"ஒரு சமயம் "காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்' திருவாரூர் "விஜயம்' செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், "தண்டவாளம்' ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்... ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சில வீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை! அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார். திடீரென ஒரு குரல், ""மானங்கெட்ட பசங்களா! இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா? ஏன்! பாப்பான்க தூக்கினாலென்ன?'' என்று கேட்டது.... ""இறக்கி வைச்சிட்டு எல்லாப் பசங்களும் ஓடுறீங்களா? இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா?'' என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல "தண்டவாளம்' நின்று கொண்டு "பாவ்லா' காட்டலானார்! அவ்வளவுதான் பல்லக்கை வைத்து விட்டுப் பல்லக்குத் தூக்கிகள் இங்கொருவர் அங்கொருவராகப் பாய்ந்து ஓடிவிட்டனர்.''
""எங்கள் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது, நன்கொடையெல்லாம் வழங்குவது முதலிய காரியங்களைச் செய்த "ஜஸ்டிஸ்' கட்சிப் பிரமுகர் இராமானுஜ முதலியார் வீட்டில்தான் சங்கராச்சாரியார் ""காம்ப்'' போட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்ப்பதென்றால் சட்டை போட்டிருக்கக் கூடாது! "தண்டவாளம்' ஒரு நோட்டீஸ் அடித்தார்.சங்கராச்சாரியார் சுவாமிகளைப் பார்க்கச் சட்டை போட்டிருக்கக் கூடாது, ஆண்கள்! ரொம்பச் சரி! பெண்கள் மட்டும் இரவிக்கை போட்டுக் கொண்டு போகலாமா? அதென்ன நியாயம்?'' என்கிற வாசகங்களோடு.
யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்? (கலைஞர்)திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், ""தமிழ்நாட்டில் பெரியார் என்கிற நச்சாறு ஓடுகிறது'' என்று சொல்லி விட்டார். இந்தச் சமயம் பார்த்து திருவாரூர் தியாகராஜப் பெருமாள் கோயிலில் (1.4.44 என்று நினைவு) அவருடைய ""உபன்யாசங்கள்'' நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். கருணாநிதி சும்மா இருப்பாரா? அவருடைய கைவண்ணத்தில் ""கிருபானந்த வாரியாருக்குச் சில கேள்விகள்'' என்கிற தலைப்பில் துண்டு நோட்டீஸ் தயாராகியிருந்தது.
"அன்பே சிவம் என்கிறீர்களே! 6000 சமணர்களைக் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்தது உங்கள் சிவ மதமல்லவா?'"முற்றுந் துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன்? மார்பெல்லாம் ஆபரணாதிகள் ஏன்? காய்ச்சிய பாலும் கற்கண்டும் ஏன்? கார் ஏன்? இரயில் ஏன்?' இப்படிக் கேள்விகள்.
வாரியார் சுவாமிகள் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.""அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. "எங்கும் அன்பு தழைக்க வேண்டும்', என்பதுதான் எம்பெருமானின் கருணை உள்ளம். பாருங்கள்! என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான்? மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள்! காய்கறிகளை!!.. கத்தரிக்காய்... வெண்டைக்காய்...''
""அது சரி சுவாமிகளே! அதே எம்பெருமான் சிங்கத்திற்காக எந்த உணவை உண்டு பண்ணினார்?'' கணீரென்று கேள்வி எழும்பியது! யாருடைய குரல் என்று கூற வேண்டுமா? (கலைஞர்) வாரியார் கொஞ்சநேரம் திகைத்து பேச்சை நிறுத்தினார். முன் கூட்டியே ஏற்பாடு செய்தபடி, நாங்கள், ""பதில் சொல்! பதில் சொல்!'' என்று கத்தலானோம். எங்களை எல்லாம் போலீஸ் துரத்தியது. எங்கள் வேலை முடிந்தது என்று எடுத்தோம் ஓட்டம்! அது முதல் பந்தோபஸ்து இல்லாமல் கோயிலில், "உபன்யாசங்கள்' நடப்பது இல்லை.— (இராம. அரங்கண்ணலின் "நினைவுகள்' என்ற புத்தகத்திலிருந்து...)
இந்தப் பரம்பரையில் அல்லது வழியில் வந்த கலைஞர், "பேடி ராமனை' ("பேடி' பட்டம் உபயம் திருமதி சீதா ராமன்) பற்றிச் சொன்ன கருத்துக்கு ""கருணாநிதியின் தலையை கொண்டு வருவோர்க்கு தக்க சன்மானம்'' என்றான் வேதாந்தி. அதைக் கேட்ட தி.மு.க. தொண்டர்கள் கோபமுற்றதைப் பார்த்து, "தங்கள் தலை போய்விடுமோ?' என்று தேவையற்ற பயம் கொண்டு, பா.ஜ.க.வின் எச்.ராஜாவும், குமாரவேலும் அலறினார்கள்.
ஆளானப்பட்ட வஸ்தாதுகளே இப்படி அரண்டு போய்க் கிடக்க, சில இலக்கியத் "தறுதலைகள்', ""ஏய், எங்க ராமனை பத்தியே தப்பா வாடா பேசுறீங்க'' என்கிற ரீதியில் களம் இறங்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள், இலக்கிய உலகின் "இல.கணேச'னான மாலனும், இலக்கிய உலகின் "புரட்சித்தலைவி' வாஸந்தியும்."புதிய பார்வை' என்ற பத்திரிக்கையில் (ரொம்ப புதிய்ய்ய பார்வைய்ய்யா), "ராமர் பாலம்; கலைஞர் பேசியது சரிதானா?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு மாலன். வேதாந்தியோட கருத்தையே வேறு வார்த்தைகளில்.... இது மாமாவோட வெர்ஷன்.
"தீராநதி' என்ற பத்திரிக்கையில் "இராமனுக்கான போர்' என்ற தலைப்பில் ஒரு "பொம்பள வேதாந்தி'யைப் போல, கலைஞரின் முன் கத்தியோடு குதித்திருக்கிறார், வாஸந்தி. இது மாமியோட வெர்ஷன்.
நமக்கோ, வேதாந்தி என்கிறவன் இப்படித் திமிர்த்தனமாக, ""ஒரு மாநில முதல்வரின் தலையை வெட்டிக்கிட்டு வா''ன்னு சொன்னானேன்னு கோபமா வருது. ஆனால் இவுங்களுக்கு, "ராமரை கருணாநிதி திட்டிட்டாரே'ன்னு ஆத்திரமா வருது.இருவரும் தங்களது கட்டுரைகளில், "பெருவாரியான இந்துக்களின் உணர்வை...' என்று திரும்ப திரும்ப "செட்டு' சேர்க்கிறார்கள். நம்மதான் நாத்திகர்கள். ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் இல்லை. அதில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ராமனைப் பற்றிச் சொன்னால் கோபம் வருவதில்லை. கலைஞரைப் பற்றி சொன்னால்தான் கோபம் வருகிறது. ஏனென்றால், "ராமன் வழிபாடு' என்பது தமிழ்நாட்டில் கிடையாது. அதனால்தான் தமிழ்நாட்டில் ராமனுக்கு குறிப்பிடும்படியாக கோயில் கூட இல்லை. (தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்து பேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர் இவுங்க)
மாலன் எழுதுறாரு, ""பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு, நம் அரசியல் தலைவர்களின் அடிமனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக் கொணர்ந்து விட்டது'' அதையே நாம் இப்படி எழுதுவோம், ""கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, நடு நிலையாளர்களாக, மத நல்லிணக்கவாதியாக, சிறுபான்மையினரின் ஆதரவாளராக வேஷம் போட்டுக் கொண்டிருந்த, பார்ப்பன பயங்கரவாதிகள் தங்களது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார்கள்.''அதற்கு ஒரு எடுத்துக்காட்டை "மாமியின் வெர்ஷனில்' இருந்து பார்ப்போம். ""அரசியலில் பதவியும் புகழும் கீர்த்தியும் செல்வாக்கும் இருக்கும் வரை எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன் உள்பட, நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு வந்துவிட்டால், அது உச்ச நீதிமன்றம் வரை போய்விடும்.
""ராமர் பாலத்தை இடிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை மூன்று மாத தவணைக்குள் ஆராய்வதாக உச்ச நீதிமன்றத்தில் சொன்னது காங்கிரஸ் அரசு. கருணாநிதி இதை சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, அதே ராமனின் பெயரில் அவரது கனவுத் திட்டம் அடிவாங்கி விடும் என்ற சாத்தியம் அவமானகரமானது. அவரது நாடு தழுவிய கீர்த்திக்கும், அரசியல் சக்திக்கும் வயதுக்கும் தோல்வியையும் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியம் இல்லை. தாம் போட்ட கணக்கு தப்பிவிட்டது என்ற ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு அவசியம் என்று படவில்லை.''... ""எத்தனை வயதானாலும், எத்தனை செல்வாக்கிருந்தாலும் நா காப்பது நல்லது. இல்லையென்றால், வயதானதற்கும் பெற்ற அனுபவங்களுக்கும் அர்த்தமில்லை.''இந்த வரிகளில், முதல்வர் மீது "வேதாந்தி'க்கு இருந்த அதே ஆத்திரம், "வாஸந்தி'யிடமும் வெளிப்படுகிறது.
""நா காப்பது நல்லது. இல்லையென்றால்....'' இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உளவியல், "கலைஞர் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டும்' என்கிற எண்ணத்தையும், "ஜென்ம விரோத'த்தையும் வெளிப்படுத்துகிறது."நடுநிலை' மாலனோ, இல. கணேசன் பாணியில், ""ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர் என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்கு தயாரா? என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிட கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால், இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை'' என்கிறார்.
நரேந்திர மோடி என்கிற ஒருவன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டல்ல, படுத்துக் கொண்டு, திட்டமிட்டு இஸ்லாமிய மக்களைக் கொலை செய்கிறான். அதைக் கேட்பதற்கு வக்கற்றவர்கள், அல்லது அந்தக் கொலைகளை விரும்புகிறவர்கள், ஜனநாயக ரீதியாக ஒருவர் கருத்துச் சொல்வதைக் கண்டிக்கிறார்கள். ("சுப்ரீம் கோர்ட்டு'க்கு "ஜட்ஜா' போறதுக்கான முழுத் தகுதியும் உள்ளவர்கள்)கம்யூனிசத்திற்கு நேரெதிர் கருத்து கொண்ட பிற்போக்காளர்களும், கம்யூனிச விரோதிகளும் தங்களது மோசடிக் கருத்தை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது மட்டும் மார்க்சை "வெறும் மேற்கோளாக'ப் பயன்படுத்துகிற மோசடி வேலையைச் செய்வார்கள். அப்படித்தான் இந்த "மோசடி மாலனும்' மார்க்சை மேற்கோள் காட்டுகிறார்.
""மதம் ஒரு அபின் என்ற கருத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் முன், அதை விளக்கும் முகமாக, மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துக்களின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் என்று சொல்கிறார் மார்க்ஸ்'' என்றுதன் நோக்கத்துக்கு ஏற்ப மார்க்சைப் பிரித்து, திரிக்கிறார்.சரியாக 150 ஆண்டுகளுக்கு முன், 1848இல் "மார்க்ஸ் எங்கெல்ஸால்' எழுதப்பட்ட "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' இப்படித் துவங்குகிறது. ""ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் — கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிக்கும் கிசோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.''
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதை "கடவுள்' என்று சொல்வதுதான் உலக வழக்கம். ஆனால், இவர்களோ கம்யூனிசத்தை "பூதம்' என்கிறார்கள். "கடவுள்' என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை. கம்யூனிசத்துக்கு எதிராக அணி சேர்ந்து இருப்பவர்கள்தான் கடவுள் ஆதரவாளர்கள், போப்பாண்டவர்கள் போன்ற மதவாதிகள். அதனால்தான் அதைப் "புனிதக் கூட்டு' என்ற வார்த்தையால் அடையாளப் படுத்துகிறார்கள். "பூதம்' என்ற வார்த்தையை கடவுளுக்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.ஒருவேளை, மாலன் இன்னொருநாள் கம்யூனிசத்துக்கு எதிராகக் கருத்துச் சொல்லும்போது, "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே, கம்யூனிசத்தை மார்க்சும், எங்கெல்சும் "பூதம்' என்று சொல்லியிருக்கிறார்கள், என்பது கவனிக்கத் தக்கது' என்று சொல்லுவார் போலும்.
""எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒரு வகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக் கொண்ட வழக்கம். கீழ்த்திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றை விட இலக்கியத்தில் பதிவு செய்வது, என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும், இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்கிறார் மாலன்.வரலாற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது இலக்கியத்தையே வரலாறாகச் சித்தரித்ததில் எவ்வளவு மோசடிகள் நியாயப் படுத்தப்பட்டிருக்கின்றன! சம்பூகனைக் கொன்ற "கொலைகார' ராமனை "கதாநாயக'னாக நியாயப்படுத்துகிறதே, அது எது? இலக்கியமா? வரலாறா? ஆயிரக்கணக்கான சமணர்களைக் கொன்ற பிறகும், "அன்பே சிவ'மாகக் காட்சி தருகிறார்களே, "சைவக் களவாணிகள்' அது எதனால்? வரலாற்றினாலா? இலக்கியத்தினாலா?
தாழ்த்தப்பட்டவர் என்பதினாலேயே "நந்தனை' தீயிட்டுக் கொளுத்தி, அந்தக் கொலையை "புனித'ப் படுத்தினார்களே, பார்ப்பனர்கள், அது வரலாறா, இலக்கியமா?இலக்கியம் முழுவதும் பார்ப்பன நலன், பார்ப்பன உயர்வு, உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துக்களாகவே நிரம்பியிருக்கிற ஒரு நாட்டில், "வரலாற்றை விடவும், இலக்கியம் முதன்மையானது' என்று ஒருவன் சொன்னால், அவன் எப்பேற்பட்ட "ஃபிராடாக' இருப்பான்.
""இராமாயணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன் மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள்'' என்கிறார் இந்த "உத்தம புருஷன்' மாலன். உன் ராமன் சம்பூகனைக் கொன்றானே, சம்பூகன் என்ன உன் பொண்டாட்டி கையைப் பிடிச்சா இழுத்தான்?
···
""ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று உண்டு'' என்று மாலன் தன் கட்டுரையைத் துவக்குகிறார். அதேபோல மாமியும், ""திருவையாறு போயிருக்கிறீர்களா? தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கேட்டிருக்கிறீர்களா? அவரது தெலுங்குப் பாடல்களையும் கேட்டு நெக்குருகி நிற்கும் சாமான்ய தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கலைஞரை கேட்கிறார். ("சாமான்ய தமிழர்கள்' வார்த்தைக் கவனிக்கவும்)நாமும் அதே தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றைச் சொல்லி, ராமனின் பெருமையை உலகுக்கு அறிவிப்போம். வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாமல் சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி:
""ராமா உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக் கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை. என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், ""ஹா புருஷ வேஷத்துடன் வந்த ஒரு பெண்பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்'' என்று தம்மை நொந்து கொள்வார்.இம்மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும் தன்மையான கூத்தாடியைப் போல நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை'' (அயோத்தியா காண்டம், 30வது சர்க்கம்; 229வது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழிபெயர்ப்பு)
திருமதி. சீதை தன் கணவன் ராமனை இப்படிக் கேவலமாகப் பேசிய "இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக' ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் ராமனை நினைத்துப் பாடிய ""எந்துகோ ராமா... ஈ ஜென்மமு...'' என்கிற கீர்த்தனையைப் போட்டு, அதனை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.""உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்?''
மாலனும், வாஸந்தியும் ஏதோ கலைஞர் ராமனைப் பற்றி தன் சொந்தக் கருத்தைத் தெரிவித்ததைப் போல கோபப்படுகிறார்கள். ஆனால், அவர் வால்மீகி ராமாயணத்தில் இருந்துதான் மேற்கோள் காட்டினார். இவர்களுக்கு குறைந்தபட்ச அறிவு நாணயம் இருந்தால், வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற "மேற்படி' செய்திகளுக்கு முறையான விளக்கம் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவாளர்கள் மீது பாயட்டும்.""கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பதும் நாத்திகவாதி என்பதும் அவரது சொந்த விஷயம்.'' ""கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல்லெறியக் கூடாது. அதுவும் எப்படிப்பட்ட கல்? ஒரே வீச்சில் இந்தியா மொத்தத்திலும் உள்ள பெரும்பான்மையான இந்துக்களைப் புண்படுத்தும் ஆயுதமாக'' என்று சீறுகிறார் வாஸந்தி.
ஒரு காலத்தில், கணவன் இறந்தபோது மனைவியை உடன் வைத்துக் கொளுத்திய அநீதியைக் கண்டித்து, சமூக அக்கறை உள்ளவர்கள் எழுந்தபோது, இதேபோலத்தான் மதவாதிகள் கோபப்பட்டார்கள். வாஸந்தி கோபப்படறத பார்த்தா, "உடன் கட்டையை' தடைசெய்தது கூட இந்துக்களைப் புண்படுத்தும் செயலாகத்தான் தெரிகிறது. "உடன் கட்டை' வழக்கம் தொடர்ந்து இருந்திருந்தால், வாஸந்தியிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரையும் வந்திருக்காது; அதுக்கு பதில் எழுதுற வேலையும் நமக்கு மிச்சமாகி இருக்கும்.···
""இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்புகளினாலும் அழிக்க முடியாது. அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு'' என்பதே பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆவேசம்.10.1.1947இல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:
""யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்'' என்று சர். இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம். உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகி விடுமா?எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே எலி, கொசு, தேள், பாம்பு, மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்துமதத்தை விட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?''
· வே. மதிமாறன்
1 comment:
கலைஞர் பற்றியோ,இலக்கிய வானரங்கள்(உங்கள் மொழியில்)பற்றியோ,இராமன் பற்றியோ இங்கு
கருத்துச்சொல்ல விரும்பவில்ல்லை.
ஆனால்,பிரச்சனைக்கு ஆதாரமான சேதுசமுத்திரத்திட்டம் திட்டமானது,நடுவண் அரசாலும்,தன்மானப்பிரச்சனையாக இத்திட்டத்தை கருதும் திமுக அரசாலும் சொல்லப்படுவது போல இத்திட்டம் அத்தனை இலாபகரமானதா? என்பது கேள்வி.
அவ்வாறு இலாபகரமானால், அது எவ்வளவு?அதன் விவரங்கள் யாது?
இத்திட்டத்தின் மூலம்,அதிகம் இலாபமடையும் என தமிழக அரசால் கூறப்படும் தமிழக அரசுக்குச்சொந்தமான நான்கு கப்பல்களை தன்வசம் கொண்டுள்ள பூம்புகர் நிறுவனத்திடம், அத்துறையின் ஓய்வு பெற்ற முன்னால்
இயக்குநர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுச்செய்தபோது,
அந்நிறுவனம் கூறுகிறது.இதுவரை,அதுபோல் ஒரு கணக்கெடுப்பு தான் நடத்தவில்லை என்றும்,எனவே
சேது திட்டத்தின் மூலம் தனக்கு எவ்வளவு வருமானம் என்பது தெரியாதென நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் வரைவு அறிக்கையிலேயே குறிப்பிடவேண்டிய ஒன்றானது,இன்னும் கணக்கெடுப்படாமலே உள்ளது.இந்த இலட்சணத்தில் உள்ளது அரசின் திட்டம்.
இரண்டாவது,
கடலிலிருந்து மண் அள்ளக்கூடிய கப்பலின் மண்தோண்டும் கருவியானது, உடைந்து சீர் செய்வதற்காக
அனுப்பப்பட்டிருந்தபோது, யாரும் திட்டம் தடைபெற்றுவிட்டதாக கூறிவிடக்கூடாது என்பதற்காக
அந்தக்கப்பலைக்கொண்டு வெறுமனே நீர் அள்ளி இறைத்திருக்கிறார்கள் பெரும் வாடகைத்தொகையைக்கட்டி. இதை என்னவென்று சொல்வது.
வழக்கம் போலவே,எல்லாவற்றையும் அரசியலாக்கும் அவர்களும்,இவர்களும்,நீங்களும்,நானும்இதையும் அரசியலாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறோம் நம் வரிப்பணத்தில்.(நானும் வருமானவரி கட்டுகிறேனாக்கும்)
வீரமணி இளங்கோ
Post a Comment