தமிழ் அரங்கம்

Wednesday, March 19, 2008

மேற்கில் பெண்கள்

மேற்கில் பெண்கள்
வீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணை பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டு, கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பதை அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவ சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டி பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.


திருமணத்தில் ஆணைச் சார்ந்து பெண் பொருளாதார ரீதியில் நீடித்த குடும்ப வடிவம் மாற்றம் கண்டது. இங்கும் ஒரு அடிப்படைத் திரிபு இன்று விதிவிலக்கின்றி உலவுகின்றது. அதாவது பொருளாதார ரீதியில் பெண் சுதந்திரமடைந்தால் அவள் விடுதலை அடைந்து விடுவாள் என்று மார்க்சியம் விதந்துரைத்ததாகவும், பெண் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்தும் விடுதலை அடையவில்லை என எல்லா மார்க்சிய எதிர் பெண்ணியல் வாதிகளும் தங்களை நியாயப்படுத்துகின்றனர். இது அப்பட்டமாக மார்க்சியத்தை திரித்த பொருளாதார வாதமாகும். அத்துடன் அராஜகவாதமாகும். மார்க்சியம் பெண்ணின் சுதந்திரமான சிந்தனைக்கும், ஆணில் இருந்து வெளிவர பெண்ணின் உழைப்பு பொருளாதார ரீதியில் அங்கீகாரம் பெறுவதும், பெண் வீட்டுக்கு வெளியில் வருவதையும் முன் நிபந்தனையாக வைத்தது. இதுவே பெண்ணை விடுவிக்கும் என்று வைத்ததில்லை. பெண்ணின் விடுதலைக்கு இவற்றை முன்நிபந்தனையாக்கியது. இதை மறுத்து திரித்து வைத்ததாக காட்டப்படும் எல்லா கருத்துகளின் பின்பும் மார்க்சிய எதிர்ப்பு வெளிப்படுவதைக் காணமுடியும். இதை முன்னிறுத்தும் சில பிரிவுகள் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டவர்களாகவும் இருக்கின்றனர். மார்க்சியம் இதை எல்லா துறையிலும் காலாகாலமாக எதிர்த்துப் போராடிவருகின்றது.

பொருளாதார ரீதியில் நவீனத்துவ உற்பத்திமுறை பெண்ணை வீட்டுக்கு வெளியில் இட்டுச் சென்று கூலி பெறும் உழைப்பாளியாக மாற்றியது என்பது பெண் விடுதலையின் அக்கறையின் பால் அல்ல. மாறாக முதலாளித்துவ உற்பத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெண்களின் மலிவுழைப்பு சார்ந்த பங்களிப்பு அவசியமாகியது. இன்றைய நவீன சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்ணின் பங்களிப்பு என்பது நிபந்தனையாகி, அதை வளர்ச்சியின் ஆதாரமாக்கியது. இவற்றைப் பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில் ஏற்றுக் கொள்ள இன்றைய மேற்கு சமுகங்கள் மறுத்த போதும், இதுவே யதார்த்தமாக இருந்தது.


பெண்ணின் கூலி பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆணின் பொருளாதார ரீதியான ஆதிக்கம் என்பது தகரத் தொடங்கியது. இது பல வேதனையான இழுபறியுடன்தான், போராட்டத்துடன்தான் வளர்ச்சி பெற்றது. ஆரம்பத்தில் பெண்ணின் கூலி என்பது ஆணுக்கு சொந்தமாக இருந்தது. அதை ஆண் தீர்மானிப்பவனாக இருந்தான். பின்னால் பெண் தனது கூலி மீதான உரிமையை கோரிய போது ஆணும் பெண்ணும் சேர்ந்து அல்லது ஆணின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் தனது கூலியில் உரிமையை பெறமுடிந்தது. பிரான்சில் ஒரு பெண் தனது சொந்த உழைப்பு சார்ந்த கூலியை வங்கியில் போட, வங்கி கணக்கு பெண் திறக்க முடியாது இருந்தது. 70களில் தான் பெண் தனித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உரிமையைப் பெற்றாள். பெண்ணின் உழைப்பையும், கூலியையும் கூட நவீன முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிப்பதில் தயாராக இருக்கவில்லை. பெண்ணின் போராட்டம்தான், தனது கூலிக்கு கூட ஆணாதிக்கத்திடமிருந்து விடுதலையை பெற்றுத் தந்தது. ஆனால் பெண் கூலியை தனது சொந்த கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த அதே நேரம், அதை பயன்படுத்துவதில் ஆணாதிக்க எல்லைக்குள் நீடிக்கின்றாள். இங்கு தனிப்பட்ட ஆண் இதை தீர்மானிக்கவில்லை. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பு தனக்குள் அதன் பண்பாட்டுக்குள் செலவு செய்ய கட்டாயப்படுத்துகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுதளத்தில் பெண் தனது கூலியின் உரிமையைக் கொண்டு பண்பாட்டு ரீதியாக, ஆணாதிக்க சீரழிவில் இறங்குவது அதிகரிக்கின்றது.

நிலப்பிரபுத்துவ வடிவத்தில் நிலவிவந்த ஆணாதிக்க தொடர்ச்சி, முதலாளித்துவ சமுதாயத்தில் பண்பாட்டு கலாச்சார வடிவில் பெண்ணை அடிமைப்படுத்தியது. பெண்ணின் கூலியை கூட அவள் அனுபவிக்க அணுமதிப்பது, தனிப்பட்ட ஆண்களை விட முதலாளித்துவ அமைப்பின் அதிகாரத்துக்கு சவால் விடுபவையாக இருந்தது.


ஆணாதிக்க வரலாற்றில் பெண்ணின் உழைப்பு கூலியற்ற இலவசமான உழைப்பாக இருந்த சமூக கண்ணோட்டத்தில், ஆண் சார்ந்த சுரண்டல் வடிவமும் அதையொட்டிய அமைப்பும் தகர்கின்ற போக்கு சுரண்டல் அமைப்பையே தகர்த்துவிடும் என்பது யதார்த்தமாக இருந்தது. பெண் உழைப்பும், அதன் கூலிக்கு பெண் பெறும் உரிமை என்பது ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்திடம் ஆணைப் போல் கூலி உயர்வும், ஆணைப் போல் உழைப்பின் சம கூலி கேட்பதும், ஆணைப்போல் புரட்சியை சிந்திப்பது இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்புக்கு ஆபத்தானதாக இருந்தது. பெண்ணின் சுயேட்சையான அங்கீகாரம் தனிப்பட்ட ஆணைவிட ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்தையே பீதிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் பெண்ணின் உழைப்புக்கும், கூலிக்கும் உரிமை கோரிய போராட்டம், தனிப்பட்ட ஆண் குடும்பத்துக்குள் இதை விட்டுக் கொடுத்த போது, இந்த போராட்டம் சமூக அமைப்பில் மேலும் தீவிரம் கண்டது. சட்டப்படியான உரிமையாக பெண்ணுக்கு முதலாளித்துவ அமைப்பு படிப்படியாக தன்னைப் பலப்படுத்தியபடி சலுகையாக ஆணாதிக்கத்திடம் விடுதலையாக கூறி கொடுத்த போது, அதை ஈடுகட்ட மற்றைய நாடுகளை அதிகமாக சுரண்டுவதை முதலாளித்துவம் ஆதாரமாக கொண்டது.


பெண்ணின் உழைப்புக்கு கிடைத்த கூலி இந்த முதலாளித்துவ அமைப்பில் பெண்ணின் உரிமையான போது, ஆணைப் போல் தனிச் சொத்துரிமையின் எல்லைக்குள் புதிய நெருக்கடியைக் கொண்டுவந்தது. தனிச்சொத்துரிமை கூட்டு வாழ்க்கையின் எதிரி என்பதால் ஆணும் - பெண்ணும் தனிச் சொத்துரிமையை தனித்தனியாக பெற்ற போது ஒருதாரமணக் குடும்பத்தின் வடிவம் தீவிரமான நெருக்கடியைச் சந்தித்தது. மரபான குடும்பத்தில் ஆணாதிக்க பொருளாதாரம் சார்ந்த தீர்மானகரமான ஆணின் பங்கை மறுத்து, பெண்ணும் தீர்மானகரமான பங்கை கோருவது தொடங்கியது. இது குடும்பத்தை சிதைப்பது அல்லது மீள அமைப்பது என இரு வடிவங்களையும் தீவிரமாக்கியது.

70 களின் பின்னால் தீவிரமாகிய விவாகரத்தும், குடும்பத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தலும் (பகுதி இரண்டில் பார்க்க புள்ளிவிபரத்தை) பெண்ணின் கூலி மீதான உரிமையிலும், பெண்ணின் உழைப்பின் மீதான மதிப்பிலும் உருவானது. அத்துடன் ஏகாதிபத்திய ஜனநாயக வடிவம் மேலும் அதை ஆழப்படுத்தியது. இது எல்லை கடந்த சூறையாடலை சட்டவடிவமாக்கியது. இந்த ஜனநாயகத்தை தனிமனித பொருளாதார பண்பாட்டில், 70க்கு பின்னால் கோருவதும், அமுல்படுத்துவதும் அதிகரித்த போது, குடும்ப சிதைவுகள் அதன் விளைவாகி உற்பத்தியானது.


பெண்ணின் உழைப்புக்கு மதிப்பும் உரிமையும் தனிச்சொத்துரிமையின் வடிவில் கிடைத்த போது, அதற்கே உரிய குணாம்சத்துடன் இது சீரழிவுக்கு வழிவிட்டது. இந்தச் சீரழிவு காதல், அன்பு.... போன்றவற்றைக் கூட வியாபாரமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நீடித்த மனித விழுமியங்களை தனிச் சொத்துரிமை பெண்ணிடம் இருந்து சூறையாடிவிட்டது. ஒருதாரமணத்தில் பெண் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் செய்த மனித விழுமியத்தை, நவீனத்துவம் தனிச்சொத்துரிமை வழியில் பெண்ணுக்கு தவிர்க்கமுடியாது கூலி வழங்கிய போது, பெண் ஆணாதிக்கத்தின் நிலைக்குள் தாழ்ந்து அன்பு காதலை துறந்து ஆணைப்போல் சீரழிந்து போனாள். ஆணாதிக்கம் எதை எல்லாம் மனிதனின் உன்னதமானவை எனப் பிரகடனம் செய்து இயற்கையையும், மனிதனையும் சூறையாடியதோ, அதை எல்லாம் பெண்ணின் கோரிக்கையாகவும் உரிமையாகவும் அங்கீகரிப்பதன் மூலம், பெண்ணும் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை பண்பாட்டு தளத்தில் ஆணைப் போல் சீரழிந்தாள்.

இது ஒருபுறம் நிகழ மேற்கத்தைய சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்து செல்வதன் மூலம், மக்கள் பொதுவாகவே சொத்துரிமையற்ற பரந்த வக்கற்ற கூட்டமாக மாறிவிட்டனர். சமூகத்தின் மிகக்குறைந்த ஒட்டுண்ணி வர்க்கமே சொத்துரிமை வர்க்கமாக மாறியதும், பரந்துபட்ட மக்கள் தமது சொத்துக்களை இழந்து போனதும் குடும்ப அமைப்பில் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சொத்துக்களின் வாரிசுகளை உருவாக்கிய ஒருதாரமணங்கள் சொத்தற்ற வர்க்கம் முன் அர்த்தமற்றதாகியது. இது பாரம்பரிய குடும்ப அமைப்பை மறுதளத்தில் சிதைத்தது. இங்கும் கூட பாரம்பரிய திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் என்ற போக்கு உருவானது.

தனிச்சொத்துரிமை வடிவில் இருந்து பிளவும், வாழ்வும் ஏகாதிபத்திய பண்பாட்டால் நடக்க, சொத்துரிமை இழந்த வடிவில் கீழ் இருந்து உருவான பிளவும், வாழ்வும் எதிர் எதிர் தன்மையில் முரண்பட்ட சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தனிச் சொத்துரிமையிலான குடும்ப பிளவு மூலதனக் குவிப்பில் பிளவாகவும், சொத்துரிமையற்ற குடும்ப பிளவு மூலதனத்துக்கு எதிரான ஜக்கியத்திலும் வளர்ச்சி பெறுகின்றது. இங்கு தனிச்சொத்துரிமை ஆதிக்க கருத்தியலாக உள்ள நிலையில் குடும்பச் சீரழிவு என்பது விபச்சார கட்டத்தில் வளர்ச்சி பெறுகின்றது.


ஆண்- பெண்ணின் இயற்கையின் தேர்வையும் கூடிவாழ்வதையும் மறுக்கும் தனிச்சொத்துரிமையால் விளையும் ஆணாதிக்க பண்பை, ஜனநாயகமாக பெண் கோரியபோது, பெண் ஆணாக தரம் தாழ்ந்து போனதால், ஆண்-பெண் கூட்டுவாழ்க்கையில் இருந்து மேலும் தனிக்கட்டையாகியுள்ளனர்.

குறைந்தபட்சம் ஒருதாரமணத்தில் ஆண்- பெண்ணுக்கு இடையில் நீடித்த உறவு என்பது கூட நிகழமுடியாத பிளவை, நவீனத்துவ நுகர்வு பொருளாதாரம் தனிச் சொத்துரிமையை பெண்ணுக்கு அங்கீகரித்தன் வடிவில் ஏற்படுத்திவிட்டது. இந்த ஆண் - பெண் உணர்வுகள் முன்பைவிட மோசமாக நலமடிக்கப்பட்ட நிலையில் தனிக்கட்டையாகியுள்ளனர். இங்கு இதனால் ஏற்பட்ட ஒருதாரமணத்துக்குள்ளான பலதாரமணம் விபச்சாரமாக பரிணாமம் அடைந்துள்ளது. இது பல பக்கவிளைவுகளை உற்பத்தி செய்கின்றது.


பிரான்சில் 50 லட்சம் பேர் மோசமாக குடிப்பவர்களாக உள்ளனர். இதில் 20 லட்சம் பேர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் வருடாவருடம் 50000 பேர் இறக்கின்றனர். இதில் 3000 பேர் போதையால் வீதி விபத்தில் இறக்கின்றனர். மது மூலம் ஏற்படும் நோய்க்கான மருத்துவ செலவாக வருடம் 8000 கோடி பிராங் (இது இலங்கைப் பணத்தில் 92000 கோடி ரூபாவாகும். இது இலங்கை மக்களின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும்.) செலவாகின்றது. ஜரோப்பாவில், முதல் குடிகாரர் நாடாக பிரான்ஸ் இருக்க, ஜரோப்பியர் வருடம் வருடம் ஒவ்வொரு நபரும் 11.9 லீற்றர் மது குடிக்கின்றனர். பிரான்சின் மதுபானத் தொழிலில் 5 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 15 லட்சம் பெண்கள் குடிகாரர் ஆக உள்ளனர். இது 1981 இல் 8 லட்சம் மட்டுமேயாகும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது திருமணம் செய்யாத பெண்களே. பொதுவாக ஆண்கள் பகிரங்கமாக கடைகளில் சமூக அங்கீகாரத்துடன் குடிக்க, 92 வீதமான பெண்கள் மறைவிடங்களில் ஒளித்துக் குடிக்கின்றனர். இளம் சமுதாயத்தில் நாலுக்கு ஒருவர் 12-19 க்கு இடைப்பட்ட வயதில் குடிக்கின்றனர். 15 வயது இளம் சமுதாயத்தினர் நிரந்தர குடிகாரராகவும், புகைப்போராகவும், போதைவஸ்து பாவிப்போராகவும் உள்ளனர்.(15ஃ16.4.1999)1

தனிமனித சோகங்களை போதையில் மறப்பதும், தீர்க்க முனைவதும் இச்சமூகத்தில் பாதையாக மாறியுள்ளது. தனிமனித அவலங்களின் வெடிப்பு அதற்குள்ளேயே சீழாகின்றது. இந்த சீழ் மாற்றமுடியாத நாற்றத்தால் புழுப்பிடித்துப் போகின்றது. திருமணம் செய்யாத பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் தமது தனிமை மற்றும் பாலியல் நெருக்கடிகளை போதை மூலம் தீர்ப்பது, மறப்பது மனித அவலமாகின்றது. இந்த திசையை நோக்கி மனித நாகரிகம் நாலுகால் பாய்ச்சலில் குதித்துச் செல்லுகின்றது.


இது ஒருபுறம் நிகழ்கின்ற போது மறுதளத்தில் டிஸ்கோ கலாச்சாரம் பாலியல் தீர்வை விபச்சார எல்லைக்குள் நுகர்வு வடிவில் அள்ளித் தெளிக்கின்றது. டிஸ்கோவுக்குள் பாலியல் வக்கிரம் பார்க்க பணம் கொடுத்து, போதைக்கு பணம் வாரிவழங்கி, பணம் கொடுக்காத விபச்சாரமாக, பரஸ்பரம் நுகர்வை அடிப்படையாக கொண்டு மிதமிஞ்சிய போதையில் நடக்கும் பாலியல், அல்லது போதையின்றி நடக்கும் காம இச்சையின் விபச்சாரம், ஆண் - பெண் உறவை மிகவும் கீழ்நிலைக்குள் தாழ்த்தியுள்ளது.

அன்பு, காதல் எல்லாம் நுகர்வுப் பண்பாட்டில், டிஸ்கோவுக்குள் ஆணும் பெண்ணும் இழந்து பாலியல் பண்டமாக இயந்திரமாக மாறிய சோகம் கட்டுடைத்த பண்பாடான ஏகாதிபத்தியத்தின் (பின்நவீனத்துவத்தின்) கொடையாகும்.


இன்னுமொரு கூட்டம் பணம் கொடுத்து பாலியலை பூர்த்தி செய்வதை தீர்வாக்கியது. மேற்கு நாடுகளில் இரண்டு பேருக்கு ஒரு ஆண் செக்ஸ்க்காக சொந்த நாட்டிலேயே பணம் செலுத்தியிருக்கின்றனர். 15 முதல் 20 சதவீதமான ஆண்கள் தொடர்ச்சியாக செக்சுக்கு பணம் செலுத்துகின்றனர். இந்த பிரிவில் உள்ளோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் தொடர்ச்சியான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்.59

தனிமனித உரிமைகளை சமூகத்தை விட அதிகமாக கோரும் போதும், தனிச் சொத்துரிமை சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார வாழ்வியலை தீர்மானிக்கும் போதும், ஆணின் தலைமையிலான குடும்ப அமைப்பில் பெண் சொத்துரிமையைச் சார்ந்து தனிச் சொத்துரிமை எல்லைக்குள் உரிமை பெறுகின்றபோதும், ஆண், பெண்ணின் பிளவு மேலும் அகலமாக அதிகரித்த அவலங்களும், இயல்பற்ற பாலியல் நெருக்கடிகளும் சமூகத்துக்கு முன் தோன்றியுள்ளது.


பாலியல் பூர்த்தியை விபச்சாரம் கணிசமானளவுக்கு திருப்தி செய்கின்றது. இதனால் விபச்சாரம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது. இதைவிட இதை கோரிக்கையாகவும், உரிமையாகவும் கோருவது பெண்ணியல் நடைமுறையாகின்றது. பாலியலின் இயற்கைத் தேர்வை தேவையில் இருந்து அன்னியப்படுத்திய கட்டற்ற சுதந்திரத்தில் 50 வீதமான ஆண்கள் விபச்சாரத்துக்காக பணம் கொடுத்தனர் என்பது இந்த ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் நடைமுறையாக எம்முன் உள்ளது. ஆனால் இதை விட இந்த சமுதாயத்தின் வக்கிரத்தை நோக்கி தாமும் மாறநினைக்கும் போக்கு, யதார்த்த நடைமுறையில் இருந்து சமுதாய சிந்தனை அன்னியப்பட்டு போவதன் கிறுக்குத்தனம், தான் இதன் ஆதாரமாகின்றது. யதார்த்தத்தை மறுத்து கற்பனையான சொர்க்கத்தில் சமுதாயத்தைக் கட்டிப் பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டு ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலன்களுடன் ஈடுபட, சமுதாயம் அதன் பின் இழுபட்டுச் செல்ல, விடுதலைபற்றிய மனித பிதற்றல் கோட்பாடுகள் இதற்குள் மார்க்சியத்தை மறுத்தபடி உருப்பெறுகின்றது.

இதன் விளைவை மேலும் பிரான்சில் ஆதாரமாகப் பார்ப்போம். 1998 இல் சிறுவர் சிறுமிகளிள் மீதான வன்முறையை பற்றி அறிக்கையில்78 (14.9.1999)

வகை

எண்ணிக்கை

ஆண்கள்-வீதம்

பெணகள்- வீதம்

பாலியல்வதைக்கு உட்பட்டோர்

6800

25

75

உடல் ரீதியான வன்முறை

7000

55

45

உடல் ரீதியற்ற வன்முறை

1800

50

50

மிகமோசமான புறக்கணிப்பு

5400

55

45



பிரான்சில் பாலியல் துன்புறுத்தலுக்கு 1998இல் 83000 பிள்ளைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இது, 1994 இல் 60000 பேர் மட்டுமேயாகும். 1998 இல் இதனால் நீதிகோரி 49000 பேர் நீதிமன்றம் சென்றனர். 1994 இல் 30000 பேரே நீதிமன்றம் சென்றனர்.

இவை பாடசாலைக்குள் நடப்பவை என்பதை ஓத்துக் கொண்ட ஆய்வுகள் வெளியில் நடப்பவற்றை முழுமையாக கொண்டுவரமுடியவில்லை என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளனர். சமுதாயம் என்பது முதலாளித்துவ தனிமனித ஜனநாயகத்தின் சூறையாடலால் எல்லாத் தளமுமே வன்முறைக்குள்ளாகி சீரழிகின்றது.

மேற்கு சமுதாயத்தின் அவலத்தையும், அதன் கட்டற்ற சுதந்திர அதிகரிப்பையும் இவை தெளிவாகவே காட்டுகின்றது. அத்துடன் ஆண் பெண் வேறுபாடற்ற வகையில் பாலியல் துன்புறுத்தலை இச்சமூகம் உற்பத்தி செய்கின்றது. முன்பு பெண் மட்டும் பாதிக்கப்படல் என்பது மாறி ஆண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் பெண் ஆணாதிக்கமயமாகிய வக்கிரத்தைக் காட்டுகின்றது. பெண்ணின் விடுதலை என்பதை எதிர்திசையில் (ஆணாதிக்க பாதையில்) வக்கிரப்படுத்தியதில், பெண்ணியல் அமைப்புகளின் தவறான கோரிக்கைகள் போராட்டங்கள் உதவிசெய்தன. ஆணில் இருந்து பெண்ணை அன்னியப்படுத்தும் அனைத்து கோரிக்கைகளும், சமுதாய கூட்டு நலனுக்கு எதிராக முன்நிறுத்திய போது, பெண் வன்முறையாளனாக மாறினாள், மாற்றப்பட்டாள்.

சிறுவர், சிறுமி மீது ஏவும் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட ஆண், பெண்ணின் நடத்தைகளின் விளைவுகள் அல்ல. மாறாக பொருளாதார அமைப்பின் பண்பாட்டு சமூகத்தின் விளைவுகளாகின்றது. பெண் தனது தனிமனித சுதந்திரத்தை தனிச் சொத்துரிமையில் பெற்றதைத் தொடர்ந்து புதிய வடிவில் பாலியல் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கினாள். அவள் முன்பு கிடைத்த ஆணின் ஒருதாரமண இயந்திர பாலியலைக் கூட இழந்து போனபோது, பெண்ணும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது யதார்த்தமாகியது. பெண்ணினால் வன்முறைக்குள்ளாகிய 25 சதவீதமான ஆண்குழந்தைகள் 1700 பேர் மீதான பாலியல் அத்துமீறல்கள் துல்லியமாக பெண்ணின் சீரழிவை வெட்டவெளிச்சமாக்குகின்றது.

பொருளாதார சுதந்திரத்தையும் பண்பாட்டு கலாச்சார சுதந்திரத்தையும் விபச்சார சீரழிவில் பெற்ற போது, ஆண் பெண்ணின் பாலியல் நடத்தைகள் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் பாலியல் வன்முறை எதிர் திசையில் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. 1975 இல் பிரஞ்சுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோரில் 5 சதவீதமே பாலியல் சார்ந்த குற்றத்தை செய்திருந்தனர். இது 1999 இல் 21 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் தண்டனைக்காலம் பொதுவில் 4 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்துள்ளது.85 இந்தக் குற்றங்கள் பாலியலின் பின்னாலான போலி ஜனநாயக சுதந்திரத்தின் நெருக்கடியை அப்பட்டமாக நிர்வாணமாக்குகின்றது. இதன் போக்கில் பாலியல் குற்றவாளிகளாக பெண்களும் உருவாகத் தொடங்கினர்.

இந்த ஆணாதிக்க ஜனநாயகத்தில், பெண்பெற்ற தனிச் சொத்துரிமை ஜனநாயக சுதந்திரம் என்பது பெண்ணின் ஆணாதிக்க மயமாதலும், ஆணைப் போல் பெண்ணும் வன்முறையில் ஈடுபடுவது நிதர்சனமான யதார்த்தமாகியுள்ளது.

இதை மேலும் ஆராய மற்றுமொரு புள்ளிவிபரத்தை ஆராய்வோம். மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த லிபரேசன் என்ற பத்திரிகை 26-02-98 வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம்.

சிறுவர், சிறுமியர் ஓரினச் சேர்க்கைக்கு எப்படி பல்கலைக்கழக பகிடிவதை (ராக்கிங்) போன்று பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பார்ப்போம்.

வகை

எண்ணிக்கை

ஆண்கள்-வீதம்

பெணகள்- வீதம்

பாலியல்வதைக்கு உட்பட்டோர்

6800

25

75

உடல் ரீதியான வன்முறை

7000

55

45

உடல் ரீதியற்ற வன்முறை

1800

50

50

மிகமோசமான புறக்கணிப்பு

5400

55

45


பொருளாதார ரீதியில் வயதுவந்த ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்படும் பாலியல் நெருக்கடி, பொருளாதார ரீதியில் பலமற்ற பலவீனமான சிறுவர் சிறுமி மீதான ஒரினச் சேர்க்கையாக இவை மாறிவிட்டது, விடுகின்றது. இதில் ஆண், பெண் வேறுபாடு இன்றி சிறுவர் மீது நடத்தும் பாலியல் வேட்டைகள், சிறுவர், சிறுமிகளின் உளவியல் பிரச்சனைகளும், இதனால் உருவாகும் புதிய பண்பாடுகள் கலாச்சாரங்கள் மேலும் சீரழிவின் வழியில் வெதும்புகின்றது. இந்த வன்முறையில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுவது எப்படி சாத்தியமானது. ஆண்பெண் உறவில் பொருளாதார நுகர்வில் ஏற்பட்ட நெருக்கடி விரிசலாகிவிடும் போது பலவீனமான பிரிவு சுயதியாகம் செய்யக் கோருகின்றது. இதற்கு பண்பட்ட, கலாச்சார அடிப்படைகள் இசைவாக்கமடைகின்றது.

ஆண், பெண்ணின் தனிமனித சுதந்திரங்கள் பாலியல் தேவைக்கு முரண்நிலையாக, இந்த முதலாளித்துவ சமூகம் கொடுக்கும் கொடையாகும். தனிச்சொத்துரிமை மீதான பெண்ணின் சுதந்திரம் தனிச்சொத்துரிமை அமைப்பான ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஆணையும் பெண்ணையும் பிளக்கின்றது. இந்த பிளவு என்பது பாலியலை பண்டமாக்குகின்றது. இந்த பண்டம் என்பது நுகர்வை தீவிரமாக்குகின்றது. இது பாலியலில் திருப்தி இன்மையையும், அதிக நுகர்வை தேடி அலைவதையும் பண்பாடாக்கியுள்ளது. இந்த பாலியல் உறவு தேவையை நிராகரித்து, நுகர்வாகி அலையவைத்த போது அது விபச்சாரமாக சீரழிகின்றது. இந்த விபச்சார நுகர்வையும், திருப்தியின்மையும் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லது அதற்குள்ளும் புழுத்துப் போன சமூகம் பாலியல் வன்முறையை எல்லா தளத்திலும் கையாள்வதை தொடர்ச்சியாக வெளிவரும் புள்ளிவிபரங்கள் யதார்த்தத்துடனும், மார்க்சிய பாலியல் கோட்பாட்டு விளக்கத்துக்கும் பொருந்திப் போகின்றன.

இந்த சமூகத்தில் பெண்ணுக்கு கிடைத்த தனிச் சொத்துரிமையிலான உழைப்பின் மதிப்பையும், ஆணின் உழைப்பின் மதிப்பையும் தமக்கிடையில் முதன்மைப்படுத்தாத, ஆண், பெண்கள் சுயநிர்ணயமான குடும்ப அமைப்பை பேணுவதிலும், அதற்காக சமூகத்துக்கு எதிராக போராடுவதிலும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி முன்நிற்கின்றனர். நுகர்வு, திருப்தியின்மை பற்றி கனவு இன்றி பாலியலை தேவைக்குட்படுத்தி வாழும் குடும்பங்கள் மேற்கில் சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்ட முன்னுதாரண குடும்பமாக உள்ளனர். இந்த சமூக வடிவமும் மேற்கில் பலமான நிலையில் காணமுடிகின்றது. ஆனால் பலமற்ற பொருளாதார பிரிவை பிரதிபலிப்பதால் இவர்களின் கருத்துகள் போராடும் எல்லைக்குள் உள்ளன. ஏகாதிபத்திய நுகர்வு, தனியுரிமையிலான சொத்துரிமை பண்பாட்டு கலாச்சாரத்தால் ஆணின் சமூக ஆதிக்கம், இந்த சமூகத்தின் பொதுவடிவமாக எல்லாத் தளத்திலும் காணப்படுகின்றது அதே நேரம் கட்டியமைக்கப்படுகின்றது. இதற்கு எதிரான பரந்துபட்ட மக்களின் உண்மையான சுயநிர்ணயக் குடும்ப பந்தங்கள், பாசங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது பழைய ஆணாதிக்க ஒருதாரகுடும்ப வடிவத்துக்குள் வைப்பது அல்லது சேறடிப்பதும் நிகழ்கின்றது. இந்த கயமைத்தனத்தை பல மேற்கத்தைய மற்றும் கீழைத்தேச பெண்ணியம் பேசும் மார்க்சியம் அல்லாத குழுக்களின் சலுகைகளுக்குப் பின்னாலும், ஆணாதிக்க மயமாதலின் பின்னாலும் நிகழ்வது யதார்த்தமாகியுள்ளது. இந்தவகையில் மார்க்சியம் பெண்ணின் உரிமையை ஆணாதிக்கமயமாதலால் அல்லாத வழியில் இன்று வழிகாட்டும் பணியைத் துணையின்றி முன்னெடுப்பது அவசியமாகியுள்ளது.

No comments: