தமிழ் அரங்கம்

Sunday, July 8, 2007

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.

கடன் வாங்கிய பணத்தில் மகளின் கல்யாணம், அதே நாளில் மருந்தைக் குடித்துச் செத்த தகப்பனின் கருமாதி, ஊரைவிட்டு வெளியேறி பெயர் தெரியாத ஊரில் அநாதைகளாக மருந்தைக் குடித்துச் செத்துப் போன குடும்பங்கள், தங்கள் உடல்களைக் கூட தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாமென கடிதம் எழுதி வைத்துவிட்டு செத்துப் போன விவசாயிகள்.... எத்தனைக் காட்சிகள்?

சிந்தித்துப் பாருங்கள். ஷில்பா ஷெட்டியின் விளம்பர அதிகாரிகளைப் போல அவ்விவசாயிகளுக்கு யாருமில்லை. அதனால் புள்ளி விவரங்களாய் மட்டும் செய்தி ஊடகங்களைக் கடந்து, மறைந்து போய்விட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்? குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா? பின்னர் ஏன் இந்த நாட்டின் சிறுகதைகளில், நாவல்களில், செய்திக் கட்டுரைகளில், திரைப்படங்களில் அவர்கள் இல்லை?

பொறுக்கி வீரர்களின் பொறுக்கித்தனங்களிலும், மல்லாக் கொட்டைகளிலும் மாய்ந்தெழுந்து, கிராமப்புறங்களின் "யதார்த்த' வாழ்வைச் சொல்லும் சினிமாக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் படைப்புலக பிரம்மாக்களின் கலை உணர்ச்சி, இந்த யதார்த்தமான, கவர்ச்சியற்ற, தேய்ந்தழியும் உண்மையான கிராம வாழ்க்கையை ஏன் கதைக் கருவாக ஏற்க மறுக்கிறது? அவர்களுக்கு, இயல்பான சோகம் "போர்' அடிக்கிறது.
அத்தகைய "போர்' அடிக்கும் திரைப்படமொன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். 1995இல் சுமித்ரா பாவே என்பவரால் உருவாக்கப்பட்ட தோகீ (இரு பெண்கள்) எனும் அந்த மராத்தியத் திரைப்படம், 1996இல் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது கொடுத்து முடக்கப்பட்டு விட்டது. "அவார்டு' படம் என்றான பின்னால் அது மக்கள் பார்க்கத்தகாதது என்பது இந்தியச் சினிமாவின் அடிப்படை விதிகளில் ஒன்று. உண்மையில் இத்திரைப்படம் வழக்கமான "அவார்டு' படங்களுக்கு நேர் எதிரான முறையில் உரக்கப் பேசும் கதாபாத்திரங்கள், பாடல்களுடைய படமே.

··

ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது. உறவினர்கள் சூழ திருமண மகிழ்ச்சியில் குடும்பமே திளைக்கிறது. அதனைக் குலையறுக்கும் விதமாக மணமகன் வீட்டார் மொத்தமும் வரும் வழியில் விபத்தில் இறந்து விட்ட செய்தி வந்திறங்குகிறது. அதிர்ச்சியில் தகப்பனுக்கு வாதம் வந்து விடுகிறது. குடும்பம் இடிந்து போகிறது.

அதிர்ஷ்டம் கெட்ட சனியனாக கௌரி ஊரால் பழிக்கப்படுகிறாள். வாதத்தினால் படுக்கையில் கிடக்கும் கணவனையும், இரு மகள்களையும், சிறுவனான மகனையும், மூழ்கடிக்கும் கடன்களையும் சுமக்க வழியின்றி கௌரியின் தாய் திணறுகிறாள். நிலங்களையும், மாடுகளையும், எஞ்சியிருக்கும் நகைகளையும் விற்று உயிர் வாழப் போராடுகிறாள். கடன்காரர்கள் சுற்றி நெருக்குகிறார்கள். நாட்பட நாட்பட கௌரி பித்துப் பிடித்தவள் போல நிலை வெறித்துக் கிடக்கிறாள். ஊர் அவளை சூனியக்காரி என ஏசுகிறது.

செய்வதறியாமல் விசும்பும் தாய், பம்பாயில் மில்லில் வேலை செய்யும் தனது தம்பிக்குக் கடிதம் எழுதி வரவழைக்கிறாள். கௌரி இங்கே ஊராரிடம் வதைபடுவதிலிருந்தும், அவளால் அவளது தங்கை, தம்பி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதிலிருந்தும், சோத்துக்கே வழியற்றுக் கிடக்கும் நிலையிலிருந்தும் விடுபட, அவளை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலைக்குச் சேர்த்து விடும்படிக் கூறுகிறாள். சிந்திக்கும் தம்பி "சரி அழைத்துச் செல்கிறேன், ஆனால் என்ன வேலை எனக் கேட்கக் கூடாது, மணியார்டர் மட்டும் மாதாமாதம் வந்து விடும்' என்கிறான். அதிர்ந்து போகிறாள் தாய். வேதனையில் குமுறியவாறு, இறந்து போன மாப்பிள்ளை வீட்டாரோடு மகள் திரும்பிப் போகும்பொழுது இறந்ததாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறாள்.

இரவு முழுவதும் தூங்காமலிருக்கும் தாய், அதிகாலையில் தம்பியை எழுப்பி கௌரியை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். இவையெதுவும் அறியாத கௌரி, ஏதோ வேலைக்குச் செல்வதாகக் கருதி மாமனோடு ஊரிலிருந்து மௌனமாக வெளியேறுகிறாள். பரிதவிப்போடு கிருஷ்னேயும், அவளது தம்பியும் அவளைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்கிறார்கள்.
மாதா மாதம் மணியார்டர் வருகிறது. மணியார்டர் பணத்தை வாங்கும் நாளில் தாய்க்கும் கிருஷ்னேக்கும் இடையே ஒரு இறுக்கமான மௌனம் நிலவுகிறது. தன்னுடைய அக்காள் எங்கேயோ உடல் வருந்த உழைத்து பணம் அனுப்புகிறாள் என வருந்தும் கிருஷ்னே, மணியார்டர் துண்டுக் காகிதத்தைக் கூட சேர்த்து வைக்கிறாள். ஒரு கனத்த மௌனத்தினூடாகக் காலம் உருண்டோடுகிறது.

பம்பாயிலிருந்து மாமன் வீட்டிற்கு வருகிறான். இரவில் தாய் அவனிடம் கௌரி குறித்து வினவுகிறாள். அவன் தான் அங்கே போவதில்லை என்கிறான். தானும் முன்பெல்லாம் அங்கே சென்று கொண்டிருந்ததாகவும், இப்பொழுது அங்கே செல்ல மனம் வரவில்லை எனவும் கூறுகிறான். தான் ஒரு பெரும் பாவம் செய்து விட்டதாகவும், உணவும், உறக்கமும் கூட அற்றுப் போய் விட்டதாகவும் வருந்துகிறான்.

கிருஷ்னேக்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாதா மாதம் வரும் மணியார்டரோடு இம்முறை முதல் முறையாக கௌரியிடமிருந்து கடிதம் வருகிறது. திருமணம் குறித்து அறிந்து கொண்டதாகவும், புடவைகள், பட்சணங்களோடு தான் வருவதாகவும் அக்கா கூறுகிறாள். வெம்மை படர ஊரை விட்டுச் சென்ற கௌரி, ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்கிறாள்.

அக்காவினுடைய பகட்டான சேலையையும், முகத்தில் தோன்றும் அந்நியப்பட்ட தன்மையையும் கண்டு கிருஷ்னே துணுக்குறுகிறாள். தனது கல்யாணத்தோடு அவளும் கல்யாணம் செய்து கொண்டாலென்ன எனக் கேட்கிறாள். தனக்கு நிறையவே கல்யாணங்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், இனி தனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனவும் கௌரி கூறுகிறாள். புரியாத கிருஷ்னே, "நீ ரொம்பவும் மாறிப் போய்விட்டாய் அக்கா' என்கிறாள். குளித்துக் கொண்டிருக்கும் கௌரிக்கு நீரூற்றச் செல்லும் தாய், அவளது முதுகிலுள்ள தீக்காயத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.

உறவினர்கள் வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நடக்கின்றன. பெண்களோடு இணைந்து இனிப்புகள் பரிமாறத் தட்டெடுக்கும் கௌரியை, தாய் முறைக்கிறாள். நீ ஏன் குறுக்கே வருகிறாய் எனக் கடிந்து கொள்கிறாள். கௌரி மௌனமாக வெளியேற, ஆத்திரம் கொள்ளும் கிருஷ்னே, ""கௌரி வேண்டாம், ஆனால் கௌரி கொடுக்கும் காசு மட்டும் உனக்கு வேண்டுமா?'' என வாதிடுகிறாள். பதில் பேச முடியாமல் தாய் அறையை விட்டு வெளியேறுகிறாள். கௌரியைப் பின் தொடரும் கிருஷ்னே, வேண்டுதல் துணி முடியும் மரத்தினடியில் அவளைக் காண்கிறாள். அவளருகில் மௌனமாகச் சென்றமர்கிறாள்.

அந்தப் பக்கமாய், மாப்பிள்ளையும், அவனது நண்பர்களும் உலவ வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் குமுறியெழும் கிருஷ்னே, அவர்களை நோக்கிக் கத்துகிறாள். ""இங்கே பாருங்கள், இவள்தான் என்னுடைய அக்கா, இவள் என்னை விட நன்றாகப் பாடுவாள். என்னை விட்டு விடுங்கள். இவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறீர்களே, இதோ என்னுடைய அக்காக எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்து நிற்கிறாள். இவளுக்கு வாழ்க்கை கொடுங்கள்!'' எனக் கதறும் கிருஷ்னேயை, கௌரி இழுத்துச் செல்கிறாள். மாப்பிள்ளையும், நண்பர்களும் புரியாமல் நிற்கின்றனர்.

திருமணம் நடக்கிறது. ஒதுங்கி நிற்கும் அக்காவை நொடிக்கொரு முறை கிருஷ்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்வையின் திசை வழியே எல்லோரும் கௌரியைப் பார்த்து சங்கடமான மௌனத்தில் ஆழ்கிறார்கள். கௌரி மெல்ல விலகி மறைகிறாள். தாலி கட்டும் நேரத்தில் எழுந்து வெளியேறும் கிருஷ்னே, அக்காவைத் தேடியோடுகிறாள். அனைவரும் அதிர்ச்சியுறுகின்றனர். ஊரை விட்டு வெளியேற நடந்து செல்லும் கௌரியை, கிருஷ்னே வந்து பிடித்துக் கொள்கிறாள். அவள் பம்பாய்க்குப் போக வேண்டாமென்றும், எப்படியாவது இங்கேயே கஷ்டப்பட்டு தலை நிமிர்த்தி முன்னேறுவோம், அவமானமும், சார்ந்திருக்கும் அவலமும் வேண்டாம் எனக் கூறுகிறாள்.

மாமனும் வந்து சேர்கிறான். கௌரி ஊரை விட்டுப் போக வேண்டாமென்றும், தாங்கள் அனைவரும் செய்து விட்ட பாவத்தை மன்னிக்கும்படியும் வேண்டுகிறான். கௌரியை திருமண வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் கிருஷ்னே, காத்திருக்கும் எல்லோருக்கும் முன்பாக அம்மாவிடம் கௌரி திரும்ப வந்திருப்பதைக் கூறுகிறாள். கௌரியை கட்டித் தழுவிக் கொள்ளும் தாய், இனி அவள் பம்பாய் போக வேண்டாமென்றும் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இங்கேயே இருக்குமாறும் வேண்டியழுகிறாள். படம் முடிவடைகிறது.··இக்கதை விவசாயிகளின் பிரச்சினையை, அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் உண்மையான சக்திகளை நேரடியாகச் சொல்லவில்லை. வாதத்தில் விழுந்த கௌரியின் தந்தை வாதத்தில் விழுந்த விவசாயத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். ஒருவேளை மணமகனின் குடும்பம் விபத்தில் சாகாமல் இருந்திருந்தால், விவசாயி வாதத்தில் விழாமல் இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்?

மான்சாண்டோ விதைகளைப் பயிரிட்டு மகசூலுக்காகக் காத்திருந்து, பின்னர் பொய்த்துப் போன பருத்திப் பயிர்களைக் கண்டு மனமொடிந்து செத்த விவசாயிகளைப் போல, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்யாத பட்சத்தில், கதையில் நிகழ்ந்ததைப் போலவே கௌரி மும்பைக்கு ரயிலேறியிருப்பாள். உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு சமூகம் அவர்களைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஒரு விவசாயியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களிலிருந்து வழுவுவதென்பது ஒரு வகை மரணம்தான். உண்மையான மரணத்தை எதிர்கொள்வதற்கு அதிகம் தடுமாற்றம் காட்டாத தாய், மகளை பம்பாய்க்கு அனுப்பும் முடிவில் லேசாகத் தடுமாறுகிறாள். பம்பாயில் என்ன வேலை என்று மாமன் உடைத்துச் சொல்லவில்லை. சொல்லாத போதிலும் விளங்கிக் கொள்கிறாள் தாய். பசி அறத்தைத் தின்னுகிறது.

இப்படித்தான் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீதிகளில் ஒவ்வொரு நாளும் கெளிரிகள் வந்திறங்குகிறார்கள். கௌரிகளுடைய நிலங்களையும், வயல்களையும், பன்னாட்டுக் கம்பெனிகள் துகிலுரிய வழிவகுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன், பொறுக்கி வரை அனைவரும் அவர்களைத் துகிலுரிகிறார்கள்.

இன்று சிங்கூரிலிருந்தும், நந்திகிராமத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் நாளை கல்கத்தாவில் அத்துக் கூலிகளாய் வந்து வீழ்வார்கள். ரத்தன் டாடாவும், மார்க்சிஸ்டுகளும் கோடிகளையும், நிலங்களையும் பண்டம் மாற்றிக் கொண்டு படுத்துறங்கும் வேளையில் கௌரிகளும், கிருஷ்னேகளும் சோனாகஞ்சியில் துகிலுரியப்படுவார்கள்... வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தப் புண்ணிய தேசத்தின், இந்த வளர்ந்து வரும் வல்லரசின் சாதனைகளில் ஒன்று என்ன?

மொழி, இன, சாதி எல்லைகளைக் கடந்து உ.பி.யிலிருந்தும், பீகாரிலிருந்தும், மகாராட்டிரத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் "நூறு ரூபாய்க்கு கூட பெறுமானமில்லாத' மூஞ்சிகளைப் பெற்ற (உபயம்: பருத்திவீரன்) விவசாய வர்க்கப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் காமாட்டிப்புராவில், சோனாகாஞ்சியில் கைகாட்டி நிற்கிறார்கள். நேபாளப் பெண்கள் மும்பை விபச்சார சந்தையில் 3,4 ஆண்டுகள் தம்மை விற்று தமது திருமணத்திற்கான தொகையைச் சேமித்துக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள். மாதாமாதம் வீட்டுக்கு மணியார்டர் போகிறது.

இப்படத்தில் வரும் கௌரியின் மாமன் மன உறுத்தலால் விபச்சார விடுதிக்குப் போவதையே விட்டு விடுகிறான். கன்னட பிரசாத் எனும் விபச்சாரத் தரகனைப் பற்றி செய்தியெழுதும் போர்வையில் அவனது ஆல்பத்திலுள்ள நடிகைகளின் பெயர்களை மயிர் பிளக்கத் துப்பு துலக்கி, பின்னடித்த புத்தகங்களை மிஞ்சும் வகையில் சர்வ அவசியத் தகவல்களோடு, வாசகனின் சபலத்தைத் தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளின் புரோக்கர் கண்ணோட்டத்தையும், அதனையே ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொல்லும் இத்திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
விவசாயிகளுடைய வாழ்க்கைச் சித்திரத்தின் மையக் கோடுகளைத் தொட்டு விரிந்து, விமரிசனப் பார்வையோடு இப்படம் மிளிரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உலகமயமாக்கம் வழங்கும் கோலாகலமான, செயற்கை உலகத்தில், விமரிசனமில்லாத இந்த யதார்த்தம் கூட மதிக்கத்தக்க மாற்றாகத்தான் இருக்கிறது.

பெண் பார்க்கும் நிகழ்வில் பாடச் சொல்லும் பொழுது, தொலைதூரத்தில் வருந்த உழைக்கும் தனது அக்கõளின் நினைவாகவே வாழும் கிருஷ்னே அத்தருணத்தில் கூடத் தங்களது கையறு நிலையை மறக்கவியலாது பாடுகிறாள்.

""நிலம் பாளங்களாக வெடித்துக் கிடக்கிறது.துளிநீர் கூட கண்ணில் தட்டுப்படவில்லை.என் பாடல் துயரம் மிக்கது,என் பாடல் துயரம் மிக்கது.''·

பால்ராஜ்

No comments: