""ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''
— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள முடியாது. மும்பய் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட விதத்தையும்; மும்பய் மற்றும் கோவை கலவர சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே, அவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு விடுவதையும் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜாகீர் உசேனின் விமர்சனத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுத்துவிட முடியாது.
1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும்; 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மதானி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.
""தடா''சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் கூட , நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டு பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலோ, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 168 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. மதானிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.
இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டுக்கால ""தண்டனையை''அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில், தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
மதானி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போல பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.
ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது. ""இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்'' என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ""இந் நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக'' எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலீசும், நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.
கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நட வடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின் படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும்; எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
""இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்து போலீசுக்காரர் சில முசுலீம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; இந்து தீவிரவாதிகளும் போலீசும் கைகோர்த்து கொண்டு நடத்திய வன்முறை'' என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முசுலீம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, சிறப்பு நீதிமன்றம் கோவை கலவரத்தைப் பற்றி வாய் திறக்கவே மறுத்துவிட்டது.
குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே, ""அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை'' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. ""குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ""உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக''க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.
இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாபை சாட்சி சொல்ல போலீசார் அழைத்து வந்தனர். முனாப் நீதிமன்றத்திலேயே, ""தனது அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீசார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை'' அம்பலப்படுத்தியதோடு, போலீசார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.
விசாரணையின் பொழுது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறிய பொழுது, போலீசாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, போலீசாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.
குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காட்டியிருக்கின்றனர். போலீசாரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும் கூட, சாட்சிகளை போலீசார் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.
கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. ""இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரை போலீசில் அன்றே ஒப்படைத்ததையும்; போலீசார் இவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16..02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும்; இந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும்; இவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும்'' எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முசுலீம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.
அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு; சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகளை நேரில் பார்த்த சாட்சியாக விஜயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், பல இடங்களில் குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை நேரில் பார்த்த சாட்சிகளாக நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், ""இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்'' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் மிக முக்கியமானகுற்றவாளியாக முன் நிறுத்தப்பட்டவர் மதானி. அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீசாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீசு தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள் அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின் பொழுதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?
காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, இவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் கூட மறுத்துவிட்டது.
தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சங்கராச்சாரிக்குச் சிறைச்சாலையில் தனிச்சமையல் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த மதானிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'', ""இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு'' என இந்திய அரசியல் சாசனம் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மோசடி என்பதை நிரூபிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீதிமன்றங்களே அந்தத் திருப்பணியைச் செய்து விடுகின்றன.
அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றி தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முசுலீம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.
18 முசுலீம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட ஏறத்தாழ 100 வழக்குகள், போதிய சாட்சியம் இல்லாததால் விசாரிக்க முடியாது எனக் கூறிக் கைவிடப்பட்டது நம்முன் எத்தனை பேருக்குத் தெரியும்? போலீசுக்கு மாமூல் கொடுக்க மறுத்து வந்த முசுலீம்களின் வியாபார மேலாண்மை தகர்க்கப்பட்டதையும்; குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டிருக்கும் பல முசுலீம்கள் நடைபாதை வியாபாரிகள் என்பதையும் எந்த ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன?
மும்பய் வெடிகுண்டு தாக்குதலின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் ""ஓடி ஒளிந்து வாழும்'' குற்றவாளியாக ""தடா'' நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மும்பய் கலவரத்தின் தளபதியாகச் செயல்பட்டதாக, அக்கலவரத்தை விசாரித்த சீறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சிவசேனாதலைவர் பால் தாக்கரேயை, மும்பய் நீதிமன்றமே வழக்குகளில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. அவர் கலவரத்தைத் தூண்டிவிடவில்லை என காங்கிரசு கூட்டணி ஆட்சியே நற்சான்றிதழ் வழங்கிவிட்டது. சிறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ் சுமத்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த மதுகர் சர்போத்தர், பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மீது சட்டத்தின் சுண்டு விரல் கூட படவில்லை.
கலவரத்தின் பொழுது ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு புகுந்து, அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முசுலீம்களைச் சுட்டுக் கொன்ற நிகில் காப்ஸே என்ற போலீசு துறை ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்ல. மாறாக, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதுகுத் தண்டில் சுடப்பட்ட ஃபருக் மாப்கர், கலவரத்தில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு வந்து போகிறார்.
சுலைமான் பேக்கரி எனும் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பிற்காகப் பதுங்கியிருந்த முசுலீம்களின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு, ஆறு பேரைக் கொன்ற ஆர்.டி.தியாகி என்ற போலீசு அதிகாரி, நிரபராதி என விடுவிக்கப்பட்டதோடு, அவர் பதவியில் இருந்து நிம்மதியாக ஓய்வும் பெற்றும் விட்டார்.
சிறீகிருஷ்ணா கமிசன் நிகில் காப்ஸே, ஆர்.டி. தியாகி உள்ளிட்டு 31 போலீசு அதிகாரிகளைக் குற்றவாளிகள் என ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளது. எனினும், அக்காக்கி சட்டை கிரிமினல்கள், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மட்டுமல்ல, காங்.கூட்டணி ஆட்சியிலும் வழக்குவிசாரணை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2,300 வழக்குகளில் 1,371 வழக்குகள், மதச்சார்பற்ற காங்கிரசு ஆட்சியில்தான், கலவரம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, போதிய சாட்சியம் இல்லை என்ற காரணத்தால் கைவிடப்பட்டன.
மகாராஷ்டிரம் இந்து மதவெறியர்களின் செல்வாக்கு மிக்க மாநிலம் என்றாலும், மும்பய் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பையடுத்து, மும்பய் கலவர வழக்குகளிலும் நீதி வேண்டும் எனப் பல்வேறு முசுலீம் அமைப்புகளும், சனநாயக சக்திகளும் குரல் எழுப்பி வருகின்றன. தனது மதச்சார்பற்ற முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரசு கூட்டணி ஆட்சி, கலவரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராய கமிட்டியொன்றை நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஆனால், கோவை கலவரம் தொடர்பாக இப்படிப்பட்ட வெற்று அறிவிப்பை வெளியிடக்கூட "சமூக நீதிக் காவலர்' மு.க.வின் ஆட்சி தயாராக இல்லை; தமிழகமும் வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்த மௌனத்தை உடைக்காமல், இந்து மதவெறியர்களை வீழ்த்த முடியாது; தண்டிக்கவும் முடியாது!
· வசந்தன்
No comments:
Post a Comment