பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!
இயற்கை மற்றும் மனித வரலாற்றை தனிச் சொத்துரிமை அமைப்புக்கு ஏற்றாப் போல் வெட்டி, திருத்தி காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாக காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளை கொச்சையாக பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தை தீர்ப்பதைப் பார்ப்போம்.
"தனக்கில்லாத பிள்ளைப்பேறு ஆற்றல் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆண் பொறாமையில் புழுங்கியிருப்பான். பெண்ணின் பேறு ஆற்றல் பற்றிய ஆணின் தாழ்வு மனப்பான்மையைப் ஃபிராய்ட் "குழந்தைப் பேற்றுப் பொறாமை" என விளக்குகின்றார். ஃப்ராய்டின் சமகால உளப்பகுப்பாய்வாளர் தியோடர் ரெயிக், ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சடங்குகளைக் கள ஆய்வு செய்து அன்னோரது சடங்கிற்கு விரிவான உளப்பகுப்பாய்வு விளக்கம் தந்துள்ளார்... பேறு காலத்தில் பிள்ளைப் பேற்று வலியில் பெண் அவதிப்படுவது போல், அப்பழங்குடி இனத்திலுள்ள ஆண் தானும் குழந்தைப் பேற்று வலியால் அவதிப்படுவதாகப் பாவனைச் சடங்கு நிகழ்த்துவான். இதன் நனவு மனப்பொருள் அவளின் வலியை இவன் வாங்கிக் கொள்வதாகக் கருதப்படுகிறது. பெண் மீதான ஆணின் இந்த அன்புணர்வுக்குள்ளே பகை உணர்ச்சி ஒளிந்துள்ளது."125 பிராய்ட்டின் இவ் ஆய்வு மிகவும் விசித்திரமானவை. பிரசவ வலியில் ஆண் பங்கு கொள்ளும் அன்பின் பின், பகைமை ஒளிந்திருப்பதாக கூறும் வக்கிரம், முதலாளித்துவ தனிச் சொத்துரிமையின், சொந்த வர்க்க கண்ணோட்டமேயாகும். தாய்மை, தாய்மைப் பேற்றில் குழந்தையை பெற்றெடுத்து, பாலூட்டி அன்பைச் சொரிகின்ற கூட்டு வாழ்வில், தாய்மை குழந்தை மீது பகைமையை பாராட்டுவதில்லை. அன்புக்கு பின்னால் பகைமை, பொறாமை இருப்பதாக கூறி எடுக்கும் எடுகோள், எவ்வளவு பேடித்தனமாக தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தகர்ந்து போவதை நாம் காணமுடியும். சடங்குகள், உழைப்பில் ஈடுபடுவதில் தொடங்கி பகிர்வதில் உருவாகின்றது. பெண்களின் தாய்மை உணர்ச்சிகள், அதன் விளைவுகளில் கூட்டு வாழ்வில் இருந்து, ஆண் பங்கு பற்றுவதை உள்ளடக்கிய சடங்குகள், பகைமை பாராட்ட, பொறாமையை தீர்த்துக் கொள்ள உருவானவையல்ல. மாறாக கூட்டு வாழ்வின் அடிப்படையான உள்ளடாக்கமாகும். மூலதனத்துக்கே உரிய போலியான அன்பும், மறைமுகமான பகைமையும், சொந்த வர்க்க பொறாமையில் இருந்து உருவாகின்றது. இதை, அந்த உணர்ச்சிகள் ஊடுருவாத மக்களிடையே புகுத்திக் காட்டுவது, முதலாளித்துவ ஆய்வளர்களின் வக்கரித்த பார்வையாகும். தனிச்சொத்துரிமை சுரண்டல் அமைப்பு வடிவில் உருவாக்கிய ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க, பொறாமையை இயற்கையின் வரலாற்று தொடர்ச்சியாக காலாகாலமாக இருப்பதாக காட்ட, குழந்தைப் பேற்றில் திரித்துக் காட்டுவது அவசியமாகிவிடுகின்றது.
இங்கு உளவியல் மனப்பாங்கு வானத்தில் இருந்தா! குதித்தெழுகின்றது. சமூக பொருளாதார அமைப்பில் இருந்தல்லவா உருவாகின்றது. அன்பு, பொறாமை, காதல்... போன்ற மனித உணர்ச்சிகள், தனிச் சொத்துரிமை சுரண்டல் அமைப்பின் வர்க்க வெளிப்பாடாகும். இதை மூடி மறைத்த விளக்கங்கள் ஆணாதிக்க அமைப்பை திரித்துக் காட்டுவதாகும். பிராய்டின் ஆய்வு தொடர்பாக லெனின் கூறுவதைப் பார்ப்போம். "(பாலுறவுப் பிரச்சனைகுறித்து) இந்தப் பிரசுரத்துக்கு விஞ்ஞான மேற்பூச்சுக் கொடுக்கும் பொருட்டு பிராய்டின் கருதுகோள் இதில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இது படுமோசமான அபத்தமே அன்றி வேறில்லை... பிராய்டின் தத்துவம் தற்போது மிகுந்த மோஸ்தருடையதாகிவிட்டது. பல்வேறு கட்டுரைகளிலும் விஞ்ஞான ஆய்வுரைகளிலும் பிரசுரங்களிலும் பிறவற்றிலும் - சுருங்கக் கூறுமிடத்து முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் மண்டிவிட்ட அந்தத் தனிவகையான இலக்கியத்தில் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்து தியானம் புரியும் இந்திய ஆண்டியைப்போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சனைகளிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நான் நம்புவதில்லை. பெரும்பாலும் வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தான் தோன்றித்தனமான ஊகங்களேயான, இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகியுள்ளதற்குச் சொந்த தேவைகளே காரணம் என்பதாகத் தோன்றுகிறது எனக்கு, முறைகேடான அல்லது மட்டு மீறிய தனது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னர் நியாயம் கற்பிக்க வேண்டும், கண்டிக்கப்படலாகாதென வாதாட வேண்டுமென்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும்"157 வக்கரித்த பாலியல் ஆய்வுகள், விளக்கங்கள் மீது லெனின் மிகத் தெளிவாகவே அம்பலம் செய்துள்ளார்.
இது போன்ற அடுத்த சமூகத் திரிபை பார்ப்போம் "பெண்ணுடைய மனித மறு உற்பத்தி ஆற்றல் இயற்கையாக நடந்தால் அதைக் கட்டுப்படுத்த வழியற்றவனாக நெடுங்காலம் ஆண் தவித்திருப்பான். இவனது தாழ்வு மனப்பான்மை இவனை அவளுக்கு எதிரியாக்கி இருக்க வேண்டும்"125
இப்படி ஆணாதிக்க வரலாற்றை திரித்தபடி, சொந்த சுரண்டல் அமைப்பை பாதுகாத்தபடி, ஆணாதிக்க அமைப்பை சோடித்துக் காட்டுகின்றனர். பெண் தலைமை தாங்கிய சமுதாயத்தில், எப்படி ஆணின் தாழ்வு மனப்பான்மை பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கியது? எப்படி, அதைச் சாதிக்க எந்த சக்தி ஆணுக்கு கிட்டியது? என்ன சமூக பொருளாதார அதிகாரம், பெண்ணை மீறி ஆணுக்கு கிட்டியது? எப்படி அது சாத்தியமானது? இதெல்லாம் பெண்ணின் மறுஉற்பத்தியில், அதை ஆண் கட்டுப்படுத்த முடியாத தாழ்வு மனப்பான்மையில் ஏற்பட்டதாக, ஆணாதிக்க அமைப்புக்கு விளக்கம் கொடுக்க முதலாளித்துவம் முனைகின்றது. முதலாளித்துவ அமைப்பின் அச்சாணி ஆணாதிக்கமாக இருக்க, அதை திசை திருப்புவது வர்க்க அமைப்பை பாதுகாக்குமல்லவா? இதில் இருந்தே பாட்டாளி வர்க்க ஆயுவுகளை மறுத்துரைக்க, எல்லாவிதமான விலகல்களையும் முன்வைப்பதில் முனைப்பாக முன்வைக்கின்றனர். பெண்ணின் மறு உற்பத்தி மீதான தாழ்வு மனப்பான்மை, ஆணை பெண்ணுக்கு எதிராக நிலை நிறுத்தியது எனின், அது தான் இன்று வரை பொது அடிப்படையா? அப்படியெனின் இன்று பெண்கள் குழந்தை பெற மாட்டோம் என்று, தனிப்பட்ட ஆண் எதிர்ப்பில் (ஆணாதிக்க அமைப்பை அல்ல) முதலாளித்துவ பெண்ணிய பிரகடனங்கள், எந்த வகைப்பட்டன? பெண்களின் உளவியல் பிரமை ஆணாதிக்க வழியில் சீரழிவாகின்றது அல்லவா! பெண்ணின் தாய்மை சார்ந்த மறுஉற்பத்தி, சமுதாய ரீதியாக போற்றப்பட்ட நிலையை தகர்த்தது, தனிச்சொத்துரிமை சார்ந்த சுரண்டல் அமைப்பு தான். இந்த அமைப்புக்கே உரிய உணர்ச்சிகள் பெண்ணை இழிவுபடுத்தியதே ஒழிய, அடிமைப்படுத்தவில்லை. அடிமைப்படுத்தப்பட்ட பெண் மீது, உணர்ச்சிகள் இழிவை வேற்றுமைகள் மீது புகுத்தியது. இயற்கையின் உழைப்பு வடிவத்தை திரித்து முன்வைக்கப்படும் வாதத்தைப் பார்ப்போம். "புராணம் சடங்குக்கு முந்திய வடிவம்"125 என்கிற திரிபு, மனித உழைப்பை கருத்து முதல்வாதத்துக்குள் இட்டுச் செல்லுகின்றது. புராணம் உருவாகிய பின்பே சடங்கு தொடங்குகின்றது என்பது, பொருளை மறுக்கின்றது. புராணம் எப்படி உழைப்பை மீறி உருவாகியிருக்க முடியும். உழைத்து அதை பகிர்ந்துண்ட மனிதன், தனது கூட்டுச் செயலை வெளிப்படுத்தும் நடைமுறையையே, சடங்காக செய்ய முனைகின்றான். உழைப்பின் வெற்றி தோல்விகளின் விளைவுகளை இயற்கை மீதான அறியாமை மீது வெளிப்படுத்தும் போது, சடங்கு அதன் வடிவமாகின்றது. இந்த சடங்கில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்துக்கு விளக்கம் கொடுத்தோர், புல்லுருவியாக வளர்கின்ற போதே, கற்பனையான புராணமாக சடங்கு மாற்றப்படுகின்றது. இது மட்டுமே புல்லுருவியாக வாழ அடிப்படையைக் கொடுக்கின்றது. இன்றைய நவீன மதங்களின் தோற்றங்கள், மதம் மூலம் மூலதனத்தை பாதுகாக்கும் உலகமயமாதல் நோக்கத்துக்கு அப்பால், புல்லுருவிகளாக வாழும் பிரிவுகள் மக்களின் உழைப்பை, அற்புதங்களின் பின், கடவுளின் பின் சூறையாடி வாழ, மதங்களை முதலாளித்துவ விளம்பர வழியில் விளம்பரம் செய்வதைக் காணமுடிகின்றது. மனிதனின் இயற்கை மீதான வழிபாட்டை திசை திருப்பி, ஏதோ தாங்களே அதை சாதித்துத் தருவதாக காட்டும் புல்லுருவித்தனத்தில், வழிபாட்டையே கட்டமைக்கின்றனர். சடங்குகள் பல கற்பனையான நடத்தைகள் மீது கட்டமைக்கப்பட்ட போதும், அது கருத்துமுதல்வாதமாக விளக்கி விடமுடியாது. ஏனெனின் பொருள் சார்ந்த உழைப்பை வெளிப்படுத்தும் போது, இயற்கையான பொருள்முதல்வாதம் மீது சடங்கின் தன்மை பிறக்கின்றது. ஆனால் சடங்கில் இருந்நு சமுதாயத்துக்கே புல்லுருவியான வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட புராணம், திட்டவட்டமாக கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டவை. புராணத்தின் பின்னால் சமுதாயம் ஒட்டு மொத்தமாகவே புல்லுருவித்தனத்துக்குள் சிதைக்கப்பட்ட போது, கருத்துமுதல்வாத புராணம் சடங்கை விளக்கி வழி காட்டிய வழியில், சடங்கு மேலும் இயற்கை பொருள்முதல்வாதத்தில் இருந்து அன்னியமாகி, கருத்துமுதல்வாதமாக சீரழிந்தது. மக்களின் உழைப்பை, அதன் விளைவான உற்பத்திப் பொருளை, எப்படி மூலதனமாக்கி மக்களிடம் இருந்து அன்னியமாக்கி பின், இன்று மூலதனமே உழைப்பை உருவாக்கியதாக காட்டும், காணும் பாதையைப் போல் சடங்கும் புராணத்தின் பின்னால் சீரழிந்தது. இதில் இருந்து சடங்கை புராணத்துக்கு பிந்தியதாக காட்டுவதும், அதன் போக்கில் சமுதாய நடத்தைகளை திரித்தும் முன்வைக்கப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பை நிரந்தரமாக காட்டுவதும், பெண் வழிச் சமூகத்தை கொச்சைப்படுத்துவதும் நிகழ்கின்றது.
"ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றார்"156 என்கிறார். இதை ரவிக்குமார், பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ் தமது நூலின் முன்னுரையில் எடுத்து விளக்கியே, தமது ஆணாதிகத்தை முன்வைக்கின்றனர். "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை பெண்ணாக ஆக்கப்படுகின்றார்" என்ற வார்த்தையின் பின்னால், ஆணாதிக்க அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. ஆணாதிக்கத்தை பெண் உறுப்பு மீதும், பெண்ணின் பிறப்பை தனிப்பட்ட வளர்ப்பில் ஏற்படுவதாக, இது விளக்கம் கொடுக்கின்றது. "ஒருவர் பெண்ணாக பிறப்பதில்லை" என்ற வாதம் கருத்துமுதல்வாதமாகும். ஆணாதிக்க சமுதாயம் ஒன்று இருப்பதை மறுக்கின்றது. பெண் பிறக்க முன்பே, ஏன் கருத்தரிக்க முன்பே, ஆணின் விந்து பெண்ணை தீர்மானிக்க முன்பே, பெண் பெண்ணாகவே இருக்கின்றாள். இங்கு பிறந்த பின் "பெண்ணாக ஆக்கப்படு"வதில்லை. பெண்ணாக பிறப்பதில்லை என்ற வாதத்தின் பின், ஆக்கப்படுகின்றாள் எனின், பெண், பெண் ஆக்கப்படாமலும் போய்விடும் உள்ளடக்கத்தையும் இது கொண்டுள்ளது. இது அராஜகவாத பெண்ணியத்தின் கொச்சை ஆணாதிக்க விளக்கமாகும். சமுதாயத்தில் இருந்து, அதற்குப் புறம்பாக யாரும், யாரையும் சுதந்திரமாக ஆக்க முடியாது. ஒரு பெண், பெண்ணாக சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில், பிறப்பிலோ, அதன் பின்போ பெண் வரையறுக்கப்படுவதில்லை. அதற்கு முன்பே அவை தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு விடுகின்றது. பிறப்பும், வளர்ப்பும் ஆணாதிக்க அமைப்பில் ஒரு சமூக நிகழ்வு மட்டுமே ஒழிய, புதிதாக ஒன்றை சமுதாயத்துக்கு புறம்பாக உற்பத்தி செய்வதில்லை. பெண்ணாக பிறக்காமல் மாடாக பிறப்பதில்லை அல்லவா! அப்படியெனின் பெண்ணாகவே பிறக்கின்றாள். "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றார்" என்கின்ற போதே, ஏதோ புதியதை கற்பனையாக சமுதாயத்துக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படுவதாக காட்டும், கருத்துமுதல்வாதம், அராஜக அரசியல் போக்கில் இட்டுக் கட்டப்படுகின்றது. பெண்ணின் பிறப்பு, பெண்ணின் வளர்ப்பை ஆணாதிக்க சமுதாயத்துக்கு புறம்பாக, பெண் உறுப்பின் வெளியேற்றத்தில், உறுப்பின் வளர்ச்சியில் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க தனிச்சொத்துரிமை அமைப்பின் அச்சாணி அசைவின்றி பாதுகாக்கப்படுகின்றது. பிறப்பும், வளர்ப்பும் ஆணாதிக்கத்தை தோற்றுவிக்கவில்லை. பெண்ணின் உழைப்பாற்றல் மறுக்கப்பட்ட தனிச் சொத்துரிமை அமைப்பே, பெண்ணின் பிறப்புக்கு முன்பே பெண்ணை அடிமையாக்கிவிடுகின்றது. பெண் சமுதாயத்தில் உருவாக முன்பே, பால் ரீதியான வேறுபாடு கொண்ட மனித உயிராக பெண் இருந்தாள். இங்கு பிறப்பும், ஆக்கப்படுதலும் ஏன் நிகழவில்லை. நிகழ்வுகள், பின்னால் ஆணாதிக்க சமுதாய மாற்றத்தில் நிகழுகின்றது. ஆணாதிக்க சமுதாய மாற்றம் தனிச் சொத்துரிமையில் உருவாகின்றது. தனிச் சொத்துரிமை அமைப்பு தான் பெண்ணை உருவாக்கின்றதே ஒழிய, பிறப்போ, வளர்ப்போ உருவாக்குவதில்லை. அது பின்னால் தனிச் சொத்துரிமை அமைப்பின் மீது நிகழ்கின்றது. யாரும் இருக்கின்ற தனிச் சொத்துரிமை அமைப்புக்கு புறம்பாக பிறக்கவோ, ஆக்கப்படவோ முடியாது. அப்படி முடியும் என்பது கற்பனையான ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் அப்பட்டமான விபச்சாரமாகும்.
தொடர்ந்தும் முன்னுரையில் "பெண்ணியம் என்கிற சொல் பொதுவாக எல்லாப் பெண்களாலும் ஆதரவான ஒன்றாக கருதப்பட வேண்டும். எனென்றால் அது பெண்களுக்கு ஒரு புதிய தன்னிலைத்துவத்தை வழங்குகின்றது."156 பெண்ணியம் எப்படி தன்னிலைவாதத்தை பெண் விடுதலையில் ஏற்படுத்தும்! ஏகாதிபத்திய பெண்ணிலைவாதம், முதலாளித்துவ பெண்ணிலைவாதம்... எப்படி தன்னிலைவாதத்தை குறைந்த பட்சம், தனது சொந்த வர்க்க எல்லைக்குள் ஏற்படுத்தும். அதாவது இப் பெண்ணியம் எப்படி பெண்ணுக்கு ஆதரவானது. ஏகாதிபத்திய பெண்ணியம் போன்றன எந்தத் தளத்தில் பெண்ணை விடுவிக்கின்றது. பெண்ணை விபச்சாரியாக்கின்றதே ஒழிய, வேறு எதையும் விட்டுச் செல்வதில்லை. அடுத்து தன்னிலைவாதம் எப்படி பெண் விடுதலையை பெற்றுத்தரும். தன்னிலைவாதம் பெண்ணுக்கு ஆணாதிக்க முகத்தை, அதன் போக்கில் ஏற்படுத்துகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பில் அதற்குள் கோரும் தன்னிலை கண்ணோட்டம், ஆணாதிக்கத்தின் மறுவார்ப்பே. தன்னிலைவாதம் கோட்பாட்டு தளத்தில் அராஜகவாதத்தின் தனிமை வாதமாகும். சமூகத்தை எதிர்த்த தன்னிலைவாதம், உள்ளடக்கத்தில் தனிச் சொத்துரிமை சார்ந்து ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தது. இதையே இந்த மார்க்சிய எதிர்ப்பு கும்பல் தனது பெண்ணியமாக முன்நிறுத்துகின்றது. இந்த எல்லையில் இவர்கள் "மார்க்சியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து சென்றதில் தான் கோட்பாட்டளவில் பெண்ணியம் முதலான பிரச்சனைகளை விவாதிக்க வேண்டியதன் அவசியம் எங்களுக்குப் புரிந்தது. மார்க்சியத்தின் மீது எந்தெந்த திசைகளிலிருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பதைத் தேடத்துவங்கிய.."156 எங்கெல்லாம் மார்க்சியத்தை எதிர்த்து முதலாளித்துவ எச்சில் சோற்றுக்கு பிழைத்த கும்பல்களின், மலத்தில் இருந்து தான் இவர்கள் பெண்ணியம் பேசுகின்றனர். மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாட்டை மறுத்து நிறுவ முடியாத இந்த கும்பல், மார்க்சிய நெருக்கடி பற்றி பிதற்றுகின்றனர். மார்க்சியம் ஒவ்வொரு விடயத்தையும், முரணற்ற வகையில் இயற்கை மீது நிறுவி வளரும் இயங்கியலாக உள்ளது. இதன் எந்த உள்ளடக்கத்தையும், இது வரை எந்த தத்துவமும் மறுத்து நிறுவ முடியவில்லை. இதில் இருந்தே மார்க்சியம் மீது காழ்ப்பு கொண்டு, விவாதத்தில் இருந்து விலகி, திரித்து விவாதிக்க முடிகின்றது. பெண் எப்படி அடிமையானாள் என்பது முதல், அவளின் விடுதலை எப்படி என்ற நடைமுறை பாதை வரை, மார்க்சியம் துல்லியமாக விளக்கி போராடி வருகின்றது. இதை மீறி எதையும் யாராலும் முன்வைக்க முடிந்ததில்லை, முடிவதில்லை. இந்த லட்சணத்தில் "... ஆயிரக்கணக்கான வருடங்களாக அடிமைத்தனத்தை அவன் ஏன் ஏற்றுக் கொண்டான்? என்ற கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே உள்ளது."156 விடை தெரியாது நடிக்கும் இந்தக் கூட்டம் தான், அடிமையாக வாழும் பெண்ணுக்கு விளக்கம் தருகின்றது. ஆனால் ஆயிரம் ஆண்டு அடிமை வாழ்க்கை பெண்ணுக்கு எப்படி ஏற்பட்டது என்பதற்கு மட்டும், பதில் தரவில்லை. ஆனால் மார்க்ஸ் அதற்கு தெளிவாக பதிலளித்துள்ளார். ஆனால் அதை எடுத்து ஆராயவோ, அதற்கு பதில் தரவேண்டும் என்ற அரசியல் நேர்மையற்ற நிலையில் தான், பெண்ணிய அடிமை பற்றி புலம்புகின்றனர். தனிச்சொத்துரிமை அமைப்பில் மூலதனம் மக்களை அடிமைப்படுத்திய வரலாற்றில், எப்படி மக்கள் இழிந்து வாழ்கின்றனர் என்பதை, இயற்கை வரலாற்றில் புரிந்து கொள்வது சாதாரண பிழைப்புவாதத்தினால் சாத்தியமில்லை. யதார்த்த வாழ்க்கை மக்கள் நடைமுறை ரீதியாக மூலதனத்துக்கு எப்படி அடிமைப்படுத்தி சிதைக்கின்றது என்பதையும், இதை மறுக்கின்ற பிழைப்புவாத அறிவு துறையினர் மூலதனத்துக்கு கால் செருப்பாவதையும் மூடிமறைத்தபடி தான், எப்படி அடிமையானார்கள் என்று மூக்கை இழுக்கின்றனர்.
இப்படி இழுத்தபடி "பாலியல் மையம் என்பதே உளவியல் வாழ்வை முன்செலுத்துகிற விசையாக உள்ளது என்பதையும், இதனால் உயிரியல் எடுகோள்களும், வாழ்வின் சமூகக் காரணிகளும் மனத்தைக் கவிந்துள்ளன என்பதையும் நிரூபணம் செய்தது."156 வறுமையில் சிக்கி எலும்பாகி நாயாக வாழும் ஒரு மனிதனின் உளவியல் பாலியல் விளைவாகின்றதா? ஆணாதிக்க சீதனம் மற்றும் அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் உளவியல் எங்கு உருவாகின்றது. சிறுகுழந்தையில் உழைத்து களைத்து இயந்திரமான குழந்தையின் உளவியல் எங்கு உருவாகின்றது. ஃபிராய்டின் பிதற்றல்களில் இருந்து பாலியலை மையமாக முன்வைத்த விளக்கம் எந்த உளவியலும், இதற்கு பதிலளிக்க முடியாது. மத்தியதர வர்க்கத்தின் ஊசாலட்டத்துக்கு ஆணாதிக்கத்தின் ஆதரவுடன், இவை தீனிபோட மட்டும் உதவும். சமுதாயத்தின் உளவியல் வெளிப்பாடுகள் சமூக பொருளாதார விளைவுகளின் வெளிப்பாடாகும். இது நீண்ட சமுதாய பரப்பில் தனக்குள் மாறுபட்ட சமூக பொருளாதார விளைவுகளால் மேலும் துல்லியமாக பிரிகின்றது. விளம்பரம் முதல், இந்த சமுதாய ஏகாதிபத்திய கட்டமைப்பு ஈறாக பாலியலை முன் தள்ளி அதில் மூலதனச் சந்தை விரிவாகின்றது. இந்த பாலியல் மையம் ஆணாதிக்கத்தின் வக்கிரத்தில் கொப்பளிக்கின்றது. இதில் இருந்தே ஏகாதிபத்திய திசை வழியில், பாலியல் மையமாக உளவியல் கூறாக அனைத்தையும் இதற்குள் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதில் இருந்தே "உயிரியல் எடுகோள்களும், வாழ்வின் சமூகக் காரணிகளும் மனத்தைக் கவிந்துள்ளன" என்று பிதற்ற முடிகின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் இதை முன்வைக்கின்ற போது, அதன் சீடர்கள் வேறு எதைத்தான் எமக்கு முன்வைக்கமுடியும், வழிகாட்டமுடியும்.
சமூக பொருளாதார விளைவுகளை மூடி மறைக்க "மனிதனின் ஒழுக்க நியதிகள் புனிதமாக உதித்தவை அல்ல. மாறாகப் பெற்றோர்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் கையாண்ட கல்வி முறைகளிலிருந்தே உருக்கொண்டவை. இது பிராய்டின் முக்கியமான நான்காவது கண்டுபிடிப்பாகும்"156 என்று எடுத்து வைக்கின்றனர். இதில் இருந்தே பிரான்சின் வலதுசாரிக் கட்சிகள் குழந்தைகளின் வன்முறைக்கு காரணமாக பெற்றோரை குற்றவாளியாக்க முடிகின்றது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோருகின்றன. நவீன அரசுகளின் சிறைகளில் நிரப்பப்படும் தனிமனிதர்களை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளுவது எது? தனிமனித தனிப்பட்ட வளர்ப்பு விதிக்குள் (பெற்றோர், சுற்று வட்டாரம்) பெற்ற ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டே, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சட்டம் தண்டனையை அழிக்கின்றது. சமூக அவலங்கள், குற்றங்களை தனிமனிதன் சார்ந்து தண்டனையையும், தீர்வையும் வெளிப்படுத்துகின்றன. சினிமா தனிமனித வாதத்தில் மாற்றத்தை பிரகடனம் செய்கின்றன. இது ஃபிராய்டின் முதலாளித்துவ சமூக விளக்கத்தை அடிப்படையாக கொண்டு தன்னை நிலை நிறுத்துகின்றது.
அடுத்து ஒழுக்கம் புனிதமானவை அல்ல என்பதன் ஊடாக, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லை என்கின்றனர். அதாவது கருத்துமுதல்வாதத்தை முன் தள்ளுகின்றனர். இந்த சுரண்டல் ஆணாதிக்க சமுதாயத்தில் ஒழுக்கம் எப்போதும் புனிதமானவையல்லதான். ஆனால் சமுதாயத்தில் ஒழுக்கம் என்ற ஒன்று எப்போதும் மாறி வந்தவண்ணமுள்ளது. இது உழைப்பின் மீதான மனிதனின் கூட்டு உழைப்பு தொடங்கிய முதல் இது உருவாகிவிடுகின்றது. எந்த ஒழுக்கமும் சமூக பொருளாதார மாற்றத்துடன் தன்னை மாற்றி வந்துள்ளது. இது இருக்கின்ற பொருளாதார எல்லைக்குள் தன்னை தொடர்ச்சியாக தகவமைக்கின்றது. ஒழுக்கமற்ற சமுதாயம் அராஜகவாதத்தின் காட்டுமிராண்டித்தனமாகும்.
இங்கு பெற்றோரினதும், சுற்றுவட்டாரத்தினதும் கல்வி முறையில் ஒழுக்கம் உருவாக்கப்படுகின்றது என்ற வாதம் அப்பட்டமான தனிச்சொத்துரிமை வாதமாகும். மூலதனம் தனது தனிமை வாதத்தில் நின்றபடி, சமூகத்தை மறுக்கும் எல்லைக்குள் ஒழுக்கத்தை, அதன் எல்லைக்குள் விளக்க, படைக்க தனது சமூக பொருளாதார வடிவத்தில் நின்று கூவுகின்றது. சமூக பொருளாதார ஆதிக்கத்தை சுரண்டல் வர்க்கம் கைப்பற்றியுள்ளதால், தொடர்ச்சியாக தனது நலன் சார்ந்து மாறிச் செல்லுகின்றது. இதன் எல்லையில் தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற மூலதனக் கோட்பாட்டில் நின்று, ஒழுக்கம் தனிமைப்பட்டு இருப்பதாக நம்புகின்றது, காட்டுகின்றது. ஒரு நாட்டில் ஒரே விதமான ஒழுக்கமும், சில நாடுகளில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரே விதமாக இருக்க காரணம் என்ன? ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு சுற்றுவட்டாரமும் வேறுபட்ட ஒழுக்கத்தை ஏன் ஏற்படுத்தவில்லை. இது ஃபிராய்டின் கண்டுபிடிப்பை கேலி செய்கின்றது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் சிறு சுற்றுவட்டாரத்துக்குள் நிலவிய சமூக பொருளாதார வட்டத்துக்குள், வெற்றிகரமான வேறுபட்ட ஒழுக்கம் வெளிப்படுவதற்கான சமூக பொருளாதார சூழல் காணப்பட்டது. விரிந்த சமூக பொருளாதார அரசுகள் மையப்பட்ட சந்தைகளை உருவாக்கிய எல்லா கால கடட்டத்திலும் ஒழுக்கம் பொது வடிவமாக இருக்கின்றது. இங்கு பெற்றோரும் சுற்றுவட்டாரமும் சமூக பொருளாதார எல்லைகள் தான், குழந்தையின் ஒழுக்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லாது சுயேட்சையாக, சுதந்திரமாக வானத்தில் இருந்து புகுத்த முடியாது. சமூக பொருளாதார சமூக எல்லைக்குள் ஒழுக்கத்தை புகட்டும் போது, இதில் குறிப்பான முரண்பாடுகள், பெற்றோரின் பெற்றோர், விட்டுச் சென்ற பழைய ஒழுக்கத்துக்கும், யதார்த்த ஒழுக்கத்துக்கும், எதிர்கால ஒழுக்கத்துக்குமிடையிலான மூன்று தலைமுறையில் மாறி வந்த சமூக பொருளாதார இடை வெளியால் ஏற்படுகின்றது. இதை மறுத்து "குழந்தையின் விருப்பத்துக்கும் அதை ஒடுக்குகின்ற பெற்றோரின் செயலுக்கும் இடையிலான முரண்பாடே பிற்காலத்தில் ஒரே நபருக்குள் இயல்பூக்கத்துக்கும் இடையிலான முரண்பாடாக மாற்றம் கொள்கிறது"156 நவீன முதலாளித்துவத்தின் சட்ட ஒழுக்க விதிகளை அடிப்படையாக கொண்டே இதை விளக்குகின்றனர். விருப்பங்கள் எங்கிருந்து உருவாகின்றன. விருப்பங்கள் சமூக பொருளாதார அமைப்பில் வெளிப்படுகின்றன. சமூக பொருளாதாரத்தில் இருந்து அன்னியமான எல்லா நிலையிலும், மூலதனத்தின் அடிமையாக விருப்பங்கள் பிரதிபலிக்கின்றன. இதை மறுப்பது இன்றைய நவீன மூலதனத்தை மறுப்பதாகும். அதாவது ஒரு விளம்பரத்தை எடுப்பின் அதன் நோக்கத்தை திசை திருப்பி, விருப்பத்தை தனிப்பட்ட முரண்பாட்டில் மூடிக்கட்டுவதாகும். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படும் விருப்பம் சார்ந்த முரண்பாடு, மூலதனச் சந்தையின் வெளிப்பாட்டில் பிரதிபலிக்கின்றது. இதை மறுப்பது முதலாளித்துவ விளம்பரத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் கோட்பாட்டு ரீதியில் நீந்துபோகச் செய்வதாகும். அதேநேரம் சமூகம் தான் ஒழுக்கத்தின் எல்லையையும், அதன் மாற்றத்தையும் நிர்ணயம் செய்கின்றது. இதை தாண்டி எந்த தனிமனிதனோ, மக்களில் இருந்து அன்னியமான சிறு குழுவோ, தனது வர்க்க சமூக பொருளாதார எல்லையைத் தாண்டி சுயேட்சையாக வெளிப்படுத்த முடியாது. ஒரே சமூகத்துக்குள்ளான வேறுபட்ட சில ஒழுக்கவிதிகள் வர்க்கம், இனம், பால், நிறம், சாதி என்ற பிளவில் ஏற்படும் உள்ளடக்கத்தில் கூட, சமூக பொருளாதார வடிவமே இதை நிர்ணயம் செய்கின்றது. இதை பிரதிபலித்தே வளர்ப்பு முறை நிர்ணயமாகின்றது. இதை மறுப்பது கற்பனையான வெற்றிடத்தில் ஒழுக்கம் தோன்றுவதாக விளக்குவது கருத்துமுதல்வாதமாகும்.
இந்த கருத்துமுதல்வாத எல்லையில் "பொருளியல் சூத்திரங்களிலோ இன்னும் சொன்னால் சமூகவியல் பகுப்பாய்வுகளிலோ உட்படாத மனதின் "காதல்" எனும் விசயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவதும் அதை அடிப்படைக்கூறு என்பதான சித்தரிப்பு செய்வதும் மார்க்சியமற்ற செயலில்லையா? இதற்கான பதில், "இல்லை" என்பது தான்" என்று ஏங்கெல்ஸை திரித்து புரட்டி வைக்கப்படுகின்றது. ஏங்கெல்ஸ் இணை மண காதல் முதல் ஒருதார மணக் காதல் ஈறாக, அதன் சமூக பொருளாதார ஆய்வு மீதே தனது விளக்க உரையை முன்வைக்கின்றார். இந்த காதலைப் பற்றி லெனின் "உங்களுக்கு நம் இளந்தோழர் பற்றி தெரியுமா? அவர் ஒரு உன்னதமான இளைஞர். இருப்பினும் அவர் எதற்கும் உதவ மாட்டாரென நான் அஞ்சுகிறேன். அவருக்கோ ஒன்று மாற்றி ஒன்றாக காதல் உறவுகள். இது அரசியல் போராட்டத்துக்கோ புரட்சிக்கோ ஏற்றதல்ல. அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள காதல் உறவு கொண்டிருக்கும் பெண்களையோ, பார்க்கிற பாவாடை பின்பெல்லாம் அலைகிற, எல்லா பெண்களின் பின்பும் சுற்றுகிற ஆண்களையோ நான் நம்புவதில்லை, நோ.. நோ.. அது புரட்சிக்குக் கொஞ்சமும் உடன்பாடாயிருக்காது"156 காதலை சமூக பொருளாதார தொடர்பற்ற மனதளவிலான வெற்று பிண்டம் என்று கூறும் போது, கருத்துமுதல்வாதம் அதன் உள்ளடக்கமாகின்றது. காதல் வெற்றிடத்தில் ஏற்படுகின்றதா? காதல் எதையும் சார்ந்திருப்பதில்லையா? அதன் உள்ளடக்கம் என்ன? ஏன் காதலை ஒருதார மணத்தில் பெண்கள் மட்டும் பின்பற்றுகின்றனர்? ஏன் தொடர்ச்சியாக ஆண்கள் காதலிப்பதில்லை? இணைமணத்தில் தோன்றிய காதல் ஏன் அதற்கு முன்பு இருந்த சமுதாயத்தில் (நீங்கள் கருதும் வெற்றிடத்தில்) உருவாகவில்லை? இணைமணத்தில் ஆண் பெண்ணுக்கு முன் பரஸ்பரமாக இருந்த காதலில், ஏன் ஆண் அதை கைவிட்டான்? இந்த கேள்விகளுக்கான ஆய்வும், பதிலும் காதலின் உள்ளடக்கத்தை, அதன் வர்க்கத் தன்மையை, அதன் ஆணாதிக்க கூறை இனம் காணமுடியும். சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் மாறி வந்த எல்லா கட்டத்திலும் காதலின் தன்மை மாறுபடுகின்றது ஏன்? எதற்காக? காதல் சுயேட்சையான இயங்கியல் அற்ற விதியா? அவை மாறி வரும் போது, அதன் உள்ளடக்கம் எதைச் சார்ந்து மாறி வருகின்றது? மனம் என்பது உள்ளடக்கத்தில் என்ன? எங்கிருந்து அது பிரதிபலிக்கின்றது? வெற்றிடத்திலா? அல்லது சமூக பொருளாதார உள்ளடக்கத்திலா? இறை கோட்பாடுகள் ஆத்மா என்ற வரைமுறையை முன்வைத்து அதை சுயேட்சையான, சொர்க்கத்தில் இருந்து யாரோ கட்டுப்படுத்துவதாக கூறுவது எவ்வளவு அபத்தமானதோ, அதுபோல் காதலை சுயேட்சையான மனம் தீர்மானிக்கின்றது என்பது உள்ளடக்கத்தில் ஒன்று தான். முன்பு எல்லாம் அந்த சொர்க்கத்தின் ஆண்டவன், இன்று எல்லாம் அந்த காதலும் அதன் வெளிப்பாடான பாலியல் வக்கிரமும் என்ற நிலைக்கு தடம்புரண்டுவிடுகின்றது. ஆனால் பாதையை விட்டு நகரவில்லை. ஒரு மனிதன் காதல் செய்கின்றான் எனின், அவன் நிறம், இனம், சாதி, வர்க்கம், பொருளாதார கட்டமைப்பு... என்ற வரலாற்று எல்லைக்குள் காதலிக்கின்றான். ஏன்? மனதின் சுயேட்சையாலா? சமூக பொருளாதார காரணத்திலா? இவையும் கூட ஆழமான சுற்றுச் சூழல் , மற்றும் குறிப்பான நிகழ்ச்சிகள், சம்பவங்கள் சார்ந்த காதல் வெளிப்படுகின்றது. இங்கு பாலியல் அம்சம் எவ்வளவுக்கு எவ்வளவு வக்கரிக்கின்றதோ, அந்தளவுக்கு காதல் விபச்சாரமாகின்றது.
ஏகாதிபத்திய உலகமயமாதல் காதலை விற்பனை பொருளாக்கியுள்ளது. இங்கு காதல் என்பது அர்த்தமற்ற (பார்க்க இந்தியாடூடே பிரதிபலிக்கும் மேட்டுக்குடியின் சில கட்டுரைகள்) வகையில், அது தனிமனித சதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஊடகமாக கருதுமளவுக்கு சமுதாயச் சீரழிவுகள் வழிகாட்டுகின்றன. இன்று காதலை வெறும் பாலியல் ஊடகமாக கருதுவதும், பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் தனிமனித சுதந்திர விபச்சாரம் விரிவாகி வளருகின்ற போது, காதலும் அதன் உள்ளடக்கத்தை இழந்து மறைந்து வருகின்றது. அதை மூன்றாம் உலக மேட்டுக்குடிகள் முதல் மேற்கு வரை பொதுவான பண்பாடாக உலகமயமாதல் மாற்றி வருகின்றது. "பொருளியல் சூத்திரங்களிலோ இன்னும் சொன்னால் சமூகவியல் பகுப்பாய்வுகளிலோ உட்படாத மனத்தின் "காதல்" "உலகமயமாதலில் எங்கு போய்விடுகின்றது. மனதில் உருவாகும் இயற்கையான ஒன்றாக காட்டும் காதல், எப்படி உலகமயமாதல் முன் மண்டியிட்டு மறைந்து விடமுடியும். வெற்றிடத்தில் பொருளோ, சிந்தனையோ உருவாக முடியாது. வெற்றிடம் அற்ற நிலையில் உருவாகும் பொருள் சார்ந்த சிந்தனை, எப்படி தன்னிச்சையாக சுயேட்சையாக, மறைய முடியும். மறைகின்ற போதே அங்கு பொருளாதார பண்பாட்டு மாற்றம் நிபந்தனையாகின்றது.
ஒருவன் அல்லது ஒருத்தி காதல் செய்கின்ற போது அழகு, நிறம், சாதி, அந்தஸ்து, கல்வி, தொழில், நுகர்வின் தன்மை, கலை ஆற்றல், ஆடம்பரம், ஏழ்மை, எளிமை என்று இது போன்ற எதாவது ஒரு கூறு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணைந்து தான் காதலை ஏற்படுத்துகின்றது. இதை மறுத்து யாராலும் எதையும் சயேட்சையாக நிறுவிவிட முடியாது. இவை அனைத்தும் சமூக பொருளாதார உட்கூறு சார்ந்த சமுதாய விளைவாகின்றது. இதில் இருந்து பிறக்கும் காதல் சமுதாய தன்மை வாய்ந்தவை.
காதல் சமுதாயப் படிமானங்களில் அதன் தன்மை வேறுபடுகின்றது. சமுதாய பொருளாதார பண்பாட்டு கூறில் வெறும் பாலியல் அம்சமாகவும், மற்றொரு தளத்தில் கூட்டு சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட வாழ்வாக என வேறுபட்டும் காணப்படுகின்றது. இவை பொருளாதார உட்கூறுகளின் மீதான சமுதாயக் கண்ணோட்டத்தில் பிரிந்து வேறுபட்டு பிளவுபடுகின்றது. பெண்ணை உலகமயமாதலில் வெறும் பாலியல் நுகர்வு பண்டமாக, அதன் உறுப்பாக விளக்குகின்ற போக்கில், அங்கு காதல் வெறும் பாலியல் கூறுமட்டுமன்றி, விபச்சார தன்மை வாய்ந்தவையும் கூட. இந்த உலகமயமாதல் சமுதாயத்துக்கு வெளியில் நீடிக்கின்ற காதல் மட்டுமே, ஆண் பெண்ணின் பரஸ்பர தேவையின் அடிப்படையிலான சமுதாய கூட்டுக் கண்ணோட்டம் விரிந்த தளத்தில் காணப்படுகின்றது. இந்த வேறுபட்ட சமுதாய பிளவை மறுத்து காதலை பொதுவான ஒன்றாக, மார்க்சிய தலைவர்களின் பெயரில் திரித்து காட்டுவதன் மூலம், ஏகாதிபத்திய நுகர்வு காதல் விபச்சாரத்துக்கு சமூக நியாயத்தை பெற்றுக் கொடுக்கவே, ஏகாதிபத்திய கோட்பாட்டாளர்கள் தலைகீழாக நிற்கின்றனர்.
காதலை சமுதாயத்தில் இருந்து சுயேட்சையானதாக காட்ட ஏங்கெல்ஸ் எழுதிய "இருபாலாருக்கிடையிலான உறவென்பது அந்த இரு நபர்களுக்கு மட்டுமே தொடர்புடைய ஒரு தனிப்பட்ட விடயமாகும், இதில் தலையிட சமூகத்துக்கு ஒருவித வழியும் கிடையாது. அரசால் கட்டுப்படுத்தப்பட்ட தனிப்பட்ட காதல் - அதாவது மனஉறவு விதிகள் என்பவை யாவும் காதல் மற்றும் நட்பு பற்றிய நடைமுறைகளில் எவ்வித மாற்றத்தையும் உண்டாக்காமல் நாளை மறைந்து போய்விடும்."156 வரவிருக்கின்ற கம்யூனிச சமூகத்தில் காதல் எப்படி இருக்கும் என்பதையே ஏங்கெல்ஸ் தெளிவாக்குகின்றார். வர்க்கங்கள் அற்றுப் போகின்ற போது, வேறுபட்ட ஏற்றத் தாழ்வான சமூக அடித்தளம் வேறுபட்ட பொருளாதார அடிப்படையின்றி மாறுகின்ற போது, காதல் பற்றிய வேறுபட்ட அபிப்பிராயம் மறைந்து போய்விடுகின்றது. அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப்பட்ட விடயமாகி விடுகின்றது. ஆனால் இன்று வேறுபட்ட ஏற்றத் தாழ்வான பொருளாதார வேற்றுமையினால், ஏற்படும் சமுதாய முரண்பாடுகள் காதல் பற்றிய எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்குகின்றது. இதில் சமுதாயத்தை உறிஞ்சி உண்டு வாழும் ஒட்டுண்ணி பிரிவின் காதல், சமுதாய அலகாக வளர்ச்சி பெற்று ஆதிக்க உறவாக மாறுகின்ற போது, மனித உறவுகள் மலினப்படுகின்றன. சமுதாய நோக்கம் கொண்ட உறவுகள் இழிவாக்கப்படுகின்றது. காதல் சமுதாய பிளவு போல் பிளந்து விரிகின்றது. இதில் காதல் பற்றிய விமர்சனமும், வாழ்க்கைப் பிளவுகளும் நிரந்தரமாகி விடுகின்றது. வர்க்க சமுதாய பிளவுடன் அது ஒட்டி நகமும் சதையுமாகி விடுகின்றது. இதை திரித்து யாரும் காதலை சுதந்திரமானதாகவோ, ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ விளக்கிவிட முடியாது.
தொடர்ந்து இந்தக் கும்பல் சார்பாக அஸ்வகோஷ்சின் பிதற்றலைப் பார்ப்போம். "பெண்கள் மீதான ஒடுக்குமுறையில் மிகப் பிரதானமானது பாலுறவு ஒடுக்குமுறையே. பாலுறவு விடுதலை இல்லாமல் பெண் விடுதலை இல்லை."156 என்று சமுதாய மேல் கட்டுமானம் மீதே, ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சமுதாயத்தை குறுக்கி காட்டுவதன் மூலம், தமது சொந்த வக்கிரத்தை விபச்சாரமயமாக்குகின்றனர். பாலுறவு ஒடுக்குமுறைக்கு முன்பே பெண் பாலியல் பண்டமாக இருப்பது இயங்கியல். பெண் பாலுறவு ஊடாக இழிவு படுத்தப்படும் போக்கு எங்கிருந்து, எப்படி தோற்றம் பெறுகின்றது. பெண் இழிந்து, நசிந்து வாழும் வாழ்க்கையில் இருந்தே பாலுறவில் ஒடுக்கப்படுகின்றாள். பெண் ஏன் எப்படி இந்த இழிநிலைக்கு மாற்றப்படுகின்றாள். சமுதாய வளர்ச்சியில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையூடாக, அவளின் உழைப்பு சமுதாய மதிப்பிழந்த போதே, தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் வக்கற்றுப் போனாள். இந்த வக்கற்றுப்போன சமுதாயத்தில் பெண் அனைத்து தளத்திலும் சூறையாடப்பட்டாள். இங்கு பாலியல் சுரண்டலும், அதில் ஒரு வடிவம் மட்டுமேயாகும். பெண் மீதான பல்வேறு ஒடுக்குமுறையில் பாலியல் ஒரு அம்சம் மட்டுமேயாகும். இங்கு பல்வேறு பெண் ஒடுக்குமுறையை கைவிட்டு ஒன்றைப் பிரதானப்படுத்துவதன் மூலம், உண்மையில் ஆணாதிக்க உள்ளடக்கத்தை பூசி மெழுகி பாதுகாப்பதாகும். பெண் எப்படி, எதனால் அடிமைப்படுத்தப்பட்டாள் என்ற வரலாற்று இயங்கியல் மீது, பெண் ஒடுக்குமுறையை இனங்கண்டு போராட வேண்டும்.
இதை மறுத்து பலதில் ஒன்றை முதன்மைப்படுத்தி காட்டுவதன் மூலம், ஆணாதிக்க அமைப்பில், பெண்ணை பொது விபச்சார தளத்துக்கு அழைத்து வர வேண்டும் என்ற கனவு மட்டுமே நோக்கமாக உள்ளது. இதை உறுதி செய்வது போல் "ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் காதலிக்க முடியும் என்றால் ஒரு பெண்ணும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைக் காதலிக்க முடியும்.156 தீர்வு ஆணாதிக்க விபச்சார வழியில் முன்வைப்பதன் மூலம், ஆணாதிக்க அமைப்பில் பெண்ணை நிர்வாணப்படுத்த சபதம் ஏற்கின்றனர். ஆணாதிக்க அமைப்பில் ஆண் பலதார மணத்தில் பல பெண்களை சூறையாடும் பண்பாட்டுத் தளத்தில், பெண்ணையும் மாற்றவேண்டும் என்று ஏகாதிபத்திய கூச்சல்களாக இவை எழும்புகின்றது. ஆணாதிக்கம் தனது சொந்த வக்கிரத்தில் பெண்ணை நுகர்வதை விமர்சித்து அதை வேரறுக்க போராடுவதுக்கு பதில், ஏகாதிபத்திய நுகர்வு விபச்சாரத்தை பெண்ணுக்கு பூச்சூட்ட விரும்புகின்றனர்.
இந்த பூச்சூட்டை நிறைவு செய்ய "குடும்ப வாழ்க்கை வெற்றிகரமானாலும் அது சிறைதான். சமூகத்திற்கு மட்டுமல்ல, தனிமனிதனின் படைப்புத் திறனையும் விலங்கிட்டுச் சிறையிடுகிறது"156 என்று கூறுவது ஏன்? பெண்ணை குடும்பம் சிறையிடுகின்றதா அல்லது தனிச்சொத்துரிமை அமைப்பு சிறையிடுகின்றதா? இங்கு குடும்பம் எதை அடிப்படையாக கொண்டு உருவாகின்றது. குடும்பத்தின் அடிப்படை என்ன? வெறும் பாலியல் தேவை மட்டும்தானா? இல்லை இதற்கு வெளியில் எதுவுமில்லையா? ஆணாதிக்க அமைப்பில் ஒருதாரமணத்தின் உள்ளடக்கம் என்ன? இவைகளை எல்லாம் ஏகாதிபத்திய பெண்ணியக் கோட்பாட்டில் நிராகரித்தபடி, குடும்பம் பெண்ணை சிறையிடுகின்றது, எனவே பெண்களை வெட்ட வெளியில் குடும்பத்துக்கு வெளியில் பொது விபச்சாரத்தில் ஈடுபட அழைப்பதே, இதன் அரசியல் உள்ளடக்கமாகும். இதன் மூலம், குடும்பம் பெண்ணின் சிறையாக இருக்க, அடிப்படையான தனிச் சொத்துரிமை அமைப்பை, சேதமின்றி மூடிப்பாதுகாப்பதாகும். இதை சாதிக்க "முழுமையான பாலுறவுச் சுதந்திரமும் அதற்கான சமூக அங்கீகாரமுமே பெண் விடுதலையைச் சாத்தியப்படுத்தும்"156 என்ற கூற்றின் ஊடாக, ஏகாதிபத்திய பெண்களின் பொதுவான டிஸ்கோ விபச்சாரத்தை முன்வைக்கின்றனர். பாலியல் சுதந்திரம் பெற்ற மேற்கத்திய பெண் ஆணாதிக்க அமைப்பில் இருந்து விடுதலை பெற்றுவிட்டாளா? இல்லை அவள் ஆண்களின் நுகர்வுக்கு திறந்த பதுமையாகியுள்ளாள். இதைத் தான் இந்திய கோட்பாட்டு தரகுகள் கோருகின்றனர். மார்க்சிய பெண்ணியத்தை உள்ளடக்கம் மீது விமர்சிக்காது, செம்மறி ஆடுபோல் மேய்ந்து விமர்சிக்கும் இவர்கள், தமது கோட்பாடுகளை ஏகாதிபத்திய பெண்ணியத்தில் இருந்து வேறுபிரித்தறியவோ, விளக்கவோ முயடியாதவர்கள்.
அடுத்து பன்றித் தொழுவத்தில் புரண்டு எழுகின்ற சாரு நிவேதிதாவின் வக்கிரங்களைப் பார்ப்போம். "யோனி மைய வாதம் ஒதுக்கப்பட்டுப் புட்ட உறவு, வாய் உறவு எனப் பாலுறவின் ஏனைய கூறுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். புட்டம், வாய் போன்றவற்றிற்குச் சமமான முக்கியத்துவம் யோனிக்குத் தரப்படவேண்டும்"156 இதன் மூலம் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும் என்கின்றார். நீலப்படம் (புளூபிலிம்) காட்சிகள் வக்கிரத்தில் மூலதனத்தை குவிக்கின்ற ஆணாதிக்க சந்தை மையத்தில் இருந்து, பொறுக்கி வைக்கின்றார். இயற்கை மீதான பாலியல் உறவு, வக்கிரமான நுகர்வு கவர்ச்சியால் கற்பழிக்கப்படும் போது, அதுவே நுகர்வின் எல்லையாகிவிடுகின்றது. இந்த நுகர்வு பெண்களை இழி நிலையில் அலங்கோலப்படுத்தி சூறையாடுவதில் பின் நிற்பதில்லை. பெண்ணின் இயற்கை உறுப்புகளின் செயற்பாடுகளை மறுக்கும் ஆணாதிக்கம், பெண்ணின் எல்லா உறுப்பையும் பாலியல் கவர்ச்சி அங்கமாக்குகின்றது. குழந்தைக்கு பால் கொடுக்கும் பால் சுரப்பி (பெண்ணின் மார்பு) அதன் உள்ளடக்கம் இழந்து, ஆணின் கவர்ச்சி பாலியல் ஊடகமாக மாறியது போல், பெண்ணின் வாய், புட்டத்தையும் பாலியல் ஊடகமாக்க ஆணாதிக்கம் துடியாய்த்துடிக்கின்றது. மனித உறுப்புகளின் இயற்கை சார்ந்த பரிணாமத் தேர்வை தனிச் சொத்துரிமை மறுத்த, தனிச்சொத்துரிமை ஆணாதிக்க வழியில் மூலதனத்துக்கு அடிமையாக்கியது போல், பெண்ணின் உறுப்புகள் அதன் போக்கில் ஆணின் பாலியல் உறுப்புகளாகிப் போனது. இதை மேலும் உலகமயமாதலில் விரிவாக்கி பெண்ணை, எல்லா உறுப்பு வழியாகவும் புணர்ந்து வக்கரிக்க ஆணாதிக்கம் கெக்கலிக்கின்றதன் விளைவே, புளுபிலிம் பாணி கோட்பாட்டு கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை வைக்கும் மரமண்டை "சோசலிச உருவாக்கத்தில் வெற்றியடைந்துள்ள சீனாவில் குடும்பம் சிதறி பெண்கள் ஒடுக்குதலுக்குள்ளாகியிருப்பதும் சுவீடன் போன்ற முதலாளித்துவ நாடுகளில் குடும்பக் கட்டுத் தளர்ந்து பெண் விடுதலை பெருமளவில் சாத்தியமாகி உள்ளதையும் ஒப்பு நோக்க வேண்டும்"156 எனவே முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை நக்க விரும்புகின்றனர். சீனாவில் பெண்களின் மீதான ஆணாதிக்க அடக்குமுறைகளை, புரட்சி தனது சொந்த வர்க்கப் போராட்த்தின் ஊடாக தொடர்ச்சியாக எதிர்த்து போராடி வந்தது. எந்த மூன்றாம் உலக நாடுகளையும் விடவும், மேற்கில் ஆணாதிக்க பிடிப்பை விடவும் சீனா தனது பாதையில் முன்னேறி வந்தது. ஆனால் முதலாளித்துவம் 70 களின் இறுதியில் மீண்டும் சுரண்டும் வர்க்கம் ஆட்சியை பிடித்தது முதல், ஆணாதிக்கம் மீண்டும் வேதாளமாகியது. இதை எடுத்து சோசலிசம் என்று காட்டுவதும், பிதற்றுவதும் ஏகாதிபத்தியத்தின் எச்சில்கள் ஆகும். சோசலிசத்தின் உள்ளடக்கம் தெரியாத பாலியல் வக்கிரத்தை வைத்து புகழ்பெற்று பிழைக்கும் ஆணாதிக்கவாதிகள், சீனாவை திரித்துக் காட்ட மட்டுமே முடியும்.
சுவீடன் போன்ற நாடுகளில் பெண் விடுதலையடைந்து விட்டாள் என்பது நகைப்புக்குரியது. பெண் பாலியலில் பெற்ற சுதந்திரம் உள்ளடக்கத்தில் ஆணாதிக்க வகைப்பட்டவை. ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமை சுதந்திரத்தில் பெண்ணை வரைமுறையின்றி பாலியல் ரீதியாக அனுபவிக்கும் உரிமையை பெற்றுக் கொள்ள, பெண்ணை விபச்சார நிலைக்கு ஆணாதிக்கமயப்படுத்தியது தான் நிகழ்ந்தது. மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்கள் முதல் பார்க்கும் தொலைக்காட்சி ஈறாக பெண் பாலியல் அங்கமாக வக்கிரப்படுத்தி காட்டப்படுகின்றது. இதில் இருந்தே, இந்த பெண் விடுதலையின் வக்கிரத்தை புரிந்து கொள்ளமுடியும். இங்கு குடும்பம் மீள புதிய வடிவில் இணைவது நிகழுகின்றது. பழைய புனித மதக் குடும்பங்கள் தகர்ந்து போக, இணைந்து வாழும் புதிய கூட்டுக் குடும்பங்கள் உருவாகின்றன. அவை கூட நீண்ட ஆயுள் கொண்டதாக இருப்பதுடன், அங்கும் ஆணாதிக்க சமூக கூறுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. பொருளாதார கட்டமைப்பு தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்கமாக உள்ளதால், மாறி வரும் குடும்பங்கள் கூட அதற்குள் சிக்கிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. சமூக பொருளாதார வடிவங்கள் தான் குடும்பத்தின் பண்பை தீர்மானிக்கின்றது. மேற்கு நாடுகள் ஏகாதிபத்திய கட்டமைவில் ஆணாதிக்க வடிவமாக இருப்பதால், அங்கு வாழும் மக்கள் அதன் எல்லையின் விரிவாக்கத்துக்குள், தமது பாலியல் மற்றும் குடும்ப பண்பாட்டை தீர்மானிக்கின்றனர்.
சாரு நிவேதிதா தனது பலதார வரைமுறையற்ற விபச்சார பாலியலுக்கு தடையான காரணத்தை புரிந்து கொள்ளும் வடிவத்தைப் பார்ப்போம். "யோனி என்பது இனப்பெருக்க மையமாக அமைந்து பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக உள்ளது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண் பெண் உறவு கட்டமைக்கப்பட்டுக் குடும்ப வரையறை என்னும் அதிகாரத்திற்குள் ஒடுக்கப்படுகிறது"156 என்ற எடுகோள், ஏகாதிபத்திய வரைமுறையற்ற நுகர்வு எல்லையில் பெண்ணை நுகரும் ஆணாதிக்க கனவுகளாக உள்ளது. கர்ப்பம் பற்றிய பயம் இல்லை என்றால் பெண்களை ஏமாற்றவும், பெண்களை இலகுவாக சோரம் போக அழைக்கவும் முடியும் என்ற ஆணாதிக்க நப்பாசை இப்படி புலப்படுகின்றது. உதாரணமாக இந்திய மேட்டுக் குடிகள் ஆண் பெண் வேறுபாடற்ற நிலையில், டிஸ்கோ கலாச்சாரத்தில் குடி கும்மாளமாக பாலியல் வக்கிரத்தில் ஈடுபடும் போது, கர்ப்பம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. இந்த மேட்டுக்குடிகளிள் ஏகாதிபத்திய நுகர்வு ஒட்டுண்ணித் தனத்தையே, இந்த ஏகாதிபத்திய கோட்பாட்டாளர்கள் பெண்விடுதலையாக முன்வைத்து, ஆணாதிக்க பலதார மணத்தை இலகுபடுத்த பார்ப்பனிய வழியில் சதிராட்டம் போடுகின்றனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மாலதி, பாலற்ற தன்மை விடுதலையின் நிபந்தனை என்றபடி "பாலற்ற நிலை தான் விடுதலையின் உச்சம் என்றாகும் போது ஓரினப் பால் புணர்வு இங்கு அதிகாரத்திற்கெதிரான செயற்பாடாக மாறும் போது உடல்களின் மீதான ஆதிக்கம் விலகும்"156 இயற்கையின் பால்த் தன்மையை மறுப்பது ஆணாதிக்க அம்சமாகும். இயற்கை இன்றி மனிதனில்லை. மனித வரலாற்றை இயற்கை வரலாறாக காண்பதும், விளக்குவதும் தொடரும் வரை, இயற்கையில் பால் வேறுபாட்டை மறுப்பது ஆணாதிக்க குணாம்சமாகும். இயற்கையான பாலியல் வேறுபாடு மறுக்கப்படும் எல்லா தனிச்சொத்துரிமை ஆணாதிக்க தன்மையில், மனித குல இழிவு காணப்படுகின்றது. இயற்கையான பாலியல் வேறுபாட்டை மறுத்து நலமடித்த ஆணாதிக்கம், பெண்ணின் இயற்கையான பாலியல் உணர்வுகளை இழிவாக்கி சிறுமைப்படுத்தியதை, மீண்டும் உறுதி செய்யவே, அதை தொடர்ந்து மறுக்க பிரகடனம் செய்கின்றனர். ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து இயற்கையான பாலியல் வேறுபாட்டை மறுத்து, பெண்ணை இயற்கை அல்லாத வழியில் அடிமையாக்கிய போது, இயற்கையான உணர்ச்சிகளை செயற்கையாக தீர்த்துக் கொள்வது புதிய வடிவமாகியது. செயற்கையான பாலியல் வடிவங்கள் அனைத்தும் இயற்கையான பாலியல் வேறுபாட்டை உள்ளடக்கமாக கொள்கின்றது. இது பால் வேறுபாட்டை மறுக்கின்ற போதே, ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்றது. பாலற்ற தன்மையை ஒருக்காலும் உருவாக்க முடியாது. அது இயற்கையானது. இயற்கையான பால் வேறுபாட்டை, அங்கீகரிப்பதும் அதை இயற்கையாக பேணுவதும் ஆணாதிக்க ஒழிப்பின் முன்நிபந்தனையாகும். பால் வேறுபாட்டை மறுத்து அதை இழிவானதாக தனிச்சொத்துரிமை கண்ணோட்டத்தில் விளக்கிய போதே, பெண் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டாள். இயற்கையான பால் வேறுபாட்டை மறுத்து முன்வைக்கும், பாலியல் மாற்றுகள் அனைத்தும் செயற்கையான ஆணாதிக்க வகை மாதிரிகளே. இது ஆணாதிக்கத்தை தக்க வைக்கும், அச் சமூகத்துக்கே உரிய பூர்சுவா நடைமுறைகள் மட்டுமே. இது போன்று இந்தக் கும்பலைச் சேர்ந்த, ஏகாதிபத்திய பெண்ணியத்தை முன்வைத்து மார்க்சியத்துக்கு எதிரானவர்கள், இந்த நூலில் எல்லையற்ற வகையில் ஆணாதிக்க அபத்தங்களை தமது வக்கிரத்துடன் அள்ளிக் கொட்டியுள்ளனர். அதற்கு சில மாதிரிகளே இவையாகும்.
"மார்க்சியம் - பெண்ணியம் உறவும் முரணும்" என்ற நூலில் இருந்து கெய்டி கார்ட்மன் "மார்க்சியத்தையும் பெண்ணியர்கள் இணைக்க அண்மையில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் பெண்ணியர்கள் என்ற முறையில் எமக்கு நிறைவளிப்பதாய் இல்லை. காரணம், முதலாளியத்துக்கு எதிரான "பெரும்" போராட்டத்துக்கு கீழ்ப்பட்டதாகவே அவை பெண்ணியப் போராட்டத்தை முன்வைக்கின்றனர். முன்னர் சொன்ன உவமையிலேயே சொல்வதானால், எமக்கு தேவை ஒரு ஆரோக்கியமான திருமணமே. அவ்வாறு இல்லையெனில் மணவிலக்கே எமக்குத் தேவைப்படுகிறது"158 மார்க்சியம் என்றால் என்ன? சமுதாயத்தின் அனைத்து முரண்பாட்டையும் விலத்தி மார்க்சியம் இருக்க முடியுமா? மார்க்சியம் பெண்ணியத்தையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறம் இணைப்பதாக ஒப்பாரி. இரண்டும் பாட்டாளி வர்க்கம் மீது அவதூற்றை அடிப்படையாக கொண்டவை. பெண்ணியத்துடன் மார்க்சியம் திருமணம் செய்ய, மார்க்சியம் ஆணாதிக்க தன்மை கொண்டவையா? மார்க்சியம் இனம், நிறம், பால், சாதி வேறுபாடற்ற ஒரு வர்க்க போராட்ட கோட்பாடாகும். மார்க்சியம் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல. சமுதாயத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் பாட்டாளி வர்க்க தத்துவமாகும். இது நிறம், மதம், பால், சாதி கடந்து, ஆண் பெண்களின் போராட்ட மார்க்கத்தை வழிகாட்டுவதாகும். இதை மறுத்து ஆண்களின் போராட்ட மார்க்கமாக மார்க்சியத்தை காட்டுவதன் மூலம், ஆணாதிக்கம் கொண்டதாக மறைமுகமாக காட்டுவதன் நோக்கம் என்ன? மார்க்சியத்தை எதிரிடையாக நிறுத்தி நிற்கும் பெண்ணியத்தின் முதலாளித்துவ நாற்றத்தை "சென்ற்" இட்டு மூடிமறைப்பதாகும். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணை அதில் இருந்து பிரிக்க முனையும் நோக்கம் திட்டவட்டமாக ஏகாதிபத்திய நோக்கம் கொண்டவை. பெண் அடிமைப்பட்ட வரலாற்றில் பெண் தனித்து நின்று எப்படி தன்னை விடுவிக்க முடியும். சமூக பொருளாதார அமைப்பில் சமுதாயமயமாகியுள்ள ஆணாதிக்கம் எப்படி, தனித்து நின்று சமுதாயத்தில் இருந்து ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும். ஆணாதிக்கம் சமுதாயத்தில் இருந்து தனித்துவமானதா? பெண்கள் சமுதாயத்தில் இருந்து தனித்துவமானவர்களா? இப்படித் தான் ஆணாதிக்கம் விளக்குகின்றது. இதைத் தான் பூர்சுவா பெண்ணியமும் மீள ஒப்புவிக்கின்றது. ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் நாற்றம் கண்ட சீழ் என்பதை மறுப்பது, தனிச் சொத்துரிமை கண்ணோட்டம் கொண்ட பெண்ணியத்தின் அரசியல் விபச்சாரமாகும். இதில் இருந்தே மார்க்சியத்திடம் விவாகரத்தை வர்க்க அடிப்படையில் கோருவது உள்ளடக்கமாகின்றது.
இதை நியாயப்படுத்தும் வகையில் "தொழிலாளி வர்க்கத்தை அது பிளவுபடுத்துகிறது"158 என்று மார்க்சியம் கருதுவதால், நாம் பிரிந்து இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது தொழிலாளிப் பெண்ணும், முதலாளித்துவப் பெண்ணும் ஜக்கியமாக எப்படி ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும். தெரிந்தால் சொல்லுங்கள். ஆணாதிக்கம் எப்படி தனிச் சொத்துரிமை அமைப்புக்கு புறம்பாக உயிர் வாழ்கின்றது. தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை பூர்சுவா பெண்ணியம் வேட்டு வைக்க கனவு காண்கின்றது. அதில் இருந்து தான் இதை உபதேசிக்க முனைகின்றனர்.
தொடர்ந்து தமது பூர்சுவா வர்க்க நலனை தக்க வைக்க "பெண்கள், பெண்கள் என்ற முறையில் ஒடுக்கப்படுவதற்கு மூலதனமும் தனிச் சொத்தும் மட்டுமே காரணமாக இல்லை. ஆகவே, அழிவினால் மட்டுமே பெண்களுக்கு விடுதலை கிட்டிவிடாது."158 என்று தமது பூர்சுவா வர்க்க நலனில் இருந்து முன் வைக்கும் போது, எவை ஆணாதிக்கத்தை ஒழிக்கும் என முன்வைக்க தவறி விடுகின்றனர். பெண் மூலதனம் சார்ந்த தனிச் சொத்துரிமையால் அடிமைப்படுத்தப்பட்டாள் என்ற அடிப்படைக் காரணத்தை மறுப்பதில் இருந்து, இது உருவாகின்றது. பெண்ணின் உழைப்பு மூலதனத்துக்கு முன்னால் பெறுமானம் இழந்த நிகழ்ச்சியே, பெண்ணை அடிமையாக்கியது. இதை மறுத்து நிற்கும் பூர்சுவா பெண்ணியம், எப்படி பெண் அடிமையானாள் என்பதையிட்டு அலட்டிக் கொள்வதில்லை. தனிச்சொத்துரிமை அழிகின்ற போது, அரசு அழிவது போல் ஆணாதிக்கமும் அழிந்து போகும். அழிந்து போகாது எனில், எப்படி என்றல்லவா விளக்க வேண்டும். சோசலிச புரட்சி நடந்த நாடுகளில் சட்டப்படி தனிச் சொத்துரிமை அமைப்பு தகர்க்கப்பட்ட போதும், உள்ளடக்கத்தில் அங்கு இரண்டு வர்க்கத்துக்கிடையில் போராட்டம் தொடர்ச்சியாக இருப்பதால் தான், அது சோசலிச சமூகமாக இருந்ததே ஒழிய கம்யூனிச சமூகமாக இருக்கவில்லை. இதில் இருந்தே அங்கு முதலாளித்துவ மீட்சி நிகழ்ந்தது. புரட்சி முடிந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது அல்லது மாறிவிட வேண்டும் என்ற அராஜகவாத கோட்பாட்டை, பூர்சுவா பெண்ணியம் எடுத்து, அதில் இருந்து மார்க்சியம் மீது சேறடிப்பதில் அர்த்தமில்லை.
ஆண் பெண்ணின் அடிப்படையான ஆணாதிக்க பிளவுக்கு ".. பிரிவினைக்கு முதலாளியமே காரணம் என இட்டுக்கட்டப்பட்டது"158 என்று கூறி இதை மறுக்கின்றார். ஆண் பெண் பிளவுக்கு சுரண்டும் வர்க்கமே காரணம் என்பதை எந்த பூர்சுவா பெண்ணியமும் ஏற்றுக் கொள்வதில்லை. பூர்சுவா பெண்ணியம் எப்போதும் அனைத்து ஆண்கள் பெண்கள் மீது ஜனநாயகத்தை கட்டமைத்துள்ளதாக உருவாக்கியுள்ள பிரமையை இது தகர்த்துவிடும் என்ற ஒரே கோணத்தில் இதை மறுக்கின்றனர். இதில் இருந்தே வர்க்கம் கடந்த பெண்ணியத்தை முன்வைப்பதும், பாட்டாளி வர்க்கத்தை எதிராக வைத்து விவாகரத்தை முன்நிறுத்துவதுமாகும். ஆண் பெண்ணின் பிளவு சுரண்டும் வர்க்கத்தின் தனிச்சொத்துரிமை உள்ளடக்கமாகும். இது காலத்துக்கு காலம் மாறிவந்த பொருளாதார வளர்ச்சியை பிரதிபலித்து, சுரண்டும் வர்க்கத்தின் மாறி வந்த வௌவேறு வரலாற்று வர்க்க பிரதிநிதிகள் பிளவை தீவிரமாக்கினர். ஆணாதிக்கம் இதன் ஊடாக விகாரமாகி வந்ததைத் தவிர, வேறு எதையும் ஆண் பெண் உறவில் மனித குலத்துக்கு சுரண்டும் வர்க்கம் தந்துவிடவில்லை.
"...பெண்கள் மட்டும் வீட்டு வேலையிலும் ஆண்கள் தொழிலிலும் ஈடுபட நேர்ந்தது ஏன்? பெண்களின் மீது ஒழுங்கு முறைப்படி அமைந்த ஆண்களின் மேலாதிக்கம் என்ற ஆணாதிக்க முறைமையுடன் தொடர்புபடுத்தாமல் நாம் இதை விளக்க முடியாது"158 என்று பூர்சுவா பெண்ணியத்தின் அலட்டல் புலம்பலாக பிரதிபலிக்கின்றது. ஆண்களின் மேலாதிக்கம் எப்படி உருவானது? வானத்தில் இருந்து குதித்து எழுந்ததா? ஆணாதிக்கம் ஆண்களின் மேலாண்மை சார்ந்த சுயேட்சையா? ஆணின் அடக்குமுறை தனிச் சொத்துரிமை மீதான ஆதிக்கத்தில் இருந்து உருவானது. அது உபரியை திரட்டியதில் இருந்து வெளிப்படுகின்றது. இந்த உபரி ஆணுக்கு பெண்ணை விட அதிகமான சமுதாய உரிமையை கொடுத்தது. பெண் வீட்டுக் கடமையில் தன்னை நிறுத்திவிடவில்லை. மாறாக விவசாயம், மிருக வளர்ப்பு போன்ற பல துறைகளில் முற்றாக ஆதிக்கம் பெற்று உழைப்பை சமுதாயத்துக்கு வழங்கினாள். ஆனால் சமுதாயத்தில் உபரி சில துறைகளில் ஏற்பட, உபரி மனிதனை அடிமைப்படுத்த, உபரி முழுமையாக அனைத்து செல்வத்தையும் தனக்கு அடிமைப்படுத்தியது. பெண் உபரியை உற்பத்தி செய்யும் வகையில், தனது உற்பத்தியை உருவாக்கும் தன்மை, அவளின் வேலைப் பிரிவினை தடையாக்கியது. பெண் இதன் போக்கில் உபரி அற்ற நிலையில், உபரியை திரட்டியும் ஆண்களின் அடிமையானாள். இந்த அடிமைத்தனம் ஆணுக்கு சேவை செய்வதை நிபந்தனையாக்கியது. இன்று மூன்றாம் உலக நாடுகளின் கிராமப் புற விவசாயம், தேசிய முதலாளித்துவம் உபரியை உற்பத்தி செய்ய முடியாத வகையில், அதன் உற்பத்திப் பெறுமானம் மூலதனத்துக்கு முன் இழக்கின்ற போது, மேற்கின் முன் அடிமையாக அடிமைப்பட்டு கூனிக் கூறுகி வாழ்வது எப்படி சாத்தியமானதோ, அதுவே இன்று பொதுவான ஆணாதிக்க உருவாக்கமாகும். கூலி உழைப்பாளி இயந்திரத்தின் உறுப்பாக மாற்றப்பட்ட நிலையில், அதன் அடிமையாக வாழ எப்படி கற்றுக் கொள்கின்றானோ, அது பெண்ணுக்கும் நிகழ்ந்தது. பெண் தனிப்பட்ட ஆணின் அடிமையல்ல. மாறாக ஆணாதிக்க சமூகத்தின் அடிமையாக அல்லவா, இருக்கின்றாள். தனிப்பட்ட பெண் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருந்து சுதந்திரமாக இருப்பதாக பாசங்கு செய்ய முடியுமே ஒழிய, விடுதலை பெற முடியாது. சமூக பொருளாதார அமைப்பே இதை தீர்க்கமாக வரையறை செய்கின்றது. இது தான் பின்னால் வேலைப் பிரிவினையை மேலும் மேலும் துல்லியமாக்கியது.
இதை மறுக்கும் வாதம் "முதலாளித்துவச் சமூக உறவுகள் முழுச் சமூகத்தையும் தழுவும்போது, பெண்கள் அதிகரித்த அளவில் சுயமாகச் சம்பாதிப்பவர்களாக மாறியிருப்பர். அதனால் குடும்பத்தில் ஆண்களுக்கு அடங்கிப் போக மறுப்பர். குடும்பமானது குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் ஒடுக்கி வருவதால், குடும்பத்துக்கு வெளியே சுதந்திரமாக வாழமுடியும் என்ற ஒரு சூழலில் குடும்பம் ஒழிந்துவிடும்"158 என்று பூர்சுவா பெண்ணியம் விளக்குகின்றது. ஆணாதிக்கத்தை தனிப்பட ஆணுக்கு அடங்கிப் போகும் குடும்ப எல்லைக்குள் மட்டும், குறுக்கிக் காட்டும் குருட்டுத் தனத்தில் இது பிரதிபலிக்கின்றது. பெண்கள் வீட்டில் வாழ்ந்த போது, வீடு மற்றும் விவசாயத்தில் உழைப்பில் ஈடுபட்டாள். ஆனால் சமூக அங்கீகாரம் பெற்ற உபரியை திரட்டும் உற்பத்தியில் பங்குபெறுவது மறுக்கப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் உபரியை அதிகம் திரட்ட, பெண்ணின் மலிவு கூலி மற்றும் தொழிலாளர் படையின் எண்ணிக்கை அடிப்படையில் பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்தியது. இந்த முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் பெரும் பகுதியின், தனிச் சொத்துரிமையை கைப்பற்றி குவித்து வரும் போது, ஆண் தனிச் சொத்துரிமையின் கூலியாக்கப்பட்டான். இது தனிச் சொத்துரிமை சார்ந்த குடும்ப அமைப்பை சிதறப் பண்ணியது. கூலி என்பது வாழ்வதற்கே முடியாத வறுமையாகின்ற போது, பெண் உழைப்பில் ஈடுபடுவது நிபந்தனையானது. இங்கு கூலி வாழ்வதற்கு அடிப்படை உள்ளடக்கமாக உள்ளதாலும், தனிச் சொத்துரிமையை திரட்ட முடியாத நிலையிலும், பாரம்பரிய குடும்ப அமைப்பு சிதைந்தது. இது சமூக மயமாகின்ற போது, மூலதனத்தின் பிரதிநிதிகள் தமது குடும்ப அமைப்புக்கும், உள்ளூர வேட்டு வைப்பது அவர்களை மீறியது. அதாவது முதலாளித்துவம் எப்படி பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கி தனக்கு தானே வேட்டு வைக்கின்றதோ, அதுவே குடும்பத்துக்கும் நிகழ்கின்றது.
இங்கு மேற்கு முதலாளித்துவ குடும்பங்களில் பெண்ணின் உழைப்பு கூட, மூன்றாம் உலகமக்களின் மீதான அடிமைத்தனத்தில் இருந்து பெறப்படும், கொள்ளை உபரியில், தன்னை சுதந்திரமான பூர்சுவா பெண்ணாக பிரகடனம் செய்கின்றாள். இது மற்றைய நாட்டு உழைப்பாளர்களின் இரத்தத்தை உறுஞ்சுவதை அங்கீகரித்தே, சுதந்திரம் பற்றி பிதற்ற முடிகின்றது. ஆனால் ஆணாதிக்கம் குடும்பம் சார்ந்ததா? இல்லை, அது தனிச்சொத்துரிமை சார்ந்தது. இது குடும்பத்துக்கு வெளியிலும் ஆணாதிக்கத்தை சமூகத்தன்மையாக்கியுள்ளது. சுதந்திரமாக ஆணைப் போல் பெண் உழைக்கும் நாடுகளில், குடும்பம் சிதைந்த நிலையில், ஆணாதிக்கம் அற்றுவிட்டதா? இல்லையெனின் அதன் ஊற்று மூலம் என்ன? குடும்பச் சிதைவு தனிச் சொத்துரிமை சிதைவால், பரந்துபட்ட மக்களிடையேயான சிதைவில் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் குடும்பச் சிதைவு ஆணாதிக்கத்தை ஒழித்துவிடவில்லை. ஆணாதிக்கம் முதலாளித்துவத்தின் உள்ளடக்கமாக உள்ளது. "காலப் போக்கில் முதலாளியம் ஆணாதிக்கத்தை சகித்துக் கொள்ளாது"158 என்ற பூர்சுவா பிதற்றல்கள், ஏகாதிபத்திய நாட்டில் கால் தூசுக்கு சமமானதாக இருக்கின்றது. குடும்பத்துக்கு வெளியில் காணப்படும் கேவலமான விகாரமான ஆணாதிக்கம், குடும்பத்துக்குள் குடும்பம் சார்ந்த பழைய ஒடுக்குமுறையில் இருப்பதில்லை. குடும்பம் சார்ந்த ஆணாதிக்கம், குடும்பத்தில் தனிச் சொத்துரிமையை சிதைத்து அதே தனிச் சொத்துரிமையின் கூலியானதால், அங்கு குடும்பம் சார்ந்த வன்முறை குறைந்து போனது. ஆனால் தனிச் சொத்துரிமை ஜனநாயகம் சமூக மயமாகி மூலதனம் குவிவதால், சமூகம் சார்ந்த ஆணாதிக்கம் மிக தீவிரமாக வக்கரித்து விரிவாகின்றது.
மூலதனத்தின் புனிதத்தை பாதுகாக்க பூர்சுவா பெண்ணியம் "மூலதனம் குடும்பத்தை அழித்துவிடும் என்ற வாதமானது, குடும்ப வாழ்க்கையை ஈர்ப்புமிக்கதாக்கும் சமூகச் சக்திகளை அலட்சியப்படுத்துகிறது"158 என்று கூறுவதன் மூலம், மூலதனத்தின் குவிப்பை மூடிமறைப்பதன் மூலம், தனிப்பட்ட பரந்துபட்ட மக்களின் குடும்பத்தின் சிறு மூலதனம் அழிக்கப்படுவதை, மூடிமறைக்க பிரயத்தனம் செய்கின்றார். மூலதனக் குவிப்பு எங்கிருந்து பறித்தெடுத்து குவிக்கப்படுகின்றதோ, அங்கே தனிச் சொத்துரிமை சிதைகின்றது. இதனால் தனிச் சொத்துரிமை சார்ந்து நீடித்த குடும்பங்கள், பாரம்பரியம் மிக்க குடும்பத் தன்மையை, பொருளாதார வடிவில் சிதைத்து விடுகின்றது. இதை யாரும் அலட்சியப்படுத்தவில்லை, மாறாக மூலதனம் குடும்பத்தின் தனிச் சொத்துரிமையை அலட்சியப்படுத்தி, குடும்பத்தை தனது மூலதன வளர்ச்சியில் சிதைக்கின்றது. முதலாளித்துவம் எப்படி பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கி தனக்கே வேட்டு வைக்க முயல்கின்றதோ, அதுவே மூலதனத்தின் பின் குடும்பத்துக்கு நிகழ்கின்றது. ஆனால் மக்கள் புதிய இணை குடும்பத்தை மூலதனத்துக்கு வெளியில் தேர்ந்து, சேர்ந்து வாழ்வது அதிகரிக்கின்றது. இதுவும் தனிச் சொத்துரிமை சமூக போக்கில் கறைபடிந்த போதும், முன்னேற்றகரமான புதிய குடும்பங்களாக உருவாகின்றது. இது தனிச் சொத்துரிமை வாரிசு கண்ணோட்டத்தை இட்டு அலட்டிக் கொள்வதில்லை?. இதனால் பெண் ஆணுக்கு வாரிசு பிள்ளையைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருப்பதில்லை. உழைப்பு சமூக மயமாகி கூலியாவதால், வீட்டு கடமையும் சமூகமயமாகி மூலதனத்துக்கு அடிமையாகின்றது. உணவு தயாரித்தல், மற்றும் பல வீட்டுக் கடமைகள், மூலதனத்தை திரட்டும் சமூக மூலதனமாவதால், அதை பெண்ணிடம் இருந்து மூலதனம் அபகரித்து விடுவதால், பெண்ணின் இரட்டைச் சுமை குறைந்து வருகின்றது. ஒட்டு மொத்தத்தில் மக்கள் ஆணாதிக்க மூலதனத்தின் கூலி இயந்திர பாகமாக சார்ந்து நிற்கும் வகையில் சமூகமயமாகின்றது. இங்கும் தனிச்சொத்துரிமை குடும்பம் சிதைகின்றது. ஆகவே மூலதனக் குவிப்பு குடும்பத்தைச் சிதைக்கின்றது. இது புதிய குடும்பத்தை உருவாக்குகின்றது. அதே நேரம் மூலதனக் குவிப்பு ஆணாதிக்கத்தை நுகர்வு பண்பாட்டுத் தளத்தில் விரிவாக்குகின்றது. பெண்ணை சுதந்திரமான விபச்சாரியாக மாற்றுகின்றது.
பூர்சுவா பெண்ணியம் மார்க்சியம் பற்றி விளக்குவதைப் பார்ப்போம். " பெண்ணியத்தின் மீது மார்க்சியம் ஆதிக்கம் செய்துவருவதற்கு, மார்க்சிய ஆய்வுத்திறனும், கட்சிக்குள் ஆண்களின் ஆதிக்கமும் காரணமாய் இருக்கின்றன."158 இதைவிட வெட்கக்கேடான புலம்பல் வேறு ஏதுவும் இருக்க முடியாது. மார்க்சியம் ஆண்களின் சொத்துரிமையல்ல. அது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களின் போராடும் நடைமுறைத் தத்துவமாகும். அதிலும் சுரண்டும், ஒடுக்கும் ஆண் பெண்கள் யாரும் மார்க்சியத்தை நெருங்க முடியாது. மார்க்சியம் சமுதாயத்தில் ஒவ்வொரு சமூக இழிவுகளையும் களைகின்ற பொதுக் கோட்பாடாகும். மார்க்சியம் இதைத் தவிர்த்த எதையும் தனித்துவமாக கொண்டிருப்பதில்லை, விளக்குவதில்லை. மார்க்சியத்தை வெறுக்கின்ற பூர்சுவா பிரிவுகள் தொழில் சங்கத்தை பொருளாதார கோரிக்கைக்குள்ளாக்கி, மார்க்சியத்திடம் சொந்த ஆணாதிக்க சுரண்டல் வக்கிரத்தில் விவாகரத்தை கோருகின்றது. இது போல் சாதி, இனம், மதம், பால் என்று அனைவரும் இதை முன்வைக்கின்றனர். மார்க்சியம் இயற்கை வாழ்வை மெய்யாக கண்டறியவும், அதை அடிப்படையாக கொண்டு போராடி இயற்கையை மீட்கவும் போராடும் ஒரே தத்துவம் என்பதால், பூர்சுவா கோட்பாட்டாளர்கள் பலவிதமாக மார்க்சியத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.
அடுத்து மார்க்சியத்தின் ஆய்வுத் திறன் காரணமாக மார்க்சியத்துடன் பெண்ணியம் இணைய முடியாது, என்று திறமை மீது குற்றம் சாட்டி, அதனால் தனித்துவமாக போராட வேண்டுமென்கின்றனர். ஆய்வுத் திறனை அறிவியல் பூர்வமாக மறுக்க முடியாத நிலையில், பூர்சுவா அற்பத்தனத்தை நியாயப்படுத்த ஆய்வற்ற கண்மூடித்தனத்தில் காலத்தை ஓட்ட அழைப்பதன் மூலம், உண்மையில் சுரண்டல் அமைப்பையும் அதைச் சார்ந்து ஒட்டுண்ணியாக உள்ள ஆணாதிக்க சமூகத்தையும் பாதுகாக்க சபதம் ஏற்கின்றனர். ஆய்வற்ற புரட்சி பேச, தன்னியல்பான கும்பல் செயல்களை புரட்சியாக காட்டுவது, இதன் அரசியல் உள்ளடக்கமாகும். இது இந்த ஆணாதிக்க சமூக அமைப்பை சிதைவின்றி பாதுகாக்கும். கட்சியில் ஆண்களின் ஆதிக்கம் காரணம் என்பது, வர்க்கத்தின் உறுதியான வர்க்க தலைமையை குறித்த சேறடிப்பதாகும். பெண்கள் கூட மார்க்சியத்தின் தலைமை வழிகாட்டியாக இருப்பதை மார்க்சியம் என்றும் மறுத்ததில்லை. யாரும் ஆணா, பெண்ணா, சாதியா, இனமா, மதமா.. என்று அடையாளம் கண்டு மறுக்க முடியாது. கட்சி தனது வர்க்க கடமையை பூர்த்தி செய்ய தனக்கான தகுதியுள்ள முன்னணி தலைமையை உருவாக்கின்ற போது, இங்கு ஆண் பெண் வேறுபாட்டை காட்டுவதில்லை. சமூகத்தின் இயல்பான பெண்ணின் பின்தங்கிய நிலை, பெண்களின் எண்ணிக்கையை குறைவானதாக்குகின்றதே ஒழிய, இதை மார்க்சியம் வில்லங்கமாக உருவாக்குவதில்லை. மார்க்சியம் மேலும் மேலும் பின்தங்கிய பிரிவுகளை கல்வியூடாக, முன்னிலைக்கு கொண்டுவர போராடுவதை ஒரு அரசியல் பணியாகவே கொள்கின்றது. இதை எந்த பூர்சுவா பெண்ணியமும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் மார்க்சியத்தை வெறுப்பது யதார்த்த நடைமுறையாக கோட்பாடாக உள்ளது.
இதில் இருந்து "பெண்கள் தங்களது நிலைகுறித்து ஒரு சுதந்திரமான விளக்கத்தை வளர்வதைக் கைவிட்டுவிட்டு இடதுசாரி விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி பெண்களைத் தூண்டுகிறார்கள்."158 என்று தமது பாட்டாளி வர்க்க எதிர்ப்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். பெண்கள் சுதந்திரமான சிந்தனையை சமூகத்துக்கு வெளியில் எப்படி, பூர்சுவா எல்லையில் பெறமுடியும். மதங்கள் பெண்ணின் அடிமை நிலையையும், முதலாளித்துவம் சுதந்திரமான சந்தையில் பெண்ணின் விபச்சாரத்தைப் பற்றியெல்லாம் முன்வைக்கும் பல்வேறுபட்ட கருத்துக்கு, வெளியில் சுயேட்சையாக எப்படி பெண்கள் சுதந்திரமான முடிவை வந்தடைய முடியும். ஆணாதிக்க ஒடுக்குமுறையை நடைமுறை ரீதியாக உணர்பவர்கள் கூட, இதற்குள் அல்லவா முடிவை வந்தடைய முடியும். ஆணாதிக்கம் பற்றிய வர்க்க ஆய்வுத் திறன் இன்றி, இயற்கையான பெண்ணின் வாழ்வை வந்தடைய முடியாது.
எந்த பெண்ணியமும், சிந்தனையும் அவை சுதந்திரமாக இருப்பதாக கற்பனை செய்யினும், ஒரு வர்க்க கோட்பாட்டை சார்ந்து தான் தன்னை வெளிப்படுத்த முடியும். இது போன்று எண்ணற்ற மார்க்சிய எதிர்ப்பை இந்த நூல் வெளிப்படுத்தியுள்ளது.
அடுத்து ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, போராட்ட கடமையை பெண்களிடம் கைவிட்டுச் செல்லும் பிதற்றலைப் பார்ப்போம். " .. ஆணாதிக்க முறைமையின் குறிப்பான போராட்டங்களை பெண்களே தலைமை தாங்கி நடாத்தவேண்டும்."159 என்கின்றனர். பெண்களை அடிமைப்படுத்தியது ஆண்களா?, ஆணாதிக்கமா? இந்தியாவின் சாதிக் கொடுமையையும், மத அடக்குமுறையையும் ஒழிக்க யாரை எதிர்த்துப் போராட வேண்டும் பார்ப்பனனையா? அல்லது பார்ப்பனியத் தத்துவத்தையா? ஒரு சமூக போக்கினை மாற்ற தனி மனிதர்கள், ஒரு பிரிவு மக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது ஒரு தனி மனிதன், ஒரு பிரிவு மக்கள் கூட்டம் போராடுவதன் மூலம் மாற்றிவிட முடியும் என்ற கோட்பாடு, முன்வைக்கப்படுகின்றது. அதாவது மனிதர்களை மாற்றுவது என்ற அரசியல் முன்வைப்பது கருத்துமுதல்வாதமாகும். தனிமனிதர்கள் மாறுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. இது போல் தனி மனிதன் போராடுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. தனி மனிதர்கள் சமூக இயக்கத்தில் பங்களிப்பு வழங்குபவர்களாகவே இருக்கின்றனர்.
சமூக இயக்கமும் அதன் பிரதிபலிப்பும் பொருளாதார அடிக்கட்டுமானம் மீது உருவாகின்றது. ஆணாதிகத்தை எடுப்பின் அது தனிச் சொத்துரிமை அமைப்பின் ஓட்டுண்ணியாகும். இதை பெண்கள் வர்க்கம் கடந்து போராடுவதன் மூலம் ஒழித்துவிடமுடியாது. அதுபோல் பெண்கள் தனித்து, வர்க்கத் தன்மை கொண்டு போராடுவதாலும் ஒழித்துவிட முடியாது. சமுதாயம் என்பது பெண்களை மட்டும் கொண்டவையல்ல. அது போல் ஆணாதிக்கம் பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயேட்சையானவையும் அல்ல. ஆணாதிக்கம் ஆண்கள் மற்றும் சமூக பொருளாதார விளைவுகளில் இருந்து தனித்துவமானவையோ, சுயேட்சையானவையோ அல்ல. சுயேட்சையற்ற ஆணாதிக்க இயக்கம் எதனுடன் பின்னிப் பிணைந்துள்ளதோ, அவற்றுடன் இணைத்தே, ஆணாதிகத்தை வேர் அறுக்கமுடியும். அடிமைப்படுத்திய வடிவங்களில் இருந்து தனித்துவமாக, அதற்கு புறம்பாக கோரும் மாற்றங்கள், உண்மையில் ஆணாதிக்கத்துக்கு நிகாரன வகையில், பெண் ஆணாதிக்க தன்மையை அடைவதாகும். ஆணாதிக்கத்துக்கு எதிரான குறிப்பான போராட்டத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முன்னெடுக்கமுடியும். இதை பெண்களுக்கு குத்தகைக்கு வழங்குவது என்பது, வழங்குபவர்களும், வழங்க விளக்குபவர்களும், கோருபவர்களும் தமது ஆணாதிக்க வடிவத்தை பாதுகாத்துக் கொள்ளவே செய்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட முடியும். அது போல் பெண்கள் மட்டும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதில்லை ஆண்களும் வெளிப்படுத்துகின்றனர். எனவே போராட்டம் ஆணாதிக்கத்தை எதிர்த்து, பால்வேறுபாடு கடந்து போராடவேண்டும். பெண்கள் தனித்துவமாக தமக்கு மீதான ஒடுக்குமுறையை விவாதிப்பது, போராடுவது எல்லாம், பாட்டாளி வர்க்கத் தலைமையில் (இங்கு பாட்டாளி வர்க்க தலைமை என்பது, ஆண் பெண் வேற்றுமையைக் கடந்தது) போராட்த்தை விரிவாக்கி, பரந்த தளத்துக்கு எடுத்துச் சென்று வெகுசன நடைமுறை அரசியல் வழகாட்டலுக்காகவே ஒழிய, ஆணில் இருந்தும் சமூக பொருளாதார விளைவுகளில் இருந்தும் விலகியிருக்கவல்ல.
.
No comments:
Post a Comment