பி.இரயாகரன்
இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஒட்டி பிரசுரமாகின்றது.
பங்குச்சந்தைக்கு வரும் பணம் எங்கிருந்து வருகின்றது. அங்கு இலாபம் எப்படிப் பெறப்படுகின்றது. எதுவும் வானத்தில் இருந்து திடீரென இறங்குவதில்லை. மாறாக ஒருவரிடம் இருந்து ஒருவர் திருடுவது தான் பங்குச் சந்தை. ஒருவன் உழைப்பை, அவனின் சேமிப்பை அபகரிப்பதற்கான முதலாளித்துவ சுதந்திர வழிதான், பங்குச் சந்தை. இது ஒரு சூதாட்டம் தான்.
பணம் என்பது மனித உழைப்பிலானது. இந்த பணம் தான் பங்குச் சந்தையில் திருடப்படுகின்றது. உழைப்பின்றி மூலதனத்தை பெருக்கலாம் என்று ஆசை காட்டி, உழைப்பிலான பணத்தை திருடுவதே இதன் சூக்குமம். இப்படி மத்தியதர வர்க்கத்தினதும், அதற்கு மேற்பட்ட வர்க்கத்தினதும் சேமிப்புப் பணத்தை உறிஞ்சும் இடம் தான், பங்குச்சந்தை.
உள்ளடக்க ரீதியாக இதுவொரு சூதாட்டம். பணத்தைப் பெருக்கும் அற்ப முதலாளித்துவ சுதந்திர ஒழுக்கக் கோட்பாட்டு விதிக்கமைய, இதைக் கவர்ந்து எடுக்கும் திட்டம் தான் இந்த சூதாட்டம். வாங்கி விற்றல் என்ற, சாதாரணமான இலாபநட்ட கணக்குக்குள் தான் சேமிப்புகள் பிடுங்கப்படுகின்றது.
உண்மையில் பங்குச் சந்தை எந்த உழைப்பையும் செய்வதில்லை. நானும் நீயும் வைத்துள்ள பணத்தை முதலீட்டுப் பங்குகளில் போட வைப்பதன் மூலம், என்னுடைய பணத்தை உன்னிடம் எப்படி வரவைப்பது என்பதுதான் அதன் விதி. பங்குகளின் விலை நிலையானதோ, அந்த பணம் திருப்பித்தரப்படுவதோ அல்ல. அதை வாங்கலாம் விற்கலாம். அதாவது இலாப நட்ட கணக்கு உட்பட்டது. மூலதனம் திடீரென்று திவாலாகும் போது, போட்ட பணம் அதோ கதி தான்.
பங்கு ஏன் விற்கப்படுகின்றது. ஒன்று மற்றவன் பணத்தை திருடுவது. இரண்டு முதலீடு என்பது, உண்மையான மூலதனம் நிலையானதாக இருப்பதில்லை. போலியான மூலதனத்தின் நெருக்கடியை தவிர்க்க, அதன் திவாலை மூட, இலாப விகிதத்தினை ஈடுசெய்ய, பணத்தை சொந்த உற்பத்திக்கு வெளியில் இருந்து கறக்கவே, பங்குகள் பங்குச் சந்தைக்கு வருகின்றது.
பங்குக்கு வரும் முதலீடும், அது உருவாக்கும் உற்பத்தி இலாபமும், பங்கை வாங்குபவனுக்கு பகிரப்படுவதில்லை. பங்கு மற்றவன் வாங்கிய பங்குப் பணத்தில் இருந்துதான், திருட வேண்டும். அதேநேரம் பங்கு வாங்க கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதி, உற்பத்தி மூலதனத்தின் அசலான நபரிடம் பெருமெடுப்பில் குவிகின்றது.
உண்மையில் யார் இழக்கின்றனர். பங்கை வாங்கி விற்கின்றவர்கள் தான், தமது பணத்தை ஒவ்வொரு சதமாக இழக்கின்றனர். ஒருவர் அதிகம் பெற்றால், மற்றவர்கள் அதைக் கட்டாயமாக இழக்க வேண்டும். தனது பணத்தை இழப்பது, அல்லது பெருக்குவது என்ற எல்லைக்குள் தான் சிலர் பிழைத்துக்கொள்ள, பலர் அதில் அழிகின்றனர்.
உற்பத்தி முதலீடு திவாலாகிவிடும் போது, அதில் இயங்கும் பங்குகள் எல்லாம் ஒரு வினாடியில் பஸ்பமாகி விடுகின்றது. இப்படி பங்குகள் என்பது, மத்தியதர வர்க்கமும் அதற்கு மேற்பட்ட வர்க்கமும் ஒரு வர்க்கமாக இருக்கும், அதன் அடிப்படையாக உள்ள சேமிப்பை சூறையாடுகின்றது. அதாவது வர்க்கத்தின் இருப்பை, கீழே தள்ளுகின்றது.
2000ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, 670000 கோடி டொலர் காணாமல் போனது. காணாமல் போனது என்றால், அது சிலரால் திருடப்பட்டது. அத்துடன் இது போலியாக வீங்கி உள்ளிழுத்த பணம் சேர்ந்து காணாமல் போய்விட்டது. இது உலகம் தளுவிய வகையில், அதன் திவால் தெரியாதவரையில், இது இதற்குள் அதற்குள் அமிழ்ந்து காணப்படுகின்றது.
இப்படி உற்பத்தி மூலதனத்தையும், நிதி மூலதனத்தையும் பெருக்கும் அடிப்படையில் இயங்குவது தான் பங்குச்சந்தை. இப்படி பரந்துபட்ட மக்கள் சொத்துரிமை எதுவுமற்ற மந்தைக் கூட்டமாக மாற்றுவதில், பங்குச் சந்தையும் ஒன்று. இன்று இந்த சூதாட்டத்தில் அன்னிய பணம், தாராளமாக புகுந்து சூறையாடுகின்றது.
1999 இல் பாரிஸ் பங்குச் சந்தையில் 40 சதவீகிதம் வெளிநாட்டு பணமாக இருந்தது. அந்தளவுக்கு இது ருசி கண்ட பூனையாகவே உலகெங்கும் அலைகின்றது. இந்திய பங்குச் சந்தையில் இதுதான் நடந்தது.
2004 ம் ஆண்டு தேர்தலுடன் இந்திய பங்குச் சந்தையில் நடந்த சோகத்தைப் பாருங்கள். 133000 கோடி இந்திய ரூபா திடீரென காணாமல் போனது. உண்மையில் என்ன நடந்தது? இந்திய அரசை தமக்கு சாதகமாக நடக்கக் கோரி, விடுத்த மிரட்டல் மூலம் நிகழ்ந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வர வேணடும் என்ற அடிப்படையிலும், அன்னிய மூதலீட்டு நிறுவனங்கள் 18000 கோடி இந்திய ரூபாவை திடீரென்று பங்குச் சந்தையில் கொட்டின. அதை இப்படி ஊதிப்பெருக்கியது. மறுபக்கத்தில் பா.ஜ.க விளம்பரம் செய்து வெல்ல வைக்க, 150 கோடி ரூபாவை செலவு செய்தது, இந்தா இந்திய ஒளிர்கின்றது என்றது. ஆனால் பா.ஜ.க தோற்க, அன்னிய நிறுவனங்கள் பங்கை விற்கத் தொடங்கியது. அதே நேரம் அரசை மிரட்டத் தொடங்கியது. 'நாங்கள் பங்குகளை விற்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறினால் உங்களின் அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போகும். அதனால் எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுங்கள்" என்று மிரட்டியது. இப்படித்தான் சுதந்திரமான ஜனநாயக சந்தைகள் கொழிக்கின்றது. இந்திய அரசில் அன்னிய செலவாணி கையிருப்பில் 10300 கோடி டொலர் இருந்தது. இதில் 3130 கோடி அன்னிய மூதலீட்டு நிறுவனங்களின் நிதி. இப்படி மிரட்டி இந்திய அரசை தனக்கு சாதகமாக இயங்க வைத்தது. இதற்குள்ளான இழப்பு தான் 133000 கோடி ரூபா. எப்படிப்பட்ட உண்மை, இந்த சூதின் சூக்குமத்தை நிர்வாணமாக்குகின்றது.
அதேநேரம் பொருளாதார நெருக்கடியும், மூதலீட்டு நெருக்கடியும் சுற்று வழிப் பாதைகளால் மக்களின் பணத்தைக் கொண்டு அடைக்கப்படுகின்றது. அமெரிக்கா 1999 இல் பங்குச் சந்தை பணத்தில் இருந்து 15000 கோடி டொலரை முதலீட்டுக்காக உறிஞ்சிக் கொண்டது. இதை செய்ய முன், அமெரிக்காவின் ஒய்வூதியப் பணத்தில் இருந்து 680000 கோடி டொலரை பங்குச் சந்தையில் கொட்டியது.
இப்படி நெருக்கடிகள் சுற்றிவளைத்து ஈடுகட்டப்படுகின்றது. திவாலைத் தடுக்க, மக்களின் பணத்தை உறிஞ்சி அதை அங்கும் இங்குமாய் கைமாற்றப்படுகின்றது. இன்று திருப்பிக் கொடுக்க முடியாத மக்களின் சேமிப்புப் பணம், ஒய்வூதியப் பணம், பங்கு மூலதனமாக்கி நாட்டை விழுங்கும் நடைமுறை புகுத்தப்படுகின்றது.
வீங்கிவெம்பிய வடிவங்களின் ஊடாக, ஊதிப்பெருக்கி பொருளாதார நம்பிக்கை என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அதைக் கொண்டு மக்களின் சேமிப்புகளை இழுத்தெடுத்து அதை சூறையாடிக் கொடுப்பதும், திவாலை மூடிமறைப்பதும் நடக்கின்றது. மக்கள் ஒவ்வொருவரும் தனது உழைப்பிலான பணத்தை தாமே வைத்திருந்தால், வங்கி திவாலாகிக் கிடப்பதையும் நாடு நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்ற உண்மை வெளிப்படையாகவே வெளிப்படும்.
உதாரணமாக ஊதிப்பெருக்கி வளர்ச்சியடைந்து வருவதாக காட்டப்பட்ட ஒரு துறைதான், தொலைத் தொடர்புத்துறை. 1997-2000க்கும் இடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைக்கு 400000 கோடி டொலரைச் செலவு செய்தது. இதன் பின்னால் ஒரு போலியான மூலதனம் இயங்கியது. பங்குச்சந்தைப் பணத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. இப்படி ஊதிப்பெருக்கிய பலூனில் இருந்து காற்று வெளியேறத் தொடங்கிய போது, தடாலென உலகப் பொருளாதாரமே சரிந்தது. தொலைத் தொடர்பு துறை தனது தவணைக்கடன் செலுத்த தவறுதல் 6000 கோடி டொலராகியது. இதில் இருந்து தப்பிப் பிழைக்க 2001 முதல் ஆறுமாதத்தில், 3 லட்சம் பேரை தொலைத்தொடர்பு வேலையில் இருந்து நீக்கினர். இதைச் சார்ந்து இருந்த துறைகளில் 2 லட்சம் பேர் வேலையை இழந்தனர். அதே நேரம் ஊதிப்பெருக்கிய பங்குச் சந்தை சரிந்தது. 2000 இல் தொலை தொடர்புத் துறையில் பங்கு மதிப்பு 630000 கோடி டொலராக இருந்தது. இது 2001 இல் 380000 கோடி டொலராக சரிந்து வீழ்ந்தது. ஆசியா நெருக்கடியின் போது பங்குகளின் இழப்போ மொத்தம் 81300 கோடி டொலர் மட்டும் தான். தொலைத்தொடர்பு நெருக்கடியோ அதை தாண்டி 250000 கோடி டொலரை உறிஞ்சி, அதை காணாமல் பண்ணியிருந்தது. அந்தப் பணம் சிலரிடம் விரைந்தோடிச் சென்றிருந்தது. இதை இழந்தவர்கள், பலவழிகளில் மக்கள். தனிப்பட்ட பணக்காரப் பட்டியலில் நடக்கின்ற அதிவுயர் செல்வக் கொழிப்பு இப்படித்தான், அகோர வேகத்தில் வளருகின்றது.
அமெரிக்காவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமும், தகவல் தொழில்நுட்பத்தில் உலகில் முதல் நிறுவனமான ~~வேல்ட்கொம் கவிழ்ந்தது. அதே நேரம் உலகில் மத்திய தர வர்க்கத்தின் மடியில் அடிவிழுந்தது. 65 நாடுகளில் 150000 கிலோ மீற்றர் நீளத்துக்கு கேபிள் கட்டமைப்பை கொண்டு 80000 ஊழியருடன் இயங்கிய இந் நிறுவனம், எப்படி திவாலானது? மூலதனம் தன்னதை தான் தனக்குள் வீங்க வைத்தது. இது தனக்குள் மோசடிகளில் ஈடுபட்டது. இதன் போது ஏற்பட்டும் நெருக்கடிகள், உண்மையின் சொரூபத்தை நிர்வாணமாக்கி விடுகின்றது. தனது சொந்த பங்கை அதிக விலையில் வாங்க வைக்க, 33.97 கோடி டொலரை பயன்படுத்தியது. சந்தையில் விலையை போலியாக உயர்த்த இது உதவியது. சந்தை களைகட்ட, சேமிப்புகள் வேகமாக உட்புகுந்தது. அதாவது இதன் மூலம் மத்தியதர வர்க்கத்தினதும் மேல் மட்டத்தினதும் சேமிப்புகளை கவர்ந்திழுத்தது. அதேநேரம் 3700 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இப்படி மோசடிகள் மூலம், இந்த நிறுவனம் இலாபம் தரும் பங்கு நிறுவனமாக உலகெங்கும் காட்டிக்கொண்டது. அது திவாலாகி அம்பலமானதைத் தொடர்ந்து, விசாரணைகள் மூலம் உண்மைத்தன்மை தெரியவரும் வரை, இது வளர்ச்சி பெற்றுவரும் அதிக இலாபம் தரும் ஒரு நிறுவனமாக உலகில் காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் போது, இந்த நிறுவனம் திவாலாகி கிடப்பது அம்பலமானது. 400 கோடி டொலர் நட்டம் ஏற்பட்டு இருந்ததும், அதை மூடிமறைக்க செய்த சதிகளும் அம்பலமானது. அத்துடன் சேவை முதலீடாக காட்டி, வரிச் சலுகை பெற்றதுடன், பங்குச் சந்தையில் தன்னை வீங்க வைத்தது அம்பலமானது. முதலில் பங்கை வாங்கியவர்கள், எதுவுமற்றவராக மாறினர். இதை இயக்கியவர்களின் தனிப்பட்ட சொத்து, பல கோடியால் பெருகியது.
எத்தனை மோசடி. பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபட்ட உலக இணையம் (றுழுசுடுனு ஊழுஆ), தனது 4000 கோடி டொலர் கடனை மூடிமறைத்து இலாபம் தரும் நிறுவனமாக உலகை ஏமாற்றியது. 2001 இல் 380 கோடி நட்டம் ஏற்பட்ட போது, இலாபம் சம்பாதித்தாக உலகை எமாற்றி பங்குச் சந்தையை மோசடி செய்தது. தனது சொந்த பங்கை வாங்க, 33.97 கோடி டொலரை கடனாக கூட கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகள் மோசடிகள் ஊடாகவே அவை ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றது.
பாருங்கள், செரக்ஸ் (Xerox) என்ற அமெரிக்க நிறுவனம், 1997 முதல் தவறான வகையில் தனது இலாப நட்டத்தை முன்வைத்து பங்குச் சந்தையை ஏமாற்றியது. 1997 முதல் 2002 வரையான 5 வருடத்தில், 600 கோடி டொலரை தனது கணக்கு வங்கியில் மோசடியாக புகுத்தியது. தனது வருமானத்தை 200 கோடி டொலரால் அதிகப்படுத்தி காட்டியது. இதன் உயர் அதிகாரிகள் பங்குச் சந்தையின் மூலம், 3,5 கோடி டொலரை சுருட்டமுடிந்தது. இதன் உச்சக்கட்ட பங்கின் விலையோ 60 டொலராக இருந்தது. மோசடிகள் அம்பலமானதை அடுத்து, பங்கு 7 டொலராக சரிந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் முக்கிய நபர், தனது தனிக்கணக்கில் 2.5 கோடி டொலரை சொந்தமாக்கிக் கொண்டார். யார் இதை இவரிடம் இழந்தனர் என்றால், பங்கை 60 டொலருக்கு வாங்கியவர்கள் தான்.
இது போல் தான் வேல்ட்கொம் (றுழசடனஉழஅ) 400 கோடி டொலரை சேவை மூலதனமாக காட்டி ஏமாற்றியது. இது குறுகிய இலாபத்தை காட்ட உதவியது.
இதுபோல் மருத்துவ நிறுவனமான ரிட் எயட் (சுவைந யுனை) 100 கோடியால் தனது வருமானத்தை உயர்த்திக் காட்டியது. மனித உழைப்பிலான சேமிப்புகளை உறிஞ்ச, மோசடிகள் தான் ஒரே வழி. இதில்தான் பங்குச் சந்தை இயங்குகின்றது.
உலகில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான என்ரோன் இதையே செய்தது. மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய என்ரோன் என்ற அமெரிக்க பன்நாட்டு நிறுவனத்தின் மோசடியில், அமெரிக்காவின் மிகப் பெரிய இரு வங்கிகளும் சேர்ந்து ஈடுபட்டன. இந்த குற்றத்தை மூடிமறைக்க, வங்கிகள் 25.5 கோடி டொலரை இலஞ்சமாக தரவேண்டும் என்ற உடன்பாட்டை செய்து கொண்டது. என்ன செய்தது, கடன்களைக் கூட பண வரவாக காட்டும் மோசடியைச் செய்தது. இதன் மூலம் பங்குச் சந்தையை கவர்ந்து, பல இலட்சம் மக்களின் சேமிப்புக்களை திவாலாக்கினர். இப்படி மோசடிகள் பல. அதை மூடிமறைக்க, இதில் இழந்த மக்களை ஏமாற்ற விசாரணைகள். அதாவது பங்குச் சந்தை நேர்மையானதாக காட்ட, அதில் தொடர்ந்தும் கொள்ளையிட விசாரணைகள் உதவுகின்றது. திருடர்கள் சேர்ந்து நடத்தும் சுய விசாரணைகள். திருட்டு ஒழுக்கமானதா என்று ஆராய்ந்து, திருட்டுச் சொத்தை சட்டபூர்வமானதாக்குவது தான்.
இப்படித் தான் 1978 இல் அமெரிக்க செனட் 130 தொழில்துறை தொடர்பான ஒரு விசாரணையை நடத்தியது. இதில் 530 தொழில்துறை தலைவர்கள் மற்றைய தொழில் துறை தலைமையகத்தில் திட்டமிடுபவர்களாக இருப்பது தெரியவந்தது. ஒரு திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை அம்பலமானது. அத்துடன் மூன்றாவது தொழில்துறை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், வருடம் 13000 மாக இருந்ததும் தெரியவந்தது. மூலதனம் கூட்டுக் கொள்ளையை, திட்டமிடப்படுவதை இது மேலும் அம்பலப்படுத்தியது.
உலகில் மிகப் பெரிய பணக்காரப் பட்டியலின் எண்ணிக்கையும், கொள்ளையிட்ட தொகையும் அதிகரித்து வருகின்றது. 2007 க்கும் 2006 க்கும் இடையில் 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு குவித்தோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து. இப்படி 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு வைத்திருந்தோர் எண்ணிக்கை, 946 ஆகியது. இது 2005க்கும் 2006 க்கும் இடையில், இந்த அதிகரித்த எண்ணிக்கை 102 யாக இருந்தது. அதே நேரம் 100 கோடிக்கு மேல் செல்வத்தை கொள்ளையடித்து வைத்திருந்தோரின், செல்வத்தின் அதிகரிப்பு 18 சதவீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பு 2.6 திரிலியன் டொலராக இருந்தது. இதேபோல் உலகில் 10 இலட்சம் டொலருக்கு மேலாக செல்வம் வைத்திருந்தோர் எண்ணிக்கை 2005 இல் 87 இலட்சமாக இருந்த எண்ணிக்கை, 2006 இல் 95 இலட்சமாகியது. செல்வத்தின் அதிகரிப்பு 11 சதவிகிதத்தால் அதிகரித்த அதேநேரம், அது 37.2 ரிலியன் டொலராக இருந்தது. இப்படி தனிநபரிடம் குவியும் செல்வம், எங்கிருந்து எப்படி வருகின்றது? ஆம் உலகமக்களின் உழைப்பில் இருந்து, உழைப்பின் சேமிப்புகளில் இருந்து, முன்னைய தலைமுறை விட்டுச்சென்ற உழைப்புச் செல்வத்தையும் கொள்ளையிடுகின்றது.
இது தான் உலகமயமாதல். உலகை கொள்ளையடிப்பது தான் உலகமயமாதல். உலக செல்வத்தை குவிப்பது தான், ஜனநாயகம் சுதந்திரம். அதற்கு உட்பட்டது தான் அனைத்தும்.
1 comment:
பங்கு சந்தையில் குவியும் செல்வம் எங்கிருந்து வருகின்றது என்பது குறித்தெல்லாம் அதை திருடித் தின்கும் யுப்பி வர்க்கத்திற்க்கு கவலை கிடையாது. அதை சுட்டிக் காட்டி பேசுவதை மட்டும் நாங்கள் பெரிய அறிவாளிகள் போல விமர்சிப்போம். எங்களிடம் நீங்கள் இது போல கஸ்டமான கேள்விகளும் கேட்க்கக் கூடாது.
பங்கு சந்தை உயரும் போது குதிப்பதும், தாழும் போது அழுவதும் ஜகஜம்....
இப்படி எல்லா இடத்திலும் சொல்லி வைத்தது மாதிரி புலம்பியுள்ளனர் பங்கு சந்தை யுப்பி திருடர்கள்.... திருட்டுத்தனம், காவாளித்தனம் செய்து அடுத்தவன் பணத்தை கொள்ளையடிப்பதற்க்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானம் வேறு...
அதாவது; இது மாதிரி கொள்ளையடிப்பதுதான் வழக்கம் அதனால் கண்டுக்கப்படாது, நீ சூதானமா இருந்து எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவு அடிச்சுக்கோ... என்பது போல
நடுத்தர வர்க்க அல்ப யுப்பிகளின் இந்த திருடி தின்க்கும் புத்திக்கு குடும்பத்தை கூட்டிக் கொடுத்து பிழைப்பவன் எவ்வளவோ மேல்.
அசுரன்
Post a Comment