தமிழ் அரங்கம்

Monday, March 17, 2008

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்

ப.வி.ஸ்ரீரங்கன்.
15.03.2008

ன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல. திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.

இத்தகையவொரு சூழலில் எழும் அனைத்துச் சிக்கல்களும்-அது சிந்தனைத் தளமாகட்டும் அல்லது சமூக மாற்றத்துக்கான கருத்தாடல்கள், வேலைத்திட்டமாகட்டும்-அனைத்தும் தனிநபர் வாதக் கண்ணோட்டத்தோடு தன்முனைப்புக் கொண்டே எதிர்கொள்ளப்படுகிறது. இத்தகையவொரு சூழலில் முன்தள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் இன்னுஞ் சொல்லப்போனால் செயலூக்க முனைப்புகள் யாவும் ஏதோவொரு தனிநபருடைய அறிவுப்பயனாகக் கட்டியமைக்கப்படுவதே நமக்குள் நிலவும் அபத்தம். இத்தகைய பார்வையின் தொடர்ச்சியான சமூக வறட்சி தனிநபர்களை உச்சியில் தூக்கி வைத்து அவர்களுக்குள் முழு உலகத்தையும் பார்ப்தாக முடிவடைகிறது. இன்றைக்குத் தமிழ் மணத்தில் நடைபெறும் தெருச் சண்டைக்கு மூல காரணம் எதுவென்று தேடுமிடத்து அங்கே புரிதலற்ற வெறும் வெத்துவேட்டுத் திமிரே காரணமாகிறது.

ஒரு விடையத்தை ஒருவர் முன் வைக்கும்போது அதன் தாத்பாரியத்திலிருந்து பார்ப்பதல்லப் பார்வை, மாறாக தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் புரிவதே சரியானதாக இருக்கிறது. இதற்கு நீண்ட படிப்பு அவசியமாக இருக்கிறது. ஒருவர் தனது அடிப்படையான பொது அறிவை வைத்து எதையும் எழுதிவிடலாம். ஆனால், சமுதாயத்தின் பற்பல முரண்பாடுகள் அது சார்ந்த செயற்பாடுகளை நோக்கிக் கருத்தாடும்போது மிகக் கூர்மையான ஆழ்ந்த படிப்பும் அறிதற் புலமும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவர் முன்வைக்கும் கருத்தை ஆழ்ந்து நோக்குவதற்கு நீண்ட வாசகத் தன்மையிலான அநுபவம் அவசியமாகவே இருக்கிறது. இன்றைக்கு தமிழ் மணமெங்கும் அல்லோலகல்லோலப்படும் தனிநபர்வாத முனைப்போடு எழுதப்படும் அரைவேக்காட்டுத் தனமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் மிக மோசமான தனிநபர் முனைப்புடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களே மிகவும் கூர்மையடைந்த அதி தனிநபர் வாதத் தன்மையோடு ஆழ்ந்த கருத்துடைய எழுத்துக்களையே தூசாகத்தட்டித் தமது புலம்பல்களைக் கடைந்தேற்றும் மகா கோபத்தோடு கிறுக்கித் தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.

நிதானமிழந்த எந்த எழுத்தும் இதுவரை தர்க்கத்தோடு வந்ததாகச் சரித்திரமில்லை. அதுவும,; சமுதாயம் சார்ந்து மக்கள் நலனுக்கான பெரியார் கருத்துக்களைப் பரப்புவது, அதனூடாகச் "சமூகச் சீர்திருத்தம்"செய்வதாகச் சொல்பவர்கள் முதலில் சமுதாயத்தின் அனைத்து முரண்பாடுகளையும் அதை உற்பத்தி செய்யும் பொருளாதாரப் பொறி முறைகளையும் ஓரளவாவது புரிந்துகொள்ள முனைவது அவசியமான முன் நிபந்தனையாகும். மேற்காணும் செயற்பாடுகளுக்கு. இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு "வாழ்வியல் மதிப்பீட்டைக்"கட்டிக்கொண்டுள்ளது. இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட"ஜனநாயகம்"எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்தச் சுகமான அரசியல் "ஒப்பாரி" எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை! இது நடவாத காரியமும்கூட. எந்த வர்க்க மக்கள் கூட்டைப் "பிரதிநித்துவப்படுத்தும்" ஆட்சியதிகாரமுள்ளதோ, அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும். இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது. இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.



பதினாறாம் நூற்றாண்டின் பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையானது காலனித்துவம் மற்றும் உலக மகாயுத்தங்களுக்குப் பின்பான ஐரோப்பிய மையவாதச் சிந்தனையோட்டச் சிதறல்களாகிப் பொருளாதாரத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் பூர்ச்சுவாக்களாகவும், பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது. அளவுமுறையற்ற மூலதனவர்க்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல. இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும்,சாதிய-நிற-பால் ஒடுக்குமுறைகள் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது-ஆடுகிறது! இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத் திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.

இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும், மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது. இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி, கலை, விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செல்நெறியானது அரசியலைப் பூhச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும், அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது. இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே ஏதேவொரு தத்துவத்துக்குத் தாரவார்த்துக் கொடுத்த வாரீசாக முன்னிறுத்தி வியாக்கியானஞ் செய்கிறார்கள். பெரியாரின் சமூக முன்னெடுப்பும் அதன் சமூகத் தன்மையும் வெறும் பார்ப்பனியத்துக்கு எதிரானதாக இருப்பதாக இருந்தால் அது நிச்சியம் என்றோ சிறைப்பட்டுப் போயிருக்கும். எனினும், அது இன்றுவரையும் உயிர்வாழ்வதாக உணரப்படுமாயின் அதன் சமூகத்தன்மையும் உயரிய போராட்டத் தளமும் நிச்சியம் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் ஏதோவொரு வகையில் தன்னுள் கொண்டிருப்பதாகவே இனம் காணத்தக்கதாகும். இங்கே, தத்துவம் வேண்டாம், அறிவியல் மட்டுமே போதும் என்பதும், நான் சமூகஞ் சார்ந்து சிந்திக்கவில்லை, சமூக சீர்திருத்தம் பேசுகிறேன் என்பதும் சுத்த அபத்தமாக இருப்பதை உணரச் சமூகக்கல்வி இன்றியமையாதது. இத்தகைய நிலையிலும் தம்மைத்தாமே முதன்மைப்படுத்தியபடி சமூகச் சீர்திருத்தம் பேசுவதே அறிவிலித்தனமாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மிகக் கொடுமையான தாழ்வு மனப்பாண்மையானது மிகக் கெடுதியான திமிராக மேலெழுகிறது. இது ஏன்-எப்படி உருவாகிறதென்பதை உணரத் தவறும் ஒவ்வொரு பொழுதும் குறிப்பிட்ட நபர் தன்னையும் எம்மையும் முட்டாளாக்கி விடுகிறார்.

இத்தகையவொரு சூழலில் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது. இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு"அதிகாரவர்க்கம்"செயற்படுகிறது. இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள். இவர்கள் தம்மை ஏதோவொரு சமூகக் கருத்தாண்மைக்குப் பலிகொடுத்துவிட்டுச் சமூகச் சீர்மை செய்வதாகக் கனவு காண்கின்றனர். இத்தகைய கனவை முன்தள்ளிக்கொள்ளும் முனைப்புக்குப் பெயராகப் பெரியாரை-மார்க்சை,அம்பேத்காரை,அண்ணாவை என்று தமக்குத் தெரிந்த தெரிவுகளோடு முன் வந்துவிடுகிறார்கள். ஆனால்,அவர்களது செயலூக்கத்தைச் சரிவர அவர்களே புரியாது தடுமாறுகிற நிலையில் மற்றைய கருத்துக்களை மனதார ஏற்பதற்கான சிந்தனைத் தெளிவற்று அனைத்தையும் போட்டுக் குழப்பி எடுப்பதில் தமது காலத்தை விரையாமாக்கி விடுகிறார்கள். இதுதாம் அப்பாவித்தனமானது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது. இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது. இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது. அவரவர் கொண்டதே கோலமாகிறது. இவர்களே எல்லோரையும் தமது சொந்த அளவுகோல் கொண்டு அளந்தெடுக்கிறார்கள். தத்தம் படிப்புக்கு-அறிவுக்கு நிகராக மற்றவர் இல்லை என்றும் வாதிடுகிறார்கள். இவர்களே பற்பல கட்டத்தில் தமக்கு மட்டுமே கல்வி-மொழியறிவு, பிறமொழியறிவு இருப்பதாகவும் மற்றவர்கள் சோணைகிரிகள் என்றும் சிறுபிள்ளைச் சிணுங்கலைக் கட்டவிழ்த்துவிட்டுத் தாண்டவம் ஆடுகிறார்கள். இத்தாண்டவத்தை "சோபா சக்தி-யமுனா இராஜேந்திரன்" குடுமிப்பிடிச் சண்டையில் மிக இலகுவாக நாம் இனம் காணமுடியும். இத்தகையவொரு நிலை ஏலவே தமிழ் மணத்தைப் பிடித்தாட்டுகிறது. அது பற்பல உடலியற் கூறுகளைத் தனக்குக் குறியீடாக்கியபடி ஏதோ சொல்ல முனைந்து தோல்வியில் தத்தளிக்கிறது!

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும் பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல. இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள். இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன. மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும். இந்த நாடுகளில் உருவாக்கப்படும் "கருத்தியல் வலுவை" எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவுவுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது. இதை அறிவுத்தளத்திலும், அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது. நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது. இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை. இதன் தொடர்ச்சியே இப்போது அதீத தனிநபர் வாதத்தைத் தூண்டிவிட்டபடி நமது பல்தேசியக் பகாசூரக்கம்பனிகள் படுத்தும்பாடோ எத்தனையோ பெயர்களில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முனைகிறது. அதன் போராட்டக்காரர்களே இப்போது நாத்தியெடுக்கின்றார் நம்மை, நாமோ முகத்தைத் திருப்பி வேறுதிசை பார்த்திருக்க முடியாது இதையும் எழுதித்தாம் தீரவேண்டியுள்ளது.

No comments: