தமிழ் அரங்கம்

Sunday, April 6, 2008

சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு


சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் பி.எல்.எஸ். எனும் தனியார் பேருந்தில் பெரியகோட்டை செல்வதற்காக ஏறி அமர்ந்துள்ளார். அதே பேருந்தில் எறும்புக்குடியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டப் பிரதிநிதியான பாண்டி என்பவரும் அவரது தம்பி ஜெயராமனும் கூட்ட நெரிசல் காரணமாக நின்று கொண்டு பயணித்தனர். இவர்கள் சேர்வை சாதியைச் சேர்ந்தவர்கள். கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறியர்கள்.

தாழ்த்தப்பட்டவரான மலைச்சாமி உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய, தாங்கள் நின்று கொண்டு பயணம் செய்வதா என்று சாதித்திமிர் தலைக்கேறிய இவ்விருவரும், ""ஏண்டா... நாயே! நாங்க நிற்கிறோம்; நீ உட்கார்ந்துகிட்டு வர்றே!'' என்று ஆபாசமாகத் திட்டியதோடு, அம்முதியவரை பேருந்திலேயே செருப்பால் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர்கள் பிடியிலிருந்து தப்பி அடுத்த நிறுத்தத்தில் அம்முதியவர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இறங்கியவரைப் பிடித்து அடித்து, ""ஏறுடா பஸ்சுக்குள்ள'' என்று இழுத்து உள்ளே போட்டு அடித்துள்ளனர். இக்கொடுஞ்செயலைக் கண்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட, ""வண்டியை எடுடா; இல்லைன்னா உன்னையும் கொன்னுடுவேன்'' என்று இச்சாதிவெறியர்கள் மிரட்டியதால், அவரும் பயந்து பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இச்சாதிவெறியர்களின் ஊரான எறும்புக்குடி செல்லும் வரை, பேருந்தில் வைத்து அம்முதியவரை அவ்விருவரும் காட்டுத்தனமாகச் செருப்பால் அடித்துள்ளனர்.

காயமடைந்த மலைச்சாமி, அன்றிரவே தனது தம்பியை உடனழைத்துக் கொண்டு மானாமதுரை சிப்காட் போலீசு நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சாதிவெறியர்களின் தாக்குதலால் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்களால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த பாண்டி, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது ஓட்டுக்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு மருத்துவரைக் கொண்டு தனக்கு மூல வியாதி உள்ளதாகக் காட்டி, சிவகங்கை அரசு மருத்துவம னையில் படுத்துக் கொண்டார். அவரது தம்பி ஜெயராமனோ போலீசு அனுமதியோடு ஊரிலேயே ஒளிந்து கொண்டு மலைச்சாமி குடும்பத்தை மிரட்டி வந்தார். போலீசோ அவர் தலைமறைவாகி விட்டதாகப் புளுகியது. இச்சாதிவெறியர்கள் ஊருக்குள் தமது சாதியப் பலத்தைக் காட்டி மலைச்சாமியை அச்சுறுத்தி வந்தனர். பீதியடைந்த மலைச்சாமி, தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து மீள சிவகங்கை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்து புகார் கொடுத்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு எதிராகவும், புகார் கொடுத்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாத போலீசையும், உடந்தையாக செயல்படும் அரசு மருத்துவரையும் கண்டித்துப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு, 18.10.07 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், சாதிவெறியர்களின் கூட்டாளியாகச் செயல்படும் போலீசோ, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பு சாதிவெறியர்களுக்கு ஆதரவாகச் சுவரொட்டி வெளியிட்டு எதிர்ப் பிரச்சாரம் செய்வதைக் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

5.11.07 அன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் மீண்டும் விண்ணப்பித்து, மதுரை உயர்நீதி மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மனு செய்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ""ஆதிக்க சாதிவெறி நாய்கள்'' என்ற வாசகம் சாதிக் கலவரத்தைத் தூண்டுவதாக உள்ளதெனக் கூறிப் புதிய விண்ணப்பம் தருமாறு உயர்நீதி மன்றத்தில் போலீசு எதிர் நடவடிக்கையில் இறங்கியது. மீண்டும் புதிய விண்ணப்பம் கொடுத்தபோதிலும், இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்துவதாக உள்ளதெனக் கூறி மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தார்.

4.11.07 அன்று இத்தடையுத்தரவு வெளியானதும், சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசின் மனித உரிமை மீறல் அடாவடித்தனத்தை எதிர்த்து, சிவகங்கை யூனியன் ஆபீசிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும் ஜனநாயக சக்திகளும் முழக்கமிட்டபடியே பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக மதுரை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 130 பேரைக் கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

மனித உரிமைப் போராளிகளைக் கைது செய்த இந்த விவகாரம், சாதிவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசின் யோக்கியதையை இப்பகுதியெங்கும் சந்தி சிரிக்க வைத்தது. சாதிவெறியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா. மையம், நீதிமன்ற படிக்கட்டுகளில் பலமுறை ஏறி இறங்கி, 28.11.07 அன்று சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு இதர அமைப்புகள், ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் 300க்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களும் வழக்குரைஞர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் சாதிவெறி கும்பலையும் அதற்கு ஆதரவாக நிற்கும் அதிகார வர்க்க போலீசு கும்பலையும் திரை கிழித்துக் காட்டுவதாக அமைந்தது. சாதிவெறிக்கு எதிரான போராட்டம், சாதிமத வெறியர்களைப் பாதுகாக்கும் சட்டம்நீதிபோலீசுஅதிகாரவர்க்கம் அடங்கிய இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிரான போராட்டமாக அமைய வேண்டிய அவசியத்தை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் உணர்த்திய மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், மலைச்சாமி மீது வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்களைக் கைது செய்து தண்டிக்கும் வரை போராட்டம் ஓயாது என்று உறுதியேற்றுள்ளனர்.

பு.ஜ. செய்தியாளர்.

No comments: