உலுக்கும்ஒரு தாயின் போராட்டம்!
'எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?' என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு, பயங்கரவாத அதிபர் புஷ்சுக்கு எதிராகத் தன்னந்தனியாக அவர் நடத்திய உறுதியான போராட்டம், அமெரிக்க மக்களின் மனசாட்சியை உலுக்கி, போர் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வகாவில்லி நகரைச் சேர்ந்த அந்தத் தாயின் பெயர் சின்டி ஷீஹன். அவரது அன்பு மகனாகிய கேசி ஷீஹன், அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய தனித்தேர்ச்சிமிக்க இளம் சிப்பாய். கடந்த 2004 ஏப்ரல் 4ஆம் தேதியன்று ஈராக்கில், ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இரு மாதங்களுக்குப் பிறகு சின்டி ஷீஹன் தனது குடும்பத்தோடு அதிபர் புஷ்ஷைச் சந்திக்கச் சென்றார். ஆனால், அங்கே ஆறுதலுக்குப் பதிலாக அவமரியாதைதான் கிடைத்தது.' இன்று நாம் யாரைக் கௌரவிக்க வேண்டும்? என்று அசைபோடும் தனது வாயுடன் உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அதிபர் புஷ் வேகமாக நடந்து சென்றார். ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை.
எங்களை நோக்கிய அவரது கண்களில் கருணை இல்லை. எதைப் பற்றியும் கவலைப்படாதவராக அவரது தோற்றம் காட்டியது. யதார்த்தத்திற்கும் மனிதத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதப் பிறவிதான் அவர். அவரது கண்கள் வெறுமையாகவும், உள்ளே ஒன்றுமில்லாத வேர்க்கடலை ஓடு போலவும் காட்சியளித்தது'' என்று அந்தச் சந்திப்பை நினைவு கூர்கிறார், ஷீஹன். ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாயின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக் கூட அதிபர் தயாராக இல்லை எனில், ஈராக் மீதான இந்தப் போர் எதற்காக? யாருக்காக? என்னைப் போல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் மகனையும் குடும்பத் தலைவனையும் உற்றாரையும் ஏன் இப்படி பறிகொடுக்க வேண்டும்? கூடாது; இந்தப் போர் இனியும் தொடரக் கூடாது என்று அவர் தீர்மானித்தார். ''இராணுவக் குடும்பங்களின் உரத்தகுரல்'' (உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் அரங்கம்) எனும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஊக்கமாகச் செயல்பட்டு வருகிறார். பேரழிவுக்கான ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாகக் குற்றம் சாட்டி ஈராக் மீது நடத்தப்பட்டுள்ள இந்தப் போர் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தும் இவ்வியக்கத்தினர், உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஈராக்கில், அமெரிக்கப்படை வீரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, விமானங்களில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அமெரிக்க மக்களிடம் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளன. அமெரிக்க மக்களிடம் அதிருப்தி பெருகி வருவதைக் கண்டஞ்சும் அதிபர் புஷ், அதிலிருந்து தப்பிக்க விடுமுறையில் ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறி நழுவிச் செல்வது வழக்கம். இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கிராஃபோர்டிலுள்ள தனது கால்நடைப் பண்ணையில் ஓய்வெடுக்க ஓடினார். அங்கே பொதுமக்கள் தமது கோரிக்கைகளுடன் எப்போதும் தன்னை சந்திக்கலாம் என்றார். புஷ் பதவிக்கு வந்து அவர் இப்படி ஓய்வெடுக்க ஓடுவது ஐந்தாவது தடவையாகும். கடந்த 36 ஆண்டுகளில் எந்த அதிபரும் தொடர்ந்து ஐந்து வாரங்களாக இப்படி ஓய்வெடுத்துக் கொண்டு முடங்கிக் கிடந்ததில்லை என்ற வரலாற்றுச் 'சாதனை'யையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று சின்டி ஷீஹன் அதிபர் புஷ்ஷைச் சந்திக்க அவரது கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அதிபர் புஷ் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.ஷீஹன் தன்னந்தனியாக இருந்த போதிலும், அதிபரின் இந்தத் திமிர்த்தனத்துக்கும் அவமானப்படுத்துதலுக்கும் எதிராக அவரது பண்ணையின் முன்பாகவே போராட்டத்தில் இறங்கினார். ''ஈராக் மீது ஏன் இந்த ஆக்கிரமிப்புப் போர்? எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்'' என்று எழுதப்பட்ட முழக்கத் தாளுடன் அவர் இரவு பகலாக விடாப்பிடியாக அங்கேயே நின்றார். இதைக் கண்டு பொதுமக்கள் திரளத் தொடங்கியதும், பீதியடைந்த புஷ் தனது உதவியாளர்களை அனுப்பி அவரைச் சாந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், ஷீஹன் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
நன்கொடை அளிக்கும் ஒரு பெருமுதலாளியுடன் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு, அவரை வழியனுப்ப புஷ் வெளியே வந்தபோது, ''பணக்காரர்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்த உங்களுக்கு, என்னுடன் பேசுவதற்கு மட்டும் நேரம் இல்லையா?'' என்ற முழக்கத்தை எழுதிப் பிடித்துக் கொண்டு ஷீஹன் நிற்பதைக் கண்டு மிரண்டு, உள்ளே ஓடிப் போய் பதுங்கிக் கொண்டார். அதிபர் புஷ்ஷûக்கு எதிராகவும், ஈராக் மீதான போருக்கு எதிராகவும் இரவு பகலாக ஷீஹன் விடாப்பிடியாகப் போராடிய இடம், மாண்டுபோன அவரது மகன் கேசியின் பெயரால் நினைவுத் திடலாக போர் எதிர்ப்பு இயக்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே அடிக்கடி போர் எதிர்ப்புக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், மாண்டுபோன அமெரிக்கச் சிப்பாய்களின் பெயர் புகைப்படங்களையும் வெண்சிலுவைக் குறி பொறித்த அட்டைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். ''ஈராக் மீதான போரை நிறுத்து! அமெரிக்கப் படைகளை உடனே திரும்பப் பெறு!'' என்ற முழக்கம் புஷ்ஷின் பண்ணையில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஈராக்கில் அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்படும் போதெல்லாம், அத்திடலில் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்கள் திரண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர்கிறது.ஈராக்கில் போராளிகளின் குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட அமெரிக்கச் சிப்பாய் எட்வர்ட் ஷெரோடர் என்ற இளைஞனது சடலத்தை அடக்கம் செய்த பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கேசி ஷீஹன் திடலில் போர் எதிர்ப்பு இயக்கத்தினர் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினர்.
அதில் உரையாற்றிய எட்வர்ட் ஷெரோடரின் தந்தையான பவுல் ஷெரோடர், 'நாங்கள் எங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வரவில்லை. எங்களது குமுறல்கள் அதிபர் புஷ் மீது நாங்கள் கொண்டுள்ள கோபத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கோபம், உருக்குலைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் நேர்மையான வெளிப்பாடு'' என்று குறிப்பிட்டதோடு, 'சின்டி ஷீஹன் அம்மையார், போர் எதிர்ப்பு இயக்கத்தின் ரோசாபார்க்ஸ் ஆவார்' என்று பெருமையுடன் கூறுகிறார். 1955இல் ரோசாபார்க்ஸ் அம்மையார், இன ஒதுக்கல் கொள்கைப்படி பிரிக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு, எழ மறுத்துப் போராடினார். ஏனெனில், அவர் ஆப்பிரிக்க அமெரிக்க கலப்பினத்தவர். கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் பேருந்தின் பின்பகுதி இருக்கைகள் என இடஒதுக்கீடு செய்யப் பட்டு, அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட காலம் அது.
தன்னந்தனியே ரோசாபார்க்ஸ் அன்று நடத்திய போராட்டம், வெள்ளை நிற வெறியர்களின் புதிய வகை தீண்டாமைக்கு எதிரான மனித உரிமைப் போராட்டத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. அவர் தொடங்கி வைத்த போராட்டம், அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயாகப் பற்றிப் படர்ந்தது.
ரோசாபார்க்ஸ், இறுதிவரை மனித உரிமை இயக்கத்தின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டார். ரோசாபார்க்ஸ் போலவே சின்டி ஷீஹனும் இன்று அமெரிக்க மக்களால் போற்றப்படுகிறார். தன்னந்தனியே அவர் நடத்திய போராட்டத்தால் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, அடக்குமுறையை எதிர்க்கும் உறுதி ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக அவர் கருதப்படுகிறார். தன்னந்தனியே ரோசாபார்க்சைப் போலவே சின்டிஷீஹன் போராடியிருந்த போதிலும், அவர் தனியானவர் அல்ல. போர் எதிர்ப்பு இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம். வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர் ஜோன் பெய்ஸ் அம்மையார், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று இரவு புஷ் பண்ணையின் எதிரே பெருந்திரளான மக்கள் முன் இசை நிகழ்ச்சியை நடத்தி ஈராக் போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டியுள்ளார். தனது மகனுக்காக மட்டுமல்ல் தனது மகனையொத்த இன்னும் பல இளைஞர்கள் அமெரிக்க வல்லரசின் ஒரு பொய்க்காக கொல்லப்படுவதைக் கண்டு குமுறும் ஷீஹனின் கோபம் உண்மையானது.
இந்தப் போர் அநீதியானது; அது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற உணர்வோடு அவர் நடத்திய போராட்டமும் உண்மையானது. அது, அமெரிக்க மக்களின் உள்ளார்ந்த கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி, போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டி வருகிறது. அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமின்றி, இராணுவக் குடும்பங்களிடமிருந்தும் புஷ் கும்பல் முற்றாகத் தனிமைப்பட்டுப் போய் கிடக்கிறது. அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லரசாக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி ஆணவத்தோடு கொக்கரிக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களிடம் இன்னமும் எஞ்சியிருக்கிறது மனசாட்சி. ஷீஹன் மூட்டிய போராட்டச் சிறு பொறி பெருங்காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். அன்று வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடியதைப் போல, ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்களின் போராட்டம் உள்நாட்டிலேயே எரிமலையாக வெடித்தெழப் போவது நிச்சயம்.
மு குமார்
நன்றி புதியஜனநாயகம்
தமிழ் அரங்கம்
Tuesday, October 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment