இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளைஉயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.
இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.
எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
.
No comments:
Post a Comment