தமிழ் அரங்கம்

Friday, November 9, 2007

இருதலைக் கொள்ளி இடையில் மக்கள்!

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியாக அழுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். துப்பாக்கியின் குதிரை அழுத்தப்படுவதற்கான தருணம் குறித்த திகிலை காங்கிரசு"மார்க்சிஸ்டு' கூட்டுக் கமிட்டி பராமரித்துக் கொண்டிருக்கிறது. ""இடி.. இடி..'' என்ற கூச்சலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் அரசியல் அரங்கை ஆக்கிரமித்த பார்ப்பன மதவெறியின் திரிசூலம், இன்று ""இடிக்காதே.. இடிக்காதே'' என்ற கூச்சலுடன் மக்களின் இதயத்தைக் குறிபார்க்கிறது. இன்று திடீரெனக் கிளம்பியிருக்கும் இராமர் சேது விவகாரம், அரசியல் களத்தில் நிற்கும் காங்கிரசு, "மார்க்சிஸ்டு'கள், பா.ஜனதா ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கைகொடுக்கிறது.

"மார்க்சிஸ்டு'களின் கோரிக்கைக்கு இணங்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்கான கமிட்டியை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. ""இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்தியா எதிர்காலத்தில் அணுவெடி சோதனை நடத்த முடியாது. தனது வெளியுறவுக் கொள்கைகளைச் சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாமல், அமெரிக்காவின் எடுபிடியாக மாறவேண்டியிருக்கும். அமெரிக்கா நினைத்தால் யுரேனியம் சப்ளையை நிறுத்த முடியும்'' என்றெல்லாம் அமெரிக்காவின் ஹைட் சட்டம் கூறுவதால், ""இந்த 123 ஒப்பந்தம் ஒரு அடிமை ஒப்பந்தமே'' என்பது "மார்க்சிஸ்டு'களின் நிலை. இந்தியா அமெரிக்காவுடன் போட்டிருக்கும் 123 ஒப்பந்தத்தை ஹைட் சட்டம் கட்டுப்படுத்தாது என்று நிறுவுவதற்கு வழக்குரைஞரும் அமைச்சருமான கபில் சிபல் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் வெறும் சொல் ஜாலங்களே என்பதை பிரபல பாதுகாப்புத் துறை ஆய்வாளர் பிரம்ம செலானி உள்ளிட்ட பலர் அம்பலமாக்கிவிட்டனர். ஹைட் சட்டத்துக்கு உட்பட்டதுதான் இந்த ஒப்பந்தம் என்பதை பல அமெரிக்க அதிகாரிகள் பலமுறை பிரகடனம் செய்ததுடன், ஹைட் சட்டத்தைத் திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் தெளிவுபடுத்திவிட்டனர். பிறகு இந்தக் கமிட்டி எதை ஆய்ந்து கத்தை கட்டப் போகிறது? எதுவும் இல்லை.

""சும்மா உட்கார்ந்து டீ குடிக்கலாம். அதற்கு மேல் இந்தக் கமிட்டியால் ஒரு பயனும் இல்லை'' என்கிறார் வலது கம்யூனிஸ்டு எம்.பி குருதாஸ் தாஸ் குப்தா. "மார்க்சிஸ்டு' கட்சியின் யெச்சூரியோ, ""கமிட்டியின் சிபாரிசுகளுக்கு அரசு கட்டுப்படும் என்று தான் நம்புவதாகக்'' கூறுகிறார் (தி இந்து, செப்25)

""கமிட்டியின் முடிவுகள் அரசைக் கட்டுப்படுத்தாது'' என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார் அமைச்சர் கபில் சிபல். பிறகு எதற்காக இந்தக் கமிட்டி?

தன்னுடைய அரசை "மார்க்சிஸ்டு'கள் கவிழ்த்துவிடாமல் தடுக்கத்தான் காங்கிரசு இந்தக் கமிட்டியை அமைத்திருப்பது போலத் தோன்றினாலும், கள்ளத்தனமாகக் காய் நகர்த்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ள இக்கமிட்டியை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்துகிறது காங்கிரசு. தங்கள் கையால் காங்கிரசு அரசைக் கவிழ்க்கும் காட்சி மனத்திரையில் தோன்றி அச்சுறுத்துவதைத் தடுக்க, இந்த மூடுதிரையால் தம் கண்களைக் கட்டிக் கொள்கிறார்கள் "மார்க்சிஸ்டு'கள். ""5 ஆண்டுகள் முடிவதற்குள் உங்கள் அரசைக் கவிழ்க்கும் சூழ்நிலைக்கு எங்களைத் தயவு செய்து தள்ளிவிடாதீர்கள்'' என்று வெளிப்படையாகத் தங்கள் அச்சத்தை வெளியிடவும் "மார்க்சிஸ்டு' களுக்குக் கூச்சமாக இருக்கிறது. ""அடுத்த அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த ஒப்பந்தத்தைத் தள்ளி வைக்கலாமே; ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கும் நாம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்கிறார் யெச்சூரி (தி இந்து, செப்25). இப்படியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குள்ளேயே ஒரு முன்விட்டையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் "மார்க்சிஸ்டு' கட்சி முன்னேறுகிறது.

காங்கிரசு அரசைக் காப்பாற்றுவதற்காக "மார்க்சிஸ்டு'களுக்குத் தேவைப்பட்ட இந்தக் கமிட்டி, இப்போது தம் சொந்தக் கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கே அவசியமானதாகிவிட்டது. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக "மார்க்சிஸ்டு'களின் பொதுச்செயலர் காரத் ஒருபுறம் சண்டமாருதம் செய்து கொண்டிருக்க, ""அணுசக்தியை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கவில்லை'' என்று ஜோதிபாசுவும். ""அணு சக்தி தவிர்க்க முடியாதது என்று தான் கருதுவதாக'' புத்ததேவும் பேசியிருக்கிறார்கள். இந் நிலையில் தம் சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கே "மார்க்சிஸ்டு'களுக்குத் தனியே ஒரு கமிட்டி தேவைப்படுகிறது.

""அணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மறுப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கே விரோதமானது'' என்று முன்னாள் உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ண அய்யர், ப.ப.சாவந்த், சுரேஷ் ஆகியோர் கட்டுரை எழுதியிருக்கின்றனர். அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்பதற்கும், "மார்க்சிஸ்டு'களின் புனிதத் திருக்கோயிலான நாடாளுமன்றத்தின் மகிமையைக் காப்பாற்றுவதற்கும் இத்தகையதொரு பொன்னான வாய்ப்பு இருந்தபோதும் அவர் களால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் காங்கிரசு அரசைக் காப்பாற்றுவது தலையாய கடமையாக அவர்கள் முன்நிற்கிறது.

"காங்கிரசுமார்க்சிஸ்டு அணுசக்தி கமிட்டி என்ன செய்கிறது' என்ற கேள்வியிலிருந்தும், இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் சந்தி சிரிப்பதிலிருந்தும் இராமன் சேது விவகாரம் அவர்களைத் தப்ப வைத்திருக்கிறது. வழக்கு விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் தாக்குதலில் நிலைகுலைந்து குப்புற விழுந்த காங்கிரசு, "விழுந்தாலும் புதையல் மீதுதான் விழுந்திருக்கிறோம்' என்பதைப் பிற்பாடுதான் புரிந்து கொண்டது. எனினும், புதையலைக் காத்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா எனும் பூதம். அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதத்தை பொது அரங்கிலிருந்து அகற்றுவதற்கும், தனது திரைமறைவு வேலைகளைத் தொடருவதற்கும் காங்கிரசு அரசுக்கு இராமபிரான் பயன்பட்டபோதிலும், பாரதிய ஜனதா எனும் பூதம் இப்பிரச்சினையின் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்திருப்பது காங்கிரசை அச்சுறுத்துகிறது. இந்த அபாயத்தைச் சமாளிக்க காங்கிரசிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. கமிட்டி போட்டு அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை 6 மாதம் தள்ளிவைத்து அப்படியே கண்காணாமல் செய்துவிடலாமென "மார்க்சிஸ்டு'கள் முயற்சிப்பதைப் போலவே, இராமன் பாலம் விவகாரத்துக்கும் நீதிமன்றத்தில் 3 மாதம் வாய்தா கேட்டிருக்கிறது, காங்கிரசு அரசு.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை இது லாட்டரிப் பரிசுதான். 1992இல் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்ட இராமன், 2007இல் இராமேசுவரத்தில் திடீரென்று உயிர்த்தெழுந்திருக்கிறான். உட்கட்சித் தகராறுகளாலும் கழுத்தறுப்புகளாலும் நொறுங்கிப் போயிருந்த கட்சியை அள்ளிக் கட்டுவதற்கு இராமன் பயன்பட்டிருக்கிறான். அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கும், இராணுவ ஒப்பந்தத்துக்கும் அச்சாரம் போட்டுவிட்டு, இப் போது எதிர்ப்பது போல நடிப்பதற்கும் கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவை அந்தச் சிரமத்திலிருந்து விடுவித்திருக்கிறது இந்த இராமன் சேது பிரச்சினை. ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குத் துணை நின்றபடியே இந்து தேசியம் பேசுவதற்கான வாய்ப்பை இது பாரதிய ஜனதாவுக்கு வழங்கியிருக்கிறது.

மறுகாலனியாக்கமும் இந்துமதவெறிப் பாசிசமும் தொடர்பற்ற வேறு வேறான பிரச்சினைகள் அல்ல என்பதற்கும், பாரதிய ஜனதாவும் காங்கிரசும் எதிரெதிரான கொள்கைகள் கொண்ட வெவ்வேறு தன்மையிலான கட்சிகள் அல்ல என்பதற்கும் இவை நிரூபணங்கள். 90களில் பாபர் மசூதி இடிப்புக்கு மறைமுக ஆதரவு கொடுத்து, இந்து மதவெறிப் பாசிசத்தைத் தூண்டிவிட்டதன் மூலம் ""காட்'' ஒப்பந்தம் மற்றும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பியது காங்கிரசு அரசு. இந்து தேசியவெறியைத் தூண்டிய பாரதிய ஜனதா, ""காட்'' ஒப்பந்தத்துக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் மூலம் காங்கிரசுடன் இணைந்து கொண்டது.

இன்றோ, அணுசக்தி ஒப்பந்தமும், இராமன் சேது பிரச்சினையும், காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சிகளும் வேறுவேறானவை என்பதைப் போல எதிர்நிலைப் படுத்தப்படுகின்றன. "கண்மூடித்தனமாக அமெரிக்காவை எதிர்ப்பது எங்கள் கொள்கையில்லை' என்று கூறி அணுசக்தி ஒப்பந்தத்தை வழிமொழிகிறது பாரதிய ஜனதா. "மத உணர்வைப் புண்படுத்துவதை அனுமதிக்க முடியாது' என்று கூறி பார்ப்பன பாசிசத்துக்குத் துணை நிற்கிறது காங்கிரசு. இவையிரண்டையும் எதிர்க்கின்ற கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற அரசியல் அரங்கில் இல்லை.

அமெரிக்க அடிமைத்தனமும் பார்ப்பன பாசிசமும் நாட்டின்மீது இருளாகக் கவிந்து கொண்டிருக்கின்றன. இரு பெரும் அபாயங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தும், அவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தன்னுணர்வற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள், உலகக் கோப்பை வெற்றியின் போதையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

·

No comments: