தமிழ் அரங்கம்

Monday, April 28, 2008

பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!


பீகார்:
பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி
!



இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

1980இல் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றி அவர்களைக் குருடர்களாக்கிய பீகார் போலீசின் கொடுஞ்செயலை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது. அதே பாகல்பூரில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று 20 வயதான சலீம் இலியாஸ் என்ற இளைஞரை, ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி ஒரு கும்பல் மிருகத்தனமாகத் தாக்கியது. அங்கு வந்த நாத்நகர் போலீசு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார், அழுக்கடைந்த ஆடைகளுடன் பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த அந்த இளைஞரை, கொடூரமாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதோடு, கைகால்களைக் கட்டி தமது மோட்டார் சைக்கிளில் பிணைத்து கதறக் கதற தெருவிலே இழுத்துச் சென்றனர். சதைகள் கிழிந்து தெருவெங்கும் இரத்தம் வழிந்தோடி நினைவிழந்து கிடந்த அவரை போலீசு நிலையம்வரை இழுத்துச் சென்று, பின்னர் பொதுமக்கள் திரண்டு கண்டனம் தெரிவித்ததும் மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பு பல இடங்களில் முறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கும் அந்த இளைஞர், இனி உடல்நிலை தேறி நடமாடுவாரா என்றே தெரியவில்லை.

விசாரணை இல்லை; குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கும் வாய்தாவுமில்லை. போலீசாரே நீதிபதிகளாக மாறி தீர்ப்பளித்து தண்டனையும் விதிக்கின்றனர். இக்கொடுஞ்செயலை பொதுமக்கள் பார்ப்பதையோ, தொலைக்காட்சிகள் படம் பிடிப்பதையோ பற்றி அப்போலீசு மிருகங்களுக்குக் கவலையுமில்லை. கொட்டடிகளில் தங்களது குரூரமானவக்கிரமான சித்திரவதைகளை ஏவி வெறியாட்டம் போட்டு வரும் போலீசு மிருகங்களின் அதிகாரத் திமிர் இப்போது நட்டநடு வீதிகளிலும் வழிந்தோடத் தொடங்கி விட்டது.

இந்தக் கொடுஞ்செயலின் அதிர்ச்சியிலிருந்து நாட்டு மக்கள் மீள்வதற்குள், அதே பீகாரின் வைஷாலி மாவட்டத்திலுள்ள தேல்புர்வாரா கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் நாளன்று பின்னிரவில் 10 பேர் திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ""நாட்'' எனும் தாழ்த்தப்பட்ட நாடோடிச் சாதியினர். இவர்கள் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த விருந்துக்குச் சென்றுவிட்டு இரவில் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேல்புர்வாரா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்து வந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர்களைப் பிடித்த அக்கிராம மக்கள், காட்டுமிராண்டித்தனமாக அடித்தே கொன்றுள்ளனர்; இல்லையில்லை; கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த இவர்களை அருகிலுள்ள ராஜ்பகார் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான் அடித்தே கொன்றனர் என்றும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.

இப்படுகொலைகளுக்குப் பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவோ, பிணங்களை முறைப்படி அடக்கம் செய்யவோ கூட முன்வராமல், ஹாஜிபூர் அருகே கங்கையும் கந்தோக் ஆறும் சங்கமிக்கும் கொனாரா சதுக்கம் அருகே, போலீசு மிருகங்கள் அப்பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்துள்ளன. அவற்றிலே ஏழு பிணங்கள் வீங்கி வெடித்து அலங்கோலமாக ஆற்றிலே மிதந்து கரை ஒதுங்கின; அவற்றை நாய்களும் கழுகுகளும் குதறித் தின்றன.

மாடோ, நாயோ செத்தால் கூட அவற்றைக் குழிதோண்டிப் புதைக்கும்போது, இறந்துபோன மனிதர்களின் பிணங்களை நாயைவிட கேவலமாக ஆற்றிலே வீசியெறிந்துள்ளதே பீகார் போலீசு, அது நாகரீக மனித இனத்தைச் சேர்ந்ததா? அல்லது வெறிபிடித்த மிருக இனத்தைச் சேர்ந்ததா?

""அவர்கள் நாயைவிடக் கேவலமான ""நாட்'' சாதியினர்; பரம்பரைத் திருடர்கள்; அவர்களிடம் இரக்கம் காட்டினால் குற்றங்கள் பெருகிவிடும்'' என்று நியாயவாதம் பேசுகிறது பீகார் போலீசு. வெள்ளைக்காரன் ஆட்சியில் குற்றப் பரம்பரையினர் எனப் பட்டியலிடப்பட்டு வதைக்கப்பட்ட எண்ணற்ற தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் ஒரு பிரிவினர்தான் ""நாட்'' சாதியினர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அதனால் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்ட, இவர்கள், காடுகளில் தேன் சேகரித்தும் பறவைகளைப் பிடித்தும் தமது பிழைப்பை நடத்துகின்றனர். காலனியாதிக்கவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பழங்குடியினரைக் ""குற்றப் பரம்பரை'' என்று பட்டியலிட்ட பிரிட்டிஷ் அரசும், அதன் பின்னர் அப்பெயரை மட்டும் ""சீர்மரபினர்'' என மாற்றிய இன்றைய அரசும் இம்மக்களை இன்னமும் பரம்பரைக் குற்றவாளிகளாகவே பார்க்கிறது. செய்யாத குற்றத்துக்கும் விசாரணை ஏதுமின்றி தண்டனை கொடுக்கிறது. எங்காவது திருட்டு நடந்தால் இம்மக்களையே குற்றவாளிகளாக அறிவித்து வதைக்கிறது. அவர்களை மிருகத்தனமாக அடித்தே கொன்று விட்டு, பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்து இழிவுபடுத்துகிறது.

தேல்புர்வாராவில் நடந்துள்ள கொலைகள், உணர்ச்சிவசப்பட்டு ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அதே பீகாரின் நவடாவில், கடந்த அக்டோபரில் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கிராம மக்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்; சைக்கிள் திருடியதாகக் குற்றம் சாட்டி மூன்று இளைஞர்களைப் பிடித்த கிராம மக்கள், அவர்களில் ஒருவரின் கண்களைத் தோண்டியெடுத்துள்ளனர். இத்தகைய கும்பல் பயங்கரவாதமும் போலீசின் வெறியாட்டங்களும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஜனநாயகம் மனித உரிமை பற்றிய வாசனையைக் கூட அறிய விடாமல் இன்னமும் பழமைவாதத்திலேயே ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள், குற்றப் பரம்பரையினராக இழிவுபடுத்தப்பட்டுள்ள பழங்குடியின உழைப்பாளிகளிடம் கும்பல் பயங்கரவாதத்தை ஏவும் சாதியக் கட்டுமானப் பிடியிலுள்ள கிராமங்கள், அக்கிராமங்களை நடுநடுங்க வைக்கும் நிலப்பிரபுக்களின் சாதிவெறி குண்டர் படைகள், ஒட்டு மொத்த சமூகத்தையே அச்சுறுத்தும் அரசு பயங்கரவாத போலீசு மிருகங்கள் என பீகார் இன்னமும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளதால், போலீசின் பயங்ரவாதமும் கொட்டமும் இன்னமும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலப்பிரபுக்கள், தரகுப் பெருமுதலாளிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, போலீசு, இராணுவம் என "குற்றப் பரம்பரை'யினரின் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் அங்கு நீண்ட நெடுங்காலமாகத் தொடர்கிறது. இந்த அநீதியும் பயங்கரமும் தொடர வேண்டுமென்பதற்காகவே, அப்பாவிகள் மீது தனது காட்டுமிராண்டித்தனத்தை ஏவி, இதர பிரிவு உழைக்கும் மக்களை அஞ்சி நடுங்க வைக்கிறது பீகார் போலீசு.

செய்யாத குற்றத்திற்காக விசாரணை ஏதுமின்றி அடித்தே கொல்லப்பட்டு, செத்த பிறகும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் அந்த 10 ""நாட்''கள். ஆனால் தாம் செய்த ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டும், தண்டனை அனுபவிக்காமலேயே மேல்முறையீடு செய்து தப்பித்து, பின்னர் செத்துப் போனதும் அரசு மரியாதையுடன் எரிந்து சாம்பலானார், "குற்றப் பரம்பரையை'ச் சேர்ந்த ஒருவர். அவர், முன்னாள் பிரதமர்; அவரது பெயர் நரசிம்மராவ்!

No comments: