தமிழ் அரங்கம்

Wednesday, December 13, 2006

முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்

முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்

காவிரி ஆற்று நீர் சிக்கலைப் போல முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நிறைய வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லை. உண்மை விவரங்களே தமிழகத்தின் நியாய உரிமைகளையும் கேரள அரசின் அடாவடித்தனங்களையும் நிலைநாட்டுவதாக உள்ளன. இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான திருவி தாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டு, அன்றைய ஆங்கிலேய காலனிய அரசு முல்லைப் பெரியாறு அணையை 1895இல் கட்டி முடித்தது. திருவிதாங்கூர் மன்னருடனான ஒப்பந்தத்தின்படி பெரியாறு அணையின் 482 சதுர மைல் பரப்பளவு பகுதி மீது தமிழகத்திற்கு முழு உரிமை உள்ளது. அணையைப் பராமரிப்பது, பாதுகாப்பது, நிர்வகிப்பது ஆகிய உரிமைகள் தமிழகத்திற்கே உண்டு. இந்த வகையில் முல்லைப் பெரியாறு அணை முழுக்கவும் தமிழகத்திற்கே உடைமையானது என்று அவ்வொப்பந்தம் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. 1942ஆம் ஆண்டு பெரியாறு அணையில் மின் உற்பத்தி செய்வது என்று சென்னை மாநில அரசு முடிவு செய்து, பெரியாறு அணையைப் பலப்படுத்தவும், நீர்வளத் துறை தலைவர் சான்றிதழுடன் 152 அடி வரை நீரைத் தேக்கி வைக்கும் உரிமையையும் பெற்றது. இதற்கான ஒரு ஒப்பந்தத்தையும் கேரள அரசுடன் போட்டுக் கொண்டது.


1976இல் மின்னுற்பத்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் 555 அடி உயர இடுக்கி அணையை கேரள அரசு கட்டியது. அதன்பிறகுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையாக்கப்பட்டது. 1979இல் முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதாக மலையாள மனோரமா ஏடும், இன்றைய சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தனும் முன்னின்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டனர். இந்தப் புரளியின் அடிப்படையில் அணையில் நீர்தேக்குவது 136 அடியாகக் குறைக்கப்பட்டு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 38,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக்கப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த வறட்சி நிலை காரணமாக மீண்டும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்தேக்கிக் கொள்வதற்கான உரிமையைப் பெற உச்சநீதி மன்றத்தை தமிழக அரசு நாடியபோது, அது, இதற்கான தீர்வு காணும்படி மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. அப்போதிருந்து பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இழுத்தடிப்பு வேலையைத்தான் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. நடுநிலையான ஆய்வாளர்களின் முடிவின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை கடந்த மார்ச் மாதம் உச்சநீதி மன்றம் வழங்கியது. ஆனாலும் அந்த அணை உடைந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக கேரள மக்களிடையே பீதியைக் கிளப்பி உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமலாக்க விடாமல் கேரள ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அணையின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவுமான ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள். மத்திய இராணுவ மந்திரி யாக உள்ள கேரளத்தைச் சேர்ந்த அந்தோணியின் முயற்சியால் கடற்படையை வைத்து புதிய ஆய்வுக்கு முயன்றது.


தமிழக அரசு மீண்டும் உச்சநீதி மன்றத்தை அணுகியபோது, பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளும்படி அது பரிந்துரைத்தது. தமிழகத்தின் நியாயத்தை அங்கீகரித்து உரிமை வழங்குவதற்குப் பதில், பேச்சு வார்த்தை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் பார்ப்பனபனியா இந்தியத் தேசியவாதிகள் கூப்பாடு போடுகிறார்கள். நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்கள் இனங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினையாகட்டும், ஆற்றுநீர் பகிர்வுப் பிரச்சினையாகட்டும் குறுகிய அரசியல் ஆதாயத்தை முன்வைத்து, இனவெறியைக் கிளப்பி அடாவடி செய்கின்றன, சில மாநில ஓட்டுக் கட்சிகள். ஆனால், அச்சிக்கல்களில் உள்ள நியாய அநியாயங்களைப் பரிசீலித்து உரிமைகளை வழங்குவதற்குப் பதில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும்படி உச்சநீதி மன்றமும், சம்மந்தப்பட்ட மாநிலங்களிடையே சந்தர்ப்பவாத தட்டிக் கழிப்பு வேலைகளை மத்திய அரசும் மேற்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட இனமக்கள் நியாய உரிமைக்காகப் போராடும் போது, பிரிவினைவாத முத்திரைக் குத்தி ஒடுக்கப்படுகின்றனர். வெறும் ஆற்றுநீர் பிரச்சினை என்பதாக அல்லாமல், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை இருந்தால்தான் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆயுதமாக பாதிக்கப்பட்ட இன மக்கள் பயன்படுத்த முடியும். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதில் சந்தர்ப்பவாதம் பேசி ஓட்டுக் கட்சிகள் ஏய்க்கின்றன. தேசிய இனவாதிகளும் வலுவான மக்கள் இயக்கங்களைச் சுயமாகக் கட்டி வளர்ப்பதற்குப் பதில் ஓட்டுக் கட்சிகளின் நிழலில் நின்று கூப்பாடு போடுகின்றனர்.

No comments: