ஏகாதிபத்திய இலாபவெறியின் கொடூரம்!
பேரழிவின் விளிம்பில் பூவுலகம்!
பேரழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது உலகம். வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உருகத் தொடங்கி, கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் தொடர்ந்து அதிகரித்து, கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவின் தென்மேற்கே உள்ள மாலத் தீவுகளும் இன்னும் பல சிறிய தீவுகளும் கடலில் மூழ்கி அழிந்து போகும். வளி மண்டல வெப்பநிலை உயர்வால், வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும், பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும்; கடலிலிருந்து பல்லாயிரம் கோடி டன் அளவுக்கு கரிம வாயுக்கள் பொங்கி வெளிப்பட்டு, வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாக அழிந்து போகும்.
""உலக அழிவு சமீபித்து விட்டது; ஏசு வரப் போகிறார்'' என்று கிறித்துவ மதபோதகர்கள் செய்து வரும் பிரச்சாரமல்ல இது. சுற்றுச்சுழல் அறிவியலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை! மீள முடியாத வரம்புகளைத் தாண்டி உலகின் வளி மண்டலமும் சுற்றுச் சூழலும் சென்று விட்டது; தொடர்ந்து இதேநிலை நீடித்தால், இன்னும் பத்தே ஆண்டுகளில் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்று அறுதியிடுகிறார்கள், அறிவியலாளர்கள்.
பூவுலகின் வட துருவத்திலும், தென்துருவத்திலும் 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உள்ளன. உலகளாவிய வெப்பநிலை உயர்வால் இவை உருக பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டார்கள். ஆனால் உலகளாவிய வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்து, துருவப் பகுதிகளில் நிரந்தரப் பனிப்பாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, மேல்பரப்பில் உருகும் நீர் விரிசல்களில் இறங்கி, பனிப்பாளங்களுக்கு அடியில் உள்ள தரைப்பரப்பை எளிதில் எட்டி விடுகின்றன. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாக கடலை நோக்கி நகர ஆரம்பித்து விடுகிறது. இப்படி, வட துருவத்தை ஒட்டியுள்ள கிரீன்லாந்து, சைபீரியா ஆகியவற்றிலிருந்து பனியாறுகள் வேகமாக உருகிக் கடலில் கலப்பது அதிகரித்து வருகிறது.
எரிக் ரிக்நோட் மற்றும் பன்னீர் கனகரத்தினம் ஆகிய ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் கிரீன்லாந்திலிருந்து 224 கன கிலோமீட்டர் பருமம் அளவுக்கு பனி உருகி அட்லாண்டிக் கடலில் கலந்துள்ளது. 1996இல் இது ஏறத்தாழ 100 கன கிலோமீட்டர் பருமம் என்பதாக இருந்தது. கிரீன்லாந்தின் வடபகுதியிலுள்ள பனி உருகிவிட்டால் கடல் மட்டம் மேலும் 23 அடிக்கு உயரும். தெற்கேயுள்ள அண்டார்டிகாவின் பனி உருகிவிட்டால் உலகின் கடல் மட்டம் மேலும் 215 அடிக்கு உயர்ந்துவிடும். கடந்த ஓராண்டில் மட்டும் கடல்மட்டம் 4 முதல் 8 அங்குல அளவுக்கு உயர்ந்து பசிபிக் தீவுகளில் உள்ள பல சிறிய திட்டுகள் நீரில் மூழ்கிவிட்டன.
கனடாவின் வடக்கு கியூபெக் மாநிலத்தின் நுனாவிக் வட்டத்து மக்கள், இவ்வட்டாரத்தில் அடிக்கடி பனிப்புயல் சூறாவளிகள் திடீரென நிகழ்ந்து பெரும் விபத்துக்களால் பலர் மாண்டு போயுள்ளதாகக் குமுறுகிறார்கள். இத்துருவப் பகுதியில் கடந்த ஆண்டில் 100 டிகிரி அளவுக்கு வெய்யிலும் இடியுடன் புயலும் வீசியது. இப்பகுதிவாழ் மக்கள் இதுவரை கண்டிராத புதியவகை பறவைகளும் விலங்குகளும் அங்கு குடியேறின. புதிய வகை தாவரங்கள் முளைத்தன. துருவக் கரடிகள், வேட்டைக்கு ஒன்றும் கிடைக்காமல் மனிதக் குடியிருப்புகளை அடிக்கடி முற்றுகையிடுகின்றன. கம்பளி ஆடை அணியும் இம்மக்கள், குளிர்காலத்தில்கூட சூரிய ஒளி தடுப்பு களிம்பை உடலில் பூசிக் கொள்ளுமளவுக்கு வெப்பம் அங்கு வாட்டுகிறது. அவர்களில் பலருக்குத் தோல்வெடிப்பும் கொப்புளங்களும் தோன்றியுள்ளன.
கிரீன்லாந்தின் எஸ்கிமோக்கள் ""இக்லூ'' எனப்படும் தமது கொப்பரை வடிவிலான பனி வீடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் நொறுங்கி விடுவதாகவும், இதனால் தாங்கள் புலம்பெயர நேர்ந்துள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். ""21ஆம் நூற்றாண்டின் தட்ப வெப்பநிலை முறைகுலைவுப் பேரழிவுக்குப் பலியாகும் முதலாவது மனித சமூகம் நாங்கள்தான். எங்களது தொன்மை வாய்ந்த வாழ்க்கை முறையும் பண்பாட்டு அடையாளங்களும் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது'' என்று விம்முகிறார்கள், எஸ்கிமோக்கள்.
வட,தென் துருவங்களிலுள்ள பனிப்படலங்கள் தம்மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்புகின்றன. கடல்நீர் 7 சதவீத வெப்பத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. பனிப்படலங்களின் பரப்பு குறைவதாலும், கடல்களின் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இப்படித் திருப்பியனுப்பப்படும் வெப்பம் குறைந்து, உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளின் நிரந்தர பனிப்பாளங்களில் பலகோடி டன் அளவுக்குக் கரிமவாயுக்கள் புதைந்துள்ளன. கரியமிலவாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு, குளோரோ ப்ளோரா கார்பன் முதலான கரிம வாயுக்கள், பசுமைக் குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன. பனிப்பாளங்கள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டு பூமியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கிவிடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக்கிரகம் எப்படி இருக்கிறதோ, அப்படி எங்கும் வெப்பமும் புகைமண்டலும் நீராவியுமாகவே இருக்கும். மனித இனம் உயிர்வாழ்வதைப் பற்றி கற்பனை செய்யக் கூட முடியாது.
மேலாதிக்க வல்லரசுகளின் ஆக்கிரமிப்புப் போர்கள், அரசு பயங்கரவாதம், உலக வர்த்தகக் கழகத்தின் கெடுபிடிகள், பசி பஞ்சம் பட்டினிச்சாவுகள் இவை எல்லாவற்றையும் விஞ்சும் வண்ணம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு எனும் பேரபாயம் இன்று உலகைக் கவ்வியுள்ளது. புவியின் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணம் என்ன?
இது பல நூறு ஆண்டுகளுக்கொருமுறை நிகழும் இயற்கையின் பெருஞ்சீற்றமல்ல. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திலிருந்து, கரியும் எண்ணெயும் எரிக்கப்பட்டு அவை வளிமண்டலத்தில் கரிம வாயுக்களைப் பரப்பத் தொடங்கி விட்டன. உலகம் மேலும் மேலும் தொழில்மயமாகி ஆலைகளும் வாகனங்களும் பெருகுவதன் விளைவாக, அவை வெளியேற்றும் கரிம வாயுக்களால் உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. சூரியனிடமிருந்து வெளிப்படும் கடுமையான வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் பூமியைத் தாக்காமல் தடுத்து, பூமியின் மேல் குடைபோலச் சூழ்ந்துள்ள ஓசோன் வாயு மண்டலமே, கரிம வாயுக்களின் பெருக்கத்தால் ஓட்டையாகி விட்டது.
உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்டைஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்துதான் 75 சதவீத கார்பன்டைஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.
இது தவிர, பின் விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இலாபவெறியோடும் போர்வெறியோடும் ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பலவித பொருட்களாலும் அவற்றின் கழிவுகளாலும் சுற்றுச் சூழலும் புவியின் உயிரியல் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, அணு உலைக் கழிவுகளையும் சில இரசாயனக் கழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையைப் போக்கி முற்றாக அழித்து விட முடியாது. இக்கழிவுகளின் நச்சுத்தன்மையைப் போக்க கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருப்பதால், பல ஏகாதிபத்திய நிறுவனங்கள் அவற்றை இரகசியமாகக் கடலில் கொட்டி வருகின்றன. இத்தகைய நச்சுக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களைப் பின்தொடர்ந்து சென்று இக்கொடுஞ்செயலை உலகுக்கு அம்பலப்படுத்தியதற்காக, பசுமை அமைதி இயக்கத்தினரின் படகுகள் மீதே குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்துமளவுக்கு ஏகாதிபத்திய மாஃபியா கும்பல்களின் அட்டூழியம் பெருகிவிட்டது.
சுருக்கமாகச் சொன்னால், புவி வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களைப் பெருமளவில் வெளியேற்றி, பேரழிவை விளைவித்துக் கொண்டிருப்பவை ஏகாதிபத்திய நாடுகள்தான். இந்நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால், 2050க்குள் கரியமில வாயுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் உலகவங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரான நிக்கோலஸ் ஸ்டெர்ன்.
ஆனால், உலகமே அழிந்தாலும் பரவாயில்லை; எங்களது இலாப விகிதத்தை கால் சதவீதம் கூட குறைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள். 1992இல் ஐ.நா மன்றத்தின் தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய மாநாடு தொடங்கி, பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் உயிரியல் பாதுகாப்பு மாநாடு, 1997இல் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடந்த மாநாடு, 2000வது ஆண்டில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், அதைத் தொடர்ந்து கருத்தரங்குகள், கடந்த அக்டோபர் மாதத்தில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த கூட்டம் என புவி வெப்பநிலை அதிகரிப்பைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பலமுறை பல மாநாடுகள் நடந்துள்ள போதிலும், அவை வெங்காயத் தோலை உரித்த கதையாகவே முடிந்துள்ளன. 2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக 141 நாடுகள் கையெழுத்திட்டுள்ளனவே தவிர, அதற்கான நிபந்தனையோ நிர்பந்தமோ கிடையாது.
சுற்றுச்சூழல் பாதிப்பினால் நஞ்சாகிப் போயுள்ள உலகைச் சீரமைக்க ஏகாதிபத்திய நாடுகளை நிதி ஒதுக்கீடு செய்யக்கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், பல நாடுகள் மிக அற்பமான நிதியையே ஒதுக்கியுள்ளன. ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியை ஐ.நா. மன்றத்தின் மூலம் உலகவங்கி கட்டுப்படுத்தி நிர்வகிப்பதால், உலக வங்கியின் கட்டளைக்கேற்ப ஏகாதிபத்திய கொள்ளைக்கு கதவை அகலத் திறக்கும் ஏழை நாடுகளுக்கு மட்டுமே அந்த நிதி கிடைக்கும். அதுவும் ரொக்கமாக அல்லாமல், காடு வளர்ப்புத் திட்டம், அரிய வகை விலங்கினப் பாதுகாப்புத் திட்டம் முதலான ஏகாதிபத்திய நலனுக்கேற்ற திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றன.
பசுமைக் குடில் வாயுக்களை பெருமளவில் வெளியேற்றும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்திய நாடுகள், இப்போது தொழில் வளர்ச்சியடைந்து வரும் ஏழை நாடுகளுக்கும் இதில் பங்கு உள்ளது என்று கூறி அந்நாடுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க நிர்பந்தித்து வருகின்றன. ஏழை நாடுகளில் நெல் பயிரிடுவதாலும் கால்நடைகளின் சாணத்தாலும் மீதேன் வாயு பெருகுவதாகவும், ஏழை நாடுகளில் அதிகமாக விறகு அடுப்பு எரிப்பதால் வளிமண்டலத்தில் கரியமில வாயு பெருகுவதாகவும் ஏகாதிபத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனா, இந்தியா போன்ற நாடுகள், பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றன.
""நீ மட்டும் யோக்கியமா?'' என்று ஏழை நாடுகள் மீது குற்றம் சாட்டி தப்பித்துக் கொள்ளும் உத்திதான் இது. இந்தியா போன்ற ஏழை நாடுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்காவிடில், கியோட்டோ ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கொக்கரிக்கிறது அமெரிக்கா. கியோட்டோ ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்லாயிரம் கோடிகள் செலவாகி, பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று வாதிடும் அமெரிக்கா, தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கூறுகிறது. ஆனால் இதற்கான இலக்கோ, காலவரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது.
புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச் சூழல் நஞ்சாவதற்கும் ஏகாதிபத்திய இலாபவெறியும் போர்வெறியுமே முதன்மையான காரணம். ஏகாதிபத்திய உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டாமல், காடு வளர்ப்புக்கும் மாசு கட்டுப்பாட்டுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் புவி வெப்பநிலை அதிகரிப்பையும் பேரழிவுகளையும் தடுத்து நிறுத்திட முடியாது. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சுயசார்பான தேசிய உற்பத்தியை, இலாபவெறியற்ற மக்கள் நலன் சார்ந்த சோசலிச உற்பத்தி முறையை நிறுவி வளர்க்காதவரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்திய நரிகள் போடும் பழியையோ, புவி வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பேரழிவுகளையோ ஒருபோதும் தடுத்து நிறுத்திட முடியாது.
பேரழிவின் விளிம்பில் நிற்கும் பூவுலகம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
· மனோகரன்
4 comments:
நல்ல விளக்கமான கட்டுரை மனோகரன். கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது :((
நல்ல கட்டுரை.
படிக்கவே பயங்கரமா இருக்குங்க :(
தனது கவந்த பசிக்கு இந்த உலகை உலையில் விட்டு கொதிக்க விடும் ஏகாதிபத்திய நரிகளை அடித்து விரட்டும் காலம்தான் மனித குலத்தின் மண்டைக்கு மேலே தொங்கும் கத்தியிடம் இருந்து விடுதலை.
இன்னைக்கு சோறு கேரண்டி என்று பிழைப்புவாதம் பேசி அல்பைகளாக வாழ்வதற்க்கு கூட வாய்ப்புகளை மறுக்கிறது ஏகாதிபத்தியம்.
ஒரு அற்பவாதிக்கு தனது சாதனைகள் என்று கருதி சுயதிருப்தி அடைய குறைந்த பட்சம் தனது குடும்பத்தின் நலன் என்ற ஒரு கொழுக் கொம்பாவது தேவைப்படுகிறது, இதற்க்கும் ஆப்பு செருகுகிறது ஏகாதிபத்தியம்.
ஒரு பன்றீகூட தனது இருப்புக்கு பிரச்சனை வரும் பொழுது கிளர்ந்தெழுகிறது. அற்பவாதிகள் பன்றியைவிட கொஞ்சமே கீழானவர்கள் எனவே அவர்களும் கிளர்ந்தெழுவார்கள்.
அசுரன்
Post a Comment