தமிழ் அரங்கம்

Tuesday, April 8, 2008

ஜார்ஜ் புஷ் : 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு

ஜார்ஜ் புஷ் : 21-ஆம் நூற்றாண்டின் கோயபல்சு


"ஈரான் ஒரு ரவுடி நாடு அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறது; மூன்றாம் உலகப் போர் உருவாகுமானால், அதற்கு ஈரான்தான் காரணமாக இருக்க முடியும்'' இவையெல்லாம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரான் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள். இதனைக் காரணமாகச் சொல்லியே, ஈரான் மீது ஒரு அதிரடி ஆக்கிரமிப்புத் தாக்குதலை நடத்துவதற்கும் அமெரிக்கா திட்டமிட்டு வந்தது.

மேற்காசியாவில் ஈராக்கையொட்டி அமைந்துள்ள ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுள் ஒன்று. எனவே, இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரகசியமாக அணு ஆயுதத் தரப்பில் ஈடுபடுகிறதா என்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகாமை விசாரணை நடத்தி வந்தது. எனினும், இந்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே, அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக அவ்விசாரணை பற்றிய விவரங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமும் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சில வகை ஆயுதங்களை ஈரானுக்கு விற்கக் கூடாதென்றும்; ஈரானின் நான்காவது பெரிய வங்கியான செபாவின் சொத்துக்களை முடக்கியும் தடை உத்தரவு போட்டது. அமெரிக்க அரசு, தன் பங்குக்கு ஈரானைச் சேர்ந்த மெல்லி வங்கி, மெல்லட் வங்கி, சதேரத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தடை செய்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரானின் மீது இன்னும் அதிகமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்துவரும் வேளையில், ஈரானின் அணுசக்தித் துறை குறித்து வெளி வந்துள்ள சர்வதேச அணுசக்தி முகாமையின் அறிக்கையும்; அமெரிக்காவின் பல்வேறு உளவு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள தேசிய உளவு மதிப்பீடு அறிக்கையும் ஜார்ஜ் புஷ் கும்பலின் அண்டப் புளுகையும், போர் வெறியையும் அம்பலப்படுத்தியுள்ளன.

""ஈரான் 1980களில் இரகசியமாக யுரேனியம் இறக்குமதி செய்தது. அந்த யுரேனியத்தைச் செறிவூட்டி, அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது; இதற்காகவே, நதான்ஸ் எனுமிடத்தில் அணு உலையொன்று இயங்கி வருகிறது; அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது'' என அமெரிக்கா சுமத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் ஆராய்ந்த சர்வதேச அணுசக்தி முகாமை, ""அணு சக்தியைப் பயன்படுத்துவது குறித்த ஈரானின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி முகாமையின் விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக''த் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

""ஈரான் யுரேனியத்தை 4 சதவீத அளவிற்கே செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றுள்ளது; இதை வைத்துக் கொண்டு, அணுகுண்டெல்லாம் தயாரித்துவிட முடியாது.''

""சர்வதேச அணுசக்தி முகாமைக்குத் தெரியாமல் 1980களில் ஈரான் யுரேனியம் இறக்குமதி செய்திருந்தாலும்; சில பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவை இரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கங் கொண்டவையாகச் சொல்ல முடியாது.''

""நதான்ஸ் பகுதியில் இயங்கி வரும் யுரேனியத்தைச் செறிவூட்டும் அணு உலை, சர்வதேச அணுசக்தி முகாமையின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாகவும்; பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டுள்ள அணுஉலைக் கருவிகளைப் பயன்படுத்தி அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படவில்லை'' என்றும் தனது இடைக்கால அறிக்கையில் சர்வதேச அணுசக்தி முகாமை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள தேசிய உளவு மதிப்பீட்டு அறிக்கையில், ""ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான முயற்சிகளை 2003ஆம் ஆண்டே நிறுத்தி விட்டது; அம்முயற்சிகளை இன்று வரை திரும்பத் தொடங்கவில்லை; 2015ஆம் ஆண்டுக்குள் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் திறனைப் பெற்றுவிடும் என்று கூற முடியாது; ஈரானின் நோக்கம் அணு ஆயுதம் தயாரிப்பதல்ல; யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெறத்தான் அந்நாடு விரும்புகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச அணுசக்தி முகாமையின் இடைக்கால அறிக்கையைத் திட்டித் தீர்த்துள்ள ஜார்ஜ் புஷ் கும்பல், ""ஈரான், யுரேனியத்தைச் செறிவூட்டும் திறன் பெறுவதைத் தடை செய்ய வேண்டும்'' எனப் புது கட்டளை போட்டு வருகிறது. ""ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறன் பெற்றுவிட்டால், பிறகு அணு குண்டுகளைத் தயாரிக்க தொடங்கி விடும்'' என இப்பொழுதே அமெரிக்கா தனது அழுகுணி ஆட்டத்தைத் தொடங்கி விட்டது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அணு சக்தியை சமூக (சிவில்) நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும்; அதற்கு ஏற்றாற் போன்று யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெறவும் உரிமை பெற்றுள்ளன. எனவே அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஈரானின் நடவடிக்கைகளில் எவ்வித தீய உள்நோக்கத்தையும் காண முடியாது.

மேலும், அரபு நாடுகளை அச்சுறுத்தி வரும் யூதவெறி பிடித்த இசுரேலிடம் 200க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ஈரான் தனது தற்காப்புக்காக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டாலும், அதனை அநீதியானதாகவோ, உலக அமைதிக்கு எதிரானதாகவோ குற்றஞ் சுமத்த முடியாது. குறிப்பாக, ஈரானுக்கு எதிராக இக்குற்றச்சாட்டைக் கூறும் தார்மீக உரிமை அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கிடையாது!

· அழகு


மன்மோகன் சிங் : ஜார்ஜ் புஷ்ஷின் கூஜா!

சர்வதேச அணுசக்தி முகாமையில், ஈரான் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்.2006இல் நடந்த தேர்தலில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா; ஈரானிடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியா கலந்து கொள்ள மறுத்து வருகிறது. இப்பொழுது உண்மை தெரிந்துவிட்ட நிலையிலும் கூட மன்மோகன் சிங், ஈரான் பிரச்சினையில் அமெரிக்காவிற்குச் சாமரம் வீசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஈரானிய நிறுவனங்கள், அப்பொருட்களின் மதிப்புக்கு நிகராகத் தரும் கடன் அனுமதிக் கடிதங்களை (ஃஞுttஞுணூ ணிஞூ ஞிணூஞுஞீடிt) அங்கீகரிக்க இந்திய அரசு வங்கி சமீப காலமாக மறுத்து வருகிறது. அமெரிக்க அரசு, மூன்று ஈரானிய வங்கிகளுடன் வர்த்தகம் செய்வதைத் தடை செய்த பிறகுதான், இந்திய அரசும் அதற்குப் பயந்து கொண்டு கடன் அனுமதிக் கடிதங்களை அங்கீகரிக்க மறுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது, தி ஹிந்து நாளிதழ் (நவம்பர் 30, பக்.12)

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனமான எஸ்ஸார் குழுமம், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கத் திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவின் மின்னாசொடா மாநிலத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த கவர்னர், ""எஸ்ஸார் நிறுவனம் அம்மாநிலத்தில் தொடங்கத் திட்டமிட்டிருந்த இரும்பு உருக்காலைக்கு அனுமதி மறுத்து விடுவோம்; அந்த ஆலைக்கு அரசு மானியம் தர மாட்டோம்'' என மிரட்டியதைத் தொடர்ந்து, எஸ்ஸார் குழுமம் ஈரானில்தான் தொடங்கத் திட்டமிட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கைகழுவி விட்டது.

தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு மின்நிலையத்திற்காகக் கூடுதல் அணு உலைகளை ரசியாவிடம் இருந்து வாங்குவதற்குத் தயாரான ஒப்பந்தம், கையெழுத்துப் போட வேண்டிய கடைசி நிமிடத்தில் கைகழுவப்பட்டது. ""இந்த ஒப்பந்தத்தை ரசியா முறித்துக் கொள்ளவே முடியாது; கூடாது என்ற நிபந்தனையை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கக் கோரியது, இந்தியா; ரசியா விரும்பாத இந்த நிபந்தனையை அமெரிக்கா சொல்லி இந்தியா முன் மொழிந்தது'' என ரசியா பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் இந்தப் போக்கை, நாம் அடிமைத்தனம் என்கிறோம்; மன்மோகன் சிங் கும்பலோ, நாடு வல்லரசு ஆவதற்கான பாதை என்கிறார்கள். வேட்டியை அவிழ்த்துதான் முண்டாசு கட்டிக் கொள்ள வேண்டுமா?

1 comment:

Unknown said...

அய்யா, வயசாகிப் போன பழைய ஆயுதங்களை 'கொட்டவும்' புது ஆயுதங்களை சோதனை செய்யவும் அமெரிக்கா அப்புறம் எங்குதான் போவது?