சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
அரசியல், சமுதாயப் புரட்சியின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் சமத்துவமும் அடையவே முடியாது. மத்தியமாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் பல்வேறு சட்டதிட்டங்கள், இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் தோல்விகளே இந்த உண்மையைப் பறைசாட்டுகின்றன. இந்த உண்மையை அரசே அங்கீகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) என்று பிரபலமாக அறியப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989.
இதற்கு முந்தைய பல்வேறு சட்டங்கள், தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மீதான கிரிமினல்வன்கொடுமைக் குற்றங்களைத் தடுப்பதில்குறைப்பதில் தோல்வி கண்டுவிட்டதால், இன்னும் கறாரானதீவிரமான சட்டபூர்வ தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கென்று சொல்லிக் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம். ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அமலாக்கப்பட்ட பிறகாவது தாழ்த்தப்பட்டபழங்குடி சாதி மக்களுக்கு எதிரான வன்öகாடுமைக் குற்றங்கள் அடியோடு நின்றுவிடவில்லை என்றாலும் குறைந்தாவது இருக்கிறதா?
இல்லை. அதற்கு மாறாக—சொல்லப்பட்ட நோக்கத்திற்கு மாறாக, இம்மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கு ஒரு குற்றம் வீதம் இழைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியக் குற்றப் பதிவேடுகளின் 2005ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக 26,127 தாக்குதல் குற்றங்கள் நடந்துள்ளன. 2004ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக 26,887 குற்றங்கள் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
1,172 தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றங்கள் நடந்ததாகவும், 669 தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், 238 பேர் கடத்தி அடைக்கப்பட்டதாகவும், 3,847 தாழ்த்தப்பட்டவர்கள் காயப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 291 வழக்குகள் சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் 8,497 வழக்குகள் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவரங்களோடு மிக முக்கியமான ஒரு உண்மை என்னவென்றால், இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்தாம், இதைத்தவிர பதிவு செய்ய முன்வராமலும், பதிவு செய்ய மறுத்தும் விடுபட்டுப் போனவை இன்னும் பல மடங்கு உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் விசாரித்து, தண்டனை வழங்கப்பட்டவை மிகமிகக் குறைவானவையே. மொத்த வழக்குகளில் 94.1 சதவீதமானவற்றில் குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 29.8 சதவீதமானவற்றிலேயே தண்டனை வழங்கப்பட்டன. அதாவது 2005ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக மொத்தம் 57,804 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 46,936 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முழுமையடைந்து 12,691 பேர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசியக் குற்றப் பதிவுத் தலைமையக அறிக்கை கூறுகிறது.
தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கிரிமினல் குற்றங்கள் அக்கிரமங்கள் என்பவை பல்வேறு விதமானவை, எண்ணிலடங்காதவை, பல சமயம் எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு கொடூரமானவைவக்கிரங்கள் நிறைந்தவை. அவை அசிங்கமான ஆபாச சொற்களால் திட்டுவதில் தொடங்கி தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலமாக பாலியல் வன்முறை செய்வது வரை நீள்கின்றன; மனித மலத்தைத் தின்ன வைப்பது, சிறுநீரைக் குடிக்க வைப்பது; உடலுறுப்புகளை வெட்டிச் சிதைப்பது; தாழ்த்தப்பட்ட பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்துவது; பொது இடத்தில் மேல்சாதியினர் பாலியல் வன்முறை செய்வது; அப்பெண்களின் சொந்த சகோதரர்களையும் மகன்களையும் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளச் செய்வது இவை போன்ற தாழ்த்தப்பட்டோரை உயிரோடு கொளுத்திக் கொல்வதைவிடக் கொடூரமான சித்திரவதைகள் தாழ்த்தப்பட்டபழங்குடிச் சாதிகள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகளே கிடையாது, வெறும் சமூகப் பழக்கவழக்கங்கள்தாம் என்று சொல்லிக் கொண்டு மேல்சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் ஏராளமாக உள்ளன. குடிநீர், சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள்கடைகள், கோவில்கள், பூங்காக்கள்விளையாட்டு மைதானங்கள், இடுகாடுகள் போன்ற பொது இடவசதிகளைப் பயன்படுத்துவதற்கான குடியுரிமைகள் மறுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட ஒருவர் மேல்துண்டு போட்டுக் கொள்வது, செருப்பு அணிந்து செல்வது, ஏன் நல்ல புது ஆடை அணிவது கூட அவர்மீது சாதீயத் தாக்குதலுக்குக் காரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட ஒரு இளைஞன் சாதி இந்துப் பெண்ணைக் காதலிப்பது, ஒரு பள்ளி விளையாட்டுப் போட்டியில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் வெற்றி பெறுவது, தாழ்த்தப்பட்ட ஒரு பேருந்து ஓட்டுநர் சாதி இந்து விரும்பும் இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் போவது, சாதி இந்துவின் முன்னிலையில் பேருந்தில் உட்கார்ந்து பயணம் செய்வது, சாதி இந்துவின் சாவுச் செய்தி சொல்லவும், பறையடிப்பது உட்பட சாவு வேலைகளைச் செய்ய மறுப்பதும் கூட குற்றமாக அறிவித்து தாக்கப்படுகிறார்கள்.
இவைதவிர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் 15 குற்றங்கள் பட்டியலிடப்பட்டு அவை வன்கொடுமைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. கொலை, பாலியல் வன்முறை உட்பட நேரடி இந்தியத் தண்டனைச் சட்டங்களுக்குள் வராதவை, மறைமுகமானவை கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.
1. உண்ணத் தகாத பொருளையோ, அருவருப்பான ஒன்றையோ குடிக்குமாறு அல்லது தின்னுமாறு தாழ்த்தப்பட்டபழங்குடியைச் சேர்ந்த ஒருவரைக் கட்டாயம் செய்வது;
2. அவரது வீட்டு வாசலிலோ, அண்டைப்புறத்திலோ மலசலம், கழிவுப் பொருள், விலங்குப் பிணங்கள் அல்லது வேறு அருவருப்பான பொருளைப் போட்டு அவருக்கு வேண்டுமென்றே தீங்கோ, அவமதிப்போ, எரிச்சலோ ஏற்படுத்துவது;
3. அவரது ஆடைகளை பலவந்தமாய் அவிழ்ப்பது அல்லது அவரை நிர்வாணப்படுத்தியோ, கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ ஊர்வலம் விடுவது, மனித கண்ணியத்திற்கு இழுக்கான முறையில் இது போன்று வேறு ஏதேனும் செய்வது;
4. அவருக்குச் சொந்தமான நிலத்தையோ, அவருக்கு ஒதுக்கப்படும் தகுதி வாய்ந்த ஏதேனும் ஓர் அதிகார அமைப்பால் அறிவிப்புச் செய்யப்பட்ட நிலத்தையோ அடாவடித்தனமாய் கைப்பற்றுவது, அந்நிலத்தில் சாகுபடி செய்வது அல்லது அவருக்கு ஒதுக்கிய நிலத்தை வேறொருவருக்கு மாற்றம் செய்வது;
5. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அவரது நிலத்தையோ, வீடு வாசலையோ அடாவடித்தனமாய் பறிப்பது, அல்லது நிலம், வீடு, வாசல், நீர் இவற்றில் அவர் தமக்குள்ள உரிமைகளை அனுபவிப்பதில் குறுக்கிடுவது;
6. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ அல்லது மயக்கியோ "போகர்' எனப்படும் ஊதியமற்ற வேலையில் அல்லது பொது நோக்கங்களுக்காக அரசு விதிக்கும் கட்டாயச் சேவை அல்லாத இதேபோன்ற வேறு வகைக் கட்டாய உழைப்பு அல்லது கொத்தடிமை உழைப்பில் ஈடுபடுத்துவது;
7. வாக்களிக்காதிருக்கும் படியோ, குறிப்பிட்ட வேட்பாளருக்கே வாக்களிக்கும்படியோ, சட்டம் வகை செய்திராத முறையில் வாக்களிக்கும்படியோ தாழ்த்தப்பட்டபழங்குடிச் சாதியைச் சேர்ந்த ஒருவரை கட்டாயப்படுத்துவது அல்லது மிரட்டுவது;
8. அச்சாதிகளைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்யான கெடு நோக்கான அல்லது தொந்திரவு தரும்படியான உரிமையியல் வழக்கோ, குற்றவியல் வழக்கோ, வேறுவிதமான சட்டநடவடிக்கையோ தொடுப்பது;
9. அரசு ஊழியருக்குப் பொய்யான அல்லது அற்பமானவிளையாட்டுத்தனமான தகவல் கொடுத்து, அதனால் அந்த அரசு ஊழியர் தமது சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினர் ஒருவருக்கு தீங்கோ, எரிச்சலோ உண்டாகும்படி செய்வதற்கு காரணமாக அமைவது;
10. பொதுமக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒருவரை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது கேவலப்படுத்தும் நோக்கத்தோடு மிரட்டுவது.
11. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவமதிக்கும் பொருட்டோ, மானபங்கம் செய்யும் பொருட்டோ தாக்குவது.
12. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது ஆளுகையில் வைத்திருக்கும்போது அவளைத் தமது பாலியல் விருப்பத்துக்குப் பணிய வைத்திட அந்த நிலையைப் பயன்படுத்துவது.
13. அம்மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஊற்று அல்லது நீர்நிலையை உரிய காரியத்துக்கு தகுதியற்றதாக்கும் நோக்கத்துடன் கேடு விளைவிப்பது அல்லது அசுத்தப்படுத்துவது.
14. அம்மக்களின் பொதுப் பயன்பாட்டுக்குரிய ஓர் இடத்துக்குச் செல்வதற்குள்ள வழக்கமான உரிமையை மறுப்பது அல்லது மற்ற சாதிசமூகத்தினரும் பயன்படுத்தும் ஓர் பொது இடத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களும் பயன்படுத்தும் உரிமையை மறுப்பது.
15. அம்மக்களைச் சேர்ந்த ஒருவரைத் தமது வீடு, ஊர் அல்லது வேறு வகை வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி நிர்பந்திப்பது அல்லது அப்படி வெளியேற்றுவது
— ஆகிய பதினைந்து வகை செய்கைகளையும் வன்கொடுமைகள் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 வரையறுத்துள்ளது. அச்சட்டத்தின்படி இவ்விதமான வன்கொடுமைகள் புரிபவர்கள் வழக்கமான இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறுமாதத்துக்குக் குறையாத, ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தாழ்த்தப்பட்டபழங்குடி இனமக்களுக்கு இழைக்கப்படும் சாதீய சமூகக் கொடுமைகளைஅக்கிரமங்களை நுட்பமாகவும் அனுபவபூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வரையறுக்கப்பட்டதைப் போன்று இச்சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
இவைதவிர, தாழ்த்தப்பட்டபழங்குடியின மக்களின் உயிருக்கும், உடமைக்கும், வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது, பொய்வழக்குபொய்சாட்சி மூலம் அவர்கள் தண்டனை பெறும்படி செய்வது போன்றவை வன்கொடுமைகளாகக் கருதி தண்டிக்கப்படுவது, குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, குற்றவாளிகளை ""நாடு'' கடத்துவது, நடமாட்டத்துக்குத் தடைவிதிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது போன்றவையும் நுட்பமாக ஆய்வு செய்து இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எவ்வாறு அமலாக்குவது; அதை அமலாக்குவதில் ஏற்படும் தவறுகளுக்குக் கூட தண்டனை என்ற ரீதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமலாக்குவதற்கான அதிகார அமைப்புகள், அதற்கென தனிசிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது என்று கூடுதலான அக்கறையும் செலுத்தப்பட்டிருக்கிறது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 18 ஆண்டுகளாகிறது. ஆனால், இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எந்த அளவு அமலாக்கப்பட்டிருக்கிறது? அது ஏற்படுத்தியுள்ள விளைவுகள் என்ன? — என்று தொகுத்துப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது!
தொடரும்
தமிழ் அரங்கம்
Saturday, July 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment