தமிழ் அரங்கம்

Saturday, April 26, 2008

அமைதியான அழித்தொழிப்பு யுத்தம்

அமைதியான அழித்தொழிப்பு யுத்தம்


பி.இரயாகரன்
25.04.2008

மயான அமைதி. யுத்தம் நடப்பதே தெரியாத ஒரு அரசியல் சூனியம். ஆனால் இலங்கையில் என்றுமில்லாத அளவில், மிகக் கடுமையான, கோரமான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று நாள் தோறும் நடைபெறுகின்றது. ஆனால் அவை அமைதியாக, சலசலப்பின்றி அரங்கேறுகின்றது. மனித உயிhகள் அன்றாடம் பலியிடப்படுகின்றது.

உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்று கூட தெரியாத வகையில், அமைதியாக புலிகள் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர். தோல்வியே புலிகளின் இன்றைய அரசியலாகிவிட்டது. புலித் தளபதிகளும், புலி ஊடகவியலும் எதிர்காலத்தில் தாங்கள் நடத்தவுள்ளதாக கருதுகின்ற எதிர்த்தாக்குதலை, ஊகமாக முன்வைக்கின்றனர். இப்படி அவர்களே சோர்ந்து போய், மற்றவனை நம்பவைக்கின்ற கனவுத் திட்டங்களை பறைசாற்றுகின்றனர். இப்படி தமது தோல்வியை மறைக்க, கனவை மூட்டை கட்டி பிரச்சாரம் செய்கின்றனர். இடைக்கிடை நடக்கும் எதிரியின் இழப்பை வைத்து, புள்ளிவிபர கணக்கு மூலம் அரசியல் நடத்த முனைகின்றனர்.

தவிக்கிற முயலை அடிக்க கூடாது என்பதால், அவலமான புலிகளின் இன்றைய நிலைமைகள் மீது மௌனத்தை கடைப்பிடித்து வருகின்றோம். நாம் பேரினவாதத்தை எதிர்ப்பதால் மட்டும், நிலைமையில் மாற்றம் வந்துவிடாது. புலிகள் மீதான விமர்சனமும், அவர்களின் சுயவிமர்சனமும் தான் இந்த நிலைமையைக் குறைந்தபட்சம் மாற்றும். ஆனால் இதில் புலிகள் அசைந்து கொடுக்கும், சமிக்கையே கிடையாது. புலிக்குள்ளும் புலிக்கு வெளியிலும் தொடர்ந்தும் ஒரு மாற்றத்தை அடிப்படையாக கொண்டு சிந்திக்கத் தூண்டும் வகையில், மக்களின் இன்றைய அவலநிலை பற்றி எழுத வேண்டியுள்ளது. இதன் மூலம் தனியான அரசியல் வழிபற்றி சிந்திக்க தூண்டும் வகையில், நாம் விமர்சனத்தை தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் புலிக்கு எதிரான அழித்தொழிப்பு யுத்தம் ஒருபுறமாயும், மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமாகவும் அவை நடத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையே பேரினவாத அரசு, தமிழ் மக்களுக்கு மறுத்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு இலங்கையில் தனியான பிரச்சனைகள் உண்டு என்பதையே, அது மறுக்கின்றது. அதை வெறும் புலிப்பிரச்சனையாக பார்த்து, தமிழ் இனத்தையே பல்வேறு வழிகளில் அழிக்கின்றது. அனைத்தும் புலி அழிப்பின் பெயரில், நிறைவு செய்யப்படுகின்றது. புலிகளின் தவறான பாசிச கொள்கைகளை, அதன் நடைமுறைகளைப் பயன்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் யுத்தமும், தமிழின அழத்தொழிப்பும் நடத்தப்படுகின்றது.

புலியின் அரசியல் கொள்கை என்பது, வெறும் வன்முறை கொண்ட பாசிச நடை முறைகளாகிவிட்டது. இதை முன்வைத்தே பேரினவாதம் உலகம் தளுவிய ஆதரவுடன், புலியொழிப்பு யுத்தத்தையும், இனவொழிப்பு யுத்தத்தையும் நடத்துகின்றது. இதை பிரித்துப்பார்க்க முடியாத வகையில், இதை ஒருங்கிணைந்த வகையில் நடத்துகின்றது.

புலிகளின் அரசியலோ, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைச் சிதைத்து விட்டது. தமிழ் இனத்தில் இருக்கக் கூடிய சமூக விழுமியங்களைக் கூட, தமிழ் இனத்திடம் விட்டுவைக்காது, புலிகளால் அவை காயடிக்கப்பட்டது. இதன் மேல் தான் இன்று பேரினவாதம், தனது கொடிகளைப் பறக்கவிட்டுள்ளது. யுத்தமும், யுத்த கோரமும் வெறும் புலி அழிப்புக்கு அப்பால், அழிந்து சிதைந்து போன தமிழ் இனத்தின் எஞ்சிய இருப்பையே முற்றாக அழித்து விடுவதில் தான் தன்முனைப்பு காட்டுகின்றது.

புலியெதிர்ப்பு எடுபிடிகளோ தமிழ் இனத்தை அழித்தொழிக்கும், பேரினவாதத்தின் பங்காளிகளாக, கைக்கூலிகளாக பவனிவருகின்றனர். இவர்கள் தமக்கிட்ட கவுரவப் பெயர் 'ஜனநாயக"வாதிகள். இப்படி உலகெங்கும் பல்வேறு வேஷம் போட்டவர்கள், இன்றோ அம்மணமாகி நிற்கின்றனர். நாய் வேஷம் போட்டவர்களோ, ஒநாய் கோலத்தில் அம்பலமாகின்றனர்.

இலங்கை வரலாற்றில் இன்றைய அரசு தான், மிக மோசமான பேரினவாதிகள் ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரிய பிளவு. இதன் பின்னணியில் இணக்கம் காணமுடியாத, மக்கள் விரோத அரசியலே அனைத்துத் தளத்திலும் பூத்துக் குலுங்குகின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் நலன்களை அரசியலாக கொள்ளாமையால், இவர்கள் மத்தியல் அரசியல் இணக்கம் காண முடிவதில்லை. சுயநலம் முதன்மையாகி, அவை வக்கிரம் கொண்ட அரசியல் பிளவுகளாகி நிற்கின்றது. பேரினவாதத்துடன் சேர்ந்து இயங்கவும், பேரினவாதத்துக்கு உதவும் எதிர்ப்பு அரசியலுமாக, மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் இனமோ, இவர்களால் பல தளத்தில் பல வடிவில் காயடிக்கப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒருநிலையில் தான் பலம்பொருந்திய பேரினவாதம், தன்னை மிதப்பாக்கி ஆட்டம் போடுகின்றது. தோற்றுப் போன புலிகளின் உப்புச்சப்பற்ற அதன் சொந்த அரசியல் தான், பேரினவாதத்தின் இன்றைய அரசியல் அடித்தளமாகும். அரசியலில் தோற்றுப் போன புலிகள், யுத்தத்தை விரும்பினர். இப்படி அவர்களே யுத்தத்தை விரும்பி வலிந்து தீர்மானித்து, அதற்கு ஏற்ப இந்த இனவாத அரசைத் தெரிந்தெடுத்தனர். இந்தப் பேரினவாத அரசின் வெற்றிக்காக, புலிகள் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி உழைத்தனர். இன்று அதுவே, அவர்களின் சொந்தத் தூக்கு கயிறாகி நிற்கின்றது.

இப்படி இலங்கை வரலாற்றில் மிக மோசமான, மிக இழிவான, நயவஞ்கம் கொண்ட பேரினவாதிகளை புலிகளும் சேர்ந்தே உருவாக்கினர். இந்தப் பேரினவாதமோ, தன்னை மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் பாசிச வழிகளில் ஒருங்கமைத்துள்ளது. நெகிழ்ச்சியற்றதும், பல முனைப்புக் கொண்டதும், பாசிட்டுகளுக்கே உரிய மிக நேர்த்தியுடனான, ஒரு தலைமை உருவாகியுள்ளது. இதுவே இருந்த சர்வாதிகார வடிவத்தையே தனக்கு சாதகமாக கொண்டு, இனவாத இராணுவக் கட்டமைப்பை பலமடங்கு உறுதி வாய்ந்த ஒரு பாசிச யுத்த இயந்திரமாக கட்டமைத்துள்ளது. புலிகளின் சொந்த அழித்தொழிப்புப் பாணியை, புலிக்கு எதிராகவே அது சுவீகரித்து நடைமுறைப்படுத்துகின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை எப்படி வேட்டையாடி அழித்தொழித்ததோ, அதை அப்படியே அரசு இன்று புலிக்கு எதிராகக் கையாளுகின்றது. புலிகளின் பாசிச மாபியாத் தன்மையையே திணற வைக்கும் அளவுக்கு, கொடூரமான சர்வாதிகாரக் கும்பல்தான் இன்றைய இலங்கை அரசு.

அரசு வடிவங்களிலும், சிவில் சமூக கட்டமைப்புகளிலும், பொருளாதார உறவுகளிலும், சர்வதேச உறவுகளிலும் கூட, தன்னை மிகநுட்பமாக பாசிச வடிவில் ஒருங்கினைத்து நிற்கின்றது. பிரச்சார உத்திகள், நெருகடிகளை கையாளும் விதம், விமர்சங்களை எதிர்கொள்ளும் திறன் என, மிகவும் திட்டமிட்ட வடிவத்தில் நுட்பமாக கையாளுகின்றது. எதிர்க் கட்சிகளை சிதைப்பதற்கு, அக்கட்சிகளின் கோசங்களையே உள்வாங்கி அதை செயலற்ற வெற்று உடம்பாக்கின்றது. அத்துடன் மிரட்டல், விலைபேசுதல் என்று, எல்லாவிதமான பாசிச உத்திகளையும் கூட சமந்தரமாக கையாளுகின்றது. இப்படி மிகவும் கூர்மையானதும், புத்தியுள்ளதுமான, சூழ்ச்சியை சதியையும் அடிப்படையாக கொண்ட ஒரு இனவாத பாசிச ஆட்சியின் கீழ்தான், புலிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர்.

புலிகளின் எந்த எதிர்தாக்குதலையும், ஏன் அதன் வழமையான அதிர வைக்கும் வீரவிளையாட்டை எதிர் கொள்ளவும், அதை புறங்கையால் துடைத் தெறியும் அனவுக்கு, பலம்பொருந்திய சலசலபற்ற வக்கிரமான ஆட்சி இன்று நிறுவப்பட்டுள்ளது. இது தனக்குள் அடுத்த தலைமை கொண்டதும், வெற்றிடமற்ற வகையில் இந்த ஆட்சி நீடிக்கும் வண்ணம், மிக திட்டமிட்ட வகையில் குறிக்கோளுடன் இயங்குகின்றது.

தொடர்ச்சியாக தனது ஆட்சியை அமைக்கும் பலத்தையும், அது ஒருங்கெ கொண்டுள்ளது. தன்னுடன் அக்கம்பக்கமாக நிற்கின்ற கட்சிகளின் கோசங்களையும் முற்றாகத் தனதாக்கி, அக்கட்சிகளையும் செயலற்றதாகிவிடுகின்றது. குறிப்பாக ஜே.வி.பியின் இனவாத அரசியல் கோரிக்கைகளை எல்லாம் தனதாக்கியதன் மூலம், ஜே.வி.பியின் அரசியல் கோசத்தையே இல்லாததாக்கி அதை அரசியல் அனாதரவாக்கிவிட்டது. இதன் மூலம் உட்கட்சி மோதலையும், பிளவுகளையும் உருவாக்கிவிட்டது.

அமைதி சமாதானம் மூலம் தீர்வு என்ற யூ.என்.பி யின் அரசியல் கூறுகளையே செயலற்றதாக்குகின்றது. யாருடன் சமாதானம் என்ற வகையில், புலிகளைத் தோற்கடித்து விட முனைகின்றது. இப்படி யூ.என்.பியை அரசியல் அனாதையாக்குகின்றது. இப்படி எந்தக்கட்சியும் தப்பிப்பிழைக்கவில்லை. அமைதியான வழிகளிலும், சொந்த பாசிச நடத்தைகள் மூலமும், கட்சிகளின் பிளவுகளையும் சிதைவுகளையும் உருவாக்கி வருகின்றது. கூட்டமைப்பு மட்டுமே, தனது யுத்த எதிரியின் பினாமி ஏஜண்டுகள் என்ற எல்லையில் நீடித்து நிற்க அனுமதிக்கின்றது. இதுவும் நீண்ட காலத்துக்கு தப்பிப்பிழைத்து வாழமுடியாது, அது ஏற்கனவே பினாமி என்பதால், அரசின் பினாமியாவதையும் துரிதப்படுத்தும்.

இப்படிப் இந்த பேரினவாதப் பாசிச அரசு இயந்திரத்தை இராணுவ சர்வாதிகாரமாக, பாராளுமன்ற வழிகளில் உறுதியாக நிறுவிவருகின்றது. எதிர்க்கட்சிகளின் அரசியல் கோசங்கள் சிதைக்கப்படுகின்றது. தனது ஒரே எதிரி புலிகள் தான், என்ற விம்பம் மூலம், இவை அனைத்தையும் நடத்தி வருகின்றது.

புலிகள் சுற்றி வளைக்கப்பட்டு அடிக்கப்படுகின்றனர். இப்படி தவிக்கின்ற முயலை, நாமும் அடிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நன்மை கருத்தி, விமர்சிப்பது அவசியமாகின்றது. புலிகளின் தோல்வி என்பது, அரசாங்கத்தின் சொந்த திறமையினால் உருவானதல்ல. புலிகளின் தோல்வி, புலிகளின் சொந்த அரசியல் நடத்தையால் நிகழ்கின்றது. புலிகள் தம்மைத் தாமே தான் தோற்கடிக்கின்றனர். அரசு அதன் மேல் பேரினவாத கொடியைப் பறக்கவிடுகின்றது.

இன்றைய பேரிவாத பாசிச இயந்திரத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை, புலிகளின் சொந்த அரசியல் இழந்து தவிக்கின்றது. புலிகளின் இராணுவக் கட்டமைப்பு திக்குமுக்காடுகின்றது. மீட்சி பற்றி கனவையும், நம்பிக்கையையும் ஆதாரமாக கொள்கின்றது.

மறுபக்கத்தில் எந்த மாற்றமுமின்றி, புலிகள் தமது பாசிச மாபியா வழிகளையே தனது தொடர்ச்சியான அணுகுமுறையாக கொள்கின்றது. அரச பாசிசத்தின் முன்னால், கையேறற்ற நிலையை அடைந்து, அதிலும் தோற்றுப்போகின்றனர். ஒரு வெற்றிகரமான தாக்குதல் மூலம், நிலைமையை மாற்றலாம் என்ற பழைய வழிகளில் தீவிரமாக இடைவிடாது முனைகின்றது. புலித் தலைவரே அனுராதபுர விமானப்படைத் தாக்குதலை, தனது தளபதிபகளுக்கு காட்ட வேண்டிய அரசியல் அவலம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவையும், இவை போன்ற எதுவும் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதை, அவர்களால் இன்னமும் உணர முடியவில்லை.

உளவியல் ரீதியாக செத்துப் போன மக்களும் சரி, புலி ஆதரவாளர்களும் சரி, புலிப் படைகளும் சரி, எதைப் போராட்டம் என்று கருதினரோ, அது தானாகவே சேடமிழுப்பதையே காண்கின்றனர்.

அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், உணர்வியல் ரீதியாக யுத்தம் செய்ய முடியாது. அரசின் தொடர்ச்சியான சுற்றி வளைக்கப்பட்ட தாக்குதலை எதிர் கொண்டு போராடும் அணிகள், உளவியல் ரீதியாக தமது சொந்த யுத்தம் என்று அதை எதிர்கொள்ள முடிவதில்லை. ஏன் எதற்கு யாருக்காக போராடுகின்றோம், எதை எப்படி அடையப் போராடுகின்றோம் என்ற உளவியல் பிரச்சனை, புலிக்கு எதிரானதாகவே அது மாறுகின்றது.

தொடர்ச்சியான யுத்த தோல்விகளும் அது சார்ந்த நெருக்கடிகளும், கண்மூடித்தனமான யுத்த திணிப்பாக மாறுகின்றது. புலித் தலைமை மீதான அவை அவநம்பிக்கையாக பரிணாமிக்கின்றது. யுத்தமுனையில் பரந்துபட்ட மக்களையே யுத்தம் செய்யும்படி, புலிகள் அவர்களை வலுக்கட்டாயமாக யுத்த முனைகளில் திணிக்கின்றனர். இதில் பலர் மாண்டு போகின்றனர். யுத்த முனையில் இருந்து எதிரி பிரதேசத்துக்கு தப்பியோடுதல், எதிரியிடம் சரணடைதல் பரவலாக தொடங்கியுள்ளது. யுத்தம் செய்யாது மாண்டு போகின்ற அவலம், அன்றாடம் நிகழ்கின்றது. மக்களோ அங்கிருத்து தப்பி, அரசு பகுதிகளுக்கு செல்ல முனைகின்றனர். புலிகளின் ஆயுதங்கள் அன்றாடம் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.

புலிகளைச் சுற்றி எங்கும் எதிலும், ஒரு துயரமான சோகமான நிகழ்வுகளாகிவிட்டது. புலித்தலைமை இதில் இருந்து மீள முடியாது அறிக்கைகள், பழைய கதை சொல்வதும், மாற்றத்தைப் பற்றி அறிக்கை விடுவதன் மூலம், அணிகளை திருப்திப்படுத்தி வழிகாட்ட முனைகின்றனர். இப்படி தமது முன்னைய வழமையான பாணியில், போராட்டத்தை தலைமை தாங்கும் பண்பை அவர்கள் இழந்துவிட்டனர். மீட்சி எப்படி என்ற கேள்விக்கு, அவர்களிடமே பதிலில்லை.

மக்களுக்கும் புலித் தலைமைக்கும் உள்ள உறவுக்கும், புலி அணிக்கும் புலித்தலைமைக்கும் உள்ள உறவுக்கும், ஒட்ட முடியாத பாரிய முரண்பாடாகி பிளவாகி கிடக்கின்றது. பேரினவாதம் இதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான், புலிகளை முற்றாக துடைத்தெறிய முனைகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை, சிறுமைப்படுத்தி இழிவாடுகின்றது.

புலிகளின் உளவு கூறுகளில் மட்டும் தான், உயிர்த் துடிப்பான செயல் காணப்படுகின்றது. இது அதன் மாபியா குணாம்சத்தால், பாசிச அதிகார கூறுகளால் தன்னை அன்னியமாக்கி தானாக இயக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் இயங்கும் தாராளமான பணம், அதிகாரம் போன்ற காரணங்களால், உயிர் துடிப்புடன் தனது மாபியாத்தனத்தை தனது செயலாக்குகின்றது.

பேரினவாதம் புலிகளின் இந்த உளவுக் கூறை விட்டுவைப்பதில்லை. கடத்தல், காணாமல் போதல், இனம்தெரியாத படுகொலை மூலம், எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்காது அழித்தொழிக்கின்றது. இப்படி எந்தவொரு விடையமும் முற்றாக முடக்கப்படுகின்றது. இப்படி புலியல்லாத பிரதேசத்தில், புலிகளின் அசைவுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. வன்னியைத் தவிர, புலியல்லாத பிரதேசத்தில் புலிகள் இல்லை என்ற ஒரு நிலையை, அரசு படிப்படியாக உறுதி செய்யமுனைகின்றது. உண்மையில் இதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பதே உண்மை.

புலிகள் வழமையான பாணியில் எதையும் செய்ய முடிவதில்லை. அவையெல்லாம் தோற்றுப் போகின்றது. இதே நிலைதான், இந்தியாவுடன் கொண்டுள்ள அவர்களின் தொடர்புகளிலும் நிகழ்கின்றது. இந்தியாவில் பிழைப்புக்காக ஊளையிடும் புலிப் பினாமிக் கூட்டம், ஊரைக் கூட்டி சும்மா ஊளையிடுகின்றது. மறுபக்கத்தில் இதுவே புலிகளின் இரகசிய ஆயுத நடமாட்டம் மீதான, பாரிய கண்காணிப்பு அரசியலாக பொலிஸ் கெடுபிடியாக மாறிவிடுகின்றது. இங்கும் புலிகள் நெருக்கடியையும், சொந்த அசைவையும் கூட இழந்துவிடுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள வன்னிமக்களின் வாழ்வியல் பரிதாபம். தாம் தேர்ந்தெடுக்காத ஒரு வாழ்க்கையில், அவர்கள் மடிந்து போகின்றனர். ஒருபுறம் பேரினவாதம் கொடுக்கும் அவலம், மறுபக்கம் புலிகள் திணிக்கும் யுத்த நெருக்கடி. இதற்குள் வன்னி மக்கள், தமது வாழ்வை இழந்துவிட்டனர். பேரினவாத யுத்தம், மக்கள் மேலானதாக, பல முனையில் பல முனைப்பு கொண்ட ஒன்றாக மாறிநிற்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் ஈவிரக்கமற்ற கொடுங்கோலராக மாறி யுத்தத்தை வன்னிமக்கள் மேல் திணிக்கின்றனர்.

வகை தொகையின்றி யுத்தம் செய்யவென கடத்தப்பட்ட பலர், யுத்த முனையில் ஏன் எதற்கு என்று தெரியாது இறக்கின்றனர். புலித் தலைமை தம்மை பாதுகாத்துக்கொள்ள, கடைசி ஆயுதமாக சொந்த மக்களையே யுத்தத்தில் பலியிடுகின்றனர். மக்கள் யாரும் இந்த யுத்ததத்தைச் செய்யவோ, தம் குழந்தைகளை பலியிடவோ விரும்பவில்லை. ஆனால் அவர்களை பலாத்காரமாக எடுத்துச் சென்று, யுத்த முனையில் பலியிடப்படுகின்றனர். எங்கும் மரண ஓலங்களின்றி, வன்னிமக்கள் நிம்மதியாக உறங்கவில்லை. நாள் தோறும் அவர்கள் விரும்பாத மரணமும், மரணச்செய்திகளும், ஒப்பாரிகளுமே வாழ்வாகின்றது.

இவை யுத்தத்தில் விரும்பி ஈடுபட்டவனின் வீர ஓப்பாரிகளல்ல. புலிகளைத் தீடடித் தீர்க்கும், ஒப்பாரிகள். கட்டாயப்படுத்தி யுத்த முனையில் மரணித்தவனின் உள்ளவுணர்வை அடிப்படையாக கொண்ட, மக்களின் இரத்தத் கண்ணீர் தான் இவை.

இப்படி ஒரு யுத்தத்தையும், யுத்த சூழலை மிக மோசமான தமது இறுதி அழிவு வரை புலிகள் வித்திட்டுள்ளது புலிகளின் இந்த அரசியல். தமிழ் மக்களின் மொத்த அழிவிற்கும் வித்திட்டுள்ளது. இந்த அரசியலை உண்மையை எப்படி தான், எம்மால் ஜிரணிக்க முடியும். ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரை விடுதலையின் பெயரில் பலியிட்ட போராட்டம், இதுதான் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் உயிரை துரோகிகள் என்ற பெயரில் கொன்று குவித்த புலிகள், எதையும் மக்களுக்காக பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்ற உண்மை, எம் உள்ள உணர்வுகளையே அதிரவைக்கின்றது.

இப்படி புலித்தலைமை மக்களுக்கு தலைமை தாங்கும் தலைமைப் பண்பை இழந்து, தானே சீரழிந்து நிற்கின்றது. மக்களை நேசிப்பதில் தந்தைக்குரிய பரிவை, தாய்க்குரிய கருணையை நிராகரித்து நிற்கும் புலிகள், அடக்குமுறைகள் மூலம் மக்களை கட்டுப்படுத்துகின்றனர். தமிழ் இனம் தனது சொந்த தற்கொலைக்குரிய ஒரு வாழ்க்கை முறையைத் தான், புலிகள் அவர்களுக்கு வழங்கும் ஒரே தீர்வாகின்றது. இதன் இறுதி வரை புலிகள் தாமும் அழிந்துகொண்டு, தமிழ் இனத்தையும் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளை எள்ளி நகையாடியபடி, வன்முறை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை அடக்கியொடுக்கியபடி, இதைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்கின்றனர். இப்படி புலிகள் நடத்திய மனிதப் படுகொலைகள் முதல் அதன் பாசிச நடத்தைகள் எல்லையற்றது. இதன் பின்னணியில் மனித அவலங்களும், இரத்தக் கண்ணீர்களும், மிருகத்தனமான புலிகளின் நடத்தைகளால் உருவானது. இதையே விடுதலைப் போராட்டம் என்றனர். இன்று அதன் விளைவை அவர்களே சந்திக்கின்றனர்.

இப்படி பாசிசம் கட்டமைத்த பிரமைகள், மனக் கோட்டைகள், பண பலம், வன்முறைப் பலம், வெம்பிய அதிகாரம் எல்லாம் தவிடு பொடியாகின்றது. எங்கும், அவநம்பிக்கைகளும், அதிருப்த்தியும் குழிபறிப்புகளும், காட்டிக்கொடுப்புகளும், ஒருங்கே அரங்கேறுகின்றது. போலித்தனம், பிழைப்புத்தனமும், சந்தர்ப்பவாதமும், கூலிப்பண்பும் தான் புலியை வழிநடத்துகின்றது.

மக்கள் நேயமும், இலட்சியமும், அர்ப்பணிப்பும், தியாக உணர்வும், வீரமும், இந்த போராட்டத்தின் பின்னால் அறவே கிடையாது. இப்படி வீங்கி வெம்பி வெடித்துச் சிதறிய போராட்டம், இன்று அழுகி நாறுகின்றது. இதை இனி கூட்டி அள்ளமுடியாது. மாறாக அதுவே சமூகத்திற்கு நஞ்சிடுகின்றது.

போராட்டம் மீதான, மனித உரிமைகள் மீதான, மனிதப்பண்புகள் மீதான, அனைத்துப் போராட்டத்தையும் மறுதலிக்கும் இழிநிலைக்கு நஞ்சிட்டுள்ளது. சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக உணர்வுக் கூறையுமே, இது மறுதலித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைப் போராட்டத்தை, புலிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பும் இன்று மறுதலிக்கின்றது.

தமிழ் மக்கள் உரிமைகளற்ற அடிமை சமூகமாகவும், நக்கிபிழைத்து வாழும் பிழைப்புவாத சந்தர்ப்பவாத லும்பன்களின் வாழ்வுக்கே, இன்றைய போராட்டம் பலவழிகளிலும் பலமுனைகளிலும் வழிகாட்டியது, வழிகாட்டி நிற்கின்றது. இந்த உண்மையை நாம் எப்படி எந்த வழியில் எதிர்கொள்ளப் போகின்றோம்! இதுவே நேர்மையான ஒவ்வொரு மனிதன் முன்னுள்ள, அடிப்படையான கேள்வியாகும்.

பி.இரயாகரன்
25.04.2008

2 comments:

மு. மயூரன் said...

//இந்த உண்மையை நாம் எப்படி எந்த வழியில் எதிர்கொள்ளப் போகின்றோம்! இதுவே நேர்மையான ஒவ்வொரு மனிதன் முன்னுள்ள, அடிப்படையான கேள்வியாகும்.//

இரயாகரன்,

தமிழரங்கத்தில் இது தொடர்பான உரையாடல்களைச்செய்யும் கட்டுரைகளையே எதிர்பார்க்கிறேன்.

இந்த கட்டுரை இதுவரையான உங்களது இலங்கை-போர் தொடர்பான கட்டுரைகளின் பொழிப்புப்போன்ற செறிவான உள்ளடக்கதினைக் கொண்டிருக்கிறது.

இந்தப்பொழிப்பு முழுதும் விரவியிருப்பது தற்போதைய பேரினவாதத்தினதும் புலி அரசியலினதும் மீதான விமர்சனங்களே.

எதிர்கொள்வது தொடர்பான உரையாடல் அடுத்தகட்டமாக அமையுமா? அதுவே முக்கியமானது.

அசுரன் said...

//அனைத்தும் புலி அழிப்பின் பெயரில், நிறைவு செய்யப்படுகின்றது. புலிகளின் தவறான பாசிச கொள்கைகளை, அதன் நடைமுறைகளைப் பயன்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் யுத்தமும், தமிழின அழத்தொழிப்பும் நடத்தப்படுகின்றது.///

மிகச் சரி