கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்
கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு, தன் சட்டமன்ற வாழ்வுக்குப் பொன்விழாக் கொண்டாடும் வேளையில் அரசியலில் அவர் வளர்த்தகடாவே மார்பில் முட்டிவிட்டது. கருணாநிதி தனது எழுபதாண்டு அரசியல் வாழ்வில் நடிக்காத ஒரு சில தருணங்களில் ஒன்று அவரது மருமகனும் அரசியல் சகுனியுமான முரசொலி மாறன் இறந்தபோது இடிந்து போய் கதறி அழுததாகும். முரசொலி மாறனின் இழப்புக்கு ஈடுகட்டுவதற்காக தனக்கு நெருக்கமான, விசுவாசமான, ஆங்கிலம்இந்திப் புலமையுள்ள, உலகமயமாக்கச் சூழலுக்கேற்ற கல்வியும் பயிற்சியும் பெற்ற அரசியல்தொழில் தரகனாக தயாநிதி மாறனைத் தெரிவு செய்தார் கருணாநிதி.
கருணாநிதியின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமர் மன்மோகன், காங்கிரசுத் தலைவர் சோனியா முதல் பில்கேட்சு போன்ற பன்னாட்டுத் தொழில் கழகத் தலைவர் வரை பேரங்கள் நடத்தும் அதிகாரத்தைப் பெற்றார், தயாநிதி மாறன். செய்தி ஊடகத்தில் மாறன் சகோதரர்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிகரமான, திறமையான மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்ற கருத்தை உருவாக்கினார். உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் வரைவுத் திட்டப்படி நீட்டிய கோப்பில் கையொப்பமிடுவதோடு, தனது குடும்பத் தொழில் குழுமத்துக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் போடுவதும் சாதனையாகச் சித்தரிக்கப்பட்டன. இருபது தொலைகாட்சி அலைவரிசைகள், ஏழு பண்பலை வானொலி அலைவரிசைகள், மூன்று நாளிதழ்கள், மூன்று பருவ இதழ்கள் ஆகியவற்றோடு தென்னக செய்தி ஊடகத் துறையில் ஏகபோக நிலையை அடைந்த மாறன் சகோதரர்கள், தகவல் தொழில் நுட்ப சாதன உற்பத்தி மற்றும் விமான சேவை என்று தமது தொழிலை விரிவுபடுத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டிலேயே 13வது பணக்கார நிறுவனமாக சன் குழுமம் வளர்ச்சியுற்றது. மேலிருந்து கட்சிக்குள்ளும் அரசியலிலும் திணிக்கப்பட்டதால் தயார் நிலையில் கிடைத்த ஆதிக்கத்தை உண்மையான செல்வாக்கென்று அவர்கள் நம்பிவிட்டனர். தயாநிதி மாறனின் அரசியல் ரீதியிலான திடீர் வளர்ச்சியும், கலாநிதி மாறனின் தொழில் ரீதியிலான அசுர வளர்ச்சியும் மாறன் சகோதரர்களிடையே அதிகார ஆசைகளைக் கிளப்பி விட்டன.முரசொலி மாறனைப் போல கருணாநிதியின் நிழலிலேயே, அவரது குடும்பத்துக்கு விசுவாசமாகவே எப்போதும் இருப்பதற்கு அவரது பிள்ளைகளான மாறன் சகோதரர்கள் விரும்பவில்லை. தி.மு.க.வின் தலைமையையும், மாநில அதிகார மையத்தையும் இலக்கு வைத்து மாறன் சகோதரர்கள் காய்களை நகர்த்தினர். இதுதான் தி.மு.கழகத்துக்குள்ளேயும், கருணாநிதிமாறன் குடும்பத்திற்கிடையேயும் புகைச்சல், மோதல், வாரிசுச் சண்டை என்று பல மாதங்கள் நீறுபூத்த நெருப்பாக நீடித்திருந்ததற்குக் காரணம். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் மு.க. ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியும், அரசு செலவில் சென்னை சங்கமம் நடத்தியதைச் சாதனையாகக் காட்டிக் கனிமொழிக்கு எம்.பி. பதவியளித்து அரசியலில் நுழைப்பதையும் கருணாநிதி திட்டமிடுவதை அறிந்த மாறன் சகோதரர்கள், அம்முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலையில் விரைந்தனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை மறைமுகமாக விமர்சனம் செய்து வருவதோடு, தாத்தாவான பிறகு கூட, இளைஞரணித் தலைவராக ஸ்டாலின் நீடிப்பதைக் குறிக்கும் வகையில் கிண்டலடித்தது மாறன் சகோதரர்களின் தினகரன். கனிமொழி தலைமையேற்று நடத்தும் ""கருத்து'' அமைப்பு மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை இருட்டடிப்புச் செய்தது, சன்தினகரன் செய்தி ஊடகம். ஆனால், கடந்த மாத ஆரம்பத்தில், கருணாநிதி கேட்டுக் கொண்டதையும் மீறி இரண்டு கருத்துக் கணிப்புகளை சன்தினகரன் குழுமம் வெளியிட்டது. இந்தக் கணிப்புகள் தயாநிதி மாறனைத் தமிழக அரசியலில் வளரும் மாற்றுத் தலைமையாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மதுரை மேயர், அவரது கணவன், மற்றும் முன்னாள் மேயர் தலைமையில் திரண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் தி.மு.க. ரௌடிகளால் தினகரன் நாளிதழ் எரிப்பு, நகரம் முழுவதும் பேருந்துகள் உடைப்பு, கல்லெறிதல், தினகரன்சன் குழும அலுவலகங்கள் சூறையாடப்படுதல், தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலித்தனங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும் ""வீடியோ'' காட்சிகளாகவும் ஆதாரம்சாட்சியமாகப் பதிவு செய்யப்படுவதைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் போலீசுப் பாதுகாப்பு உதவியுடன் உடந்தையுடன் மிகவும் நிதானமாகவும், அலட்சியமாகவும் இது ""நம்ம ஆட்சி, நம்ம போலீசு'' என்ற திமிரோடும் நடத்தப்பட்டுள்ளன.
தான் சொல்லியும் கேளாமல், தினகரன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டதுதான் வன்முறைக்கு காரணம் என்றும், ஆத்திரமுற்ற கழகத் தொண்டர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர் என்று அழகிரியின் ரௌடித்தனத்துக்கு நியாயம் கற்பித்துள்ளார், கருணாநிதி. அவரது பொறுப்பிலுள்ள போலீசு அழகிரிக்கு உடந்தையாகவும், அவரது ஆணையின் கீழ் செயலிழந்தும் போயுள்ளது அம்பலப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மகன் மு.க. அழகிரியைக் குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நோக்கத்தோடு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். தர்மபுரி மாணவிகள் எரிப்புக்கு இணையான மூன்று அப்பாவி ஊழியர்கள் படுகொலையின் சூத்திரதாரி மு.க.அழகிரிதான் என்று ஊரே, நாடே அறிந்திருந்தபோதும் அவர் கைது செய்யப்படவுமில்லை; அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட சேர்க்கப்படவில்லை; அழகிரியின் அல்லக்கைகள் சிலர் மட்டுமே பெயருக்குக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மு.க.அழகிரியின் செல்வாக்கை "இருட்டடிப்பு' செய்து பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிட்டதனால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டது இயல்பானதுதான்; அதனால் 3 ஊழியர்கள் இறக்க நேர்ந்தது ஒரு பிரச்சினையே இல்லை என்பது போலவும் கருணாநிதியின் தலைமை நடந்து கொள்கிறது. ""தி.மு.க.வின் கட்டமைப்பையே குலைத்துவிடும் முயற்சியில் மாறன் சகோதரர்கள் கடந்த சில மாதங்களாகவே இறங்கி வந்தார்கள்; ஆனாலும் கலைஞர் பொறுமை காத்தார். இப்போது தலைவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்து விட்டார், கட்சிக்குக் களங்கம் விளைவித்து விட்டார்'' என்று குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் பதவியைப் பறித்ததோடு, கழகத்தில் இருந்தும் தயாநிதி மாறன் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் அகராதியில் ஒரே பொருள் தான் இருக்கிறது. கருணாநிதியின் பிள்ளைகளிடையே ""குழப்பத்தை விதைத்து, மோதலை உருவாக்கி, கழகத் தலைமையைக் கைப்பற்ற சதி செய்தார்'' என்பதுதான் அது. ஆனால், கருணாநிதியோ, கட்சியைக் குடும்பத்தின் சொத்தாகவும், அரசு அதிகாரத்தை குடும்பத்துக்கான சொத்துச் சேர்க்கும் கருவியாகவும் கருதி, அதன் கட்டுக்கோப்புக் கலையாமல் மகன்களுக்கும், மகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பதவி வழங்குபவர்; தனது குடும்ப வாரிசுகளுக்கிடையே சுமுகமான பஞ்சாயத்து செய்து சொத்துக்களையும், பதவிகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதற்குத் திட்டமிட்டு வாரிசு அரசியலின் ஆபாசங்கள் அனைத்தையும் உருவாக்கி வளர்ப்பவர்.
குடும்பச் சொத்தும் அதிகாரமும்தான் குறிக்கோள் என்றான பிறகு குடும்பத்துக்குள் குத்து வெட்டு நடப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. குடும்பத்துக்குள் குடுமிப்பிடிச் சண்டை வந்துவிட்ட காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதராகக் கருணாநிதியைக் கருதுவது முட்டாள்தனம். பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தையும் அரசு அதிகாரம் அளிக்கும் ஆதாயங்களையும் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழாமல், தனது அரசியல்வாரிசுகள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்பதும், சட்ட விரோத மாற்று அதிகார மையமாகிவிட்ட அழகிரி கும்பலால் தனது வாரிசு அரசியலுக்குக் களங்கம் ஏற்படுகிறதே என்பதும்தான் கருணாநிதியின் ""துயரம்''.
""அண்ணன் அழகிரியின் ரவுடித்தனங்களையும், கட்டைப் பஞ்சாயத்துக்களையும் எதிர்த்துக் கொண்டு மதுரையிலும், தென்மாவட்டங்களிலும் யாரும் உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட கொலைகளுக்கு போலீசும் துணை நிற்கும்'' என்பதுதான் இந்தச் சம்பவத்திலிருந்து வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் இடையிலான அதிகார அரசியல் சண்டை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அதற்காக பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை ரௌடித்தனங்களை நடத்துவதும் அப்பாவி ஊழியர்களைப் படுகொலை செய்வதையும் யார்தான் சகித்துக் கொள்ள முடியும்?
தி.மு.க.வின் மாவட்ட செயலர் த.கிருட்டிணன் கொலை விவகாரத்தில் அழகிரிக்கு கருணாநிதி வக்காலத்து வாங்கினார்; தானே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, இதே வகையான ரவுடித்தனங்களை அவரது கும்பல் அரங்கேற்றியபோதும் பிள்ளை பாசம் கருணாநிதியின் கண்களை மறைத்தது. தென் மாவட்டங்களில் மதுரை முத்துவுக்குப் பிறகு தேர்தலில் ஜெயிப்பதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளுக்காகவே கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுபவர்தான் மு.க.அழகிரி. ஆனால், கருணாநிதியின் வாரிசு குடும்ப அரசியலையும் கிரிமினல் அரசியலையும் மறைத்துவிட்டு, ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் வகையில் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கும் "தோழமை'க் கட்சிகளோ, பெயர் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிநியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோருகின்றன. தாமே குடும்பவாரிசு அரசியலை ஊட்டி வளர்க்கும் வைகோவும், சசிகலா கும்பல் வடிவில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு அதிகார மையத்தை உருவாக்கிப் பராமரிக்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் வாரிசுகுடும்ப அரசியல் பற்றிக் கூச்சல் போடுவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது.
தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் மறுகாலனியாக்க அரசியல் குறித்து கவனம் செலுத்தாமல், யாருக்கு இளவரசுப் பட்டம் என்ற அரண்மனைக் குத்து வெட்டை அரசியலாகக் கருதிப் பேசிக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும் ஊடகங்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. இது ஒரு புதிய சுவாரசியமான தொலைக்காட்சி சீரியல் போல மக்களை ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பிழைப்புவாத அரசியல், வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல், கோஷ்டி அரசியல் போன்ற நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளின் வெளிப்பாடுதான் கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் சகோதரர்களுக்கிடையிலான மோதலாக வெடித்திருக்கிறது.
தமிழ் அரங்கம்
Wednesday, June 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment