தமிழ் அரங்கம்

Tuesday, September 12, 2006

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (2)

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (2)

பி.இரயாகரன்
12.09.2006

தே நிலையில் தான் இந்த நாவலும் அதற்குள் தான் சாதியமாக வினையாற்றுகின்றது. இன்று வலதுசாரிய மிதவாதிகள், வலதுசாரிய ஜனநாயகவாதிகள் இப்படித் தான், தமது உயர்சாதிய உள்ளடகத்தில் விளக்கமளிக்கின்றனர். வலதுசாரிய அரசியல் வன்முறையைக் கையில் எடுக்கும் போது, அது பாசிசமாக தெளிவாக பிரதிபலிக்கத் தொடங்குகின்றது. வலதுசாரிய பிரிவினால், தமது சொந்த பாசிசத்தின் கூறுகளை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத விளைவே சாதியமாக மாறுகின்றது.

கிட்லரின் தலைமையிலான ஜெர்மனிய பாசிசத்தை, வலதுசாரிகள் எப்படி இன்றும் கூட புரிந்து விளக்க முடியாதுள்ளதோ அப்படித்தான் இதுவும். இன்று இந்த புலிப் பாசிசத்தை சுய விசாரணையின்றி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் அதை நம்புவதும், சாதிய ஒடுக்குமுறை மரபின் ஒரு நீட்சிதான். இதனால் தான் இலங்கையிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற யாழ்ப்பாணியம், உண்மையை கண்டுகொள்ள எதையும் படிப்பதில்லை, எதையும் சுய விசாரணை செய்வதில்லை. சாதிய மரபு, சாதிய நம்பிக்கையின் தொடர்ச்சியில் வந்த யாழ்ப்பாணியம், புலிப்பாசிசத்தை அதன் சாதிய எல்லைக்குள் பாதுகாக்கின்றது.

சாதாரண உண்மைகளையே திரித்து விடுவது நிகழ்கின்றது. நிலைமையை சாதி அரசியலாக விளக்குவது நிகழ்கின்றது. இயக்கத்தில் ஏற்பட்ட சாதிக்கலப்புத் தான், வன்முறைக்கெல்லாம் அதாவது அனைத்து தவறுக்கும் காரணம் என்று கூறுவதே வலதுசாரியத்தின் ஆய்வாகின்றது. இயக்கத்தில் தலைமையை குறைந்த சாதிகள் கைப்பற்ற முனைவது, மற்றொரு காரணம் என்கின்றனர். இந்த நாவலும் இதைத் தான் சொல்லுகின்றது.

புலிகள் பற்றி வலதுசாரிய இந்த நாவலில் 'எங்களுடைய கறுப்புநரித் தலைவர் (பிரபாகரன்) கோட்ட அதிகாரியாக ஒரு வெள்ளாளனைக் கூட யாழ்ப்பாணத்திலே நியமிக்கவில்லை. யாழ்ப்பாணத்து முப்பதேழு கறுப்புநரி கோட்ட அதிகாரிகளிலே, ஒருத்தன் கூட பூனா வெள்ளாளன் இல்லை. ஒரு மெத்தப் படித்தவனைக் கூடக் கோட்ட அதிகாரியாக நியமிக்கவில்லை." இந்த தகவல் சரியானதா என்பதை, என்னால் உறுதி செய்ய முடியவில்லை. யாழ் மையவாதம் கிழக்கை புறக்கணித்தது ஒடுக்கியது போன்றதல்ல இது. யாழ் மையவாதம் வெள்ளாளர் தமிழரசுக் கட்சியாக இருந்த காலத்திலேயே இருந்து தொடருகின்றது. புலிகளின் தலைமை பெருமளவுக்கு வெள்ளாளர் அல்லாத சாதி குறைந்தவர்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் கூட அல்லது வெள்ளாளன் புறக்கணிப்பட்டிருந்தாலும் கூட, நடப்பது உயர்சாதிய வெள்ளாள ஆதிக்க அரசியல் தான். அன்று வெள்ளாளன் கோவியனை வன்முறையின் கருவியாக பயன்படுத்தி எப்படி சாதி ஆதிக்கத்தை தக்கவைக்க முடிந்ததோ, அதே நிலைதான் இன்றும் காணப்படுகின்றது. இந்த நிலையில் வலதுசாரிய அரசியல் தான் தப்பிப்பிழைக்க, அதை விளக்க இயக்கத்தில் படித்தவன் இல்லாமையும், தாழ்ந்த சாதிக்காரனின் ஆதிக்கமும் தான் இந்த நிலமைக்கு காரணம் என்கின்றது. இது திட்டமிட்டு சாதி குறைந்தவனையும், படியாதவனையும் தலைமைக்கு நியமித்ததாக கூறுவது, உயர்சாதிய சாதிய நோக்கில் உயரத்தில் நின்று யாழ் உயர்வர்க்கம் கூறுவதாகும்.

இந்த நாவலில் வரும் புலியைச் சேர்ந்த அழுக்குத் துணி துவைக்கும் வண்ணானான சால்வை மூத்தான்னை இழிவுபடுத்த, அவன் படித்ததே மூன்றாம் வகுப்பு தான் என்கின்றது. உண்மையில் படிக்காதவர்களினால் தான் இந்த விளைவு, என்று மற்றொரு வலதுசாரிய பாசிச குண்டை சமூகத்தின் மேல் தூக்கிப் போடுகின்றது. இவர்கள் 'எட்டு இலட்சம் பத்து இலட்சம் கட்டி எப்படி வரமுடிந்தது" என்று கேட்டு அவதூற்றை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியமாதிரி புகுத்துகின்றது. அதை அவர்கள் வாயால் கூறவைக்கின்றது. 'டே தம்பி அமிர், உந்த எழிய பெரிய சாதியின் காசிலேதான் நான் இலண்டனுக்கு வந்தனான்." இப்படி கூறவைக்கும் வெள்ளாளன் மட்டும், எப்படி வரமுடிந்தது. 'கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக்" கிண்டிய வெள்ளாளன் வரமுடியும் என்றால், ஏன் வண்ணான் முதல் பள்ளுப் பறைகள் வரமுடியாது. மற்றொரு வலதுசாரிய அவதூறில் புலம்பெயர் நாடுகளில் தூள் வர்த்தகம், சுத்துமாத்து, கிறடிற்காட் மோசடி, வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுவதும் தாழ்ந்த சாதிகளே என்றும், உயர்சாதி படித்த மேல்மட்ட யாழப்பாணத்தான் இழிவுபடுத்த முனைகின்றான்.

இப்படி தமது சொந்த அழுக்குகளை சாதியால் மூடிமறைத்து நடிக்கின்றனர். சமூக சிதைவுகளையும், கிறிமினல் குற்றங்களையும் சாதியாக காட்டி, வலதுசாரிய பாசிச சாதிவெறி ஊடாக மிதிக்கின்றனர். ஊரையும் உலகத்தையும் ஏய்க்கின்றனர். சொந்த நடைமுறையில் நேர்மையை, கதையாகக் கூட கூறமுடிவதில்லை. அகிம்சைவாதியான கூட்டணி அமிர் என்ற வெள்ளாளனுக்கும், வன்முறையையே அரசியல் நாதமாக கொண்ட புலி வெள்ளாடிச்சிக்கும் வெள்ளாளக் காதல் வந்தவுடன், தாம் சாதி பார்ப்பதில்லை என்று வெள்ளாளன் தொடர்ந்தும் வலிந்து கூற முனைகின்றான். ஒரு கூட்டணியின் பிழைப்புவாத அரசியல்வாதிக்கே உரிய சுத்துமாத்தில், வெள்ளாளனும் வெள்ளாடிச்சியும் பரஸ்பரம் சாதி பற்றி முரண்பாடுடன் உரையாடுகின்றனர். இந்த முரண்பாடு சாதியத்தை பாதுகாக்கும் எதிர்நிலை தளத்தில் கையாளப்படுகின்றது.

புலி வெள்ளாடிச்சி ஜீவிதா கூறுகின்றாள் 'நலிந்த தமிழ் மக்களின் இட்டு இடைசல்களுக்கெல்லாம் உயர்சாதி வெள்ளாளர்தான் காரணமாம். தங்களைச் சுரண்டி அடிமைகளாக நடத்தினவர்களாம். அதற்குப் பழிவாங்குகிறானாம்." இதைக் கேட்டு அமிர் ஓவென்று சிரிக்கின்றான். சிரிப்பில் உள்ள சாதிய அர்த்தம் தான் என்ன? தாங்கள் காரணமல்ல என்கின்றார்களா? அப்படியாயின் கோவியரோ? அல்லது கடவுளின் விதியோ? அது என்ன நலிந்த மக்கள்? என்னத்தில் உங்களைவிட அவர்கள் நலிந்துள்ளார்கள்? வெள்ளாள சாதிப்புத்தி இப்படி குதர்க்கம் செய்கின்றது. தாங்கள் அந்த மக்களைச் சுரண்டவில்லையாம். எப்படி ஐயா நீங்கள் மட்டும் கல்வீடு கட்டமுடிந்தது. நிலங்களையும், பணத்தையும், தங்கத்தையும், சாதிக்காரரையும் சீதனமாக கொடுக்க முடிந்தது? யார் உழைத்த பணம்? சீதனமாக சாதி குறைந்தவர்களையே எப்படி கொடுக்க முடிந்தது. உங்கடை செத்த வீட்டுக்கு மாரடிக்க, பறையடிக்க, பிணத்தைச் சவரம் செய்ய, தொட்டாட்டு வேலை செய்ய, மரண செய்தி அறிவிக்க, பிணம் காவ, பிணம் எரிக்க என்று ஒரு சங்கிலித் தொடரான யாழ் சாதியக் கலாச்சாரம் எப்படி கட்டிப் பாதுகாக்க முடிகின்றது. இன்றுவரை இந்த சாதிக் கூறுகள் பல யாழ்கலாச்சாரமாகவே நீடிக்கின்றதே எப்படி?.

இதில் வெள்ளாடிச்சி ஐPவிதா கொலைகார புலிகள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர். அவள் இப்படி 'நலிந்த தமிழ் மக்களின் இட்டு இடைசல்களுக்கெல்லாம் உயர்சாதி வெள்ளாளர்தான் காரணமாம். தங்களைச் சுரண்டி அடிமைகளாக நடத்தினவர்களாம். அதற்குப் பழிவாங்குகிறானாம்." என்றால், புலிகள் செய்த 8000 கொலைகளை எந்த வரையறைக்குள் இது வகைப்படுத்துகின்றது? புலியைப் பாதுகாக்க திரிபு நுட்பமாக புகுத்தப்படுகின்றது. புலிகள் கொலையே செய்யவில்லையா? ஆச்சரியமான ஆனால் சாதிய குதர்க்கத்துடன் கூடிய தர்க்க விவாதம்.

ஓவென்று சிரித்த வெள்ளாளன் அமிர் 'யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களைப் பிரெஞ்சு நாட்டு நிலப்பிரபுக்களோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். எல்லாம் மார்க்சியவாதிகளின் முடுக்கல் செய்கிறவேலை. ...மழையிலும் வெய்யிலிலும் கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக் கிண்டித்தான் உயிர் வாழ்கின்றான். ... அந்த வெங்காய நாற்றமடிக்கும், மண்குளிக்கும் வெள்ளாளன் எப்படி இவர்களைச் சுரண்ட முடியும்.? அல்லது இவர்களைச் சுரண்டி இராசபோகம் அனுபவித்தானா? ... எவனும் நலிந்தவர்களைச் சுரண்டி ஆளாகவில்லை" 'ஒரு வெள்ளாளனுக்கு வருடத்தில் எட்டு ஒன்பது நாட்கள் தான் அவர்களின் உழைப்பு தேவைப்பட்டது... 1949 இல் 30 சதத்தில் ஆரம்பித்த கூலி 200 ரூபாவுக்கு மேல் வளர்ந்துள்ளது. காலத்துக்கு காலம் சம்பளத்தைக் கூட்ட அடம்பிடித்தவர்கள். அவர்கள் யாரும் இலசவசமாக வேலை செய்யவில்லை. அவர்களை யாரும் அடித்துத் துன்புறுத்தி வேலைவாங்கவில்லை. போகட்டும். அந்தப் பத்துப் பதினைஞ்சு தினவேலையோடு எப்படி அவர்கள் வருடம் முழுவதும் சுரண்ட முடியும்? அந்த வேலையையும் வழங்கியிருக்கவிட்டால் அவர்கள் காற்றுக்குடிக்க நேர்ந்திருக்கும். குடியிருக்க நிலமும் கொடுத்துத் தொழிலும் கொடுத்துச் சிலவேளை பசியாறவைத்து அவர்களின் உயிரைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கமக்காரர்கள்."

இப்படி வெள்ளாள சாதியபுத்தி வக்கிரமாகி தன்னைத் தான் நியாயப்படுத்துகின்றது. புலியும் இந்த சாதிய உத்தியைத்தான், தேசியத்தின் மேலும் செய்கின்றனர். வெங்காய நாற்றமடிக்கும், கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக் கிண்டி வெள்ளாளன், பத்து லட்சம் கொடுத்து எப்படி லண்டன் வரமுடிகின்றது? நாற் சதுர சாதிய கல்வீடுவாசல்கள், தீண்டாதவருடன் தொடர்பு கொள்ள சங்கடப் படலையுடன் கூடிய படலைத் தலைவாசல், சாதிகுறைஞ்சவர்களுடன் பேச சவுக்கண்டியும், நிலபுலங்கள்.. எல்லாம் எப்படி வெள்ளாளனிடம் மட்டும் காணப்பட்டது, காணப்படுகின்றது. அந்த மக்களுக்கு அவை ஏன் கிடைக்கவில்லை. கேள்வி எதிரிடையில் எழும்புகின்றது? சாதி வழக்குகள், சாதிய கடமைகள் எப்படி இன்றுவரை நீடிக்கமுடிகின்றது. இலவசமாக கூலி இன்றி சாதியக் கடமைகள், யாழ் உயர்சாதிய வாழ்வில் பெறப்பட்டது, பெறப்படுகின்றது. சாதிய கடமைகளும், சாதிய வழக்குகளும், சாதிய வரலாறு இதைத் தெளிவாக கூறுகின்றது. 'அவர்கள் யாரும் இலசவசமாக வேலை செய்யவில்லை." என்ற கூற்று, அது முன்பு வழக்கத்தில் இருந்தை அடிப்படையாக கொண்டு கூறப்படுகின்றது.
'அந்த வேலையையும் வழங்கியிருக்காவிட்டால் அவர்கள் காற்றுக்குடிக்க நேர்ந்திருக்கும்." என்று குறிப்பிடும் போதே, சாதியம் எகிறுகின்றது. தமது தயவு இன்றி தாழ்ந்த சாதிகள் உயிர் வாழமுடியாது என்பதை, இது தெளிவாக எடுத்துரைக்கின்றது. கோமணக் குண்டி வெள்ளாளனின் திமிர் 'ஒரு வெள்ளாளனுக்கு வருடத்தில் எட்டு ஒன்பது நாட்கள் தான் அவர்களின் உழைப்பு தேவைப்பட்டது..." என்கின்றது. அப்பட்டமான சாதியமாக நீத்துப் போன பொய். நீங்கள் சொல்வது படிதான் நடந்தது என்றால், எட்டு ஒன்பது நாள் உழைப்பு, எப்படி அவர்களின் வருட முழுமைக்குமான தேவையை ப+ர்த்தி செய்தது. சாதிய நகைச் சுவைதான் இது. இதுவும் இல்லையென்றால் காத்துத் தான் குடித்திருக்க வேண்டும் என்கின்றது. வெள்ளாளனை மீறி காத்துக் கூட குடிக்க முடியாது என்பதையே, இது உரத்து கூறமுனைகின்றது.

சரி நீங்கள் 1949 இல் வழங்கிய கூலி நாளுக்கு 30 சதம் என்றால், வருடம் உங்களுக்கு தேவைப்பட்ட 15 வேலை நாட்களுக்கு நீங்கள் வழங்கிய 4ரூபா50 காசில் தான் அவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது, சாதியை சாதியாக நியாயப்படுத்தும் வக்கிரம் தான். 1945 இல் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களின மாதக்கட்டணம் 3 ரூபா 25 காசு. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலத்த எதிர்ப்பையும் மீறி, ஒரு சிலர் இப்படி கட்டி படித்துள்ளனர். இதைச் சாதிய வரலாறு பதிவு செய்துள்ளது. உங்கள் சாதிக் கூலியின் அளவையே இது கேலிசெய்கின்றது. இந்த நாவல் வெளியாகிய 2000 இல் 200 ரூபா கூலி என்றால், வருடம் நீங்கள் காற்றுக் குடிக்க கொடுத்தது, 3000 ரூபா தான். இதைக் கொண்டு யாழ் மண்ணில் வெள்ளாளன் தயவில் வாழமுடியுமா? யாருக்கு கதை சொல்லுகின்றீர்கள்.

சாதியம் பற்றியும், சாதிய சுரண்டல் பற்றிய உண்மையை, அதன் உண்மைத் தன்மையையே இது மறுதலிக்கின்றது. மார்க்சியம் என்ன முடுக்கினார்கள் என்பதற்கு அப்பால், சாதிய எதார்த்தம் வேறொன்றானது. வெள்ளாளன் அமிர் ஓவென்று சிரிக்கின்றான் என்றால், அவன் தான் உண்மையான மக்கள் விரோதி. மற்றவர்களை சமூக விரோத கிரிமினலாக காட்டியபடி, உண்மையான கிரிமினல்கள் சாதியின் பின்னால், யாழ் சமூகத்தின் முன்னால் ஒழித்துக்கொள்கின்றான். இன்று புலிகள் என்ற மக்கள் விரோதிகள் சமூக விரோதியாக இருந்தபடி, மற்றவர்களை சமூக விரோதிகளாக யாழ் சமூகத்தின் முன்னால் காட்ட முடிகின்றது. அதே போல் தான் சாதிய அரசியல் உள்ளடக்கம் தான், இங்கு இந்த சாதி நாவலாக தன்னை நியாயப்படுத்துகின்றது.

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக அவலத்துக்கான சமூகக் காரணம் என்ன? இதில் வெள்ளாளரின் சமூகப் பங்கு என்ன? தமிழ் அரசியல் கட்சிகளின் பங்கு என்ன? சாதிய உயர்வின் மேட்டிமைதான் என்ன? சாதிய அகமணமுறையின் இருப்புக்கான சமூக நியாயத்த்தன்மை என்ன? பார்ப்பானிய சாதிய இந்துமதம், சாதியத்தை எப்படி விளக்கமளித்து பாதுகாக்கின்றது? நீதி, நியாயம், ஜனநாயக தன்மை எவையும், இங்கு ஏன் இதன் மீது முரணற்றவகையில் யாழ் சாதிய கலாச்சாரம் கையாள்வதில்லை? யாழ் சாதியம் வன்முறையற்ற தளத்திலா இயங்கியது? யாழ் சாதிய வெள்ளாளனாகவே வாழ்ந்த தமிழன் சேர்.பொன்.இராமநாதன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்றானே ஏன்? இப்படி பல நூறு கேள்வி உண்டு.

சேர்.பொன்.இராமநாதன் 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டு சாதிமான்கள் போவரோ?" என்று லண்டன் சென்று, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்றானே, இவன் தான் தமிழ் மக்களின் தலைவன். இதுதான் இவர்கள் கோரிய சுதந்திரம். இந்த நாவலில் 'சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொடக்கம் தமிழர் தலைவர் பெருமகன் அமர்தலிங்கம் வரை யாழ்ப்பாணத்தில் பேணப்பட்ட வந்த அரசியல் தூய்மை, புனிதம் என்பன ஆயுதம் ஏந்திய கொலைகார காமவெறி பிடித்த மரநாய் இயக்கத்தவர்களின் பாராளுமன்றப் பிரவேசத்தால் அசிங்கம் ஆக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். தூய்மை, புனிதம் என்பன தாழ்ந்த சாதிக்கு எதிராக சேர்.பொன்.இராமநாதன் தொடங்கி அமிர்தலிங்கம் பிரபாகரன் வரை தொடருகின்றது. பாராளுமன்றம் ஈ.பி.டி.பி என்ற இயக்கத்தினால் தீட்டுப்பட்டுவிட்டதாக காட்டப்படுகின்றது. ஈ.பி.டி.பி யில் பள்ளுப்பறைகள் இருந்தலோ இந்த தீட்டு. அவர்கள் காமவெறியர்கள் என்கின்றது. உங்களை விடவா? வெள்ளாள சாதிய ஒடுக்குமுறை ஊடாக தாழ்ந்த சாதிப் பெண்களை மான பங்கப்படுத்தியதை விடவா, அவர்கள் அதிகம் செய்துவிட்டனர்? வெள்ளாள சாதிப் படுகொலையை விடவா, அவர்கள் அதிகம் செய்துவிட்டனர்? சாதிய வரலாறு அதை தெளிவாகச் சொல்லுகின்றது. இப்படி சாதி பற்றி கேள்விகள் பல நூறு உண்டு? (சமூகத்தில் இருந்து ஆக்கமும் ஊக்கமும் தராதபோதும், உதவிகளும் ஒத்துழைப்புமற்ற போதும் கூட, விரைவில் இவைகளை எனது நூலில் நீங்கள் விரிவாக காணமுடியும்.)

சரி அகிம்சை பேசும் சாதியவாதிகளே, நீங்கள் கட்டிப் பாதுகாத்த யாழ் பண்பாட்டு கலாச்சார சமூக அமைப்பில் இவை எப்படி நீடித்தது, நீடிக்கின்றது என்று பார்ப்போம்

1. தாழ்த்தப்பட்ட மக்கள் சிரட்டையிலும், போத்தலிலும் மட்டும் தான் குடிப்பதற்குரிய பொருட்களை உயர்சாதியினர் வழங்குகின்றனரே ஏன்?

2. தாழ்ந்த சாதி மாணவர்களை பாடசாலைகளின் கற்க அனுமதிக்காமை, கற்க முனைந்த போது தாக்கியமை, ஏன் அவர்களுக்கு என்று தனிப்பாடசாலைகள் உருவான போது எரித்தவை எல்லாம் ஏன்? உயர்சாதிய பாடசாலைகளுக்கு பலத்த போராட்டத்தின் பின் வந்த போது, அவர்களை நிலத்தில் இருத்திவைத்து படிப்பிப்பதாக நடித்தது ஏன்? பாடசாலையில் சாதியைப் பாராட்டியது ஏன்? உதாரணங்கள், சாதிய பழமொழிகள், நளினங்கள், இழிவாடல்கள், மறைமுக குத்தல்கள் மூலம் சாதியத்தை கிண்டல் செய்து இழிவாடிய, உயர்சாதிய வெள்ளாள ஆசிரியர்களின் சமூகத்தன்மை எப்படிப்பட்டது?

3. கிணற்றில் குடிக்க தண்ணீரை எடுக்கவும், குளத்தில் குளிக்கவும் தாழ்ந்த சாதியை தடை செய்த வெள்ளாளனின் நீதி நியாயம் எப்படிப்பட்டது? இதை மீறிய போது அவற்றுக்கு நஞ்சிட்டதும், தலைமயிரைப் போட்டது, அழுகிய இறந்த உடல்களைப் போட்ட யாழ் சமூக கலாச்சாரம், அதைப் பெருமையாகக் கொண்டாடவில்லையா? இன்று அந்த சாதிய யாழ் சமூகம் தான், புலியின் கோரக் கொலைகளைக் கூட பெருமையாக கொண்டாடுகின்றது. எப்படி?
நாவல் ஆசிரியர் ஆசிரியராகவும், பின்னால் அதிபராக இருந்த யூனியன் கல்லூரியில் இருந்த கிணற்றில் தாழ்ந்தசாதி மாணவர்கள் குடிக்க குடிநீர் அள்ளுவதற்கு, நான் கல்வி கற்ற காலத்தில் அனுமதி கிடையாது இருந்தது. தண்ணீர் கேட்டு அந்த மாணவர்களுக்கு நான் நீர் அள்ளியூற்றியதும், பின்னால் அவர்களை அள்ளச் சொன்ன சிறுவயது நினைவுகள், சாதி கோலோச்சிய யாழ் சமூகத்தில் இன்றுவரை எதார்த்தமானவை தான்.

4. அகமண முறைக்குள்ளான சாதிய திருமணங்கள் நடத்தும் யாழ் கலாச்சார சாதிய பெருமை எப்படிப்பட்டது? இது எப்படி ஜனநாயகபூர்வமானது. இதைக் கடந்த திருமணங்கள் தடுக்கப்பட்டதும், வன்முறையை ஏவிய கலாச்சாரம் யாருடையது? அடிநிலைச் சாதியில் கூட கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில், உயர்சாதிய அக்கறையும் வன்முறையும் எப்படிப்பட்டது? நீங்கள் எல்லாம் அகிம்சாவாதிகள்! நல்ல நகைச்சுவை தான்.

5. கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுத்த, மறுத்துக் கொண்டிருக்கின்ற 'பெருமைமிக்க" யாழ் கலாச்சாரத்தின் சாதியம் மனிதவிரோதத் தன்மை கொண்டவை.
1884 இல் எனது சொந்த ஊரான வறுத்தலைவிளானுக்கு அருகில் புலிகள் ஆரியப்பெருமாள் மீது நடத்திய கண்ணிவெடித் தாக்குதலின் போது எமது முழு ஊரும் அகதியானது. அகதிகளில் வறுத்தலை வெள்ளாளரும் பள்ளரும் அடங்குவர். ஆனால் வறுத்தலை அம்மன் கோயிலில் ஒன்றாக இருக்க, அவர்களை உயர்சாதியம் அனுமதிக்கவில்லை. நான் கடுமையாக போராடிய போது, மற்றைய இயக்கங்கள் அதைத் தடுத்தன. வெள்ளாள நரித்தனத்துடன் அவர்களை இரண்டாக பிரித்து தனித்தனியாக வெளியேற்றியது. இதுதான் யாழ் கலாச்சாரம். அகதிளுக்கான உணவைக் கூட பிரித்து, மரவள்ளிக் கிழங்கு பள்ளருக்கும், இடியப்பமும் பிட்டும் வெள்ளாளருக்குமென கொடுத்த பெருமை யாழ்ப்பாணிய சாதியத்துக்குத் தான் சேரும். இதை நான் கடுமையாக எதிர்த்து, உணவை இடையில் இடம்மாற்றி வழங்கியதெல்லாம் உண்டு.
1985 இல் இதே வறுத்தலைவிளானில் பிள்ளையார் கோயில் சித்திரை கஞ்சி அன்று, பள்ளரை கோயிலின் உள்ளே அனுமதிக்க கோரியும், சம ஆசனம் சம போசனத்தை அமர்த்தக் கோரியும், எனது உறவினரை எதிர்த்து நாம் போராடினோம். யாழ் கலாச்சார சாதியம் சும்மா இருக்கவில்லை, இதற்கு எதிராக கட்டுவன் சாதிய வன்முறையாளர்களை கொண்டு வந்து இறக்கியது. நாங்கள் துப்பாக்கி எடுத்து வந்ததன் மூலம் அவர்களை பின்வாங்க வைத்தோம்.
சம ஆசனம், சம போசனம் செய்ய முடியாது என்றனர். அந்தளவுக்கு சாதியக் கலாச்சாரம் புரையோடிக் காணப்பட்டது. அரசியல் செய்ய சமபந்தி இருந்த கூட்டணியின் சுத்துமாத்துகள் பின்னும் இதுதான் நிலைமை. 1930 களில் பாடசாலைகளில் சம ஆசனம் சம போசனம் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிய போது, அதை எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் தான். அன்று அப்படி நடத்திய 12 பாடசாலைகள் எரியூட்டப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இதை கோரியபோது, சில காலம் அது மூடப்பட்டது. இப்படி சாதி தலைவிரித்தாடிய நிலையில், தமிழரசுக்கட்சி சாதிப் போராட்டத்தை மழுங்கடிக்க அதை திரித்து தமக்கு இசைவாக்கி அரசியல் நடத்தினர். வர்க்க ரீதியாக முன்னேறிய தாழ்ந்த சாதி வீட்டில், உயர் சாதியினர் சமபோசனம் நடத்தினர். உயர்சாதி வீட்டில் தாழ்ந்த சாதிக்கு சமபந்தியை ஒருநாளும் நடத்துவதில்லை. இது கூட்டணியின் சமபோசன சாதிய சதி அரசியல் வரலாறாகும்.

6. சாதியத் தீட்டு, அதாவது தீட்டுக் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமாகி சமூகம் முழுக்க மூழ்கிக்கிடக்கின்றதே ஏன்? சாதியமே இந்து மதமாக மாறியதும், அது இன்றுவரை யாழ் கலாச்சாரமாக ஆதிக்கத்தில் உள்ளதே ஏன்?

7. தாழ்ந்த சாதிப் பெண்கள் மீது, உயர் சாதி ஆண்கள் சாதி ஒடுக்குமுறையைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாக வன்முறை ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது எப்படிச் சாத்தியமானது.? எரிக்கப்பட்ட வீடுகள் எத்தனை? கொல்லப்பட்டவர் எண்ணிக்கை எத்தனை? தாக்கப்பட்டவர் எண்ணிக்கை எத்தனை?

இப்படி சாதியம் பலவழிமுறைகளில் உயிருடன் இருக்க, எங்கே நாங்கள் ஒடுக்கினோம் என்று கேட்பது, வெள்ளாளச் சாதி அதிகாரத்தின் திமிராகும். இந்த திமிர் தான் சம்பளத்தை உயர்த்திக் கேட்பதாகவும், 1949துடன் ஓப்பிட்டு பல மடங்காக்கியதாக கூறி, தமது சொந்த உயர்தர சுரண்டல் வாழ்க்கையை மூடிமறைக்க முனைகின்றனர். வெள்ளாளன் சுற்றிச்சுற்றி வெங்காய நாற்றத்துடன் கோமணத்தைக் கிண்டுகின்றானாம். எப்படி இருக்கின்றது இந்த சாதியப் புளுடா!

அவர்கள் 200 ரூபா கூலி பெறுவதாக 1949 துடன் ஓப்பிட்டு பெரிப்பித்து காட்டப்படுகின்றது. வெள்ளாளக் கனவான்களே, நீங்கள் வாங்கும் கூலி எத்தனை மடங்காக பெருகியுள்ளது. அதைச் சொல்லுங்கள் முதலில். உங்கள் கூலியுடன் ஒப்பிடும் போது, அவர்கள் பெறும் கூலி எந்தனை பங்கு சிறியது? உங்களிடம் உள்ளதைப் போன்ற கல்வீடுகளை, நீங்கள் வழங்கும் அற்ப கூலியில் அவர்கள் கட்டவாமுடியும்? உங்களைப் போல் இலட்சக்கணக்கில் சீதனம் கொடுக்க முடியுமா? உங்களிடம் உள்ள நிலம், எப்படி அவர்களிடம் இல்லாமல் போனது? உங்கள் கல்வியை, அவர்கள் ஏன் பெற முடியவில்லை? யார் எல்லாம் இதற்கு தடையாக இருந்தனர், இருக்கின்றனர்? உங்களுடைய கமக்காரச் சாதி வாழ்க்கையை, அவர்கள் பெறமுடியாமைக்கு காரணம் என்ன?
அடித்துத் துன்புறுத்தி வேலைவாங்கவில்லை என்பதும், கூலியின்றி அவர்கள் வேலை செய்யவில்லை என்ற வாதங்கள் நகைப்புக்குரியது. உண்மையில் இவை அங்கு காணப்பட்டவை தான். பல தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னாக, காலத்தின் நிமித்தம், அடிமைக் குடிமைகள் என்ற சாதிய அடக்குமுறைகள் கணிசமாக தகர்ந்து போனது. இருந்தபோதும் சாதியம், காலாகாலமாக நியாயமான கூலியை வழங்கவில்லை. ஏன் அவர்கள் சுயமாக இருக்கவும் அனுமதிக்கவில்லை. இன்னவேலைகள், இப்படித்தான், இந்த சாதிய நிபந்தனைக்குள் தான், தமக்கு சேவை செய்யும் வகையில், தமக்கு கட்டாயம் செய்யவேண்டும் என்ற சாதி நியதிகளுக்கு நியமங்களுக்கும் உட்பட்ட ஒரு சாதிய சமூகமாக இருந்தது, இருக்கின்றது. இதை மீறிய போது அடிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். பெண்கள் 'கற்ப"ழிககப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. தாழ்ந்த சாதிக்காக போராடிய வெள்ளாளரை விதிவிலக்க விடப்படவில்லை.

இது தான் கிடுகுவேலி கட்டி வாழும் யாழ்ப்பாணிய பனங்கொட்டை சுப்பிகளின் உயர்சாதிக் கலச்சாரமாகும். உங்கள் செத்த வீட்டில் பறை அடித்தே ஆகவேண்டும் என்பது சாதிய நியதி. தாங்கள் கொடுப்பதை மறுபேச்சின்றி கைகட்டி வாங்கி செல்லவேணடும் என்பது சாதிய நியதி. இதற்கு பின்னால் சாதிய ஆதிக்கமும், சாதிய வன்முறையும் கொடிகட்டிப் பறந்தது. இது தான் இன்றைய புலிகள். யாழ் சாதி மரபுக்கு வெளியில் அதன் பாசிசம் கட்டப்படவில்லை.

No comments: