குல்பர்க் முற்றுகை
அன்றைய தினம் அதிகாலையிலேயே விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளைச் சார்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் மேஹனின் நகருக்கு வந்து சேர்ந்ததாக பிரகலாத் ராஜு கூறினான். விஹெச்பி அழைப்பு விடுத்த முழுஅடைப்பு நடைபெறுவதை நிர்பந்திக்கும் வகையில் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தனர். சுமார் 8:30 மணியளவில் இந்தக் கும்பலில் அவனும் இணைந்ததாகக் கூறினான்.
இந்தக் கும்பலில் உள்ள அதிகமானோர் சூலாயுதத்தைத் தங்கள் இடுப்பு கயிற்றில் கட்டி வைத்திருந்ததாக அவன் கூறினான். இன்னும் வன்முறையாளர்களில் அதிகமானோர் தடிகளையும், கார்களில் எரிபொருள்களையும் கொண்டுச் சென்றதாக மங்கிலால் ஜெயின் என்பவன் மேலும் தெரிவித்தான். வன்முறையாளர்களில் சிலர் கைத்துப்பாக்கிகளைக் கொண்டுச் சென்றதாக மதன் சாவல் தெரிவித்தான். விஹெச்பி.யினர் வந்து சேர்ந்தவுடனேயே முஸ்லிம் ஒருவரின் கடையைத் தீயிட்டுக் கொளுத்தியதாக சாவல் மேலும் கூறினான். பலசரக்கு மளிகை வியாபாரம் செய்யும் சாவல் இந்தத் தருணத்திலேயே தான் வன்முறை கும்பலுடன் இணைந்ததாக கூறினான்.
வன்முறையாளர்களை முன்நடத்திச் சென்றது யார்?
விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி இன்னும் காங்கிரஸ் உள்ளுர் தலைவரான மேஹ் சிங் ஆகியோர்களே வன்முறை வெறிகூட்டத்தாரை வழி நடத்திச் சென்றதாக சாவல், ஜெயின் மற்றும் ராஜு கூறினார்கள்.
இஃஸான் ஜாப்ரி கொல்லப்பட்டது எப்படி?
வன்முறை கும்பல் வெகுவிரைவாக குல்பர்க் சமூகக் குடியிருப்பை முற்றுகையிட்டது. அங்கு 30 முதல் 35 முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், பக்கத்திலுள்ள சேரி பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களும் இவ்வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இக் குடியிருப்பு வளாகத்திலுள்ள கதவு மூடப்பட்டிருந்ததாலும், அதன் சுற்று சுவர் மிக உயரமாக இருந்ததாலும்., வன்முறை வெறியர்களில் சிலர் முன் பகுதியிலிருந்தும் பின் பகுதியிலிருந்தும், சுவரைத் தகர்த்தார்கள்.
வன்முறை வெறியர்கள் வாயு உருளைகளை வீடுகளிலிருந்து கொண்டு வந்தனர். சுவரின் பக்கத்தில் வாயு உருளைகள் வைக்கப்பட்டு தீயிட்டு வெடிக்க வைக்கப்பட்டதால், 2 அடி தடிமம் கொண்ட சுவர் உடைக்கப்பட்டது என சாவல் கூறினான். மேலும் அவன் கூறும் போது, வன்முறை வெறியர்களில் சிலர் கயிற்றை கொண்டு 20 அடி உயர சுவரில் ஏறியதாகவும் சொன்னான். வன்முறை வெறியர்கள் குடியிருப்புகளைத் தகர்ப்பதனால் சுதாரித்து கொண்ட ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டார். தனது முயற்சிகள் பலன் எதனையும் தராததை உணர்ந்த ஜாப்ரி வன்முறை வெறியர்களை நோக்கி சுட்டு சிலரை காயமும் படுத்தினார் என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் தெஹல்காவிடம் கூறினான். பிறகு வன்முறை வெறியர்கள் தன்னையும், பிற முஸ்லிம் மக்களையும் விட்டுவிடுவதற்காக பணம் தருவதாகவும் வேண்டினார். இந்தச் சமயத்தில், இவ்வெறியர்கள் பணத்துடன் கீழே வருமாறு கூறினார்கள்.
ஜாப்ரி கீழே வந்தவுடன், பணத்தைத் தரையில் போட்டு விட்டு திரும்பி செல்ல விரைந்தார். ஆனால் வன்முறை வெறியகள் அவர் மீது பாய்ந்துத் தாக்கினார்கள் என ஜெயின் கூறினான். ஐந்தாறு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒருவன் வாளால் தாக்கினான்... அவருடைய கைகள் வெட்டபட்டது; பிறகு கால்களும் வெட்டப்பட்டது... பிறகு மற்றவைகள் எல்லாம்... அவரை துண்டு துண்டாக வெட்டிய பிறகு, அவர்கள் அவரின் உடல் பாகங்களைக் குவித்து வைக்கப்பட்டிருந்தக் கட்டைகள் மீது வைத்து தீயிட்டார்கள்... அவரை உயிரோடு எரித்தார்கள் என கூறி சாவல் அக்கொடிய கொலை நிகழ்வை நினைவு கூர்ந்தான்.
ஜாப்ரியைக் கொன்ற பிறகு, மற்ற முஸ்லிம்களை வன்முறை வெறியர்கள் வெளியே இழுத்து கொண்டு வந்து, அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு தீயிட்டும் கொளுத்தினார்கள். மாலை சுமார் 4:30 மணியளவில் காவல்துறையினர் இறுதியாக அங்கு வந்து சேர்ந்தனர். வன்முறை வெறியர்களைக் கலைத்தனர். பிறகு உயிரோடு இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
குற்றங்களில் கூட்டாளியாகிய காவல்துறை
காவல்துறையினர் வன்முறையாளர்கள் சுதந்திரமாகத் தங்களது வெறியாட்டதை நிகழ்த்திட வாய்ப்பளித்ததோடு மட்டுமல்லாமல், இக்கயவர்கள் முஸ்லிம்களைக் கொல்வதற்கு ஊக்கமும் உந்துதலும் அளித்ததாக மூன்று குற்றவாளிகளுமே ஒரு சேர உரைத்தார்கள். மேஹனின் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய KG எர்டா என்பவன் வன்முறை வெறியர்கள் முஸ்லிம்களைக் கொல்ல 3 முதல் 4 மணி நேர அவகாச காலம் அளிப்பதாக கூறினான் என மங்கிலால் ஜெயின் தெரிவித்தான். கூடுதலான பாதுகாப்பு படையினர் அன்றைய தினம் மாலையில் அஹ்மதாபாத் வந்திறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டதால் தான் இக்கால அவகாசத்தை அந்த (அயோக்கிய) ஆய்வாளர் வழங்கினான் என்பதைத் தெஹல்கா கண்டுபிடித்தது.
சிலமணி நேர கால அவகாசத்திற்குள் வன்முறை வெறியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் செய்திட இசைவு தெரிவிக்கும் வகையில் காவல்துறையினர் முழுமையாய் விலகி இருந்து கொண்டார்கள் என ஜெயின் கூறினான். இத்தகைய நிலைபாடு, இக்கயவர்களின் வெறிக்கு மேலும் எரிபொருள் வார்ப்பதைப் போன்று இருந்ததால் அஹ்மதாபாத் முழுவதும் அதிக எண்ணிகையிலான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்தது.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் நகர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் வன்முறையாளர்கள் போய் கொலை செய்வதற்குச் சைகை கூட தந்தார்கள் என ராஜு தெஹல்காவிடம் கூறினான். படுகொலைகள் கிட்டதட்ட நிகழ்த்தி முடிக்கபட்ட பின்பு உயிர் தப்பியவர்களை காப்பாற்றுவற்காக எர்டா வந்திறங்கினான். இந்த நேரத்தில் வன்முறையாளர்கள் எர்டாவிடம் சென்று அவனுடைய செயல்பாடு முறையல்ல, ஏனென்றால் உயிர் தப்பியவர்கள் வன்முறையாளர்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள் என்று முறையிட்டனர். எனவே மிகப் கொடிய திட்டம் எர்டாவின் எண்ணத்தில் உதித்தது. அந்தத் திட்டத்தின் படி, உயிர் தப்பியவர்களை வேனில் ஏற்றி கொண்டு குல்பர்கிலிருந்து வெளியேறும் போது வன்முறை வெறியர்கள் கற்களை வேனின் மீது வீசவேண்டும். அப்போது அவ்வேனில் உள்ள காவலர்கள் அச்சமுற்று ஓடிவிட்டதாக கூறப்படும். அந்த சமயத்தில் வன்முறை வெறியர்கள் அவ்வேனை தீயிட்டு கொளுத்தி விடவேண்டியது. ஆனால் பதான் என்னும் முஸ்லிம் காவல் ஆய்வாளர் சரியான தருணத்தில் தலையிட்டக் காரணத்தால் இக் கொடிய (சதி)திட்டம் செயல்படுத்த முடியாமல் போயிற்று என சாவல் தெரிவித்தான்.
மூடிமறைக்கப்பட்ட உண்மைகள்
அதிகாரப்பூர்வமாக கூறப்பட்ட கொலை செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று தெஹல்காவிடம் பேசிய மூன்று குற்றவாளிகளுமே கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும் போது, இறந்து கிடக்கும் உடல்களை அப்புறப்படுத்தி கொடூரத்தின் தாக்கத்தைக் குறைத்து காண்பிக்க உதவுமாறு வன்முறை வெறியர்களிடம் காவல் துறையினர் கோரினார்களாம். விசாரணைகள் துவக்கப்படும் போது கூட, குற்றங்களை மூடி மறைக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது. வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் குற்ற புலனாய்வு அதிகாரிகள் குற்றவாளிகள் அனைவரையும் மிகச் சிறந்த கண்ணியமான முறையில் நடத்தியதாக மூன்று குற்றவாளிகளுமே தெஹல்காவிடம் கூறினார்கள். விசாரணை காவலின் போது காவல்துறையினர் அவர்களில் எவரையும் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தாததோடு மட்டுமல்லாமல், சிறந்த உபசரிப்போடு நடத்தப்பட்டதாக அவர்கள் அனைவருமே கூறினார்கள். வன்முறை வெறியர்களில் சிலர் விசாரணை காவலில் வைக்கப்பட்டதே, காவல்துறையினர் செய்ய வேண்டிய குறைந்தபட்சச் சம்பிரதாயத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்ற அவசியத்தினாலேயே, தவிர இக்காவலானது உண்மையில் ஒரு வேடிக்கையான நாடகமேயாகும் என இம்மூவரும் கூறினார்கள். அப்போதைய குற்றப்பிரிவு DCPயாக பதவி வகித்த DG வன்வாரா தான் குல்பர்க் படுகொலைகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படடிருந்தான். ஆனால் அவன் அவர்கள் (வன்முறை வெறியர்கள்) எவரிடமும் படுகொலைகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்காக எவ்வித கேள்விகளையும் கேட்கவில்லை என சாவல் தெரிவித்தான். தாங்கள் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலங்களில் பொய்யையே கூறியதாகவும், ஆனால் உண்மைகள் கூறும்படி காவல்துறையினரால் தங்களுக்கு எவ்வித நிர்பந்தமோ நெருக்கடியோ தரப்படவில்லை என்றும் இம்மூவரும் மேலும் கூறினார்கள்
காவல்துறையினர் தங்களுடைய வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்ததாக உயிர் பிழைத்தவர்களில் டஜன் எண்ணிக்கையிலானோர் அஹ்மதாபாத் காவல்துறை ஆணையாளரிடம் புகார் எழுதி கொடுத்துள்ளார்கள். முஹம்மது ரஃபீக் பதான் என்பவர் காவல்துறை ஆணையாளருக்குச் சத்திய பிரமாணம் செய்து கொடுத்த வாக்குமூலத்தில், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட நான்கு வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். முஹம்மது சயீத் என்னும் மற்றொருவர், தன்னால் இனம்காட்டப்பட்டு பெயரும் கூறப்பட்ட ஒன்பது வன்முறை வெறியர்களின் பெயரைத் தனது வாக்குமூலத்தில் காவல்துறையினர் சேர்க்கவில்லை என கூறியுள்ளார். இது போன்ற டஜன் எண்ணிக்கையிலான புகார்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டும், வெளிப்படையாக தெரியும் இம்முரண்பாடுகளை சரி செய்வதற்குக் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
விஹெச்பி தலைவர்களான பாரத் தெலி மற்றும் அதுல் வைத் ஆகியோரை வன்முறை வெறியர்கள் கும்பலில் கண்டதாக உயிர் பிழைத்தவர்களில் ஏராளமான பேர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்கள். குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகள் மூவரும் தெஹல்கா இரகசியமாக பதிவு செய்த உளவு படக்கருவியில் இவ்விரு விஹெச்பி தலைவர்களும் வன்முறை வெறியர்கள் கும்பலில் இருந்ததை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் இதுவரை இவர்களுடையப் பெயர்களை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கவில்லை.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
No comments:
Post a Comment