தமிழ் அரங்கம்

Friday, September 23, 2005

'கோக்' அடிமைத்தனத்தின் ..

'கோக்' அடிமைத்தனத்தின் சுவை

...கோக்பெப்சி விளம்பரப் படங்களின் காட்சிகளை அமைத்திருக்கும் விதமே அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. அழகான பெண்கள், ராக் இசை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள், மேட்டுக்குடி கல்லூரி வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், சொகுசுக் கார்கள், சினிமா கதாநாயகர்கள், நாயகிகள், கிரிக்கெட் வீரர்கள், கல்லூரி மாணவர்கள் என இவர்கள் தங்கள் பானத்துடன் சேர்த்து ஒரு பண்பாட்டுச் சூழலையும் விற்கிறார்கள். தொலைக்காட்சி, எஃப்.எம், செய்தித்தாள், பிரம்மாண்ட விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள், வாகன விளம்பரங்கள், தோரணங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகள், தொப்பிகள், தட்டிகள், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் ஏன் இமயமலைப் பாறைகளைக் கூட சிவப்பும் நீலமுமாக மாற்றியிருக்கின்றன கோக்பெப்சி நிறுவனங்கள்.

மேற்கூறியவை போல நேரடி விளம்பரங்கள் மட்டும் அல்லாமல் சினிமா, டிவி சீரியல்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், நுகர்பொருள் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கை நடனங்கள் போன்றவற்றின் விளம்பரதாரர்கள் இவர்கள்; பீட்சா முதல் தோசை வரை அனைத்து உணவுப் பொருட்களுடனும் இலவசமாகவோ, கூட்டாகவோ, பெப்சி கோக் வழங்குகிறார்கள்; ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்ட்டுகள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் குடிநீர்த் தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை கோக்பெப்சியின் தானியங்கி இயந்திரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.
இவைதவிர 'பெப்சி குடி சினிமாவில் நடி', 'கோக் லேபிளைப் பிரி செல்போன் ஃப்ரீ' என்னும் போட்டிகள்! தனது விளம்பரச் செலவுகளுக்காக மட்டும் பல நூறு கோடிகளை வாரி இரைத்து, நடுத்தர வர்க்கத்தை நான்கு திசைகளிலிருந்தும், அணுகுண்டு போல தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கித் தனது குளிர்பானங்களில் அமெரிக்க நுகர்வெறிப் பண்பாட்டைக் கலந்து பருக வைத்து, அடிமையாக்கி இருக்கிறது கோக்.

பூச்சி மருந்துப் பிரச்சினை ஒருபுறமிருக்கட்டும். ஒரு மென்பானம் என்ற முறையில் கோக்கின் சுவையில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? அது நமது நாட்டின் விதவிதமான பழச்சாறுகள் வழங்கும் சுவையைக் காட்டிலும் உன்னதமான சுவையா என்றால் அதுவுமில்லை.

முதன்முதலில் கோக் குடிப்பவர்கள் அதைச் சிரமப்பட்டுத்தான் விழுங்குகிறார்கள். உலகத்துக்கே 'பிடித்தமான' இந்தச் சுவை நமக்கு மட்டும் பிடிக்காமல் போனால் அது இழிவோ என்று அஞ்சி சகித்துக் கொள்கிறார்கள். பிறகு மெல்ல மெல்ல அதற்குப் பழகி அடிமையாகி விடுகிறார்கள்.
வணிகமும் லாபமும் மட்டும்தான் இலக்கு என்றால், ஏற்கெனவே இந்திய மக்களின் நாவுக்குப் பிடித்தமானதாக இருக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைச் சுவைகளிலேயே தனது பானத்தை கோக் அறிமுகப்படுத்திக் காசு பார்த்திருக்கலாம்.

ஆனால் காசுக்காகக் 'கொள்கை' யைத் துறக்க கோக் நிறுவனம் தயாராக இல்லை. ''இதுதான் கோக்கின் சுவை! இந்தச் சுவைக்கு ஏற்ப உன் நாக்கை மாற்றிக் கொள். நான் மாற முடியாது!'' என்கிறது கோக்.
''இந்தியச் சந்தையில் எங்கள் முதல் எதிரி எலுமிச்சைச் சாறுதான்'' என்று பத்தாண்டுகளுக்கு முன் அறிவித்தார் கோக் நிறுவனத்தின் தலைவர். பல்வேறு விதமான உணவுகள், பல்வேறுவிதமான சுவைகளுக்குப் பாரம்பரியமாகப் பழக்கப்பட்டிருக்கும் மக்களுடைய நாவின் சுவை நரம்புகளையே தான் சொன்னபடி ஆட்டி வைக்க முயலும் இந்த ஆதிக்க மனோபாவத்திற்கு இன்னுமென்ன விளக்கம் வேண்டும்?

'ஒரே பண்பாடு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே சுவை' என்று வெளிப்படையாகச் சொல்லாமல் நடைமுறையில் இந்த அடிமைத்தனத்திற்குத் தன் ரசிகர்களைப் பழக்கப்படுத்தியிருக்கிறது கோக். அதனால்தான் 'கோக்'கின் மீதான விமரிசனங்களைத் தன் மீதான விமரிசனமாகவும், தனது ஆளுமை மீதான விமரிசனமாகவும் கருதுகிறார்கள் கோக் ரசிகர்கள். ரஜினி ரசிகனைக் காட்டிலும் இழிந்த இந்த மனநிலை 'பூச்சிமருந்தை'ச் சுவைத்துக் குடிப்பதில் வியப்பில்லை.கோக் குடிப்பவர்கள் அதன் கலாச்சார வன்முறைக்கு இலக்காகிறார்களென்றால், அதனைக் குடிக்காதவர்கள் 'கோக்'கின் நேரடி வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றன கோக்பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். ஆக 1 லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நல்ல நீர் அழிகிறது. ஏற்கெனவே நிலத்தடி நீரில்லாமல் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இந்திய விவசாயிகளின் தலையில் இடியென இறங்கிக் கொண்டிருக்கின்றன கோக்கின் ஆலைகள்.....

நன்றி புதியகலச்சாரம்

www.tamilcircle.net

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.