தமிழ் அரங்கம்

Saturday, March 29, 2008

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!



""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

No comments: