தமிழ் அரங்கம்

Tuesday, January 22, 2008

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்

பி.இரயாகரன்


இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஓட்டி பிரசுரமாகின்றது.


மெரிக்காவை உலகின் சூப்பர் பொருளாதார நாடாக இருப்பதாக பொதுவாக நம்பப்படுகின்றது. சமூக விரோதத்தை அடிப்படையாக கொண்ட உலகெங்கும் சுரண்டும் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லோரும், தாம் திருடிய பெரும் செல்வத்துடன் அமெரிக்காவுக்குத் தான் ஓடுகின்றனர். இந்த கொள்ளையர்களை வரவேற்கும் விசேட சிறப்பு விசாச் சட்டங்கள். மறுபக்கத்தில் இவர்களுடனான எடுபிடி வாழ்வை விரும்புகின்ற தேசத் துரோகிகளும், அங்கு வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு விசாச்சட்டம். இப்படிப்பட்டவர்கள் கூடிவாழும் வாழ்வைத்தான், அமெரிக்காவின் சொர்க்கம் என்கின்றனர்.


மனித குலத்துக்கு எதிராக எப்படியும் நுகரலாம், எப்படியும் விபச்சாரம் செய்யலாம், எப்படியும் கொள்ளையடிக்கலாம் என்ற வாழ்வியல் ஒழுங்கியல் முறைதான், அமெரிக்காவின் சொர்க்கம். இதற்கு ஏற்ற அமெரிக்க கொள்கை. உலகில் உள்ள அனைத்தையும் எப்படி திருடுவது உட்பட, அனைவரையும் தனக்கு அடிப்பணிய வைப்பது தான் அதன் உலக ஒழுங்கு. மனித நுகர்வின் சிறு சிறு கூறுகளை எல்லாம், மற்றைய மனிதனுக்கு மறுப்பது அதன் ஜனநாயகம். அதைக் கொள்ளையடித்து மிதமிஞ்சி நுகர்வதே, அமெரிக்க சொர்க்கத்தின் சுதந்திரக் கொள்கை. இதற்கு ஏற்ப உலகம் தளுவிய வகையில் இராணுவ வன்முறைகள், சதிகள், சூழ்ச்சிகள் என்று, எல்லாவித ஆயுதங்களும் கையாளப்படுகின்றது. இதைப் பாதுகாக்கின்ற கும்பல்களே உலகெங்கும் ஆதிக்க வர்க்கமாக உள்ளது. மக்களை எப்படி இதற்கு கீழ் அடிமையாக வைத்திருப்பது என்பதே, இந்த எடுபிடி வர்க்கத்தின் சொந்த அரசுகளாக உள்ளது.


இப்படிப்பட்ட அமெரிக்காவோ திவாலாகி, குமிழிப் பொருளாதாரத்தில் மினுமினுப்பாகி மிதக்கின்றது. உலகத் திருடர்கள் எல்லாம் சேர்ந்தும் கூட, அந்த திவாலை மூடிமறைக்க முடிவதில்லை. சர்வதேச நாணயமாக டொலர் இருப்பதால், சர்வதேச விதிகளை எல்லாம் மீறி டொலரை கொண்டு அது மிதக்கின்றது. அமெரிக்காவின் குமிழிப் பொருளாதாரம் அதன் வங்குரோத்தை மூடிமறைக்க, டொலரை வெறும் பேப்பராக அடித்துவிடுவதையே செய்கின்றது. டொலரின் பெறுமதி குமிழிப் பொருளாதாரத்தினால், வீழ்ச்சி கண்டு வருகின்றது.


1992 இல் அமெரிக்கா தனது உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப, 700000 கோடி டொலருக்கு வெறுமனே பெறுமதியற்ற வெற்றுப் பேப்பரை பணமாக வெளியிட்டது. இப்படி தொடர்ச்சியான விளைவால், ஈரோவோடு ஏற்பட்டு வரும் சரிவில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.


இப்படிப்பட்ட அமெரிக்காவோ உலகில் மிகப்பெரிய கடனாளி நாடாகிக் கிடக்கின்றது. அமெரிக்காவின் உள்ளேயான கூட்டாட்சிகளின் கடன் 1970 இல் 91400 கோடி டொலராக இருந்தது. இது 1987 இல் 184100 கோடி டொலராகியது. மொத்த தேசிய உற்பத்தியில், கடன் 37 சதவிகிதமாகியது. இந்த கடனுக்கான வட்டி 1975 இல் 2320 கோடி டொலரில் இருந்து 1979 இல் 4260 கோடி டொலராகியது. இதுவே 1985 இல் 12940 கோடி டொலராக வீங்கியது. பத்து வருடத்தில் வட்டியாக கட்டும் தொகை 5 மடங்குக்கும் மேலாகியது. வட்டியோ வரவு செலவில் 13.7 சதவிகிதமாகியது. இப்படி அரசுகள் என்பது, மக்களின் பணத்தை திருடி அதை நிதி மூலதனத்துக்கு கொடுப்பதாகிவிட்டது. வரி அறவீடுகள் என்பது, வட்டியை கொடுப்பதற்கான நடைமுறைக் கொள்கையாகிவிட்டது.


1980 இல் 160000 கோடி டொலராக இருந்த அரசாங்கம் மற்றும் தனியார் கடன், 1983 இல் 536000 கோடியாக மாறியது. 1986 இல் 800000 கோடி டொலராக மாறியது. 1990 இல் 1085000 கோடி டொலராகியது. 1991 இல் 1131000 கோடி டொலரில் இருந்து 2000 முடிவில் 1826000 கோடியாகியது. இப்படி அமெரிக்காவின் சொர்க்கப் பொருளாதாரமே, கடன் வட்டி என்ற எல்லைக்குள் இயக்கப்படுகின்றது. மனித குலம் சூறையாடப்படுவதும், அதற்கேற்ற கொள்கையுமே அனைத்துமாகி விடுகின்றது.


இப்படி நிதி மூலதனத்தை கொழுக்க வைக்கின்ற (அமெரிக்கக்) கொள்கையே, உலகமயமாதலாகும். உலக மக்களை கடன் என்ற எல்லைக்குள் வைத்து, அவர்களை சூறையாடுவதே அதன் ஒழுக்கம்.


இப்படிப்பட்ட அமெரிக்கா தனது கடனை அடைப்பதில்லை. அதைப் பெருக்குவதே அரசின் கொள்கையாகும். கடனை அடைத்தல் என்பது, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகி விடுகின்றது. கடனை பெருக்குதல் தான், வளர்ச்சியின் விதியாகின்றது. வளர்ச்சி என்பது கடனை வாங்கி வட்டி மூலம் மூலதனத்தைப் பெருக்குதலாகும். கடனை அடைத்தல் என்பது, நிதி மூலதனத்தை இல்லாததாக்கி மக்களிடம் சூறையாடிக் கொடுப்பதை தடுத்தல். நிதி மூலதனத்தின் பெருக்கத்தை தடுத்தல். நிதி மூலதனத்தின் வளர்ச்சிக்கு இது எதிரானது. இவை முதலாளித்துவ பொருளாதார விதியாகும். இப்படி கடனை பெருக்குவதன் மூலம், மக்களிடம் சுரண்டி நிதி மூலதனத்தை பெருக்குதல் தான் ஜனநாயகக் கொள்கை. இந்த கொள்கை தான், அரசுகளின் கொள்கை. இதுவே உலகளாவிய நிதிக் கொள்கையும் கூட. கடனை அடைத்தல் என்பதை, அனுமதிக்காத உலகமயமாக்கல்.


இந்த வகையில் உருவாக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரம், குமிழிப் பொருளாதாரமாகவே மிதக்கின்றது. இந்த போலியான குமிழிப் பொருளாதாரத்தைக் கொண்டு அமெரிக்கா, உலகையே ஆட்டிப்படைக்கின்றது. என்ன தான் வங்குரோத்தில் கிடந்தாலும், கடன் கொடுத்தல், அதைக் கொண்டு கொழுத்தல் என்பதே அமெரிக்காவின் நிதிக் கொள்கை.


இந்த வகையில் 2000 ஆண்டின் முடிவில் ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த கடன் 219000 கோடி டொலராக இருந்தது. இது 2002 இல் 260000 கோடி டொலராகியது. அதாவது இது மூன்றாம் உலக நாடுகளின் மொத்தக் கடனுக்கு சமனாகும். அமெரிக்கா கொடுத்த இந்தக் கடன், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவிகிதமாகும். அமெரிக்கா கொடுத்த அன்னிய கடன் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் 1997 இல் 12.9 சதவிகிதமாகவும், 1999 இல் 16.4 சதவிகிதமாகவும் இருந்தது. 2002 இல் 22 சதவீதமாகியது.


கடனைக் கொடுத்தல், கடனைப் பெருக்குதல் மூலம், உலகைச் சூறையாடி வாழ்தல் தான் அதன் சர்வதேசக் கொள்கை. மனித உழைப்பைச் சுரண்டி வாழ்தல் போல், நாடுகளையே சுரண்டித் தின்னும் கொள்கை இது. இதுவே உலகத்தின் ஜனநாயகம், இதுவே அதன் சுதந்திரம். கடன் மூலம் உலகை அடிமை கொள்வதுடன், மக்களுக்கு கிடைக்கவேண்டிய வாழ்வாதாரங்களை இல்லாததாக்கி, அதை சூறையாடி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் வாழ்வியல் அவலம் தான், மற்றவனின் வாழ்வுக்கான ஆதாரம். இப்படித் தான் அமெரிக்காவின் சொர்க்கம், உலக மக்களின் ஏழ்மையின் மீது கட்டப்படுகின்றது.


அமெரிக்க சொர்க்கம் என்பது, சில தனிமனிதர்களின் வாழ்வு சார்ந்தது மட்டும் தான். சூறையாடும் அதை அவர்களுக்கு கொடுக்கும் அமெரிக்க அரசின் வரவு செலவு பற்றாக்குறை என்பது பூதம் போல் பெருகிவருகின்றது. கடனுக்கான வட்டியை நிதி மூலதனத்திடம் கொடுக்கவும், உலகை அடிமைப்படுத்தி சூறையாடி சிலரிடம் கொடுக்கவும் தேவையான பணம், பற்றாக்குறையாகின்றது. இப்படி 1992 இல் 5600 கோடி டொலர் என்ற பற்றாக்குறை, 1999 இல் 26000 கோடி டொலராகியது. இது 2004 இல் 52100 கோடி டொலராகியது. 12 வருடத்தில் வரவு செலவு பற்றாக்குறை 10 மடங்கைக் கடந்துவிட்டது.


இப்படி பற்றாக்குறைகள் ஒருபுறம், மறுபக்கத்தில் அமெரிக்கா முதலாளிகளுக்கு 10 வருடங்களில் மொத்தமாக 15500 கோடி டொலர் வரிச்சலுகை வழங்கியது. என்ன கொள்கை. உலகைக் கொள்ளையடிக்கும் அமெரிக்கா முதலாளிகளுக்கு இலாபமும், கொழுத்ததும் போதாது என்பதால் வரிச்சலுகை. அமெரிக்க ஜனநாயகத்தின் உள்ளடக்கமே இதுதான்.


பற்றாக்குறை என்பது வட்டியும், முதலாளிக்கு வரிச்சலுகையும், உலகெங்குமான ஆக்கிரமிப்பாகிவிட்டது. உலகை கொள்ளையடிக்காமல், இதைச் செய்ய முடியாது என்ற நிலை. உலகெங்கும் பலவழிகளில் சூறையாடுவது, அமெரிக்காவின் தேசிய கொள்கையாகிவிட்டது. அதேநேரம் பற்றாக்குறை என்பது, நிதி மூலதனத்தை பெருக்கும் கொள்கை. புதிய கடன் வாங்குவதன் மூலம், மக்களிடம் சூறையாடி கொடுக்கும் வட்டித் தொழில் செழிப்புறுகின்றது. இப்படி நாடுகளின், அரசுகளின் கொள்கைகள் வக்கிரமாகிச் செயல்படுகின்றது.


இது ஒருபுறம். மறுபக்கம் தலை கால் தெரியாத அதீத நுகர்வால் மொத்த ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை பெருகியது. அதிகமாக நுகர நுகர, இதுவும் அதிகரித்தது. இப்படி 1988 இல் அமெரிக்காவின் ஆண்டுப் பற்றாக்குறை 262500 கோடி இந்திய ரூபாவாக மாறியது. அதேநேரம் யப்பானின் ஆண்டு உபரி 175000 கோடி இந்திய ரூபாவாக மாறியது. இதன் விளைவு அமெரிக்க இறக்குமதியில் யப்பானிய பொருட்கள் 40 சதவிகிதமாகியது. அமெரிக்கா பற்றாக்குறையை ஈடுகட்ட, யப்பானின் முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் முதலீடாக்கப்பட்டது. 1987 இல் அமெரிக்கா தொழில் கழகங்களில் 435 ஜ ஜப்பான் விழுங்கியது.


உலகில் கடன் வழங்கும் நாடாக இருந்த அமெரிக்கா 1980 இன் இறுதியில் கடன் வாங்கும் நாடாக மாறியது. ஜப்பான் கடன் கொடுக்கும் நாடாக மாறியது. இப்படிப்பட்ட யப்பான் 1965 முதல் இரண்டு சர்வதேச எண்ணை நெருக்கடி ஆண்டுகளைத் தவிர (1973-75, 1979-80), பொருளாதாரம் உபரியாகவே இருந்துள்ளது. 1965 இல் ஜப்பானின் உபரி 1900 கோடி இந்திய ரூபாவாக இருந்தது. இது 1975 இல் பத்துமடங்காக மாறியது. 1985 இல் 90 மடங்காகியது. இப்படிக் குவிந்த யப்பனின் அன்னியச் செலவாணி, ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்குரிய வகையில் அன்னிய நாடுகளில் முதலீடாக மாறியது.


இந்த ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பவும், அமெரிக்க மூலதனத்தின் பலத்தை பெருக்கும் வகையில் உருவானதே உலகமயமாதல். சந்தை விதியை அதற்கு உட்பட்ட சுதந்திரத்தின் விதியை ஜனநாயகத்தின் விதியை கொண்டு, அமெரிக்கா அதை உலகளாவில் கொண்டு வந்தது. மூலதனத்தின் விதியை அனுசரித்து, அமெரிக்காவை மீறுவது என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியங்கள் இதை ஏற்றுகொண்டனர். உண்மையில் உலகை அதிதமாகவே சூறையாடி, உலக நெருக்கடியை இதன் மூலம் பின்போட்டனர். உலகமயமாக்கலுக்கு முன் அமெரிக்காவை மிஞ்சிய ஐரோப்பிய யப்பானிய மேலாதிக்கம் என்பது, அமெரிக்காவுக்கு அச்சம் தரும் வகையில் வளர்ச்சியுற்று இருந்தது. அதை தடுத்து நிறுத்தவும், உலகை மேலும் ஆழமாகவும் நுட்பமாகவும் சுரண்டுவதன் அடிப்படையில், உலகமயமாதலை ஒரு ஆயுதமாக அமெரிக்கா கையாண்டது.


இப்படிப்பட்ட அமெரிக்காவின் மேலாண்மை என்பது, முதலாம் உலக யுத்தத்துடன் கூர்மையடைந்தது. ஐரோப்பாவின் உலகளாவிய ஆதிக்கம் என்பது, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகியது. அமெரிக்கா 1914 இல் அன்னிய கடன் வழங்கல் 250 கோடி டொலராக இருந்தது. இது 1919 இல், அதாவது முதலாம் உலக யுத்த முடிவில் 700 கோடி டொலராகியது. அதேநேரம் வெளிநாட்டு அன்னிய முதலீடு 720 கோடியில் இருந்தது. யுத்தம் காரணமான 330 கோடி டொலராக குறைந்தது போனது. இப்படி சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய உள்முரண்பாடுகள் கூர்மையடைய, ஏகாதிபத்தியத்துக்கு இடையில் அமெரிக்க ஆதிக்கம் வெளிப்படையாக உருவாகத் தொடங்கியது.


இதன் பின்னான இதனடிப்படையில் உருவான இரண்டாம் உலக யுத்தம் கூட, இதைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்த நிலைமை என்பது 1980 களில் முன்பிருந்தே மாற்றமடையத் தொடங்கியது. ஆனால் அது பிரதான முரண்பாடாகிவிடவில்லை. ருசியா ஏகாதிபத்தியத்தின் இருப்பும், அதுவே ஏகாதிபத்தியதுக்கு இடையிலான பிரதான முரண்பாடாகி நின்றது. மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான உருவாகி வந்த முரண்பாடுகளை பின்னுக்கு வைத்தது. பொருளாதார ரீதியான ஆதிக்கமும், மூலதனம் இடமாறிக் கொண்டிருந்த நிலையிலும் தான், ருசிய ஏகாதிபத்தியத்தின் சிதைவு நிறைவுற்றது.


இது இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் இருந்து மீள, உலகை மறுபடியும் புதிய உத்திகள் மூலம் சுரண்டி தணிக்க, உலகமயமாதல் மூலம் வடிகால் வெட்டப்பட்டது.


இப்படி அமெரிக்கா மிதப்பாக காட்ட, கட்டமைத்துள்ள குமிழிப் பொருளாதாரம் அதன் உள் கட்டுமான கட்டமைப்போ மிகமிகப் பலவீனமானது. அன்னிய மூலதனத்தின் இருப்பில், அது மிதக்கத் தொடங்கியது. 1992 க்கு பின் அமெரிக்காவுக்குள் அன்னிய முதலீடுகளிள் உள் செல்லும் அளவு, அமெரிக்க கடனில் 10 சதவிகிதத்துக்கு மேலானதாக இருந்தது. இப்படி உலகில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறம். நிதி மூலதனம் பாதுகாப்பாக குந்துவதற்கு அமெரிக்காவை தேர்ந்துதெடுக்கும் நிலைமைகள் மறுபுறம். இதன் மூலம் அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், போலியாகவே தன்னை மிதப்பாக்கி காட்டுகின்றது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரிய வீக்கத்தை உருவாக்குகின்றது.


இந்த வகையில் உலகின் வெளிப்பாகங்களில் இருந்து, அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை நிதி மூலதனங்களைக் கொண்டு வாங்குவது அதிகரித்தது. இப்படி அமெரிக்காவுக்குள் புகுந்த தொகையோ, 1995 இல் 19720 கோடி டொலராகும். இந்தக் கடன் பத்திரங்களை வாங்குவதற்காக, உலகெங்கம் திருடிய ஒரு தொகுதி பணம் அமெரிக்காவின் உள்ளே ஓடிவந்தது. இது முந்தைய நான்கு ஆண்டுகளின் சராசரியைப் போல், 1996 இல் இரண்டரை மடங்கு அதிகமாகியது. 1996 இல் இது 31200 கோடி டொலராக அதிகரித்தது. 1997 இல் 18960 கோடி டொலராக இருந்தது. குமிழிப் பொருளாதாரம் இப்படி மிதக்கத் தொடங்கியது. வங்குரோத்து மூடிமறைக்கப்பட்டது. அதாவது இதன் மூலம் பூசப்பட்டது.


நிதி மூலதனத்தை தக்கவைக்கும் வகையிலான நம்பிக்கையின்மை பாதுகாப்பின்மை அதிகரிக்க, இயல்பாக எதிர்மறையில் அவை அடைக்கலம் பெறுகின்றது. போலியான ஒன்றை முன்னிறுத்தி, அதன் பின் தன்னை பாதுகாக்க முனைகின்றது. தனது பாதுகாப்பு இன்மையை மூடிமறைக்கவே, நம்பிக்கை ஊட்டுகின்றது. இந்த போலித்தனம் முடிமறைக்கப்பட, அது நம்பிக்கையின் அடையாளமாகி விடுகின்றது. நம்பிக்கையின் பின், நிதி மூலதனம் ஒடுவது அதிகரிக்கின்றது.


இதுவே அமெரிக்காவின் பங்குச் சந்தையை மிதப்பாக்கியது. இந்த மிதப்பு 1994 இல் 2 சதவிகித அதிகரிப்பை உருவாக்கியது. 1995 இல் திடீரென 17.6 சதவிகிதமாகவும், 1996 இல் 23 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வீங்கி வெம்பத் தொடங்கியது. 1997 இல் இது 30 சதவிகித அதிகரிப்பை உருவாக்கியது. அமெரிக்க பங்குச் சந்தை விலைகள், என்றுமில்லாத வகையில் 200 சதவிகித்ததால் உயர்ந்தது. சந்தை சுட்டெண் 1994 இல் 3600 என்ற நிலையை கடந்து 1999 இல் 11000 தொட்டது. 2000 இன் ஆரமப்பத்தில் 11700 ராக உயர்ந்தது.


உலகில் உள்ள திருடர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவதால், திருடிய சொத்தை பாதுகாப்பாக அமெரிக்காவில் வைக்க முனைவதால், அமெரிக்கப் பொருளாதாரம் மிதக்கின்றது. இதுதான் இதன் சூக்குமம். அமெரிக்க பொருளாதாரத்தின் திவால், எட்டப்பர்களால் மிதப்பாக்கியது.


நிதிவரத்தின் அதிகரிப்பு, பணச் சுழற்றியாகின்றது. வரும் பணம் சும்மா உட்கார்ந்து இருப்பதில்லை. அமெரிக்காவின் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தி முப்பது சதவிகிதம் அதிகரித்தது. நிதி மூலதனத்தின் அதிகரித்த வரவு ஏற்படுத்திய வீக்கம், அரைப்பங்கு பணவீக்கத்தை உருவாக்கியது. அதேநேரம் அமெரிக்க நிறுவனங்களின் இலாபம் 60 சதவிகித்துக்கு அதிகரித்தது.


அமெரிக்க நிறுவனத்தின் கடன் ஒருபுறம் அதிகரிக்கின்றது. இலாபமும் அதிகரிக்கின்றது. நாட்டின் கடன் அதிகரிக்கின்றது. வட்டிப் பொருளாதாரமோ வீங்கி வெம்புகின்றது. இந்த பொருளாதாரம் எப்படிப்பட்டது.


ஒரு போலியான ஒரு பொருளாதார கட்டமைப்பை பேணுவதன் மூலம், உலக செல்வங்களின் மிகப் பெரிய ஈர்ப்பை நடத்தி, அமெரிக்கா பொருளாதாரத்தின் மிதப்பை தக்கவைக்க முடிகின்றது. யப்பான், சீனா, சவுதிஅரபியா போன்ற நாடுகள், தமது மிகப்பெரிய உபரி நிதி மூலதனத்தை அமெரிக்காவுக்குள் நகர்த்தி வருகின்றன. சீனா மற்றம் யப்பான் உள்ளிட்ட கிழக்கு ஆசியா, 170000 கோடி டொலர் அன்னிய செலவாணி கையிருப்பை வைத்துள்ளது. இதில் பாதியை அமெரிக்காவின் பங்குப் பத்திரத்தில் இட்டுள்ளது. இப்படி, அதாவது அமெரிக்கா உலகின் மொத்த சேமிப்பில் இருந்து மூன்றில் இரண்டு பங்கை உறிஞ்சிக் கொள்கின்றது. இதன் மூலம் தான் அமெரிக்க பொருளாதாரம், சரிந்து விழாது தன்னை தடுக்கின்றது.


மேற்கின் பொருளாதார இருப்பு, மற்றைய நாடுகளின பணத்தை தனக்குள் உள்ளிழுப்பது தான். கடனை திணிக்கும் இந்த ஏகாதிபத்தியங்கள், அந்த நாட்டின் கையிருப்பு நிதியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அந்த நிதியை கடனான மீள நிதிச் சொந்தக்காரர்களுக்கு மீள வழங்குவதைத் தான் மேற்கு செய்கின்றது. இதன் மூலம் அந்த நாட்டிடம் வட்டி அறவிட்டும் மேற்கு கொழுக்கின்றது.


இப்படி 2004 இல் தெற்கு நாடுகளின் நிதி, வடக்கில் தங்கிவிட்ட தொகை மிகப்பெரியது.


சீனா - 61000 கோடி டொலர்

மத்திய வருமான உடைய நாடுகள் - 75100 கோடி டொலர்

மிக குறைந்த வருமானம் உடைய நாடுகள் - 23100 கோடி டொலர்


மேற்கின் செல்வ ஆற்றல் என்பது, தெற்கு நாடுகளின் மேலான பலமுனை பொருளாதார தாக்குதல் மூலம் அபகரிப்பது தான். இதன் மூலம் உருவான அமெரிக்கப் பொருளாதாரமோ, ஆழமான நெருக்கடியுடன் கூடியது.


அமெரிக்கப் பொருளாதாரத்தில் எற்படும் எந்த ஒரு நெருக்கடியும், உலகத்தை கவிட்டு போட்டுவிடும். இந்த எல்லைக்குள் தான் உலகப் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஸ்திரமான நிலைக்கு, நாள் ஒன்றுக்கு 100 கோடி டொலர் நிதி அன்னிய நாடுகளில் இருந்து அமெரிக்காவின் உள்பாய்வது நிபந்தனையாகிவிட்டது. இந்த நிதிப் போக்குவரத்தில் ஏற்படும் எந்த நெருக்கடியும், அமெரிக்கா திவாலாவதை அறிவிக்கும் நாளாக மாறும். அமெரிக்கா என்ற கற்பனையான வடிவம், மீள முடியாது தகர்ந்து போகும். உலகமே ஒரு குழப்பத்தில் சிக்கிவிடுவதையும், உலகமே ஒரு கிளர்ச்சிக்குள் செல்வதை முதலாளித்துவ பொருளாதாரத்தினால் தடுக்கமுடியாது.


கற்பனையான அமெரிக்கா பற்றிய மிதப்பு பற்றிய போலியான பிரமைகள் தகர்ந்து போகும். நிதி மூலதனத்தின் வங்குரோத்து அம்மணமாகும். முதலாளித்துவ சரண்டல் சமூக அமைப்பில் என்ன நடக்கின்றது என்பது, ஒரு சரிவின் விளிம்பில் நிதர்சனமாக அனைவரும் சொந்தமாக சுயமாக கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதைக் காணமுடியும். அதுவரை இந்த உலகமயமாதல் மிதப்பிலான சமூக அமைப்பு, தன்னை பலமானதாக காண்பது நிகழ்கின்றது. இதை புரிந்துகொண்டு மக்களின் அதிகாரத்துக்காக எதிர்வினையாற்றும் முன்னேறிய சக்திகள் மத்தியில் இருந்துதான், புரட்சிகரமான மக்கள் தலைமைகள் உருவாகின்றன



1 comment:

Unknown said...

வெறுங்கையால் முழம், வாய்ப்பந்தல் - இது அமெரிக்கா!!

இது புரியாமல், பங்கு மார்க்கெட்டில் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு அரசாங்கம் ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்தியர்களை என்ன சொல்ல??