தமிழ் அரங்கம்

Thursday, April 24, 2008

மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

மே.வங்கம்:
போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களின் உணவுக் கலகம்

ழல் ரேசன் கடை முகவர்களுக்குச் சரமாரியாக அடி, உதை; அவர்களின் வீடுகள்கடைகளுக்குத் தீ வைப்பு என உழைக்கும் மக்களின் உணவுக் கலகம் மே.வங்கத்தின் பல மாவட்டங்களில் பற்றிப் படர்வதைக் கண்டு, அம்மாநிலத்தை ஆளும் போலி கம்யூனிச அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், மே.வங்கத்தில் அவ்வப் பகுதிகளில் இருக்கும் தனியார் முகவர்களே உரிமம் பெற்றுக் கொண்டு ரேசன் கடைகளை நடத்தி வருகின்றனர். நியாய விலையில் வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் முதலானவற்றை இம்முகவர்கள் பல ஆண்டுகளாகக் கள்ளச் சந்தையில் விற்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தனர். தங்கள் வயிற்றிலடித்து வரும் இக்கொள்ளையர்களுக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள், கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடத் தொடங்கியதும், அது காட்டுத் தீயாகப் பல மாவட்டங்களிலும் பற்றிப் படர்ந்து, அம்மாநிலமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

பங்குரா, பர்துவான், பிர்பும் மாவட்டங்களில் ரேசன் கடைகளைக் கைப்பற்றிய கிராமப்புற மக்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே பலநூறு பேரல்கள் மண்ணெண்ணையையும், பல நூறு அரிசி, கோதுமை, சர்க்கரை மூட்டைகளையும் தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர். உணவு தானியங்களைக் கள்ளச் சந்தையில் விற்றுவிட்டு, பல ஆண்டுகளாக அரசிடமிருந்து இவை வந்து சேரவில்லை என்ற ஒரே பொய்யைச் சொல்லி ஏய்த்து வந்த ரேசன் கடை கொள்ளையர்களைப் பிடித்து இழுத்தது வந்து நடுத்தெருவில் வைத்து பின்னி எடுத்தனர். அவர்களது கடைகள்கிடங்குகளைத் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமம்; ஒரு வட்டத்திலிருந்து இன்னொரு வட்டம்; ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டம் என இக்கலகம் மாநிலமெங்கும் பரவியது.

பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் தாங்களே ஒரு பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தி, ரேசன் கடைக் கொள்ளையர்களுக்குத் தண்டனையாக அபராதங்களை விதித்துள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக அரிசியோ, கோதுமையோ வழங்காமல் ஏய்த்து, கள்ளச் சந்தையில் விற்று ஏப்பம் விட்ட இக்கொள்ளையர்கள், ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ. 1000 வீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனப் பல கிராமப் பஞ்சாயத்துகள் தீர்ப்பளித்துள்ளன. இதைக் கண்டு பீதியடைந்த பல ரேசன் கடை கொள்ளையர்கள், தமது ரேசன் கடை உரிமத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டே குடும்பத்தோடு தப்பியோடி விட்டனர்.

கிராமப்புற ஏழைகளுக்கு முறையாக ரேசன் பொருட்களை வழங்கக் கூட வக்கற்ற போலி கம்யூனிச அரசு, பஞ்சைப் பராரிகள் நடத்திவரும் உணவுக் கலகத்தையும் தண்டனைகள் தீர்ப்புகளையும் கண்டு அரண்டு போய், ""ஐயோ வன்முறை! அராஜகம்!'' என்று பெருங்கூச்சல் போட்டு, போலீசை ஏவி இத்தகைய போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது. லஃப்பூர் கிராமத்தில் ரேசன் கடைக் கொள்ளையர்களுக்கு எதிராக 2000 பேருக்கு மேல் அணிதிரண்டு போராடிய மக்கள் மீது மே.வங்க போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்றது; பலரைப் படுகாயப்படுத்தியுள்ளது.

மே.வங்கத்தில் 30 ஆண்டுகளாகப் "பொற்கால ஆட்சி' நடப்பதாகப் பீற்றிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியினர், ஏழைகளுக்கு ரேசன் பொருட்களை முறையாக வழங்கக்கூட முடியாமல் போனது ஏன்? ரேசன் கடை ஊழல்கள் பல ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கக் கூட முடியாமல் போனது ஏன்? ஏனெனில், ரேசன் கடை கொள்ளையர்களில் பெரும்பான்மையினர் சி.பி.எம். கட்சியினர்தாம்! அதனாலேயே கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழல் கொள்ளைக்கு எதிராக மே.வங்க இடதுசாரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இக்கொள்ளையர்களைப் பாதுகாக்க சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் போராடும் மக்கள் மீது குண்டு வீச்சு துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர்.

ஜமாலுதீன் ஷேக் என்ற ரேசன் கடைக் கொள்ளையனுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசு கட்சித் தலைமையில் கிராமப்புற ஏழை மக்கள் ஆவேசமாகக் கிளம்பியபோது, சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் மக்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தமது கட்சிக்காரரைக் காப்பாற்றிச் சென்றுள்ளனர். நாராயண் தத்தா என்ற சி.பி.எம். கட்சிக்காரர் நடத்தி வந்த ரேசன் கடைக்கு எதிரே அரிசியும் கோதுமையும் வழங்கக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஆத்திரமடைந்த இக்கொள்ளையன் அம்மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு பலரைப் படுகாயப்படுத்தியுள்ளான். இக்கொலை வெறியாட்டத்துக்கு எதிராகப் பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதும் வேறு வழியின்றி அவன் சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

இச்சம்பவங்களையடுத்து பங்குரா மாவட்டத்தில் சி.பி.எம்.இன் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் நபாபட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்த அத்தொகுதி எம்.எல்.ஏ.வான பிரதீபை சுற்றி வளைத்த உழைக்கும் மக்கள் தரும அடி கொடுத்து விரட்டியுள்ளனர். பல கிராமங்களில் சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டு ""ஐயோ! வன்முறை வெறியாட்டம்!'' என்று அலறும் சி.பி.எம். கட்சி, தனது குண்டர் படையை வைத்து இரும்புத் தடி அரிவாள்களுடன் கண்டன ஊர்வலங்களை நடத்தி போராடும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பல கிராமங்களில் போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பங்குரா மாவட்டத்தில்தான் 1960களில் சி.பி.எம். கட்சி ""கத்யா அந்தோலன்'' எனும் உணவு இயக்கத்தைத் தொடங்கி, உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியாக வளர்ந்தது. இன்று இந்த பங்குரா மாவட்டத்தில் ரேசன் கடை கொள்ளையில் சிக்கியுள்ள 13 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் சி.பி.எம். கட்சியினர். மற்றவர்கள் இடதுசாரி கூட்டணிக் கட்சியினர். இன்று அதே பங்குரா மாவட்டத்தில், ""உழைக்கும் மக்களே, பட்டினியால் துவளாதீர்கள்; ரேசன் கடை கிடங்குகள் மக்களுடையது; அதைக் கைப்பற்றுவோம், வாரீர்!'' என்று மாவோயிஸ்டு கட்சியினர் தமது ""கொரில்லா பார்ட்டா'' பத்திரிகையில் அறைகூவல் விடுத்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி வருகின்றனர். சி.பி.எம். ஆட்சிக்கு எதிரான உழைக்கும் மக்களின் உணவுக் கலகத்தை அறுவடை செய்து அரசியல் ஆதாயமடையும் நோக்கத்துடன், திரிணாமுல் காங்கிரசு தலைவியான மம்தா பானர்ஜி இதே பங்குரா மாவட்டத்தில் ""கத்யா அந்தோலன்'' இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

சிங்கூர் நந்திகிராமத்தில் நடந்த பாசிச கொலை வெறியாட்டங்களை மூடிமறைத்து, போராடும் மக்களையும் எதிர்க்கட்சியினரையும் வன்முறைக் கும்பலாகச் சித்தரித்து எதிர்ப்பிரச்சாரம் செய்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது மே.வங்கத்தில் பற்றிப் படரும் உணவுக் கலகத்தை மூடி மறைக்கவோ, ரேசன் கடை ஊழல் கொள்ளையை நியாயப்படுத்தவோ முடியாமல் தடுமாறி நிற்கிறது.வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஒதுக்கீடுகளை மைய அரசு பெருமளவு குறைத்து விட்டதாலேயே, மே.வங்கத்தில் ரேசன் பொருட்களை முறைப்படி விநியோகிக்க முடியவில்லை என்று மைய அரசு மீது குற்றம் சாட்டுகிறார், சி.பி.எம். கட்சி எம்.பி.யான பிருந்தா கரத். மே.வங்கம் மட்டுமல்ல; உலக வங்கியின் உத்தரவுப்படி, நாடெங்கும் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களுக்கு ரேசன் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இந்த உண்மைகளை மக்களிடம் விளக்கி, மைய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதை விடுத்து, போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, உழைக்கும் மக்களின் உணவுக் கலகங்களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது, மே.வங்க "இடதுசாரி' அரசு.

இந்நிலையில் 30 ஆண்டு காலமாகப் பொற்கால ஆட்சி நடப்பதாகப் புளுகிக் கொண்டு, அடித்தட்டு மக்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட பதுக்கி விற்று, ஏழைகளின் வயிற்றிலடிக்கும் கொள்ளைக் கூட்டமாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். கட்சியை, உழைக்கும் மக்களுக்கான கட்சி என்று கருதுவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
· குமார்

1 comment:

அசுரன் said...

நல்ல கட்டுரை பிரசூரித்தமைக்கு நன்றீ