தமிழ் அரங்கம்

Tuesday, September 12, 2006

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (4)

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (4)

பி.இரயாகரன்
12.09.2006

திர்மறையில் சாதிகுறைந்தவர்களை வருணிக்கும் போது, இந்த சாதிய அடிப்படை அப்பட்டமாக ஆதிக்கம் வகித்து முன்னுக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற கழுதைப்புலிகள் இயக்க கொலைகள் பற்றி 'எல்லாம் உயர்சாதி ஆட்களைத் தெரிந்துதான் சுட்டுக் கொன்றவன்" என்கின்றது. இங்கு தனிநபர் சார்ந்த தனிப்பட்ட பழிவாங்கலாக இது சித்தரிக்கப்படுகின்றது. 'எல்லாம் உயர் சாதிகாரரையும் தெர்pந்துதான்" என்ற வாதம், தமிழ் பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாக்கின்றது. இந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம், புலிகளால் நரை வேட்டையாட முன்னம் கொலைகளைச் செய்ததா? புலிகள் இந்த இயக்கத்தை தடை செய்து, கொலை செய்ததைப் பற்றி இந்த நாவல் பேச மறுக்கின்றது. ஏன் அனைத்து இயக்கத்தையும் கொலை செய்த புலிகளையும் அந்த பாசிசத்தையும், இந்த நாவல் ஏன் பேச மறுக்கின்றது?

உண்மையில் அழித்தது நியாயம் என்ற உயர்சாதியக் கண்ணோட்டம் இதில் தொங்கி நிற்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இயக்கம் வசதி கருதி ஈ.பி என்று அழைக்கப்பட்ட போது, அதற்கு உயர்சாதிகள் தமது தேசிய கலாச்சார கண்ணோட்டத்தில் ஈழத்துப் பள்ளர் என்று விளக்கமளித்து இழிவாடினர். தமிழ் தேசியக் கலாச்சாரமே சாதியக் கலாச்சாரமாகவே பரிணமித்துக் கிடப்பதையே, இது மறுதலித்துவிடவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் புலிகள் என்ற யாழ் சாதிய மேலாதிக்க பாசிச புலிகள் இயக்கத்தால் தடைசெய்யப்பட்டு அழிக்கப்பட்ட போது, உயர்சாதிய வெள்ளாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதையே இந்த நாவலும், தாழ்ந்த சாதிகளை மீண்டும் இழிவுபடுத்தி செய்கின்றது. புலிப்பாசிசத்தை பின்பக்கமாக ஆதரிக்கின்றது.

ரெலோவை அழிக்க அன்று கண்ட இடத்தில் புலிகள் சுட்டுக்கொல்லத் தொடங்கிய போது, தெல்லிப்பழை சந்தியில் இரண்டு ரெலோ உறுப்பினரை உயிருடன் புலிகள் எரித்தனர். அப்போது அண்மையில் கொல்லப்பட்டவரும், பிரபாகரன் மாமனித பட்டம் வழங்கிய சிவமகராஜா அதை ஆதரித்தவர். இந்த கொலை வெறியாட்டத்தை நடத்திய புலிகளுக்கு, உயிருடன் எரிந்து கொண்டிருந்த நெருப்பு வெக்கையை எதிர்கொள்ள கொக்கோகோலாவை உடைத்து கூலாகக் கொடுத்தவர். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணத்தில், அதை முறைகேடாக பயன்படுத்தி இதை பல நூறு தரம் செய்தவர். இவருக்கு மாமனித பட்டம் வழங்கியதன் மூலம், புலிகள் சமூக விரோதிகள் என்பதை பிரபாகரன் மறுபடியும் உறுதி செய்கின்றார். மாமனித பரிசு அதற்குத்தான் உதவுகின்றது. அன்று அந்த நிகழ்ச்சி நடந்த தெல்லிப்பழை சந்தியில், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் இவை நடந்தது. குறித்த கதை ஆசிரியரும், அங்கு அந்தச் சூழலுக்கு வெளியில் வாழ்ந்து இருக்கவில்லை. அன்றும் இன்றும் கூட்டணியின் முக்கிய தூண்கள் இப்படித்தான், வக்கிரமாகவே அரசியல் விபச்சாரம் செய்தனர், செய்கின்றனர். பாசிசத்தின் நெம்புகோலாகவே மாறினர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் புலிகளால் தடை செய்யபட்டு அழிக்கப்பட்ட பின், இந்தியாவினால் ஒரு கூலிப்பட்டாளமாகவே மீண்டும் மண்ணில் இறக்கப்பட்டவர்கள். இதன் பின்பான அவர்களின் கொலைகளை எடுத்தால், அவைகளில் பெரும்பாலானவை இந்திய கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டு செய்விக்கப்பட்டவை தான். ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவின் கூலிக்குழுவாக, அனைத்து சுயஅடையாளத்தையும் இழந்த நிலையில், இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்ப வெறியாட்டத்தை நடத்தியவர்கள். இருந்தபோதும் புலியுடன் ஒப்பிடும் போது, இதன் அளவும் பண்பும் குறைவானதே. ஆனால் பொதுவான கொலைகள் எந்தவிதத்திலும், புலிகளின் கொலை வடிவத்தில் இருந்து பண்பு ரீதியாக வடிவ ரீதியாக வேறுபட்டதல்ல. இங்கு எந்தவிதத்திலும் சாதியம், சாதிய அரசியல் செய்யப்படவில்லை. அதாவது ஒடுக்கப்பட்ட சாதி, ஒடுக்கும் சாதியை எதிர்த்த போராட்டமாக இது நடைபெற்று இருக்கவில்லை. புலி மற்றும் புலியாக சந்தேகிப்பவர்களை, புலிகள் பாணியிலேயே கொலை செய்தவர்கள்.
இதற்கு வெளியில் விதிவிலக்காக ஒரு சில கொலைகள் தனிப்பட்ட பழிவாங்கலாக நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது. இது புலிக்குள்ளும் உண்டு.

இந்த பழிவாங்கல் சாதியைக் கடந்து நடத்தப்பட்டது. பழிவாங்குபவனின் தனிப்பட்ட உணர்வு, சாதியமாக அமைந்ததல்ல. இதில் ஆயுதமேந்திய பலம் பொருந்திய அனைத்து இயக்கமும் விதிவிலக்கின்றி செய்தன, செய்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எப் கொலைகள் சாதியக் கொலைகள் என்பது பொய்யானவை. நாவல் அதை திரிக்கின்றது. 'அவர்களை கறுப்புநரிகளின் ஆட்கள் என்ற பொய் குற்றம்சாட்டி மரவள்ளிகட்டை இழுத்த போது பிடிபட்ட அடிவாங்கியதுகள் பழிவாங்குகின்றனர்." என்கின்றது வெள்ளாள வலதுசாரிய பாசிசம்.

கொலைக்கான காரணம் மரவெள்ளிக் கட்டை இழுத்த போது, வெள்ளாளன் அடித்ததற்காக பழிவாங்குகின்றான் என்று, கூட்டணி அரசியல் புலம்புகின்றது. சாதிய ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட வறுமை தான், உணவுக்காக ஓரிருவரை மரவெள்ளி கட்டை இழுக்கவைத்தது. அவர்கள் இயல்பாக வாழ அனுமதி மறுக்கப்பட்ட, அவர்களின் உழைப்புக்கு நியாயமான கூலி மறுக்கப்பட்டு, மற்றவர்கள் போல் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. இதனால் பசியைப் போக்க, தேவைக்கு மரவெள்ளி கட்டை இழுப்பதை தூண்டியது. இது இயல்பாக ஒரு சிலரை அராஜகத்தில் வாழவைக்கின்றது.


இங்கு 'அடிவாங்கியதுகள்" என்பது இழிவான வெள்ளாளரின் ஆதிக்க சாதி மொழியாகவே இங்கு கொப்பளித்து நிற்கின்றது. வெள்ளாளனுக்கு அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது. நாட்டில் அனைத்து பிரஜைக்கும் என்று ஒரு சட்டம் ஒழுங்கு உள்ள போது, அடிக்கும் உரிமையும் அதை இயல்பாக நியாயப்படுத்தும் உரிமையை யார் தந்தது? உண்மையில் சாதியத்தின் இயல்பான ஆதிக்க ஒடுக்குமுறையில் இருந்து இது வருகின்றது. இந்த அகிம்சைவாதிகளின் சட்டம் ஒழுங்கு நீதி உயர்சாதி வெள்ளாளருக்கு மட்டும் என்பதைத்தான், இங்கு இந்த நாவல் தெளிவாக பறைசாற்றுகின்றது. அடித்தவர்கள் தேசியத்தின் பெயரில் ஆயுதம் பெற்ற போது சுட்டுக் கொன்றனர்.


1986 க்கு முன்பு நடந்த பொதுமக்கள் படுகொலைகள் பெரும்பாலானவை, மரவெள்ளிகட்டை இழுத்தவன் கள்ளன் என்ற பெயர்களில் நடந்தது. முன்பு அடித்தவர்கள், இப்போது சுட்டுக் கொன்றனர். கொன்றவர்கள் எந்த நீதி விசாரணைக்கும், அவர்களை உட்படுத்தி தீர்ப்பை எழுதியதில்லை. சாதிய வரையறைக்கு உட்பட்ட தீர்ப்பின் எல்லையில் இதை நடத்தினர். மாறாக தாம் விரும்பியவாறு, தாம் நிர்ணயித்த யாழ் மரபின் எல்லைக்குள் இதை நடத்தினர். உண்மையில் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்திய ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை மூடிமறைக்கும் நாவல், அதை எதிரிடையில் பயன்படுத்துகின்றது. அரசியல் கொலைகள் பரஸ்பரம் ஒரே வடிவில் செய்யப்பட்டது. இதற்கு விதிவிலக்கு காட்டுவது, திரிப்பது அர்த்தமற்ற சாதியமாகும். சாதிவாதியாகவே பிரச்சனையை அணுகி, பின் அனைத்தையும் சாதியாக காட்டுவது வலதுசாரி அரசியலுக்கு அவசியமாகிவிடுகின்றது.
ஆசிரியரின் வலதுசாரிய சாதி அரசியல் ஈ.பி.ஆர்.எல்.எப் வை சாதியாக இழிவுபடுத்துவதாகவே மாறுகின்றது. அதன் அரசியலை விமர்சிக்க முடியாது போகின்றது. உதாரணமாக அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் அடையாளப்படுத்த உருவகிக்கும் மிருகம் கழுதைப்புலியாகும். இதை சாதிக் கண்ணோட்டத்தில் வகைப்படுத்துகின்றார். பின் இந்த நாவல் எப்படி உண்மைத்தன்மையை நேர்மையாக எடுத்துரைக்கும். அது வெள்ளாள உயர் சாதியார் கொசிப்பாகவே வெளிப்படுகின்றது. இதை நிறுவும் வகையில் 'அருவருப்பூட்டும் விலங்கு... அதைவிட முக்கிய குணம்குறி. கழுதைப்புலி இயக்கம் என்ற பெயர் வைக்க காரணம். ... மற்ற மிருகங்கள் எச்சசொச்சமாகவிட்ட எலும்பு, கொம்பு.. விழுங்கிவிடும். எதிர்த்துப் போராட வக்கில்லாத..." என்கின்றார். உயர்சாதிய வெள்ளாளரின் கழிவுகளை உண்டு வாழும் பள்ளுபறைகளின் இயக்கமே ஈ.பி.ஆர்.எல்.எப் என்று இழிவுபடுத்துகின்றார். மிகவும் ஆபத்தான சாதி கொப்பளிப்பு, இங்கு சாதிய மிடுக்காக தமிழ் சமூகத்தையே பந்தாடுகின்றது. அந்த மக்களை இயல்பாக வாழ அனுமதி மறுத்து, தம்மைச் சார்ந்து தாம் போடும் பிச்சையில் வாழ நிர்பந்தித்த பின், அவர்களை கழிவைத் தின்பவர்களாக சாதிவெறி வெள்ளாளர்களால் மட்டும் தான் வருணிக்கமுடியும். இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மக்கள் விரோத அரசியலை, இந்தியக் கைக் கூலித்தனத்தை பயன்படுத்துவது, பார்ப்பானுக்கு நிகரான வெள்ளாள சாதியச் சதியாகும்.


இதற்கு ஒரு கம்யூனிச மூகமுடியை போட்டு அதை மேலும் இழிவாடுவது, வலதுசாரி அரசியல் உள்ளடக்கமாகின்றது. '..வெளுறிய சிவப்புச் சாரமும் சிவப்புச் சேட்டும்" போட்டுச் சென்றே கைது செய்தனர் என்று சித்தரிப்பதன் மூலம், சாதியமும் வலதுசாரி வக்கிரமும் உச்சத்தில் கொப்பளிக்கின்றது. இடது எதிர்ப்பும், சாதிய ஒடுக்குமுறையும் துல்லியமாக வெளிப்படுகின்றது. நடைபெற்ற கொலைகள் மீதான இந்த நாவல், அந்த வரலாற்றை திரித்து, அந்த வலதுசாரி பாசிச அரசியலை பாதுகாக்கின்றது. நடைபெற்ற கொலைகள் இடது கொலைகளாக, குறைஞ்ச சாதிகளின் செயலாக காட்டுவது, இங்கு மைய அரசியலாகின்றது. வலதுசாரிய அரசியல் கொலைகளை, இந்த நாவல் மறுபக்கத்துக்கு தலைகுப்புற திரித்து புரட்டிக் காட்டுகின்றது. தமிழ்தேசியமே வலதுசாரியமாக உதித்தது முதல், தனது எதிரியை கொன்று அழிப்பதற்காக தமிழரசுக் கட்சி வரலாறே இதை தொடங்கி வைக்கின்றது. 1960 இல் நடந்த சாதிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான எம்.சி.சுப்பிரமணியம் மீது, தமிழரசுக்கட்சி வழிகாட்டலில், தமிழ் தேசிய வீரர்கள் 1972.09.11 இல் குண்டு வீசி படுகொலை செய்ய முயன்றவர்கள். இப்படி சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி பலர் மீது தாக்குதலை நடத்தினர், குண்டை வீசினர். 1970 முதல் 1980 வரையிலான பத்து வருடத்தில், கூட்டணி யாரை எதிரியாக துரோகியாக காட்டினரோ, அவர்கள் கொல்லப்பட்டனர். கொன்றவர்களை இந்த தமிழரசுக் கட்சியும், பின்னால் கூட்டணியும் அவர்களை பாதுகாத்தனர். இன்றைய பிரபாகரன் அமர்தலிங்கத்தின் கைக்கூலியாக ஒரு கொலைகாரனாகவே பராமரிக்கப்பட்டவர்கள். இப்படிப் பலர்.


'தமிழ்ஈழ விடுதலைக்குப் புறப்பட்ட சிலர் திசை மாறி, குணம் மாறி, கோலம் மாறி, வாழையடி வாழையாக வந்த கலாச்சார பாரம்பரியங்களைக் கொச்சைப்படுத்தி, உடன் பிறப்புகளின் குருதியிலே வேள்வி செய்வார்கள் என ஐயம் பட்டிருந்தால், மக்கள் சோற்றுப் பொதியும் பணமும் பொன்னும் கொடுத்து அவர்களை வளர்த்து இருக்கமாட்டார்கள்." என்கின்றனர். யார் மக்கள், கூட்டணிதான். கொலைகரார்களை வளர்த்தவர்கள் இவர்கள் தான். கொலைகள் தான், இவர்களை கூட்டணியின் ஆதரவுடன் அரங்கில் கொண்டுவந்தது. இதன் நீட்சியில் தான் பிந்தைய கொலைகளும். கொலைக்கான அரசியலும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. இந்த நாவல் அதை சாதியமாக்கி அதை பாதுகாக்கின்றது. அன்றைய பலத்துக்கு ஏற்ப, கொலைகளின் அளவு இருந்தது. இதை அரசியல் ரீதியாக சிவப்பு சட்டை போட்டவர்களின் கொலையாக சித்தரிப்பது, இந்த நாவலின் உள்நோக்கம் கொண்ட ஒரு அரசியல் திரிபாகும். இந்த அரசியல் வரையறையில், பிழைப்புவாத கூட்டணிக்கும் இயக்கத்துக்கும் பிளவு ஆழமாகியது. இதை தடுக்கவும், தனக்கொரு கொலைகார இயக்கத்தை அமிர்தலிங்கம் தனது மகன் காண்டீபனைத் தலைவராக கொண்ட ரெனா (வுநுNயு) என்ற பெயரில் தொடங்கி, ஆயுதப் பயிற்சியை வழங்கியவர்கள் தான் இந்த சாதி அகிம்சைவாதிகள்.

இப்படி இந்த வெள்ளாளச் சாதியம் தனது சாதிய வன்முறை ஓர்மத்தை வெளிப்படுத்தும் விதமே அருவருக்கத்தக்கது. ஈ.பி.ஆர்.எல்.எப் கழுதைப்புலியின் கையில் துப்பாக்கி இல்லையென்றால் 'கழுகு முயல் குட்டியை இறாஞ்சுவது போலத் தூக்கி.." அடித்திருப்போம் என்று உறுமுகின்றனர். வெள்ளாளனாகவே உறுமுவது, எந்தவிதத்திலும் அதன் சாதிய ஆதிக்க தன்மையை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. இங்கு பதில் படுகொலையை, உயர்சாதிய நோக்கில் தெளிவாக வைக்கப்படுகின்றது. இந்த வன்முறையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளனின் சாதிய வன்முறைப் பெருமையை பறைசாற்றி 'சப்பாத்துக்கால்களை செம்மண் பூமியில் ஊன்றி அழுத்தினார். திடீரென துப்பாக்கியைப் பிடுங்கித் திருப்பி நீட்டினர்." என்று கூறுவதன் மூலம், தாழ்ந்த சாதிகளை இழிவானவராக பலமற்றவராக சாதிய பெருமையில் நகையாடப்படுகின்றது. புறநானூறு வீரம் வெள்ளாளனுக்கு மட்டும் இருப்பதாக பறைசாற்றுகின்றது வெள்ளாளத்தனம். 'எதிர்த்துப் போராட வக்கில்லாத" அற்பர்கள் என்ற வெள்ளாளனின் சாதிய ஆதிக்கத்தையே பதிலாக வைக்கின்றனா.

ஈ.பி.ஆர்.எல்.எப் கொலைகளை தாழ்ந்த சாதி மக்கள் கொண்டாடியதாக காட்டி, சாதிப் படைப்பாகவே கொப்பளிக்கின்றது. 'கொலனிக்குள் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தனர். அவர்களது முகங்களில் பாரம்பரிய தடிப்பு இறங்குவதைக் கண்ட மகிழ்ச்சிக் கோடுகள்" என்கின்றார். நுட்பமாக சாதி பிளவை விதைத்து, உயர் சாதியத்தை பாதுகாக்கும் வக்கிரம். வலதுசாரிய அரசியல் படுகொலைகளை சாதியாக திரித்துப் புரட்டும் நாவல், அதை சாதிய பிளவாக வலதுசாரியமாகவே மீண்டும் விதைக்கின்றது. உயர்சாதிக்காரர் கொல்லப்பட்ட போது, தாழ்ந்த சாதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடியதாக கூறுவதன் மூலம், இந்த மாதிரியான கொலைகளை உயர்சாதியினர் வெறுப்பதாக கூறுகின்றது. இந்த மாதிரி கொலைகள் நடந்ததாக காட்டமுனைகின்றது. சுத்த அபத்தம். இன்று கொலைகளை ஆதரித்து, அதை தலையில் தூக்கிவைத்து ஆதரிப்பவாகள் யார்? எந்தச் சாதி? எந்த வர்க்கம்? எந்த அரசியல்? கூட்டணி, புலியின் பின்னால் இன்று செய்வது என்ன? கொலையை ஆதரித்து விபச்சாரம் செய்வது தெரியவில்லையா?
புலிகள் தான் மொத்த தமிழ் வரலாற்றையும் திரிக்கின்றார்கள் என்றால், புலியை உருவாக்கிய வலதுசாரிய கூட்டணிப் பிரமுகர்களும் அதையே செய்கின்றனர். உயர் சாதிக்காரன் கொல்லப்பட்டதால் சாதித்தடிப்பு இறங்கி மகிழ்ச்சியடைவதாக, கொலனியே அதை கண்டு களித்ததாக கூறுவது, கடந்த 25 முதல் 35 வருடமாக தேசியத்தின் பெயரிலான கொலைகளை கொண்டாடி வரும், தமிழ் மேட்டுக்குடிகளின் சொந்த வக்கிரப்புத்தியை மூடிமறைப்பதாகும். இந்தக் கும்பல் கொலைகள் மட்டுமின்றி, நித்திரை கூட கொள்ளமுடியாத மனநோயாளியாகி விட்டனர்.

சரி கொலனியே மகிழ்ச்சியாக கொண்டாடியது என்றால், இது எப்படி தனிப்பட்ட பழிவாங்கலாக இருக்கமுடியும். அப்படியாயின் கொல்லப்பட்டவன் சாதி வெறியனாக, அந்த மக்களை சாதியின் பெயரால் சாதி வேட்டையாடுபவனாக இருந்து இருக்க வேண்டுமல்லவா!

இந்தக் கொலையைக் கண்டு இதை ஆவணப்படுத்தியவர் யார் என்றால், அவரும் உயர்ந்த சாதிக்காரன் தான். 'எல்லாம் அந்த உயர்ந்த செம்மரி மேய்க்கின்ற மயிலிட்டி மனிதனிடம் பொறுக்கியதுதான்." என்கின்றார். இங்கு செம்மரி மேய்த்தாலும் உயர்ந்தவராக, அவருடைய சாதி அவரை அங்கீகரிக்கின்றது. அதனால் அவரிடம் இதைப் பொறுக்கமுடியும். அவர் சாதி அந்தஸ்துடன் இருப்பதால் இதை ஆவணப்படுத்துகின்றார். என்ன தர்க்கம்? என்ன சாதிய வக்கிரம்? 'ஐ.பி.கே.எஃப் காலத்திலே உயர்சாதிப் பெடியள் கில்லாடியைக் கண்டால் ஓடி ஒளிச்சவை." என்று கூறுவதன் மூலம், அக்காலம் உயர்சாதியத்துக்கு பொற்காலமல்ல என்கின்றார். பொற்காலம் உயர்சாதிய புலிகள் மீண்ட போது உருவானது என்கின்றார். இங்கு சாதிய அரசியல் இயங்கும் தன்மையை, நிகழ்ச்சிகள் மீது திரித்து இசைவாக்கின்ற அகிம்சை அரசியல் சாதியமாக புரையோடுகின்றது. இதனால்தான் கூட்டணியின் ஜனநாயக அகிம்சை வாதிகள் உண்மைப் போராளிகள் புலியின் உள்ளே உள்ளதாக காட்டி, அதன் சாதியக் கூறை ஆதரிக்கின்றனர்.

போலிப் போராளிகள் செயல்கள் தலைமைக்கு தெரியாததால் தான், அத்துமீறல்கள் நடக்கின்றது என்கின்றனர். இந்த அத்துமீறல்கள் குறைந்த சாதிகளின் செயல்கள் தான் என்கின்றனர். மனித விரோதச் செயல்களை போலி மற்றும் உண்மைகளின் நடத்தையாக காட்டி, அதை ஒரு இயக்கத்துக்குள் கூறு போட்டு காட்டும் சாதியமே, இன்று வலதுசாரிய அரசியலின் ஒரு பகுதியாகின்றது. 'இந்தப் போலிப் போராளிகள், தூயவிடுதலைப் போராளிகளையே கொச்சைப் படுத்துகிறார்கள்" இப்படி தனது வலதின் ஒரு பகுதியை, சாதிய பிரிவை பாதுகாக்க முனைகின்றது. போலி, தூயது எது? அதன் அரசியல் அளவுகோல் சாதியம் தான்.

இந்த சாதியம் வலதாகவே குருடாகி குலைக்கின்றது. 'உவை தேடித்தேடி உயர்சாதி ஆட்களைத்தான் சுட்டுக் கொன்றவர்கள்" என்ற கூறுவதும், தேசியத்தை ஒரு சாதி அரசியலாக காட்டுவதன் மூலம் சாதிய ஆப்பை சமூகம் மீது வலிந்து இறுக்குகின்றனர். இயக்கங்கள் சாதிய அடிப்படையில் சிதைந்ததன் விளைவுதான், மனித அவலங்களுக்கு காரணம் என்கின்றது. கூட்டணி அரசியலின் கையாலாகாத்தனமே இங்கு நிர்வாணமாகின்றது. சாதிய அரசியல் செல்லும் போக்கில், சாதிய ஆப்பை இறுக்கின்றவகையில், இழிந்த குறைந்த சாதியாக காட்டப்பட்டவர்களின் மொழியாடல்களை எதிர்நிலையில் வெள்ளாளருக்கு எதிராக புகுத்தப்படுகின்றது. 'டே வெள்ளாடு நீ கறுப்புநரி ஆதரவாளனாம் அந்தத் துணிவில் தான் காசு தரமறுத்தனியோ?" என்று கூறுவதில் வெள்ளாடு என்பது வெள்ளாளனைக் குறிக்கின்றது. இங்கு போராட்டத்தையும், அதன் அரசியலையும், இதன் மொத்த விளைவையும் சாதியமாக குறுக்கி, அதற்குள் அனைத்தையும் காட்டுவது நிகழ்கின்றது. 'டே! வெள்ளாளப் பூனா!" என்று சாதியம் கீழ் இருந்து எழுப்பப்பட்டு, தாழ்ந்த சாதிக்கு எதிராக உசுப்பப்படுகின்றது.

'ஓ கோட்டான் சூட்டி என்ற பெயரைக் கேட்டால் வவுனியா நடுங்கும் பெடியா. வெள்ளாள பூனாக்கள் கூட என்னைக் கண்டால் தோளாலே சால்வை எடுத்தவை..." இப்படி எமது நாட்டில் நடந்ததா? நீங்கள் அறிந்ததுண்டோ? '.. எழிய பொறுக்கி வெள்ளாளப் பயல்தான்" 'நதியா அந்த வெள்ளாள நாய்ப் பயலோடு ஓடிவிட்டாள் என்ற அவமானச் செய்தியை" இப்படி வெள்ளாள சாதியை உசுப்பவே பல சொற்தொடர்கள் எதிரிடையில் கையாளப்படுகின்றது.
'டே நாயே! எங்களை அடிமையாக நடத்தினனீங்களோ? தட்டுவத்திலே சாப்பாடு தந்தனீங்களோ? சிரட்டையிலே தேத்தண்ணி வார்த்தனீங்களோ? டே வடுவா, இப்ப எங்கடை ஆட்சியெடா. உங்கடை சாதித் தடிப்புக்கு இது ஒரு பாடமெடா" இப்படி ஆவி எழுப்பும் உயர்சாதியத்தின் எதிர்நிலைவாதம், உறங்கிக்கிடக்கும் சாதிய வெள்ளாள வன்முறையை உசுப்பி எழுப்பிவிட கூட்டணியின் வலதுசாரிய அரசியல் முனைகின்றது. சாதியம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அடித்துக் கூறுகின்றது. 'எங்கடை ஆட்சியெடா" என்று கூறுவதன் மூலம், பல செய்திகளை இதனூடாக கூறிவிட முனைகின்றது. இருந்த உயர்சாதி ஆட்சி, இல்லாமல் போனதாக வேறு கூறுகின்றது. தாழ்ந்த சாதிகளின் ஆட்சி தான், புலிகள் அல்லாத காலத்தின் ஆட்சி என்றும் கூறுகின்றது. இதன் மூலம் இந்திய ஆக்கிரமிப்பை தாழ்ந்த சாதிகளின் காலகட்டமாக காட்டுவதன் மூலம், அன்றைய காலம் தாழ்ந்த சாதிகளின் அக்கிரமம் நடந்த காலகட்டமென்று கூட்டணி அரசியல் கூறுகின்றது. சிரட்டையில் தந்ததற்கும், தட்டுவத்தில் தந்ததற்காகத் தான், வெள்ளாளன் பழிவாங்கப்பட்டதாக, கூறுவது திட்டமிட்ட ஒரு வரலாற்றுத் திரிபாகும். அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், அது விதிவிலக்கேயாகும்.

உண்மையில் அந்த விதிவிலக்கு நடந்து இருந்தால், உண்மையில் சாதிய கொடூரங்களுக்கு எதிராக பழிவாங்கியிருந்தால், அதை தாற்பாரியத்தை எதிர்நிலையில் நிறுத்தமுடியாது. காலகாலமாக ஒடுக்கப்பட்ட தனிப்பட்ட நபரின் அத்துமீறலாக, பழிவாங்கலாகவே அது அமையும். சம்பந்தப்பட்ட நபரின் அரசியல் தான் விமர்சனத்துக்குள்ளாகும்.

'எங்களை அடிமையாக நடத்தினனீங்களோ? தட்டுவத்திலே சாப்பாடு தந்தனீங்களோ? சிரட்டையிலே தேத்தண்ணி வார்த்தனீங்களோ?" என்று கேட்டு தண்டித்ததாக கூறும் வெள்ளாள சாதிய வாதம், எதிர்நிலையில் இதை கொடுப்பதை ஒத்துக் கொண்டு, அதை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை கோருகின்றது. இதை தவறு என்று அது கூறவில்லை. தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சரி என்கின்றது. உண்மையான படுகொலைகள் பற்றி இந்த நாவல், அதன் சாதியத்தால் அதன் உண்மைத்தன்மை பலதளத்தில் கேள்விக்குள்ளாக்கின்றது. அத்துடன் உண்மையில் அக்காலகட்டத்தில் நடந்த இந்திய ஆக்கிரமிப்பை திட்டமிட்டு மூடிமறைப்பதாகும். அத்துடன் அன்று நடந்தது வலதுசாரிய ஆட்சி தான் என்பதையும் இருட்டடிப்பு செய்வதாகும். இது கூட்டணியின் அரசியலில் இருந்து எந்த விதத்திலும் வேறுபடவில்லை.

புலிக்குள் கூட இதை அளவுகோலைக் கொண்டுதான் அளக்கப்படுகின்றது. கறுப்பு நரி (புலி) சால்வை மூத்தான் 'எடியே வெள்ளாடிச்சி கத்தடி நல்லாக் கத்தடி" என்கின்றான். சாதியின் பெயரால் இப்படி கொலை செய்ததாக கூறுவது அபர்த்தம். இந்தப் புலி சால்வை மூத்தான் இழிந்த வண்ணார் சாதியைச் சேர்ந்தவன் என்று காட்டுவதும், அவன் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்தவர் என்பதன் மூலம், புலிகள் செய்த செய்கின்ற கொலைகளை தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளிருந்து கொல்கின்றனர் என்று வலதுசாரிய அரசியலை நிறுவுவதறக்காகவே. இது போன்ற கொலைகளை உயர்சாதியைச் சேர்ந்தோர் செய்ய முனைகின்றனர் என்றால், அதை தலைமை சொன்னதாக கூறியே இடையில் உள்ளோர் செய்விப்பதாக திரிக்கப்படுகின்றது. இதை அறிவுபூர்வமாக விளக்கி, இந்த மாதிரிச் செய்லகளை தடுக்கமுடியும், எனென்றால் அவர்கள் நீதியான வெள்ளாளர்கள். இவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் தாழ்ந்த சாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்த அடிப்படையில் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தி, அவர்களை மனித விரோதிகளாக காட்டப்படுகின்றது. இதை இந்த நாவல் ஊடாக தெளிவாக கொண்டு வந்து, அதை நாவல் நடைமுறைப்படுத்துகின்றது.

தண்டனையும், குற்றம்சாட்டும் உயர் சாதிகளுக்கு பொருந்தாது. அதாவது இந்துமத மனுதர்ம சாதிய விதிகள், இங்கு சாதிய அடிப்படையில் புகுத்தப்படுகின்றது. அமிரின் வெள்ளாளக் காதலி ஜீவிதா காதலனையே கொல்ல முயன்ற அந்த புலிப் பாசித்ததை 'அவள் குற்றமா? படைப்பின் குற்றமா? மரபணுக்களின் குற்றமா? ..." என்று வெள்ளாளனின் தராசு நியாய விளக்கத்தை காதலன் அமிர் ஊடாகவே கேட்கவைக்கின்றது. புலிப் பாசிச குற்றத்தை, கூட்டணி அகிம்சை இப்படி பாதுகாக்கின்றது. குற்றவாளியை தப்பவைக்க, ஐp.ஐp.பொன்னம்பலம் போன்ற, லண்டனில் உள்ள ஒரு வழக்குரைஞரை கூலிக்கு அமர்த்துகின்றனர். லண்டனில் வாழவே வழியற்று இந்த வெள்ளாளப் பயல்கள், பள்ளி நதியாவிடம் இருப்பதை சாதியின் பெயரால் சுருட்டியவர்கள், பல லட்சம் செலவழித்து கொலைகார வெள்ளாடிச்சியைக் காப்பாற்ற கூலிக்கு அமர்த்துகின்றனர். இந்த மாதிரியான வழக்குரையர்கள் ஐp.ஐp.பொன்னம்பலம் போல் கிறிமினல்கள் தான்.

குற்றவாளிகளை தப்பவைக்க, சட்டத்தை வளைத்து தப்ப வைக்கும் பணப் பேய்கள் தான். இவர்களின் மனச்சாட்சிக்கு முன்னால் குற்றவாளி சுற்றவாளி என்பது, அவர்களுக்கு எவ்வளவு பணம் வருகின்றது என்பதைப் பொருத்ததே. ஐp.ஐp.பொன்னம்பலத்துக்கு வெள்ளாளச் சாதி இதனுடன் ஓட்டிக்கொண்டு வெள்ளாளனுக்கு மட்டும் கிரிமினல் தொழில் செய்தவர். சாதித் தொழில் செய்தவர். தாங்கள் உருவாக்கிய சட்டத்தை, புரட்டி பிரித்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வாழ்ந்த சமூக விரோதிகள். குற்றவாளிகளை தப்புவிக்க வைப்பதே இவர்களின் சுத்தமான கிரிமினல் தொழில்.

கொலைகாரி ஜீவிதா புலிகள் இயக்கத்தில் இணைந்தது தவிர்க்க முடியாதது, சரியானது என்று அடுக்கிவைக்கும் கிரிமினல் வாதங்கள் மூலம், அந்த அரசியல் சரியானவை என்று கூற முனைகின்றார். சிறிலங்கா பேரினவாத அரசின் கொலைகளை பட்டியிட்டும், புலியில் சேர்ந்தது சரியென்றும் காட்டும் அரசியல் தான், புலி பிரச்சார அரசியல் கூட. ஐPவிதாவை பாதுகாக்க இதை வாதமாக வைத்தவர், புலிகள் செய்த படுகொலைகளை முன்வைக்க அரசு வழக்குரைஞருக்கு தெரியாமல் போகின்றது. இதுதான் வெள்ளாளத்தனம். நீதி நியாயம் எல்லோருக்கும் பொதுவானதாக ஏற்றுக் கொள்வதை மறுப்பது தான், வெள்ளாளத்தனம். புலிகளின் அநுராதபுர படுகொலைகள் முதல் மக்கள் கூட்டம் மீதான நூற்றுக்கணக்கான படுகொலை வரலாறுகள் உண்டு. துரையப்பா படுகொலைக்கு, அகிம்சை ஜனநாயக அரசியலை முன்வைத்த தமிழரசுக் கட்சியே காரணமாக இருந்தது. இப்படி படுகொலைகள் 10000 தாண்டுகின்றது.

இந்த கொலைகார பாசிசத்தை பாதுகாக்க 'அவள் குற்றமா? படைப்பின் குற்றமா? மரபணுக்களின் குற்றமா? என்று கேட்டு எழும் வெள்ளாளத்தனம் 'மேலிடத்தின் கட்டளை என்ற தொடர்ந்து வெருட்டி இறுதியில்... இந்த கொலை முயற்சி நடந்தாக கூறப்படுகின்றது. ஆனால் அது மேலிடவுத்தரவல்ல என்கின்றார். புலியை, புலிகள் அன்றாடம் நடத்தும் தொடர்ச்சியான கொலைகளை இதன் மூலம் நியாயப்படுத்துகின்றனர். ஐPவிதா குற்றவாளியல்ல என்று தீர்ப்பெழுதி, வெள்ளைவேட்டி கட்டி வெள்ளாடிச்சியின் சாதித் திருமணத்துக்காக காத்திருக்கின்றார்.

ஆனால் மற்றைய இயக்கங்கள், மற்றைய சாதி நபர்கள் அப்படி அல்ல என்பது, அகிம்சை சாதிகளின் சாதி அரசியலாகவுள்ளது. அது மேலிடத்தின் வழிகாட்டல் அல்லது தனிப்பட்ட நபர்களின் சாதிய பழிவாங்கலாக காட்டப்பட்டு, வெள்ளாளப் புலியின் பெரும் பகுதியை பாதுகாக்கின்றனர். ஆகவே சாதி குறைந்தவர்களை தண்டிக்க வேண்டும் என்கின்றார். தண்டனை பார்ப்பனியம் வகுத்த மனுநீதிக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். இப்படி படைப்பு வெள்ளாள சாதியமாகவே கொப்பளிக்கின்றது. யார் குற்றவாளி, யார் குற்றவாளி அல்ல என்பதை 'போர்க்களத்தில் போராடுகிற, முன்னர் போராடிய போராளிகளை நாம் என்றும் கொச்சைப் படுத்தியதில்லை, ஐPவிதா. நாம் கொச்சைப் படுத்தப் போவதில்லை. அவர்கள் புறநானூற்றின் வீர வாரிசுகள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் புனித வீரச் சொத்துக்கள்" என்கின்றார். 'நாம் கொச்சைப் படுத்துவதெல்லாம், ஈழ விடுதலைப் போராளிகள் என்ற போர்வையில் - புத்திஜீவிகள், மிதவாத அரசியல் வாதிகள், செல்வந்தர்கள், உயர் சாதியினர், தனிப்பட்ட விரோதிகள் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் - சகோதர அப்பாவிகள் மீது பொய்யான சமூகவிரோத பழிகளைச் சுமத்தி...." யவர்களைத் தான் என்கின்றார். தாழ்ந்த இழிந்த சாதிகளை கொன்றால், ஏழைகளைக் கொன்றால் பிரச்சனை இல்லை என்கின்றார். தர்க்கத்தின் முழுச் சாரமும் இதற்குள் தான், ஒரு சாதிய சுரண்டும் வர்க்க நாவலாக வெளிவருகின்றது. செல்வந்தர்களையும், உயர்சாதியினரையும் கொல்வது தான் பிரச்சனை என்கின்றார். அத்துடன் புத்திஜீவிகள், மிதவாத அரசியல்வாதிகளை கொல்வதையும் எதிர்க்கின்றார். இவர்களும் உயர்சாதியினர் தானே, என்ற உண்மையை உணர்த்தி நிற்கின்றது. உண்மையில் உயர்சாதிய செல்வந்தர்கள் கொல்லப்படுவது தான் பிரச்சனை. மற்றவர்கள் பற்றி அல்ல என்பதே வலதுசாரிகளின் அரசியல் பிரச்சனை. வலதுசாரிகள் வலதுசாரிகளை கொல்வது நியாயமோ? அதை இனம் காணமுடியாது சாதியமாக காட்டுவதன் மூலம், தமது புத்தீஜிவித்தனத்தின் மூலம் ஒரு சாதிய தர்க்கவிளக்கத்தை வழங்கிவிட முனைகின்றனர்.

அதுவும் வலதுசாரி மிதவாத அரசியல்வாதிகளை கொல்வதை எப்படி என்று கேட்கின்றார்கள். '..களை எடுப்பு, களை எடுப்பு என்று எங்களை மட்டும், ஐக்கிய விடுதலைக் கட்சியினரை மட்டும், 'துரோகிகள்" என்று சொல்லிச் சுட்டுக் கொல்லுகின்றீர்கள்" என்று புலிகளிடம் அப்பாவித்தனமாக கேட்பதன் மூலம், அவர்களை மட்டும் தான் புலிகள் கொல்வதாக ஒரு பொய்யைக் கூறுவதன் மூலம், அப்பட்டமாக ஒரு கொலைகார அரசியலை செய்கின்றனர். மற்றவர்களையும், மற்றயை சாதிப் பிரிவினரையும், மாற்றுக் கருத்துடன் ஆயுதம் ஏந்தியவர்களையும் கொல்வதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது என்கின்றனர். 1986 இல் தொடங்கிய இயக்க அழிப்பையிட்டு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதை இந்த நாவல் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. ஆட்சேபனை உங்களை பாசிட்டுகளாக வலதுசாரிகளாக வளர்த்த, இது போன்ற கொலைகளை செய்ய வழிகாட்டிய எம்மைக் கொல்வது எப்படி நியாயம் என்கின்றனர்! மிதவாத கூட்டணியை மட்டும் ஏன் கொல்லுகின்றீர்கள், மிதவாத கூட்டணி அல்லாத மற்றவர்களை கொல்லுவதில் உள்ள சாதிய அரசியல் உடன்பாட்டை உறுதிசெய்கின்றது.

அன்று ஆலாலும், நவரத்தினமும் கொல்லப்பட்டது உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் என்கின்றது நாவல். அன்று துரை மற்றும் இராசு கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் உயர்சாதி அல்லாத காரணத்தினால் அவர்களை கொல்லவில்லை என்கின்றது நாவல். ஒரே நாளில் நடந்த இந்த சம்பவத்துக்கு, கூட்டணியின் சாதிய அரசியல் இப்படி இட்டுக்கட்டி திரிக்கின்றது. உண்மையில் அர்த்தமற்ற ஒரு வரலாற்று திரிபு. என்ன நடந்தது. ரெலோவுக்குள் நடந்த தாஸ் பொபி (பொபி சிறிசபாரத்தினத்தின் கைக்கூலி) இடையிலான மோதலினால் தான், இந்திய உத்தரவு பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்படாததால் அவர்கள் இருவரும் தப்பிப் பிழைத்தனர். தாஸ் பொபி மோதலின் போது, தாஸ் தனிப்பட்ட நிலையில் வடமராச்சி மக்களை சார்ந்து நிற்க வேண்டிய நிலை உருவானது. தான் ரெலோவில் இருந்து தனித்து பிரிந்து உயிர்வாழ்வதற்கு, மக்களுடானான உறவை முரணற்றவகையில் கையாள்வது தாஸ்சுக்கு நிபந்தனையாகியது.

இந்த செயற்பாடுகள் தான், வடமராட்சியைச் சேர்ந்த அவர்களைக் காப்பாற்றியது. இதன் பின்னால் எந்த சாதியமும் கிடையாது. ஏன் கடத்த வேண்டும்? ஏன் கொல்ல வேண்டும்? ஓரே உத்தரவு, ஆனால் ஒரு பகுதி அதைக் கடைப்பிடிக்கவில்லை அவ்வளவு தான்.

இப்படி அனைத்தையும் சாதியமாக திரித்து வரலாற்றை வலதுசாரி பாசிசத்துக்குள் திரித்து, இட்டுக்கட்டி அதைப் பாதுகாக்க முனைகின்றது. நீதி நியாயம் என்பது இந்து பார்ப்பானிய மனுதர்ம அடிப்படையில் கோரவும், அதற்குள் இவை நடப்பதாக காட்டவும் முனைகின்றது. இப்படி வலதுசாரி அரசியல், தனது வரலாற்றை சாதியமாக திரித்து தப்பிச் செல்ல முனைகின்றது. சாதியை உசுப்பி, கொலைவெறியாட்டத்தை வேறு ஒரு வடிவில், சாதியாக தாழ்ந்த சாதிக்கு எதிராக உசுப்பிவிட முனைகின்றது.

No comments: