பெண்கள் விடுதலை முன்னணி ஆவேசம் தனியார்மயமும் தாராளமயமும் பரப்பும் ஏகாதிபத்திய நுகர்வு வெறியானது, பெண்களையும் நுகர்பொருளாகப் பார்க்கும் வக்கிர வெறியாக மாறி, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் ஆபாச வக்கிரவெறியாட்டங்களும் தீவிரமாகிவிட்டன. தமிழகத்தில் உள்ள பல கணினி ப்ரவுசிங் மையங்கள் நீலப்பட அரங்குகளாகிவிட்டன.
திருச்சியில் பாலக்கரை பருப்புக்கார தெருவிலும் திருவரங்கத்திலும் நேஸ் என்ற கணினிப் பயிற்சி மையத்தை நடத்தி வந்த லியாகத் அலி என்ற பொறுக்கி, பயிற்சிக்கு வரும் கல்லூரி மாணவிகளிடம் இனிக்கப் பேசி, வஞ்சகமாகப் போதை மருந்து கொடுத்து அவர்களை நீலப்படமெடுத்த விவகாரமும், அவற்றைக் குறுந்தகடுகளாக விற்பனை செய்த விவகாரமும் கடந்த ஜூன் இறுதியில் திருச்சி நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புகார் அடிப்படையில் லியாகத் அலியைக் கைது செய்த போலீசு, அவனுக்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் போதை மருந்து சப்ளை செய்த சமூக விரோதிகளை இன்னமும் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது.
தமிழச்சிகளின் கற்பைக் காக்கப் போவதாக குஷ்புவுக்கு எதிராக துடப்பக்கட்டை தூக்கிய தமிழின வீராதிவீரர்கள், இங்கே தமிழச்சிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ஆபாசப்படமெடுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதிலும், இக்கொடுஞ்செயலுக்கு எதிராக வாய்திறக்கவில்லை.
இந்நிலையில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடாமல், பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது என்று அறிவித்து, திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ""மாணவிகளை ஆபாசப்படமெடுத்த பொறுக்கி லியாகத் அலியைத் தூக்கிலிடு!'' என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியது. பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பெண் தோழர்கள், கையில் பசைவாளியுடன் பகல் நேரத்தில் இக்காமவெறி கொடுஞ்செயலுக்கு எதிராக நூற்றுக்கணக்கில ஒட்டிய சுவரொட்டிகள், உழைக்கும் மக்களிடமும் குறிப்பாக, பெண்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்களே வீதிக்கு வந்து சுவரொட்டி பிரச்சாரம் செய்ததைக் கண்டு வியப்புற்று, உள்ளூர் நாளேடுகள் இதனைப் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டன. ஏகாதிபத்திய நுகர்வு வெறியையும் ஆணாதிக்க வக்கிரங்களையும் வீழ்த்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி வரும் இவ்வமைப்பினர், அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
பு.ஜ. செய்தியாளர்கள்,
திருச்சி.
3 comments:
என்னய்யா அக்கிரமமான கொடுமை இது? கணினி பற்றி நாலு விஷயம் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு நல்ல வாழ்க்கை வாழ நினைத்த பெண்களின் வாழ்க்கையை கூட்டம் சேர்ந்து சூறையாடினா என்ன அக்கிரமம்ய்யா இது?
தங்க நகையெல்லாம் அணிந்த பெண் நடுநிசியில் தனியா வரமுடியும் நாளே உண்மையான சுதந்திர நாள்னு காந்தி சொன்னார். பட்டப் பகல்ல கணினிக் கல்வி பயிலச்சென்ற மாணவிகளுக்குப் போதை மருந்து, கட்டாயக் கலவின்னு அக்கிரமமான அக்கிரமம்!
குஷ்பு கற்பு விஷயத்தில் வெளக்குமாறு தூக்கிய தமிழின வீராதி வீரர்கள் அவர்தம் வீட்டுப்பெண்களுக்கு நேர்ந்த கொடுமையென்ற உணர்வோடு குற்றவாளிக்கூட்டத்தினரை நீதிக்குமுன் நிறகவைப்பதோடல்லாமல் இனி இந்தமாதிரியான கொடுமை தமிழகத்தில் நடக்காத அளவுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்த்ரவேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம்/மறுவாழ்வுக்கு வகை செய்யவேண்டும்.
நினைக்கவே மனம் பதறுகிறது. என்ன கொடுமைடா சாமி! குற்றமிழைத்தவர்கள் மிருகத்தினும் கீழானவர்கள்!
குஷ்புவை எதிர்த்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும். இந்த பிரவுசிங் செண்டர் ஆள் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்தால் மட்டுமே போதும். அதுதானே பண்பாட்டுக் காவலர்களின் நிலைப்பாடு. எல்லாம் பொழைக்கத் தெரிஞ்சவங்க சார். அதுக்கு ஒவ்வொன்னும் தேவைப்படுது. அவ்வளவுதான். நமக்கு வேணும்னா நம்மதான் எறங்கிப் போராடனும்.
//தமிழச்சிகளின் கற்பைக் காக்கப் போவதாக குஷ்புவுக்கு எதிராக துடப்பக்கட்டை தூக்கிய தமிழின வீராதிவீரர்கள், இங்கே தமிழச்சிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ஆபாசப்படமெடுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதிலும், இக்கொடுஞ்செயலுக்கு எதிராக வாய்திறக்கவில்லை.//
கற்ப்பு என்பதன் நவீன விளக்கத்தில் ஒட்டுச்சீட்டு வலிமையும், விளம்பர பெருமையும் சேர்வது தெரியாத நாமெல்லாம்தான் இந்த விசயங்களில் பதைபதைப்போம்....
போலி திராவிடம் பேசும் திராவக தமிழர்களின் கணக்கில் இவர்களெல்லாம் தமிழர்களும் அல்லர். இவர்களுக்கு கற்ப்பும் கிடையாது. அது அதிகப்படியாக குஸ்புவோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்று அவர்கள் கருதுகிறார்கள் போலும்....
அசுரன்
Post a Comment