மிகவும் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று காட்டிக் கொண்டு இந்தியப் போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வரும் நடைமுறை, எப்போதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்தான் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுப்பது என்ற பெயரில் காங்கிரசின் சிறுபான்மை ஆட்சியை உண்மையில் நிபந்தனையற்ற முறையில் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரித்து வருகின்றனர்.எனவேதான் ஆரம்பம் முதலே போலி கம்யூனிஸ்டுகளுக்கு உடன்பாடே இல்லாத பல்வேறு விசயங்களுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எவ்விதத் தயக்கமும் இன்றி முன்னுரிமை அளித்து வருகிறது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம், சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு முகமையில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது, அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தம் போன்ற பிரச்சினைகளில் போலி கம்யூனிஸ்டுகளின் கருத்துக்களை மன்மோகன் சிங் அரசு கொஞ்சமும் மதியாது செயல்பட்டது. போலி கம்யூனிஸ்டுகளும் அப்பிரச்சினைகளில் அடையாள எதிர்ப்பு மட்டுமே காட்டி விட்டு, பிறகு கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டனர்.
இதுபோன்றுதான் அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இரண்டாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங்ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டு, இறுதி முடிவுக்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஜூலையில் ஒப்பந்தம் அமலாக்கத்திற்கு வந்தபோது அதை கைவிட வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகள் முதலில் கூறினர். ""முடியவே முடியாது; இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை விலக்கிக் கொள்ளட்டும்; ஒப்பந்தத்தை கைவிடுவதானால் நான் பதவி விலகி விடுவேன்'' என்று மன்மோகன் சிங் சவாலும் மிரட்டலும் விட்டபோது போலி கம்யூனிஸ்டுகள் பீதியடைந்தனர். ஒப்பந்தத்தைக் கைவிடுவது என்பதற்கு பதிலாக மறுபேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரினர். ""மறுபேச்சு வார்த்தைக்கு இடமே கிடையாது; இரண்டு அரசுகளும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதியாகி விட்டது'' என்று அமெரிக்க அமைச்சர் பர்ன்ஸ் திமிராகப் பேசியபோது போலி கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலையை மேலும் தளர்த்திக் கொண்டனர்.
""ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் வேண்டாம்; நிறுத்தி விடவும் வேண்டாம்; அதன் அமலாக்கத்தைத் தற்காலிகமாக தள்ளிப் போடுவதுதான் தமது கோரிக்கை'' என்று போலி கம்யூனிஸ்டுகள் மேலும் கீழே இறங்கினார்கள். ஆனால், மன்மோகன் சிங் அரசோ அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. அதன் வெளியுறவு செயலர் சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு முகமையின் ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான பயண ஏற்பாடுகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார். இந்திய அணுசக்தி நிலைகளை அமெரிக்காவின் கைக்கூலிகள் மேற்பார்வையிடவும் ஒப்பந்தப்படி அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை அமலாக்கவும் அணுசக்தி மூலப்பொருட்களை பெறவுமே அவர் அக்கூட்டத்திற்கு செல்கிறார்.
அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதில் மன்மோகன் சிங் அரசு காட்டிவரும் தீவிரத்தால் மேலும் பீதியடைந்த போலி கம்யூனிஸ்டுகள் தங்கள் உருட்டல் மிரட்டல் நாடகங்களையெல்லாம் முடித்துக் கொண்டு ஒப்பந்த எதிர்ப்பையே கைவிட்டனர். ஒப்பந்தம் குறித்த இடதுசாரிகளின் ஆட்சேபம், சந்தேகம், அச்சம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கான அரசின் பொறுப்புப் பற்றியே இப்போது பேசுகின்றனர். ஒப்பந்தத்தை விட, அமெரிக்காவின் சர்வதேச அணுசக்தி கொள்கையை வரையறுக்கும் ஹைட் சட்டம் குறித்துத்தான் இடதுசாரிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அந்தச் சட்டம் இந்தியாவை எப்படிக் கட்டுப்படுத்தும் என்று ஆராய்வதே இப்போது முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தினாலோ கைவிட்டாலோ ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது முன்வைக்கின்றனர்.
மன்மோகன் சிங் அரசு இதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துத் தருவதாக வாக்களித்திருக்கிறது. அக்குழுவில் அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை வகுத்ததில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க அடிவருடிகளே இடம் பெற்றுள்ளனர். இறுதியில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமலாக்குவதில் உள்ள எதிர்ப்புகளையெல்லாம் போலி கம்யூனிஸ்டுகள் கைவிட்டு விட்டனர். இதற்கிடையே அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் "ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களெல்லாம் தலையறுந்த கோழிகள் போன்று அங்குமிங்கும் அலைகின்றனர்' என்று கிண்டலடித்ததை மட்டும் பெரிதுபடுத்துகின்றனர். உண்மையில், இந்திய அரசியல் சட்டப்படியே இந்திய நாடாளுமன்றம் தலையில்லாத முண்டங்களைக் கொண்டதுதான். அந்நிய நாடுகளுடனான ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறத் தேவையில்லை. அரசின் நிர்வாக அதிகாரங்களில் தலையிடும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது. அவை நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகுதான் அமலாக்கப்பட வேண்டும் என்கிற தடையுமில்லை. இந்தப் போலி ஜனநாயகத்தின் மூலம் புரட்சி நடத்துவதாகக் கூறும் போலி கம்யூனிஸ்டுகள் தலையில்லாத முண்டங்கள் தவிர வேறென்ன?
2 comments:
சிபிஎம் க்கும் சரி சிபிஐக்கும் சரி இரட்டை நாக்கெல்லாம் கிடையாது. நாமதான் அப்படி தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்குறோம். உண்மையில் ஒற்றே ஒற்ற நாக்குதான். ஒற்றே ஒற்ற வாக்குதான்.
இதோ அணூ ஆயுத ஒப்பந்தத்தில் அவர்கள் சுத்த பத்தமாக காங்கிரஸ் கால்ல போன வாரம் விழுந்து முடிஞ்சாச்சி.... இனிமே என்ன... நாங்க பேசிக் கொண்டிருக்கிறோம், integrity குறையாத மன்மோகன் சிங்(அதாவது மாசில்லா மன்மோகன்) வாக்கு கொடுத்துறுக்குறாரு அதனால் இந்த பிரச்சினையில இருந்து விலகுறோம்னு எதுனா சொல்வாங்க....
பின்ன அமெரிக்க அய்யாமார்கள் அத்வானியை மட்டுமா சந்திச்சாங்க... ஜோதிபாசு, புத்ததேவ்ன்னு அவிங்க ஆட்களையும் சேர்த்துதான சந்திச்சாங்க....
அசுரன்
தோழரே
வணக்கம்.
புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
பாவெல்
Post a Comment