தமிழ் அரங்கம்

Monday, April 7, 2008

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து


இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து

"இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின் தண்ணீரை விற்க அம்மாநில அரசு கிளம்பியது; பிறகு, ஆற்றுப் படுகைகளோடு நீரை விற்கப் புறப்பட்டது; இப்போது ஆறு மற்றும் அதனால் பயன்பெறும் பாசனப் பகுதிகள் அனைத்தையும் சேர்த்து விற்கத் தயாராகி விட்டது.


மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சரான ராம்ராஜி நாயக் நிம்பல்கர், கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கு வளர்ச்சிக் கழகத் திட்டத்தைச் செயல்படுத்த போதிய நிதி இல்லாததால், இந்த ஆறை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். இக்கழகம்தான் ""நீரா'' ஆறை தனது பொறுப்பில் வைத்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தியோகர் எனுமிடத்தில் அணை கட்டப்பட்டு முடிவடையும் தறுவாயில் உள்ளது. இன்னும் 5% கட்டுமான வேலைகளே எஞ்சியுள்ளன. அணை முழுமையாக கட்டப்பட்ட பிறகு, 164 கி.மீ. நீளத்துக்கு கிளைக் கால்வாய் வெட்டி சோலாப்பூர், சங்லி மாவட்டங்களுக்கு ஆற்று நீரைக் கொண்டு செல்ல வேண்டும்.


இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாகியும் நிறைவேறாததற்கு நிதிப் பற்றாக்குறையே காரணம் என்று கூறும் அமைச்சர், வறண்ட இப்பகுதிவாழ் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ""நீரா'' ஆறை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். இது மட்டுமின்றி, இந்த ஆறை ரூ. 1000 கோடி கொடுத்து விலைக்கு வாங்கினால் இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டு முடிவடையும் நிலையிலுள்ள தியோகர் அணையும் ஆயக்கட்டு பகுதிகளும் இலவச இணைப்பாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.


ஏற்கெனவே கடந்த 2002ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் மாநிலத்தில், சியோனாத் ஆறு 23 கி.மீ தொலைவுக்கு தனியாருக்கு விற்கப்பட்டது. இப்போது மகாராஷ்டிராவின் ""நீரா'' ஆறு ஒட்டுமொத்தமாக விலை பேசப்படுகிறது. ""ஆற்றை தனியாருக்கு விற்று விட்டால், அவர்கள் அணையின் எஞ்சிய பகுதியைக் கட்டி முடித்து, கால்வாய்களையும் கட்டி வறண்ட பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தண்ணீரை விநியோகிப்பார்கள். விவசாயிகளின் நீண்டகாலக் கனவு நிறைவேறி, மகாராஷ்டிரா மாநிலம் தொழிலிலும் விவசாயத்திலும் மேலும் வளர்ச்சி பெறும்'' என்று நியாயவாதம் பேசுகிறது மகாராஷ்டிரா அரசு.


இந்த ஆறை விலை கொடுத்து வாங்கும் ஒரு தனியார் நிறுவனம், இந்த ஆறு பாய்ந்தோடும் 208 கி.மீ நீள பகுதியையும், இந்த ஆற்றின் கிளைக் கால்வாய்கள் மூலம் பயனடையப் போகும் புனே, சத்தாரா மாவட்டங்களின் 43,000 ஹெக்டேர் விளைநிலங்களையும், அடுத்துள்ள சோனாபூர் சங்லி மாவட்ட குடிநீர் விநியோகத்தையும், இவ்வட்டாரத்திலுள்ள ஆலைகளுக்கான தண்ணீர் விநியோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும். மேலும், ஆற்றை வாங்கும் நிறுவனம் தான்போட்ட முதலைத் திரும்ப எடுக்கவும் இலாபமடையவும் எந்த வகையிலான தொழிலையும் தொடங்கலாம் என்று அரசு தாராள அனுமதியளித்துள்து. இதுதவிர இந்த ஆறு மற்றும் கிளைக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களில் ஒப்பந்த விவசாயத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இலாபத்தை உறுதி செய்து கொள்ளவும் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.


ஏற்கெனவே வறண்ட பிரதேசமான இம்மாவட்டங்களில் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவுமே ""நீரா'' ஆற்றில் தியோகர் அணைகட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அணை கட்ட போதிய நிதியில்லை என்பதையே சாக்காக வைத்து ஆற்றையே விற்கிறது மகாராஷ்டிர அரசு. விலை பேசப்படுவது ஆறு அல்ல; அந்த ஆற்றை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை!


நீரா ஆறு தனியார் நிறுவனத்தின் சொத்தாகி விட்டால், இப்பகுதிவாழ் விவசாயிகள் பாசன நீருக்காக அந்நிறுவனத்துக்கு மிக அதிக கட்டணத்தைக் கொட்டியழ வேண்டும். அப்படியொரு விவசாயியால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றால், தனது நிலத்தை அந்நிறுவனத்திடம் ஒப்பந்த விவசாயத்துக்குக் கையளித்து விட்டு, தனது சொந்த நிலத்திலேயே அந்நிறுவனத்தின் கூலி விவசாயியாக வேலை செய்ய நேரிடும். நிலத்தை இழந்து வாழ்வை இழந்து குடும்பத்தோடு நாடோடியாக அலைய நேரிடும்.


விவசாயிகள் மட்டுமல்ல, இதர பிரிவு உழைக்கும் மக்களும் குடிநீருக்காக அதிக கட்டணம் செலுத்த நேரிடும். கோக்பெப்சி நிறுவனங்களைப் போல, ஆற்றுநீரைக் குடுவையில் அடைத்து ஒரு லிட்டர் 12 ரூபாய் என்று இப்பகுதிவாழ் மக்களிடம் அந்நிறுவனம் விற்றாலும், அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. ஏன், ஆற்று நீர் அனைத்தையும் ஆலைப் பயன்பாட்டுக்குத் திருப்பிவிட்டு, விவசாயத்துக்கோ, குடிநீருக்கோ ஆற்று நீரை அந்நிறுவனம் தர மறுத்தாலும் இக்கொடுஞ்செயலை எதிர்த்து வாய் திறக்கவும் முடியாது. இந்த ஆற்றில் இப்பகுதிவாழ் மக்கள் கைகால்களைக் கழுவவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டவோ கூட முடியாது.


கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று மகாராஷ்டிரா அரசு நீரா ஆற்றை விற்கப் போவதாக அறிவித்தவுடன், நாக்கில் எச்சில் ஊற 5 பெரும் நிறுவனங்கள் ஆற்றை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. யார் இந்த முதலாளிகள்? இம்முதலாளிகளுக்கு பாசனத்திலோ, விவசாயத்திலோ முன் அனுபவம் உள்ளதா? ""அப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது; முன் அனுபவம் தேவை என்பதை நிபந்தனையாக்கினால் அப்புறம் ஆற்றை விற்க முடியாமல் போய்விடும்'' என்கிறது மகாராஷ்டிர அரசு. மராமத்து, அணைக்கட்டு பராமரிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு, பாசனக் கால்வாய் பராமரிப்பு, தூர்வாருதல், மீன்வளப் பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு விநியோகம் முதலான எதிலுமே பயிற்சியோ, அனுபவமோ இல்லாத ஒரு நிறுவனம், பாசனத்தையும் குடிநீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்தக் கிளம்பினால் அதன் விளைவு என்னவாகும்? அதிலும் 1000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு சில திடீர் முதலாளிகள் நீரா ஆற்றை விலை பேச கிளம்பியுள்ளார்கள் என்றால், அவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?


இவையெல்லாம் ஏதோ சிதம்பர ரகசியம் அல்ல. உண்மையில் உலக வங்கிதான் இத்தனியார்மயத் திட்டத்தை பின்னணியில் இருந்து கொண்டு இயக்குகிறது. ""நீர்வளத்துறையை மேம்படுத்துவது'' என்ற பெயரில் மகாராஷ்டிர அரசுக்கு ஏறத்தாழ 1300 கோடி ரூபாயை உலகவங்கி கடனாக அளித்துள்ளது. அதன் உத்தரவுப்படியே நீரா ஆறு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது; ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களிடம் கடன் உத்திரவாதப் பத்திரம் பெறப் போவதாகக் கூறி, சில திடீர் முதலாளிகள் நீரா ஆறை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


அரசாங்கப் பணிகளில், அதுவும் நீர்வளத் துறை சார்ந்த, தியோகர் அணைக்கட்டுத் திட்டப் பணிகளில் ஈடுபடும் உயரதிகாரிகள் மட்டுமே உலகவங்கியின் இந்தக் கடனுதவித் திட்டத்தின் விவரங்களைப் பார்வையிட முடியும் என்று தடை விதிக்கப்பட்டுள்ளதிலிருந்தே, உலக வங்கியின் ஆதிக்கத்தை எவரும் புரிந்து கொள்ள முடியும். தகவல் அறியும் சட்டப்படி, நாட்டு மக்களோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ கூட இத்திட்டத்தின் விவரங்களை முழுமையாக அறிய முடியாது.


மகாராஷ்டிராவில் நீரா ஆறு தனியாருக்கு விற்கப்படும் சூழலில், தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ந்தேதி முதலாக ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்'' நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகமெங்கும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் என்ற பெயரில் ஏரிகுளங்களின் ஓரங்களில் ஏழை மக்களால் பயிரிடப்பட்டிருந்த காய்கறி, வெள்ளரி, கீரை முதலானவை புல்டோசர் பொக்லைன்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. ஊருணிகள் குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்து வந்த பாரம்பரிய உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஏரிகுளங்களின் நீர்வளத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ. 2500 கோடிகளைக் கடனாகக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா வழியில் தமிழகத்தின் ஏரிகுளங்களும் தனியாருக்கு விலை பேசப்படுவதற்கான சதி வேகமாக அரங்கேறி வருகிறது.


தண்ணீர் என்பது இயற்கையின் கொடை; மனித இனத்தின் அடிப்படை ஆதாரம்; பூவுலகின் உயிர்நாடியான தண்ணீர் யாருக்கும் சொந்தமல்ல. ஆனால் தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றி வருகிறது, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான உலக வங்கி. நேற்று வரை கோக்பெப்சிக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. இன்று ஏகாதிபத்தியங்களின் மறுகாலனிய தாகத்திற்காக ஆறுகளும் உறிஞ்சப்படுகின்றன.

· அழகு

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அடப்பாவிங்களா!!!