தமிழ் அரங்கம்

Monday, June 9, 2008

நீதி கொன்ற மோடி

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார். நரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் "நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
.

No comments: