பி.இரயாகரன்
02.12.2007
இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.
அந்த வகையில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு, சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு என கருப்பு வெள்ளையாக பார்க்கும் சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்கின்றது. இப்படி கேட்பது ராகவனுக்கு வேடிக்கையாகி விடுகின்றது.
'..சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்று கேட்கும் இதில் இருந்து விடுபடும் நீங்கள், எதை அதற்கு பதிலாக எம்முன் வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். அப்போது தானே நாமும் விடுபட முடியும். நீங்களே விடுபடுவில்லை என்பதல்லவா உண்மை. நீஙகள் எல்லாவற்றையும் புலிக்கூடாக, புலியொழிப்புக்கு ஊடாக பார்க்கவில்லையா? இது தானே கறுப்பு வெள்ளைக் கோட்பாடு. சொல்லுங்கள்.
ராகவன் எழுப்பும் இந்த தர்க்க வாதமே, அரசியல் உள்ளடகத்தில் தவறானது. விமர்சித்தல் என்பது, மக்கள் அரசியலை கைவிட்டு துறந்தோடுவதல்ல. மக்கள் அரசியலை முன்னிறுத்துவது. 'சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு" என்று நீங்கள் கேட்பது ஏன்? உங்களை நீங்கள் பாதுகாக்கத் தான். இதில் அரசு எதிர்ப்பு இல்லாமல், அரசு ஆதரவா!
சிங்கள பெருந்தேசியத்தை பிரதிபலிப்பது தான், பேரினவாத அரசு. சிங்கள அரசு என்பது இதற்கு வெளியில் கிடையாது. பேரினவாதமல்லாத அரசு என்பது மாயை. அதுபோல் சிங்கள பேரினவாத தேசியத்தை விமர்சித்தால், அது அரசை எதிர்ப்பது தான். இது இல்லாத விமர்சனம் என்பது மாயை. எதிர்ப்புமில்லை ஆதரவுமில்லை என்ற நிலைக்கு, அரசியல் எதுவும் கிடையாது.
மறுபக்கத்தில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு" என்பது சாராம்சத்தில் தவறானது. தமிழ் தேசியத்தை விமர்சித்தால், அது புலியெதிர்ப்பு அல்ல. ஏனென்றால் தமிழ் தேசியத்தை புலி முன்னெடுக்கவில்லை. ஆகவே தமிழ் தேசியம் வேறு. புலித் தேசியம் வேறு.
தமிழ் தேசியம் ஊடாக புலியை விமர்சிப்பது என்பது, தேசியத்தை புலிக்கு ஊடாக பார்க்கின்ற குறுகிய பார்வையாகும். இது கறுப்பு வெள்ளை புலியெதிர்ப்பு வரட்டு வாதமாகின்றது. புலியெதிர்ப்பு என்று குறிப்பிடுவது இதைத் தான்.
தமிழ் தேசியத்தை விமர்சிப்பது ஏன் எதற்கு என்ற அடிப்படையில், அதற்கொன்று ஒரு அரசியல் உண்டு. அது பாட்டாளி வர்க்கப் புரட்சியை அடிப்படையாக கொண்டு இருக்கும் அல்லது ஏகாதிபத்தியமயமாக்கலை அடிப்படையாக கொண்டு இருக்கும். நீங்கள் ஏகாதிபத்திய மயமாக்கலை அடிப்படையாக கொண்டும், புலியெதிர்ப்பை அடிப்படையாக கொண்டு, தமிழ் தேசியத்தை விமர்சிக்கவில்லை கொச்சைப்படுத்துகின்றீர்கள்.
விமர்சனம் என்பது, எதையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்பதல்ல. அப்படியானால் விமர்சனம் என்பது என்ன? சமூகத்தின் நலனை முன்னிறுத்தி, அதைக் கொண்டு விமர்சிக்க மறுக்கின்ற எந்த விமர்சனமும், வெள்ளயும் கறுப்புமாகத் தான் இருக்கும்;. அது மக்களுக்க எதிரானதாக இருக்கும். அதாவது இது உங்களுக்கு பொருந்துகின்றது. நீங்கள் அனைத்தையும் புலியினூடாக பார்க்கும் போது, இது நிகழ்கின்றது.
சமூகத்துக்கு வெளியிலான தன்னளவிலான விமர்சனம் என்பது, குறுகிய நோக்கம் கொண்டது. அது வெள்ளையாக அல்லது கறுப்பாகத் தான் இருக்கும். மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதைக் காட்டி, உங்களால் எதையும் விமர்சிக்க முடிவதில்லை. தம்மளவில் கறுப்பும் வெள்ளையுமாக இருந்து கொண்டு, தம்மை விமர்சிக்க கூடாது என்பது, விமர்சன வரட்டுத்தனமாகும்.
பின் குறிப்பு:
தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரையைக் காண உள்ளோம்.
No comments:
Post a Comment