தமிழ் அரங்கம்

Tuesday, January 22, 2008

'தேசம் ' எதைக் கட்டமைக்க முனைகின்றது?

பி.இரயாகரன்
22.01.2008

க்களின் விடுதலையா? தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு மாற்று அரசியல் வழியையா? இல்லை. மாறாக அவற்றின் கருக்களைக் கூட அழிப்பதை கடமையாக ஏற்று, அதைக் கட்டமைக்க விரும்புகின்றனர். இலங்கை அரசியலின் ஆதிக்கம் வகிக்கும் அரசியல் இதுதான். இதை படுகொலைகள் மூலம் தொடருகின்ற அரசியலின் தான், தேசத்தின் அரசியல் வரையறை கட்டமைக்கப்படுகின்றது.

தேசம் என்ன செய்ய முனைகின்றது. கிரிமினல்களுடன் சேர்ந்து அரசியலை கொசிப்பு அடிக்கும் வகையில், சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தை மாற்றியமைக்க முனைகின்றனர். இதன் மூலம் தம்மை விமர்சிப்பவர்களை தனிநபர் தாக்குதல் நடத்துவதாக முத்திரை குத்திக் கொண்டு, கேடுகெட்ட தனிநபர் தாக்குதலை இந்த கொசிப்பின் ஊடாகவே நடத்துகின்றனர்.

இன்றைய நிலையைத் தாண்டி, ஒரு சமுதாய மாற்றம் வந்துவிடக் கூடாது என்ற அக்கறை, அவர்களை இப்படியும் வேஷம் போட வைக்கின்றது. இதற்காக அவர்கள் கூறுவதை பாருங்கள். 'தன்னை ஒர் மார்க்சிய அவதாரமாகக் கட்டமைக்கும் இரயாகரனுக்கும்.." என்கின்றார். சரி இப்படியே தான் என்று எடுத்தால், இதற்கு பதிலாக நீங்கள் எதை மாற்றாக வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். நாம் அவதாரமாக இருக்கின்றோமா இல்லையா என்பது வேறு விடையம். நீஙகள் இதன் ஊடாக கட்டமைக்க விரும்புவது எதை? அதை வெளிப்படையாக நேர்மையாக வையுங்கள்.

மார்க்சியத்தை ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து, நாம் மட்டும் முன்வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையை மாற்றப் போகின்றீர்களா? அல்லது மார்க்சியத்தை இரயாகரனிடம் இருந்து மீட்கப் போகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் நல்லது நண்பர்களே, அதை நீங்கள் முதலில் செய்யுங்கள். அப்போது தான் இரயாகரனால் எதையும் கட்டமைக்க முடியாது. முதலில் வம்பளப்பதையும், கொசிப்படிப்பதையும் விடுத்து, இதை உருப்படியாகச் செய்யுங்கள். உங்களிடம் நேர்மை எதாவது இருந்தால், அதை முதலில் செய்யுங்கள்.

மார்க்சியத்தின் அவதாரமாக யாராலும் கட்டமைக்க முடியாது. அப்படி நம்பி, காலை வைத்து, மூழ்கிவிடாதீர்கள். என்ன செய்ய வேண்டும்? சமகால நிகழ்ச்சிப் போக்கை, மார்க்சிய அடிப்படையில் அணுகுவதால் மட்டும் தான், ஒருவன் குறைந்தபட்சம் மார்க்சியவாதியாக இருக்க முடியும். இதை யார் செய்கின்றனர். நீங்களா? உங்கள் நண்பர்களா? உங்கள் வாசகர்களா? அல்லது இந்திய இலங்கை அரசா, அது சார்ந்த குழுக்களா?

சும்மா நானும் மார்க்சியவாதி என்றால், மார்க்சியவாதியாகி விட முடியாது. கவுண்டமணி நானும் ரவடிதான் என்று கூறுவது போன்று, கேலிக்குரியது. மார்க்சியத்தை விடுவோம், குறைந்தபட்சம் முரணற்ற தேசிய முதலாளித்துவ புரட்சிகர நிலையில் கூட, உங்களில் யார் சமூகத்தை அதனூடாக அணுகுகின்றனர்?

மார்க்கியம் இரயாகரனின் தத்துவமல்ல. தலித்துகளின் பிழைப்புத்தனத்தில் இருந்து கூறுவது போல், இது வெள்ளாளனிததோ, பார்ப்பனியத்தினதோ தத்துவமல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவம். அது சுதந்திரமானதாக உள்ளது. எந்த ஒடுக்கப்பட்ட மக்களும், அதை ஆயுதமாய் எடுக்கவும், எடுத்தாளவும் முடியும். சமூகத்தில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும், அதை கையில் எடுக்க வேண்டும். அந்தளவுக்கு அது சுதந்திரமாக விமர்சன உலகில் உள்ளது. யாரும் இதற்கு வேலிபோடவில்லை. நாங்கள் அதை தவறாக கையாளுகின்றோம் என்றால், அதை மீட்க வேண்டியது சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. அதை செய்யுங்கள். அதன் பால் மார்க்சியத்தை உயர்த்துங்கள். இதைவிடுத்து புலம்பாதீர்கள்.

புலம்பவதே அரசியலாகிவிட்டதால் 'இருவேறு அரசியல் தளங்களின் பின்னால் இருந்தே தனிநபர் தாக்குதலையும் சேறடிப்புகளையும் மேற்கொள்கின்றனர்." என்று கூறுவதால் என்னதான் ஆகப் போகின்றது. 'இருவேறு அரசியல் தளங்களின்" பின்னுள்ளது என்பதை சரியாக புரிந்து எடுத்துச் சொல்லும் நீங்கள், அதற்கு மாற்றாக எந்த அரசியல் தளத்தில் நின்று இதை சொல்லுகின்றீர்கள். அதைச் சொல்லும் நேர்மை, துப்பு எதுவும் கிடையாது. வெறுமனே பினாத்த முடிகின்றது. எமது அரசியல் நிலையை தனிநபர் தாக்குதல் என்று கூறிய படி, எம்மீது தனிநபர் தாக்குதலையே செய்ய முடிகின்றது.

எமது நிலையை மொட்டையாக வரட்டுநிலை என்பதால், அது தானாக வரட்டுத்தனமாகிவிடாது. '... அத்தத்துவத்தை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தும் ஒரு வரட்டு அரசியலை தனக்காகக் கட்டமைக்கிறார் இரயாகரன்." என்கின்றார். "வரட்டு அரசியலை" தனக்காக கட்டமைப்பதாக கூறும் நீங்கள், அது எப்படி வரட்டுத்தனமாக உள்ளது என்பதை சொல்ல முடிவதில்லையே!

இலங்கை அரசியலைப் பற்றிய எமது பார்வை வரட்டுத்தனமானது? எப்படி? அதை முதலில் சொல்லுங்கள். புலிக்கு எதிரானவர்களுடன் கூடி நிற்கவேண்டுமா? அதைச் சொல்லுங்கள், எப்படி என்று?

இலங்கை இந்திய அரசுடன் சேர்ந்து நிற்காதா எமது நிலை அல்லது புலிகளுடன் சேர்ந்து நிற்காத எமது நிலையா வரட்டுத்தனமானது? எது? இவ்வாறான போக்குகளை அம்பலப்படுத்துவதா எமது வரட்டுத் தனம்? இதிலிருந்தா மார்க்சியத்தை மீட்கப் போகின்றீர்கள்? சொல்லுங்கள்.

இவையெல்லாம் எப்படி மக்கள் விரோத நிலை என்று விவாதியுங்கள். எதையும் மூடிமறைக்காது வெளிப்படையாக சொல்லுங்கள். இதைவிட்டு விட்டு சொற்களில் அரசியல் செய்ய முனைகின்றீர்கள்! இது அழகோ! அறிவோ!

நீங்கள் கூறுகின்றீர்கள் 'இவர்கள் தங்கள் சுயநலன்களுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் தமிழ் மக்களினதும் அரசியலைப் பயன்படுத்துவதால் அந்த அரசியலில் இருந்து பிரித்தெடுத்து இவர்களை விமர்சிப்பதும் அம்பலப்படுத்துவதுமே பொருத்தமானது" சரி, பிரித்தெடுத்த பின் என்ன செய்கின்றீர்கள். தனிநபர் தாக்குதலை நடத்துகின்றீர்கள். என்ன அரசியலா செய்கின்றீர்கள்?

இதற்கு மாறாக தமிழ் மக்களின் அரசியலை நீங்கள், எப்படி மக்களுக்காக பயன்படுத்தப் போகின்றீர்கள். பிரித்து எடுத்தீர்கள், என் மீது தனிநபர் தாக்குதலை நடத்தினீர்கள். எல்லாம் சரி, மக்களுக்காக என்ன தீர்வை சொல்லுகின்றீர்கள்.

அதை முதலில் வையுங்கள். அப்போது தெரியும் நீங்கள் யார் என்று? உங்கள் நோக்கம் என்னவென்று தெரியவரும். இந்த அவதூறு கட்டுரை அதைச் செய்யவில்லை. மாறாக பசப்புகின்றது. எதை, எப்படி, ஏன் பிரித்தெடுப்பது அவசியம் என்பதைக் கூறி, அதை நாம் எப்படி மக்கள் மயப்படுத்தப் போகின்றோம் என்பதைச் சொல்லி செய்யுங்கள். அதன் பின் எம்மை விமர்சிக்க தொடங்குங்கள், நாங்களும் உங்கள் பின் வருகின்றோம்.

மற்றொரு தலைப்பில் தொடரும்.


No comments: