""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு!
பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!''
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
இந்துவெறியர்களின் தேசிய நாயகன் ராமனை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொல்ல உத்தரவிட்ட தலைவெட்டி வேதாந்தியின் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், ராமன் பாலத்தை வைத்து தமிழகத்தை குஜராத்தாக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 27.9.07 அன்று தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சாரத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கிரிமினல் வேதாந்தியின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டும், அவனது உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தும் மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான புரட்சிகர அரசியலை அவர்களின் நெஞ்சிலே பதிய வைத்தது.
ஓசூரில் 27.9.07 அன்று பு.ஜ.தொ.மு.வினர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது அங்கு அடியாட்களுடன் வந்த இந்துவெறியர்கள், தோழர்களுடன் தகராறு செய்ததோடு, கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு என்று எழுதப்பட்டிருந்த தட்டியைக் கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இதுபற்றி போலீசுக்குத் தகவல் தெரிவித்ததும், அங்கு வந்த போலீசு அதிகாரிகள் இந்துவெறி குண்டர்களைக் கைது செய்யாமல், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி ஆர்ப்பாட்டத்துக்கு திடீர் தடை விதித்தனர். இதை ஏற்கமறுத்த தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதும், அனைவரையும் கைது செய்த போலீசு, பின்னர் இரவு விடுதலை செய்தது.
கடந்த ஆண்டில் பெரியார் சிலையை உடைத்து அவமதித்த இந்துவெறியர்களுக்கு எதிராக வருணாசிரமக் கிரிமினல் ராமன் படத்தை எரித்து ஓசூரில் பு.ஜ.தொ.மு.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இந்துவெறி குண்டர்கள், ஓசூர் பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் பரசுராமனின் மண்டையை உடைத்து மிருகத்தனமாகத் தாக்கினர். ஓசூர் போலீசு இக்கொலைவெறிக் கும்பலைக் கைது செய்யாமல், தோழர் மீதே பொய் வழக்குப் போட்டது. இப்போது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ள இந்துவெறி கும்பல் மீது ஓசூர் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுதந்திரமாகத் திரிய விட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி ராமனின் யோக்கியதையை அம்பலப்படுத்தி பேசினாலும், அதிகார வர்க்கம் போலீசு நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் காவிமயமாகியிருப்பதை அம்பலப்படுத்தியும், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகவும் பு.ஜ.தொ.மு.வினர் தொடர்ந்து வீச்சாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பு.ஜ. செய்தியாளர்கள்
No comments:
Post a Comment