மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்
பி.இரயாகரன்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், சமூகப் பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசாரா நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகாராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமணமாகாத கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வௌ;வேறு நாடுகளில் வாழ்வது, நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது. ஒழுக்கம் மீதான பரஸ்பர சந்தேகங்கள் மன உளைச்சலையும், உளவியல் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துகள் பெருக்கெடுக்கின்றது. உழைப்பைப் பகிர்வதில் ஏற்படும் முரண்பாடுகள் சமூக உறவாக்கத்தையே பிளக்கின்றது. குழந்தைகள் தாய் இன்றி வாழ்வதன் மூலம், வக்கிரமடைந்து வருகின்றனர். குழந்தைகள் மேலான பாலியல் ரீதியான வக்கிரங்கள் தலைவிரித்தாடுகின்றது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றது. குழந்தைகள் மேலான பாலியல் வன்முறை தேசிய பண்பாகின்றது. குற்றங்களின் தன்மை வக்கிரமடைகின்றது. தற்கொலைகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்து, ஆசியாவிலேயே முதன்மை நாடாகியுள்ளது. இவற்றை தனித்தனியாக விரிவாகக் கீழே பார்ப்போம்.
வெளிநாட்டை நோக்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும், பாலியல் ரீதியான பாதுகாப்பற்ற ஒரு நிலையில் தள்ளப்படுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா நோக்கி தமிழ் ஏஜென்சி மூலம் வரும் ஒவ்வொரு பெண்ணின் தலைவிதியும் கூட. தனிப்பட்ட ஆண்கள் திட்டமிட்டு உருவாக்கும் நான்கு சுவர்களைக் கொண்ட சமூகச் சிறைக்குள், பாலியல் மிருகங்களின் வன்முறைக்கு உட்படுகின்றனர். சிலர் தவிர்க்க முடியாத வகையில் இணங்கிப் போகின்றனர். எதிர்த்தால் மரணம் அவர்களின் தலைவிதியாகின்றது. இறந்த பெண்களின் பிரதேசங்களை விமானம் மூலம் ஏற்றி இறக்கப்படுவது அதிகரிக்கின்றது. வீட்டு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களின் கதி இது. இந்த வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்;ற பெண்களில், 91 சதவீதம் பேர் வீட்டு வேலைக்கே இலங்கை அரசால் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். 2000 முதல் 2003 ஐப்பசி வரை வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவர்களின்; 400 இறந்த உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. பெரும்பாலாவை பெண்களின் சடலங்களாக இருந்தது.
மத்திய கிழக்கில் 37 இலங்கையரின் பிரேதங்கள் 2003 ஜூலை மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்தது. இந்த 37 பேரில் 22 பேர் பெண்களாவர். இந்தப் பெண்கள் அனைவரும் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களாவர். இறந்த இந்த 37 பேரில் 16 பேர் சவூதி அரேபியாவில் இருந்து சடலமாக மீள அனுப்பப்பட்டவர்கள். 9 பேர் உடல் லெபனான் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. இவற்றைவிட ஹெங்ஹொங்கில் கொலை செய்யப்பட்ட ஒரு பணிப்பெண்ணின் சடலமும், தற்கொலை செய்துகொண்ட மூன்று பணிப்பெண்களின் சடலமும், திடீர் விபத்துக்களில் இறந்த 8 பேரின் சடலமும் தேசிய சொத்தாக மீண்டன.
சடலங்களை பெறுவது, அதை எற்றி இறக்குவதும், சடலங்கள் அனாதையாகாது உறுதி செய்வதும் தமது தேசியக் கடமையாக பீற்றி, அவர்கள் மேல் அக்கறை உள்ளதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. ஆனால் சொந்த நாட்டில் சொந்த மக்கள்; உழைக்கவும் வாழவும் வழிகாட்டவும் வக்கற்றவர்கள், அன்னிய நாட்டில் தொழில் புரிவோரின் தொழில் பாதுகாப்பு உட்பட மனித உரிமையை பாதுகாக்க வக்கற்றவர்களின் அரசை தெரிவு செய்வதையே, நாம் ஜனநாயகம் என்று பீற்றுவது இன்றைய சமூக அறிவாகிப் போன உலகத்தில் நாம் மந்தைகளாக வாழ்கின்றோம் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.
12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தொழில் புரிகின்றனர். இதில் 65 சதவீதம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை செய்கின்றனர். 2002 இல் வீட்டுப் பணிப் பெண்கள் இலங்கை அரசாங்கத்திடம் தமது நிலை தொடர்பாக 7103 முறைபாடுகள் செய்துள்ளனர். இலங்கை அரசிடம் செய்த முறைப்பாடுகளே இவ்வளவு என்றால், குற்றத்தின் அளவு பல மடங்காகும். இதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம். 2000 ஆண்டு முதல் ஆறு மாதத்தில் நாடு திரும்பிய பெண்களில் 240 பேர் பாலியல் வன்முறை தொடர்பாக, கொழும்பு விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இந்த முறையீடுகள் 2002 இல் முதல்; ஆறு மாதத்தில் 70 சதவீதத்தில் அதிகரித்தது. இவை சமூக ஆணாதிக்க ஒழுக்கப் பண்பாட்டுக் கோவைகளை மீறி முறையிடப்பட்டவை. உண்மையில் குற்றம் பல மடங்காக இருப்பதை நாம் காணவேண்டும். இதற்கு வெளியில் மனித அவலங்கள் பன்மைத் தன்மை வாய்ந்தவை. 2002-இல் 1704 முறைப்பாடுகள் சம்பளம் தரப்படாமை பற்றி முறையிட்டுள்ளனர். இது 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அலைக்கழிய வைத்து தொல்லை கொடுத்த முறைபாடு 2002-இல் 1041 கிடைத்துள்ளது. இவை அனைத்தும் நாடு திரும்பும் போது, பல தடைகளைத் தாண்டி கொழும்பு விமான நிலையத்தில் முறையிடப்பட்டவை மட்டுமே இவை. 2002-இல் 44 கற்பழிப்பு பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். 2002-இல் 20 பேர் தந்தைகளற்ற குழந்தைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். இது 2002-இல் முதல் ஆறு மாதத்தில் 157 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
2002 இல் கிடைக்கப் பெற்ற 7103 முறைபாட்டில் 3191 முறைபாடுகள் சவுதியில் சென்று திரும்பியோர் செய்துள்ளனர். இதைவிட குவைத்தில் தொழில் புரிந்தோர் 1041யும், லெபனானில் தொழில் புரிந்தோர் 800யும், அரபு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் புரிந்தோர் 497யும், Nஐhர்டனில் தொழில் புரிந்தோர் 467 முறைபாடுகளையும் செய்திருந்தனர். இதைவிட பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அண்ணளவாக 1300 பெண்கள் 2003 முதல் 6 மாத கால எல்லைக்குள் திரும்பி வந்தாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வகையில் குவைத் நாட்டிலிருந்து 503 பேரும், சவூதி அரேபியாவிலி ருந்து 406 பேரும் திரும்பி வந்தனர்.
குற்றங்கள், மனித அவலங்கள், பிரேதங்களையும் இறக்குமதியாக்கும் அரசு, தொடர்ந்து மனித உழைப்பை ஏற்றுமதியாக்குவதில் பின் நிற்கவில்லை.
இதை மூடிமறைக்க முறைப்பாட்டு மையங்கள், உதவித் திட்டங்கள், தீர்வற்ற விசாரணைகள், காப்புறுதித் திட்டங்கள், பயிற்சிகள் என்று தன்னை அலங்கரிக்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2002-இல் பணிப் பெண்களுக்கான பயிற்சி என்ற பெயரில், 29761 பேருக்கு உழைப்பை எப்படி முகம் சுளிக்காது குண்டி கழுவி சம்பாதிப்பது என்ற பயிற்சியை அளித்துள்ளது. 2002 முதல் ஆறு மாதத்தில் இது 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த மனித ஏற்றுமதியில் 571 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்கள் செயல்படுகின்றனர். இந்த மனித விரோதத் தொழிலைச் செய்ய, 2002-இல் புதிதாக 50 நிறுவனங்கள் இதற்கான அனுமதியைக் கோரியது.
மறு தளத்தில் அரசு மனித ஏற்றுமதியைச் செய்யப் புதிதாகக் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்று, 191581 பேருக்கான ஏற்றுமதியை உறுதி செய்துள்ளது. இதைவிட மலேசிய அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தம் ஒன்று, வருடம் 20000 கூலித் தொழிலார்களை ஏற்றுமதி செய்யக் கோருகின்றது. இதில் சிறந்த பயிற்சி பெற்ற தோட்ட தொழிலாளர்கள் முதன்மையாக அனுப்பப்பட உள்ளனர். அத்துடன் தற்பொழுது மலேஸியாவில் தொழில் புரியும் பத்தாயிரம் பேரின் சட்டவிரோதத் தன்மை அகற்ற ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.
மனிதனை ஏற்றுமதி செய்வதே தேசியக் கடமை என்று கொக்கரிக்கும் அரசின் சட்டபூர்வமான ஜனநாயக பூர்வமான சமூக அமைப்பில், இதை நாம் அங்கீகரிப்பது எமது சுதந்திரம் என்றால், எமது உணர்வு மனித விரோத வக்கிரமானதே. இந்த மனித ஏற்றுமதியை ஊக்குவிக்கும் போது, அதன் மனித விரோத சமூகக் கட்டமைப்பு நிறுவனமயமாகும் போது, கொழுத்த பணத் திரட்சியே இதன் அடிப்படையாக உள்ளது.
1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணிப் பெண்கள் மற்றும் அரபு நாட்டில் தொழில்; செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை இலங்கைக்காக உழைத்துத் திரட்டினர். இதில் 1998 இல் 7900 கோடி ரூபா திரட்டிய மனித உழைப்பு, 2002 இல் 12000 கோடியாக அதிகரித்தது. 10 லட்சம் உடல் உழைப்பாளிகளின்; அவலமான உழைப்பைச் சூறையாடிய போது இது கிடைத்துள்ளது. இதில் 4000 கோடி ரூபாவை இலங்கை வங்கிகளில் போட்டனர். மிகுதியில் பெரும் பகுதியை உலகெங்கும் கடைவிரித்துள்ள பன்னாட்டு ஆடம்பர நுகர்வுச் சந்தையில் தொலைத்தனர். மறுபுறத்தில் சேமிப்பை உலக வங்கியும், பெரும் முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் அவற்றை அபகரிப்பதுடன், பணவீக்கம் மூலம் அவற்றைப் பெறுமதி அற்றதாக்கி செல்லாக் காசாக்கின்றனர். மனித ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பணத்தைக் கூட தேசிய உற்பத்தியில் முதலிடவில்லை. அவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சென்று அடைவதை அரசு உறுதி செய்கின்றது. தேசிய சமூகங்களின் மனித அவலங்கள் மூலதனமாகத் திரட்டப்படுகின்றது. தேசிய பாடசாலைகள் மூடப்படுகின்றன. மக்களை குடிகாரர்களாக்கி, பிரச்சனைகளை அதற்குள் முடிவுகட்ட மதுவிற்பனை நிலையங்களைத் திட்டமிட்டு அரசுத் திறக்கின்றது.
தமிழ் அரங்கம்
Tuesday, June 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment