தமிழ் அரங்கம்

Saturday, December 16, 2006

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

பி.இரயாகரன்
16.12.2006


'பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது" என்பது, பாசிசத்தின் பிறப்புக்கும் இறப்புக்கும் கூட சமகாலத்தில் பொருந்திப் போகின்றது. பாலசிங்கம் சமகாலத்தில் தனது நோயால் செத்துக் கொண்டிருந்தது போல், பாசிசம் என்னும் புற்றுநோயால் புலிகள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி கோயபல்ஸ்சின் மரணத்துடன் பின்னிப்பிணைந்து செல்வது எம் முன்னால் அனுதினம் நிகழ்கின்றது. மனித தியாகங்கள் எல்லாம் வருத்தத்துக்குரிய ஒன்றாக எம் மண்ணில் இழிந்து போகின்றது.


இந்த நிலையில் தான் பாசிசத்தின் குரலை, பாசிசம் இழந்து நிற்கின்றது. தமிழ் மக்கள் இதனால் எதையும் இழக்கவில்லை. இந்த ஈழத்து பாசிசக் குரலை 'தேசத்தின் குரல்" என்று பாசிட்டுக்கள் அழைப்பது, சாலப் பொருத்தமானதே. ஏனென்றால் அது அவர்களின் சொந்த இழப்பே ஒழிய, மக்களின் இழப்பல்ல. பாசிசத்தின் சகல இலக்கணத்துக்குமுரிய வகையில் ஒரு கோயபல்ஸ்சாகவே வாழ்ந்தும், இழிவுக்குரிய ஒரு மக்கள் விரோத பாசிட்டாக வாழ்ந்து மடிந்தவர். இவரை 'மதியுரை"யர் என்பது, மக்களுக்கு எதிராகவே சதா சதி செய்வதைத் தான். வேறு எதைத்தான் அவர் செய்தார்? சூனியக்காரியாக, சூழச்சிக்காரனாகவே வாழ்ந்து மடிந்து போனார்.


இவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? இந்த சூனியக்காரனின் மரணம் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே அடிப்படையான கேள்வி? மக்களின் நன்மைக்காக எதையும் இவர்கள் தமது வாழ்வில் செய்யவில்லை. அவர்களால் எதையும் பட்டியலிடவே முடியாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் புலிகளால் என்ன நன்மை கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி, யாராலும் பதில் சொல்ல முடியுமா எனின், முடியாது.


தமிழ் மக்களுக்கு பாசிசப் புலிகள் கொடுத்த தீமைகளே அளவற்றது, எல்லையற்றது. தமிழ் மக்களின் கண்ணீரே வாழ்வாகி அது பெருக்கெடுக்கின்றது. துன்ப துயரங்கள் ஆறாக பெருகுகின்றது. மனித அவலத்தை தவிர, தமிழ் மக்கள் கண்டது எதுவுமில்லை. மக்கள் சுமப்பதோ, தமது சொந்தப் பிணத்தைத் தான். இதைத்தான் பாலசிங்கம் ஒரு கோயபல்ஸ்சாக நின்று, மக்கள் மேல் சுமத்தினார். இதை செய்வதில் கிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸ்சுக்கு நிகராகவே பாலசிங்கம் வாழ்ந்ததை, எந்த வரலாறும் மறுதலிக்காது.


சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்று கூறி, 1986 இல் இந்த பாசிட்டுகள் தமது மேன்மையை துண்டுப்பிரசுரமாக விட்டவர்கள். அவர்களின் 'மதியுரையர்" தான் இவர். இப்படி மக்களுக்கு எதிராகவே சூழ்ச்சியும் சதியுமாக வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இந்தப் புலிகள்.


இப்படிப்பட்ட பாசிட்டுகளின் மரணம் தமிழ் மக்களின் சொந்த இழப்பா? இல்லை, ஒரு நாளுமில்லை. அப்படி தமிழ் மக்களின் இழப்பு என்றால் எப்படி? எந்த வகையில்?


தனிப்பட்ட அந்த மனிதனின் மரணத்தையும், அதனால் உற்றார் உறவினரின் துன்பம் துயரத்தையும் இதில் இருந்து நாம் வேறுபடுத்துகின்றோம். ஆனால் அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக பார்த்தால், தமிழ் மக்களின் மரணங்களே இவர்களின் அரசியல் வாழ்வாகியது. சதா மரணங்களையே விரும்பியவர்கள். மரணங்களிலேயே மகிழ்ச்சி கண்டவர்கள். மக்களின் மரணங்களே இவர்களின் அரசியலாகியது. மனிதம், மனித நேயம் எதுவுமற்று, சூழ்ச்சிகாரர்களாக, சதிகாரர்களாகவே வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதையே அரசியலாக கொண்ட ஒரு மக்கள் விரோதக் கும்பல் தான் புலிகள். மக்கள் விரோத செயலை நியாயப்படுத்தவே, பாலசிங்கம் என்ற கோயபல்ஸ் உருவாக்கப்பட்டார்.


இந்த தெரிவு அசாதாரணமானது. சொந்தமாக எதையும் முன்வைக்க திராணியற்ற ஒரு பந்சோந்தி, ஒரு விஸ்கி போத்தலுக்குள் எதையும் முண்டி விழுங்கி வாழும் விலாங்கு மீன், குடியிலேயே மிதக்கும் ஒருவன். இப்படி சமூகத்தை வழிகாட்ட எந்த திராணியுமற்ற ஒருவனை தெரிந்தெடுத்து கோயபல்ஸ்சாக்க முடிந்தது. பாலசிங்கத்தை கோய்பல்ஸ்சாக தெரிந்தது என்பது ஒரே நாளில், இலகுவாக நடக்கவில்லை. இந்த பதவிக்காக போட்டியிட்டு தோற்றவர் வேறு யாருமல்ல மு.நித்தியானந்தன். தோற்க முன்பு புலிகளின் கோயபல்ஸ்சாக இருந்தவர். ஆனால் நித்தியானந்தன் பாலசிங்கம் போல் வெகுளித்தனமற்ற ஒரு குள்ளநரியன் என்பதால், பிரபாகரன் அவரைக் கழற்றி விட்டவர்.


இப்படி வன்மமும் வக்கிரமும் கொண்டு சூழச்சியையும் சதியையும் கொண்டு, நியாயப்படுத்திய திறனுக்கு 'மதியுரையர்" என்றும் 'தத்துவாசிர்pயர்" என்றும் 'மேன்மைகள்" என்றும் அவற்றை, பாசிட்டுகள் பறைசாற்றினர். உண்மையில் இந்த பாசிச தத்துவ கோயபல்ஸ், பாசிசத்தை நியாயப்படுத்த முனைந்த போதெல்லாம் தோற்றுப் போனார்கள். எப்படி தோற்றுப்போனார்கள்?


இப்படி நியாயப்படுத்தப்பட்ட தோல்விகள் தான், முடிவேயற்ற வகையில் தமிழ்மக்கள் மேலான படுகொலைகளாகும். தமிழ் மக்களிடமே தோற்றுப் போனவர்கள் (போன 'மதியுரையர்",) கொலைகளின்றி உயிர்வாழ முடியாத ('தத்துவ") மேதைகளாகினர். புலிகள் தமது சொந்தப் போராட்டத்தை நியாயப்படுத்த முடியாது போனமையே, படுகொலைகளின் வரலாறாகின்றது. இப்படித்தான் வரலாறு எழுதப்படும். இந்த 'மதியுரை"யர்கள் பாசிசம் நீடிக்கும் வரைதான், கோயபல்ஸ் தொப்பி அணிந்தபடி வரலாற்றை தாமே தீர்மானிப்பவராக கொட்டமடிக்கின்றனர்.


தமிழ் மக்களின் உரிமைகள் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்பது புலிப்பாசிசத்தின் மைய அரசியலாகவுள்ளது. இதற்கு அரசியல் விபச்சாரம் செய்வதே, அன்ரன் பாலசிங்கத்தின் கோயபல்சுக்கேயுரிய தொழிலாகியது. பிரபாகரன் இதைத் தான் அழகாக 'தேசத்தின் ஒளிவிளக்கு" என்கின்றார். இப்படி ஒளிவிளக்காகி பாசிசத்துக்கு ஒளி கொடுக்க வெளிக்கிட்டவர். ஆனால் ஒளியைத் தான் ஏற்ற முடியவில்லை. புலிகளால் கொல்லப்பட்ட பத்தாயிரம் பேரின் மரணங்கள், இந்த இருண்ட பக்கத்ததைக் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அவலங்களும், கண்ணீர்க் கதைகளும் நீண்டு நெடிந்து கிடக்கின்றது. வரலாறு இந்த மனித அவலத்தை பாசிச சமாதி மீது அறைந்து கூறும்.


இந்த பாசிசத்திற்கு தலைமை தாங்கும் தலைவர் கூறுகின்றார் 'சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது." ஆம் உண்மை. சாதாரண மனித உறவுக்கு அப்பால் வாழ்பவர்கள் தான் நீங்கள். அதில் ஒன்றுபட்டீர்கள். சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்டு, யார் யாருக்கு வழிகாட்டி என்பதில் தொங்கி நிற்பது உங்கள் சூழ்ச்சிகள் தான். 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது." என்ற உங்கள் வாழ்வியல் உண்மை, மனித அவலத்தினை எடுத்துக்காட்டுகின்றது. அடுத்த நேர கஞ்சிக்கு வழியற்றவர்கள், மனிதனாக வாழ வழியற்றவர்கள், மனித உறவுகளைக் கூட பேண முடியாதவர்கள், தமது நிலையை எண்ணி வாய்விட்டு புலம்ப முடியாதவர்கள், அச்சமும் பீதியும் வாழ்க்கையாகி மிரண்டு கிடப்பவர்கள், தமது சொந்த சுயத்தை இழந்து நடைப்பிணமானவர்கள் யார்? மக்கள் தான். நீங்கள் இதையே தொழிலாக செய்யும் போது, 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்"டுத்தான் இருக்க, (வாழ) முடியும். மனிதத்தை புதைகுழியின் முன் நிறுத்தி, சுட்டு வீழ்த்தி, அதை கால்களாலேயே மூடிவிட்டு வந்து துப்பாக்கி முனையில் நியாயம் பேசும் நீங்கள் யார்? 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட" பாசிட்டுக்கள் தான். இதை நீங்களே சொல்லும் போது, நாங்கள் எப்படி நிராகரிக்க முடியும்.


இப்படி தமிழ் மக்களின் பெயரில் தினம்தினம் நீங்கள் அழுது புரண்டதால், தமிழ் மக்கள் கண்டது என்ன? சாதாரண மனித வாழ்வும் உறவும் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்தார்கள். எதைத்தான்?, எப்படி? உங்களிடம் பெற்றுவிட முடியும். சிங்களப் பேரினவாதி எதை தமிழ் மக்களுக்கு செய்தானோ, அதைச் செய்தது, செய்வது யார்?


இப்படிப்பட்ட ஒருவன் இன்று மரணித்துள்ளான். பொய்மையையே வாழ்வாக கொண்டு, பொய்யாகவே கதைத்து, மக்களை ஏமாற்றிய ஒருவன் மரணித்துள்ளான். அன்றாடம் எந்த பொய்களுமின்றி, புலிகளின் பாசிசம் மக்களின் முன் அரங்கேறுவதில்லை. இப்படி மக்களையே ஏமாற்றி வாழ்ந்த ஒருவன், கடந்த வரலாறு முழுக்க மரணங்களின் மகழ்ச்சியுற்றவர்கள். அன்றாடம் கேட்கும் வெடியோசையும், மரண அழுகுரலும் தான், இவர்களின் புத்துணர்ச்சிக்குரிய டொனிக்காகியது. தமிழ் மக்களின் மரணமே புலிகளின் அன்றாட நடப்பு அரசியலாகியது. தமிழ் மக்களை புலிகள் கொன்றாலும் சரி, இராணுவம் கொன்றாலும் சரி, அதை அரசியலாக கொண்டு பிழைக்கக் கற்றுக்கொண்டனர். இப்படி தமிழ் மக்களின் மரணத்தில் மகிழ்ச்சியடைந்தவர்கள் (ஒருவனைப்) பற்றி, நாம் எப்படி புரிந்து கொள்வது.


தமிழ் மக்களின் மரணங்களே டொலராகவும், ஈரோக்களாகவும் மாறிய போது, அதில் சொகுசாக வாழ்ந்தவர்கள் யார்? நீங்களே உங்களைக் கேட்டுப்பாருங்கள்! மரணத்தைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் யார்? மக்களா! இன்று அதே பாசிசத்தின் குரலின் மரணத்தையே கடை விரித்து அரசியல் செய்வது யார்? தமிழ்மக்களா! தமிழ் மக்களுக்கும் போராட்டத்துக்கும் என்னதான் சம்பந்தம்?. தமிழ்மக்களின் உரிமைகள், அதற்கான போராட்டம் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்றவர்கள் நீங்கள். இப்படிப்பட்ட உங்களின் மரணம், மக்களுக்கு ஒரு துயரத்தை ஏற்படுத்துமா? எப்படி? நீங்களே உங்கள் மனதைத் திறந்து பதில் சொல்லுங்கள்.


பேரினவாதம் தமிழ் மக்களை கொன்று குவித்த போதெல்லாம், பாசிச (பாலசிங்கத்தின்) அரசியல் இருப்புக்கே அது உதவியது. புலிகள் தமிழ் மக்களை கொன்று குவித்த போதே, அவர் புலியின் 'மதி"யுரைஞரானார். பழைய இலக்கியத்துக்கு உரை எழுதுவது போல், பாசிசத்துக்கு உரையெழுதி 'மதி"யுரைஞரானார்.


பாலசிங்கம் புலிகளின் ஒரு கோயபல்ஸ்சே ஒழிய, அவர் புலிகளின் தத்துவவாதியல்ல. இந்த மாபியா கொலைகார செயற்பாட்டுக்கு என்று தத்துவமும் அவர்களின் சொந்த வழி மீது கிடையாது. பிரபாகரனின் படுகொலை அரசியலுக்கு, கோயபல்ஸ்சாக மாறி அதை குலைத்துக் காட்டியவர். இப்படி பாசிசத்தின் குரலாக இருக்கவும், இசைக்கவும் முனைந்தவர். இதையே தத்துவம் என்பது நகைச்சுவைதான்.


தமிழ் மக்களின் துன்பம் துயரமே, இவர்களின் மகிழ்ச்சியான வாழ்வாகியது. மக்களுக்காக ஏதாவது செய்துள்ளார்களா? மக்களுக்காக புலிகள் ஏதாவது செய்துள்ளார்கள் என்று, ஒரு உண்மையைக் கூட எடுத்துவைக்க முடியாது. பல பத்தாயிரம் கோடி பணத்தை கடந்த காலம் முழுக்க வரவுசெலவாக கொண்ட மாபியா புலிகள் இயக்கத்தின் கோயபல்ஸ்கள், எதையும் மக்களுக்காக கூற முடியாது.


பாலசிங்கத்தின் கோயபல்ஸ் தத்துவம் அம்மணமானது. ஆரம்ப காலத்தில் இந்த கோயபல்ஸ் சோசலிசத்தை எல்லாம் பாசிசத்தினுள் புகுத்தி பேசியது. சோசலிசம், வர்ககம், தொழிலாளி, விவசாயி என்று பல சொற்களை இணைத்து மக்களை ஏமாற்றி விபச்சாரம் செய்தமைக்கு இந்த கோயபல்ஸ்சே முன்நிலை வகித்தவர்.


புலிகளின் ஒரேயொரு அரசியல் திட்டமாக அது வெளிவந்தது. அதற்கு 'சோசலிச தமிழீழம்" என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். 'தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்ற பொய்கார கோயபல்ஸ்சால் மட்டும் தான் கூறமுடியும்.


இந்த கோயபல்ஸ் கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. 'தேசிய விடுதலை எனும் பொழுது .ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர் 'சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் 'சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் ~~தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒருபொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றனர் இந்த பாசிட்டுகள். எப்படிப்பட்ட ஒரு பொய். இந்த மோசடியை, பொய்யை மக்களுக்கு எதிராக (புலிகளால்) கோயபல்ஸ் பாலசிங்கத்தால் தான் செய்ய முடிந்தது.


இவரை போற்றும் புலித் தலைவர் பிரபாகரன் 'ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்." என்று கூறுவது உண்மை தான். மக்களை ஏமாற்றி மோசடி செய்தாலன்றி, புலிகள் தப்பிப்பிழைக்க முடியாதல்லவா! அதைத்தான் இந்த பாலசிங்கம் என்ற கோயபல்ஸ் செய்தார். அதற்காகவே அவர் வாழ்ந்தார். அதைத் தான், எப்படிப்பட்ட மோசடி என்பதை, அவர்கள் இன்று கண்டு கொள்ளமறுக்கும் புலிகளின் நூலில் இருந்து பார்த்தோம்.


எப்படிப்பட்ட ஒரு கோயபல்ஸ்சாக பாசிசத்தின் குரலாக இருந்தார் என்பதற்கு, பாலசிங்கம் எழுதிய விடுதலை என்ற நூலே சாட்சியம். அதில் அவர் தமது கோயபல்ஸ் அரசியலை எம்.ஜி.ஆர்க்கு எடுத்துக் கூறும்போது 'விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்றாரே. அத்துடன் 'நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்ன புல்லரிக்கும் வார்த்தைகள். கோயபல்ஸ்சுக்கேயுரிய மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. ஏமாற்றல் மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தும் அனைத்தையும் கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.


www.tamilcircle.net



No comments: