செல்வி திருச்சந்திரன் எழுதிய "தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு" என்ற நூல் பல்வேறு கடந்தகால தரவுகளை உள்ளடக்கியுள்ளது. பெண் சார்ந்து வந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒரு தரவு ஆய்வு நூலாகும். இந்த ஆய்வு மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு செய்யவில்லை. மாறாக அதை முடிந்த முடிவுகளாக எடுக்கக் கூடாது என்பதன் ஊடாகவே நூல் உட்புகுகின்றது. கடந்தகால இலக்கிய தரவுகளை ஆதாரமாக கொண்ட ஆய்வுகளை உள்ளடக்கிய இந் நூல், இலக்கியம் சார்ந்த தரவுகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒழுங்கமைத்துள்ளது. ஆனால் இந்த ஆய்வுகள் கடந்த வரலாற்றின் ஊடே நிகழ்ந்த வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாக கொள்ளாததுடன், அக்காலத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணியப் போராட்டங்களையும் உள்ளடக்கிவிடவில்லை. அத்துடன் வரலாற்று மார்க்சிய ஆய்வுமுறையை, ஆய்வுகளை மறுத்ததன் மூலம், இப்பெண்ணியம் பெண்ணியத்தில் இருந்து விலகிச் செல்லுகின்றது. மாறாக தரவுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு முன்வைத்த கருத்துக்கள் சமுதாயத் திரிபை தனிச்சொத்துரிமை சார்ந்து உள்ளடக்கியுள்ளது. இதை நாம் ஆராய்வோம்.
"ஆரம்பகால மானிடவியலாளர்களான பச்சோஃபன் (1861), மார்கன் (1877), ஆகியோரதும் ஏங்கெல்ஸ்(1884) போன்ற ஆய்வாளர்களதும் பெண் ஆதிக்கச் சமூகக் கோட்பாட்டின் ஒரு மீள் அமைப்பேயாகும். பல்வேறு ஆய்வாளர்கள் மத்தியில் இந்த முடிவுக்கு அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இக்கோட்பாட்டினை அவர்கள் வரலாற்றுப் போக்கில் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்துள்ளனர். உற்பத்திச் சாதனங்களையும் பெண்களே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றோ அல்லது சுயாதீனமான அதிகார அடித்தளத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்றோ கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. வரலாற்றுக்கு முந்திய பெண் முதன்மை சமூக அமைப்பு முறை என்பது கருதுகோளே அன்றி அதற்கு இலக்கியச் சான்றுகள் காணப்படவில்லை."75 என்று மார்க்சிய பெண்ணிய ஆய்வுகள் மீது சந்தேகத்தை எழுப்பி மார்க்சியத்துக்கு எதிராக ஆணாதிக்க தனிச்சொத்துரிமையை நிலைநிறுத்துகின்றனர்.
இதற்கு எதிரான ஆதாரங்கள் நிறையவே உள்ளது. "எகிப்திய பிரமிட்டுகள் செதுக்கிய சிற்பங்களில் "ஆஸிரிஸ்" என்ற பருவ தெய்வங்கள் முக்கியம் வாய்ந்தவை. தாலமி அரசனின் கல்வெட்டிலும் இதே போன்று குறிப்பிடும் விடயங்கள் ஒரே தன்மை கொண்டவை. இந்த மரபு சார்ந்த சடங்குகளை ஆராய்கின்ற போது எகிப்தை ஆண்ட அரசிகள் திருமணம் செய்து கொள்வதில்லை. விரும்பிய ஆண்களுடன் ஒரு ஆண்டு வாழ்ந்த பின் அவ் ஆணை அரசிகள் பலியிடுவர். ஆணாதிக்க அமைப்பு தோன்றிய பின் பலியிடுவது நின்று போனது. பின்னால் அரசி பதவியை இழக்க, அதை அடையும் ஆணை பலியிடுவது என்ற வடிவில் மாறிய சடங்குகள், அக்கால கட்டத்தின் தொடர்ச்சியை இன்றைய சடங்குகளும் பறைசாற்றுகின்றது."150 வரலாற்றில் பெண் தலைமை தாங்கியது கற்பனையான புனைவுகள் அல்ல. பாபிலோனிய - சுமேரியப் படைப்பு கதைகளில் "உன்னுடைய ஆணையைத் தேவர்கள் நிறைவேற்ற வேண்டும். நீ அவர்களை அடக்கி ஆள வேண்டும். நீயே யாவரிலும் வலியவன் உன்னை நான் கணவனாக ஏற்றுக் கொள்ளுகிறேன். மூன்றுலகிற்கும் நான் உன்னை அதிபதியாக்குகிறேன்."150 இந்த கதையில் பெண் எல்லோரையும் விட வலிமையானவளாக இருப்பதுடன், தாய் அழிக்கப்படுவதை மையமாக கொண்டது இக்கதை. இங்கும் மற்றொரு பெண் தான், ஆண்களைவிட வலிமையான பெண்ணை அழிக்க கோரும் போது, திருமணம் செய்யும் வாக்குறுதியையும், அரசுரிமையையும் ஆணுக்கு அளிக்கின்றாள். பாபிலோனியா வௌவேறு காலகட்ட புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் காலத்துக்கு முந்தியதில் நிறைய பெண் தெய்வ சிலைகள் காணப்பட்டன. அதற்கு பிந்திய கால கட்டத்தில் எந்த ஒரு பெண் சிலையும் அகப்படாமல் ஆண் தெய்வங்களே கிடைத்துள்ளது. இது மாறிவந்த சமூகத்தைக் காட்டுகின்றது. எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற ஆராய்ச்சி நூலையும், அதில் குடும்பத்தின் நிலையைப் பற்றிய ஆய்வுகளையும், தனது சொந்த மார்க்சிய விரோதக் கண்ணோட்டம் என்ற ஒரே நிலையில் மட்டுமே வைத்து மறுக்கின்றனரே ஒழிய, ஏங்கெல்ஸ்சின் ஆய்வுகள் மேல் அல்ல.
அந்த நூலில் எங்கெல்ஸ் செனீகா இராகோஸ்கள் பற்றி எடுத்து எழுதும் ஒரு பகுதியை இதற்கு பதிலாக பார்ப்போம். " "அவர்களுடைய குடும்ப அமைப்பைப் பொறுத்த மட்டில், பழைய நீளமான வீடுகளில் வசித்த பொழுதும்" (சில குடும்பங்களைத் தழுவியிருந்த பொதுவுடைமைக் குடும்பங்கள்) "ஏதாவது ஒரு கிளான்" (குலம்) "அநேகமாக மேலோங்கியிருந்திருக்கக் கூடும் பெண்கள் மற்ற கிளான்களிலிருந்து" (குலங்களிலிருந்து) "கணவன்மார்களைக் கொண்டார்கள்..... பெண் பிரிவே வீட்டில் சகஜமாக ஆட்சி புரிந்தது. சேமிக்கப்பட்ட பொருட்கள் பொதுவிலிருந்தன. தன் பங்குக்குப் பொருட்களைக் கொண்டு வந்து தருவதற்கு வழியில்லாத, துரதிர்ஷ்டம் பிடித்த கணவன் அல்லது காதலன் கஷ்டப்பட வேண்டியதே. அவனுக்கு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்த போதிலும், எத்தனை பொருட்கள் இருந்த போதிலும் எந்த வினாடியிலும் அவனை வெளியேறும்படி உத்தரவிட முடியும். அப்படி உத்தரவிடப்பட்ட பிறகு அதை மீற முயல்வது அவனுக்கே நல்லதல்ல. அந்த வீட்டில் அவன் இனியும் இருக்க முடியாது. அவன் தனது கிளானுக்கு" (குலத்துக்கு) "திரும்பி விட வேண்டியது தான் அல்லது வெளியேறிச் சென்று வேறு கிளானில் புதிய திருமண உறவைத் தொடங்க வேண்டியது தான் - அப்படி அடிக்கடி நடைபெற்றது. பொதுவாக, மற்ற இடங்களைப் போலவே கிளான்களில்" (குலங்களில்) "பெண்கள் தான் பெரும் சக்தியாக இருந்தார்கள். தேவையான சந்தர்ப்பங்களில் தலைவனின் கொம்புகளைத் தட்டியெறிந்து - அதை அப்படித் தான் குறிப்பிட்டார்கள் - அவனைச் சாதாரண வீரர்களின் அணியில் தள்ளுவதற்கு அவர்கள் தயங்கியதில்லை."74
இந்த ஆய்வுகள் 19ம் நூற்றாண்டில் பெண்களின் தொடர்ச்சியின் அதிகாரத்தின் எச்சங்களினை நேரடியாக பார்த்தும் ஆய்வு செய்த கருத்தை மீள முன் வைத்தார் ஏங்கெல்ஸ். "பெண் சுதந்திரமான நிலையிலிருந்தது மட்டுமன்றி மிகவும் மதிப்புமிக்க நிலையை வகித்து வந்தாள்."74 என்று ஆதாரத்துடன் முன்வைத்த ஏங்கெல்ஸ்சை மறுத்து விதிந்துரைப்பது ஏன்? பெண்ணியத்தை முதலாளித்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதும், வர்க்கப் புரட்சியில் இதை மறுப்பதும் இன்று அவசியமாகின்றது.
பெண் மீதான மதிப்பு என்பது பெண்வழி சமூக உருவாக்கமே அடிப்படையானது. பெண்வழி அடையாளம் மட்டுமே சமூகத்தை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததும், பெண்வழி அடையாளத்தால் வளர்ச்சி பெற்ற குடும்ப அமைப்புக்கு, பெண்ணே சமூகத்தின் ஆதாரமாக விளங்கியது. பெண் ஆதாரம், மதிப்பு இல்லை என்றால் சமுதாயமே இல்லை என்ற அளவுக்கு நீண்ட வளர்ச்சிக் கட்டங்கள் நிறுவுகின்றன. அத்துடன் பொருள் உற்பத்திக்கு உரிய உழைப்பு ஆதாரமான மனித உற்பத்தியைச் செய்த பெண்ணின் மதிப்பு என்பது, மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மனித உயிர் வாழ்தலே மனிதனின் போராட்டமாக இருந்த போதும், உழைப்பில் அதிகரித்த கைகளின் தேவையைக் கோரிய சமுதாயத்தில் பெண்ணின் பங்களிப்பு சார்ந்து (குழந்தை உற்பத்தி அச்சமூகத்தின் முக்கிய மூலதனமாக இருந்தது), தாய்வழிச் சமூகமும் பெண்ணை உயர்த்தி வைத்தது.
பெண்வழிச் சமூகத்தில் ஆண் பெண்ணை நோக்கி வருதல் அவசியமாக இருந்தது. இன்றும் எஞ்சியுள்ள தாய்வழி சமூகத்தில், ஆணாதிக்க ஆதிக்கத்தின் உள்ளும் பெண்ணின் நிலை எதை காட்டுகின்றது என ஆராய்வோம். இலங்கைத் தமிழர்கள் தாய்வழிச் சமூகத்தின் வழியில் அதன் எச்சத்தை தொடருவதால் திருமணத்தின் பின் ஆண் பெண் வீட்டில் தங்குவதும், பெண்ணின் தாய்வழிச் சீதனம் பெண்ணுக்கே உரிமையாக இருப்பதும், அக் குடும்பத்தில் பெண் வழியில் பெண்ணே அதிகாரத்தை கொண்டுமுள்ளனர். திருமணம் செய்யும் ஆண் பெண்ணின் சொத்தில் பங்கு கோர முடியாது. குழந்தையை எடுப்பின் பெற்றோர் மற்றும் தாய் வழிச் சீதனத்தின் உரிமை பெண் குழந்தைக்கே உள்ளது. ஆனால் சட்டத்தில் சில வழக்கொழிந்த போதும் மரபு அதை கடைப்பிடிக்கின்றது. இந்த மரபுகளில் இருந்து ஆணாதிக்கம் கோலோச்சிய வரலாற்றில், பெண்ணுக்கு இன்று இருக்கும் உரிமைகள் (பல சிதைந்து வரும் போதும்), கடந்த ஆணாதிக்கத்துக்கு முந்திய சமுதாயத்தில் பெண்ணின் நிலைமையை துல்லியமாக காட்டுகின்றது அல்லவா.
இதே நேரம் பெண்வழி சமூகமாக இருந்த இந்திய தமிழர் (இந்தியாவில்) ஆண்வழிச் சமூகத்தின் ஆதிக்கம் கோலோச்சிய போது, பெண்ணின் நிலை இலங்கைப் பெண்களை விட மிகவும் தாழ்ந்த நிலைக்கு நகர்ந்துள்ளது. இங்கு பெண் திருமணத்தின் பின் ஆண் வீடு நோக்கி செல்வதும், சீதனத்தில் உரிமையை இழந்து போவதும் காணமுடிகின்றது.
இது பற்றி இலங்கை முஸ்லிம் திருமணம் என்ற ஏ.எம். சமீம் எழுதிய நூலில் "மனைவி இறந்தால் அவள் சொத்துக்கள் அவளின் பிள்ளைக்கே சாரும். பிள்ளை இல்லாவிட்டால் தாயையும், தாயின் வழி பெண் வழியுரிமைப் பிள்ளையையும் சாரும். மேலும் ஒருவனுடைய வருமானம் அவன் மனைவியையே சேரும். இச் சமூகத்தில் திருமணத்திற்குப் பின் ஒருவன் தன் சுற்றத்தார்களை விட்டுப் பிரிந்து தன் மனைவியின் குடியுடன் ஒன்றி விடுகிறான் மனைவியின் சொத்துக்குப் பாதுகாவலன் கணவன் அல்ல. அவளது சகோதரர்களும் பிள்ளைகளும் தான் சொத்தைப் பாதுகாக்க உரிமையுள்ளவர்கள். இவர்களது உரிமை வழிச் சட்டமும் தாய்வழி மூலமாகத் தான்..... தாய் இறந்துவிட்டால் அவளின் குழந்தைகள் அவளின் சுற்றத்தாரிடம் வளர வேண்டும் என்பது நியதி."76 என்று பல தரவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த பெண்வழி பெண்ணாதிக்க சமுதாய வளர்ச்சியில் பெண்ணின் நிலைமை, அதன் ஆதிய சமுதாயத்துக்கு கோடுட்டுக் காட்டுகின்றது. ஆணாதிக்கம் கோலோச்சிவரும் போக்கிலும், ஏகாதிபத்திய பண்பாட்டு ஆதிக்கத்திலும் தொலைந்து செல்வதில் சில எச்சங்களே இவை என்பது தெளிவானது.
ஆதிய சமூகத்தில் இயற்கை மீது மனிதன் கொண்டிருந்த மதிப்பு பெண்ணை உயர்ந்த நிலையில் வைத்திருந்தது. பூமி, வானம்... என அனைத்து இயற்கையும் அள்ளி வழங்கிய உயிர் ஆதார பொருட்கள், அழிவுகளின் போது, இயற்கையின் கோபத்தை தணிக்க முற்பட்ட சடங்குகள் எல்லாம் வாழ்வாதாரத்தின் மீதான மதிப்பை, இயற்கை ஏற்படுத்தியது. இது போல் பெண் மனித இனவிருத்தியில் ஈடுபட்டு குழந்தையை உருவாக்கியதும், இதில் ஆணின் பங்குபற்றி சென்ற நூற்றாண்டு வரை தெரிந்திருக்கவில்லை. பெண்ணின் குழந்தை உருவாக்கம், மற்றும் இயற்கை மீதான பெண்ணின் கண்டுபிடிப்பும், அதனூடாக உணவுத் தேவையை பூர்த்தி செய்த வழிகள், பெண்ணின் மதிப்பை இயற்கையை ஒட்டி வளர்த்து எடுத்தது.
கடந்த நீண்ட வரலாற்றில் தனிச் சொத்துரிமை உருவாக முன்பு யுத்தத்தில் வெல்பவன் ஆண்களை கொன்று விடுவதும், பெண்களை சுவீகரித்துக் கொள்வதும் கூட பெண்ணை பாலியல் பண்டமாக அல்ல, பெண்ணின் ஆற்றல் மற்றும் உயர்ந்த நிலையால் தான், சொந்த கூட்டத்துக்குள் உள்வாங்கினர்.
ஆகவே பெண்ணின் உயர் நிலையை பறித்தெடுத்த ஆணாதிக்க வரலாற்றில் உருவான இலக்கியங்கள், எவையும் எமக்கு பெண்வழியில் ஆதாரப்படுத்திவிடாது. ஆணாதிக்கத்தை நிறுவும் போக்கில் பெண் மீதான திட்டுதலாகவும், அடக்குமுறையாகவும் இருக்கும். இவைகளை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பெண்கள் மீது ஆணாதிக்கத்தை நிறுவிய வடிவங்களில் காணமுடியும. இதை நான் மேல் ஆதாரபூர்வமாக விவாதித்துள்ளேன்.
இதை மறுத்து மனித வரலாற்றை ஆணாதிக்க வரலாறாக காட்டும் முயற்சியின் பக்கங்கள் தான் கருதுகோளாக திரிக்கும் வடிவங்கள். இது மட்டும் தான் இயற்கையை அடிப்படையாக கொண்டு சுரண்டலைப் பாதுகாக்கும். இது போன்ற வாதம் ஒன்றைத் தான் சரிநிகர் பத்திரிகையில் புலிகளில் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிய விமர்சனத்தில், பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது தவறு என்று முன்வைக்கப்பட்டது. அதில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடிய மனித வரலாறுக்கு இலக்கிய ஆதாரம் இல்லை என்று வைத்ததன் மூலம் (இதை கீழ் விபரமாக ஆராய்வோம்.) பெண்கள் போராடக் கூடாது என்பதன் ஊடாக இனவாத அமைப்பை பாதுகாக்க அறைகூவலை மறைமுகமாக விட்டனர். இது தான் இங்கு நிகழ்கின்றது.
"சமூக அரசியல் உறவுகளையும் பெண்களே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றோ அல்லது சுயாதீனமான அதிகார அடித்தளத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்றோ கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை" என்ற வாதத்தில் ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தை மிக இலகுபடுத்தி இன்றைய ஆணாதிக்க கண்ணோட்டத்தில் புரிந்து விளக்குவதைக் காட்டுகின்றது. ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தில் அதிகார வடிவமோ, அரசியல் வடிவமோ கிடையாது. அதிகாரம், அரசியல் வர்க்க சமுதாயத்தின் விளைவு மட்டும் தான். இல்லாத ஒன்றை இருந்ததாக காட்டி மறுப்பது உண்மையில் இன்றைய ஆணாதிக்கத்தை பாதுகாப்பது தான். ஏனெனின் பெண்களின் தலைமையில் இருந்த பொதுவுடமை சமுதாயத்தை திரித்து மறுப்பதன் மூலம், அதை அடைவதை நோக்கிய போராட்டத்தை சிதைப்பதாகும். இதில் இருந்தே ஏங்கெல்ஸ்சின் ஆய்வை கருதுகோள் மட்டுமே என்கின்றார்.
ஆதிப் பொதுவுடமை சமூகம், பெண்ணின் தலைமை போன்றன ஒரு கருதுகோள் மட்டுமே என்கின்ற வாதங்கள் பின்நவீனத்துவத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து வீசும் நாற்றமாகும். கருதுகோள்கள், கேள்விகள், மறுவாசிப்புகள், முடிந்த முடிவுகள் எதுவுமில்லை, பெரும் தத்துவத்துக்கு எதிரான சிறு தத்துவங்கள் எல்லாவற்றையும் கூட்டியள்ளி வைக்கும் நரித்தனமான பின்பக்க விவாதம் தான் இவை.
ஆணாதிக்க வரலாற்றில் பெண்கள் ஆண் வீடு நோக்கி செல்வது பண்பாகியது. கால்நடை வளர்ப்பை அடிப்படையாக கொண்டு அலைந்து திரிந்த பிரிவுகளில் தான் முதல் ஆண்வழி சமூகம் தோன்ற, உழைப்பின் வடிவம் காரணமாக இருந்தது. நிரந்தரமான இருப்பிடம் அற்ற இப்பிரிவுகளில் இருந்தே ஆண் வழிச் சமூகம், திருமணத்துக்காக பெண் ஆணை நோக்கிச் செல்வது வளர்ச்சி பெற்றது. அண்ணளவாக கி.மு 1000 முதல் 1500 வருடத்தில் எழுதப்பட்ட ரிக்வேதத்தில் இடையர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்து இன்று அழிந்து போன கடவுளான பூஷா அருள் பற்றிய செய்தியில் "மணமகளுக்கு கணவர் வீடு செல்லும் போது பாதுகாப்பு அளிப்பது"122 என்ற செய்தி ஆண் வழிச் சமூகத்தின் இயல்பைக் காட்டுகின்றது. பார்ப்பனியம் கால்நடை வளர்ப்பையொட்டிய ஈரான் பகுதிகளில் இருந்து குடிபெயர் சமூகமாக இருந்ததால், நிரந்தரமாக தங்கி வாழ்ந்த பெண்களை இடப்பெயர்ச்சியில் ஆணை நோக்கி நகர்த்துவது அவசியமாக உழைப்பு கோரியது. ஏனெனின் கால் நடை வளர்ப்பு ஆணின் தொழிலாக இருந்தது அல்லவா. முதல் ஆண் வழிச் சமூகங்கள் கால்நடை வளர்ப்பை இடப் பெயர்ச்சியில் கொண்டிருந்த சமூகங்களிலேயே ஏற்பட்டது.
இந்த பார்ப்பனியத்தின் ஆணாதிக்க வரலாறு, கடந்த இந்திய வரலாற்றில் கோலோச்சிய போது அங்கு இருந்து நேரடியாக பெண் வழிச் சமூகத்தை தேடுவது சாத்தியமில்லை.. இலக்கிய ஆதாரங்கள் என்பது கடந்த 3000 வருடத்துக்கு உட்பட்டவை மட்டுமே. தனிச்சொத்துரிமையின் வரலாற்றில் பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை நியாயப்படுத்தி வந்த இலக்கியத்தில் நேரடியான ஆதாரம் திரட்ட கோருவதும், அதில் இல்லை என்ற காரணம் காட்டி அதை கருதுகோள் ஆக்குவதும் நகைப்புக்குரிய சூனிய அறிவாகும்.
மனித வரலாற்று ஆய்வுகள், இலக்கிய ஆதாரங்களில் மட்டுமே அடிப்படையாக கொண்டவையல்ல. இது மட்டும் தான் எனின் வரலாற்று ஆய்வு என்பது கற்பனையானது. 3000 வருட மனித ஆயுள், மனித வரலாற்றில் வினாடிகளுக்கே சமமானது. அப்படி எனின் 3000 வருடத்துக்கு முந்திய வரலாற்றை எப்படி ஆய்வு செய்வது? ஆய்வே செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதே இலக்கிய ஆதாரம் கோரும் கோட்பாட்டின் உள்ளடக்கம். மாறாக மனித வரலாற்றில் உழைப்பின் இயங்கியல் வளர்ச்சி பற்றிய விதி தான், மனித வரலாற்றை ஆய்வு செய்யும் அடிப்படையானதாகும். இதனுடன் பல்வேறு துறை சேர்ந்த பல்துறையிலும் ஆய்வுகள் துல்லியமானதாக இருக்கின்றது. இலக்கிய சான்றுகள் மட்டுமே மனித வரலாற்றை நிறுவ போதுமான கருதுகோளாக்கும் அந்த நிமிடமே, இந்த விவாதத்தின் அடித்தளம் தகர்ந்து போகின்றது. அறிவற்ற மூடத்தனத்தில் முன்வைக்கும் குறுகிய பார்வை கொண்டவர்கள், தனிச் சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்க வரலாற்றில் (3000 வருடமாக) வெளி வந்த இலக்கியத்தில் இருந்து, மனித வரலாற்றை திரித்து கூறும் கருதுகோள்கள், இன்றைய ஏகாதிபத்திய அமைப்பை பாதுகாக்கும் கண்ணோட்டத்தில் வெளிவருகின்றது.
அடுத்து 3000 வருட இலக்கியம் மீதான திரிபில் ஆராய்வோம். இலக்கியம் பெண்ணின் முந்திய நிலையை வெளிப்படுத்தவில்லையா? எனின் நிச்சயமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆங்காங்கே சிறு சிறு விடயங்களாக, எச்ச சொச்சங்களாக, ஆணாதிக்கத்தை நிறுவும் போராட்டத்தில், தனிச் சொத்துரிமையை கட்டமைக்கும் போராட்டத்தில் என எங்கும் நிரவிக் கிடக்கின்றது. இங்கு தேவை வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட விமர்சன ஆய்வு முறையாகும். இதை இந்த நூல் கொண்டிருக்கவில்லை.
வேதம் மற்றும் மனுவின் சட்டதிட்டத்திலும், கௌடில்யர் கால சட்டதிட்டத்திலும் (பார்க்க மேல் உள்ள விமர்சனத்தை), பைபிள், குர்ஆன், திருக்குறள், சிந்துமுதல் கங்கைவரை மற்றும் இந்து மதக் கதைகள், நாட்டுப்புற இலக்கியத்தில் என உலகெங்கும் பல்வேறு இலக்கியத்தில் மாறிவந்த சமுதாயப் போராட்டத்தில், பெண் அடிமைப்படுத்திய வடிவில் பல்வேறு தரவுகளை தொகுத்தளித்துள்ளது. அத்துடன் 18,19ம் நூற்றாண்டுகளில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு இனக்குழுக்களுக்கிடையில் நிலவிய பெண்ணின் உயர்ந்த தன்மையை ஆய்வாளர்கள் தெளிவாக வெளிக் கொண்டு வந்துள்ளனர். இது ஒரு கருதுகோள் அல்ல. ஆய்வுகள் மிகவும் துல்லியமாக்கியுள்ளது. உழைப்பை ஒட்டிய கருவிகளின் கண்டுபிடிப்புகள், எஞ்சிய எலும்புகள், 30000,40000 வருடத்துக்கு முந்திய குகை ஒவியங்கள் எல்லாம் மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக்கியுள்ளது. இந்தியாவில் ஆரிய மரபு தான் இலக்கியத்தில் உண்டு திராவிட மரபு இல்லை அல்லது ஆரியத்தில் இருந்து திராவிடத்துக்கு வந்தது என்ற பல்வேறு ஆதிக்க கருத்து போல் தான், பெண்ணின் தலைமையிலான சமூக அமைப்பை நிராகரிக்கின்றனர்.
சிந்துமுதல் கங்கை வரை என்ற கல்வெட்டு நூலில் (கடந்த 3000 வருட வாழ்க்கைக்கு உட்பட்ட நூல் தான்) பல்வேறு சமூக அமைப்பு பற்றிய செய்திகள், அனுபவங்கள் யதார்த்தக் கண்ணோட்டத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இதில் வரைமுறையற்ற புணர்ச்சி முதல் இணைமணம், ஒருதார மணம் பற்றிய நடைமுறை சார்ந்த வாழ்க்கை கருத்துகள், மற்றைய சமூகம் பற்றிய விவாதங்களை உள்ளடக்கி இவ் செங்கல் நூல் புதை பொருள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் முக்கியத்துவத்தை, வரலாற்று பக்கத்தில் இருந்து திட்டமிட்டே மறைக்கப்படுகின்றது.
ஏங்கெல்ஸ்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் கூட 60 க்கு மேற்பட்ட கடந்த கால இலக்கிய ஆதாரத்தை முன்வைத்துள்ளார். இந்த வகையில் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். "ரோமாபுரி நிறுவப்பட்டு 568 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.மு 186 இல் செனெட் பின்வருமாறு உத்தரவிட்டது: "ஃபெஸெனியா ஹிஸ்பால்லாவுக்கு தனது சொத்தை முடிவு செய்யும் உரிமையுண்டு, அதைக் குறைக்க உரிமையுண்டு, குலத்துக்கு வெளியே மணம் புரிய உரிமையுண்டு. தனது (மரணமடைந்த) கணவன் உயிலின் மூலமாக இந்த உரிமையைக் கொடுத்திருப்பதைப் போல் அவள் இப்படி நடந்து கொள்ளலாம். அவள் சுதந்திரமான நபரை மணம் புரிவதற்கு அனுமதிக்கப்படுவாள் மேலும், அவளை மணம் புரியும் ஆணுக்கு இதனால் கெட்ட நடத்தைப் பழியும் அவப்பெயரும் சேராது."74 இது சட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் நிலைமைகள் மாறி வந்த காலகட்டத்திய இலக்கியங்கள் சட்ட திட்டங்களை விமர்சன ப+ர்வமாக அணுகும் போது, முந்திய சமுதாயத்தை காண முடியும். ஏங்கெல்ஸ் தனது ஆய்வில் பாஹொஃபென் பண்டைய கால மூலச் சிறப்பான இலக்கியத்தில் இருந்தே, 1861ல் கண்டறிந்து முன் வைத்த ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் ஆரம்ப நிலையைக் கண்டறிந்த முதல் ஆய்வு நூல் என்பதை குறிப்பிடுகின்றார். பெண்ணின் வரலாற்று நிலையை முதலில் கண்டறிந்து வெளி வைத்த முறை இலக்கியத்தில் இருந்தே தொடங்குகின்றது. ஆனால் அது சமுதாயத்தின் பல்வேறு துறைகளை உள்ளடக்கி ஆராயாமையால் குறைபாட்டையும், தவறையும் கொண்டே வெளிவந்தது.
இலக்கியத்தின் உள்ளாற்றல் என்பது தனிச் சொத்துடமையின் மேல் உருவானது என்பதால், அது ஆணாதிக்க யதார்த்தத்தை கொண்டிருந்தது. இதில் தான் தனிச் சொத்துரிமையை பாதுகாக்க அதையொட்டி உருவான ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த ஆணின் உரிமை கோரப்படும், போது பெண்ணின் கடந்த கால உரிமைகள், எதிர்ப்புகள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. இதை விமர்சன பூர்வமாக அணுகுகின்ற போதே முழுமையான பெண்ணின் இயற்கை வரலாற்றை ஒட்டிய பெண்ணின் மதிப்பார்ந்த வடிவத்தை வந்தடையமுடியும்.
மார்க்சியம் உழைப்பின் வளர்ச்சி, மற்றும் குரங்கில் இருந்து பிரிந்து வந்த மனிதக் குரங்கு மற்றும் மனிதனின் வளர்ச்சி விதி, அதில் உழைப்பின் பாத்திரம் என்ற தொடர்ச்சியில் இருந்து தான் இதை நிறுவுகின்றது. டார்வினின் கண்டுபிடிப்பான குரங்கில் இருந்து மனிதக் குரங்கும் அதில் இருந்து மனிதன் என்ற பரிணாமத் தத்துவம் சரி, பழைய காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மிருகங்கள் பற்றிய ஆய்வுகள் ஒரு கருதுகோள் அல்ல. இயற்கையின் தோற்றம், வான்வெளியில் காணப்படும் 200 கோடி சூரியன்களும் அதைச் சுற்றி வரும் கோள்களும், அதன் தோற்றம் வளர்ச்சி போன்றன எல்லாம் கருதுகோள் அல்ல. இயற்கை வரலாற்றை மறுத்து மனித வரலாற்றை இயற்கை வரலாறாக காண்கின்ற போது இயற்கையான உலகம் மறுக்கப்படுகின்றது. சுரண்டல் வரலாற்றை மனித வரலாறாக காட்டும் போது மனித வரலாறு மறுக்கப்படுகின்றது. இதை உள்ளடக்கியே இலக்கிய ஆதாரம் கோருவது உதித்தெழுகின்றது. அண்மையில் 2000 ஆண்டு கொண்டாட்டம் எல்லாம் இதற்கு உட்பட்ட வரலாற்று திரிபாகும். மனிதன் பற்றிய ஆய்வுகள் சரி, அனைத்து இயற்கை ஆய்வும் சரி அதன் வளர்ச்சி விதியின் எல்லா இடைநிலைகளையும் நிறுவி நிறுவப்படுகின்றது. பெண்ணின் நிலையும் இதன் வழியில் தொடர்ச்சியாக எல்லா இயற்கை மற்றும் மனிதக் கண்டுபிடிப்புகள் முரணின்றி தொடர்ச்சியாக நிறுவிவருகின்றது. ஆனால் ஏகாதிபத்திய அமைப்பும் ஆணாதிக்கமும் இதை திட்டவட்டமாக மறுக்கின்றது. இதை கோட்பாட்டளவில் கருதுகோளாக மாற்றி நடைமுறைப் போராட்டத்தை சிதைக்கின்றது.
மேற்சொன்ன கருத்தைத் தொடர்ந்து வைக்கும் வரியைப் பார்ப்போம். "பெண்கள் சொத்துரிமை முறைமையும், தாய்வழிக் குடிமரபும் சமூக நீதியில் ஒரு வகை சமத்துவம் நிலவியதற்கான சான்றுகளும், வெளிப்படையான பாரபட்சம், அடக்குமுறை என்பன காணப்படாமையும் பெண் ஆதிக்கம் செலுத்தி அதிகாரம் செய்த ஒரு சமூக அமைப்பு ஒன்று நிலவியது என்பதற்குரிய சான்றுகள் என இம் மானிடவியலாளர்கள் நம்பினர்."75 என்று திரிக்கின்ற போதே இப்புத்தக நோக்கம் அம்பலமாகின்றது. "பெண் ஆதிக்கம் செலுத்தி அதிகாரம்" கொண்ட பெண்கள் அமைப்பு நிலவியது என்று ஏங்கெல்ஸ் எங்கு, எப்போது குறிப்பிட்டுள்ளார். ஆதிக்கம், அதிகாரம் போன்ற சொற்களின் உள்ளடக்கம் வர்க்க சமுதாயத்துக்கே உரிய வடிவமாகும். நிலவாத ஒன்றை நிலவியதாக ஏங்கெல்ஸ் பெயரில் காட்டி மறுப்பதன் நோக்கம் என்ன. ஆதிக்கம், அதிகாரம் வர்க்கத் தன்மை கொண்டவை. வர்க்கத்தைக் கடந்து இது நிலவ முடியாது. ஒருவகை சமத்துவம் என்பது என்ன? பெண் ஆதிக்கம் செலுத்த அதிகாரம் கொண்டிருந்தாக ஏங்கெல்ஸ் கருத காரணமாக இருந்தது எனக் குறிப்பிடும், வெளிப்படையான பாரபட்சம், அடக்குமுறை இன்மையே காரணம் என்று விரும்பியவாறு எல்லாம் திரித்து புரட்டி விளக்குகின்றனர்.
பாரபட்சம், அடக்குமுறை போன்றன கூட வர்க்க சமுதாயத்தின் விளைவுதான். உழைப்பின் மீதான சுரண்டல் அமைப்பு உருவாகாத சமுதாயத்தில் பாரபட்சம், அடக்குமுறை, ஆதிக்கம், அதிகாரம் எல்லாம் கற்பனையானது. இந்த இடத்தில் ஏங்கெல்ஸ் தனது நூலில் "பாஹாஃபெனுடைய கருத்தின்படி, பெண்களின் பரிபூரண ஆட்சி ஏற்படுகின்ற அளவுக்கு அந்த மரியாதை உயர்ந்திருந்தது."74 என்கின்றார். பரிபூரணமான ஆட்சி என்பதைக் கூட ஏங்கெல்ஸ் கையாளும் போது குறிப்பிட்டவரின் கருத்து என்பதை குறிப்பிட்டு மிகவும் அவதானமாக கையாள்வதைக் காட்டுகின்றது. ஏங்கெல்ஸ் உழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி, அதில் உழைப்பின் வகையில் இருந்தே இனப்பெருக்கம், உழைப்பின் தன்மையைக் கொண்டே (உறவைக் கொண்டே) பெண்ணின் தலைமையை உறுதி செய்தார். இதை ஏங்கெல்ஸ "... குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாக சொல்லலாம்... ஆகவே பெண்வழி மட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ...ஆண்கள் பல்வேறு குலங்களிலிருந்து வந்தவர்கள். பூர்வீக காலத்தில் பெண்கள் எல்லா இடங்களிலும் மேலோங்கிய நிலையில் இருந்து வந்ததற்கு எதார்த்த அடிப்படை இதுவே"74 என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகின்றார். அத்துடன் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய காலத்தில் காட்டுமிராண்டித்தனத்தில் எல்லையில் குழுவிற்குள்ளான உறவில், ஆண் பெண்ணின் உழைப்பின் ஒரே தன்மையைத் தாண்டி, பெண்ணின் தாய்மை காரணமாக அவள் சமுதாய விருத்தியில் இயற்கையின் அன்னையானாள். இந்த இயற்கையை அடிப்படையாக கொண்ட மதிப்பு, பெண்ணை உயர்ந்த நிலைக்கு மதிப்புக்குள்ளாக்கியது. இயற்கையை வழிபட்ட மனிதன் இயற்கையின் இன்னுமொரு வடிவமாக பெண்ணை காண்பதும் மதிப்பதும் இயற்கையல்லவா. அத்துடன் இதை முதலில் பழைய இலக்கிய புராணங்களில் இருந்துதான் நிறுவியது என்பது இந்த விவாதத்தில் சிறப்பு அம்சமாகும். இதற்கு வாழ்ந்து வந்த சமுதாயத்தில் நிலவிய தொடர்ச்சிகள் பலவற்றையும் தனது ஆய்வில் மேலும் துல்லியமாக வெளிக்கொண்டு வந்தார். இதை மறுத்து முன்வைக்கும் வாதத்தில் வெளிப்படை, மறைமுகமெல்லாம் கைதேர்ந்த மோசடிச் சொற்களாகும். அத்துடன் ஒரு சமுதாயத்துக்கு இருக்கமுடியாத பண்புகளை பிளவுபடுத்தி அதை முரணாக்கி ஏங்கெல்ஸ் பெயரில் ஆணாதிக்க உலகத்தை முண்டுகொடுப்பது, கைதேர்ந்த ஏகாதிபத்திய அடக்குமுறைக்காக சோடிக்கப்படும் திரிபு வடிவிலான மோசடியாகும்.
இதை மேலும் ஆராய்வோம். "மார்க்சிய அடிப்படை ஒன்று இருந்தாலும் அதை மீறிய ஒரு தேடலும் உண்டு. சமூகப் பரிமாணங்களை, பொருளாதார அரசியல் உருவாக்கங்களினூடாக விளக்க முற்படுகின்றது. அதே சமயம், வர்க்கம், சாதி என்ற பிரிவுகளுக்கூடாக கலாச்சார கட்டுமானங்களை இனம் கண்டு அரசியல் பொருளாதார உருவாக்கங்களுக்கும் கலாச்சார கட்டுமானங்களுக்கும் உள்ள தொடர்பினையும் தொட்டு நிற்கின்றது... வரலாற்றையும் மானிடவியலையும் இணைத்து மார்க்சிய நெறிமுறையில் பெண்நிலை நோக்கில் செய்யப்பட்ட இவ்வாய்வு ஒரு முதல் நிகழ்ச்சியாகவே கொள்ளப்பட வேண்டும். முடிந்த முடிவுகளாக சமூக விஞ்ஞான களத்தில் நாம் எதையும் கொள்ள முடியாது. நாம் செய்த இவ்வாய்வு இன்னும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும் என்பதே எனது எண்ணம்."75 என்று மிக கவனமாக தெரிவு செய்த வரிகள் மூலம் மூடிமறைத்தபடி மார்க்சியத்தை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. இயங்கியலின் வளர்ச்சி விதியை மறுக்காது கவனமாக தேர்ந்தெடுத்து, முடிவுகளை வளர்த்தல் என்ற போர்வையில் மார்க்சியத்தை மறுப்பது கோரப்படுகின்றது. இதை ஆய்வுக் களத்தில் முன்நிறுத்தியதன் ஊடாக நடைமுறை வடிவம் சிதைக்கப்படுகின்றது. எந்தக் கோட்பாடும் நடைமுறையில் தான் சரி பார்க்கப்படுகின்றது, வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பதை மௌனமாக்கியதன் மூலம், கண்டறிந்த உண்மைகளை நடைமுறையில் ஏற்றுக் கொண்டு "முடிந்த முடிவுகளாக" கொண்டு போராடக் கூடாது என்பதன் ஊடாக மறுக்கின்றது. மார்க்சியம் கண்டறிந்த உண்மைகளை மறுத்து நிறுவாத வரை எப்போதும் அதுவே சமுதாயத்தின் உண்மையாகவும், நடைமுறைத் தத்துவமாகவும் இருக்கின்றது, நீடிக்கின்றது. நடைமுறையில் போராடுபவன் எப்போதும் கண்டறிந்த உண்மைகளின் மேல் நின்று சமூகத்தை மாற்றுகின்றான். ஆனால் நடைமுறையில் போராட மறுப்பவர்கள் எப்போதும் முடிந்த முடிவுகளாக எடுக்க முடியாது, கேள்விகளை எமது அரசியல் எனக் கூறிக் கொள்வதன் ஊடாக, நடைமுறைப் போராட்டத்தை திட்டமிட்டு மறுப்பதுடன், நடக்கும் போராட்டத்தை சிதைத்தும் ஆணாதிக்க உலகமயமாதலுக்கு கம்பளம் விரிக்கின்றனர். ஆனால் மார்க்சிய சில அடிப்படை உள்ளடக்கம் மாற்றப்பட முடியாதவை. அது மாறுகின்ற போது அது மார்க்சியமாக இருப்பதில்லை அல்லது அது வழக்கொழிந்து போகின்றது. வரலாறு மற்றும் மானிடவியலை அக்காலத்துக்கேயுரிய இயற்கை மற்றும் வரலாற்றின் மீதே மார்க்சியம் அணுகுகின்றது. இதில் இருந்தே அடிக்கட்டுமானமான பொருளாதாரமே சமுதாயத்தின் அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்ற மார்க்சியத்தின் அடிப்படையான உள்ளடக்கம், எப்போதும் முடிந்த முடிவுதான். இதை மாற்றவோ, விளக்கம் சொல்லவோ, இது ஆய்வுக்குரியது என்று சொல்லும் மூடிமறைத்த மார்க்சிய விரோத அலங்கார சொல்வாதங்கள் பின்னால் புதைந்து காணப்படுவது பாட்டாளிவர்க்க விரோத கண்ணோட்டமாகும். பூமி தட்டை அல்ல என்பது முடிந்த முடிவுதான். இது கருதுகோளாக இருக்க முடியாது. இது போல்தான் மார்க்சியத்தின் அடிப்படை உள்ளடக்கமும். பொருளில் இருந்து சிந்தனை தோன்றுகின்றது என்பது, முடிந்த முடிவுதான். இல்லையென்றால் அது கருத்து முதல்வாதமாகும்.
"மார்க்சியத்தை மீறிய ஒரு தேடல் உண்டு" எனின் இவ் ஆய்வின் வர்க்கத் தன்மை என்ன? வர்க்கம் கடந்த பெண்ணிய ஆய்வு இருக்கமுடியுமா? "வரலாற்றையும், மானிடவியலையும்", "பொருளாதாரத்தையும்" மீறிய முடிந்த முடிவாகாத ஆய்வு எந்த வகையானது? அதன் உள்ளடக்கம் என்ன? உண்மையில் இக் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்கும் தகுதி, இதை முன்வைக்கும் யாரிடமும் இருப்பதில்லை. முதலாளித்துவ பெண்ணின் பூர்சுவா நலன்களையும், ஏகாதிபத்திய பெண்ணிய நலன்களையும் உள்ளடக்கிய வடிவில் மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கும் கோரிக்கையாகி அடிப்படையான ஆய்வாகின்றது. இது மார்க்சியத்தை நேரடியாகவும், மூடிமறைத்தும் மறுக்கின்றது. அடுத்த திரிபை பார்ப்போம்.
"இயற்கையை ஆழ்ந்து அவதானிப்பவர்கள் என்ற வகையில் பொதுவாகவே அவர்களால் (பெண் மதகுருக்கள்) எதிர்காலத்தை முன்கூட்டி அறியமுடிந்தது. எதிர்வரும் மழை வீழ்ச்சி பற்றியும் கூற முடிந்தது."75 இந்த வாதத்தில் மிக நாசுக்கான முடிந்த முடிவாக கருதுகோள் தாண்டி, கருத்துமுதல்வாதம் திணிக்கப்படுகின்றது. அத்துடன் திருவள்ளுவர் குறிப்பிட்ட கற்புள்ள பெண் மழை பெய் என்றால் பெய்யும் என்ற உள்ளடக்கம், இந்த கருத்துமுதல்வாத ஆணாதிக்கத்தின் பின்னால் ஒழிந்துகிடக்கின்றது. ஆணாதிக்க கற்புக்கும், மதகுருவால் மழையை முன்கூட்டியே கூறும் ஆற்றலுக்கும், கோடுபிரிக்க முடியாத தொடர்பு உண்டு. பெண்களின் நிலையை விளக்க கடந்த கால இலக்கிய ஆதாரம் எதுவும் இல்லை என்று வாதாடிய பின், பெண்ணின் மதிப்பை எடுத்துக்காட்ட கையாளும் இலக்கிய வாதத்தில் சொந்த வர்க்கக் கண்ணோட்டத்தை நிர்வாணமாக வெளிப்படுத்துகின்றார். "எதிர்காலத்தை முன்கூட்டியே அறியமுடிந்தது" என்பது இன்றைய பார்ப்பனிய மற்றும் மதக் கூட்டத்தின் முன்கூட்டியே அறியும் வக்கிரங்களை மறைமுகமாக அங்கீகரிப்பதாகும். நவீன விஞ்ஞானமே எல்லா மாற்றத்தையும் முன் கூட்டி சொல்ல முடியாது போயுள்ளது. அதாவது பொருள் (நிகழ்ச்சிக்கான சூழல்) உருவாகாமல் விஞ்ஞான விளக்கமே சாத்தியமில்லை. அப்படி இருக்கும் போது எப்படி மந்திர தந்திரத்துக்கு முடியும். இது கருத்துமுதல்வாதமாகும். "இயற்கையை ஆழ்ந்து அவதானிப்பதன் மூலம்" என்ற தேர்ந்த மோசடி வரிகளை இணைத்ததன் மூலமே, முன்கூட்டி அறிய முடிந்தது என்ற வாதம் கருத்துமுதல்வாதத்தை இயற்கையுடன் இணைக்கும் நஞ்சு வேர்களாகும். மனிதன் பருவகாலத்தையும், மாறிவந்த சூழலையும் வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் மீது இயற்கையாகவே பெற்றான். மழை தொடக்கம் அனைத்து நிகழ்ச்சிகளையும் அதன் இயல்பின் சில தன்மைகளை புலனுணர்வுக்கு, உட்பட்ட போதே முன்கூட்டி உணர்ந்தான். இதை மிருகங்கள் கூட அவதானித்து செயல்படுகின்றன. புலனுணர்வுக்கு ஏதோ ஒருவகையில் பொருள் சார்ந்து புலப்படாத எந்த நிகழ்ச்சியையும் அவன் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் முடிந்தது என்பதையே "எதிர்காலத்தை முன்கூட்டி அறியமுடிந்தது" என்ற வாதம் மூலம் முன்வைக்கப்படுகின்றது. அன்றைய மனிதன் பருவ மற்றும் கால மாற்றத்தையும் சூழல் சார்ந்து புலனுணர்வுக்கு உட்பட்தை அவதானித்து கூறியவனை, எதோ ஒருவகையில் அவன் அழைப்பதையிட்டு எமக்கு ஆட்சேபனை இருப்பதில்லை. ஆனால் பொருள்முதல் வாதம் இவைகளுக்கான காரண காரியத்தை வெளியிடுகின்ற போது அதையும் கருதுகோளாக் "கூறமுடிந்தது, அறியமுடிந்தது." என்று மறைமுகமாக கருத்து முதல்வாதத்தை மீள நிறுவுவது அபத்தமாகும்.
மிருகத்தின் வருகையை நுகர்வதன் மூலம், மிருகத்தை தொடர தடங்கள் மூலம், செடிகளின் அசைவின் இயக்கதில் இருந்து சென்ற மிருகத்தை, எரிகின்ற காட்டு வெப்பம் மற்றும் மணம் மூலம், மனித மற்றும் மிருக எதிரியை மணத்தைக் கொண்டும், முகிலையும், காற்றின் ஈரப்பதனை கொண்டும் மழை என மனிதனின் உழைப்பு மற்றும் சூழலை அடிப்படையாக கொண்டு ஆண், பெண் வேறுபாடு இன்றி சூழலை வெளிப்படுத்தினான். இதில் ஆண் பெண் தமது உழைப்பு பிரிவினையில் வேறுபட்ட வகையில் சிறப்பு தகுதியையும் பெற்றனர். அது அனுபவவாதம் மற்றும் பழக்க தோசங்கள், இயற்கை மாற்றம் போன்ற அனைத்தையும் புலனுணர்வுக்கு உள்ளாக்கி வெளிப்படுத்தினான். இது பொய்த்துப் போவதும் உண்டு. ஆனால் இதை சிறப்பாக முன்கூட்டி வெளிப்படுத்தியவர்கள் மதிக்கப்பட்டனர். இதில் இருந்தே புரோகிதர் என்ற பிரிவு உருவாகின்றது. இது தனது வாழ்க்கையை சொகுசு தனத்தில் உழைப்பில் இருந்து அன்னியப்படுத்திய போது, இயற்கை சார்ந்த புலனுணர்வை சிதைத்து கற்பனையான மந்திர தந்திர வழிபாடுகளை முன்வைத்து, சமூகத்தினை தமக்கு சேவகம் செய்ய அடிமைப்படுத்துகின்றனர்.
இன்று பெண்கள் எதுவுமற்ற அறிவற்ற சூனியமான மூடர்கள் என்ற ஆணாதிக்க வாதத்தை தகர்க்க, பெண்ணின் அறிவார்ந்த கடந்தகால சமூக மதிப்பீட்டை எடுத்து வைப்பதும், அதை முன் கொண்டு வருவதும் அவசியமாகும். இதை வர்க்கப் போராட்டம் தனது இயற்கை மற்றும் வரலாற்று இயங்கியல் ஊடாக செய்வதை கோருகின்றது. ஆனால் அன்றைய மனிதன் பொருள்முதல்வாதத்தில் இருந்து அவதானித்ததை, கருத்துமுதல்வாத நிலைக்கு தாழ்த்தி அற்புதமாக்குவது கேவலமாகும். எதிர்கால மழை வீழ்ச்சியை எப்படி முன்கூட்டி கூற முடியும். முகில் மற்றும் ஈரப்பதனான காற்று போன்ற பொருள் சார்ந்த காரணத்தைத் தாண்டி யாரும் மழையை முன்கூட்டி கூறமுடியாது. புலனுணர்வு சார்ந்து அனைவராலும் இதை முன்கூட்டி வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் இதை கருத்துமுதல்வாத நிலையில் மந்திர தந்திர சடங்குகள் மூலம் பிழைத்த பிரிவுகளை (சாத்திரம் பார்ப்பவன் போல், "உரு" வரும் பெண் கூறுவது போல்) வைத்து கருத்துக் கூறுவது அபத்தமாகும். நவீன விஞ்ஞானம் கூட முகில், அதை சார்ந்து காற்றின் போக்கைத் தாண்டி முன்பே மழையை கூறமுடியாது உள்ளது அல்லவா. அப்படியிருக்க எப்படி இயற்கை அவதானம் மீது மழையை முன்கூட்டி கூறமுடியும். கூறமுடியாது. மாறாக வேண்டுமெனின் பெண்களும் பிழைக்கும் மந்திர தந்திர மோசடிகள் ஊடாக இயற்கையின் புலனுர்வை கொண்டு இருந்தனர் எனக் கூறலாம். விவசாயம் மீதான பெண்களின் அறிவை, கண்டுபிடிப்பை எடுத்துக் காட்ட முன்வைக்கலாம். ஆனால் பெண்கள் பொருளைக் கடந்து சக்தி வாய்ந்தவர்களாக இருக்கவில்லை. புலனறிவுக்குட்பட்டவராக மதிப்புடன் திகழ்ந்தனர் எனக் கூறலாம். இந்த புலனுணர்வு அறிவு எதிர்கால நிகழ்ச்சியை இதற்குட்பட்டு கூறமுடிந்ததே ஒழிய அதைத்தாண்டி அல்ல. எதிர்காலத்தை பற்றிய நிகழ்ச்சிகள் முன்கூட்டி பொருள் சார்ந்து உருவான போதே புலனுணர்வுக்கு உட்பட்டு வெளிப்பட்டனவே ஒழிய, அதைத் தாண்டி பொருளின்றி எதிர்காலத்தை கூறிய போது மோசடியும் ஏமாற்றும் அதில் புதைந்து கிடந்தது. இதையே இக்கட்டுரை வரிகள் நியாயப்படுத்துகின்றது. "மழை தொடர்பான சடங்கு" நடத்தப்பட்டதன் வழியில் "எதிர்வரும் மழை வீழ்ச்சி பற்றியும் கூற முடிந்தது" என்று அறுதியிட்டுக் கூறும் போதே, கருத்துமுதல் வாதம் நியாயப்படுத்தப்படுகின்றது. சடங்குகள் எப்போதும் கோரிக்கையாக இருந்தனவே ஒழிய, முன்கூட்டியே கூறுபவையாக இருக்கவில்லை. இதுதான் பொருள் முதல்வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் அடிப்படையான வேறுபாடுடாகும். நடைமுறையில் பெண்கள் முன்கூட்டியே கூறாது, சடங்குகள் மூலம் கோருவதை எப்படி செய்கின்றனர் எனப் பார்ப்போம். "சேலம் மாவட்டத்தில் மழை வேண்டி அதிக குழந்தை பெற்ற பெண்களும், கன்னிப் பெண்களுமாக மொத்தம் ஏழு பேர் இணைந்து, உடலில் ஆடை ஏதுமின்றி வட்டமாக தமது பின் பகுதியை தட்டிக் கொண்டு ஆடுகின்றனர். இங்கு பெண்களும் குழந்தைகளும் மட்டும் இருப்பர், இங்கு ஆண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கு பெண் உறுப்பின் இயற்கையான பிறப்பின் ஆற்றலை போன்று, வானத்தின் மழையாற்றலைக் கோரி இச் சடங்கு நடை பெறுகின்றது. இது தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டத்தில் நிகழ்வதாக தெரிகின்றது.
இது போன்று பெண்கள் மழையைக் கோரி மழைக்கஞ்சி காய்சுவது நிகழ்கின்றது. இதிலும் பெண்கள் வீடுவீடாக அரிசியை பிச்சையாக பெற்று கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பர். அத்துடன் மழை இல்லாது போனால் தாம் இறக்க நேரிடும் எனப் புலம்பி இடுகாடு செல்ல, மற்றொரு பிரிவு மழைவரும் எனக் கூறி அழைத்து வரும் சடங்கு நிகழ்கின்றது. அடுத்த நாளே மழை வரும் என்ற நம்பிக்கையை இச் சடங்குகள் வெளிப்படுத்துகின்றன."120 இங்கு இச்சடங்குகள் நம்பிக்கையை வெளியிடுகின்றன. தமது சொந்த வாழ்வின் அடிப்படையான தேவையை முன்வைத்து கோரும் போது, இது கற்பனையான கருத்துமுதல்வாதமல்ல. வாழ்க்கை மீதான நம்பிக்கையை, இயற்கை மீதான வேண்டுதலை சடங்காக்கும் போது, மனிதன் இயற்கை சார்ந்த பொருள் முதல்வாதியாக திகழ்கின்றான். ஆனால் மழை வரும் என முன்கூட்டியே சொல்லும் சக்தியை பெண்கள் (பூசாரிகள்) பெற்றிருந்தனர் என்பது, கருத்துமுதல்வாதமாகும். இது இயற்கையைத் தாண்டிய வடிவில் வெளிவருகின்றது. இங்குதான் சடங்கில் பூசாரிக்கும், மக்களுக்குமிடையில் வேறுபாடு கோடு பிரிக்கின்றது. அத்துடன் இச்சடங்கு பெண்களின் விவசாயம் சார்ந்த உரிமையை, அதன் கண்டு பிடிப்பை பெண் சார்ந்து நிறுவுகின்றது. இங்கு கேள்வியை நாம் இப்படி எழுப்ப முடியும். பொருள் முதல்வாதம் ஒரு கருதுகோளா? அதுபோல் கருத்தமுதல்வாதம் ஒரு கருதுகோளா? எனில், இல்லை என்பது தெரியும். ஆனால் மார்க்சியத்தை மறுப்பதில் விடயங்களை வெறும் கருதுகோளாக்குவது அடிப்படையாகின்றது. பொருளாதார அடிக்கட்டுமானமான வெளிப்பாடுகளின் வர்க்க முரண்பாட்டை மூடிமறைக்க, வெளிப்பாடுகளை வெறும் கருதுகோளாக காட்டுவது அவசியமாகின்றது. இவைகளை மேலும் பார்ப்போம்.
".. சங்ககாலத்தில் சடங்குகளில் தலைமை வகித்த நிலையில் இருந்த பெண்கள் சங்ககாலப் பிற்பகுதியில் அசுத்தத்தின் தோற்றுவாயாக தரம் குறைக்கப்பட்டனர் என்பதே இங்கு நமது முக்கிய கவனத்துக்குரியது."75 என்ற வாதம் தவறானது. சடங்குகளில் பெண்கள் முன்னின்று, தலைமையேற்று நடத்துவதில், பெண்கள் இன்றும் பலதுறைகளில் காணப்படுகின்றனர். பல்வேறு சடங்குகள் சமுதாய ரீதியாக பிற்போக்கான ஆணாதிக்க மற்றும் காட்டு மிராண்டித்தனமாக இருந்த போதும், அதை பெண்கள் தலைமையேற்து நடத்துவதும் அதற்காக போராடுவதும் காண முடிகின்றது. பெண் சமுதாய ரீதியாக தரம் குறைந்து போவதும், தள்ளி வைப்பதும், ஒதுக்கி வைப்பதும் போன்ற நடத்தைகள், அசுத்தத்தின் அடிப்படையில் இருந்து அல்ல. மாறாக பெண் சமுதாயத்தில் சொத்துரிமையிழந்த, ஆணின் அடிமையாகி ஆணைச் சார்ந்து வாழ்கின்ற நிலையில், பெண்ணின் சமூகத் தொடர்புகளை கட்டுப்படுத்த அசுத்தம் ஒரு ஊடகமாகியது. கற்பு முதல் அசுத்தம் வரை பெண்ணின் சமூக பங்களிப்பை மறுப்பதில் தொடங்கி, ஒரு ஆணுக்கு கட்டுப்பட்டு வாழும் அடிமைத்தனத்தில் இருந்தே தரம் குறைக்கப்பட்டாள். அசுத்தங்கள் பற்றிய விளக்கங்கள் சமுதாய ரீதியான சமூக அடிமைத்தனத்தை உறுதி செய்ய உருவானதே. சாதிய ரீதியாக தாழ்ந்த சாதிகளை அசுத்தம் பிடித்தவர்களாக காட்டிய போது, அங்கும் அடிமைத்தனத்தை உறுதி செய்வது தேவையாக இருந்தது. இது தான் பெண்ணுக்கும் நிகழ்ந்தது. பெண்ணின் மாதவிடாய் உள்ளிட்ட இயற்கை வெளிப்பாடுகளை, கடவுளின் முன் தீண்ட முடியாத அழுக்காக்கிய போது, பெண்ணின் கடவுள் வழிபாட்டில் வாழும் சமூகத் தன்மை கூட மறுக்கப்பட்டது. பெண் கணவனை வழிபட்டு வாழ நிர்ப்பந்தித்தது. "கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற பழமொழி கூட, கோயில் வழிபாட்டில் கிடைக்கும் சமூக தொடர்பு கூட, பெண்ணுக்கு மறுக்கப்பட்டது. சமூக பங்களிப்பு, சமூகத் தொடர்பு, சமூக உழைப்பு போன்றன தடுக்கப்படவே, ஆணுக்கு இருக்காத பெண்ணின் இயற்கை வெளிப்பாடுகளை அசுத்தமாக ஆணாதிக்கம் விளக்கி ஒதுக்கியது. இவை கூட கடந்த கால மனிதன், இயற்கையிடம் தமது வாழ்வைக் கோரி நடந்திய வழிபாடுகளில், சடங்குகளில் தோல்வி ஏற்படுகின்ற போது, ஏன் என்ற காரணகாரிய தொடர்புடைய கேள்விக்கு, விடை தெரியாத மனிதன், தன் மீதே பழியைப்போடுகின்றான். இந்த பழியை பின்னால் ஊடுருவி ஆராய்கின்றான். பொதுவான ஆணாதிக்க சமூக மக்கள் கூட்டத்தில் எது எல்லோருக்கும் இல்லாது விதிவிலக்காக இருக்கின்றதோ, அதுவே பலன் கிடைக்காமைக்கான காரணமாக நினைக்க தொடங்குகின்றான் இந்த விதிவிலக்குகளை விலக்குவதன் மூலம் பலன் கொடுக்கும் என்ற அடைப்படையை உருவாக்கின்றது. இங்கு விதிவிலக்கு கூட பலனையடைய ஒரு ஊடாகமாகவும் கருதி முன்னிலைக்கு கொண்டு வந்த தாய் வழி சமூக கண்ணோட்டம், ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தில் எதிர்நிலையடைகின்றது. ஆணாதிக்கம் தனது சமூகப் பலனை பாதுகாக்க பெண்ணுக்கும், அதிலும் குறித்த விலகல்களையும் பண்பியல் மாற்றத்துக்கு உள்ளாக்கி, பெண்ணை அடிமைப்படுத்த இயற்கையின் வெளிப்பாடுகளை, பெண் சார்ந்து ஒரு ஊடகமாக்கினர். அடுத்த ஆணாதிக்க பெண்ணிய விளக்கத்தைப் பார்ப்போம்.
"பெண்களின் பால்நிலைத் தன்மையையும் ஆற்றலையும் போற்றுவதன் மூலம் இதனைப் புனிதமானதாக மாற்றச் சில அறிஞர்களும், உரையாசிரியர்களும் முனைகின்றனர். இந்தப் புனிதத்துவமும் ஆற்றலும் பின்னர் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நியாயங்களாக மாறின."75 ஆணாதிக்கத்தின் சொந்த விளக்கம் இப்படி தான் தன்னை முகம் காட்டுகின்றது. இங்கு அறிஞர்கள் என்று மறைமுகமாக குறிப்பிடுவது ஏங்கெல்ஸ்சையே. பெண்ணின் பால்நிலைத்தன்மையும் ஆற்றலும் பெண்ணை சமுதாய ரீதியாக முன்னிலைப்படுத்தவில்லையா? தாய்வழிச் சமூகத்தின் ஆதாரம் என்ன? தாய்வழிச் சமூகம் இருக்கவில்லையா? இவை எல்லாம் கற்பனையான அறிஞர்களின் புனிதமான கூற்றுக்களா? ஆணாதிக்கம் தாய்வழிச் சமூகத்தை மறுக்கின்றது. தாய்மை ஊடாக பெண் தலைமை ஏற்று நடத்திய புராதான கம்யூனிசத்தை மறுக்கின்றது. செல்வி திருச்சந்திரன் அதையே பின்பக்க கதவு வழியாக பெண்ணியத்தின் பின்னால் செய்கின்றார். சமுதாயம் பற்றிய வரலாற்று இயங்கியல் ஆய்வாளர்கள், கடந்து சென்ற மனித வாழ்வின் நேரடி ஆதாரங்கள், கடந்த இலக்கிய ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வாளார்கள், உயிரியல்துறை ஆய்வாளர்கள் என்று சமூகத்தில் பல்துறை சார்ந்த, இயற்க்கையை அடிப்படையாக கொண்ட ஆய்வளர்கள், தாய்வழி சமூகத்தில, பெண்ணின் பாத்திரத்தை தெட்டத் தெளிவாக நிறுவியுள்ளனர். பெண் வரைமுறையற்ற புணர்ச்சியில், குழந்தையின் தந்தை யார் எனத் தெரியாத சமுதாயத்தில் தாய்வழி மட்டுமே அடையாளம் செய்த நிலையில் (இன்று அதுவே உண்மை), பெண்வழிச் சமூகம் உருவானது. இங்கு பெண்ணின் குழந்தை பெறும் ஆற்றல், அதை பாதுகாக்கும் ஆற்றல், குழந்தைக்கு பால் உற்பத்தி செய்யும் ஆற்றல் என்பன சமுதாய ரீதியாக போற்றப்பட்டது. அதாவது உயிர் வாழ்வதும், உணவு தேடுவதுமே வாழ்வாக போராட்டமாக இருந்த போது, பெண் அதை ஈடு செய்யும் வகையில் மறு உற்பத்தி, விவசாய கண்டுபிடிப்புகள் பெண்ணை சமுதாய ரீதியாக மதிப்படையச் செய்தது. இந்த மதிப்பை புனிதம் தரமிறக்கிவிடவில்லை.
பெண்ணின் உழைப்பும், அவளின் மறு உற்பத்தியும், சமுதாய ரீதியாக தேவையற்று உபரி தோன்றிய போது, பெண்ணின் மதிப்பு தரம் இறங்குகின்றது. ஆணின் உழைப்பு உபரியை உருவாக்கிய போது, அது அவனின் தனிச் சொத்தான போது, அதில் இருந்து விலகியிருந்த பெண் உபரியற்ற நிலையில், ஆணின் உபரியை சார்ந்து இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். இதன் வளர்ச்சி பெண்ணை சமூக உழைப்பில் இருந்து அன்னியப்படுத்தி விடுகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பில் சொத்துரிமையை இழந்த பெண் ஆணின் அடிமையாகிய போது, பெண்ணின் பாலியல் தன்மையும், ஆற்றலும் சமூக ரீதியாக இழிவாக பார்க்கப்படுகின்றது. இவை சமுதாய ரீதியாக தனிச்சொத்துரிமையை மூலதனச் சந்தையில் உருவாக்குவதில்லை. பெண்ணின் இந்த ஆற்றல் ஆணாதிக்க அமைப்பில் கொச்சைப்படுத்தப்பட்டு (சந்தைப் பெறுமான அற்றவை என்பதால்) சமூகத் தகுதியை இழந்து இழிந்து போகின்றது. ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்த சமூகத் தகுதியை மீளக் கோர வேண்டுமே ஒழிய, ஆணாதிக்க போக்கில் அதை மேலும் இழிவுபடுத்தி கைவிட்டு விடுவதல்ல. ஆணாதிக்கம் இதன் சமூகத் தகுதியை இழிவாக்கிய போது, இதை புனிதமாக்கி வழிபாட்டுக்குரியதாக்கியே அதன் உள்ளடக்கத்தை ஒடுக்க முடிந்தது என்பது வரலாறாகும. இன்று மார்க்சிய தலைவர்களை சோவியத் உள்ளிட்ட சீனா வரை முதலாளித்துவ மீட்சியாளர்கள் வழிபட்டு புனிதர்களாக காட்டி எப்படி உள்ளடக்கத்தை நலமடித்தனரோ, அதுவே பெண்ணின் பாலியல் ஆற்றலுக்கும் நிகழ்ந்தது. பாலியல் ரீதியாக பெண்ணின் திருப்தியை ஆணாதிக்கம் இதன் வளர்ச்சியிலேயே மறுத்தது. ஆணின் பாலியல் இன்பம் முதன்மையான கூறாகியது. புனிதத்தின் பின் பெண்களை கட்டுப்படுத்தும் போக்கில், பெண்ணின் ஆற்றலை நாம் கொச்சைப்படுத்த முடியாது. பெண்ணின் தாய்மை ஆற்றல் சரியான வழியில் போற்றப்பட்டு, கட்டுப்படுத்துவதை, புனிதமாக்குவதை மறுக்க, போராட வேண்டும். வர்க்கப் போராட்டத்தை எப்படி நாம் முன்னெடுக்க முயல்கின்றோமோ, அதே வழியில் பெண்ணின் ஆற்றலை சரியான வழியில் நியாயப்படுத்தி ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும். இதை மறுத்து ஆணாதிக்கம் புனிதமாக்கின்றது என்று கூறிய படி நாமும் மறுத்தால், பெண்ணியத்தின் இயங்கியல் இயற்கையைக் கூட மறுத்து ஆணாதிக்கத்துக்கு பின்பக்க கதவால் சேவகம் செய்யவே முடியும். அதை மேலும் பார்ப்போம் .
".. தாய் வழி முறை என்பது தாய்வழி சொத்துரிமையை நாடும் ஒரு முறையைக் குறிக்கும்."75 ஆங்கிலச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்கின்ற போது கொடுத்த மறுப்பிலும், விளக்கத்திலும் தாய்வழி முறைக்கு கொடுக்கும் விளக்கம் அபத்தமானது. தாய்வழி என்பது தனிச்சொத்துரிமை அமைப்புக்கேயுரிய சொத்துரிமையுடன் முடிச்சுப் போடுவது பெண்ணியத்தின் குருட்டுத்தனமாகும். தாய்வழி தாய்மையின் வழியாக உருவானதே. குழந்தை மீதான தாயின் உரிமை, அடையாளம் கண்டு கொள்ளும் சமுதாய முறைதான், தாய்வழி முறையாகும். இதை ஆணாதிக்க அமைப்பு தனிச்சொத்துரிமையூடாக மறுத்த போது, சொத்துரிமையூடாக அடையாளம் காண்பது என்றளவுக்கு நிலைமை மாறியது. இதையே முந்திய சமுதாயத்துக்கு பொருத்திக் காட்டுவதன் ஊடாக செல்வி திருச்சந்திரன், ஆணாதிக்க தனிச்சொத்துரிமை அமைப்புக்கு முந்தியது, பெண் சார்ந்த தனிச்சொத்துரிமை அமைப்பு என மறைமுகமாக காட்டுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தையும், புராதன கம்யூனிச சமூகத்தையும் மறுக்க கனவு காண்கின்றார். இதில் இருந்து உலகமயமாதலை காப்பாற்ற முனையும் அடுத்த விளக்கத்தைப் பார்ப்போம் .
".. சோழர் ஏகாதிபத்தியத்தின் போது தான்..."75 ஏகாதிபத்தியம் என்ற வரையறையை எப்படி செல்வி திருசந்திரன் கோணல்படுத்தி, சோழர்கால கட்டத்துக்கு பொதுமைப் படுத்துவதன் மூலம், உண்மையின் அதன் உள்ளடக்கத்தை பெண்ணியத்தின் பின்னால் அரித்துவிட கனவு காண்கின்றார். இவரின் வரைமுறைப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய எழுச்சிகள், படையெடுப்புகள், இந்தியா மீதான பல படையெடுப்புகள் (அதாவது உலக வரலாற்றில் உள்நாட்டு யுத்தம் தவிர்ந்த சகல யுத்தங்களையும்) எல்லாம் ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா? சோழர் காலம் எகாதிபத்திய தன்மை வாய்ந்தவை என்றால் (இப்படித் தான் சிங்கள இனவாதம், தென் இந்திய தமிழர் சார்ந்த படையெடுப்பை, இனவாத கண்ணோட்த்தில் விளக்குகின்றது.), அனைத்து படையெடுப்புகஞம் ஏகாதிபத்திய தன்மை கொண்டவை தான். ஏன் இந்தியா அண்மையில் இலங்கை, காஸ்மீர், சீனா, பாகிஸ்தான், மாலைதீவு, தெலுங்கான என்று ஆக்கிரமித்த போது, அதை ஏகாதிபத்தியம் என்று அழைக்க முடியுமா? இல்லை. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் முதிர்ச்சி தான் ஏகாதிபத்தியத்தை உருவாக்கின்றது. உலகை பங்கிட்டதன் மூலம், மூலதனச் சந்தையை ஏற்றத் தாழ்வான நாடுகளுக்கிடையில் நெருக்கடி ஏற்படும் போது ஏகாதிபத்திய மோதல் வெடிக்கின்றது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியில், மூலதன ஏகபோகத்தில், நிதி மூலதன ஏகபோக ஆதிக்கத்தில் உருவாகின்றது. ஏற்றுமதிச் சந்தையில் மூலதன ஏகபோகம், நிதி ஏகபோகம் இதன் அடித்தளமாகின்றது. முதலாளித்துவமல்லாத நிலப்பிரபுத்துவ அமைப்புகளின் ஆக்கிரமிப்பை, படையெடுப்பை ஏகாதிபத்தியம் என்று வரையறுப்பது, மார்க்சியத்தை திரிப்பதாகும். மார்க்சியம் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியை ஏகாதிபத்தியம் என்று வரையறுத்ததை செல்வி திருச்சந்திரன் சோழ காலத்துக்கு திரித்து பொருத்துவதன் மூலம், ஏகாதிபத்தியத்தை அரசியல் ரீதியாக பாதுகாக்க மார்க்சியத்தை அரித்து சிதைக்கின்றார். மார்க்சியத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் திரித்தபடி தான், ஏகாதிபத்திய பெண்ணியம் தனது ஆய்வுகளை கடந்த கால மீது வைக்கின்றது. கடந்த காலம் தொடர்பாக வரைமுறையற்ற விமர்சன சுதந்திரம் அனைத்தையும், இன்றைய சமுக வர்க்க அமைப்புகளும் நிபந்தனைக்குட்பட்டு அங்கீகரிப்பதால், அதை செய்வதன் மூலம் தம்மை பெண்ணியல் வாதியாக காட்டியபடி, ஏகாதிபத்திய கோட்பாடுகளை பின்பக்கமாக நுளைக்கின்றனர். நடைமுறை சார்ந்த யதார்த்த சமூக இயக்கம் மீது அனைத்துவித ஆணாதிக்க மற்றும் அது சார்ந்த ஏகாதிபத்திய நுகத்தடியை விமர்சிக்காது தம்மை பாதுகாத்தபடி, ஏகாதிபத்திய நுகத்தடியை பிடித்தபடி கால் சறுக்காது கண் கட்டிச் செல்வதையே இந்த திரிபுகள் தெளிவாக நிர்வாணாமக்கின்றது. அடுத்த திரிபைப் பார்ப்போம்.
"தமிழ் சமஸ்கிருத சங்கமத்தில் தோன்றி வளர்ந்த நுண்கலை, சிற்பக்கலை, போன்றவை கோயிலை மையமாகக் கொண்டே தோன்றி, வளர்க்கப்பட்டது."75 பார்ப்பனியத்துக்காக ஏகாதிபத்திய தயவுடன் இது புகுத்தப்படுகின்றது. பார்ப்பனியமும், சமஸ்கிருதமும் இந்தியா முழுக்க ஆதிக்க பண்பாட்டு மதமாக இருந்த போதும், ஏன் தமிழ் நாட்டில் மட்டும் நுண்கலை, சிற்பக் கலை தனித்துவமாக காணப்படுகின்றது. இந்தக் கேள்வி தெளிவாக சமஸ்கிருத மொழியின் வளமின்மையை தெளிவாக நிர்வாணமாக்கின்றது. தமிழ் மொழியின் வளமையுடன் கூடிய மக்களின் உழைப்பாற்றல் சமஸ்கிருதத்தைத் தாண்டி இருந்ததால் மட்டுமே, நுண்கலையும் சிற்ப கலையும் தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. அதாவது சமஸ்கிருதமும், பார்ப்பனிய இந்து மதமும், சைவ (இங்கு பல சிறு தெய்வ வாழிபாடுகள் இருந்தன.) தமிழ் நாட்டில் ஊடூருவ முன்பே சிற்பக் கலையும், நுண் கலையும் மக்கள் கலையாக இருந்தன. இன்றைய தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் பல முன்னைய சமணக் கோயில்கள் என்பது வரலாற்று உண்மை. சமஸ்கிருதமும், பார்ப்பனிய இந்து மதமும், நுண் கலையையும், சிற்பக் கலையையும் பார்ப்பனிய இந்துமத பண்பாட்டு படுகொலை (திருஞான சம்பந்தர் தலைமையில் ஆயிரக்கணக்கில் சமணத்துறவிகள் கழுவில் ஏற்றப்பட்ட வரலாறுக் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளது.) எழுச்சியூடாக (புலிகள் மாற்றுக் கருத்து மீது நடத்திய வன்முறையுடன் கூடிய ஆயிரக்கணக்கான படுகொலை மூலம், கட்டமைத்த எழுச்சி போல்), கோயிலை நோக்கி இவை மாற்றப்பட்டதுடன், அதுவே அதன் தோற்றமாக காட்டி மக்கள் கலையை அழிக்க முனைகின்றனர். இங்கு தமிழ் மீதான சமஸ்கிருத சங்கமத்தில் அல்ல, ஆதிக்க வன்முறை மீது இவை நிகழ்த்தப்பட்டது. அறிவால் அல்ல சதியால் இவை சாதிக்கப்பட்டது. சகல சிறுவழிபாட்டு தெய்வங்களுக்கும் நடத்திய கட்டாய குடும்ப இணைப்புகள் மீதும் இந்து மதம் ஏற்படுத்திய உறவுகள், வக்கிரங்கள் எல்லாம் அதன் சதித் தன்மை நிர்வாணமாக்கின்றது. பார்ப்பனியம் தனது சொந்த மதத்தை இவைகள் மீது நிறுவ முடியவில்லை. ஆனால் பின்பக்க வழியாக புகுந்து கொண்டது. இதில் இருந்து புத்தம், சமணம் முற்றாக வேறுபட்டு நிற்கின்றது. தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழிச் சொற்களை புகுத்தியது எல்லாம் சதித்தன்மை கொண்டவை. பொருளாதார பண்பாட்டு ஆதிக்கத்தை தமது கையில் பார்ப்பனிய சமஸ்கிருதம் வைத்திருந்ததால், இவைகளை இடைச் செருகல் ஆக்க முடிந்தது.. குடும்பத்தில் எப்படி ஆணின் அதிகாரம் நிலவுகின்றதோ அதுபோல், பார்ப்பனியம் ஆணாதிக்க ஒருதார குடும்ப உறவுக் கண்ணோட்த்தில், தமிழ் நாட்டில் தனது வன்முறை அதிகார ஆதிக்கத்ததால் தனது மரபை உருவாக்கியது. இங்கு சங்கமம் என்பது ஆதிக்கத்தை மூடிமறைக்கும் அப்பட்டமான மற்றொரு ஏகாதிபத்திய பெண்ணிய ஆக்கிரமிப்பாகும்.
No comments:
Post a Comment