நேபாளம்:
சதிகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின அரசியல் உத்தி
நேபாளத்தில் மன்னராட்சியை நீக்கிவிட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திலிருந்து கடந்த மாதம் மத்தியில் நேபாள கம்யூனிஸ்டு (மாவோயிஸ்டு) கட்சி விலகி விட்டது. இதன்மூலம் நேபாளத்தில் ஜனநாயக முறையில் ஒரு குடியரசை நிறுவுவதற்காக அமைதிவழி முன்னெடுப்புகளை அக்கட்சி சீர்குலைத்துவிட்டதாக நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள பிற்போக்காளர்கள், போலி கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.
""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களுக்கு முன்பாகவே நேபாளத்தை ஒரு குடியரசு நாடாக உடனடியாக அறிவிக்கவேண்டும்; மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையிலான பேரவையைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்'' என்ற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்த நேபாள மாவோயிசக் கட்சி, அவற்றை இடைக்கால அரசாங்கம் ஏற்காத நிலையில்தான் தனது நான்கு அமைச்சர்களை அதிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைந்தபோது போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, உள்நோக்கத்தோடு மாவோயிஸ்டுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
உலகிலேயே ஒரே இந்து நாடு என்று பெருமையடித்துக் கொள்ளப்பட்ட நேபாளத்தில் பிரேந்திரா, மகேந்திரா என்று நூற்றாண்டுக்கணக்கில் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது. நேபாளத்தைத் தனது தொங்குசதை நாடாக நடத்தி வந்த இந்தியா, மன்னராட்சி முறைக்குத் தொடர்ந்து முட்டுக் கொடுத்து வந்தது. மன்னராட்சியை எதிர்த்து அவ்வப்பொழுது நடந்த மக்கள் எழுச்சிகளைக் காட்டிக் கொடுத்து, சமரசம் செய்து கொண்ட ஓட்டுக்கட்சிகள், மன்னராட்சியின் கீழ் அதிகாரமற்ற பஞ்சாயத்து அமைப்பு முறையையே ஜனநாயகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பஞ்சாயத்துக்களையே கூட கலைத்து, அரசியலையே கேலிக் கூத்தாக்கி வந்தார்கள் நேபாள மன்னர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரண்மனைக் கொலைகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் மன்னர் மகேந்திராவின் பங்காளியான ஞானேந்திரா ஆட்சியைக் கைப்பற்றினார். ஞானேந்திராவின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து நேபாள மக்கள் பேரெழுச்சிகளை நடத்தினர். மன்னர் மகேந்திராவின் ஆட்சிக் காலத்திலிருந்தே நேபாளத்தில் புதிய ஜனநாயகத்தை நிறுவும் இலட்சியத்தோடு ஆயுதப் போராட்டம் நடத்தி, நேபாளத்தின் பல மாவட்டங்களில் (பத்தாண்டுகளுக்கு மேலாக) மக்கள் அதிகாரத்தை நிறுவியிருந்த நேபாள மாவோயிசக் கட்சி மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்ற பிறகு, மன்னராட்சி தூக்கியெறியப்பட்டது.
மன்னராட்சியை எதிர்ப்பதாகவும், ஜனநாயகத்துக்காகப் போராடுவதாகவும் நாடகமாடிக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சிகள், மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்கவோ, மாற்று அரசியல் தீர்வு காணவோ திராணியற்ற நிலையில், நேபாள மாவோயிசக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்று, ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. நேபாளக் காங்கிரசின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சமவெளிப் பகுதி தெராய் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்தத் தெராய் மண்டலத்தின் ஒருபகுதி இந்தியாவை அடுத்துள்ள நேபாளத் தெற்குப் பகுதியாகவும் அமைந்துள்ளது. நேபாளத்தின் மக்கள் தொகையில் 33 சதவீதமான மாதேசிகள் இந்தப் பகுதியில் வாழுகின்றனர். இவர்கள், மலைவாசிகள் என்றழைக்கப்படும் நேபாளத்தின் பிறபகுதி மக்களிடம் இருந்து மாறுபட்டு இந்தியாவின் உ.பி., பீகார் மாநில மக்களோடு பண்பாடு, மொழி மற்றும் சமூக ரீதியில் நெருக்கமாக உள்ளவர்கள். இதனால் மாதேசிகள் வெளியாட்கள் என்று பெரும்பான்மை நேபாளிகளால் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.
நேபாள மாவோயிசக் கட்சி தாழ்த்தப்பட்டவர்கள், மாதேசிகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு அம்மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதோடு, இடைக்கால நாடாளுமன்றத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அம்மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் வழங்கியிருக்கிறது. மாதேசி தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பையும் அக்கட்சி ஆதரிக்கிறது. ஆனால், மாவோயிசக் கட்சிக்கும் அதன் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எதிராகக் கலகமூட்டும் செயல்களில் அந்நிய சக்திகளும் (இந்தியா மற்றும் அமெரிக்கா) முன்னாள் மன்னராட்சிக்கு விசுவாசமான சக்திகளும் தெராய் மண்டலத்திலுள்ள சில சுயநல குழுக்களை ஏவிவிட்டன.
கடந்த ஆண்டு நேபாள அரசியலில் ஏற்பட்ட நெருக்கடியை ஒட்டி மாதேசியின் மக்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு குறைந்தது 22 ஆயுதந்தாங்கிய குழுக்கள் தோன்றின. அவற்றில் பலவும் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்த அதேசமயம், ஜனதாந்திரிக் தெராய் விடுதலை முன்னணி என்ற பெயரில் இரண்டு குழுக்கள் இயங்கின. தெராய் பகுதிக்குத் தனிநாடு, முதல் நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு மற்றும் மாதேசி மக்களுக்கான சுயாட்சி வரை பல கோரிக்கைகளை அக்குழுக்கள் எழுப்பின. தெராய் பகுதியில் உள்ள குழுக்களைப் பயன்படுத்தி மாதேசி மக்களிடையே ""பிளவுபடுத்தி ஆளும்'' தந்திரத்தை நேபாள இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஓட்டுக் கட்சிகளின் தலைமைகள் மேற்கொண்டன. இவற்றின் பின்ணனியில் இந்தியாவும் அமெரிக்காவும் செயல்பட்டன.
இந்த நிலையில், நேபாள மலைவாழ் பகாடி பிரிவை சேர்ந்த சிலரால் அப்துல் மொய்துகான் என்ற மாதேசி இசுலாமியத் தலைவர் கொல்லப்பட்டார். இவர் மாவோயிசக் கட்சியின் எதிர்ப்பாளர் என்பதால், அவரது ஆதரவாளர்களால் மாவோயிசக் கட்சியினர் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் உத்திரப்பிரதேச எல்லையில் உள்ள கபிலவஸ்து எனற தெராய் பகுதியின் மைய மாவட்டத்தில் பல மாதேசிகளின் வீடுகளும் தொழிலகங்களும் ஒரு மசூதியும் கூட பகாடிகளால் தாக்கிக் கொளுத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் 5,000 பேர் அகதிகளாக்கப்பட்டபோதும், அந்நிய, உள்நாட்டுச் சக்திகள் எதிர்பார்த்தபடி இந்துமுசுலீம் கலவரம் வெடித்து விடவில்லை. ஆனால், இந்தியாவின் பீகார், உத்திரப்பிரதேசத்திலுள்ள தெராய் பகுதியுடனான சமூக உறவுகளைப் பயன்படுத்தி மாதேசிக் குழுக்கள் ஆயுதங்களும் பிற உதவிகளும் பெற்று இயங்கி வருகின்றன.
நேபாள மாவோயிசக் கட்சியின் நீண்டகால இலக்கு மக்கள் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுதான் என்றபோதும், மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்று, ஓட்டுக்கட்சிகளுடன் ஒரு உடனடி திட்டம் ஒப்பந்தம் அடிப்படையில் இடைக்கால அரசில் பங்கேற்பது என்ற முடிவெடுத்தது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ், 3000 ஆயுதங்களை வைத்துக் கொண்டு 30,000 படைவீரர்களை முகாம்களில் முடக்கி வைக்கவும் ஒப்புக் கொண்டது. இடைக்கால நாடாளுமன்றத்திலும், இடைக்கால அரசாங்கத்திலும் பங்கேற்றது.
ஆனால், இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமையேற்ற நேபாள காங்கிரசும், பிற ஓட்டுக் கட்சிகளும் மன்னராட்சியின் கீழிருந்த இராணுவமும் இரகசியக் கூட்டுச் சேர்ந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அன்னிய சக்திகளின் துணையோடு மாவோயிசக் கட்சியைப் பலவீனப்படுத்தும் சதிவேலைகளில் இறங்கின. இவை மாவோயிச எதிர்ப்பு ஜனநாயகக் கூட்டணியை இரகசியமாக நிறுவி இயக்கி வருகின்றன. மாவோயிசக் கட்சியைப் பலவீனப்படுத்தி, அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை பெரும் வகையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மற்றும் விகிதாச்சார அடிப்படையில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அடங்கிய கலவையான சபையை நிறுவுவது உட்பட தேர்தல் முறைகள் ஏற்படுத்தப்பட்டன. இதுவரை பிளவுபட்டுக் கிடந்த முன்னாள், இன்னாள் பிரதமர்கள் தலைமையிலிருந்த நேபாளக் காங்கிரசின் இரு பிரிவுகளும் ஐக்கியப்பட்டுக் கொண்டன. ஏதோ ஒரு வகையில் மன்னராட்சியைப் புதுப்பிப்பது என்று இரகசிய ஒப்பந்தமும் போட்டுக் கொண்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக, நேபாள காங்கிரசின் பிரதமரும் மன்னரின் இராணுவமும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளன. எதிர்கால அரசின் கீழ் அமையும் இராணுவத்தில் மாவோயிசக் கட்சியின் மக்கள் படையினர் எந்த வடிவிலும் எந்த வகையிலும் இடம் பெறக்கூடாது; மன்னரின் இராணுவக் கட்டமைப்பும் அதன் தலைமையும் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் பழைய அதிகாரம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களுடன் அப்படியே புதிய அரசின் கீழ் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அவ்வாறு செய்தால்தான் புதிய சிவிலியன் அரசாங்கம் அமைவதை இராணுவம் ஒப்புக் கொள்ளும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நேபாள மாவோயிசக் கட்சியும் மார்க்சியலெனினியமாவோயிசக் கட்சியும் இணைந்து புரட்சிகர இயக்கத்தை புதுநம்பிக்கையையும் ஊட்டியுள்ளன.
எதிரிகளின் சதிவேலைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாகவே நேபாள மாவோயிசக் கட்சி இரண்டு நிபந்தனைகளை விதித்து, தற்போதைய இடைக்கால அரசாங்கத்திலிருந்து விலகி நேபாளத் தெருக்களில் மக்கள் போராட்டங்களைத் துவக்கியிருக்கிறது. என்ன நேர்ந்தாலும் சமரசசமாதான, நாடாளுமன்றப் பாதையிலிருந்து நேபாள மாவோயிசக் கட்சி விலகியிருக்கக் கூடாது என்று போலி கம்யூனிஸ்டுகள் இப்போது கூறுகிறார்கள். அதற்கு நேரெதிராக, இன்னொரு கடைக்கோடி நிலையிலிருந்து இந்திய மாவோயிசக் கட்சியினர் வாதிடுகிறார்கள். அதாவது, நேபாள மாவோயிசக் கட்சி ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஏழு கட்சி கூட்டணி ஒப்பந்தத்தை போட்டு, இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்றதே தவறு என்பதுதான் இவர்களின் நிலை.
ஆனால் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் அரசியல் சூழலுக்குத் தகுந்தாற்போன்று, அரசியல் பிரச்சினைக்கு முகங்கொடுத்து சரியான அரசியல் வழியையும் செயல்தந்திரத்தையும் வகுத்து செயல்படுவதுதான் மார்க்சியலெனினியமாவோயிச புரட்சியாளர்களின் கடமை. நாட்டையும் மக்களையும் பாதிக்கும் மையமான அரசியல் பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, ஆயுதப் போராட்டத்தை மட்டும் தொடர்வது என்பது அரசியல்சித்தாந்த ஓட்டாண்டித்தனமேயாகும்.
· ஆர்.கே.
No comments:
Post a Comment