளையாட்டுக்குப் பெயர் தேசிய விடுதலை சுயநிர்ணயம் தமிழர்கள் பக்கம். சிங்களவர் பக்கம் தேச ஒருமைப்பாடு-ஜனநாயகத்துக்கான போராட்டம்!

அரசியலில் எந்தெந்த வர்க்கங்கள் தத்தமது இலாபத்துக்காக அணி சேர்கின்றன, அவை எங்ஙனம் பொதுமக்களின் நலன்களைச் சுமந்து தமது நலன்களை உறுதிப்படுத்துகின்றன என்ற மிக இலகுவான புரிதல்கூட அற்ற சில மந்தைகளின் கருத்துகளைக்கடந்து, இலங்கையின்-தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்-போராட்ட முன்னெடுப்பில் எந்த அந்நிய நலன்களை இவர்கள் பிரதிபலிக்கின்றார்கள் என்பதிலிருந்து நமது விடுதலையை நாம் சாத்தியப்படுத்தும் நேரிய வழிகள் கண்டடைய முடியும்!ஆனால், தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது. இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது. சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது. கல்வி, கலை இலக்கிய, பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது. இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது. இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க, ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.

மானுட நேசிப்பும், மாற்றுக்கருத்தும்:

மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது. அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும், மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று. இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும். நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது, மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது. உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது. இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது. இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது, இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது. இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது. இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச் செல்கிறது. இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்"தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள், இணையத்தில் கருத்தாடிப் பல பகுதி மக்களுக்குப் புலிகளின்-சிங்கள அரசின் மக்கள் விராத அராஜகத்தை வெளிப்படுத்தும் இன்றைய இந்த நிலையை உடைப்பதற்காகப் படாதுபாடு படுகிறார்கள். சிங்களத் தரப்பும், புலிகளும் பழிவாங்கும் போராட்டத்தை முன்னெடுத்துத் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள். இதனால் தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும், மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது. இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலில் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் காரியங்களில் தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் முன்னெடுப்பாளர்களும் செயற்படுவது மிக, மிக வேதனையானது.

தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும், கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் இயக்கவாத-கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் அந்நிய நலன்களுக்கான யுத்தங்கள் தேசத்தினது இறைமையின் பெயராலும், ஒரு இனத்தின் விடுதலையின் பேராலும் நடந்து, மக்களைப் பலியெடுக்கும் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக, மிக வஞ்சகத்தனமானது. இந்தச் சதிவலையை இனம் காண்பதும், நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனுடே நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் சுயநிர்ணயத்தை மீட்டெடுப்பதும் நமது ஜீவாதாரவுரிமைகளிலொன்றுதாம்.

தொடரும்.

No comments: