தமிழ் அரங்கம்

Sunday, June 24, 2007

பருத்தி வீரன் பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?

பருத்தி வீரன்

பொறுக்கித்தனத்தின் இரசனையா

யதார்த்தத்தின் ருசி?

சூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கமழும் கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சி குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.

பின்கழுத்தில் கொக்கி குத்தியதால் இரத்தம் சிந்திச் சாகும் தறுவாயிலுள்ள முத்தழகை லாரி ஓட்டுநர்கள் கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு வரும் பருத்தி வீரனிடம் இதுவரையிலும் அவன் செய்திருக்கும் பாவம்தான் தன் தலைமீது இறங்கியிருக்கிறது என்று கதறும் முத்தழகு, இந்த அசிங்கம் ஊருக்குத் தெரியாதவாறு தன்னைக் காணாப்பொணமாக்குமாறு கேட்டுக் கொண்டு கண்ணை மூடுகிறாள். நிலைகுலைந்த பருத்திவீரனும் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி கவுரவத்தைக் காப்பாற்றுகிறான். தன்னையும் பலி கொடுக்கிறான்.


சென்டிமென்டால் போட்டுத் தாக்கும் இயக்குநரின் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சினை வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. ஜாலியான ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை. சித்தப்பா செவ்வாழையுடன் பருத்திவீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாகக் கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள், அந்தக் கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள். காட்சிக்கு ஒரு நகைச்சுவை என்று செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவில் கலகலப்பாகச் செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொதுப்புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது.


விபச்சாரி ஒருத்தியை அழைத்துவரும் லாரி ஓட்டுநர்களைக் கத்தியால் மிரட்டிவிட்டு அவளுடன் உறவு கொள்கிறான் பருத்தி வீரன். வெளியே காத்திருக்கும் ஓட்டுநர்கள் ""அண்ணே காசு குடுத்து கூட்டியாந்துட்டம்ணே, நாங்களும் கொஞ்சம் தொட்டுப் பாத்துக்கிறம்ணே, நீங்களும் யாரையாவது கூட்டிட்டு வந்தீகன்னா ஒன்னா புழங்கிக்கலாம்ணே'' என்கிறார்கள். இந்த வக்கிரத்தின் மீது அருவெறுப்பு கொள்ளுவதற்குப் பதில் இரசிகர்கள் பருத்தி வீரனோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். ஒருவேளை அந்தப் புழக்கத்தில் அவர்களும் பங்கு கொள்ள விரும்பியிருக்கலாம். இந்தப் புழக்கத்திற்கு சித்தப்பா செவ்வாழை மட்டும் கவனமாகத் தவிர்க்கப்படுகிறார். சித்தப்பனும் மகனும் மற்ற எல்லா விசயங்களிலும் ஒன்றாக சுற்றினாலும், ஒரே விபச்சாரியிடம் உறவு கொள்ளும் "புரட்சியை' ஏற்குமளவுக்கு இரசிகர்கள் தயாராகவில்லை என்பதால் இயக்குநர் அதைத் தவிர்த்துவிட்டார் போலும்.


ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை இரக்கமின்றி பருத்தி வீரன் மோசடி செய்வதாக இரசிகர்கள் உணருவதில்லை. கவுண்டமணி பாணியிலான இந்தக் காமெடி பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் அரட்டி, மிரட்டி, ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். படத்தில் இரசிக்கிறார்கள். யதார்த்தத்திற்காகப் போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இதுதான்.


தன்னை சிறுவயதில் காப்பாற்றியவன் என்பதால் முத்தழகு வளர்ந்து ஆளானபிறகும், ஜாலியான பொறுக்கியாக வாழும் பருத்தி வீரனை துரத்தித் துரத்தி வம்படியாகக் காதலிக்கிறாள். ஆரம்பத்தில் பிகு செய்யும் பருத்தி வீரனும் பிறகு காதலிக்கிறான். நெஞ்சில் பச்சை குத்திக் கொள்கிறான். சாதியில் தந்தை வழியில் சேர்வையையும், தாய் வழியில் குறத்தியையும் கொண்டு கீழ்ச் சாதியில் பிறந்திருப்பதால் கதாநாயகியின் தந்தையும் பருத்தி வீரனின் மாமனுமான கழுவச்சேர்வை மகளின் காதலை வன்மம் கொண்டு எதிர்க்கிறார். அதனால் பருத்தி வீரனை கொலை செய்யவும் ஏற்பாடு செய்கிறார். இந்த முட்டாள்தனமான காதலும், எதிர்ப்பும் பல சினிமாக்களில் உருட்டப்படும் வழக்கமான சங்கதிதான்.


இப்படி எல்லாச் சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்தி வீரன். என்ன, இந்த மசாலாவில் வானுயர்ந்த கட்டிடங்கள், வழுக்கும் சாலைகள், கர்ணமடிக்கும் கார்கள், நூறு பேருடன் ஆடப்படும் குத்தாட்டம், வெளிநாட்டில் பாடப்படும் காதல் முதலான நகரத்து நெடி இல்லை. நகரத்து மசாலாவையே பார்த்துச் சலித்திருந்த கண்களுக்கு இந்தப் படம் சற்று நெகிழ்வைத் தருகிறது. ஆனாலும் இதுவும் ஒரு கிராமத்து மசாலா என்பதுதான் முக்கியம். ஆனால் சிறியபெரிய பத்திரிக்கை அறிவாளிகள்தான் இந்தப் படம் தமிழ் கிராம வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிப்பதாகக் கொண்டாடுகிறார்கள்.


இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி, உடலசைவு, காட்சிக்களன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், கதை சித்தரிக்கும் வாழ்வில் உண்மையான கிராமம் இல்லை. உண்மையான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்திப் பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி தாதா ராச்சியம் செய்கிறாள். தொழிலில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தனியாளாய் நின்று கொலையும் செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேல்சாதியினரால் நிறுத்தப்பட்டு வெற்றியடையும் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் அற்ப விசயங்களுக்காகக் கொலை செய்யப்படும் நாட்டில் இப்படி ஒரு சினிமாக் கற்பனை.


சாதியில் கீழான பருத்திவீரனைக் காதலிக்கும் முத்தழகு அதை இரகசியம் காக்காமல் ஊரறிய, பெற்றோரறிய செய்கிறாள், சண்டை போடுகிறாள். வம்படியாகப் பேசும் கிராமத்து மேல்சாதிப் பெண்களைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்கள்கூட, கீழ்ச்சாதியென்ன, சமமான மற்ற சாதி ஆண்களைக் காதலிப்பதாக இருந்தால் கூட அதை ஊரறியச் செய்ய முடியாது. கலப்புமணம் புரிவதால் கட்டியெரிக்கப்படும் மண்ணில் அதைப் பயந்து பயந்து யாருமறியாமல்தான் செய்ய முடியும்.

ஆக, படத்தில் ஆதிக்க சாதி, அடக்கப்படும் சாதி குறித்த பிரச்சினைகளை நுனிப்புல் அளவுக்குக் கூட பேசாமல் தப்பித்துக் கொள்கிறார் இயக்குநர். அன்றாடம் சாதிவெறிச் சருகில் காய்ந்து கொண்டிருக்கும் உண்மையான கிராமம் இங்கே இருட்டடிப்பு செய்யப்படுகிறது. எடுத்ததற்கெல்லாம் கத்தியைத் தூக்கும் பருத்தி வீரனின் காதில் அவன் சாதியை இழித்துரைக்கும் அத்தி பூத்தாற் போன்ற ஒரு சில வார்த்தைகள் தவறியும் கூட விழுவதில்லை. நிஜத்தில் இறங்கத் துணிவற்ற இயக்குநரின் தந்திரமிது. ஆயினும் இதே தந்திரம்தான் பருத்தி வீரனது வீரத்தை வெள்ளித் திரையில் கொண்டுவர அவனது கண்களை உருட்டுவதற்கும், தலையை ஆட்டுவதற்கும் துள்ளித் துள்ளி நடப்பதற்கும் சிரமப்பட்டிருக்கிறது. உயிரற்ற உடலுக்கு அலங்கார ஆலாபனைகள்!


படத்தில் சேர்வைக்காரர்களாக தெளிவாக அடையாளம் காட்டப்படும் பாத்திரங்கள் தேவர் சாதிப் பெருமையினை, வீரத்தை, ஆணவத்தை பிறவிக் கடன் போலப் பேசுகிறார்கள். அதன் உண்மை நிலை பற்றியோ, மறுக்கும் வாதப்பிரதிவாதங்களோ, காட்சிகளோ கதையில் இல்லை. அவர்களது சித்தரிப்பில் ஒருவகை அப்பாவித்தனம் இருப்பதுபோல் கவனமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அதனால்தான் அண்டிப்பிழைத்து வாழும் பிணந்தின்னி, பருத்திவீரனைக் கொன்று விட்டு, மூன்று மாதம் சிறையில் இருந்து வெளிவந்தபின் முத்தழகை தனக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கழுவச் சேர்வையிடம் பேரம் பேசும் இளைஞன் முதலான பாத்திரங்கள் தேவர் சாதிப் பெருமையின் பிழைப்புவாதத்தை உணர்த்துவதாகப் பார்வையாளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.


மேலும் இந்த அப்பாவித்தனமான சாதிப் பிதற்றல்களுக்குப் பதிலாக நல்ல தேவர்சாதிப் பண்பினை எடுத்துக் கூறும் வசனமும் படத்தில் உண்டு. குறத்தியுடனான சகவாசத்தை விட்டுவிட்டு நம் சாதிக்காரர்களோடு சாராயம் காய்ச்சிப் பிழைக்கலாமே என்று கேட்கும் மச்சான் கழுவச் சேர்வைக்கு பதிலளிக்கும் பருத்தி வீரனின் தந்தை காட்டிக் குடுப்பதும், கூட்டிக் கொடுப்பதும் தேவர்சாதிப் பண்பல்ல என்று மீசையை முறுக்குகிறார். குறத்தி கொல்லப்பட்டவுடன் குறத்தியின் மகளை திருமணம் செய்து கொண்டு அதை அசிங்கம் என்று பேசும் உறவினர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ்கிறார். நல்ல தேவர் சாதிப் பெருமைக்கு ஒரு முன்னுதாரணம்!


இதன்மூலம் வரம்புமீறும் தேவர்சாதிப் பெருமையை சமநிலைப்படுத்துகிறாராம் இயக்குநர். அது என்ன தேவர்சாதிப் பெருமையில் நல்லது, கெட்டது? பார்ப்பனர்களில் நல்ல பார்ப்பனர்களை பல தமிழ்ச் சினிமாக்கள் சித்தரித்திருப்பது போலத்தான் இதுவும். பாம்பில் ஏது நல்லது கெட்டது? கீழ்ச்சாதிகளை அடக்கி ஒடுக்க நினைக்கும் மனப்பான்மையிலிருந்தே தேவர்சாதியின் பெருமையும், ஆணவமும், வீரமும் புடைத்து நிற்கிறது. இவை தவிர அதன் இருப்புக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போல பட்டையும் பாகவதர் முடியும், வீரமும், மனிதாபிமானமும் கொண்டு தேவர் சாதியினர் வாழவேண்டும் என்று ஒரு புத்திமதிக் கருத்து நிலவுகிறது. ஆனால் பசும்பொன் தேவரின் யோக்கியதை இம்மானுவேல் கொலையிலும், முதுகுளத்தூர் கலவரத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் தேவரது படம் எல்லா தேவரின மக்கள் மத்தியிலும் கடவுளைப் போல வணங்கப்படுகிறது அவரது குருபூஜைக்கு ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் போட்டி போடுகின்றன. இந்தப் போற்றிப்பாடுதலை அம்பலப்படுத்துவதற்கு எந்த இயக்குநருக்காவது துணிச்சல் உள்ளதா?


மாறாக, தேவர்மகன் தொடங்கி வைத்த தேவர்சாதிப் பெருமையை தென்தமிழ்நாட்டின் மண்வாசனையை வெளிப்படுத்துவதாக வெளிவந்த எல்லாப் படங்களிலும் அட்சத்திர சுத்தமாகக் காட்டுகிறார்கள். ஏதோ பிறக்கும்போதே அரிவாளுடன் பிறந்தது போலவும் சில்லறைப் பிரச்சினைகளுக்குக் கூட வெட்டுக்கத்தியை வீசுவது போலவும் பிறகு இந்த வீரத்தை துறந்துவிட்டு அமைதியாக வாழவேண்டும் எனவும் போதிக்கிறார்கள். மறவர் குலத்தின் வீரம் குறித்த இந்தச் சித்தரிப்பே எதார்த்தத்திற்குப் புறம்பானது.


சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், கோழைத்தனம் ஆகியவற்றில் தேவர் சாதி பெருமை பேசும் பிரமுகர்கள் முன்னணியிலிருக்கின்றனர். இதை நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. பாசிச ஜெயா, சசிகலா, தினகரன், மகாதேவன் எனும் மன்னார்குடி கும்பலின் பாதங்களில் விழுந்து அடிமைத்தனச் சேவகம் புரிகிறது இன்றைய தேவர் சாதிப் பெருமை. இதில் அ.தி.மு.க. தேவர்சாதிக் கட்சி என்ற பெருமை வேறு. ஆண்டாண்டு காலம் கிடா வெட்டி சாமி கும்பிட்டு வந்த இந்த சாதி வீரர்கள், கிடாவெட்ட தடைச்சட்டம் வந்தபோது அதை மீறி ஒரு கோழிக் குஞ்சைக் கூட அறுக்கத் துணியவில்லை. அரிவாளுடன் பிறந்த தேவர் சாதி வீரத்தின் நிஜம் இதுதான்.

கிராமப்புற மக்களிடத்தில் அரிவாள் தூக்கியதால் பலநூறுபேர் சிறையில் இருப்பது உண்மைதான். ஆயினும் இவர்கள் தொழில் முறைச் சண்டியர்கள் இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் ஆத்திரத்தில் அறிவிழந்து, உணர்ச்சிவசப்பட்டு, சாதிவெறிக்காகவோ, சொத்துப் பிரச்சினைக்காகவோ, காதல் கள்ள உறவு காரணமாகவோ கணநேரத்தில் தவறிழைத்தவர்கள். இதன் விழுமியங்கள் குறித்த குழப்பம் நிலவுடைமைச் சமூகம் எனும் பாரிய நோயில் உள்ளது. இந்தத் தனிநபர் விபத்துக்களுக்கு சாதிப் பெருமையோ, குலப் பெருமையோ காரணமல்ல.


ஆனால் சண்டியர்களின் கதை வேறு. வேலைவெட்டிக்குப் போகாமல் பெண்களின் காசில் குடித்துவிட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள்தான் பருத்தி வீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாய்க் காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசனைதான் நமக்கு நெருடலைத் தருகிறது.


ஒரு கிராமத்து ரவுடியின் வாழ்க்கையில் இத்தனைக் கொண்டாட்டங்களா என்று வியந்து பாராட்டுகிறார் சிறு பத்திரிக்கை அறிவாளி சாரு நிவேதிதா. ஏய் என்று கூப்பிட்டாலோ, சிறிய கம்பொன்றைத் தூக்கினாலோ ஓடிவிடக் கூடிய இவர் போன்ற பேடிகள் ரவுடி வாழ்வை இரசிக்கிறார்களாம்! அற்பவாத உணர்ச்சியில் திளைப்பதை நியாயப்படுத்துவதற்காக அறிவின் பெயரால் வேடமிடும் சாருநிவேதிதாவை விட வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு விசிலடிக்கும் ரஜினி இரசிகர்கள் மேலானவர்கள்.


பருத்தி வீரன் போன்ற சில்லறை ரவுடிகள் பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடிச் சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு கலகலப்பான சுயேச்சையான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்தி வீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பளப்பதற்கு அவனுக்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்குச் செல்லுமளவுக்கு பெரிய ரவுடியாக மாறியிருந்தால் அவன் வாழ்க்கையில் ஆட்டமும் பாட்டமும் முடிவுக்கு வந்திருக்கும். போலீசு போடுமா, எதிரி போடுவானா என்று பீதியிலும் அச்சத்திலும் வாழவேண்டியிருக்கும்.


கட்டப்பஞ்சாயத்து, மாமூல், ரியல் எஸ்டேட், கூலிப்படை என்று தொழில் விரிவடைவதற்கேற்ப பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. எங்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் எந்நேரமும் அடியாட்களின் பாதுகாப்பில் வாழும் கோழையாகி விடுவான் அவன். பாசிஸ்டுகள் மட்டுமல்ல, ரவுடிகளும் அடிப்படையில் கோழைகள்தான். சாதிச் செல்வாக்கு, அரசியல் கட்சிகளின் அரவணைப்பு, போலீசுடன் கூட்டு என்ற பாதுகாப்பில்தான் அவர்கள் வீரம் எழும். ஆனால் ரவுடிகளெல்லாம் எதற்கும் அஞ்சாத மாவீரர்கள் போன்று தமிழ்ச் சினிமாக்கள் சித்தரிக்கும் கொடுமை எப்போது முடியுமோ தெரியவில்லை.

உண்மையில் கிராமங்களின் வாழ்க்கையிலும், ரவுடிகளின் இயக்கத்திலும் இந்தக் கலகலப்பும், நகைச்சுவையும், சுறுசுறுப்பும் இல்லை. பல நூற்றாண்டுகளாய் தனக்குத்தானே சங்கிலியில் கட்டிக் கொண்டு மூடுண்ட கிராமங்கள் காலனிய ஆட்சிக்குப் பிறகு பல காரணங்களால் வெளியுலகத்தைத் தேடிச் சென்றன. விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படும் இன்றைய உலகமயமாக்கச் சூழலிலோ கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.


இராமநாதபுரத்தின் யதார்த்தம் மும்பை தாராவிக் குடிசைப் பகுதியில் சிறைப்பட்டிருக்கிறது. மதுரை, தேனி மாவட்டங்களின் யதார்த்தம் திருப்பூரின் பொந்துகளில் எந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டங்களின் யதார்த்தம் கேரளாவிற்கு கம்பி கட்டும் வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. தருமபுரி, கிருஷ்ணிகிரி மாவட்டங்களின் யதார்த்தம் பெங்களூரில் கட்டிடம் கட்டவும் தள்ளுவண்டியில் பிழைக்கவும் அலைந்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களின் யதார்த்தம் ஒவ்வொரு நாளும் சென்னை நகரில் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு முதியவர்களும், வாழவழியற்ற பெண்களும்தான் வேறு வழியின்றி கிராமங்களில் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாய வேலைகள் இல்லாத காலங்களில் கிராமங்கள் பாலைவனம் போல வெறிச்சோடித்தான் கிடக்கின்றன. சாகடிக்கப்பட்டு வரும் இந்தக் கிராமங்களில் சோர்வும், சலிப்பும், விரக்தியும், அவலமும், வெற்று அரட்டையும்தான் இருக்கின்றன.


அவ்வகையில், பருத்தி வீரன் கிராமங்களைக் கேலி செய்கிறது. எந்த உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து நகரம் நோக்கித் துரத்தப்பட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்களோ அவர்களும் தாங்கள் இழிவுபடுத்தப்படுவது அறியாமல் இந்தத் திரைப்படத்தை இரசிக்கிறார்கள். இந்தப் பொறுக்கி வீரன் தங்களைக் கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி ரசிகர்கள் வரை யாருமே உணர்வதில்லை.


ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிலாளியாகவோதான் இருக்க வேண்டும் என்றில்லை. அவன் ஒரு நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ இருக்கலாம். ஒரு சொறிநாயாகக் கூட இருக்கலாம். அவனுடைய வாழ்க்கையை இயக்குநர் எப்படிப் பார்க்கிறார், எப்படிப் பார்ப்பதற்கு ரசிகனைப் பழக்குகிறார் என்பதுதான் பிரச்சினை. ஒரு சொறிநாயின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.




· வேல்ராசன்

No comments: