மே நாள் முற்றுகை!
ரிலையன்ஸே வெளியேறு!!
மே நாள். ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கனிச் சந்தையான சென்னை கோயம்பேடு வணிக வளாகம். பச்சைப் பசேலென்ற காய் களைத் தம் முதுகில் சுமந்தபடி அந்த மாபெரும் வணிக வளாகத்தின் உயிர்த் துடிப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் தொழிலாளிகள். அவர்களுடைய உரிமைக் குரலாய் செங்கொடிகளையும் பதாகைகளையும் தமது தோளில் சுமந்த வண்ணம் அந்தச் சந்தை முழுவதும் பரவிக் கொண்டிருந்தார்கள் எமது தோழர்கள். பசுமையில் பதிந்த அந்தச் சிவப்புத் தீற்றல்களை, தீக்கொன்றை களாய்த் தீட்டிக் காட்டின விடியலின் இளங்கதிர்கள்.
""சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்பிடி! சூறையாடும் ரிலையன்ஸைத் துரத்தியடி!'' என்ற முழக் கத்தின் கீழ் ஒரு மாத காலமாக மேற் கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது மேநாள் பேரணி. முந்தைய நாளின் இரவு முதலே தமிழகத்தின் பல பகுதி களிலிருந்தும் கோயம்பேட்டில் வந்து குவியத் தொடங்கினார்கள் எமது தோழர்கள். இருள் பிரிந்து மேநாளாக விடியத் தொடங்கியபோது கோயம் பேடு முழுவதும் சிவந்திருந்தது.
காலை 10 மணி. பறை முழங்கத் தொடங்கியது.தொழிலாளர்களும், காய்கனி கொள்முதல் செய்ய வந்தி ருந்த வியாபாரிகளும் இருமருங்கிலும் நூற்றுக் கணக்கில் திரளத் தொடங்கினர் மேநாள் தியாகிகளுக்கும் நக்சல்பாரிப் போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் முழக்கங்களுடன் பேரணியைத் துவக்கி வைத் தார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். முகுந்தன்.
""கூடையில் சுமந்து காய்கனி விற்கும் சிறுவணிகர்களை ஆதரி! கோடிகோடியாய்க் கொள்ளை யடிக்கும் ரிலையன்ஸைத் துரத்தி யடி!'' ""ஓட்டுக்கட்சிகள் எல்லோ ரும் ரிலையன்ஸோடு கூட்டணி! சிறுவணிகத்தைக் காப்பாற்ற நக்சல் பாரியே நம் அணி!''.. என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மறு காலனியாக்கக் கொள்கைகளுக்கும் எதிரான முழக்கங்கள் அந்த வணிக வளாகத்தின் நெடிய சுவர்களில் மோதி எதிரொலிக்க, பேரணி முன்னோக்கி நகர்ந்தது.
செஞ்சட்டை அணிந்த தோழர்கள், அவர்களுடைய உடலின் நீட்சியாய் கரங்களிலிருந்து உயர்ந்த செங்கொடி கள், ம.க.இ.க கலைக்குழுவின் பறை முழக்கம், ஒயிலாட்டம், போர்க்குணம் தெறிக்கும் சிலம்பாட்டம், விண்ணில் படபடத்த முழக்கங்கள் பொறிக்கப் பட்ட செம்பதாகைகள், பேரணியின் துவக்கம் முதல் இறுதி வரை தளராமல் ஒலித்த முழக்கங்கள், ஒரு கையில் தந்தையின் விரலையும் மறுகையில் முழக்க அட்டைகளையும் ஏந்தி நடந்த சிறுவர் சிறுமிகள், கைக்குழந்தைகளு டன் அணிவகுத்து வந்த தாய் மார்கள்.. உடலால் 2000 பேராகவும் உணர்ச்சி யால் ஒரே மனிதனாகவும் ரிலை யன்ஸை முற்றுகையிட விரைந்து கொண்டிருந்தது பேரணி.
கோயம்பேட்டிலிருந்து தென் சென்னையை இணைக்கும் விருகம் பாக்கம் மார்க்கெட் சாலை. அங்கிருக் கும் "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடை முற்றுகைப் போராட்டத்தை எதிர்பார் த்து ஏற்கெனவே மூடப்பட்டிருந்தது. கடைக்கு 50 அடி தூரம் முன்னால் சாலையில் தடையரண்களை வைத்து ரிலையன்ஸுக்குக் காவல் நின்றிருந்தது போலீசு. முற்றுகை தொடங்கியது. தார்ச்சாலை முழுவதும் படர்ந்து விரிந்தன செங்கொடிகள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முழக்கங்கள் தொடர்ந்தன.
ம.க.இ.க இணைச்செயலர் தோழர் காளியப்பனும், பொதுச்செயலர் தோழர் மருதையனும் போராட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கு முகமாக உரையாற்றினர். அந்த வட்டாரம் முழுவதும் வீடுவீடாக ஏற்கெனவே பிரச்சாரம் செய்யப் பட்டிருந்ததால், மக்கள் போராட்ட த்தைக் கவனிப்பதில் வழக்கத்தை விட அதிகமாக ஆர்வம் காட்டினர். போக்கு வரத்து நெரிசல் மிக்க அந்தச் சாலை 3 மணி நேரத்திற்கு முற்றிலுமாக மூடப் பட்டதால் ஏற்பட்ட சிரமத்தையும் சகித்துக் கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கள் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றப்படும்போது அங்கே நேரில் வந்த கோயம்பேடு வணிகர் சங்க நிர்வாகி கள் அமைப்புத் தோழர்களுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினர். ""எங்களுக்கும் இந்த ரிலையன்ஸ் கடைக்கும் இருக்கும் இடைவெளி வெறும் 50 அடி தூரம்தான். சிறு வணிகத்தை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எனும் பேரபாயத்திற்கும் அது குறித்த வணிகர்கள் மற்றும் மக்களின் புரிதலுக்கும் உள்ள இடை வெளிதான் இதனினும் பெரி தாக இருக்கிறது. அந்த இடை வெளியைக் குறைப்பதுதான் தற்போதைய போராட்டத் தின் எமது நோக்கம். ரிலை யன்ஸை வீழ்த்த வேண்டுமென்றால் கோயம்பேடு எழுந்து நிற்க வேண்டும்.'' என்று கூறி அவர் களுடைய வருகைக்கு நன்றி தெரிவித் தார் தோழர் மருதையன்.
கோயம்பேடு சந்தை அதிகாலை 2 மணிக் கெல்லாம் எழுந்து விடுகிறது. உண்மையில் அது உறங்காச் சந்தை. தமிழகத்தின் எட்டில் ஒரு பங்கு மக்கட் தொகை
யைத் தன்னிடம் கவர்ந்து வைத் திருக்கும் சென்னை மாநகரத்தின் பசிக் கும் ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் அது பொறுப்பேற்றிருக்கிறது.
ஆந்திரத்திலிருந்து வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய், மாம்பழம்; கர்நாடகத்திலி ருந்து முட்டைக் கோஸ், பீட்ரூட், காரட், வெங்காயம், சௌசௌ, முள்ளங்கி; மத்தியப் பிரதேசத்திலிருந்தும் ஆக்ராவிலிருந் தும் உருளைக்கிழங்கு; மகாராட்டி ரத்திலிருந்து திராட்சை, வெங்காயம்; நாக்பூரிலிருந்து ஆரஞ்சு; ஊட்டி யிலிருந்து தக்காளி மற்றும் இங்கிலீஷ் காய்கனிகள், திண்டுக்கல்லிலிருந்து அவரை, முருங்கை, சேனை; வேலூரி லிருந்து புடலை; திருச்சி, தூத்துக்குடி, கோவைப் பகுதிகளிலிருந்து வாழை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளி லிருந்து பச்சைக் காய்கறிகள், கீரைகள்.. எல்லா மாநிலங்கள் மாவட்டங்களிலி ருந்தும் இரவு முழுதும் வருகின்ற 500 க்கும் மேற்பட்ட லாரிகள் கோயம் பேட்டை காய்களாலும் பழங்களாலும் பூக்களாலும் நிறைக்கின்றன.
காய், கனி, பூச்சந்தை வியாபாரி களின் எண்ணிக்கையோ சுமார் 5000. இந்தப் பசுமைத் தேக்கத்திலிருந்து மாநகரம் முழுவதற்கும் காய்கனி களைச் சுமந்து செல்லும் வாய்க்கால் களும் ஓடைகளும்தான் சிறுவணிகர் கள். உணவு விடுதிகள், மளிகைக் கடை கள், காய்கனிக் கடைகள், தள்ளுவண்டி க்காரர்கள், தலைச்சுமை வியாபாரிகள் என ஆயிரக் கணக்கானோர் காலை 6 மணிக்குள் அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றனர். காசு கொடுத்துக் கொள்முதல் செய்ய முடியாமல், சந்தை யில் விழுந்து சிதறும் காய்கனிகளைக் கழுவி விற்கும் ஏழைகள் 500 பேருக் கும் சோறு போடுகிறது கோயம்பேடு.
கோயம்பேட்டின் தொழிலாளர் களும் பெரம்பலூர், திருச்சி, தென் ஆற்காடு, காஞ்சிபுரம், மதுரை எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கோயம்பேட்டில் மூட்டை தூக்கிச் சம்பாதித்த காசை வைத்து விவசாயக் கடன் அடைக்க வந்த விவசாயிகள், பஞ்சம் பிழைக்க வந்த கூலி விவசாயிகள், பணம் தொலைத்தவர்கள் என உழைக்கத் துணிந்த அனைவருக் கும் கோயம்பேடு ஒரு புகலிடம். இடுப்பில் செருகிய ஒரு கொக்கியைத் தவிர வேறு கருவிகள் எதையும் எடுக்காத அந்தத் தொழிலாளிகள், நான்கு வாழைத்தார்களை அனாயாச மாகத் தூக்கிச் செல்கிறார்கள். இரண்டு வெங்காய மூட்டைகளை முதுகில் சுமந்தபடியே லாரியில் ஏறி, கலை நுட்பம் ததும்பும் ஒரு அசைவில் ஒரு மூட்டையை மட்டும் லாரிக்குள் உதறு கிறார்கள். தேங்காய்கள் இறக்கப்படும் லாரிகளை நெருங்கக் கூட முடியாமல் அதிலிருந்து பறக்கும் தும்புகள் நம் கண்ணை மறைக்கின்றன. ஆனால் லாரியில் உள்ள தேங்காய்களோ அதனினும் வேகமாக நம் கண்களி லிருந்து மறைகின்றன.
ஒரு மனிதன் சுமக்கக் கூடிய சுமையின் அளவு, சுமையைத் தாங்கி நடக்கும் உடலின் கோணம், வேகம், துடிப்பு அனைத்துக்கும், மனித உழைப்பின் பிரமிக்கத் தக்க அழகுக்கும் அன்றாடம் அங்கே புதிய இலக்கண ங்கள் படைக்கப்படுகின்றன. தாயுடன் அமர்ந்து பூத் தொடுக்கப் பழகும் 5 வயதுச் சிறுமி முதல் இட்லி வியாபாரம் செய்யும் 85 வயதுக் கிழவி வரை, மூட்டை தூக்கப் பயிலும் 15 வயதுச் சிறுவன் முதல் 75 வயதிலும் லோடு இறக்கும் முதியவர் வரை மனித உழைப்பின் மறக்கவொண்ணாத பதிவு கள் அனைத்துக்கும் அது இருப்பிடம்.
எந்த ஒரு மையப்படுத்தப் பட்ட திட்டத்தின் கீழும் இந்தச் சந்தை தோன்றி வளரவில்லை. சங்கு பிடிக் காமலேயே துவங்கும் அந்த மனித ஆலையின் சுறுசுறுப்பும், மாநகரத்தின் வேகம் அனைத்துக்கும் கட்டியம் கூறும் அதன் அதிவேக இயக்கமும் கூட அது தன் இயல்பில் வரித்துக் கொண்டது தான். பரிணாமத்தில் வளர்ந்த மனித உடலின் உறுப்புக்கள் போல, சென்னை மாநகரத்தின் ஒரு உறுப்பாகத் தானே தோன்றி வளர்ந்த சந்தையே கோயம்பேடு.
அந்த உறுப்பிற்குள் ரிலையன்ஸ் ஃபிரஷ் என்ற கிருமி நுழைந்ததால் எற்படக் கூடிய விளைவுகளை வணிகர்களோ, தொழிலாளர்களோ துவக்கத்தில் உணரவில்லை. நக ரெங்கும் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் கடைகளால் சில்லறை வணிகர்களின் வரத்து கோயம்பேட்டில் குறையத் தொடங்கியது. விவசாயிகளிடமிருந்து ரிலையன்ஸ் நேரடியாகக் கொள்முதல் செய்யத் தொடங்கியதால் கோயம் பேட்டுக்கு வரும் லாரிகளின் எண் ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி சுமார் 20,30 விழுக்காட்டை எட்டவே விழித்துக் கொண்ட வணிகர்கள் மார்ச் 23ம் தேதியன்று கடையடைப்பும் உண்ணாவிரதமும் நடத்தினார்கள். பகத்சிங் என்ற மாபெ ரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி யின் நினைவு நாளில்தான் தங்களது போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.
சிறுவணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும் தரகு முதலாளி களையும் அனு மதிக்கும் இந்தக் கொள்கை மறுகாலனியாக்கம் எனும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒரு அங்கம்தான் என்பதை யும் கூட அவர்கள் புரிந்திரு க்கவில்லை. இந்தச் சதித் திட்டத்தில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கி றார்கள் என்ற கசப்பான உண்மையையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. எனவே கோயம்பேடு சந்தையின் வணிகர்களை யும் தொழிலாளர்களையும் தட்டி யெழுப்பும் பிரச்சாரத்துடன் எமது மே நாள் இயக்கம் துவங்கியது.
மார்ச் 23ம் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் காய்கனி வணிகர்கள் நடத்திய கடையடைப்பிற்கு 10 நாட்கள் முன்னதாகவே சென்னை நகரில் எமது பிரச்சாரம் தொடங்கி விட்டது. "சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலை யன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு' என்ற தலைப்பில் அச்சி டப்பட்ட சிறு வெளியீடு மிகக் குறுகிய காலத் திலேயே 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. கோயம்பேடு சந்தைக்குள் கலைக்குழு தொடர்ந்து நடத்திய பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடை யடைப்புக்கு ஆதரவாக மார்ச் 21ம் தேதியன்று ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சிறு வணிகர்களும் கலந்து கொண்டனர். சிறுவணிகர் சங்கத் தலைவர்களும், விடுதலைச் சிறுத்தை களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பொதுக்கூட்டத்தில் ரிலையன்சுக்கு எதிராக உரையாற்றினர்.
நிலைமையைப் புரிந்து கொண்ட ஓட்டுக் கட்சிகள் விழித்துக் கொண்டன. மக்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தும் மந்திரி பதவியில் மகனை அமர்த்திவிட்டு, மக்கள் பிரச் சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டி ருக்கும் பாமக தலைவர் ராமதாசு ""இன்னும் 10 நாட்களுக்குள் ரிலை யன்ஸ் மூட்டையைக் கட்டவில்லை என்றால் நடப்பதே வேறு'' என்று எச்சரிக்கை விடுத்தார். 23ம் தேதி கோயம்பேடு வணிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் திமுக காங்கிரசு தவிர்த்த சர்வகட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு "ஆதரவு' தெரி வித்தனர்.சில்லறை வணிகத்தில் வால் மார்ட் நுழைவதை கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஒப்பிட்டு அதிபுரட்சி கரமாகச் சண்டமாருதம் செய்தார் ஜெயலலிதா.
ஆனால், அடுத்த சில நாட் களுக்குள்ளாகவே எல்லா ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையும் அழுகி நாறத் தொடங்கிவிட்டது. ரிலையன்ஸ் கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் களின் காலில் விழுந்து "ரிலையன்சு க்குப் போகாதீர்கள்' என்று மன்றாடினர் பாமக மகளிர் அணியினர். விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் களோ ரிலையன்சை ஆதரித்து சட்ட சபையில் உறுமினர். மே.வங்கத்தில் ரிலையன்சுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டே, இங்கே அதனை எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டிய மார்க்சிஸ்டுகள் முடிந்தவரை அடக்கி வாசித்தனர். ஜெயலலிதாவின் சில்லறை அறிக்கைகளுக்கெல்லாம் முழ நீள வியாக்கியானத்தைப் பதிலாகத் தரும் கருணாநிதி இந்தச் சில்லறை வணிகப் பிரச்சினையில் மட்டும் வாயே திறக்க வில்லை.
தனியார்மய, தாராளமயக் கொள் கைகள் அமல்படுத்தப் படும்போதெல் லாம் எதிர்த்துப் போராடும் மக்களுடன் சேர்ந்துகொண்டு சவடால் அடிப்பது, பிறகு நீண்டதொரு கள்ள மவுனம் சாதிப்பது, அடுத்த தேர்தல் வரை காத்திருந்து மக்களின் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்து கொள்வது என்ற தந்திரத்தைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றி கரமாகப் பின்பற்றி வரும் ஓட்டுக் கட்சிகள் இந்தப் பிரச்சினையிலும் அதையேதான் செய்தன.
ரிலையன்ஸோ தன் னுடைய பிரச்சாரத்தை ஊடகங்களின் வழியே மிகவும் தந்திரமாக முடுக்கி விட்டுக் கொண்டிருந்தது. ""சில்லறை வணி கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் வேலைவாய்ப்பு கள் பெருகும், விவசாயம் செழிக்கும்'' என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டது இந்தியா டுடே. ரிலையன்ஸ் அதிகாரிகளையும் கோயம் பேடு வணிகர்களையும் சந்திக்க வைத்து வணிகர் களின் ஆதாரமற்ற அச்சங்களுக்கு ஆணித்தரமான பதில் களை ரிலையன்ஸ் அதிகாரிகள் வழங்குவது போல கட்டுரையைத் தொகுத்து வெளி யிட்டது நாணயம் விகடன். வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனின் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் திருப்தி கரமாகப் பதிலளிப்பது போல கட்டுரை வெளியிட்டது குங்குமம். ரிலையன்ஸ் ஆதரவுப் பிரச்சாரம் ஊடகங்களில் தீவிரமாக நடந்து கொண்டிருக்க ரிலையன்ஸ் கடைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் தனியார் மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஏராளமான மக்கள் போராட் டங்கள் நடந்திருந்த போதிலும், இந்தக் கொள்கைகளெல்லாம் எதிர்ப்பே இல்லாமல் அமலாகிக் கொண்டிருப் பதைப் போன்ற தோற்றம் திட்டமிட்டே உருவாக்கப் பட்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முத லாளிகளுடன் அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து கொண்டு இத்தகையதொரு தோற்றத் தைத் திட்டமிட்டே உருவாக்கியிருக் கின்றன. இதன் விளைவாக எதிர்த் துப் போராடும் மக்கள் வெகு சீக்கிர மாகவே சோர்வுக்கும் அவநம்பிக்கைக் கும் கையறு நிலைக்கும் ஆளாவதும் நடக்கிறது.
அவரவர் கோரிக்கைக்கு அவரவர் போராடுவது, அடுத்தவன் பிரச்சினை யைக் கண்டுகொள்ளாமலிருப்பது, அனைவரது பிரச்சினைகளுக்கும் காரணமான பொது எதிரியை அடை யாளம் காணத் தவறுவது போன்ற குறைபாடுகள் எதிரிகளின் வெற்றியை எளிதாக்கி வந்திருக்கின்றன. எதிரியின் கருத்துக் களில் மக்கள் மூழ்கடிக்கப் பட்டிருக் கின்றனர். அவற்றில் ஆழ்ந்து தனக்கெதிரான கருத்தைத் தன் வாயா லேயே பேசும் நிலைக்கு மக்கள் ஆளாக்கப் பட்டிருக்கின்றனர். இந் நிலையை மாற்ற வேண்டுமானால் மக்கள் மத்தியிலான கருத்துப் பிரச் சாரம் மிகவும் அவசியம் என்பதால் உடனே எமது பிரச்சாரத்தைத் துவங்கினோம்.
1,50,000 பிரசுரங்கள், ஆயிரக் கணக்கான சுவரொட்டிகள், சுவ ரெழுத்துக்கள், 25,000 சிறு வெளியீடு களுடன் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் செய்வது; சிறுவணிகர்கள், ரிலையன்ஸ் கடைகளின் சுற்று வட்டார த்தில் வாழும் மக்கள், அதன் வாடிக்கை யாளர்களாக மாறிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் மத்தி யில் வீடு வீடாகப் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது; அதன் இறுதியில் மேநாளன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று திட்டமிட்டோம். இப்பிரச்சாரம் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றதெனினும் போராட்டப் பகுதியான சென்னையில் கூடுதல் கவனம் கொடுத்துப் பிரச்சாரம் செய்தோம். பரந்து விரிந்த சென்னை முழுதும் மிகக் குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்ததால் தோழர்கள் பலர் முழுநேர மாகப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையின் காய் கனிச் சந்தைகள் அனைத்தை யும் கண்ணீர்ச் சந்தைகளாக மாற்றியிருக்கிறான் அம் பா னி.
சென்னை நகரில் காய் கனிச் சந்தைகள் இருக்கு மிடங்களையும் தனியார் காய்கனி அங்காடிகள் இருக்கு மிடங்களையும் குறி வைத்துத்தான் ரிலையன் ஸின் எல்லாக் கடைகளுமே திறக்கப் பட்டிருக்கின்றன. மூன்று நான்கு மடங்கு வாடகையும் பத்து மடங்கிற்கு மேல் முன்பணமும் கொடுத்து இத்தகைய இடங்களில் கடைகள் பிடிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட காய்க்கு சென்னை முழுவதும் ஒரே விலையை ரிலை யன்ஸ் நிர்ணயிப்பதில்லை. அருகாமை யில் உள்ள காய்கனிச் சந்தையில் விலை விசாரித்து, வேண்டுமென்றே அதைக் காட்டிலும் 10,20 காசுகள் குறைவாக விலை நிர்ணயிக்கப்படுகிறது.
போரூர், பாண்டி பஜார், எல்டாம்ஸ் சாலை, புரசைவாக்கம் போன்ற பகுதி களின் காய்கனிச் சந்தைகள் ஒரே மாதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. சாப்பாட்டை இரண்டு வேளையாகக் குறைத்துக் கொண்டு விட்டோம் என்றார் ஒரு பாண்டி பஜார் வணிகர்; இன்னொரு குடும்பம் வாடகை கொடுக்க முடி யாமல் தெருவிலேயே குடியேறி விட்டது; மீட்டர் வட்டிகட்டமுடியா மல், கந்துவட்டிக் காரனின் வசவையும் கேட்க முடியாமல் இந்த வயதுக்கு மேல் எந்த வேலைக்குப் போவது என்று தவிக்கிறார்கள் எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டின் பெண்கள்.
""விலையில பெரிய வித்தியாசம் கிடையாது. அவன் ஏசியில வச்சிருக் கான். நாங்க தூசியில வச்சிருக்கோம். அதான் வித்தியாசம்'' ""பவுடர் போட்ட பொண்ணைப் பாத்து மயங்குற காலம் தான இது'' ""அவன்கிட்ட பணம் இருக்குது, கடை போட்டு உக்காந் திருக்கான். நம்ம கிட்ட பணமில்ல, ரோட்டுல இருக்குறோம். இடம் நம்மளுதில்ல, சரக்கு நம்மளுதில்ல, கடனும் பட்டினியும்தான் நம்மளுது'' ""புருசன் குடிகாரன், வருமானமில்ல, இப்ப வியாபாரமுமில்ல, எங்க போயி வாழறதுன்னே தெரியல'' ""எத்தனை வருசமா பழகியிருக்குறோம், உங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு வந்திருக்கு றோம். பாக்கி வைப்பீங்க. கொடுத்தா உண்டு இல்லன்னா இல்ல. அம்பானி கிட்ட கடன் சொல்லுவியா'' ""நாம சனங்கள எப்பிடிக் கேக்க முடியும்? நம்மை எதிர்பார்த்து அவுங்க வாழல. நாமதான் அவுங்கள எதிர்பார்த்து வாழறோம்''.. ஏழை வியாபாரிகளின் கோபங்களும் குமுறல்களும் ஒவ் வொரு சந்தையிலும் விதம் விதமாக வெடித்துத் தெறித்தன.
தங்கள் துயரங்களைக் கேட்கவும் தங்களுக்காகப் பேசவும்கூட ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதி சயித்து நெகிழ்ந்து போனார்கள் காய்கனிச் சந்தைகளின் பெண்கள். சமூகத்துயரத்தைப் பேச வந்த நம்மிடம் உழைக்கும் மக்களுக்கே உரிய வெகு ளித்தன்மையுடன் சொந்தத் துயரையும் கலந்து பேசினார்கள். உணவைப் பகிர்ந்து உபசரித்தார்கள். ""அரசாங்கமே அவன் பக்கம் இருக்கும்போது உங்களால என்னப்பா செய்ய முடியும்'' என்று நம்மீது இரக்கப் பட்டார்கள். ""அரசாங்கம் அவன் பக்கம்தான் இருக் கிறது, மக்களை நம் பக்கம் கொண்டு வருவதற் குத்தான் நாங்கள் வேலை செய் கிறோம்'' என்று அவர் களுக்குப் புரிய வைத்தோம்.
உற்பத்தி செய்கின்ற விவ சாயியையும், விற்பனைக்குக் கொண்டு செல்லும் வியா பாரியையும், விலைக்கு வாங்கும் மக்களையும் இணைக்கின்ற பொது முழக்கம் ஒன்று இல்லாமல் வியாபாரிகளின் கோபமும், விவசாயிகளின் ஏமாளித் தனமும், வாடிக்கையாள னின் பாமரத்தனமும் தனித் தனியாக அம்பானியிடம் சரணடைந்து கொண்ட ருந்தன.
தன் வீட்டு வாயிலுக்கே வந்து காய்களையும் கீரைக ளையும் வழங்கிய கூடைக் கா ரப் பெண்ணின் நெடுநாள் பழ க்கம்,""அம்மா கீரைம்மா..'' என்று ஒலிக்கும் அந்தக் குரலில் இழைந்து வழியும் சோகம், காய்கனிகள் வழி யாகவே நோய்நொடிகளுக் குக் கைவைத்தியம் கூறும் அந்தப் பெண்ணின் நேசம்... அனைத்தையும் ஒரே கணத் தில் உதறிவிட்டு, தன்னை நோக்கி வருமாறு வாடிக்கையாள னுக்கு அம்பானி போடும் சொக்குப் பொடி என்ன என்று தெரிந்து கொள்ளாதவரை, ரிலையன்ஸுக்கு மயங்கும் மக்களைத் தெளிய வைக்க இயலாதென்பதால் ஆங்காங்கே ரிலையன்ஸ் கடைகளுக்குள்ளேயும் நுழைந்தோம்.
ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் சில்லென்ற குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது. கோயம்பேடு சந்தையில் காய்கனிகளிலிருந்து வீசும் நறுமணம் அவற்றைப் புதியவை என்று அறிமுகம் செய்கிறது. இங்கோ வாடிக்கையா ளரின் தோலுக்குப் புத்துணர்ச்சி யூட்டுவதன் மூலம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் காய்கனிகள் "ஃபிரஷ் ஷானவை' என்று நம்ப வைக்கிறான் அம்பானி.
காய் கனிகளின் மீது மட்டும் வீசும் விளக்கொளி, அவ்வப்போது அவற்றை அடுக்கி வைக்கும் பணி யாளர்கள்; வெட்டி உரையிலிட்டுச் சமையலுக்குத் தயாராக வைக்கப்பட்டி ருக்கும் காய்கள்; காபூல் மாதுளை, அமெரிக்க இனிப்புச் சோளம், ஸ்ட்ரா பெர்ரி பழங்கள், ஆஸ்திரேலிய திராட்சை என்று சர்வதேசச் சுவைக்கு அலையும் நாக்குகளைச் சுண்டியிழுக்கும் தூண் டில்கள்; சமையலறை உபகரணங்கள், பாத்திரங்கள், விதம்விதமான துடைப்பங்கள்! மகாராட்டி ரத்தின் பண்ணையில் விளைந்து கிண்டியில் பாக்கிங் செய்யப்பட்ட ரிலையன்ஸ் பொன்னி, ரிலையன்ஸ் பாசுமதி, துவரை, உளுந்து, பயறு முதல் அரிசி வரை அனைத்தும் ரிலையன்ஸ் பிராண்டுகள்.
அந்தக் கடையில் செல்போன் ரீசார்ஜ் கார்டு வாங்கினால் தள்ளுபடி, தொடர்ச்சியாக அங்கே வாங்குபவர் களுக்கு இலவசமாக ரிலையன்ஸ் வாகன இன்சூரன்சு, கோக், பெப்சி, சாக்லெட்டுகள் போன்ற அற்பத் தனமான இலவசங்கள், கடைக்கு உள்ளே நுழையும் ஒவ்வொரு வாடிக் கையாளரையும் ரிலையன்ஸ் கடையின் நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்கான விண்ணப்பப் படிவத்துடன் இனிமை யாக நச்சரிக்கும் விற்பனைப் பெண்கள், ஒரு கடையில் ஒரு கிலோ தக்காளி வாங்கினால் உடனே மொத்தக் கையிருப்பில் ஒரு கிலோ குறைந்து விட்டதைக் காட்டும் அளவுக்கு மையப் படுத்தப்பட்ட கணினி நிர்வாகம், பொருட்களைக் கொண்டு செல்லும் தள்ளுவண்டிகள், நடுத்தர வர்க்கத்தின் அசட்டு அதிகாரத்துக்குப் பணிவுடன் பதிலளிக்கும் சீருடைப் பணியாளர்கள், இவற்றில் மதிமயங்கி ஒரேயொரு 10 ரூபாய் அவல் பாக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு பில் போடு வதற்காக வரிசையில் காத்து நிற்கும் அறிவாளிகள்.. இதுதான் ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் கடைகளின் சுற்று வட்டாரத்தில் வீடுவீடாப் பிரச்சாரம் செய்தபோது,""அப்படியா, அங்கே வாங்கக் கூடாதா?'' என்று வெகுளித் தனமாகப் பலர் கேள்வி எழுப்பினார் கள். அப்படி ஒரு கருத்தையே பெரும் பாலான மக்கள் அப்போதுதான் முதன் முறையாகக் கேள்விப் படுகிறார் கள். ""உங்களுடைய காசு நம்முடைய மக்களை வாழவைப்பதற்குப் பயன்பட வேண்டும். அவர்களை அழிக்கப் பயன் படக்கூடாது'' என்ற ஒரேயொரு நியாயமே பல பேருக்கு உண்மையைப் புரிய வைக்கப் போதுமானதாக இருந் தது.
பிரச்சினையை ஆழ மாகப் புரிந்து கொள்ளாத போதிலும் ""அந்தக் கடைக் குப் போகும் பாவத்தை இன் னொரு முறை செய்ய மாட்டேன்'' என்று நிலப் பிரபுத்துவ இரக்கவுணர்ச்சி யுடன் சிலர் வருத்தம் தெரி வித்தார்கள். மலிவு என்று வாதாடியவர்கள், ""அது ஏக போக முதலாளிகளின் தந்திரம்'' என்பதை கோக், பெப்சி உதாரணங்களி லிருந்து கூறியவுடன் புரிந்து கொண்டார்கள். ""ஏன் அவன் மலிவாகத் தருகிறான் வாங் கினால் என்ன?'' என்று இரக்கமின்றி வாதாடியவர்களிடம் ""உன்னை வேலை நீக்கம் செய்து விட்டு, உன்னை விட மலிவாக பாதி சம்பளத்துக்கு ஆள் கிடைத்தால் வைத்துக் கொள்ளலாமா, அதை ஒத்துக் கொள்வாயா?'' என்று திருப்பிக் கேட்டோம். வாயடைத்துக் கொண்டார்கள்.
பார்ப்பனர்கள் மிகுதியாக வாழும் மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில்தான் ரிலையன்ஸ் ஆதரவு குரூரமாக வெளிப்பட்டது. பிரசுரத்தை வாங்கினால்கூடத் தீட்டுப் பட்டுவிடும் என்பதைப் போல விரட்டினார்கள். நாம் பேசத் துவங்குவதற்கு முன்னரே "எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்று கதவைச் சாத்தினார்கள். அந்தப் பகுதிகளில் கடை திறப்பதற்கு முன் வீடு வீடாகச் சென்று சந்தனமும் சர்க்கரையும் கொடுத்து அவர்களை வரவேற்றிருக்கிறது ரிலையன்ஸ் நிர்வாகம். வர்க்க வெறுப்பும் சாதிய வெறுப்பும் ஒருங்கே வெளிப்பட்ட இந்தத் தீவுகளைத் தவிர வேறெங்கும் இத்தகைய இரக்கமின்மையை நாம் எதிர்கொள்ளவில்லை.
""ரிலையன்ஸுல ஷாப்பிங் பண்ணப் போனேன்'' என்று பீற்றிக் கொள்ளும் அற்பத்தனம், கண்ணாடிக் கதவையும் ஏ.சி அறையையும் தரத்தின் அளவுகோல்களாகக் கருதி மயங்கும் மடமை, காசு பண உறவைத் தவிர வேறு எதையும் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை என்று மறு காலனியாக்கம் பயிற்றுவித்திருக்கும் பண்பாட்டுத் தடித்தனம், ""அதற்கு நான் என்ன செய்ய முடியும்'' என்று தோளைக் குலுக்கும் ஐ.டி வர்க்கத்தின் சமூக உணர்வற்ற திமிர்த்தனம், இதனை முன்னேற்றம் என்று கூறி வாதாடும் அரசியல் தற்குறிகளின் ஆணவம்.... மக்களிடம் நிலவும் இத்தகைய போக்கு கள்தான் ரிலையன்ஸைப் பாதுகாக்கும் கவசங்களாக இயங்குகின்றன. இந்தக் கவசத்தைப் பிளக்காமல் இன்று கடை விரித்திருக்கும் ரிலையன்ஸையோ, நாளை வரவிருக்கும் வால் மார்ட்டையோ நாம் முறியடிக்க முடியாது.
மக்களிடம் நிலவும் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அம்பானி உருவாக்கிய கருத்துகள் அல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத் திணித்து வரும் ஆளும் வர்க்கங்களும் அவர்கள் பிடியில் உள்ள ஊடகங் களும் உருவாக்கிப் பரப்பியுள்ள கருத்துகள். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை மாறி மாறி அமல் படுத்தும் ஓட்டுக்கட்சிகளால் உலவ விடப்பட்டுள்ள கருத்துகள். "ரிலை யன்ஸே வெளியேறு' என்ற குரல் வணிகர்களின் குரலாக மட்டும் இருக்கு மானால், ஏகபோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் குரலுக்குள் ஒளிந்து கொண்டு, "மலிவு, தரம், இலவசம்' என்று மக்களை மயக்க முடியும். அதுவே மறுகாலனியாக்கத் துக்கு எதிரான முழக்கமாக மாறும் போதுதான் அது மக்கள் முழக்கமாக மாறமுடியும்.
இந்தப் பிரச்சார இயக்கத்தின்போது நாம் சந்தித்த சிறு வணிகர்கள் அனைவரிடமும் கோபத்தைக் கண்டோம். ஆனால் அந்தக் கோபத்துக்கு இலக்கு இல்லை. அதற்கு இலக்காக வேண்டிய ஓட்டுக்கட்சிகள் வணிகர்களின் போராட்ட மேடையில் கொலுவிருந் தார்கள். அவர்களுடைய ஆர வாரப் பேச்செல்லாம் பொய் என்று தெரிந்திருந்தும் வணிகர் களும் தொழிலாளர் களும் அவற்றைக் கேட்டு ஆறுதல் அடைந்து கொண் டார்கள். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று தம்மைத்தாமே சமாதானப் படுத்திக் கொண்டார்கள்.
வணிகர்கள் மட்டுமல்ல, வலிமை யான தொழிற்சங்கங்களைக் கொண்ட தொலைபேசி, வங்கி, பொதுத்துறை ஊழியர்களும் கடந்த பத்து ஆண்டுகளில் இதைத்தான் செய்திருக் கிறார்கள். இவையெதுவும் எந்தத் துறையையும் காப்பாற்றவில்லை. இந்த வழிமுறைகளின் தோல்வி கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மக்கள் இயக்கத் தைக் கட்டியமைப்பது ஒன்றுதான் மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்கள் தற்கொலையை நோக்கித்தான் தள்ளப்படுவார்கள். நாங்கள் சந்தித்த காய்கறிச் சந்தைகளில் வியாபாரம் பாதியாகக் குறைந்திருந்தது. போரூர் காய்கறிச் சந்தைக்கு நாளொன்றுக்கு 3 வேன்கள் காய்கனி வருவதாகச் சொன் னார்கள் வணிகர்கள். அருகிலுள்ள ரிலையன்ஸ் கடைக்கும் நாளொன் றுக்கு 3 வேன் வருகிறது. பிழைப்பதற்கு வேறு தொழில் தேடு வதைத் தவிர அந்த ஏழை வியாபாரிகளுக்கு வேறு வழியில்லை. அடுத்த தேர்தல் எனும் கானல் நீரை நம்பி அவர்கள் காத்திருக்க முடியாது.
கடன், பட்டினி, மரணம்.. ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக் குத் தள்ளிய விஷச்சுழல் இதுதான். ஒரு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் மாகாராட்டிர விவசாயிகளின் பருத்திக்கு நியாய விலை கிடைத்து விடவில்லை. ஆனால் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலி யான கலிங்கநகரின் 13 பழங்குடி மக்கள், தங்களுடைய நிலத்தில் கால் வைக்க விடாமல் டாடாவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்; போலீசையும் மார்க்சிஸ்டுகளின் குண்டர் படையை யும் துணிவுடன் எதிர்கொண்ட நந்திக் கிராமத்து மக்கள் சிறப்புப் பொருளா தார மண்டலத்தை வெளியேற்றி இருக்கிறார்கள்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் போராடும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள்.
கோயம்பேட்டின் சுமை தூக்கும் தொழிலாளிகளும், தரைக்கடை தள்ளு வண்டி வியாபாரிகளும், மளிகைக் கடையிலேயே மக்கி மடியும் அண்ணாச்சிகளும் அஞ்சுவதற்கு ஏது மில்லை. எனினும், அன்று எமது மே தினப் பேரணியை அருகில் நின்று ஆதரித்த அவர்கள் அனைவரும் அப்படியே அணிதிரண்டு வந்துவிட வில்லை. அவ்வாறு அந்தக் கணமே வந்து விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவுமில்லை.
அவர்கள் அருகில்தான் இருந்தார்கள்; எனினும் சற்றுத் தொலைவில் இருந்தார்கள். அன்று முற்றுகைக்கு உள்ளான ரிலையன்ஸ் கடையும் கூட எமக்கு அருகில்தான் இருந்தது; எனினும் சற்றுத் தொலைவில் இருந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வணிகர்களும் தொழிலாளர்களும் வருவார்கள். அதுவரை எமது முற்றுகையும் தொடரும்.
· பு.க செய்தியாளர்கள், சென்னை
தமிழ் அரங்கம்
Monday, June 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment