"வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள். ""மக்கள்தொகைப் பெருக்கம்தான் நாடு முன்னேறாததற்குக் காரணம்'' என்று அரசாங்கமும் முன்புபோல மக்களை இப்போது கரித்துக் கொட்டுவதில்லை. மொத்தத்தில், மக்களுக்கு இப்போது மதிப்பு கூடிவிட்டது.
15-30 வயதுக்கு இடைப்பட்ட இளைய தலைமுறை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறதாம். நாட்டை முன்னேற்றும் பொருட்டு கனிமவளம், நீர்வளம், எண்ணெய் வளம், காட்டுவளம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்கி, பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் அவற்றைத் தம் விருப்பம் போலச் சூறையாடுவதற்கேற்பச் சட்டங்களைத் திருத்தி விட்டன பா.ஜ.க, காங். அரசுகள். ஆனால், இந்த மனிதவளத்தைச் சூறையாடுவதற்குத்தான் பல சட்டங்கள் தடையாக இருக்கின்றனவாம். அவற்றையும் திருத்தி விட்டால் முதலாளிகள் மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்குவார்கள், என்கிறார் மன்மோகன் சிங்.
பணிப்பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமைகள் போன்ற தடைகளை அகற்றினால்தான், முதலாளிகள் தொழிலாளிகளை சுதந்திரமாகக் கசக்கிப் பிழிய முடியும், என்பதுதான் பிரதமர் கூறுவதன் உட்பொருள். இருந்தாலும் ""உங்களைக் கசக்கிப் பிழிவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்'' என்று முதலாளிகளோ பிரதமரோ, தொழிலாளிகளிடம் கூற முடியாதல்லவா? அதனால்தான், தங்களுடைய இலாபத்துக்கான வாய்ப்பை, "தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு' என்று சித்தரிக்கிறார்கள் முதலாளிகள்.
தமிழகத்தின் வேலைவாய்ப்பு மையம் திருப்பூர். நாட்டுக்குச் சோறு போட்டு நொடித்துப் போன 17 மாவட்டங்களின் விவசாயிகள், உலகத்துக்கு உடை கொடுக்கும் இந்த ஜவுளித் தொழிலுக்கு வந்துதான் சரணடைகிறார்கள். 199697இல் ரூ.2255 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி, 2006/07இல் 11,000 கோடியாக உயர்ந்திருக்கிறதாம். "நீருயர நெல்லுயரும்' என்பது போல, உற்பத்தி உயர உயர உழைப்பாளிகளின் வாழ்க்கையும் உயரும் என்கிறது அரசாங்கம். இந்த 5 மடங்கு வளர்ச்சி, தொழிலாளர்களின் வாழ்க்கையில் எத்தனை மடங்கு வளர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது?
அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இந்த வளர்ச்சியின் பின்னால் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் வீழ்ச்சியை அம்பலமாக்குகிறது. அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் கற்பக விருட்சமாகச் சித்தரிக்கப்படும் ஜவுளித் தொழிலில், நிலவும் கொத்தடிமைத்தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
""இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளிகளில், 70% பேர் "தொழிற்பழகுனர்கள்' (apprentice) என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளிகளை வெளியேற்றி, மேலும் மேலும் இத்தகைய தொழிற்பழகுனர்களால் எல்லா ஆலைகளும் நிரப்பப்படுகின்றன. கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 406 பஞ்சாலைகளில் மட்டும் 38,461 பெண்கள் "சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் கொத்தடிமைகளாக, கொடூரமான முறைகளில் சுரண்டப்படுகிறார்கள்'' என்று அம்பலப்படுத்துகிறது இந்த மனு. தமிழகத்தில் உள்ள ஜவுளி மில்களின் எண்ணிக்கை 1600. இத்தகைய பெண் கொத்தடிமைகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்பதற்குக் கணக்கில்லை. பஞ்சாலைகளில் முறுக்கிப் பிழியப்படும் பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களின் கண்ணீர்க் கதை இது. இந்தக் கண்ணீர்க் கதைக்கு, முதலாளிகள் சூட்டியிருக்கும் பெயர் சுமங்கலித் திட்டம்.
ஏழை, கூலி விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரது வீட்டுப் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, ஜவுளி ஆலை முதலாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம்தான், சுமங்கலித் திட்டம். இதற்காகவே கிராமப்புறங்களில் அலையும் தரகர்கள், பள்ளியிறுதித் தேர்வு முடிந்து, விடுமுறையில் இருக்கும் பெண்களுடைய பெற்றோர்களைக் குறிவைக்கிறார்கள். ""தினக்கூலி 25 ரூபாய்; உணவு, தங்குமிடம், மருத்துவம் இலவசம்; இலவசமாக தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி; 3 ஆண்டுகள் வேலை செய்தால், முடிவில் 50,000 ரூபாயுடன் வீடு திரும்பலாம்'' என்று பெற்றோர்களுக்கு ஆசை காட்டுகிறார்கள். ""வீட்டில் இருந்தால் வீண் செலவுதானே, படித்து ஆகப்போறதென்ன, சும்மாயிருப்பதற்கு தொழில் படிச்சமாதிரியும் ஆச்சு, கல்யாணத்துக்கு சம்பாரிச்ச மாதிரியும் ஆச்சு'' என்று கூறி, பெண்பிள்ளையைக் கட்டிக் கொடுக்க வழியில்லாத அவர்களது நிலைமையை நினைவுபடுத்துகின்றனர். ""ஒழுக்கம், கற்பு விசயத்தில், உங்களைவிட முதலாளி ரொம்பவும் கண்டிப்பாக்கும்'' என்று கதை சொல்லி, பெற்றோரின் தயக்கத்தைப் போக்குகின்றனர்.
தயங்கி என்ன செய்ய முடியும்? பெண்ணைப் படிக்க வைக்க ஆசையிருந்தாலும், விவசாயிக்கு வசதி கிடையாது. அவருக்கே வேலை கிடைக்காத கிராமப்புறத்தில், பிள்ளைக்கு வேலையும் கிடைக்காது. கல்யாணம் கட்டிக் கொடுக்கவோ, காசும் கிடையாது. தரகனின் பேச்சைக் காட்டிலும், வாழ்க்கை தரும் இந்த நிர்ப்பந்தம் அவர்களைத் தலையாட்ட வைக்கிறது.
இப்படி கிராமப்புறங்களிலிருந்து ஓட்டிச் செல்லப்படும் பெண்கள், மில்லுக்கு அருகிலேயே தங்க வைக்கப் படுகிறார்கள். கால் நீட்டிக்கூடப் படுக்க முடியாமல், ஒரு அறைக்கு 70 பேர் மந்தைகளைப் போல அடைக்கப்படுகிறார்கள். தினசரி 12 மணி நேரம் வேலை. கூடுதலாக 3 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டியிருக்கும். மறுத்தால் நாள் முழுதும் வெயிலில் நிற்கும் தண்டனை. ஒருநாள் கூலி 15 முதல் 25 ரூபாய் வரை. பேசிய கூலியைக் கொடு என்று வாய்திறந்து கேட்கமுடியாது. ஆண்டுக்கு 5 நாள்தான் விடுமுறை. உடம்பு முடியாமல் லீவு போட்டால் சம்பள வெட்டு. மாதவிடாய்க் காலத்திலும் கடினமான வேலைகளிலிருந்து விலக்கு கிடையாது. வேலை நேரத்தில் கழிவறைக்கு ஒதுங்க நினைத்தால், ஆண் கங்காணிகளின் சீண்டல் பேச்சுக்களையும் கழுகுப்பார்வைகளையும் தாண்டித்தான் போக முடியும். வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் பிரித்துப் படிக்கப்படும். தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் செல்லவோ, வெளியாள்களிடம் பேசவோ அனுமதி கிடையாது. ஒருவேளை, மூன்றாண்டுகளுக்கு சில மாதங்கள் முன்னதாகத் திருமணம் நிச்சயமாகி விட்டால்கூட, மொத்தத் தொகையும் மறுக்கப்படும். காதலித்தாலும் வேலைநீக்கம்.
தினக்கூலியில் சாதிபேதமும் உண்டு. நாகமலை என்ற கிராமத்திலிருந்து வந்த தலித் பெண்களுக்கு 15 ரூபாய்தான் தினக்கூலி. திண்டுக்கல் மாவட்டம், தோட்டணாம்பட்டி மரகதத்துக்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திருமணமான குற்றத்துக்காக, மொத்தத் தொகையும் மறுப்பு. பழனி விஜயகுமார் மில்லின் முதலாளியோ, திடீரென்று மில்லை மூடி, சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த 789 பெண்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையையும் விழுங்கி விட்டான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோய், நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிய பின்னரும் பணம் வராததால், தற்கொலைக்கு முயன்ற பெண்களும் உண்டு.
முழுசாக 50,000 ரூபாயைப் பார்த்தறியாத விவசாயிகள், அந்தத் தூண்டிலில் சிக்கித்தான் பெண்களை அனுப்புகிறார்கள். ஆனால், "குற்றம் குறை இல்லாமல் மூன்றாண்டுகளை முடித்தால்தான் முழுத்தொகை' என்ற அந்த நிபந்தனைதான், ஆகக் கொடூரமான கொத்தடிமைத்தனத்தையும் சகித்துக் கொள்ளும் கட்டாயத்தை அந்தப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. ""அடிக்கடி பார்க்க வந்தால் அதுவே பிரச்சினையாகி விடும்'' என்று பெற்றோர்களையே துரத்தும் பெண்களின் பயம், காதலிக்க பயம், உடல்நலம் குறைந்தால் தகுதிக் குறைவாகி விடுமோ, என்று அதை வெளியில் சொல்ல பயம், ஒதுங்க நினைத்தால் கூட சூப்பர்வைசரைக் கண்டு பயம், ஓட நினைத்தால் கஞ்சிக்கு வழியில்லாத வீட்டை எண்ணிப் பயம், மிசினில் சிக்கி விரல் துண்டானாலும் மருத்துவ விடுப்பு எடுக்க பயம், பாலியல் வன்முறைக்கு ஆளானாலும் அதைச் சகித்துக் கொள்ளவேண்டிய பயம் இப்படித் திட்டமிட்டே அச்சத்தில் உறைய வைத்துதான் அந்தப் பெண்களை உறிஞ்சுகிறார்கள், முதலாளிகள்.
தாங்கள் அனுபவித்து வரும் கொடுமையைத் தம் பெற்றோரிடம் சொன்னால் கூடப் பிரச்சினையாகிவிடுமோ, என்று அஞ்சும் இந்தப் பெண்கள், இவற்றையெல்லாம் தாமாகவே வெளியுலகிற்குக் கொண்டுவந்து விடவில்லை. பத்திரிகையாளர்களிடம் கூட பேசப் பயந்தார்கள். நிரந்தரத் தொழிலாளிகளின் மூலம்தான், இப்பிரச்சினையின் வீச்சும், பரிமாணமும் வெளியில் வந்திருக்கின்றன. நிரந்தரத் தொழிலாளர்களையெல்லாம் கட்டாயப்படுத்தி, "விருப்ப ஓய்வி'ல் அனுப்பிவிட்டு, மொத்த உற்பத்தியையும் தொழிற்பழகுனர்களை வைத்தே நடத்த, முதலாளிகள் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் நிரந்தரத் தொழிலாளர்கள். ""100% தொழிற்பழகுனர்களை வைத்தே ஆலையை நடத்தும்போதுதான் ஜவுளித் தொழிலின் திறனைக் கூட்டமுடியும்'' என்று வெளிப்படையாக பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கிறார் தென்னிந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கத்தின் செயலர் செல்வராஜ்.
இவ்வாறு கூறுவதே சட்டவிரோதமல்லவா, என்று பலர் கருதலாம். ஆனால் 1947இல் இயற்றப்பட்ட தொழிற்பழகுனர் சட்டம், மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் பேரை தொழிற்பழகுனர்களாக வைத்துக் கொள்ளலாம் என்ற வரம்பு எதையும் குறிப்பிடவில்லை. முதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைநோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் கீழ்தான் சுமங்கலித்திட்டம் இன்று அமலாகிக் கொண்டிருக்கிறது. அண்ணா தொழிற்சங்கம் போட்ட வழக்கை ஒட்டி, 17 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் தலைமையில் தொழிலாளர் துறை இணை ஆணையர்கள், வருவாய்த்துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழு சுமங்கலித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்டது. மில்கள் அதிகம் உள்ள கோவை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுத்து விட்டனர்.
""அந்தப் பெண்கள் செய்யும் வேலைக்கு, அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் பயிற்சி தேவையில்லை. 3 ஆண்டுகள் தொழிற்பழகுனர்களாக அவர்களை வைத்திருப்பது மோசடி. நிரந்தரத் தொழிலாளிகளின் வேலைகள் அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். ஆனால், உரிமை மாத்திரம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது'' என்று தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டை தொழிலாளர் துறை ஆணையர்கள், காதில் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. அதிகார வர்க்கத்தை முதலாளிகள் விலை பேசிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல பிரச்சினை. "தொழில் வளர்ச்சிக்கு உகந்த தொழிலாளர் கொள்கை இதுதான்' என்பதே இன்று அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதனால்தான் தொழிலாளர் சட்டங்களில் ஏற்கெனவே இருக்கும் ஓட்டைகளை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்கிறார் மன்மோகன் சிங்.
மூன்றாண்டு காலம் ஒரே வேலையைச் செய்து, அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற பெண்களை பணி நிரந்தரம் செய்ய முதலாளிகள் தயாரில்லை, என்பது மட்டுமல்ல, நாளொன்றுக்கு 100 ரூபாய் கூலி கொடுத்துத் தற்காலிகப் பணியாளராக வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயாரில்லை. பட்டமரத்தைப் பார்த்தொதுக்கும் பறவையைப் போல, தண்ணீர் மட்டம் குறைந்தவுடன் தடமொன்றை மாற்றிவிடும் தண்ணீர் வியாபாரி போல, பதின் வயதில், இயற்கை மனித உடலுக்கு வழங்கும் ஆற்றலை, மூன்றே ஆண்டுகளில் கசக்கி உறிஞ்சி விட்டுத் துப்பி விடுகிறார்கள், முதலாளிகள். கிராமப்புறமெங்கும் கொட்டிக் கிடக்கும் பிள்ளைக் கறியை அள்ளிக்கொண்டு வரத் தரகர்களை ஏவி விடுகிறார்கள். புறம்போக்கைக் கண்டவுடன் விழுங்கத் துடிக்கும் அரசியல்வாதியைப் போல, பெண்களைப் பார்த்தவுடன் எச்சில் ஊறும் காமுகனைப் போல, உழைப்பை உறிஞ்சத் துடிக்கிறார்கள் முதலாளிகள்.
"வால்மார்ட்'டின் அமெரிக்க வியர்வைக் கடைகளில் சிக்கிக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ஒரு டாலர் கூலிக்கு நாள் முழுவதும் "நைக்' காலணிகளைத் தயாரிக்கும் தாய்லாந்தின் சிறுவர்கள், அமெரிக்கக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளை வழங்குவதற்காக, சீனத்தில் கொத்தடிமைகளாக உழைக்கும் பெண்கள், தம் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் நிபந்தனையாக, இந்தியாவின் "ஜவுளி ஏற்றுமதி'யை ஏற்றிக் கொண்டிருக்கும் சுமங்கலித் திட்டத்தின் பெண்கள்.. இந்திய முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும், விரும்பி நேசிக்கும் "மனிதவளம்' இதுதான்.
உறிஞ்ச உறிஞ்ச வற்றாத இந்த மனித வளத்தின் விலை (அதாவது கூலி) இந்தியாவில் மிகக் குறைவு. மிகவும் குறைவு! ஜவுளித் தொழிலில் இந்தியா கொடி கட்டிப் பறப்பதன் இரகசியம் இதுதான். ஐ.டி தொழிலின் அசுர வளர்ச்சிக்குக் காரணமும் இதுதான்.
""அவர்கள் தொழிற்சங்கத்தை விரும்புவதில்லை. 8 மணி நேர வேலை என்ற வரம்பையும் விரும்புவதில்லை. சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. அவர்கள் அதிக நேரம் வேலை செய்ய விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் அதிகம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்'' என்கிறார் ஜவுளி முதலாளிகள் சங்கச் செயலர் செல்வராஜ்.
தனியார்மய தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு முதலாளித்துவப் பத்திரிகையாளர் இதையே வேறு விதமாகக் கூறுகிறார். ""நாம் வேலைவாய்ப்பு என்கிறோம்; கம்யூனிஸ்டுகள் சுரண்டல் என்கிறார்கள். பெரும்பான்மை மக்களோ தாம் சுரண்டப்படாமல் இருப்பதை விட சுரண்டப்படுவதையே விரும்புகிறார்கள்'' என்றார். விவசாயிகளின் கையறு நிலையையும் செல்வராஜின் குரூரத்தையும் ஒரே வரியில் கூறும் "வக்கிரக் கவிதை' என்று இதைச் சொல்லலாமோ!
· வசந்தன்
1 comment:
:(
எங்கள் ஊரில் இருந்தும் இப்படி நிறைய பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் :(
Post a Comment