தமிழ் அரங்கம்

Tuesday, April 22, 2008

'ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!


'ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு!
பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
தமிழகத்தை குஜராத்தாக்க அனுமதியோம்!"

"எங்களால் நம்பவே முடியவில்லை. பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான உங்கள் கூட்டத்துக்கு, எந்தக் கட்சிக்கும் திரளாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளார்களே! இது பொதுக்கூட்டம் அல்ல; மிகப் பெரிய மாநாடு. நீங்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகள்!'' கூட்டம் முடிந்து விடைபெற்றுக் கொள்ளும்போது நா தழுதழுக்க இப்படிப் பலர் கூறிய கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. தமிழகத்தைக் குஜராத்தாக்கும் நோக்கத்துடன் ராமன் பாலம் எனும் புராணப் புரட்டை வைத்துப் பார்ப்பனபாசிசக் கும்பல் களத்தில் இறங்கியதும், அதற்கெதிராக ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமக்கே உரித்தான போர்க்குணத்துடன் நடத்திய பிரச்சார இயக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகமெங்கும் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது.

பணபலமும் அதிகார பலமும் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் வேகத்தை விஞ்சும் வகையில், அக்கும்பலின் பொய்கள்சதிகளை அம்பலப்படுத்தி பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், வருணாசிரமக் கொலைகார ராமனை குற்றவாளிக் கூண்டிலேற்றிய ""இராமன்: தேசிய நாயகனா, தேசிய வில்லனா?'' எனும் வெளியீடு, பொதுவேலை நிறுத்தத்திற்குத் தடை விதித்துப் பார்ப்பனத் திமிரோடு உத்தரவுகளைப் பிறப்பித்த உச்சநீதி மன்றத்தின் உச்சிக் குடுமியைப் பிடித்து உலுக்கிய ""உச்சநீதி மன்றம் அல்ல, வேதாந்தி மன்றம்!'' எனும் பிரசுரம், சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் எனத் தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 3.10.07 அன்று ""ராமன் பாலம் என்பது புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!'' என்ற முழக்கத்துடன் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பெரியார்தாசனும், ம.க.இ.க. மாநிலச் செயலர் தோழர் மருதையனும் சிறப்புரையாற்றினர். ராமனின் யோக்கியதையையும் சாதிவெறிக் கொலையையும் தனக்கே உரித்தான நையாண்டி பாணியில் பேராசிரியர் பெரியார்தாசன் தோலுரித்துக் காட்டியதை உழைக்கும் மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். "இந்து'க்களாக இருந்தாலும், இந்து மதத்தையும் இராமனையும் தோலுரித்து, நகைச்சுவையோடு அவர் குறிப்பிட்டதைக் கேட்டு, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கைதட்டிக் களங்கமின்றிச் சிரித்தனர்.

ராமாயணம் எழுதப்பட்டதன் நோக்கத்திலிருந்து ராமன் பாலம் எனும் கட்டுக்கதை வரை பார்ப்பனக் கும்பலின் அரசியல் சதிகள் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய தோழர் மருதையன், ""ராமனுக்கு அயோத்தி ஜென்ம பூமி என்றால், தமிழகம் அவனுக்கு மரண பூமி'' என்று சூளுரைத்த போது, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் உணர்ச்சியோடு ஆரவாரம் செய்து ஆதரித்தனர். ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய ""ராமன் பாலம்'' என்ற கதாகாலட்சேபமும், புரட்சிகர கலைநிகழ்ச்சியும் பார்வையாளர்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அவர்களின் நெஞ்சிலே பதிய வைத்தது.

அதைத் தொடர்ந்து 14.10.07 அன்று திருச்சிசத்திரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பெரியார்தாசனும், தோழர் மருதையனும் சிறப்புரையாற்றினர். 15.10.07 அன்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையனும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டத் துணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதனும் சிறப்புரையாற்றினர். பின்னர் சென்னையில் 16.10.07 முதல் 20.10.07 வரை தொடர்ந்து ஐந்து நாட்களில் தாம்பரம், அசோக்நகர், செங்குன்றம், சேத்துப்பட்டு, வியாசர்பாடி கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேராசிரியர் பெரியார்தாசன், ம.க.இ.க. தோழர் கவிஞர் துரை.சண்முகம், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன், வி.வி.மு. தோழர் ஜெயகாந்த் சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதைத் தொடர்ந்து 21.10.07 அன்று திருச்சிகாட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

""ராமன் குடிகாரன்'' என்று சாடிய வாயால், ""வேண்டுமானால் சேதுராமன் பாலம் என்ற பெயர் கூட இருக்கட்டும்,'' ""ராமன் எங்களுக்கு எதிரி அல்ல'' என்று பேசிக்கொண்டு பார்ப்பனச் சாக்கடையில் சங்கமமாகிவிட்ட தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தையும், ""இந்துக்களின் மனம் புண்படுகிறது'' என்று இந்துவெறி கும்பலுக்கு பக்கமேளம் வாசித்த வைகோ, சரத்குமார், விஜயகாந்த் முதலான விபீசணர்களையும் அம்பலப்படுத்தி, பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த அறைகூவுவதாக இக்கூட்டங்கள் அமைந்தன.

அக்டோபர் 22ஆம் தேதி முதல் அம்மாத இறுதிவரை மதுரை, உசிலம்பட்டி, விருதுநகர், திருவாரூர், சீர்காழி, கரூர், கோவை, சென்னிமலை எனப் பல இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பருவ மழை காரணமாக சில கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு எதிராக இவ்வ மைப்புகளின் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்பிரச்சார இயக்கத்தின் பொழுது, உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் நிதியை மட்டுமா வழங்கினார்கள்? பார்ப்பன நஞ்சைக் கக்கி இப்பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சித்தவர்களுக்குத் தாங்களே பதிலடி கொடுத்த சம்பவங்கள் ஏராளம். இடையூறு செய்த பார்ப்பன நரிகளை அடக்கி, இப்பிரச்சாரத்தை உற்சாகத்துடன் ஆதரித்துத் தாங்கள் பார்ப்பன பாசிச எதிர்ப்பாளர்கள்தாம் என்பதைத் தமது செயலால் நிரூபித்துக் காட்டிய சம்பவங்கள் ஏராளம்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு பழங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்திய பழ வியாபாரியான ஒரு தாய், தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய இளைஞர்கள், திருச்சி பொதுக்கூட்டத்தில் மேடைக்கு வந்து தமது பெயரை பகிரங்கமாக அறிவித்து தொடர்ச்சியாக நன்கொடை அளித்த உழைக்கும் மக்கள், சென்னைசெங்குன்றம் பொதுக்கூட்டத்தில் மேடையேறி ரூ.4000 நன்கொடை கொடுத்து, ம.க.இ.க.வின் ""புரட்சி சிங்கம் பகத்சிங்'' பற்றிய பாடலைப் பாடச் சொல்லி பதிவு செய்து, தனது மகனுக்குப் பயிற்சி கொடுத்து, அப்பாடலை பள்ளியில் பாட வைத்து பெருமிதம் கொண்ட ஒரு ஆதரவாளர்... இவையனைத்தும் இது பெரியார் பிறந்த மண் என்பதையும் பார்ப்பன எதிர்ப்புணர்வு தமிழகத்தில் பட்டுப்போய்விடவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டின.
— பு.ஜ. செய்தியாளர்கள்

1 comment:

அசுரன் said...

அங்க ஒருத்தர் ம க இக காட்டுக்குள்ளே கட்சி நடத்துவதாக எழுதியுள்ளார். ம க இக மக்களை சந்திப்பதே(அதே சந்திப்புதான்)யில்லைனு எழுதிருக்கார். நீங்க என்னடான்னா போற இடத்துல எல்லாம் ஆயிரக்கணக்குல மக்கள் கூடுனாங்கன்னு கத வுடுறீங்க :-)

ஒரு வேள காட்டுக்குள்ள கூட்டம் நடத்தி மிருகங்கள்தான் ம க இகவின் பொதுக்கூட்டத்தை காண கூடிவிட்டனவோ?

உள்ளங்கை நெல்லிக்கனியாக விசயங்கள் இருப்பினும் சந்திப்பு போன்ற CPM அடிபொடிகள் தமது பொய்களை கொஞ்சம் கூட வெட்க மானமின்றி கடை பரப்புகின்றனர். ம க இக ஒவ்வொரு அரசியல்-பொருளாதார-கலாச்சார பிரச்சினைக்கும் மக்களை அணுகி அவர்களை அரசியல்படுத்தி வரும் பொழுது இந்த CPM அடி பொடி கூச்ச நாச்சமின்றி காட்டுக்குள் அரசியல் செய்வதாக புரளி எழுதுகிறது.

அசுரன்