அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்
பி.இரயாகரன்
12.09.2006
தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே தமிழீழத்தில் நடப்பதாக திரிக்கும் உயர்சாதிய வெறியர்கள், மனுதர்ம அடிப்படையில் நீதியைக் கோருகின்றனர்.
ஒரு வரலாற்று திரிபு, ஒரு அரசியல் திரிபாக இங்கு புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய வலதுசாரிய பிற்போக்கு அரசியலை ஆராய, விமர்சிக்க மறுக்கின்ற போது அது சாதியமாக திரிபுறுகின்றது. ஏன் இந்த கொலைகளை தமிழீழத்தின் பெயரில் செய்கின்றனர் என்பதையும், இதன் பின்னுள்ள வர்க்க அரசியலைக் கூட இந்த நாவல் திரித்து மூடிமறைக்க முனைகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் தமிழீழப் பாசிசமாக உருவானபோது, வலதுசாரி அரசியல் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகின்றது. தனது சொந்த வலதுசாரிய பிற்போக்கு அரசியலை பாதுகாக்க, கொலைகார அரசியல் வரலாற்றையே இந்த நாவல் தனக்கு ஏற்ப திரிக்கின்றது. தனது உயர்சாதிய மனுதர்மத்தை முன்னிலைப்படுத்தி, நடப்பது உயர் சாதியப் படுகொலைகளே என்று இந்த நாவல் தர்க்கித்து சித்தரிக்க முனைகின்றது.
உண்மையில் 'மறைவில் ஜந்து முகங்கள்" என்ற நாவலின் அரசியலே, சாதியம் தான். ஆனால் இயக்க படுகொலைகளைப் பற்றி இந்த நாவல் பேசுவதால், இந்த நாவல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்ணளவாக தமிழீழத்தின் பெயரில் 10000 பேரை படுகொலை செய்த தமிழ் தேசிய வலதுசாரிய பாசிச அரசியலையே, சில வலதுசாரிகள் சாதியமாக திரித்துக் காட்டி விடுவது இன்று எதார்த்தமாகியுள்ளது. அரசியல் படுகொலைக்கான அரசியல் காரணத்தை, இந்த நாவல் முற்றாக சாதியமாகவே காட்டுகின்றது. இதன் மூலம் வலதுசாரிய கும்பல்களினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலையும், அதன் கையாலாகாத அரசியல் வங்குரோத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது. அத்துடன் நாவல் ஏகாதிபத்தியத்தின் ஜனநாயகம் அப்பழுக்கற்றதும் நேர்மையானதும் என்று கூறுவதுடன், ஐக்கிய நாட்டுச் சபை இலங்கையில் தலையிட வேண்டும் என்கின்றது. சர்வதேச நீதி மன்றங்களில் குற்றவாளிகளை விசாரிக்கவேண்டும் என்றும், ஆனால் புலிகளையல்ல என்கின்றது இந்த நாவல். மாறாக புலியில் உள்ள தாழ்ந்த சாதி நபர்களையும், மற்றைய இயக்கங்களையும் மட்டும் தண்டிக்க வேண்டும். அதாவது பார்ப்பனிய இந்து மனுதர்மத்துக்கு உட்பட்ட சாதிய நீதியை, அடிப்படையாக கொண்ட ஒரு நீதி விசாரணையை முன்வைக்கின்றது இந்த நாவல்.
இதன் எதார்த்தம், அது சார்ந்த நடைமுறையும், உயர் சாதிய யாழ்ப்பாணிய தேசியத்தில் சாத்தியமானதே. நாளை மனித அவலங்களுக்கு காரணம் 'இழிசார்" சாதி மக்களே என்று புலித்தலைமையே கூறுவது நிகழத்தான் செய்யும். இது ஒன்றும் கற்பனையல்ல. பொதுவாக தலைவருக்கும், ஏன் புலித் தலைமைக்கும் தெரியாமல் அடிநிலையில் உள்ளவர்கள் தான், அத்துமீறுகின்றனர் என்ற நம்புகின்ற நம்பவைக்கின்ற, தமிழ் தேசிய சாதிய பிதாமகன்கள் வாழ்கின்ற உலகில் நாம் வாழ்கின்றோம். படித்த வலதுசாரிய சாதிய மேதைகள், ஆய்வாளர்கள் இப்படி கூறுவதும் ஆங்காங்கே தர்க்கிப்பதும் தற்போதும் நிகழத்தான் செய்கின்றது. முன்பு புலிகள் அல்லாத இயக்கங்கள் தான், இது போன்ற இழிசெயல்களை செய்ததாக, இதே யாழ் மேலாதிக்க சாதிய சமூகம் கூறி எகிறியது. கோயில்களை கொள்ளை அடித்தவர்கள் புலிகள் அல்ல என்று, யாழ் மேட்டுக்குடி தனது சொந்த சாதிய வக்கிரத்தில் சாதியாக வாழ்ந்தபடி வம்பளக்க, அவ்வியக்கங்கள் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தற்போது இழிவான செயல்களை புலிகளில் உள்ள 'இழிசார்" மக்கள் செய்வதாக, வலதுசாரிய சாதிப் பிரிவினர் விறுவிறுப்பாக கூற முனைகின்றனர். இந்து மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அதையே தெளிவாக தர்க்கித்து சொல்லுகின்றது. நாவல் விமர்சனத்துக்குள் செல்ல முன், ஒரு சில குறிப்புகளை சொல்லிவிட்டுச் செல்வது அவசியம்.
அண்மையில் நான் கனடா சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னாள் யூனியன் கல்லூரி அதிபரான கதிர் பாலசுந்தரத்தை சந்திக்க நோந்த போதே, அவரினால் எழுதப்பட்ட இந்த நாவல் எனக்கு கிடைக்கப்பெற்றது. அவர் முன்னாள் அதிபர் மட்டுமின்றி, அவர் எனது ஆசிரியரும் கூட. அவர் பாடசாலையில் தயாரித்த ஒரு நாடகம் ஒன்றில் முன்பு நடித்ததுடன், எனது ஊர் சார்ந்த திருமண வழிகளில் தூரத்து உறவுமுறையும் உண்டு. அவர் நான் படித்த பாடசாலை அதிபராக இருந்ததாலும், கொலைகளை விமர்சித்து ஒரு நாவலை எழுதி உள்ளார் என்று அறிந்ததாலும், அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
இந்த நாவல் முதலில் படிக்கத் தொடங்கிய போது ஏற்பட்ட ஆர்வம், பின்னால் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறியது. ஆயிரக்கணக்கானவர்களின் படுகொலை வரலாற்றையே, இப்படி சிந்திக்கவும் சிதைக்கவும் முடிந்தது என்பது, உண்மையில் கொல்லப்பட்டவர்களை மறுபடியும் படுகொலை செய்யும் ஒரு அரசியல் முயற்சிதான். அதாவது 'கற்பழிக்கப்பட்ட" ஒரு பெண்ணை நீதி கோரி நீதிமன்றம் சென்றால், அந்த நீதிமன்றம் மீண்டும் 'கற்பழிப்பு" காட்சியை நீதிமன்றத்தில் மீள அரங்கேற்றுவது போன்றதே இதுவும். கொலை செய்தவர்களின் நோக்கத்தை திரித்து, கொல்லப்பட்டவனை வேறுவிதமாக மறுபடியும் கொல்வதாகும். இந்தமாதிரி செய்துள்ள எனது முன்னாள் ஆசிரியர் மீதான விமர்சனம், கடுமையானதாகவும் தவிர்க்க முடியாததுமாகின்றது.
2000 ஆண்டு வெளியாகிய இந்த நாவல், பொது பாசிச சூழலால் வெளியுலகுக்கு பொதுவாக தெரியவரவில்லை. ஆனால் வரலாற்று திரிபையொட்டி, காலத்தின் மாற்றத்துடன் இது வலதுசாரிகளால் முன்னிலைப்படுத்தப்படும். இவர் பல நூல்களை எழுதியுள்ளாh. அதில் ஒன்று 'அமிர்தலிங்கம் சகாப்த்தம்" மாகும்.
'மறைவில் ஐந்து முகங்கள்" என்ற நாவல் விறுவிறுப்பையும், மர்மத்தையும், சினிமா பாணியிலான கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு, கற்பனை வடிவங்களை இணைத்துக் கொண்டு சாதியமாக திரிகின்றது. இந்த நாவலின் வரும் பாத்திரங்களின் இணக்கமின்மை, முரண்தன்மை, முன்னுக்குப் பின்னான அதிபுத்திசாலித்தனமாகவும் மிக மந்த புத்தியுள்ள செயல்களுமாக நாவலுக்குள் முரண்படுகின்றது. இக்குறைபாடு என்பது சினிமா பாணிக்கு உட்பட்டே அதிசயங்களையும், கற்பனைகளையும் நியவுலகில் பொருத்த முனைகின்றது. எனது விமர்சனம் இந்த குறைபாடுகளைப் பற்றியதல்ல. இந்த நூல் பற்றிய எனது விமர்சனம், இந்த நூலின் சாதிய அரசியல் பற்றியதே. விமர்சனம் நீண்டவிடும் என்ற அஞ்சி, குறிப்பான மையமான பகுதிக்குள் மட்டும் சுருக்கப்பட்டுள்ளது.
நாவல் ஆசிரியர் யாழ் உயர்சாதிய நபராகவே சிந்தித்து, அப்படியே சமூகம் மீது அதை காறி உமிழ்கின்றார். கற்பிப்பதில் அதிபர் என்ற தகுதியையே இது கேள்விக்குள்ளாக்குகின்றது. யாழ் மண்ணில் நடந்த சில உண்மைக் கொலைகளை அடிப்படையாக கொண்டு, இந்த சாதிய நாவல் புனைந்து திரித்து எழுதப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களின் உள்ளடகத்தை, கொடூரமான செயல் சார்ந்த உண்மையை அடிப்படையாக கொண்டு, திட்டமிட்டு தாழ்ந்த சாதிக்கு எதிராக உயர்சாதி நோக்குடன் அனைத்தையும் திரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இயக்கங்களை உயர்சாதிய வாழ்வியல் சார்ந்த யாழ் சாதிய குறியீட்டின் ஊடாகவே இனம்காட்டி, வெள்ளாளச் சாதியாக நின்று மனுதர்மாக உறுமுகின்றது.
யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி சாதியமாக, ஆணாதிக்கமாக தன்னை வெளிப்படையாகவே வரிந்து கொள்கின்றது. 'தாலி தமிழ் கலாச்சாரத்தின் மூல வேர்" என்றும், 'கணவரின் பெயரை சொல்வது தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாகும்" என்றும் யாழ் கலாச்சாரத்தை ஆணாதிக்க நோக்கில் தெளிவாகவே கூறுகின்றது. 'பள்ளி"யான நதியா தாலியை கழற்றியது மட்டுமின்றி, தனது கணவன் பெயரை உச்சரித்ததை தமிழ் கலாச்சார இழிவாக நாவல் சித்தரித்து காட்டுகின்றது. அமிர் என்ற உயர்சாதியை சேர்ந்தவனை காதலித்த, உயர் சாதியைச் சேர்ந்த புலி ஜீவிதா புலியாகவே மிஸ்ட்டர் போட்ட போது, அது வெறும் உறுத்தலாக மட்டும் தான் யாழ் கலாச்சாரத்துக்கு இருக்கின்றது. இங்கு தமிழ் கலாச்சாரம் புலிக்குள், அது கட்டி பாதுகாக்கும் சாதியத்துக்குள் குறுகி கூனிப்போகின்றது. இதேபோல் சாதியமே, யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் என்பதை இந்த நாவல் ஊடாக சொல்லிவிடுகின்றது. பள்ளி நதியாவூடாகவே அதை சொல்லவைக்கின்றது. 'வாழையடி வாழையாக நம் மூதாதையோரும் சமய சாத்திரங்களும் வளர்த்து எடுத்த மனிதத்தை .. விழுமியங்களை எல்லாம், ஒரு வெறிபிடித்த ஓநாய் கூட்டம் குதறிக் கிழிப்பதை.." சுட்டிக்காட்டி, சாதிய கட்டுமானங்களின் அதிர்வை ஐயோ கலாச்சாரம் என்கின்றனர். வாழையடி வாழையாக பாதுகாத்த சாதியம், அது கூறிய மனுதர்ம மனிதத்துவம் தான் யாழ் கலாச்சாரமாகும். இது மனிதத்துவத்தையோ, எந்த சமூக விழுமியங்களையோ கொண்டதல்ல. மாறாக அனைத்தும் சாதிய அகமண முறைதான் யாழ்ப்பாணியம், அதற்கு அப்பால் சாதிய சீர்திருத்தத்தை சாதியத்தை பாதுகாத்தபடி தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்கின்றனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால், குறித்த நாவல் ஆசிரியர் தனது முன்னுரையில் முறிந்த பனை, சோபாசக்தியின் கொரிலா, புதியதோர் உலகம், பெடியளில் இருந்து கெரில்லா வரையிலான.. நூல்களின் வரவை குறிப்பிட்டுள்ளார். இவற்றை அவர் படித்துள்ளதையே இது காட்டுகின்றது. ஆனால் அதற்கு எதிரிடையாகவே தனது சாதிய மேல் மக்கள் நூலைக் கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக நாவல்களில் அரசியல் கிடையாது என்போரும், அரசியலை முதன்மைப்படுத்தி பேசக்கூடாது என்ற வாதத்துக்கும், இந்த நாவல் சவால் விடுகின்றது. அதுவும் சாதியம் மூலம் விடுகின்றது. இந்த நாவல் அரசியலை, சாதியத்தை பேசியேயாக வேண்டும் என்பதை வெளிப்படையாகவே உணர்த்தி நிற்கின்றது.
வெளிப்படையாக இந்த நாவலின் மையக் கருப்பொருள், தமிழ் தேசிய போராட்டத்தில் வன்முறை பற்றியதே. அதற்கான அரசியல் காரணத்தை ஆராய முற்படுகின்றது. அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முனைகின்றது. தொடர்ந்து எப்படி போராடுவது என்று, ஒரு வழியைக் காட்டமுனைகின்றது. இந்த வகையிலும், இதன் அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகின்றது. இதைவிட வழமையான இடதுசாரிய போக்கில் இப்பிரச்சனையை அணுகாது, வலதுசாரிய கண்ணோட்டத்தில் இதை முற்றாக அணுகுகின்றது. வலதுசாரி அரசியல் இதை எப்படி புரிந்து கொள்ள முனைகின்றது என்பதை இந்த நாவல் ஊடாக தெரிந்து கொள்ளவும் இது உதவுகின்றது.
இந்த வகையில் இந்த நாவல்
1. மண்ணில் நடந்த படுகொலைகளை சாதிய நோக்கில் அணுகுகின்றது. குறைந்த சாதிகளில் இருந்து இயக்கத்துக்குள் வந்தவர்களால் உயர் சாதிக்காரர் மீதான பழிவாங்கல் தான் இந்த வன்முறை என்று கூற முற்படுகின்றது. எந்த இயக்கத்திலும் நடந்த படுகொலையையும், அந்த இயக்கத்தில் உள்ள தாழ்ந்த சாதிக்காரன் தான் செய்தான் என்று, இந்த நாவல் சொல்லுகின்றது. இதில் இயக்கங்களை சாதி இயக்கமாகவும் கூட காட்டப்படுகின்றது.
2. மிக நுட்பமாக தாம் சாதி பார்ப்பதில்லை என்று, நிகழ்ச்சிகள் மூலம் கூற முற்படுகின்றது. சாதியத்தை பாதுகாக்க சாதி பார்ப்பதில்லை என்ற எதிரிடையான உத்தி இந்த நாவலில் கையாளப்படுகின்றது. அந்த வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள் உருவாக்கப்பட்டுள்ளத
3. புலிகளின் படுகொலையில் இருந்து தொடங்கிய போதும், மற்றைய இயக்கங்களை கடுமையாக அரசியல் உள்நோக்குடன் அணுகுகின்றது. புலியை பற்றிய மிதமான அணுகுமுறையுடன் கூடிய ஒரு புதிரை சூக்குமமாக ஆதரிப்பதன் ஊடாக விட்டுச் செல்லுகின்றது.
4. தண்டனைகள் மனுதர்ம அடிப்படையில் அணுகி, அடிநிலைச் சாதிகளை தண்டிப்பதை முதன்மைப்படுத்துகின்றது. உயர்சாதியினர் குற்றவாளிகளாக இருக்கமுடியாது என்கின்றது. அப்படி இருந்தாலும் குற்றத்தை அவர்கள் விரும்பிச் செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன், தண்டிக்க கூடாது அல்லது மிதமாக தண்டிக்க கோருகின்றது. இயக்க படுகொலைகளை ஒருபக்கமாக முன்னிலைப்படுத்தி, சாதிய அடிப்படையில் சிதைத்து திரிக்கின்றது.
இப்படி நாவலின் சாதிய அரசியல் சிக்கலுக்குரியதாகவும், விமர்சனம் நுட்பமானதாகவும் அணுக வேண்டியளவுக்கு, சூழ்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது. குறித்த பாத்திரங்களை சாதியாகவே அணுகுவதால், நாமும் பாத்திரத்தை நேரடியாக சாதியாக சாதியூடாக அணுகுவது அவசியமாகின்றது. முதலில் பாத்திரங்களின் சாதிகள்
கறுப்பு நரிகள் - புலிகள், மரநாய் - ஈ.பி.டி.பி, கழுதைப்புலிகள் - ஈ.பி.ஆர்.எல்.எப், கோட்டான் இயக்கம் - புளாட்.
ஊத்தைவாளி குகன் - கரையான், கில்லாடி (ஈ.பி.ஆர்.டில்.எப்) - பள்ளன், சால்வை மூத்தான் (புலி) - வண்ணான், நதியா - பள்ளி, நர்த்தனா - கரையாடிச்சி, அமிர் - வெள்ளாளன், ஜீவிதா - வெள்ளாடிச்சி, பூமா - வெள்ளாடிச்சி .... இப்படிப் பல சாதியப் பாத்திரங்கள்.
பிரதானமான பாத்திரமான யாழ பல்கலைக்கழக மாணவன் அமிர், ஒரு சாதிய வெள்ளாளனாக வருகின்றான். அவரின் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரை 'பெரும்பான்மை ஆட்சியும் பயங்கரவாதமும்" மாகும். இவர் வெள்ளாள கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மேயரின் மகன் தான் இவர். இந்த மேயர் புலிகளுடன் கொண்டிருந்த அரசியல் நெருக்கமே அரசியல் உறவாக, வீட்டில் விருந்தாக நடக்கின்றது. 'பெரும்பான்மை ஆட்சியும் பயங்கரவாதமும்" பற்றி அரசியல் பற்றி கதைத்தபடி கோழிக்கறி விருந்தை வயிறுபுடைக்க உண்ட புலிகள், அதே மேசையில் வைத்து சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியுடன் நாவல் தொடங்குகின்றது. இப்படி பல சம்பவங்கள், புலிகளால் செய்யப்பட்டது என்பதை இது மறுதலித்துவிடவில்லை.
புலி சுட்டுக் கொன்ற தந்தையின் இறுதிக்கிரியையில், எல்லோரும் மௌனமாகி கொலையை கண்டிக்காத நிலையில் தான், அமிரின் உரையை இந்த நாவல் முதன்மை கொடுத்து தொடங்குகின்றது. 'வீரமறவர்கள் தாம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் கறுப்புநரி விடுதலைப் போராளிகள். அவர்கள் துப்பாக்கிகளைக் துணைக்கு வைத்துக் கொண்டு, வெறும் கையோடு நிற்கும் தம் தொப்புள்கொடி உறவுகளிடம் வீரம் பேசுகிறார்கள். கோழைகள் போலப் பிஸ்டலை மறைத்துக் மறைத்துக் காவி வந்து நிராயுதபாணியான அப்பாவிகளைச் சுட்டுக் கொல்கின்றார்கள். தங்கள் செயலைப் புகழ்ந்து தாமே பரணிவேறு பாடிப் புறநாநூற்றையே கொச்சைப் படுத்துகின்றார்கள். கறுப்புநரியிடம் துப்பாக்கி இல்லாவிட்டால், அதன் எட்டு வீடு எப்பவோ முடிந்து, அந்தச் சாம்பல் மேட்டில் நாகதாளி முளைத்திருக்கும்" என்கின்றார்.
ஆரம்பம் இப்படி தெளிவாக தொடங்கி, சாதியமாக திரிந்து இறுதியில் முந்தையதுக்கு முரணாகவே சொல்லுகின்றது. 'போர்க்களத்தில் போராடுகிற, முன்னர் போராடிய போராளிகளை நாம் என்றும் கொச்சைப் படுத்தியதில்லை, ஐPவிதா. நாம் கொச்சைப்படுத்தப் போவதில்லை. அவாகள் புறநானூற்றின் வீர வாரிசுகள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் புனித வீரச் சொத்துக்கள்" என்கின்றார். இப்படி ஒரு முரண்நிலை வலதுசாரிய பாசிச அரசியல், சாதியம் சார்ந்து கொப்பளிக்கின்றது. இதை தமிழ் கலாச்சாரத்தின் புனித வீரச் சொத்துகள் என்கின்ற போது, தமிழ் கலாச்சாரம் என்பது ஆணாதிக்கமும் சாதியமும் .... அல்லாத வேறு எதுவுமல்ல.
இப்படி முரணாகவே சாதியம் முன்னிலைப்பட்ட நிலையில், புலியைப் போற்றுவதை வலிந்து கோருகின்றது. மரணவீட்டில் புலிகளின் சொந்தப் பாத்திரத்தை வருணித்தமைக்காக, புலிகள் அவரை சும்மாவிடவில்லை. 'கால்களைக் கயிற்றால் கட்டிக் காவுதடியில் தலைகீழாக தொங்கவிட்டுக் காவிச் சென்ற காட்சி, இரும்புச் சங்கிலியில் பிணைத்துப் பங்கரில் வைத்து ஏழு மாதகாலம் சித்திரவதை செய்த காட்சிகள் - ஒன்றன் பின் ஓன்றாகத்.." தெரிவதை நாவல் கூறுகின்றது. இப்படி புலிகள் அவரை பலத்த சித்திரவதை செய்த பின்பு, பல மாதமாக வதை முகாமில் இருந்த பின் லண்டன் வருகின்றார். ஏன் வருகின்றார் என்றால் 'மனித குலத்தின் கவனிக்கப்படாத கடமை ஒன்று தன்னை அழைப்பதாக அவன் எண்ணினான்." அதனால் வந்தவர் தனது கடமையாக, இயக்கத்தைச் சேர்ந்த சாதிகுறைந்த இயக்க கொலையாளிகளுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கின்றார். அதேநேரம் அகதி அந்தஸ்து எழுதிக் கொடுத்து மோசடி செய்தவரையும், பூமாவை 'கற்பழித்த" முன்னைய இயக்கக்காரனையும் தண்டைக்குள்ளாக்குகின்றார். பின் கடமை முடிந்து, புலி வெள்ளாடிச்சியான கொலைகாரி காதலி ஜீவிதாவை திருமணம் செய்து நாடு திரும்ப உள்ளதாக கூறுகின்றார். என்ன கடமை, என்ன பழிவாங்கல். பழிவாங்கல் முழுக்க சாதிகள் பற்றியும், சாதி பழிவாங்கல் பற்றியும் பேசுகின்றது. நாவலில் சாதியம் வெளிப்படையாக உறவாடுகின்றது.
அகதி அந்தஸ்து விண்ணப்பம் எழுதச் சென்ற அன்றே, வெள்ளாடிச்சி ஐPவிதாவை வெள்ளாடிச்சியாகவே சந்திக்கின்றனர். அவளுக்கு அவன் வெள்ளாளன் என்பதால் காதல் வருகின்றது. இவருக்கு அவள் வெள்ளாடிச்சி என்பதால் காதல் வருகின்றது. இது தான் யாழ் (தமிழ்) கலாச்சாரக் காதல். அதை அவள் '... யாழ் மேயரின் மகன் என்றதும் அவளுக்கு இனித்தது. அவளுக்கு யாழ் மேயர் தன்னை ஓத்த வேளாளச்சாதி என்பதை அறிந்தமையே அதற்கு காரணம்." எப்படி இருக்கின்றது இந்தக் தமிழ்க் காதல், தமிழ் கலாச்சாரம். இப்படித்தான் காதல் செய்கின்றது. தமிழ் காதல் சாதிய அகமண முறைக்குள் இப்படி வரையறைக்குள்ளாகின்றது. இதுவா புறநானூறு தமிழ்க் காதல்?
இப்படி சாதி அடையாளம், கவர்ச்சியாகி காதலாக மாறுகின்றது. வாழ்வுபற்றி எந்த அடிப்படையுமற்ற நிலையில், கவர்ச்சி அந்தஸ்து இனம் காணப்பட்டு சாதி முதன்மைக் கூறாக அதுவே காதலாகின்றது. இந்த ஐPவிதா புலிகளின் கொலைகார உளவாளி என்பது, இறுதியில் காட்டப்படுகின்றது. சாதிக் காதல் அதைத் தடுக்கவில்லை. இங்கு மிக நுட்பமாகவே அமிரின் கடந்த காலத்தை புரிந்துகொண்ட அவள், தனது எதிரியாக அந்த புலி உளவாளி அமிரைப் பார்க்கவில்லை. ஏனென்றால் அவன் உயர் அந்தஸ்த்து கொண்ட ஒரு வெள்ளாளன். தம்மால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மகன் என்பது கூட, அவளுக்கு சாதி சார்ந்ததால் உறுத்தவில்லை. வெள்ளாளன் வெள்ளாத்தி உறவில், தமது வலதுசாரிய அரசியல் கருத்து தமது காதலுக்கு எதிரானதல்ல என்பதே இதன் சராமாகும். அமிருடான ஜீவிதாவின் முரண்பாடுகள், சாதியுடன் இணங்கிப் போகின்ற அமிரின் பிழைப்புவாத நோக்கில் காலத்திற்கு ஏற்ப சாதிக்கு வழங்கும், சலுகை அரசியலுடன் தான் முரண்படுகின்றது. மிக நுட்பமாகவே இந்த சாதி அரசியல் வெளிப்படுகின்றது.
அரசியல் ரீதியாக அமிரைக் கொல்ல, புலியில் இருந்த மற்றொருவரின் கட்டளைக்குட்பட்டே அவள் முயல்கின்றாள். இந்த வெள்ளாளனுக்கு அந்த வெள்ளாச்சி ஜீவிதாவை குற்றவாளியாக காணமுடியவில்லை. தலைமையின் உத்தரவுக்கு அமையாத, நடக்காத ஒரு கொலை முயற்சியாக இதைக் காட்டியது மட்டுமின்றி, கொலை முயற்சி தோற்றமையால் கொலையைச் செய்ய தூண்டிய மற்றொருவன் தற்கொலை செய்ததாக காட்டிவிடுவது நிகழ்கின்றது. அரசியல் பேசுவதை தவிர்க்க, ஐPவிதாவை தப்பவைக்க செய்ய வெள்ளாளச் சூழ்ச்சி இது. இங்கு மற்றைய சாதிகளுடன், இதில் சம்பந்தப்பட்டவரை விசாரணைக்கு கொண்டு வருவதை தவிர்க்கவும், ஜீவிதாவை தப்பிக்க வைக்கவும் தற்கொலை வசதியாகின்றது. இப்படி உண்மையில் உயர் சாதியம் நரித்தனமானது. தனது சாதிய இருப்பை தக்கவைக்க தற்கொலைகளை மட்டுமின்றி அவர்களை கொன்று விடுவது யாழப்பாணக் கலாச்சாரமாகும். இது சாதி வழக்கு மட்டுமின்றி வழமையும் கூட.
அமிர் தான் சாதி பார்ப்பதில்லை என்று காலத்துக்கு ஏற்ப நிறுவ, முன்னாள் காதலியான கரையாடிச்சி நர்த்தனாவை காட்டி, பின் அவளைக் கொன்று விடுதவதன் மூலம் திருமண வாழ்வில் வெள்ளாடிச்சியை அகமணமுறைக்குள் கைப்பிடிக்க முடிகின்றது. உயர்சாதியம் தனது சாதிய முகத்தை மூடிமறைக்க எப்போதும் முனைப்பு கொள்கின்றது. ஐPவிதா 'நீங்கள் தாழ்த்தப்பட்ட சனத்துக்கு எதிரானவர் போல்" என்று கேட்க அமிர் 'அப்படியில்லை மிஸ் எனது அத்தியந்த சினேகிதி நர்த்தனா கூட என்னை ஓத்த உயர் சாதியில்லை." என்கின்றான். இப்படி கூறும் அமிர் தான், யாழ் தர்மத்தை தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நதியாவூடாக கூறிவைக்கின்றான். 'வாழையடி வாழையாக நம் மூதாதையோரும் சமய சாத்திரங்களும் வளர்த்து எடுத்த மனிதத்தை .. விழுமியங்களை எல்லாம், ஒரு வெறிபிடித்த ஓநாய் கூட்டம் குதறிக் கிழிப்பதை.." பற்றி பேசமுடிகின்றது. வாழையடி வாழையாக இருப்பதில் சாதியம் ஒன்று.
காதலியாக, வைப்பாட்டியாக சாதி குறைந்தவளை வைத்திருப்பது, ஆணாதிக்க யாழ் சாதி பண்பாட்டு மரபாகும். இது சாதிய வழக்கு கூட. ஆனால் அவர்களை குடும்பத்தில் அகமண முறைக்குளல்ல. இதை இந்த நாவல் தெளிவாக துல்லியமாக தமது சாதிய கலாச்சார மரபுடன், அதை பாதுகாத்து பேணுகின்றது. இதில் வெள்ளாடிச்சி ஐPவிதா தலைமையிடம் இந்த கொலை நான் செய்வதா இல்லையா என்பதை பேசத் தவறியதன் மூலமும், எல்லாவற்றுக்கும் உடன்படும் பலவீனமே, தனது காதலனையே கொலை செய்ய முயன்றதாக சுட்டிக்காட்டி, தமிழ் சமூகத்தின் முன்னிலையில் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்கப்படுகின்றது. புலித் தலைமையிடம் இதை பற்றி விவாதிக்கலாம் என்ற பாசிச மாயை புகுத்தப்படுகின்றது.
இதன் ஊடாக சொல்லவருவது புலிகள் இயக்கம் ஏதோ ஒருவகையில் அல்லது பகுதியளவில் சரியானது என்பதே. அநேகமானவை தலைமைக்கு தெரியாமல் நடக்கின்றது. குறைந்த சாதியைச் சேர்ந்தவர்களே சுட்டுக்கொள்கின்றனர், அல்லது தவறாக வழிநடத்துகின்றனர். இது இந்த நாவலின் மையக் கருத்தில் ஒன்று. இதற்கு வெளியில் புலியின் கொலைகளுக்கு எந்த விளக்கமும் தரப்படவேயில்லை. இந்த நாவலில் வரும் சால்வை மூத்தான் என்ற கொலைகாரப் புலி கூட, ஒரு சாதி குறைந்த வண்ணானாகவே இருக்கின்றான். இவன் மூன்று பேரைக் கொல்கின்றான். அவர்கள் அனைவரும் உயர் சாதிக்காரர்கள் என்று, அவன் வாயாலேயே கூற வைக்கப்படுகின்றது. சாதி குறைந்தவர்களைக் கொண்டு, சாதியின் அவசியத்தை இந்த நாவல் சொல்ல வைக்கின்றது. இது கூட சாதிய வெள்ளாளத் தனம் தான். 'மூன்று பேர். எல்லாம் உயர்சாதிக்காரன்கள் நான் அழுக்குத் தோய்க்கிற சாதிதான். இந்த அழுக்கிப்போக்கி எத்தனை உயர்சாதிக்காரரைக் கொன்றவன் தெரியுமே? தம்பி டே அமிர் தலை உயர்த்துற பெரிய சாதியில் மண்டையில் போடவேணும்" என்று ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக இவை கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் இப்படி நடவாத ஒன்றை, நடந்தாக காட்டும் இந்த உயர்சாதிய வக்கிரத்தையே கொப்பளிக்கின்றது.
இந்த சாதிகுறைந்த சால்வை மூத்தானை வருணிக்கும் போது தலையின் 'கீழ்பகுதியை ஓட்ட வழித்திருந்தான். போதாததற்கு இடது காதில் பூட்டியிருந்த தொங்கிட்டான் வேறு." ஒரு வெள்ளாடிச்சியின் குருட்டு சாதிக் கலாச்சாரம் இப்படி பேசுவைக்கின்றது. தலையை ஒட்ட வழித்து, தொங்கிட்டான் போட்டால் என்னவாம். யாழ் வெள்ளாளர்கள் குடுமி கட்டி தொங்கிட்டான் போட்ட கடந்த கால வீரவரலாறு எங்கே! வெள்ளைக்காரனுக்கு ரை கட்டி வேலை செய்ய, பண்பாட்டை அழித்த வெள்ளாளனின் சாதி வரலாறு எங்கே?. இன்று ஒவ்வொரு தமிழ்வீட்டிலும் இப்படித் தானே இளைஞர்கள் உள்ளனரே. தமிழ் பண்பாடு ஏன் குமுறி எழவில்லை. ஆனால் சாதிகுறைந்த சால்வை மூத்தானை இழிவாடுவது, உயர்சாதி திமிரில் இருந்தே உருவாகின்றது. அந்த கலாச்சார சாதி வெள்ளாடிச்சி 'தலைக்குள் ஒன்றுமில்லாத மண்டு. உதுகள் எல்லாம் எப்படி லண்டனுக்கு வந்ததுகளோ" என்று தனது சாதிப் புத்தியை, மண்டையில் எதுவுமில்லாத யாழ்ப்பாணியமாக வெளிப்படுத்துகின்றது. இலண்டன் வருவதற்கு தலைக்குள் எதும் தேவையோ? என்ன 'உதுகள்" என்றால் சாதி குறைந்ததுகள் என்ற இழிவாடும், வெள்ளாளர் நகையாடல். இலண்டன் வர 'உதுக"ளுக்கு தகுதி கிடையாது என்று, இந்த வெள்ளாடிச்சி கூறுகின்றா! இலண்டனுக்கு நக்கி பிழைக்க வந்த வெள்ளாடிச்சி குமுறுவது, சாதிகுறைந்ததுகள் இலண்டனுக்குள்ளும் தீட்டை ஏற்படுத்தி விட்டுதுகள் என்ற அங்கலாய்ப்புத்தான்.
மீண்டும் மற்றொரு வெள்ளாளன் சால்வை மூத்தானை 'என்ன மச்சான் ஊத்தைவாளி வலைவீசிறியோ?." கேட்டது 'கிறாடிட் காட் தொழிலையும் சாதியையும் குத்திகாட்டியது" இப்படி சாதிய திமிர் நாவல் முழுக்க கொப்பளிக்கின்றது. அதற்கு சால்வை மூத்தான் பதிலளிப்பதாக '.. பறை வேசை மோனே. கொம்மாவுக்கு ஆள் தேடுறியோடா? நாற்றம் வீசுகின்ற கோவணக் குண்டிக் கமக்காரனின் தட்டுவச் சோறு தின்னி." என்று குறைந்த சாதி இயக்க பாத்திரத்தை உருவாக்கி, அவனைக் கொண்டு வெள்ளாள இழிவாடலை புனைவதன் மூலம் சாதியத்தை உசுப்பி கொலுவேற்றுகின்றது. 1960 களில் நடந்த சாதிய போராட்டங்களின் போது, அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், கோவிய சாதிதான் சாதி வன்முறையில் ஈடுபடுகின்றதே ஒழிய நாங்கள், அதாவது வெள்ளாளப் பெருங்குடிகளல்ல என்றார். சாதிய போராட்டத்தை எதிர்த்தபடி, இப்படி வெள்ளாள தமிழ் அரசியல் கட்சிகள் இழிவாடின. உயர்சாதியம் தனக்கு எதிரான சாதிகளை ஒடுக்க, இடைநிலைச்சாதியை பயன்படுத்துவது தான் சாதியத்தின் வன்முறை சார்ந்த உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான், சால்வை மூத்தானைக் கொண்டு பறையரை, பெண்ணை 'பறை வேசை மோனே" என்று இழிவாடுகின்றது.
வெள்ளாளர் கோவிய சமூகத்தையே, தமது சாதிய எடுபிடிகளாகவே பயன்படுத்தியவர்கள். அன்று வெள்ளாளன் பிணத்தை தூக்குவதற்கு கூட நாலு கோவியர் இருந்தது போல், ஒரு வெள்ளாடிச்சிக்கான சீதனத்தில் ஒரு கோவியனும் ஒரு பள்ளியும் சீதனமாக கொடுக்கப்பட்டனர். வெள்ளாடிச்சியின் திருமணமே சாதி கலாச்சாரத்துடன் தான், வாழையடி வாழையாக தொடரப்பட்டது. சாதி ஒடுக்குமுறை சார்ந்த மரபே, வழமையே யாழ்ப்பாணியம். இந்த மரபு சார்ந்து யாழ் சாதியம் விரிவானது நீண்டது. (நான் எழுதிவரும் இலங்கையில் சாதியமும், சாதியப் போராட்டமும் பற்றிய எனது நூலில், இதை விரிவாக விரைவில் பார்க்கமுடியும்) இந்த சாதிய யாழ் கலாச்சாரம் சார்ந்த சாதி மரபுகளில், கோவியனுக்கும் வெள்ளாளனுக்குமான உறவுக்கு இடையில், எடுபிடி சாதிய உறவுண்டு. அன்று தமிழரசுக்கட்சி சார்பாக அமர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசியது என்பது, தம்மை தாம் ஜனநாயக சாதிகளாகவும் நியாயவாதிகளாகவும் காட்டிக் கொள்ளும் சுத்த சாதிய மோசடிதான். இங்கும் இந்த நாவலில் வரும் கூட்டணியைச் சேர்ந்த மேயரின் மகன் அமிரும், அதே சாதிய மோசடிப் பேர்வழிதான்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பெயரில், வலதுசாரிய தேசியம் மல்லாக்க பிணமாக வீழ்ந்து கிடப்பது வலதுசாரிகளுக்கு புதிராகின்றது. வலதுசாரி மிதவாத அரசியலுக்கு, தனது சொந்த வலது வன்முறையை புரிந்துகொள்ள முடியாத பரிதாபத்தின் விளைவே சாதியமாக புகைகின்றது. புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ ஜெயதேவனின் அண்ணன் பயல் கூட, புலிகளின் வன்முறையை விளக்க சாதியத்தைத்தான் தேர்ந்தெடுத்தான். தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தான், மக்கள் விரோத வன்முறைக்கு காரணம் என்கின்றார்கள். ஆனால் இராணுவத்துக்கு எதிரான வன்முறையை உயர்சாதியினரின் வீரவரலாறாக, புறநானூறின் தொடர்ச்சியாக சித்தரிப்பதே இன்றைய வலதுசாரிய திரிபு அரசியலாகின்றது.
No comments:
Post a Comment