தமிழ் அரங்கம்

Thursday, December 14, 2006

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

க்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம்.


ஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், ""இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,


""இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா.


பாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.


இப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.


கம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து ""சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.


கொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.


""அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும்.


அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, ""தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலகலைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது.


ஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது.


அக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத "வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான்.


எண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது.


ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழைத்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல!


எல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு ""திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.


No comments: