அறம்…
அனுபவம்.
அப்போது நான் கோவையில் சர்வீஸ் என்ஜினியராகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலம். சாயங்காலம் எல்லா கால்சும் முடித்து விட்டு, இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். அப்படியே பைக்க ஓட்டீட்டு காந்திபுரம் போய், ஒரு பாதாம் பால் அடிக்கிறது வழக்கமாகி விட்டது.
அது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது.
""டே ராசப்பா!..... எஸ்கேஏஏஏப்..'' அவசரமாக பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கை உதைத்தேன். அன்று இரவு என் கனவில் மேக்கப் சுந்தரி சிரித்து விட்டுச் சென்றாள்.
மறுநாள் மாலை ஆக ஆக ஒரு வேலையும் சரியாக ஓடவே இல்லை. ஒரே பரபரப்பாக இருந்தது. பாதாம் பால் வேறு நல்ல சுவையாக இருந்து தொலைத்தது. ""என்னடா! பத்து நாள் கக்கூஸூ போகாதவன் மாறி மூஞ்சிய வச்சுட்டு திரியுற?'' நண்பன் வேறு நக்கலடித்தான். எனது குறுகுறுப்பு அதிகரித்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ""டே ராசப்பா! இது உனக்கு ஒரு சவால்டா. உன்னோட ஒழுக்கத்தோட பலம் இவ்வளவுதானா? இன்னிக்கு பால் சாப்பிட போற, ஆனா திரும்ப அதை பாக்க மாட்ட...ஓகே?''
சரியாக 9.59க்கே பாதாம் பால் கடைக்கு ஆஜர். முதலில் எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று கொண்டே குடித்தேன். "சனி'தான் நம்ம மச்சானாச்சே! சாதாரணமாகத் திரும்புவது போல திரும்பினேன்.
அவள் எதிர்பார்த்திருந்தாள் ... ! அதே கூப்பிடும் சிரிப்பு. என் உள்காயத்தை மறைத்துக்கொண்டே ""சே! இதுக்கு பிச்சை எடுக்கலாம்..'' என்று சத்தமாகச் சொன்னேன். சட்டென்று அவள் முகம் சுருங்கியது, எனக்கு திருப்தியாக இருந்தது. கடைக்காரனுக்கு பணத்தைக் கடாசி விட்டு, பைக்கை கதறவிட்டு கிளம்பினேன். அவளை முறைத்துக் கொண்டே கடந்து சென்றேன்.
ஆயிற்று, இப்படியாக ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் இரவு அதே பால்கடை. கொஞ்ச தூரத்தில் அதே அவள். இப்போதெல்லாம் அவள் என்னை பார்ப்பதில்லை. அதான் யோக்கியன் வேஷம் போட்டாச்சே! அந்த நேரத்தில் ஒரு சாராய பார்ட்டி என்னைக் கடந்து சென்றது. பாடிக்கொண்டே அவளைப் பார்த்ததும் நின்றது. ஒரு மாதிரியாக இளித்தபடியே ""யேய் வாடி'' என்றது. ""முன்னூறு'' உணர்ச்சியே இல்லாமல் காய்கறி விலை சொல்வது போல் சொன்னாள். எனக்கு சுவாரசியமானது. இவள்தான் நான் கண்ணால் பார்த்த முதல் விபச்சாரி. இதுவே நான் காதில் கேட்ட முதல் பேரம். இருக்காதா பின்னே?
""ஹா... தாரன்! வாடி மொதல்ல''
""இங்கியே குடு''
""ஓ! தர்லன்னா வரமாட்டியா? வாடின்னா..'' சொன்னபடியே கையைப் பிடித்து இழுத்தது சாராயக்கடை.
""கட்டித்தீனி! உட்றா கையை'' சீறினாள் அந்தப் பெண்.
சாராயம் சூடேறி விட்டான். ஒன்றும் பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டான். சாலையில் யாரும் இல்லை. நானும், பாதாம்பால் கடைக்காரனும்தான் இருந்தோம். கடைக்காரன் முகத்தில் ஒரு மாற்றமும் காட்டாமல், "தம்ளர் கழுவுவதே வாழ்க்கை இலட்சியம்' போல கழுவிக்கொண்டிருந்தான். இதற்குள் நாலைந்து அடி விழுந்து விட்டது. உதடு கிழிந்து ரத்தம் வேறு கொட்ட ஆரம்பித்தது. சேலை முந்தானையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான்.
எனக்கு பொறுக்க முடியவில்லை. சாராயம் வேறு சோதாவாகத் தெரிந்தானா, இவன்கிட்ட காட்டாம வேற எவன்கிட்ட காட்டுவதாம், என் வீரத்தை! விடுவிடுவென்று சென்றேன்.
""டேய் மயிரு... கைய எடுறா. நான் முன்னாடியே காசு குடுத்துருக்கேன். நீ மூடிட்டு போயிரு. இல்ல மூஞ்சிய பேத்துருவேன்'' எனக்கே எனது குரல் சத்தமாகக் கேட்டது. சாராயம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை அண்ணாந்து பார்த்தான். நான் அவனை விட அரை அடி உயரம். சப்த நாடியையும் ஒடுக்கிக் கொண்டு தள்ளாடியபடியே நகர்ந்து விட்டான்.
நான் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தேன். மேக்கப் முழுவதும் கலைந்து உதட்டில் ரத்தம் வழிய கோரமாய் இருந்தாள். ""ரொம்ப தேங்க்ஸூ தம்பி'' என்றாள். கண்ணில் நீர். அவள் "தம்பி' என்று விளித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக்கொண்டே< ""பரவாயில்லைங்க. பாருங்க இந்த மாறி வேலை செய்யறதுனாலதான இப்படியெல்லாம் நடக்குது?'' அட்வைசுத் தண்ணியை அள்ளிவிட இதை விடவா நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பின்னே நாமெல்லாம் எப்ப காந்தி தாத்தா ஆகறது?
ஆனால் என் அட்வைசை அவள் லட்சியம் செய்யவில்லை. ""தேங்ஸூ தம்பி'' என்று என்னிடம் சொன்னபடியே ரோட்டில் ஓடிய ஒரு ஆட்டோவை அழைத்தாள். என்னைத் திரும்பிப் பார்த்தபடியே சென்று ஏறிக்கொண்டாள். ஆட்டோ ஒரு நிமிடம் போகாமல் நின்றான். நானும் வருவேன் என்று எதிர்பார்த்தான் போல. அவள் போகச்சொன்ன பின்னரே ஆட்டோவைக் கிளப்பினான்.
அன்றிரவு என் காதுகளில் "தம்பி' என்ற வார்த்தை ஓலித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் கோவிந்தா. அதிகாலை மூன்று மணிக்கு முடிவு செய்தேன் ""இன்றிலிருந்து பாதாம் பால் விஷப்பரிச்சை ஓவர்''.
ஒரு மாதம் இப்படியே ஓடிவிட்டது. ஒருநாள் மாலை தற்செயலாக பழைய மேம்பாலம் அருகே வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவளைக் கவனித்தேன். மேம்பாலத்தின் கீழ் இருந்து வேக வேகமாக ஓடி வந்தாள். அதே அவள். கடைசியாகப் பார்த்த அதே கோலம். மேக்கப் கலைந்து கன்னம் வீங்கி அலங்கோலமாய் இருந்தவள், கையை வீசி வண்டியை நிறுத்தினாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். கொஞ்சம் தொலைவில் பேண்ட்டை இடுப்புக்கு இழுத்தபடியே ஒரு காண்டாமிருகம் ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த உருவமே எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனாலும் மறைத்துக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கப் பார்த்தேன். அதான் ஒரு முறை ஒரு சோதாவிடம் ஹீரோ ஆகித் தொலைத்து விட்டிருந்தேன். இப்போது பின்வாங்கவா முடியும்?
""தம்பி வேண்டாம்பா! அது போலீஸூ, நீ வண்டிய எடு.''
நல்லவேளை முதலிலேயே சொல்லி காப்பாற்றினாள். கியரை மாற்றி வண்டியைக் கிளப்பினேன். பின்னால் தொத்திக் கொண்டாள். நன்றாக இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது!
"எங்கீங்க?'
"புதூரு'
வேறு பேச்சே இல்லை. புதூர் வந்ததும் நாலைந்து சந்து பொந்துகளில் திருப்பச் சொன்னாள். ஒரு குடிசையின் முன் இறங்கிக்கொண்டாள். வண்டிச் சத்தம் கேட்டு ஒரு ஓமக்குச்சி வெளியே வந்தான். ""சார் உள்ளாற வாங்க'' குழைந்து கொண்டே கூப்பிட்டான். ""யோவ் நா அதுக்கு வரல. அந்தம்மாவப் பாரு மூஞ்சி கிழிஞ்சி வந்துருக்காங்க'' அவன் அவளுடைய காயத்தை லட்சியம் செய்யவில்லை. ""என்னடி இன்னிக்கு கஸ்ட்டமரு இல்லியா?''
""போலீஸூ தொல்ல, வா அப்புறம் பேசிக்கலாம்'' அவள் உள்ளே போக எத்தனித்தாள். அவன் இளித்தபடியே என்னிடம் வந்தான். சுர்ரென்று வந்தது எனக்கு. ""டேய்...'' அதற்குள் அவள் குறுக்கிட்டாள். ""தம்பி என்னிய இங்க உடத்தான் வந்திச்சு. நீங்க போங்க தம்பி. நீ உள்ளார வாய்யா''
புதூரிலிருந்து வீடு வரும் வரை ரத்தம் வழிந்த அவள் முகத்தை நினைத்துக் கொண்டே வந்தேன். ""என்ன வாழ்க்கை! கண்டவன்கிட்ட அடி வாங்கி, உதை வாங்கி, நூறோ எரநூறோ சம்பாதிக்க கண்டவனோட படுத்து, நோயோட வாழ்ந்து நோயோட செத்து, நோய பரப்பி, குடும்பமில்லாம சாக்காலத்துல கூட நிம்மதி இல்லாம செத்து, அப்படியும் சாகும்போது பக்கத்துல யாரும் இல்லாம தனியா செத்து..''
இரவு இரண்டு மணிக்கு அம்மா கேட்டாள், ""இன்னிக்கு எவன்கிட்டடா அடி வாங்கிட்டு வந்த, தூங்காம பொரண்டுட்டு இருக்க?'' என்னிடம் பதில் இல்லை.
இரண்டு நாள் போயிருக்கும். காலையில் வழக்கம் போல கால்ஸ் போகாமல் கட் அடித்து விட்டு ரயில்வேசுக்கு எதிரே உள்ள பேக்கரியில் உட்கார்ந்து டீ அடித்துக் கொண்டிருந்தேன். ""தம்பி..'' நிமிர்ந்தேன். தையல் போட்ட உதட்டுடன் அவள். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தெரிந்தவர்கள் இல்லை.
""நல்லாருக்கீங்களா?'' என்ன ஒரு கேள்வி!
""..ம்ம் இருக்கேன் தம்பி. நீங்க இங்க பக்கத்துல தான் வேலை செய்யறீங்களா?''
""ஆமாங்க. அந்தாளு உங்க ஊட்டுக்காரருங்களா?''
""ம்''
""வேலைக்கெல்லாம் போறதில்லீங்களா?''
""கல்யாணத்துக்கு மின்னாடி போய்ட்டிருந்தாரு. இப்ப இல்ல.''
""உங்களுக்கு பசங்க புள்ளைங்க இருக்குதுங்களா?''
""ஒரு புள்ளயிருக்குது தம்பி.''
சப்ளையரிடம் அவளுக்கும் சேர்த்து டீ சொன்னேன்.
அவளிடம் கேட்டேன், ""ஏங்க! அவுசாரி வேல செய்யறீங்களே! கூச்சமாவே இல்லீங்களா? இதுக்கு ஏதாச்சும் கூலி வேலைக்கு போலாமே?''
""எந்தூர்ல தம்பி கூலி வேலைக்கு அம்பது ரூவாக்கு மேல தர்றாங்க? அதுல சோறு காச்சறதா? இல்ல எம் பொண்ண படிக்க வக்கிறதா? அவளுக்கு அந்த அம்பது ரூவாக் காசுல கல்யாணங்காச்சி நடத்தறதா?''
""அதுக்கு, ஊரக்கெடுத்து சம்பாரிச்ச காசுல திங்கறது தெரிஞ்சா அவளுக்கு குளுகுளுன்னு இருக்குங்களா?''
""யாரு தம்பி ஊரக்கெடுக்கறது. அது ஏற்கனவே கெட்டுதாங் கெடக்குது. எங்கிட்ட வர்றவனெல்லாம் நாங் கெடுத்துதான் எங்கிட்ட வர்றானா? மின்னாடியே கெட்டதனாலதான் எங்கிட்ட வர்றான். யோக்கியனுக்கு அவுசாரிகிட்ட என்ன வேல? மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்க, காலையில பட்டையோட ஊட்டவுட்டு கௌம்பி, நாளெல்லாம் காந்தி வேசம் போட்டுட்டு சாயந்திரமா எம்மேல கைய வைக்கறவனயா, நீ யோக்கியனுங்குற? ஊட்டுல பொண்டாட்டிய வச்சுட்டு எங்கிட்ட வர்றவன், நானில்லீன்னா பக்கத்தூட்டுப் பொம்பளைய கைய புடுச்சு இளுப்பான். பக்கத்தூட்டுக்காரிக பாதுகாப்பா இருக்காளுகன்னா அதுக்கு நாந்தான் காரணமாக்கும்.''
""அவனுகள உடுங்க. நீங்க பண்றது பாவத்தொழில் இல்லீங்களா?''
""எது தம்பி பாவம்?''
""பல பேரோட படுக்குறது பாவமில்லீங்களா?''
""நீங்க மனசுக்குள்ளாற பண்றதெல்லாம் நா வெளியில பண்றேன். வேறென்ன தம்பி வித்தியாசம்?'' பலநாள்களுக்குப் பிறகு மீண்டும் செருப்படி. டீ வந்தது. டீயைக் குடித்துக்கொண்டே கேட்டேன்.
""அப்படீன்னா அவுசாரித்தனம் புண்ணியம்னு எந்த சாமி, எந்த புக்குல சொல்லுச்சுங்க?''
சிரித்துக் கொண்டே சொன்னாள், ""சாமி எந்தப் புக்கும் எளுதல தம்பி. எளுதுனதெல்லாம் எல்லா சவுரியமும் இருந்த உங்கள மாறி ஆளுங்கதான் தம்பி. பாவ புண்ணியத்த புக்குல எளுதுனவன எங்க சேரில பத்து நாளு இருந்து பாக்கச் சொல்லு. திரும்பி வந்து கொல பண்றது கூட தப்பில்லைன்னு இன்னொரு புக்கு எளுதுவான். அப்ப நீங்கெல்லாம் கொல பண்ணக் கௌம்பீருவீங்களா? உடுங்க தம்பி! அவிங்கவிங்க நாயம் அவிங்கவிங்களுக்கு. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க பாக்காத கேக்காத வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு. அதுல வாழற மனுசனுங்களும் உங்க ஒலகத்துலதான் இருக்காங்க. உங்களுக்கு தெரியாது புரியாதுங்கறதுக்காக அதெல்லாம் பொய்யின்னு ஆயிராது. ஒங்க நாயம், பாவம், புண்ணியம் இதெல்லாம்வுட வாழ்க்க பெரிசு தம்பி''
""நா.. வாரந் தம்பி'' என்றபடியே டீக்காசை அவளே கொடுத்து விட்டு எதிர்ப்புறம் நின்ற பேருந்தை நோக்கி வேகமாக சென்றே விட்டாள். மதியம் வரை அசையாமல் பேக்கரியிலேயே உட்கார்ந்திருந்தேன். ஆங்கில ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள். உண்மைச்சூடு தந்த அதிர்ச்சியில் வெகுநேரம் உறைந்திருந்தேன்.
இப்போதெல்லாம் பாதாம் பால் சாப்பிடுவதில்லை. நீண்டநாள் கழித்து சாப்பிட வேண்டும் போல இருந்தது. பைக்கை காந்திபுரம் விட்டேன். அதே கடை. ஆர்வமாய் இருட்டுப் பகுதியைப் பார்த்தேன். அவள் இருந்தாள். பாசாங்கில்லாமல் சிரித்தேன். அவளும் சிரித்தாள். அது அழைப்பின் சிரிப்பல்ல. நட்பின் சிரிப்பு. இன்றைக்கு பால் கூடுதல் சுவையாக இருந்தது.
காசைக் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். கோவையின் மார்கழிக் குளிரில் உடல் நடுங்கியது. பனியடர்ந்த சாலையில் மெர்க்குரி வெளிச்சம் தெளிவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தவறில்லாத ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டது போல மனம் நிறைவாக இருந்தது. அன்று கனவுகள் இல்லாமல் தூங்கினேன்.
· கார்க்கி
4 comments:
இது ரொம்ப நாள் முன்னயே நான் படிச்சி இருக்கேன்....ஒரிஜினல் பதிவுக்கு லிங்க் கொடுக்க இயலுமா
உடலை வைத்து பிழைப்பு நடத்துவது... சமுதாய அவலம்...
அடிப்படி வாழ்க்கைக்கு விபசாரம் செய்வதை வெறுத்த உங்களுக்கு...
அதே கேடு கெட்ட தொழிலை செய்து... மிக உயர்ந்த பதவியை பிடித்தவர்களையும்..
ஊடக விபசாரிகள் சோ... தினமலம்... பொந்து ராம்... தற்போது ராமாயணம் பாடும் கலாநிதி, தயாநிதி... போன்றவர்களையும்...
ஆன்மீக விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகள், சிவசங்கரபாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்... போன்றவர்களையும்...
என்ன சொல்ல போகிறீர்கள்?
புத்தகங்களின் விளக்கப்படாத வாழ்வின் னிஜம்
1.புதிய கலச்சாரத்தில் இது வெளிவந்தது.
2.அரசியல் மற்றும் சமுதாயத்தின் பெயரில் விபச்சாரம் செய்பவர்களை, கம்ய+னிஸ்ட்டுகள் மட்டும் தான் எதிர்த்துப் போடுகின்றார்கள். மாற்று சமுதாயம் ஒன்றைக் கோருகினறனர்.
இக் கதை அந்த பெண்ணின் உடாக, சரசாரி மனிதர்களில் உள்ள "நல்லவர்களின்" விபச்சாரத்தையே அம்பலமாக்கின்றது.
Post a Comment